Published:Updated:

“இந்து மதத்தைப் பாதுகாக்கும் நித்யானந்தா ஆதீனமாக வேண்டும்”

“இந்து மதத்தைப் பாதுகாக்கும் நித்யானந்தா ஆதீனமாக வேண்டும்”
பிரீமியம் ஸ்டோரி
“இந்து மதத்தைப் பாதுகாக்கும் நித்யானந்தா ஆதீனமாக வேண்டும்”

மதுரைக்கு வந்த சோதனை

“இந்து மதத்தைப் பாதுகாக்கும் நித்யானந்தா ஆதீனமாக வேண்டும்”

மதுரைக்கு வந்த சோதனை

Published:Updated:
“இந்து மதத்தைப் பாதுகாக்கும் நித்யானந்தா ஆதீனமாக வேண்டும்”
பிரீமியம் ஸ்டோரி
“இந்து மதத்தைப் பாதுகாக்கும் நித்யானந்தா ஆதீனமாக வேண்டும்”

‘அம்மாவைப் பார்த்தேன் என்று நான் சொன்னது பொய்...’ என்று அ.தி.மு.க-வில் நடக்கும் கூத்துபோல, இந்து மக்கள் கட்சியிலும் ஒரு கூத்து நடக்கிறது. இளைய ஆதீனமாக நித்யானந்தாவை மதுரைஆதீனம் அருணகிரிநாதர் நியமித்தபோது, அதை எதிர்த்து இந்து மக்கள் கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினார்கள். பாலியல் வழக்குகள் இருக்கும் நித்யானந்தாவாலும், அவருடைய பெண் சீடர்களாலும், புனிதமான மதுரை ஆதீனமடம் களங்கமடைந்ததாக பூஜையெல்லாம் செய்தார்கள். போராட்டங்களால் பயந்துபோன மதுரை ஆதீனம், ‘‘நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்ததை ரத்துசெய்கிறேன்’’ என்றார்.

“இந்து மதத்தைப் பாதுகாக்கும் நித்யானந்தா ஆதீனமாக வேண்டும்”

ஆனாலும், ‘மடத்திலிருந்து ஆதீனத்தை வெளியேற்ற வேண்டும். ஆதீன மடத்தின் வருவாய் மூலம் இந்துக்களுக்கு நன்மை செய்யவேண்டும். மடத்தின் கணக்கு வழக்குகளில் நடந்துள்ள மோசடிகளை விசாரிக்க வேண்டும்’ என்று இந்து அறநிலையத் துறைக்குப் புகார்கள் பறந்தன. ஆதீனம் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. சுதாரித்துக்கொண்ட ஆதீனம், தனக்கு எதிரான வழக்குகளிலிருந்து தப்பிக்க ஜெயலலிதாவைச் சந்தித்து ஆசிபெற்று, அ.தி.மு.க-வுக்காகத் தேர்தல்களில் பிரசாரம் செய்தார். இதனால், அவர்மீதான  நடவடிக்கை நிறுத்தப்பட்டது.கடந்த வருடம், பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரை இளைய ஆதீனமாக நியமிப்பதாக ஆதீனம் அறிவித்தார். உடனே, சலசலப்பு எழுந்து அடங்கியது. அந்த நியமனம் செல்லாது என்று நித்யானந்தா வழக்குத் தொடர்ந்தார். அது, நிலுவையில் உள்ளது. சமீபகாலமாக, உடல் நலமின்றி மடத்துக்குள்ளேயே முடங்கியிருக்கிறார் ஆதீனம்.

 இந்த நிலையில்தான், ‘293-வது இளைய ஆதீனமாக திருநாவுக்கரசை நியமித்தது தவறு. அதற்குப் பதிலாக ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நித்யானந்தாவே இளைய ஆதீனமாகச் செயல்படலாம்’ என்று அறிக்கை விட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளனர், இந்து மக்கள் கட்சியினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இந்து மதத்தைப் பாதுகாக்கும் நித்யானந்தா ஆதீனமாக வேண்டும்”

அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணனிடம் பேசினோம். “அன்று, நித்யானந்தா சுவாமிகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது உண்மைதான். அதற்காக வருந்துகிறோம். இப்போது, இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டவர் நல்லவரில்லை. இவரும் இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்தான். எந்தவொரு மடத்திலும் தங்கியிருந்து சைவத்திருமறைகள் கற்றவரில்லை. முறையான ஆன்மிகப் பயிற்சி எடுத்தவரில்லை. ஜாலியாக வாழ்ந்தவரைத் திடீரென இளைய ஆதீனமாக்கியுள்ளார்கள். அதற்கு நித்யானந்தா சுவாமிகளே இளைய ஆதீனமாக இருந்துவிடலாம். நித்யானந்தாவை நியமித்ததற்கு ஆதீன மடங்கள், பல ஆன்மீகவாதிகளெல்லாம் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். எங்களுடன் சேர்ந்து போராடினார்கள். ஆனால், இப்போது திருநாவுக்கரசை நியமித்ததற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அப்படியென்றால், உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்.

தமிழகத்தில் நடக்கும் மதமாற்றங்களுக்கு எதிராக நித்யானந்தா குரல் கொடுக்கிறார். திராவிடர் கழகத்தினரும் கம்யூனிஸ்டுகளும் இந்து மதத்துக்கு எதிராகச் செயல்படும்போது, அதை எந்த மடாதிபதிகளும் எதிர்ப்பதில்லை. பன்றிக்குப் பூணூல்போடும் போராட்டத்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்தவுடன், ‘பன்றிக்குக் கறுப்புச்சட்டை போடுவோம்’ என்று அறிவித்தவர் நித்யானந்தா. இப்படி, இந்து மதத்தைப் பாதுகாக்கத் துணிச்சலாகப் பேசும் நித்யானந்தா போன்றவர்தான் ஆதீனமாக இருக்கவேண்டும்’’ என்றவரிடம், “நித்யானந்தா மீது வழக்குகள் உள்ளனவே?’’ எனக் கேட்டோம்.

“இந்து மதத்தைப் பாதுகாக்கும் நித்யானந்தா ஆதீனமாக வேண்டும்”

“காஞ்சி சங்கராச்சாரியார் மீதும் கொலை வழக்கு இருந்தது. அவரை மடத்திலிருந்து விலக்கியா வைத்தார்கள்? அதுபோல, நித்யானந்தா சுவாமிகள் மீதான வழக்குகளும் காணாமல் போகும். ஆதீன மடத்தில், ஒரு பைசாவைக்கூட ஏழை இந்துக்களுக்கோ, இந்து மத வளர்ச்சிக்கோ பயன்படுத்துவதில்லை. அதனால்தான், மதுரை ஆதீனத்தை வெளியேற்ற வேண்டும் என்றோம். அவர்மீது வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்,  ஆளும்கட்சியினரின் ஆதரவில் இளைய ஆதீனத்தை நியமித்துள்ளார். அன்று நித்யானந்தாவை எதிர்த்தவர்கள் இப்போது அவரை ஆதரிப்பதால் எங்களை விலைக்கு வாங்கிவிட்டார்கள் எனப் பேசுகிறார்கள். விலைபோகிற ஆள்கள் நாங்கள் இல்லை. அன்றைக்கு நித்யானாந்தாமீது மற்ற ஆதீனங்கள்  சொன்ன காரணங்கள், இப்போதைய இளைய ஆதீனத்துக்கும் பொருந்தும். இந்துமத எதிர்ப்பாளர்களுக்குப் பதில் கொடுக்கிற நித்யானந்தாவே மதுரை ஆதீனமாக வரட்டும்” என்றார்.

 மதுரை ஆதீனத்தின் கருத்தைப் பெறுவதற்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டும், நேரில் சென்றும்கூட, கருத்தை அறிய முடியவில்லை.

- செ.சல்மான், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்