Published:Updated:

மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை!

மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை!
பிரீமியம் ஸ்டோரி
மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை!

தமிழ்நதி - ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி

மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை!

தமிழ்நதி - ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி

Published:Updated:
மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை!
பிரீமியம் ஸ்டோரி
மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை!

முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மைதிலியை வவுனியாவில் கண்டேன். சந்தையில் மரவள்ளிக்கிழங்குகளைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். காலம் அவளை உருக்குலைத்திருந்தது. என்றாலும், மேடிட்ட நெற்றியில் வெளேரெனத் தெரியும் பிறை வடிவிலான தழும்பையும் கண்களையும் அதனால் ஒன்றுஞ் செய்ய முடியவில்லை. தற்செயலாக நிமிர்ந்தவள் என்னைப் பார்த்தாள். பிறகு, மீண்டும் மரவள்ளிக்கிழங்குகளை ஆராயத்தொடங்கினாள். 

மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை!

என்ன காரணத்தாலோ அவள் என்னைத் தவிர்க்கிறாள்!

கழுத்தில் கறுப்புக் கயிறொன்று அழுக்கேறிக் கிடந்தது. கறுப்பும் நரையும் கலந்தோடிய மயிர்க்கற்றைப் பின்னலென்ற பெயரில் முதுகில் அசைந்தது.

“மைதிலிதானே நீங்கள்?”

அவளாக இல்லாதபட்சத்தில் அந்தப் பன்மை விளி என்னைக் காப்பாற்றும். அழைப்பை எதிர்பார்த்திருந்ததுபோல, எனது பெயரைச் சொல்லியபடியே கைகளைப் பிடித்துக்கொண்டாள். ஒட்டாத பிடிதானென்றாலும், மரவள்ளிக்கிழங்கில் ஒட்டியிருந்த மண்ணில் கொஞ்சம் என் உள்ளங்கைக்கு மாறியது.

பேருந்தில் பன்குளத்திலிருந்து திருகோணமலைக்குப் பள்ளிக்கூடம் போன நாள்களில் மைதிலி என் தோழியானாள். அவள் விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் நான் சண்முகவித்தியாலயத்திலும் படித்தோம்.

பள்ளிக்கூடப் பிள்ளைகளும் வேலைக்குப் போகிறவர்களுமாக நிறைந்திருக்கும் அந்தப் பேருந்து, ஏழு மணியிலிருந்து ஏழு ஐந்துக்குள் மைதிலியின் தரிப்பிடத்தைச் சென்றுசேரும். ஒற்றையடிப்பாதை… அதனருகில் ஆள் அமரக்கூடியளவு பெரிய கருங்கல்... அந்தக் கல்லில் அமர்ந்து மைதிலி காத்திருப்பாள். பேருந்தினுள் ஏறியதும் நானிருக்குமிடத்துக்கு வந்துவிடுவாள். பேருந்தோடு கூட கதையும் ஓடும்.

சந்தையின் தாழ்வாரத்தினோரம் ஒதுங்கினோம். சுற்றிலும் இரைச்சல். “மாம்பழேம்…” பழக்கடைக்காரனது குரல் விடாப்பிடியாக ஒலிக்கிறது. ‘`வழி.. வழி… வழி’’ வெற்றிலைக் கூடையோடு ஒருவன் இடித்துக்கொண்டு போகிறான். “அக்கா! இஞ்சை வாங்கோ...” மரக்கறிகள் மீது தண்ணீரை விசிறியபடி மற்றொருவன் அழைக்கிறான். அவரவர் வேலையும் அவசரமும் அவரவர்க்கு.

“ஏன் என்னைப் பாத்தும் பாக்காததுபோல இருந்தனி?” கேட்டேன்.

“வெளிநாட்டுக்காரி… கதைப்பியோ மாட்டியோ எண்டு யோசிச்சன்” - நக்கலும் காரணமற்ற மனத்தாங்கலுமான குரல். முகத்தில் நிரந்தரமாக அப்பிக்கிடந்த வருத்தம்.

“வெளிநாட்டுக்குப் போனா எல்லாம் மறந்துபோயிடுமா?” என்னால் அவளுடைய விலகலைப் புரிந்துகொள்ளமுடியவில்லை.

“இப்ப பன்குளத்திலை இல்லையா?”

“அப்பவே வெளிக்கிட்டாச்சு. அதோட எல்லாம் போச்சு…” அவள் என் கண்களைப் பார்க்காமல் எங்கோ பார்த்தபடி கூறினாள். துக்கத்தின் அலை உருண்டு திரண்டு உள்ளுக்குள் பொங்கி எக்கணமும் அது பேரிரைச்சலுடன் வெளிப்பாய்ந்து
விடும்போல… ஏனிப்படி இருக்கிறாள்?

“மாம்பழேம்… சீசன் முடிஞ்சாக் கிடைக்காது” - மாம்பழக்காரனோ விட்டபாடில்லை! போதாக்குறைக்கு, சற்றுத் தள்ளி இரண்டு பேர் தர்க்கப்பட்டுக்கொண்டு நின்றார்கள்.

 “இதிலை நிண்டு கதைக்கேலாது… வீட்டை வாவன்.”

வீட்டு முகவரியைக் காகிதமொன்றில் கிறுக்கிக் கொடுத்தேன். அதற்குள் அலைபேசி அழைத்தது.

“பிள்ளைகளுக்கு எதாவது வாங்கிக் குடு” என்று நான் கொடுத்த பணத்தைச் சற்றுத் தயங்கிய பின்னர் வாங்கிக்கொண்டாள். புறப்படும் அவசரகதியில் சிதம்பரம் ஆச்சி இறந்துபோனதைத் தெரிவித்தாள். சுதாகரித்துக்கொண்டு விவரத்தைக் கேட்பதற்குள் என் கையை விட்டுவிட்டு வேகவேகமாகச் சந்தைக் கட்டடத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டாள்.

இப்போது உயிரோடு இருந்திருந்தால், ஆச்சி எண்பது வயதைக் கடந்திருப்பார். ஆனால், அப்போது அவருக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் ஐம்பது வயதிருக்கும். பன்குளத்திலே அவருக்குப் பல ஏக்கர் வயல்காணிகளும் நான்கு வீடுகளுமிருந்தன. நெல்லும் குத்தகைப் பணமும் வாடகையும் வட்டிக்காசும் அவரை ‘ஆச்சி’யாக விளிக்கப் பண்ணியிருக்கலாம்.

ஆச்சி நல்ல பருமனும் மாம்பழ நிறமும்.  தோளிலிருந்து சற்று விலகித் தொங்கும் சதைப்பிடிப்பான கைகளை வீசியபடி அலையிலாடும் படகுபோல அசைந்தசைந்து வருவார். இடுப்பில் ஒரு பூப்போட்ட சாரம், மேலே நீளமான பிளவுஸ், பிளவுஸின்மேல் ஒரு மெல்லிய துண்டு… இதுதான் ஆச்சியின் உடை.        

மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை!

ஆச்சியின் புருஷன் நித்திய நோயாளி. “என்னைப் பிடிச்ச சனியனே! எப்பதான் என்னைவிட்டுப் போவாய்?” என இருமலோடு ஓயாத எதிர்வாதம். மாலை சாய்ந்து சரக்கடித்ததும், அந்த வாதம் கண்ணயர்ந்துபோகும்.

ஆச்சிக்கு ஒரேயொரு மகள். ஒரு பேத்தி. பேத்தியின் பெயர் துசாந்தி. விதை வெங்காயச் சிப்பங்கள் தொங்கவிடப்பட்ட, நெல்லு மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்ட, இருட்டும் எலிகளும் ஒன்றாக வாழும் அறைக்குள் நானும் துசாந்தியும் ஒளித்துப் பிடித்து விளையாடுவோம். ஆச்சியின் மருமகன் கொழும்பில் கடை வைத்திருந்தார். எப்போதாவது திருகோணமலைக்கு வந்து குடும்பத்தைப் பார்த்துவிட்டுப் போவார். அவர் வருவதும் தெரியாது; போவதும் தெரியாது.

இரவுகளில் ஆச்சி செய்யும் பஞ்சாயத்து எங்கள் வீடு வரை கேட்கும். ஊரில் யாராவதொரு ‘ஆம்பிளை’ குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்திருப்பார். இல்லையெனில், சம்பளக்காசை சாராயத்தில் விட்டிருப்பார். “இல்லை ஆச்சி… நம்புங்கோ… இனி அப்பிடி நடந்துகொள்ள மாட்டன்” என்று சம்பந்தப்பட்டவரின் குரல் எண்ணெய் குறைந்த கைவிளக்கு காற்றிடம் மன்றாடுவதுபோல நலிந்து ஒலிக்கும்.
 
எண்பத்தியோராம் ஆண்டு ஆச்சியின் வீடுகளிலொன்றில் நாங்கள் குடித்தனக் காரர்களானோம். அப்போது 200 ரூபாய் வாடகை கொடுத்ததாக நினைவு. குறையுமேயன்றி, கூடாது. அதைக் கொடுக்கவும் ஆயிரத்தெட்டு இழுபறி.

வெயில் ஏற ஏற வியர்வையுடன் ஆச்சியின் கோபமும் கூடிவிடும். அதனால், அம்மா ‘விடிய வெள்ளணவே’ போய்விடுவார். ஆச்சியின் வீடு திருகோணமலை-பன்குளம் பிரதான வீதியிலிருந்தது. நாங்கள் இருந்த வீடோ அதற்கு நேர் பின்னால் ஏழெட்டு நிமிட நடை தூரத்தில். சிறு செடிகள் அடர்ந்த வளவு, குறுகலான மரப்பாலம், கிணற்றடி இதைக் கடந்தால் ஆச்சி வீடு வந்துவிடும்.

“இந்த மாத வாடகைக் காசை ஒரு கிழமை பிந்தித்தான் தரேலும் ஆச்சி” - அம்மா நைந்த குரலில் ஆரம்பிப்பார்.

“ஏன்... சம்பளக் காசு முழுவதையும் உன்ரை புருசனார் குடிச்சு முடிச்சிட்டாரோ?” சற்று கோபமாகவே கேட்பார். கோபப்படும்போது, கடைவாய்ப் பற்களும் தெரியும்படி வாயை அகட்டி மூடுவது ஆச்சியின் வழக்கம். அப்படி அவர் செய்யும்போது சிரிப்பதுபோலத் தோன்றும்.

“இல்லை ஆச்சி…” சொல்வதற்கு அம்மாவிடம் நூறு பிலாக்கணங்கள் இருந்தன. அதை ஆற அமர அமர்ந்து கேட்குமளவுக்கு ஆச்சியிடம் இரண்டு பெரிய செவிகளும், அகன்ற மார்பினுள் கனிந்த இதயமும் இருந்தன.

வாடகைக்குச் சமாதானம் சொல்லப்போன அம்மா திரும்பி வரும்போது அரிசியோடும் உளுந்தோடும் வந்துசேர்வார்.

“அந்த மனுசியொரு தங்கம்!”

தங்கம் போய்விட்டதாம்!

மைதிலி என்னைத் தேடி வரவேயில்லை. அதைக் குறித்து நான் வியப்படையவில்லை. அவள் வரமாட்டாளென அன்றே எனக்குத் தோன்றியிருந்தது. அவளைச் சந்தித்திருக்காவிட்டால், பன்குளத்துக்குப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் முளைவிட்டிராது.

“அண்டைக்குத்தானே போனனாங்கள்…  திரும்பவும் என்னத்துக்கு திருகோணமலைக்கு?” மகன் சினந்தான். வீட்டுக்குள் வளரும் தொட்டிச் செடி! வெயில்பட்டால் முகஞ் சுருங்கிப் போவான். அவனுடைய பயணங்கள் நேர் நோக்கங்கள் கொண்டவை. என்னைப்போல எல்லாவற்றுக்கும் உட்குமைந்து உருகும் ஆளுமில்லை அவன்.  

“உனக்கு வர விருப்பமில்லை யெண்டா நீ வீட்டிலையே இரு.” கணவர் சற்றுக் கடுமையாகவே கூறினார்.

கட்டிலில் படுத்திருந்த அம்மா சத்தங் கேட்டு எழுந்து வந்தார்.

“நாங்கள் திருகோணமலைக்குப் போறம். போற வழியில முந்தி இருந்த வீட்டையும் ஒருக்காப் போய்ப் பார்க்க நினைச்சிருக்கிறம்.” - அம்மாவிடம் சொன்னேன்.

“எந்த வீடு?”

நியாயமான கேள்வி! எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து குறைந்தபட்சம் இருபது வீடுகளில் வாழ்ந்திருப்போம். அம்மாவின் எழுபத்தெட்டு வயது ஞாபகத்துள் அதனிலும் அதிகமான வீடுகள் இருக்கக்கூடும்.

“பன்குளத்து சிதம்பரம் ஆச்சி வீடு.”

இறந்தகாலத்தின் நிழல்படிந்த விழிகளோடு அம்மா தலையசைத்தார்.

வவுனியாவிலிருந்து ஒன்றரை மணி நேரப் பயணம். மகன் வாகனத்தைச் செலுத்த, கணவர் அவனருகில் அமர்ந்திருந்தார். கெப்பிட்டிக்கொலாவ வரையில் ஏதேதோ கதைகள் ஓடின. பிறகு, அவரவர் நினைவுகளுள் விழுந்து
விட்டோம். சில கட்டடங்களின் பெயர்ப்பலகைகளில் ஆங்கிலத்துக்கு இரண்டாமிடம். தமிழுக்கு மூன்றாமிடம். சிலவற்றில் தமிழுக்கு இடமேயில்லை.

“சிங்களம் மட்டும்” என்றேன்.

“என்ன நடந்தாலும் பரவாயில்லை எண்டு நாங்கள் இங்கையே இருந்திருக்கோணும். அல்லாமல் எங்களுக்கு கதைக்கத் தகுதியுண்டா?” கணவர் திரும்பி என்னைப் பார்த்தார். நான் குற்றவுணர்வோடு வெளியே பார்த்தேன்.

நீர்நிலைகளுள் எருமைகளின் உற்சாகத் திளைப்பு. நீரை வகிர்ந்து மிதக்கும் வாத்துகள். பட்ட மரங்களின் மீதமர்ந்து தக்க தருணத்துக்காகக் காத்திருக்கும் மீன்கொத்திகள்.

எனது ஞாபகம் வாகனத்தை முந்திக் கொண்டோடியது.

எண்பத்தி மூன்றாம் ஆண்டு இனக்கலவரம் நடந்தபோது, நான் எனது பதின்வயதின் தொடக்கத்தில் பன்குளத்தில் இருந்தேன்.

“வெளிக்கிடுங்கோ வெளிக்கிடுங்கோ” பொழுது சாய்ந்ததும் அம்மா பரபரக்கத் தொடங்கிவிடுவார்.

“நீங்கள் போறதெண்டால் போங்கோ. நான் வரேல்லை” - அப்பா என்ற கலகக்காரர் அடங்குவதேயில்லை.

‘உயிர்… உயிர்…’ சனம் காடுகளை நோக்கிப் பறந்தோடும். குழந்தை, குட்டிகள் பின்னால் இழுபடும்.

ஒளிந்துகொள்ளும் இடத்தைத் தேர்வதென்பது வன்முறை நடக்கும் இடத்தைப் பொறுத்தது. நாட்டின் வேறேதாவது பகுதியில் தமிழர்கள் கூட்டாகக் கொல்லப்பட்டார்களென்று செய்தி வந்தால், உடனடி ஆபத்தில்லை. சிதம்பரம் ஆச்சியின் வீட்டுக்குப் போகும் வழியிலிருந்த வாய்க்காலுக்குள் இரவுகளில் தஞ்சம் புகுந்துகொள்வோம்.

வாய்க்காலில் தண்ணீர் குறைவே. என்றாலும், நீர்ப்பாம்புகளுக்குப் பயந்து கையில் ஒரு தடியை வைத்து அம்மா ஆட்டிக்கொண்டே இருப்பார். வாய்க்காலையொட்டி உயர்ந்தோங்கிய பெருமரங்களிலிருந்து பறவைகள் எப்போதாவது கலைந்து, கூடும். மற்றபடி மௌனம். இருமலோ, தும்மலோ, வாயு பிரிதலோ எது வந்தாலும்… ம்ஹும்!

அக்கம்பக்கத்திலுள்ள தமிழ்க் கிராமங்கள் சிங்கள இனவெறியர்களின் தாக்குதலுக்கு ஆளாயினவென்று செய்தி வரும் நாள்களில், காடுகளின் மடியுள் புகுந்துகொள்வோம். ஆண்கள், பகலிலேயே போய் அடர் பற்றைகளை ‘வெளி’யாக்கிவிடுவார்கள். சுற்றிவர முட்செடிகள், மரங்கள். நடுவிலே நாங்கள். அழும் குழந்தைகளின் வாய்களைப் பொத்திப் பிடித்தபடி தாய்மார் அமர்ந்திருப்பர்.

“இறுக்கிப் பொத்திப் பிடியாதை. மூச்சடைச்சுப் போம்” சொல்பவர்களுக்கும் தெரியும் குழந்தைகளின் அழுகையொலி உயிராபத்தைக் கூட்டிவருமென்பது.

இரவிரவாக நரிகள் ஊளையிடும். பாம்புகள் சருகுகளில் ஊர்ந்துசெல்லும் ஓசை கேட்டுக் கால்கள் கூசும். நிலவு… அது அப்போதும் அத்தனை அழகாக ஒளிர்ந்துகொண்டுதானிருந்தது. அமாவாசை இரவுகளில் சற்றுப் பாதுகாப்பாக உணர்வோம்.

உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையில் ஊஞ்சலாடி விழும் தலை. யாராவதொருவர் மெதுவாக முணுமுணுப்பார்.

“கடவுளே! எங்களைக் கண் திறந்து பார்க்க மாட்டியா?”

சிதம்பரம் ஆச்சி எங்களோடு சேர்ந்து ஒளிந்துகொள்ள ஒருநாளும் வந்ததில்லை.

“சிங்கள ஆக்கள் கத்தி பொல்லுகளோடை வீடு வீடா போறாங்களாம். அம்பிட்டவையின்ரை தலைமயிரிலை பிடிச்சு ஒரே வெட்டாய் வெட்டுறாங்களாம்” கூறியும் ஆச்சி அசையவில்லை.

“வெட்டுறதெண்டா வெட்டட்டும். அவங்களுக்குப் பயந்து என்ரை வீடான வீட்டை விட்டிட்டு காடு கரம்பையில போய்ச் சாகோணுமே...”

மரங்களால் வடிகட்டப்பட்டு இறங்கும் நிலவொளியில், முகமும் தலையும் ஒன்றேபோல் பளபளக்க மருந்துக்கும் மயிரில்லாமல் அமர்ந்திருக்கும் சதாசிவம் மாமாவைப் பார்த்து யோசிப்பேன். ‘இவரை எதைப் பிடித்து வெட்டுவார்கள்?’

பக்கத்து வீட்டு ராசன் உட்பட சில பெடியங்கள் சனங்களைக் காடுகளுள் ஒளிந்துகொள்ளும்படி அனுப்பிவிட்டுக் காட்டுத் தடிகளோடும் வேட்டைத் துப்பாக்கிகளோடும் ஊருக்குக் காவலாக இருந்தார்கள். தமிழர்களைக் கொல்வதற்காகத் தேடி வருபவர்களை ராசனும் நண்பர்களும் அடித்து விரட்டுவதாக வாய்க்காலுள்ளும் காட்டுக்குள்ளும் அமர்ந்தபடி கனவு காண்பேன். பிறகு ராசன் இயக்கத்துக்குப் போய்விட்டான்.

ஒளிந்துகொள்ள வரும்போது கண்ணுத்துரை ஐயா தனது ஒரேயொரு சொத்தான வானொலிப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வருவார். சபேசன் மாமா கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டியைச் சுமக்க மாட்டாமல் சுமந்து வந்தார். எங்கள் தெருவின் கடைசி வீட்டில் குடியிருந்த ராசமணி அக்கா நெஞ்சுச் சட்டைக்குள் நகைகளை வைத்துக்கொண்டு அதை நிமிடத்துக்கொரு தடவையாவது தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார். எங்களிடம் மின்னுபகரணங்களோ நகைகளோ இல்லை. நாங்கள் எங்களது உடுப்புப் பையோடு பேருந்து வரக் காத்திருப்பவர்களைப் போல விடியும் வரை சாவின் தூதுவர்களுக்காகக் காத்திருந்துவிட்டு வீடு திரும்புவோம்.

நீளமான விலங்கின் காலடியில் படுத்திருக்கும் குட்டியென மலையடிவாரத்திலிருந்தது எங்களது வீடு. மரங்கள் செறிந்த மலையிலிருந்து இலைகளின் வாசனையோடு இறங்கிவரும் காற்று. மாம்பூக்களின் வாசனை. முற்றம் தவிர்த்து வளவெங்கிலும் சின்னஞ்சிறிய மஞ்சள்நிறப் பூக்கள் பூக்கும் காட்டுச் செடிகள். அந்த மஞ்சளுக்கு விளிம்பு கட்டினாற்போல அம்மா வைத்த செவ்வந்திகளும் சூரியகாந்திகளும். தன் இருண்ட ஆழத்தினுள் பேய்கள் வாழ்வதாக என்னையும் துசாந்தியையும் மிரட்டிவந்த ஆழ்கிணறு.

இரவில் சூழ்ந்த பயமெல்லாம் காலையில் வடிந்துவிடும்.

கண்ணாடி முன் நிற்கும்போது நேரம் பந்தயக் குதிரையெனப் பறந்தோடும். சிக்கெடுத்து, இழைத்து இழைத்து, இரட்டைப் பின்னல் பின்னி முடிப்பதற்கிடையில் சுவர்க் கடிகாரத்தின் பெரிய முள் பத்துத் தடவையாவது நகர்ந்திருக்கும். பொட்டுவைக்க குறைந்தது ஐந்து நிமிடங்கள் வேண்டும். வட்டாரியால் வரைந்தாற்போல வட்டம் பிசகாமல் பொட்டு, அடுத்து புருவங்களை வரைவது…

 “நீ மினுக்கிக்கொண்டு நில்லு. அங்கை பஸ் போகப் போகுது” அம்மா கத்துவார். 

“ஆறே முக்கால்… ஆறு அம்பது…” சமையலறைக்குள் கடிகாரம் இல்லை. கடிகாரத்தின் முட்கள் தனது தலைக்குள் குத்திக் குத்தி நகர்வதுபோல அம்மா கத்துவார்.

பேருந்தைப் பிடிக்க ஓட்டமாக ஓடுவேன். `சீஸர்’ என்ற பெயர்கொண்ட நாய்க்குத் தெரியும் நான் பேருந்தைப் பிடிக்கத்தான் ஓடுகிறேனென்பது. ஆனாலும், நாக்குத்தள்ள என் பின்னால் ஓடிவரும். சிதம்பரம் ஆச்சியின் வீட்டுக்கும் நாங்களிருந்த வீட்டுக்கும் இடையில் வாய்க்காலை மறித்துப் போடப்பட்டிருந்த பாலத்தில் சறுக்கி விழாமல் தப்பிப்பதற்காக மட்டுமே ஓட்டத்தின் வேகம் மட்டுப்படும். சீஸர் என்னைப் பேருந்தில் ஏற்றிவிட்டுத்தான் வீட்டுக்குத் திரும்பிப்போகும்.

மாலைப்பொழுதுகள் கனவுகளுக்கானவை.

“ஆனந்தி!” அம்மாவின் குரல் கேட்கத்தான் கேட்கிறது. பதிலளிக்கப் பஞ்சி அல்லது கனவிலிருந்து வெளியேற விரும்பாமல்…

“ஆனந்தி இஞ்சை வா.”

“கடைக்குப் போகோணும் வாடி…!”

மஞ்சள் சட்டையும் பச்சை நிற அரைப் பாவாடையும் போட்டுக்கொண்டு கடைக்குப் போகிறேன். இல்லாவிட்டால் நாவல் பழக் கலரில் வெள்ளை லேஸ் பிடித்த சட்டை. அது இரண்டுந்தான் நடுவாந்திரம். கடைக்கோ, பக்கத்து வீடுகளுக்கோ போகும்போது போடுவது. இன்னும் இரண்டு சட்டைகள் இருந்தனதாம். அவை, பேருந்தில் ஏறி, கோயில் திருவிழாக்களுக்கோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள சொந்தக்காரர் வீடுகளுக்கோ செல்லும்போது அணிந்துகொள்பவை. இரட்டைப் பின்னல்கள் ஆடுகின்றன.

“எவ்வளவு தலைமயிர்..! ஒல்லிப் பெட்டை! சாப்பிடுகிற சாப்பாடெல்லாம் தலை மயிருக்குத்தான் போகுதுபோலை” - சிதம்பரம் ஆச்சி பின்னலைச் செல்லமாகப் பிடித்து இழுத்து விடுவார்.

‘உங்கடை சாப்பாடெல்லாம் நெஞ்சுக்குத்தான் போகுது போலை.’

ஆச்சியின் மார்பகங்கள் கொழுத்துத் திரண்ட மஞ்சள் நிறப் பூசணிக்காய்களை நினைவூட்டுபவை. மேலே போர்த்திய துண்டு அவற்றை மறைக்கும் திராணியற்று நடுவிலே ஒதுங்கிக்கிடக்கும்.

“என்ன பார்க்கிறாய்… பெரியாக்களுக்கு அப்பிடித்தானிருக்கும்.”

‘ஐயோ! நான் மனசுக்குள்ள நினைச்சது எப்பிடித் தெரிஞ்சுது?’ வெட்கத்தோடு ஓடிவிடுவேன்.

“நிப்பாட்டி தண்ணிப் போத்தல் வாங்கிட்டுப் போவம்” கணவர் சொன்னார்.

நீல வானத்தில் வெண்ணிறத் தீற்றல்கள். அள்ளித் தின்னலாம்போல பசிய வயல்வெளிகள், அவற்றுக்குப் பின்னால் தென்னந் தோட்டங்கள்… பார்க்கப் பார்க்க பிரியம் பொங்கி வழிகிறது.

‘இதையெல்லாம் விட்டுவிட்டு வெளிநாட்டில் போய் என்ன வெட்டி முறிக்கிறோம்! செயற்கையான சூடு, செயற்கையான அழகு, பாவனையான அன்பு...’ இடறியது.

ஒன்றரை மணித்தியாலம் ஏனிப்படி நீள்கிறது? சக்கரங்கள் சுருட்டிச் சுருட்டி விழுங்கியும் தீராமல் நீளும் இந்தச் சாலை…

“ஏய் குரங்கே! நீ இறங்கே!” துசாந்தி கொய்யா மரத்தை உலுப்புகிறாள். துசாந்தி எனது தோழிதான். எனக்கெதிராகக் கோள் மூட்டும்போது என் அம்மாவின் தோழி.

கணுக்கள் நிறைந்த கொய்யாக் கிளையில் உடும்பைப்போல உடலை ஒட்டிக்கொண்டு தலைகீழாகப் பார்க்கிறேன். துசாந்தியின் கோணலான வகிடு தெரிகிறது. கொப்பை இறுகப் பற்றிக்கொண்டு மேலும் ஆடுகிறேன். தரை ஆடுகிறது. கிணறு ஆடுகிறது. துசாந்தி ஆடுகிறாள்.

எதிர்பாராமல் வேகத்தடை வரவும் வாகனம் ஒருகணம் குதித்து அமர்கிறது. மகன், நான் ஏதாவது சொல்வேனாவென கண்ணாடிக்குள்ளால் பார்க்கிறான். எனது ஞாபகம் மூன்று தசாப்தங்களுக்கு அப்பாலிருக்கிறது.

 “குமர்ப்பிள்ளையாகியும்…” மழைக்காலத்தில் நீர் சுழித்து விரையும் வாய்க்காலுக்கு மீன் பிடிக்கப் போகும் எங்களுக்குப் பின்னால் தேய்ந்தொலிக்கும் அம்மாவின் குரல்.

“அவளின்ரை போக்கிலை விடேன்” அப்பாவின் ஆதூரமான குரல் எங்களை எட்டுவதற்குள் வளவின் மூலைக்குப் போயிருப்போம்.

“மற்ற பிள்ளையள் போலை ஏன் இவள் நடந்துகொள்ள மாட்டனெண்டுறாள்...” அம்மா அங்கலாய்ப்பது எனக்குக் கேட்காத தூரம். ஆனால், அம்மா அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன சொல்வாரென்பது எனக்கு மனப்பாடம்!

“ஏய் ஆனந்தி… வாய் பாக்காமல் பிடியனடி” பழஞ்சேலைத் துண்டுக்குள் துள்ளிவிழும் பழுப்பு நிற மீன்கள்.

வீதியைக் குறுக்கறுத்து ஓடும் காட்டுக் கோழிகளைக் கடந்து கார் விரைகிறது.

“முரலிப்பழக் காலமெண்டாங்கள்” கணவர் கண்ணுயர்த்தித் தேடுகிறார்.

`அன்புள்ள தேவதைக்கு…’ எனத் தொடங்கி ‘நீயில்லாவிட்டால் இந்த வாழ்வு பாழ்’ என முடிந்த கடிதத்தை, கமநல சேவைத் திணைக்களத்துக்கு முன்னால் வழிமறித்து, அந்தக் கடைக்கார இளைஞன் தந்தான். அதுவே முதன்முதலில் எனக்குக் கிடைத்த காதல் கடிதம். அதை எனது பென்சில் பெட்டியின் அடிக் காகிதத்துக்குக் கீழ் ஒளித்து வைத்துக்கொண்டு தோன்றியபோதெல்லாம் எடுத்து வாசித்தேன். வீட்டில் சொன்னால், வேண்டாமென மறுக்காமல் வாங்கியதற்காக, விறகுக்கட்டை முறியும்படியாக அடி விழும்.

அதன் பிறகு நான் தனியாகக் கடைக்குப் போவதில்லை. துசாந்தி உடன் வருவாள். ‘பதில்?’ கடைக்காரன் கண்களால் கேட்பான்.

“உன்னிட்டை என்னவோ கேக்கிறான்” துசாந்தி முழங்கையால் நிமிண்டுவாள். 

“நீ கொஞ்சம் சும்மாயிரனடி” அவன் பொருள்களை எடுக்கத் திரும்பும் சமயத்தில் அவளது கையில் கிள்ளுவேன்.

ஒருநாளுமில்லாதபடி அன்று ஆச்சி கூப்பிட்டார்.

“கோதாரியில போன பேன் கடி கடியெண்டு கடிச்சுத் தள்ளுது. கொஞ்சம் பார்த்துவிடு.”

பார்த்தேன்.

ஒன்றின் மேலொன்று சவாரி விட்டுக் கொண்டிருந்த பேன்களிரண்டை வசமாகப் பிடிக்கவிருக்கையில் ஆச்சி கேட்டார்.

“கடைக்காரப் பெடிப்பிள்ளை கடிதம் தந்தவரோ?”

பேன்கள் இரண்டும் சோடியாக சிதம்பரம் ஆச்சியின் தலையிருட்டுக்குள் நழுவியோடி விட்டன.

“சொல்லனடி” என்னைத் தன் முன்னால் இழுத்து அமர்த்தினார்.

“ஓம்…”

“கொம்மா பாவம். அவவின்ரை ஒரே நம்பிக்கை நீதான். பார்த்து நடந்துகொள். அவனுக்கு நான் நல்ல பேச்சுக் குடுத்தன்.” 

ஆச்சியிடம் யார் சொன்னது? துசாந்தியா? வெடுக்கென்று எடுத்து சடக்கென்று சத்தமெழ ஆச்சி குத்தியது பேனையா... அவனையா?

அதன் பிறகு நான் அந்தக் கடைப்பக்கம் போவதில்லை. கதைக்கத் துணிவில்லாத காதலுக்கு நேரும் கதியே அதற்கும் நேர்ந்தது.

கொலை படுகளங்கள் நாளாக நாளாக விரிந்துகொண்டே போயின.

தலைப்பாரம் இழுக்க, மனப்பாரம் அழுத்த, மண்ணும் வயல்களும் வீடுகளும் பின்னின்று கூப்பிட்ட கம்மிய குரலுக்குத் திரும்பியும் பார்க்காமல் அந்த வழியே சனங்கள் இடம்பெயர்ந்து போகும் காட்சியை நாங்கள் ஒவ்வொரு நாளும் கண்டோம்.

அன்றிரவு பௌர்ணமி. காடு கரம்பை யெல்லாம் பகலாக்கிப் பொழிந்து தள்ளியது நிலா வெளிச்சம். எங்கள் எல்லோருடைய வற்புறுத்தல்களையும் தட்ட முடியாமல், ஆச்சி எங்களோடு காட்டுக்கு வந்தார். அவருடைய விழிகளில் வேதனையின் பிரளயம். உடலில் கூச்சத்தின் குறுகல். ஆச்சி அழுததை அன்றுதான் முதன்முதலாகக் கண்டேன்.

அவருடைய கையை எடுத்துத் தன் கைக்குள் பொத்திவைத்துக்கொண்டார் அம்மா. அம்மாவின் மடியில் படுத்திருந்த நான் அதைப் பார்க்காததுபோல மறுபுறம் திரும்பிக் கொண்டேன். ராசன் ஏன் இயக்கத்துக்குப் போனான் என்பதை அந்த இரவுதான் எனக்கு உணர்த்தியது.

மெலிதாக மழை தூறிக்கொண்டிருந்த நாளொன்றில், வீட்டுக்கு முன்னால் ஒரு லொறியைக் கொண்டு வந்து நிறுத்தி, “நாங்கள் யாழ்ப்பாணம் போறம். இப்பவே வெளிக்கிடுங்கோ” என்று அப்பா அறிவித்தார். ஆச்சி கண்கலங்கினார். அம்மா அவரைக் கட்டிப்பிடித்தபடி வாய்விட்டு அழுதார். அந்தத் தெருவே வாசலில் கூடி நின்று எங்களை வழியனுப்பிவைத்தது.

துசாந்தி என் கையைப் பிடித்து “போகாதை” என்றாள். பிறகு, ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓடிவிட்டாள்.

திடுதிப்பென்று கிளம்பியதில் அம்மாவுக்கு உடன்பாடில்லைதான். ஆனாலும், எத்தனை காலந்தான் உயிருக்காக உடுப்புப் பையோடு காடு கரம்பையெல்லாம் ஓடித்திரிவது?

பன்குளம் நெருங்கிவிட்டது. மலை கூடக் கூட வருகிறது. மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை. அகதிகளாக அலையும் துர்ப்பாக்கியம் அவற்றுக்கு நேர்வதில்லை. தம் பிரமாண்ட ஆகிருதியைப் பொருத்திக்கொள்ள அவற்றுக்குப் போக்கிடமுமில்லை.

பன்குளத்தில் நீர் குறைந்திருக்கிறது.  சிற்றலைகள் ஓடோடி வந்து ஏதோ எண்ணிக் கொண்டாற்போல வழியிலேயே மடிந்து போகின்றன.

சிதம்பரம் ஆச்சியின் வீடிருந்த இடத்தைத் தாண்டிவிட்டோம் என்பதை கமநல சேவைத் திணைக்களக் கட்டடத்தைக் கண்டதுந்தான் உணர்ந்தேன். அங்கே அப்படியொரு வீடிருந்ததற்கான சாயலுமில்லை.

வாகனத்தைத் திருப்பி மெதுவாகப் போகச் சொன்னேன். இடத்தின் அடையாளமே தெரியவில்லை. எதிர்ப்பட்ட ஒழுங்கை யொன்றைக் காட்டி அதனுள் வாகனத்தை விடும்படி கூறினேன்.

“இந்த ஒழுங்கைதானா?” கணவர் சந்தேகத்தோடு கேட்டார்.

“அப்பிடித்தான் தெரியுது.” 

ஒரு காலத்தில், நாங்கள் ஓடி விளையாடுமளவு அகன்று கிடந்த வீதி அது. இப்போது குச்சொழுங்கையாய் சிறுத்து, எதிர்பார்த்திராத இடத்தில் திடீரென முடிந்தது. முன்னால் காடு. வலமும் இடமும் பார்த்தேன். பாதையைக் காணவில்லை. பாதைகள் எப்படிக் களவுபோகும் அல்லது மடிந்துபோகும்?

இடப்பக்கந்தான் திரும்ப வேண்டும். ஆனால், அங்கே மனிதர் வாழ்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வலப்பக்கம் பார்த்தோம். அங்கே இடைவெளிவிட்டு இரண்டு வீடுகள் தெரிந்தன. இடைவெளி என்றால், ஏக்கர் கணக்கான இடைவெளி. கண்தொடாத தொலைவில் மேலும் வீடுகள் இருக்கக்கூடும்.

நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து இடம் வலமாக நீண்டு சென்ற வீதியின் இருபுறமும் நிரையாக வீடுகள் இருந்தன. அந்த வீடுகளுள் அன்பும் காதலும் காமமும் கோபமும் கனவுகளும் நிறைந்த மனிதர்கள் வாழ்ந்தார்கள். முற்றங்களில் குழந்தைகள் கூச்சலிட்டபடி ஓடித் திரிந்தார்கள். எல்லோரும் எங்கே போனார்கள்? ‘சரக்’கென ஒரு திரைச்சீலையை இழுத்து மூடியதுபோல காட்சிகளெல்லாம் மறைந்துபோனதெப்படி?    

மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை!

“ஒண்டையும் காணோம்” மகன் சலித்த குரலில் சொன்னான்.

“சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறமா?” கணவர் கேட்டார்.

“ஓம்…” அயர்ச்சியோடு தலையசைத்தேன்.

“இந்தப் பக்கம் திருப்பு” இடப்பக்கம் காட்டி மகனிடம் சொன்னேன். பாதையில்லை, சிறுபற்றைகள்தாம். என்றாலும், வாகனம் செல்ல முடியும்.

சிறிது தூரம் சென்ற பின், கம்பி வேலியொன்றையும் அதன் நடுவாந்தரமாக கரும்பச்சை நிறக் கேற்றையும் கண்டோம். அதற்குப் பின்னால் சிறியதொரு வீடு.

“ஆர்மி காம்ப் போல இருக்கு. திருப்பிக்கொண்டு போவம்” மகன் பயத்தோடு கூறினான்.

அந்த வீட்டின் அயலைச் சுற்றிக் காடு மண்டிக்கிடக்கிறது. மனிதர் வாழ்வதற்கான சுவடேயில்லை!

‘நான் தவறான இடத்துக்கு வந்துவிட்டேனா? இல்லை! அதே மலை! அதே நிலம்! காற்றில் அதே இலைகளின் வாசனை!’ குழம்பினேன்.

“சரி போவம்.”
வாகனத்தைத் திருப்பிக்கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணைக் கண்டேன். அறுபது அறுபத்தைந்து வயது மதிக்கலாம்.

பச்சை நிறக் கேற்றைத் திறந்துகொண்டு வெளியில் வந்தார். கறுத்து மெலிந்த உருவம். சிதம்பரம் ஆச்சி அணிவதைப் போன்று மேலே ஒரு பிளவுஸ், கீழே ஒரு சாறம். கண்களில் கேள்வியோடு வாகனத்தைப் பார்த்தார். மகன் கார் கண்ணாடியைக் கீழிறக்கினான்.

“ஆரைத் தேடுறீங்கள்?” அந்தப் பெண் கேட்டார்.

“எங்கடை அம்மா ஆக்கள் முந்தி இஞ்சை இருந்தவை” அவனுக்கு மேற்கொண்டு சொல்லத் தெரியவில்லை.

அந்தப் பெண் நெற்றியைச் சுருக்கினார். நான் காரிலிருந்து கீழே இறங்கினேன்.

“சிதம்பரம் ஆச்சியின்ரை வீடு இஞ்சை இருந்ததெல்லோ?”

“நீங்கள்?” அவருடைய கண்களில் குழப்பம் மறைந்து நெருக்கம் வந்தது. ஆண்டுகளைப் பின்தள்ளித் தேடும் விழிகள்.

“அந்த வீட்டிலை வாடகைக்கு இருந்தனாங்கள்.” 

“ஆனந்தி?” எனது பதிலுக்காக அவர் காத்திருக்கவில்லை. கட்டிப்பிடித்துக்கொண்டார்.

“என்னைத் தெரியேல்லையா?” கேட்டார்.

சற்றே தூக்கலான பற்களில் ஒன்று பாதியாக உடைந்திருந்தது. வீரைப்பழக் கறை படிந்ததுபோல வெண்மையான நாக்குத் தெரியும்படியாக வாய்விட்டுச் சிரிக்கிற அந்தச் சிரிப்பு… எப்படி மறந்தேன்? எங்களுக்கு நேரெதிர் வீட்டில் வாழ்ந்த பரமேஸ் அன்ரி.

“பரமேஸ் அன்ரிதானே?”

“ஓம்” அவரது கண்கள் கலங்கி மினுங்கின. முப்பத்து மூன்று ஆண்டுகள் என்பது எத்தனை நீளமானது என்பது அவருடைய தோற்றத்தில் தெரிந்தது.

“அப்ப எவ்வளவு தலைமயிர்… இப்பிடிக் கட்டையாய் வெட்டிப்போட்டாய்” ஒருமையில் விளிப்பதா பன்மையில் விளிப்பதா என்று குழம்பியபின் ஒருமையில் நின்றார்.

“வெளிநாட்டு வாழ்க்கையிலை பின்னிக் கட்ட நேரம் எங்கை?”

மகன் என் முகத்தைப் பார்த்தான். அவனுக்கு அங்கிருந்து புறப்படும் அவசரம்.

“நாங்கள் முந்தி இருந்த வீட்டைப் பார்க்க வந்தனாங்கள்.”

“நீங்கள் இருந்த இடம் இதுதான்” பரமேஸ் அன்ரி முன்னாலிருந்த காட்டைக் காட்டினார்.

“இதா? இதா?” ஏங்கிப்போய்க் கேட்டேன்.

பாலையும் வீரையுமாய் வெயில் நுழையாக் காடாக மாறிவிட்டிருந்தது அவ்விடம். சிறுமியும் அல்லாமல் வளர்ந்தவளும் அல்லாமல் குழப்பத்தின் கண்களுடன் நான் சுற்றித் திரிந்த வீடெங்கே? அங்கு நிழல் பரப்பி நின்ற மாமரங்களும் கொய்யா மரங்களும் எங்கே? எந்தக் கோடையிலும் வற்றாத ஆழ் கிணறு எங்கே?

மூன்று அறைகளோடான அந்தப் பெரிய வீட்டின் எச்சமாகக் குட்டிச் சுவரொன்று பரிதாபகரமாக நின்றது. காலத்தின் கறுப்பேறிய குட்டிச்சுவர். கவனித்துப் பார்த்தாலன்றி தெரியாதபடி செடிகள் அதை மறைத்திருந்தன. முழங்காலுயர முட் பற்றைகள் கால்களில் கீறுவதைப் பொருட்படுத்தாமல் அருகில் போய் அதைத் தொட்டுப் பார்த்தேன். நிராதரவான குழந்தையைத் தொடுவதுபோலிருந்தது.

‘நாங்கள் வாழ்ந்த வீட்டின் எந்த அறைச் சுவர் நீ!’

“போவோம்” கணவர் வீதியல்லாத வீதியில் நின்றபடி கூப்பிட்டார். வேதனையின் வெடிப்பை அந்த முகத்தில் கண்டேன். இறந்துவிட்ட ஊரில் தரிக்கவியலாமல் தவித்தன அவருடைய பாதங்கள்.

“ஏனிப்பிடி அழிஞ்சுபோய்க் கிடக்கு?” பரமேஸ் அன்ரியிடம் கேட்டேன்.

“நீங்க போன கொஞ்ச நாள்ல பிரச்னை கூடீட்டுது. சில பேரைச் சாகக் கொண்டு போட்டாங்கள். பயத்திலை ஒவ்வொருத்தராக வெளிக்கிடத் தொடங்கிச்சினம். தனிய இருக்கப் பயந்து நாங்களும் போனம். ஊர் அழியத் தொடங்கீற்று. ஆனா, சிதம்பரம் ஆச்சி மட்டும் வரமாட்டனெண்டு இஞ்சையே தங்கீட்டா.”

இப்போது எனது முறை! நான் கணவரின் தோளைப் பற்றி ‘போவோம்’ என்று அழுத்தினேன்.  உடல் நடுங்கியது. அவரோ மேலும் விபரமறிவதில் நின்றார்.

“இப்ப இஞ்சை தனிய இருக்கப் பயமாய் இல்லையா?” 

“தனிய இல்லை. அங்காலை நாலைஞ்சு பேர் இருக்கினம். அரசாங்கம் மீள் குடியேற்றம் அறிவிச்சிருக்கு. இஞ்சை வந்திருக்கிறவைக்குத்தான் வீடு கட்டக் காசு குடுப்பினமாம். அதுதான் திரும்பி வந்தனாங்கள். எங்கடை பிள்ளையளுக்கு நாங்கள் இஞ்சை இப்பிடி வந்திருக்கிறதிலை கொஞ்சமும் விருப்பமில்லை. ஆனா வாழ்ந்த வீடு…ஊர்…” எதிலோ சிக்கிக்கொண்டாற்போல திணறியது குரல்.

பரமேஸ் அன்ரியின் கணவர் வீட்டு முற்றத்தில் இருந்தபடி கைகளை அசைத்தார்.

“உள்ளுக்கை வாங்கோவன். ஆரோ மாதிரி வாசல்ல நிண்டு கதைக்கிறீங்கள்.” அன்ரி கைகளைப் பற்றிக் கூப்பிட்டார்.

போனோம். விசாலமான விறாந்தையும் அறைகளுமாய் இருந்த வீடு இன்றில்லை. மண் சுவர் வைத்து, தகரத்தால் கூரை வேய்ந்த சின்னஞ்சிறிய வீடு. வளவு முழுவதும் கோழிகள் உலவின. வளப்பமான ஆடுகள் இரண்டு கொட்டிலுள் நின்றன. அங்கிருந்த கொய்யா மரங்களையும் அன்னமின்னா மரங்களையும் காணவில்லை. பதிலாகத் தேக்கு மரங்கள்.

“இந்த வளவுக்குள்ள கொஞ்ச காலம் ஆமி இருந்தது. தேக்கு மரமெல்லாம் அவங்கள் வைச்சதுதான்.”

வெண்நரம்போடிய கரும்பச்சை இலைகள் அதை ஆமோதிப்பதாக அசைந்தன.

“எனக்குக் கால் ஏலாது. வாதக்குணம். அதுதான் எழும்பி வரேல்லை. வாகனத்தைக் கண்டதும் அரசாங்க வாகனமோ எண்டு நினைச்சன். வீட்டுத் திட்டம் பதியேக்குள்ள இவ ஏதாவது எக்குத்தப்பாச் சொல்லிக் குழப்பி வைச்சிருப்பா.”

அவர் மாறவில்லை! ‘இந்தப் பேய் மனுசிக்கு ஒண்டுந் தெரியாது’என்கிற, முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய அதே ‘புருச’க் குணம்.

“மைதிலி..?” அவளை வவுனியாவில் சந்தித்ததைப் பற்றிக் கூறாமற் கேட்டேன்.“அந்தப் பெட்டையின்ரை தகப்பனையும் அவங்கள் கொலைசெய்து போட்டாங்கள். அதோட குடியெழும்பிப் போனதுதான். காணியைப் பார்க்கக்கூடத் திரும்பி வரேல்லை. அந்த வளவிலை இப்ப ஒரு சிங்களக் குடும்பம் இருக்கு. மைதிலியை வவுனியாவிலை கண்டதா ஆரோ சொல்லிச்சினம்.”

“ஐயோ!”

தெரிவுகளற்றுத் தங்கிவிடுபவர்களே கொலைபடுகிறார்களா? அன்று மைதிலியின் கண்களில் தெரிந்தது என் மீதான குற்றச்சாட்டா? 

“திருகோணமலைக்குப் போய்த் திரும்ப நேரமாயிடும்” கணவர் எழுந்தார். விடை பெற்றோம்.

பிரதான வீதியில் ஏறுவதற்கு முன்னதாக நான் மகனிடம் சொன்னேன்.

“காரைத் திருப்பு. வீட்டை போவம். இன்னொரு நாள் திருகோணமலைக்குப் போகலாம்”

வாகனம் வலதுபுறம் திரும்பி வவுனியாவை நோக்கி ஓடியது.

கண்ணுயர்த்திப் பார்த்தேன். நஞ்சு தேங்கிவிட்ட கழுத்தென நீல நிறத்தில் நெடிதுயர்ந்து நின்றது மலை.

‘எத்தனை சாவுகளின் சாட்சியம் நீ!’

“சிதம்பரம் ஆச்சி எப்பிடிச் செத்தவ?” அந்தக் கேள்வியை பரமேஸ் அன்ரியிடம் கடைசி வரை நான் கேட்கவில்லை. ஆச்சி தன் காலம் முடியும் வரை வாழ்ந்து மூப்படைந்து இறந்துபோனார் என்று நம்புவதுதான் எனக்கு நல்லது!