Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 13

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 13
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 13

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 13

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 13
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 13

பொகாஸா - ‘நான் ஆப்பிரிக்க நெப்போலியன்!’

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 13

தேசத்தை ஊழலாலும், இன்னபிற முறைகேடுகளாலும் கூறுபோட்ட அதிபர் ஒருவர், புரட்சியால் ஆட்சியிலிருந்து வலுக்கட்டாயமாகத் தூக்கியெறியப்பட்டால் அது மக்களுக்குக் கொண்டாட்டமான செய்திதான். ஆனால், புதிய அதிபராக ஓர் அசுரன் வந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால்?

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் நிலை அப்படித்தான் ஆகிப்போனது. அதிபர் டேவிட்டைத் தூக்கியெறிந்துவிட்டு, கர்னல் பொகாஸா கனத்த மகிழ்ச்சியுடன் ஆட்சியைப் பிடித்தார்.  ஏற்கெனவே இருந்த அமைச்சரவையைக் கலைத்தார். அரசியல் சட்டத்தை நீக்கினார். புதிய சட்டங்கள் உருவாக்கப்படும், அதற்குமுன் புதிய அரசைத் தேர்ந்தெடுக்க முறைப்படி தேர்தல் நடத்தப்படும் என்றெல்லாம் சும்மா சொல்லிவைத்தார்.

அரசியல் எதிரிகளைக் களையெடுக்கும் குரூரக் காட்சிகள் அரங்கேறின. ராணுவத்தினர் எங்காவது புகுந்து கொள்ளையடிப்பதும், பெண்களின் கற்பைச் சூறையாடுவதும் வாடிக்கையாகிப் போனது. இன்னொரு பக்கம் பொகாஸா, ‘தானே தேசத்தை மீட்க வந்த தேவதூதன்’ என்னும் போலி பிம்பத்தைக் கட்டமைக்க உழைத்தார். வானொலியில் அடிக்கடி உரையாற்றினார். ‘சமூகத்தின் இந்த இழிநிலைக்கு யார் காரணம்? இதற்கு முன்பிருந்த அரசுதான்!’ என்று இங்கே தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பி.ஜே.பி மாறி மாறிச் சொல்லுவதுபோல அவரும் சொன்னார்.

‘எனக்கு அதிபர் பதவியிலெல்லாம் ஆசை இல்லை. கம்யூனிஸ்ட்கள் இங்கே நுழையப் பார்க்கிறார்கள். அவர்களை ஒழிப்பது என் கடமை. தேசத்தின் ஊழலை வேரறுத்தபின், நாட்டின் பொருளாதாரம் புஷ்டியான பின், நான் இந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவேன்’ என்று சூளுரைத்தார்.

‘குடியரசின் மீட்பர்’, ‘மத்திய ஆப்பிரிக்காவின் சிற்பி’, ‘இரும்பு மனிதர்’, ‘ஈடு இணையற்ற வழிகாட்டி’ – இவை அவருக்கு அவரே கொடுத்துக் கொண்ட செல்ஃபி பட்டங்கள்! மாபெரும் ஸ்டுடியோ ஒன்றைக் கட்டினார். சிறந்த கவிஞர்களை இழுத்து வந்தார். ‘என்னைப்பற்றி கூச்சப்படாமல் புகழ்ந்து எழுதுங்கள்’ என்று கட்டளையிட்டார். புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் கைவண்ணத்தில், தித்திக்கும் தேன்சொட்டும் பொகாஸா புகழ் கானங்கள் பதியப்பட்டன. தேசமெங்கும் ரிப்பீட் மோடில் ஓடவிட்டார். மக்கள் சைலன்ட் மோடில் வேறு வழியின்றி சகித்துக்கொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 13

கிறுக்குத்தனமான சட்டங்களையும் விதிகளையும் அமல்படுத்தி, மக்களை மாக்கான்கள் ஆக்குவதுதானே என்றைக்கும் ஆட்சியாளர்களின் பொழுதுபோக்கு. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க மகோன்னத வழி ஒன்றைக் கண்டார் பொகாஸா. 18 முதல் 55 வயது வரையுள்ள ஒவ்வொருவரும் தாங்கள் ஏதோ ஒரு வேலையில் இருக்கிறோம் என்று அரசிடம் கண்டிப்பாக நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் கடும் அபராதத்தையோ அல்லது கொடும் சிறைத்தண்டனையையோ அடைய நேரிடும். (எல்லோரும் வேலையிலிருப்பதாகப் பயந்து ஒப்புக்கொண்டால், வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்துவிடும் அல்லது ஒளிந்துவிடும் அல்லவா?) யாரும் பிச்சையெடுக்கக் கூடாது. அது தேசத்துக்கு அவமானம். (தேசநலன் கருதி பட்டினியில் செத்துப்போக உரிமையுண்டு.) ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்யக் கூடாது. (அதிபருக்கு இதில் விதிவிலக்குண்டு.)

ஒருவன் திருடினானா அல்லது வேறு ஏதாவது குற்றம் செய்தானா? அவனது ஒரு காதை வெட்டு. மீண்டும் குற்றம் செய்து பிடிபட்டானா? இன்னொரு காதையும் வெட்டு. மறுபடியும் பிடிபட்டால் கையை வெட்டு. மறுபடியும் மறுபடியும் பிடிபட்டால் வெட்டுவதற்கு உறுப்பா இல்லை.எதையாவது வெட்டு. ரத்தம் சொட்டும் சட்டங்கள் பிறந்தன.

புதிய விமான நிலையம், நட்சத்திர ஹோட்டல், மாபெரும் விளையாட்டு மைதானம், நாடாளுமன்றக் கட்டடம், பல்கலைக்கழகம், பெரிய மருத்துவமனை போன்றவை கட்டப்பட்டன. தலைநகரமான பாங்கி, தனித்துவ அழகுடன் திகழ மெனக்கிட்டார். காரணம், தன் மண்ணில் யுரேனிய மற்றும் வைர வளத்தைக் காட்டி, அயல் தேசங்களைத் தொழில் தொடங்க அழைப்பது. அதன் மூலம் தன் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வது. இங்கே ‘தன்’ என்பது தேசமல்ல; பொகாஸாவும் அவரைச் சார்ந்தவர்களும்.

அரசின் காபித் தோட்டங்களையெல்லாம் தன் தோட்டங்களாகவே கருதினார் பொகாஸா. அதில் வந்த ‘சொற்ப’ வருமானத்தால் பாவம் அவரால் ஆசைப்பட்ட அளவுக்கு ஆடம்பரமாக இருக்க இயலவில்லை. பிரான்ஸில் சில சொகுசு அரண்மனைகள் மட்டுமே வாங்க முடிந்தது. சில சொகுசுக் கப்பல்களையும் கட்டிக்கொண்டார்.

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தை ஆரம்பத்தில் பிரான்ஸ் ஏற்கவில்லை. பொகாஸா, தன் தேசத்தின் வளத்தையும், அதனால் பிரான்ஸுக்குக் கிடைக்கும் பொருளாதார லாபத்தையும் காட்டி நைச்சியமாக மிரட்டினார். பிரான்ஸ் அசட்டுச் சிரிப்புடன், ‘பொகாஸா எங்கள் வீட்டுப்பிள்ளை’ என்று அங்கீகாரம் கொடுத்து அணைத்துக் கொண்டது.

பொகாஸாவின் ராணுவப்புரட்சிக்குக் கைகோத்துச் செயல்பட்ட  தளபதி பான்ஸா, பிறகு பல பதவிகளில் இருந்தார். அவருக்கும் பொகாஸாவுக்கும் பல விஷயங்களில் ஒத்துப்போகவில்லை. பான்ஸா மீண்டுமொரு ராணுவப்புரட்சிக்கு வித்திடுவதாகவும், பொகாஸாவைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுவதாகவும் தகவல்கள் புகைந்தன (1969). பொகாஸா பொங்கினார். ‘அவனைக் கைது செய்து இழுத்து வாருங்கள்!’

அமெரிக்காவின் டைம் இதழ் பான்ஸாவின் முடிவை இப்படிப் பதிவுசெய்திருக்கிறது. ‘கைது செய்யப்பட்ட பான்ஸா, ஏப்ரல் 12-ல் அமைச்சரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் இழுத்துவரப்பட்டார். பொகாஸா, தான் காபி கலக்கப் பயன்படுத்தும் சிறு கத்தியைக் கொண்டு பான்ஸாவின் உடலைச் சரமாரியாக வெட்டினார். வீரர்கள், பான்ஸாவின் முதுகிலேயே மீண்டும் மீண்டும் மீண்டும் ஓங்கி மிதித்தனர், அவர் முதுகெலும்பு உடையும்வரை. பாங்கி நகர வீதிகளில் பான்ஸாவைத் தரதரவென இழுத்து வந்தனர். பின்பு அவர் சுடப்பட்டார்.’

அத்தனை காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அதிபர் டேவிட் டாக்கோ, 1969-ல் விடுவிக்கப்பட்டார். ‘எங்காவது ஓடிப்போ’ என்று அவரை விரட்டி விட்டார்கள். 1971-ல், ‘இனி அதிபர், ராணுவத் தலைமைத் தளபதி, பிரதமர் அனைத்தும் நானே!’ என்று பொகாஸா அறிவித்துக்கொண்டார். நிரந்தர முதல்வர், நிரந்தரப் பொதுச்செயலாளர்போல, 1972-ல் பொகாஸாவும், அடுத்த அதிமதுர அறிவிப்பை வெளியிட்டார். ‘இனி நானே நிரந்தர அதிபர்!’

பின்னொரு நாள், ஜீன் பெடெல் பொகாஸா தன் பெயரை சலா எடின் அஹமத் பொகாஸா என்று மாற்றிக்கொண்டார். ஆம், இஸ்லாமிய மதத்துக்கு மாறினார். லிபியாவின் கடாஃபி, ‘நீங்கள் மதம் மாறினால் நான் உங்கள் தேசத்துக்குப் பண உதவி செய்கிறேன்’ என்று திருவாய் மலர்ந்திருந்தார். ஆனால், எதுவும் வரவில்லை. பொகாஸா U டர்ன் அடித்து மீண்டும் கிறித்துவரானார்.

எத்தனை நாளைக்குத்தான் நான் அதிபராகக் குப்பை கொட்டுவது? இந்தக் கேள்வி பொகாஸாவின் மனத்தில் உதித்தபோது, அவருக்குள் மாவீரர் நெப்போலியனின் குதிரை குதித்தோடிக் கொண்டிருந்தது. என் ஆதர்ச நெப்போலியன், படைத்தளபதியாக இருந்து சக்கரவர்த்தி ஆனவர். எனில், எனக்கும் அதே தகுதியும் உரிமையும் இருக்கிறதல்லவா. 1976-ன் நல்லதொரு பொழுதில் பொகாஸா அறிவித்தார், ‘நான் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மன்னன் ஆகப்போகிறேன்!’

ஓராண்டுக்கு முன்பாகவே முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன.  ‘நானே ஆப்பிரிக்காவின் நெப்போலியன். எனது முடிசூட்டு விழா, நெப்போலியனின் முடிசூட்டு விழா போலவே நடக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். செலவைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாதீர்கள்.’

உலகமெங்கும் இருந்து வரும் விருந்தினர்களை வரவேற்றுத் தங்க வைப்பதற்காக, பாங்கியில் மாளிகைகள், இல்லங்கள், ஹோட்டல்கள் புதுப்பிக்கப்பட்டன. கட்டப்பட்டன. விருந்தினர்களை ஏற்றிச் செல்வதற்காகவே 60 புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் ஜெர்மனியிலிருந்து வரவழைக்கப்பட்டன. இறக்குமதிச் செலவு மட்டும் சில லட்சம் டாலர்கள். 

பாரிஸின் புகழ்பெற்ற சிற்பி ஆலிவர் பிரைஸ், சிம்மாசனத்தை வடிவமைப்பதற்காக வரவழைக்கப்பட்டார். வருங்கால மன்னர் பவனி வரும் தேரை உருவாக்கும் கௌரவமும் ஆலிவருக்கு வழங்கப்பட்டது. இரண்டு டன் எடையில் ($2.5 மில்லியன் மதிப்பில்) வெண்கலமும், தங்கத் தகடும் கொண்டு சிம்மாசனம் உருவானது. Saint-Germain-des-Pres jeweller என்ற நகைக்கடை, நெப்போலியன் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அவர்களே பொகாஸாவின் கீரிடம், செங்கோல், வாள், இன்ன பிற அரச சமாசாரங்களைத் தயாரித்தனர். பில் தொகை 5 மில்லியன் டாலர்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 13

எல்லோருக்கும் டிரெஸ் கோட் கொடுக்கப்பட்டிருந்தது. பள்ளி மாணவர்களுக்கு வெள்ளை நிற உடை. அரசு அலுவலர்கள், தனியார் ஊழியர்களுக்குக் கருநீலம், அமைச்சர் பெருமக்களுக்குக் கறுப்பு கோட், சர்ட். மற்றவர்களுக்கே இப்படியெனில் மாண்புமிகு பொகாஸாவுக்கு? நெப்போலியனுக்கு உடை தைத்த டெய்லர் இருக்கிறாரா? என்னது, அதற்குள் செத்துப்போய்விட்டாரா? சரி, நெப்போலியனுக்கு உடை தைத்த Guiselin நிறுவனம் இருக்கிறதல்லவா, அங்குதான் எனக்கு உடை தைக்கப்பட வேண்டும். அதேபோல. கச்சிதமாக. கம்பீரமாக. டாம்பீகமாக! உடைக்கான பில் $145000.

தன்னுடன் ராணியாக முடிசூட்டிக் கொள்ள, தனது 17 அதிகாரபூர்வ மனைவிகளில் ஒருத்தியும் பிரியசகியுமான கேத்ரீனைத் தேர்ந்தெடுத்தார் பொகாஸா. அம்மணிக்கான உடை, கிரீடம், சிம்மாசனம், இன்னபிற தயாரிப்புகளுக்கான செலவெல்லாம் தனி.

Bokassa, the new Bonaparte
Bangui, his illustrious city
Eclipses Rome, Athens, Sparta
By its brilliant beauty.

பிரான்ஸிலிருந்து பிடித்து வரப்பட்ட ஓர் இசையமைப்பாளர் விரல் ரேகைகள் தேயத் தேய பொகாஸா முடிசூட்டு விழா ஆல்பத்தைச் சமைத்தார்.

இப்படிப் பார்த்து பார்த்து ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, உலகமெங்கும் இருக்கும் தலைவர்களுக்கும்,அதிபர்களுக்கும், முக்கியஸ்தர்களுக்கும் முடிசூட்டு விழாவுக்குப் பெருமையுடன் அழைப்பு விடுத்தார் பொகாஸா. தலையில் அடித்துக் கொண்டு அவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்தார்கள், ‘ஏய் என்னப்பா இது..? இந்தாளுக்கு என்ன கிறுக்குப் புடிச்சிருச்சா?’

(அடுத்த இதழிலும் பொகாஸா  வருவார்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism