Published:Updated:

செல்லக் கிறுக்கி - சிறுகதை

செல்லக் கிறுக்கி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
செல்லக் கிறுக்கி - சிறுகதை

வரவணை செந்தில் - ஓவியங்கள்: ஸ்யாம்

செல்லக் கிறுக்கி - சிறுகதை

வரவணை செந்தில் - ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
செல்லக் கிறுக்கி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
செல்லக் கிறுக்கி - சிறுகதை

காய்கறி மூட்டைகளுடன் முன்னால் சென்றுகொண்டிருந்த `சின்ன யானை’யின் இன்ஜின் ஆயிலை மாற்றிப் பல ஆண்டுகள் ஆகியிருக்கும்போல. அதன் டிரைவர் கியர் மாற்றும்போதெல்லாம், எதிரியிடமிருந்து தப்பிக்கவென கணவாய் மீன்கள் பீய்ச்சும் கறுப்பு மையைப்போல சைலன்சரிலிருந்து குப்பென்று கரும்புகைப் பந்து வெளியாகி, ஒரு கணம் நின்று, பின் காற்றில் கலந்துகொண்டிருந்தது.

ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும், `இதுதான் கடைசியாகப் போகும் வாடகை வீடு’ என்று மனம்நிறைய  நினைத்துக்கொள்ளும் நம்பிக்கை இப்போதும் இருந்தது. `விரைவில் சொந்த வீடு வாய்க்கவிருக்கிறது’ என்ற குரலை, `உங்களை ஏற்றுக்கொள்ளும் பட்டினத்தில் அவர்கள் உங்கள் முன் வைப்பதைப் புசித்து, தேவனுடைய ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது என்று சொல்லுங்கள்’ என்கிற வேத வாக்கியத்தின் உறுதியோடு எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.  கடவுள் நம்பிக்கையில்லாதவன் என்றாலும், நல்லதொரு எதிர்காலத்தையாவது நம்பித்தொலைய வேண்டித்தானே இருக்கிறது.

`உழைக்க மறுக்கும் நீ ஒரு உட்டோப்பியன். கனவுலகவாசி’ என்று ஆட்காட்டி விரலால் என்னை நோக்கிக் கைநீட்டிக் குற்றஞ்சாட்டி, மது மேஜையை விட்டு எழுந்து போன உற்ற நண்பன்தான் நான் அமர்ந்திருக்கும் வீட்டுச் சாமான்கள் ஏற்றப்பட்ட மினி லாரியை ஓட்டிக்கொண்டு வருகிறான். ஒவ்வொரு முறையும் முகத்தில் எள்ளல் தொனிக்க, அவன்தான் வீடு காலி செய்ய உதவிக்கு வருகிறான் என்பது உபகதை.

அம்மா, கோமதி, பிள்ளைகள் எல்லோரும் பொதிகையில் வந்துகொண்டிருக்கிறார்கள். நான் சென்னைக்குப் போய்ச் சேரும் நேரத்தில் ரயிலும் வந்துவிடும். சாமான்களை இறக்கச் சொல்லிவிட்டு, நான் போய் அவர்களை அழைத்து வந்துவிட வேண்டும். நாளையே பள்ளி தொடங்குகிறது. வீடும் பள்ளியும் அருகருகே கிடைத்துவிட்டன. ஆனால், வீட்டுச் சாவியைக் கொடுக்கத்தான் நாள்கணக்கில் இழுத்தடித்துவிட்டார் ஹவுஸ் ஓனர்.

செல்லக் கிறுக்கி - சிறுகதை

``இந்தத் தெருவில், `ஈ.பி பில்லை நீங்களே கட்டிக்கிடுங்க’னு சொல்ற ஒரே ஓனர் நாந்தான்... பார்த்துக்கிடுங்க. எல்லாப் பக்கமும் யூனிட்டுக்கு ஏழு ரூபா வாங்குறாங்க’’ என்று, அட்வான்ஸ் வாங்கும்போது சொன்னார். ஆனால், டிஸ்டெம்பர் அடித்துத் தருவதற்கு இழு இழு என இழுத்துவிட்டார். அதனால்தான் நாளைக்குப் பள்ளியை வைத்துக்கொண்டு, நெருக்கடியான நேரக் கெடுவில் குடிவரும்படி ஆகிவிட்டது.

ஒருவழியாக எழும்பூரிலிருந்து எல்லோரையும் வீட்டுக்கு அழைத்து வந்து, சாமான்களை இறக்கத் தொடங்கிக் கொஞ்ச நேரம்தான் ஆகியிருக்கும். ``ஏம்ப்பா... வேலை செய்றவங் களுக்கும் ,எங்களுக்கும் காபி வாங்கிட்டு வந்துரு...’’ என்றபடியே என் கையில் ஃப்ளாஸ்க்கைத் திணித்தார் அம்மா.

பார்த்துக்கொண்டிருக்கும் வேலையைப் பாதியோடு விட்டுவிட்டு, ஃப்ளாஸ்க்கோடு கிளம்பியவனைப் பார்வை யாலேயே எரித்து அனுப்பினாள் மனைவி. மாமியாருக்கும் மருமகளுக்கும் நான் கைக்கு இசைவாக இருக்கும் வரை ஒத்தே போகாது. ஆனால், நான் வெளியூருக்குப் போய்விட்டால் பாம்பைக் கண்டு பயப்படும் குரங்குகள், ஒன்றையொன்று கெட்டியாகக் கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிடுவதைப்போல அப்படி ஒற்றுமையாகி விடுவார்கள். இருந்தாலும், அம்மைக்கு தம்பி வீட்டிலதான் ஜாகை. ``தெரியாத ஊருக்குப் போறோம்... பெரியவங்க வேணும்ல?’’ என்று அத்தையை அவள்தான் போய்க் கூட்டி வந்தாள். `நானா வரச்சொல்லிக் கூட்டிட்டு வந்தேன்... இங்கே வந்து நம்மை முறைக்கிறா...’ என்கிற விசனத்துடன் காபிக் கடைக்குப் போனேன்.

``இப்படியெல்லாம் பிள்ளையை புழுக்கை மண்டி போட விடாதேம்மா... அப்புறம் காலெல்லாம் சூம்பிப் போயிரும். வளர்ந்து நடக்கையில ரெண்டு முட்டியும் இடிச்சிக்கும்.’’

செல்லக் கிறுக்கி - சிறுகதை

படியேறும்போது அம்மா யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தது கேட்டது. இதுதான் அவரின் ஸ்பெஷாலிட்டி. எப்படித்தான் என்று தெரியவில்லை... யாரையும் ஐந்து நிமிடங்களில் நட்பாக்கி, தன்னைச் சுற்றிக் கூட்டம் சேர்த்துவிடுவார். இப்போதுதான் குடிவந்திருக்கும் இந்த வீட்டின் நீள அகலம்கூட இன்னும் பழகியிருக்காது. அதற்குள் கொலு பார்க்க வந்த கூட்டம்போல் பலரையும் சுற்றி அமரவைத்துப் பேசிக்கொண்டிருந்தார்.

இதுதான் மருமகள்களுக்குக் கடுப்பான கடுப்பு. ``தெனம் எவளாவது ரெண்டு பேரு தேடி வந்துர்றாளுக... `இட்லி மாவு பொங்க மாட்டேங்குது’, `தூரம் தள்ளி தள்ளிப் போகுதுனு.’ இருக்குற பால் பூரா ஓசி காபி குடுத்தே தீர்ந்துபோகுது’’ என்கிற கோபமான புலம்பலுடன் விழும் குத்தை, நானும் தம்பியும் முறையே அவரவர் மனைவிகளிடம் குமட்டில் வாங்கிக்கொண்டுதான் இருந்தோம்.

சாமான்கள் பரவலாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வீட்டுக்குள் தேடித்தேடிக் கால்வைத்து, நான் நுழைந்தபோது அம்மாவின் காலடியில் ஒரு பெண், பிள்ளையுடன் உட்கார்ந்திருந்தாள். வீட்டுக்குள்ளும் புதிய பெண் குரல்கள் கேட்டன.

``அய்... அம்மா இங்கே பாரேன்... இந்த அண்ணா வச்சிருக்குற ஃப்ளாஸ்க் நம்ம வீட்டுல இருக்குறது மாதிரியே இருக்கு...’’ என்று ‘சோப்பு சீப்பு கண்ணாடி’ விஜய நிர்மலாவின் பரவசத்தோடு ஒரு வளர்ந்த பெண் அதைப் பிடுங்கிக்கொண்டு என் வீட்டுக்குள் போனாள்.

நான் ’என்ன நடக்குது இங்கே’ என்பதைப்போல் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆட்களின் கசகசப்பினூடே என்னை எரித்துவிடும் செங்கதிர்ப் பார்வையை சுவருக்கு அந்தப் பக்கம் இருந்தே கோமதி என்மீது வீசுவதை உணர்ந்தேன். 

அத்தனைபேரும் அந்த ஃப்ளாட்டில் குடியிருப்பவர்கள்தான். சென்னை ஃப்ளாட் குடித்தனக்காரர்கள், அடுத்த வீட்டுக்காரர்களுடன் பேணும் உறவுமுறைகளின் அங்கலாய்ப்புகளை நிறைய கேட்டும் படித்துமிருந்த எனக்கு, அரை மணி நேர காபி கேப்பில் பக்கத்து ஃப்ளாட்காரர்கள் என் நடுவீட்டில் வந்து உட்கார்ந்திருந்ததை நம்புவதற்குக் கடினமாகத்தான் இருந்தது. அதிலும் அந்தப் பெண் பிள்ளை என்னிடமிருந்து ஃப்ளாஸ்க்கைப் பிடுங்கியது கொஞ்சம் கடுப்பைக் கிளப்பித்தானிருந்தது.

செல்லக் கிறுக்கி - சிறுகதை

``உங்களுக்குனு எப்படிம்மா வந்து வாய்க்கிறாங்க... கண்டிப்பா இந்த ஊர்க்காரய்ங்களா இருக்க மாட்டாங்க. அப்படித்தானே...’’ என்றேன் லேசான எரிச்சலுடன். சாமான்களை எல்லாம் இறக்கி வைத்து, அடுக்கி முடித்து, குளித்துவிட்டு வெளியே வந்திருந்தேன். பக்கத்து ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, எங்களுக்கும் பார்சல் வாங்கி வந்து கொடுத்துவிட்டு, மினி லாரி நண்பனும் உடன் வந்த ஹெல்ப்பர்களும் கிளம்பிப் போனார்கள்.

என் குரலில் இருந்த எரிச்சலை நாடி பிடித்து, ``அது என்ன பழக்கம்... முன்னப்பின்ன தெரியாத ஆளுகிட்ட கையில இருக்கிறதைப் பிடுங்குறது...’’ என்றபடி என்னுடன் `ஆமடி தங்கத்துக்கு’ ஆட்டைக்குச் சேர்ந்தாள் பாரியாள். கோமதி இருக்கும்போது அம்மாமீது வரும் எந்த வகைக் கோபம் என்றாலும், உடனடியாகவோ, அதைப் பெரிய விஷயம் என்றோ காட்டுவதில்லை. இதுதான் சாக்கு என அவளும் ஒரு ரவுண்டு களத்தில் இறங்கிவிடுவாள். உடனே கோவித்துக் கொண்டு கிளம்பிவிடுவார் அம்மா. ஆனால், அது இரண்டு நாள்தான். மூன்றாம் நாளில் அவளின் நம்பருக்கே கூப்பிட்டு ``என்ன சோறு ஆக்கினே... கொழம்பு என்ன... வெஞ்சனத்துக்கு என்ன செஞ்சே...’’ என மருமகளை மேய்க்கத் தொடங்கிவிடுவார்கள். 

``ஃப்ளாஸ்க்கை உன் கையில இருந்து புடுங்கினவளைப் பத்திக் கேக்குறியா... அவ ஒரு செல்லக்கிறுக்கிடா. அவளைப்போய் திட்டிக்கிட்டிருக்கே. ஒத்தப் புள்ளையாம்... செல்லமா வளர்த்திருக்காங்க. இந்த வருஷம்தான் காலேஜ் முடிச்சிருக்காளாம். செங்கல்பட்டுக்காரவுகளாம். அப்பாவும் அம்மாவும் கவர்மென்ட் வேலை பார்க்குறாங்க. அன்னிக்குக் கூட வந்தது அவங்க அம்மா. கோர்ட்டுல வேலை செய்யுதாம்...’’ என்று டீட்டெயில் கொடுத்தார் அம்மா.

கல்லூரி முடித்தவளா அப்படி வெடுக்கென முன்பின் தெரியாத ஆளின் கையில் இருந்ததைப் பிடுங்கினாள்? கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் குரல்வேறு. அந்தக் கொஞ்சல் ஸ்லாங்கே கடும் வெறுப்பைத் தந்தது. வளர்ந்த பின்னரும் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ பட ஜெனிலியாத்தனமாகப் பேசிக்கொண்டு திரிபவர்களைப் பார்த்தாலே எனக்கு செம எரிச்சல் ஏற்படும். இவள் அப்படியே ஜெனிலியாவை உரித்துவைத்திருந்தாள்.

இந்த இடத்தில் காலண்டர் தாள்களைப் பறக்கவிடலாம். 

அந்த ஃப்ளாட்டில் இருந்த 15 நாள்களில் என் வீடு நீங்கலாக, ஐந்து வீட்டுப் பெண்களுடன் பார்க்கும்போதெல்லாம் `ஹை ஃபைவ்’ அடித்துக்கொள்ளும் அளவுக்கு நட்பை வளர்த்துக் கொண்டுவிட்டார் அம்மா. வெள்ளைப்படுதல் தொடங்கி சுடிதார் லைனிங் துணி எவ்வளவு வாங்குவது என்பது வரையிலான அனைத்துக்கும் யோசனை கேட்டு எந்நேரமும் பெண்கள் கூட்டமாக இருந்தது வீடு. ``இது பெருசா இருக்கசொல்ல உரிச்சது... அதே கோழி சின்னதா இருக்கசொல்ல உரிச்சது’’ என `மகராசன்’ கமல்ஹாசன் விளக்கம்போல அம்மா ப்ளஸ் செல்லக்கிறுக்கி என்கிற கொடூர காம்போ அமைந்து ரணகளமாகவே இருந்தது வீடு. என்னையும் கோமதியையும் தவிர எல்லோரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர்.

வெயிட் தடதடத்து, விசில்விடத் தயாராகும் குக்கரைப்போல் என்னைப் பார்க்கும்போதெல்லாம் கோமதி துடித்துக் காட்டினாள். `தம்பி பிள்ளைக்கு உடம்பு சரியில்லை’ என்று வந்த செல்போன் அழைப்பை சாக்காக வைத்துக்கொண்டு அதே பொதிகையில் தட்கல் டிக்கெட் போட்டு, மீண்டும் அம்மாவை ஏற்றிவிட்டேன். இருந்தாலும், அலுவலகம் முடிந்து வீட்டுக்குள் நுழையும்போதெல்லாம் அம்மா அந்த சோபாவில் இல்லாதது ‘வெறிச்’ என்றுதான் நாலைந்து நாள்களுக்கு இருந்தது.

இதற்கிடையே பிள்ளைகளுடன் செமத்தியாக ஜெல்லைப்போல் ஒட்டிக் கொண்டாள் செல்லக்கிறுக்கி. ஆரம்பத்தில் ‘சிப்பிப்பாறை நாயின்’ கூர்மத்துடன் புருவத்தைத் தூக்கிய முறைப்போடு அவளை டீல் செய்த கோமதியும் ஒருகட்டத்தில் அவளுடன் ஒட்டிக்கொண்டாள். பெற்றோர்களின் மனதிடத்துக்கு சோதனைவைக்கும் நோக்கில், சிபிஎஸ்சி பள்ளிகள் அளிக்கும் நாளொரு ப்ராஜெக்ட்களை அன்றே முடித்துக்கொண்டு போன என் பிள்ளைகளை அசுரக் குஞ்சுகளைப்போல் மிரட்சியுடன் ஆசிரியர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். அதையெல்லாம் செய்துகொடுத்தது செல்லக்கிறுக்கிதான். ஆனால், எனக்கு மட்டும்தான் அந்தச் செல்லக்கிறுக்கியின் அண்மையை உணர்வதே வெறுப்பாக இருந்தது.

``அவளைப் பார்த்தா மூஞ்சி ஏன் அப்படிப் போகுது. பாவத்த...’’ என்று கோமதி என்னை சிடுசிடுக்க ஆரம்பித்தாள். பொதுவாக பெண்கள் நட்பு என்பது அமாவாசை, பௌர்ணமிபோல வளரவும் தேயவும்தான் இருக்கும். காரணம் இல்லாமலோ அல்லது அபத்தமான காரணத்துடனோ முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்வார்கள். அப்படியான ஒன்று செல்லக்கிறுக்கிக்கும் கோமதிக்கும் ஏற்பட்டு இருவரும் பேசாமலிருந்தார்கள். என் அளவீட்டில் எந்த மாற்றமும் இல்லாமல்தான் அந்தச் செல்லக்கிறுக்கியை வைத்திருந்தேன். மடியில் இருக்கும் நாய்க்குட்டி குஷி மிகுதியில் முகத்தை நக்கிவிடக் கூடாது என ஒருவித எச்சரிக்கையுடன் இருப்போமே... அப்படி.  

``என் மாமியாக்கெழவி இவளை மாதிரியேதான் செஞ்சிருக்கும் வயசுல...’’ என்று எதற்கோ இவளின் கிறுக்குத்தனங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒருநாள் கோமதி சொன்னாள். எனக்கு சுறுக்கென்று கோபம் வந்துவிட ``அவங்களை இழுக்கலைனா தூக்கம் வராதே...’’ என்பதுபோல ஏதோ திட்டிவிட்டேன். அவள் விளையாட்டாகத்தான் சொல்லியிருக்கிறாள். 

அவர்கள் இருவரும் பேசாவிட்டாலும், மாடிப்படி வளைவுகளில் பிள்ளைகளை எதிர்கொண்டால் ஜாடை பேசுவது... அவர்களுக்குப் பிடிக்கும் பாட்டு டி.வி-யில் வந்தால், என் வீட்டுக்குக் கேட்கும் அளவுக்கு சத்தமாக வைத்துவிடுவது... மாடியில் ஹெட்போனுடன் யாருடனாவது கடலை போட்டபடி உலாத்தும்போது மழை தூறத் தொடங்கினால், கொடியில் காயும் பிள்ளைகள் உடுப்புகளை மட்டும் நனையாமல் படியில் மடித்து வைத்துவிடுவது எனச் செய்யும்  செல்லக்கிறுக்கியின் செயல்கள், `இவளிடம் பேசித் தொலையலாம்’ என்கிற எல்லைக்கு கோமதியைக் கொண்டு சென்றுவிட்டது. மீண்டும் `சின்ட்ரெல்லா’ படம் போட்ட அவளின் ப்ளிப்-ப்ளாப்கள் என் வீட்டு வாசலில் கிடக்கத் தொடங்கின.

சென்னையின் மால்களையும், மயிலை சாய்பாபாவையும் என் குடும்பத்துக்கு சாதாரணமாக்கிவிட்டாள்... `ஞாயிறு இரவு கட்டாயம் ஓட்டல் உணவுதான்’ என்கிற பெருநகர நடுத்தரக் குடும்பங்களில்கூட உள்ள நடைமுறை... என இப்படி எனக்குப் பிடிக்காத எல்லாமே என் வீட்டுக்குள் நுழையக் காரணம் அவள்தான். என்னிடம் அவள் குறித்த க்ரைம் ரேட் ஏறிக்கொண்டே போனது. எல்லா அறிவும்கொண்ட வளர்ந்த பெண்ணாக இருந்துகொண்டு குழந்தைமையைக் கைவிட மறுத்து அவள் திரிவதே என் எரிச்சலுக்குக் காரணம்.

அன்று கோட்டூர்புரம் போகவேண்டிய வேலை. அலுவலகத்தில் இரவு நேரம், மழைவேறு பெய்வதுபோல இருப்பதால், டாக்ஸி எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். ஓலா புக் செய்திருந்தேன். என் தெருவுக்குள் வண்டி வந்தால் திருப்புவது கடினம் என்பதால், தெருவின் முனையில் சர்ச் வாசலுக்கு வரச் சொல்லியிருந்தேன். வரச் சொல்லியிருந்த நேரத்துக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே போய், சர்ச் வடமேற்கு காம்பவுண்டு சுவரில் கண்ணாடி அறையில் இருந்த மாதாவின் சொரூபத்தின் அருகில் நின்றேன். அப்போதுதான் கவனித்தேன்; தெருவின் மற்றொரு முனையில் எனக்கு எதிரே செல்லக்கிறுக்கி அவளின் மொபைலை இரு கைகளாலும் ஏந்திக்கொண்டு ஷார்ட்ஸும் டீஷர்ட்டுமாக நின்றிருந்தாள். வழக்கமாக அவள் அம்மா தாமதமாகி வீட்டுக்கு வரும் நேரத்தில், இப்படி வந்து நின்று கூட்டிச் செல்வாள். கராத்தே, சிலம்பம் சிலா வரிசையெல்லாம் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கு இவள் குறித்த பயமில்லை. கராத்தேவும் கற்றுக்கொண்டு இப்படிக் `கொஞ்சிக் கொஞ்சி மதிமயக்கும்’ லூசாகத் திரிவது இவளாகத்தான் இருக்கும்.

செல்லக் கிறுக்கி - சிறுகதை

கார் வந்தது. நான் நின்றது தெரு மெயின் ரோட்டில் சேரும் இடம் என்பதால், நிறுத்த வந்த டிரைவர் யோசித்து, கொஞ்சம் தள்ளிக் கொண்டுபோய் நிறுத்தினார். நான் காரை நோக்கித் திரும்பி நடக்கத் தொடங்கினேன். செல்லக்கிறுக்கிக்கு முன்னால் வந்து நின்ற பல்சரில் இருவர் இருந்தனர். பின்னால் இருந்த ஹெல்மெட் போடாத ஒருவன் அவள் இரு கைகளில் ஏந்தி நின்ற மொபைலை, வங்கியில் பணம் செலுத்தும் சலானை எடுக்கும் லாகவத்தோடு தன் இரு விரல்களால் உருவினான். என்ன நடக்கிறது என்று அவள் புரிந்துகொள்வதற்கு முன் பல்சர் ஜிவ்வென்று துள்ளியது. சட்டென்று ஓடினால், அவர்களைக் கீழேயாவது தள்ளிவிட முடியும் எனத் தாவினேன். அதற்குள் துள்ளிக் கிளம்பிய பல்சர், ஆக்ஸிலேட்டரை முறுக்கிய நிலையில் அப்படியே பிடித்துக்கொண்டுவிட்டது. வண்டி ஓட்டியவனின் கட்டுப்பாட்டில் இல்லாமல் `ரோடியோ’ காளைபோல அங்கும் இங்குமாகத் துள்ளி சர்ச்சுக்குள் புகுந்தது. அந்த இருவரும் மெழுகுவத்தி ஸ்டாண்டில் மோதி, தரையில் உராய்ந்தபடியே போய் தென்மேற்கில் பெரிய உருவமாக நின்றுகொண்டிருந்த அந்தோணியார் சிலையின் காலடியில் மோதிக் கிடந்தார்கள். உள்ளே ஓடினேன்... அந்தப் பிள்ளையும் ஓடிவந்தாள்.

பல்சரின் டூம் உடைந்து பாழ் என்று கிடக்க, ஹெல்மெட்காரன் கையை உதறியபடி நின்றான். ஆட்கள் நெருங்கி வருகிறார்கள் என்றதும் பளிச்சென்று காம்பவுண்டில் ஏறிக் குதித்து ஓடினான். பின்னால் உட்கார்ந்து செல்போனைப் பிடுங்கியவன், இன்னும் பைக்கின் அடியில்தான் கிடந்தான். வண்டியின் இண்டிகேட்டர் விளக்கு ஒவ்வொரு முறையும் அணைந்து எரியும்போதும் `அந்தோணியாரே... எமக்காக வேண்டிக்கொள்ளும்’ என்று சிலையின் மேல் எழுதியிருந்த வாசகம் இருட்டில் தோன்றித் தோன்றி மறைந்தது.

நடந்ததைப் பார்த்த படபடப்பும் நடுக்கமும் மேலிட அவன் சட்டையைப் பிடித்துத் தூக்கினேன். செதில்களை நீக்க சாம்பலைக் கொட்டித் தரையில் உரசிய குரவை மீனைப்போல் இடது பக்கம் கன்னம் தொடங்கி தோள்பட்டை, கை... என முழுவதும் சிராய்ந்துபோய் நின்றான். மூங்கில்தப்பை உடலும் மாட்டிக்கொண்ட ஆற்றாமையுமாக இருந்த அவனின் கைகளில் மொபைல் இன்னும் இருந்தது.

சர்ச்சுக்குள் வந்து, எங்கள் எதிரே இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தபடியே நின்றாள். அவன் கீழே பார்த்தபடி அந்த மொபைலை அவளிடம் நீட்டினான். ``ஏன்டா லூஸு... இந்த போன் நாலு தடவை தண்ணியில விழந்தது. ரொம்பப் பழைய மாடல். பிடுங்கினதோட போய்த் தொலையலாம்ல... ஏன்டா கண்ணு முன்னாடியே விழுகுறீங்க...’’ என்றபடி அவனை இழுத்து அந்தோணியாரின் சிலையின் பின்னால் சுவரில் இருந்த கண்ணாடியில் காட்டினாள். தன் கோலத்தைக் கண்டு நிலைகுலைந்துபோனான் அவன்.  

``நீங்க போங்க அங்கிள்... ஐ ஹாஸ்பிடல்ல நான்ஸி அத்தையம்மா நைட் டியூட்டி... அங்கே போய் ஃபர்ஸ்ட் எய்டு கொடுத்துட்டு, நான் வீட்டுக்குப் போறேன்...’’ என்று சொல்லிவிட்டு, அவனைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போனாள். நடந்தவை குறித்தும் அடுத்தடுத்து என்ன செய்வது என்கிற தீர்க்கமும் கொண்டவளாக அவனுடன் அவள் போய்க்கொண்டிருந்தாள். நான் காருக்குப் போனேன்.

``ஏன்யா... அங்கே அவ்வளவு பிரச்னை நடக்குது... வண்டியை விட்டு இறங்கி வர மாட்டியா?’’ என்று டாக்சி டிரைவரிடம் சினந்துகொண்டேன்.

``சார், நான் வண்டி மாத்தியே ரெண்டு நாள்தான் ஆச்சு. ஊருக்குப் புதுசு.. சாரி சார். பயந்துட்டேன்...’’ என்ற டிரைவர், ``சார்... அது உங்க பொண்ணா சார்?’’ என்று கேட்டார்.

எந்தப் பதிலும் சொல்லாமல் இடது பக்கம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

கார் எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியைக் கடந்து சென்றது. அவளின் குறும்பு தொனிக்கும் குணங்கள் எதுவுமின்றி, முதிர்ந்த ஒரு பெண்ணாக, அவனை ஒரு செவிலியின் கருணையோடு ஆஸ்பத்திரிக்குள் நடத்திப் போய்க்கொண்டிருந்தாள்.

கோமதி, எப்போதாவது நான் ஆமோதிக்கும் ஒன்றைச் சொல்லித்தான்விடுகிறாள் என்றுபட்டது.