Published:Updated:

அம்மாக்களின் உணர்வுகளை விவரிக்கும் `1084's Mother' நாடகம்!

இளம்வயது மகனை/மகளை இழந்த அம்மாக்கள் பெரும்பாலான வீடுகளில் இருப்பார்கள். அவர்களின் உணர்வுகளை யாராலும் அத்தனை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. "Mother of 1084" அதைப் புரிந்துகொள்ளச் செய்கிறது.

அம்மாக்களின் உணர்வுகளை விவரிக்கும் `1084's Mother' நாடகம்!
அம்மாக்களின் உணர்வுகளை விவரிக்கும் `1084's Mother' நாடகம்!

மூகத்தின்மீதும் சமூக அமைப்பின்மீதும் நம்பிக்கையில்லாத ஒருவன், அதை எதிர்த்துக் கேள்வி கேட்கும்போது அதிகாரத்தாலும் அதிகாரத்துக்கு நெருக்கமாக இருக்கும் அமைப்புகளாலும் மிகப்பெரிய ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்படுவான். அப்படி ஒருவனின் கதையைக் கொண்டதுதான் இந்த `1084's Mother'  என்ற நாடகம்.

`சிறைதான் எங்கள் பல்கலைக்கழகம். இந்தப் பத்து ஆண்டு விடுதலை, நூறு ஆண்டு ஆகுக' என்ற வாசகம், இரண்டு பழைய டெலிபோன், நான்கு சிறைக்கம்பிகள் ஆகியவற்றுடன்  கூத்துப்பட்டறை அரங்கில் நாடகம் ஆரம்பமானது.

தன் மகன் ப்ரதி சாட்டர்ஜியின் பிணத்தை அடையாளம் காட்ட வேண்டும் எனச் சொல்லி சுஜாதாவுக்குப் போன் வருகிறது. அடையாளம் காட்டச் செல்லும் சுஜாதாவிடம், தன் மகனின் உடலைக்கூடப் பார்க்கவிடாமல் காவல்துறை அதிகாரி கொடுமையாக நடந்துகொள்கிறார். இந்த நாடகத்தின் பெயரில் இருக்கும் `1084' என்ற எண், ப்ரதியின் பிணத்தின் குறியீட்டு எண்.

இந்தச் சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகள் கழித்து, ப்ரதியின் பிறந்த நாளுக்குக் கதை நகர்கிறது. அவன் இறந்த நாளும் அன்றுதான். அவன் இறந்த பிறகு அவனின் அம்மா சுஜாதா அவனுடைய நண்பன் சோமு என்பவனின் வீட்டுக்கு அடிக்கடி சென்று சோமுவின் அம்மாவைச் சந்தித்துவருகிறார். ப்ரதி கொல்லப்பட்டது இந்த வீட்டில்தான். சோமுவும் ப்ரதியுடன் சேர்த்துக் கொலை செய்யப்பட்டவர்தான். இவர்கள் இருவர் மட்டுமல்ல, இவர்களுடன் சேர்ந்து இன்னும் இரண்டு பேரும் கொலை செய்யப்படுகிறார்கள்.

ப்ரதியின் அம்மா, சிறையில் இருக்கும் அவனின் காதலி நந்தினியையும் அடிக்கடி சந்தித்துவருகிறார். அப்படி அவர் இவர்கள் இருவரையும் மாறி மாறிச் சந்திக்கும்போது ப்ரதி பற்றிய பல விஷயங்கள் அவனின் அம்மாவுக்குத் தெரியவருகிறது. ப்ரதி யார்? அவன் ஏன், எப்படிக் கொல்லப்பட்டான்... போன்றவை பார்வையாளர்களுக்கு இந்த ஒன்றரை மணி நேர நாடகம் உணர்த்துகிறது.

இந்த நாடகம், `Mother of 1084' என்ற வங்காள மொழி நாவலைத் தழுவி வங்காளத்தில் எழுதப்பட்ட நாடகம். இதை எழுதியவர் மகேஸ்வத்தா தேவி. `மேடை நாடக அமைப்பு’ இதைத் தமிழில் மொழிபெயர்த்து, சென்னையில் நாடகமாக நிகழ்த்திவருகிறது. இந்த நாடகம் முழுவதுமாக கம்யூனிஸப் பின்புலத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. நக்சலைட் அமைப்பு உருவாகி வளர்ந்துவந்த காலகட்டத்தில், அதை ஒடுக்குவதற்கு அரசும் பிற அமைப்புகளும் செயலாற்றியதன் ஓர் ஆவணமாக இந்த நாடகத்தைக் குறிப்பிடலாம். 

நாடகத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் சுஜாதாதான். இதை மையமிட்டே இந்த நாடகம் முழுமையும் அமைந்திருந்தது. இந்தக் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தவர் பேராசிரியர், நாடக இயக்குநர் அ.மங்கை. மகன் நினைவில் திடீர் திடீரென அழுவதும், பரவசப்படுவதும், கோபப்படுவதும் எனக் காட்சிக்குக் காட்சி ஒவ்வோர் உணர்ச்சியையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த நாடகத்துக்கான இசை, வசனங்கள், மேடை அமைப்பு என எல்லாமே இயல்பாக அமைந்துள்ளன. நாடகத்தன்மையே இல்லாமல், காட்சிகளோடு இயல்பாக ஒன்றவைத்தது இந்த நாடகத்தின் சிறப்பு.

இதை வெறுமனே அவர்கள் ஒரு பிரதியாக மட்டும் எடுத்துக்கொண்டு நடத்திவிடவில்லை. கம்யூனிஸக் கட்சியின் வரலாறு, கோட்பாட்டு வகுப்புகள் என இதை நடத்துவதற்கு முன் இந்த நாடகப் பிரதியையும் இதன் சூழலையும் புரிந்துகொள்ள நாடகக்குழு பெரிதும் முயன்றுள்ளது. அதனால்தான் இதைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு எந்தவித நெருடலும் இல்லாமல், குழப்பங்களும் இல்லாமல் ஒவ்வொரு காட்சியும் நிஜ நிகழ்வாகவே நம் கண் முன் திறக்கிறது.

ப்ரதியின் காதலி நந்தினி, ஈழத்துத் தமிழ்ப் பெண்ணாக வருகிறார். இந்தக் கதாபாத்திரம் ஒரிஜினலிலும் இப்படியே இருந்ததா, இல்லை தமிழுக்கு ஏற்ப மாற்றப்பட்டிருக்கிறதா என்பது விளக்கப்படவில்லை. அதேநேரத்தில் நாடகத்தின் இடையிடையே பாடல்கள் வங்காள மொழியில் அமைந்திருந்தன. இவ்வளவு முயன்று இந்த நாடகத்தை நடத்திய இவர்கள், இதற்காகவும் சற்று மெனக்கெட்டிருதால், பார்வையாளர்களை இந்த நாடகத்துக்கு இன்னும்கூட நெருக்கமாக உணர வைத்திருக்க முடியும். 

தமிழகத்தில் பெரிய அளவில் நடந்த மாணவர் போராட்டமாக ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டத்தைக் குறிப்பிடலாம். அதன் பிறகு நடந்த மிகப்பெரிய போராட்டம் அல்லது பெரிய அதிர்வை ஏற்படுத்திய போராட்டம், தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டம்தான். தூத்துக்குடியில் நடந்தது மாணவர் போராட்டம் என்பதாகக் குறிப்பிட முடியாது. ஆனால், இதில் இறந்தவர்களில் குறிப்பிடும் அளவில் மாணவர்கள் இருந்தார்கள் என்பது உண்மை. அப்படி இறந்த ஒரு மாணவனின் மரணத்தோடும், அதன் பிறகு அவரின் அம்மா எப்படியெல்லாம் அவர் நினைவிலேயே இருந்திருப்பார் என்பதை விளங்கிக்கொள்வதன் மூலமும் இந்த நாடகத்தை நாம் இன்னும் நெருக்கமாக உணர்ந்துகொள்ள முடியும்.

இளம்வயது மகனை/மகளை இழந்த அம்மாக்கள், பெரும்பாலான வீடுகளில் இருப்பார்கள். அவர்களின் உணர்வுகளை யாராலும் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாது. உண்மையில் இன்னும் பரவலாக்கப்படவேண்டிய மிக முக்கியமான நாடகம் `1084's Mother'!