Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 14

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 14
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 14

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 14

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 14
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 14

பொகாஸா - பிணந்தின்னிக் கழுகு!

1977, டிசம்பர் 4-ஐ நோக்கி மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு தயாராகிக் கொண்டிருந்தது. அன்றைக்குத்தான் அதிபர் பொகாஸா, மாமன்னர் பொகாஸாவாக முடிசூட்டிக்கொள்ளவிருந்தார். அதுவும் மாவீரன் நெப்போலியன் ஸ்டைலில். நெப்போலியனுக்குக் கீரிடத்தைக் கையிலெடுத்துத் தந்தது அப்போதைய போப் ஏழாம் ப்யூஸ். ஆகவே, பொகாஸாவிடமிருந்து போப் ஆறாம் பவுலுக்கு அழைப்புச் சென்றது. தர்மசங்கடத்தில் நெளிந்த போப், சாதுர்யமாக ஒரு பதிலை அனுப்பினார். ‘வயசாயிருச்சுல்ல. இனிமே அவ்வளவு தூரம் பிரயாணமெல்லாம் தோதுப்படாது. வாடிகன்லருந்து என் சார்பா யாரையாவது அனுப்பி வைக்கிறேன்.’

அப்போது உலகில் எஞ்சியிருந்த பிற அரசர்களுக்கெல்லாம் பொகாஸாவிடமிருந்து அழைப்புச் சென்றது. யாரும் வருவதாக ஒப்புக் கொள்ளவில்லை. பெரும்பாலான அதிபர்களும் பிரதமர்களும் அழைப்பை நிர்தாட்சண்யமாக நிராகரித்தனர். சிலர் மட்டும் மரியாதை நிமித்தமாக தங்கள் பிரதிநிதிகளை அனுப்பித் தொலைத்தனர்.

காங்கோ சர்வாதிகாரி மொபுட்டு, உகாண்டாவின்  இடி அமீன் உள்ளிட்டோரும் பொகாஸாவின் ஆத்ம நண்பர்களும் வர மறுத்துவிட்டனர். இந்தப் பட்டாபிஷேகத்துக்கு ஆன செலவுகளுக்குக் கைகொடுத்த பிரான்ஸின் அதிபர் வால்ரி ஜிஸ்கார்ட்கூட, தன்னுடைய முக்கிய அமைச்சர்கள் வந்து விழாவைச் சிறப்பிப்பார்கள் என்று சொல்லிவிட்டார். பொகாஸா அதற்கெல்லாம் அசரவில்லை. ‘நான் மாமன்னர் ஆகப்போகிறேன் அல்லவா. எல்லோருக்கும் பொறாமை’ என்று உறுமிக்கொண்டார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 14

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தத் திருநாளும் வந்தது. வந்த சர்வதேச விருந்தினர்களின் எண்ணிக்கை, பத்திரிகையாளர்களையும் சேர்த்து வெறும் அறுநூற்றுச் சொச்சம். உள்ளூர் மக்கள் தயவுடன் ‘மாபெரும் கூட்டம்’ இமேஜ் கட்டிக்காக்கப்பட்டது. காலை ஏழு மணி முதலே மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விழா அரங்கத்துக்கு விருந்தினர்களை அழைத்துவர புழுதி பறக்க அலைந்தன. பொகாஸாவின் குடும்பத்தினர், பிற மனைவிகள், குழந்தைகள் (மொத்தம் 60 பேர்) வர தனித்தனி சாரட் வண்டிகள். எல்லோருக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு. மகாராணி கேத்ரீனுக்கு தனிப்பட்ட வரவேற்பு. பொகாஸா, தன் ராஜ வாரிசாக அறிவித்திருந்த, ‘இளவரசன் இரண்டாம் பொகாஸா’ என்ற நான்கு வயதுப் பொடியன் (கேத்ரீனுக்குப் பிறந்தவன்), தூக்கம் நிறைந்த கண்களுடனும் ஏகப்பட்ட கொட்டாவிகளுடனும் அரங்கத்துக்கு வந்து சேர்ந்தான்.

காலை ஒன்பதரை மணிக்குச் சாம்பல் நிறக் குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், குதிரைப்படை வீரர்கள் சூழ, பவனி வந்தார் பொகாஸா. (ரதத்தை இழுப்பதற்கென எட்டு குதிரைகள் பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. வெப்பம் தாங்காமல் சில குதிரைகள் இறைவனடிச் சேர்ந்திருந்தன.) தங்கக் கழுகு ஒன்று பிரமாண்டமாகத் தன் இறக்கைகளை விரித்திருப்பதுபோல வடிவமைக்கப்பட்டிருந்த சிம்மாசனம் நோக்கி, சிவப்புக் கம்பளத்தில் மிடுக்குடன் சென்றார் பொகாஸா. கேத்ரீனுக்குத் தனி சிம்மாசனம்.

மிகவும் நீளமான வெல்வெட் அங்கி ஒன்றை ஒன்பது பேர் சுமந்து வந்தனர். அது 7,85,000 சிறு சிறு முத்துகளாலும், 12,20,000 ஸ்படிக மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதை பொகாஸாவின் முதுகில் மாட்டிவிட்டனர். அது தரையில் புரண்டபடி கிடக்க, நெப்போலிய கம்பீரத்துடன் பொகாஸா சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். மாணிக்கமும், மரகதமும், 8,000 சிறு வைரக் கற்களும், முகப்பில் 80 காரட் கொண்ட பெரிய வைரமும் பதிக்கப்பட்ட ராஜ கிரீடம் கொண்டு வரப்பட்டது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கீரிடம் போன்றே வடிவமைக்கப்பட்ட அதில், நெப்போலியனின் கிரீடத்திற்குரிய அம்சங்களும், கழுகு, ஆப்பிரிக்க வரைபடம், உச்சியில் உலகைக் குறிக்கும் நீல உருண்டை உள்ளிட்ட கூடுதல் ஜிகினாக்களும் இணைக்கப்பட்டிருந்தன.

காலை மணி 10.43. சீஸரின் லாரெல் மாலை போன்ற தலைக்கீரிடம் அணிந்திருந்த பொகாஸா, அதைக் கழற்றிவிட்டு, தனக்குத் தானே கிரீடத்தைச் சூட்டிக் கொண்டு மாமன்னர் ஆனார். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, மத்திய ஆப்பிரிக்கப் பேரரசு ஆனது. கரகோஷம். கேமராக்கள் ஒளிர்ந்தன. கொஞ்சம் சிரித்திருக்கலாம். மறந்துவிட்டார்போல. தன் முன் மண்டியிட்டு நின்ற கேத்ரீனுக்கு மகாராணியாக முடிசூட்டினார் பொகாஸா. வாத்திய கோஷ்டிகள் இசை மழை பொழிந்தார்கள். அன்றைக்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். நிகழ்ச்சி முழுக்க இளவரசன் கொட்டாவி விட்டுக்கொண்டே இருந்தான். பாவம்.

ராஜ விருந்து ஆரம்பமானது. பல டன் உணவு வகைகள் பரிமாறப்பட்டன. 24,000 பாட்டில்கள், Moet et Chandon ஷாம்பெயின் ஆறு ஓடியது. மன்னர் பொகாஸா, தனக்குப் பிடித்தமான Chivas Regal scotch-ஐப் பருகினார். பட்டப்பகலில் வாணவேடிக்கை. காசைக் கரியாக்கி அன்றைக்கான நிகழ்வுகள் நிறைவு பெற்றன. மறுநாள் காலையில் பொகாஸா, ஃபீல்ட் மார்ஷல் உடையில் தமது படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள். காரனேஷன் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி. இரவு விருந்து. சுபம். இரண்டு நாள்கள் எகிடுதகிடு கொண்டாட்டங்களுக்குப் பிறகு பாங்கி நகரம் இயல்புக்கு வந்தது. இந்த விழாவுக்காகச் செலவழிக்கப்பட்ட சுமார் முப்பது மில்லியன் டாலர்களால், நாட்டின் பொருளாதாரம் இயல்பைவிட படுமோசமாகிப் போனது.

அதிபராக இருந்தபோதே அழிச்சாட்டியம் செய்த பொகாஸா, மாமன்னரான பின் மனிதத்தன்மையை முற்றிலும் இழந்தார். தன் சொகுசு பங்களாவில் அமர்ந்து, ஸ்காட்ச் அருந்தியபடி கைதிகளைச் சுத்தியலாலும், இரும்புச் சங்கிலியாலும் தாக்கச் சொல்லி வேடிக்கை பார்ப்பது அவருக்குப் பொழுதுபோக்கானது. ‘அவை பசியோடு காத்திருக்கின்றன. சீக்கிரம் இவர்களைத் துண்டு துண்டாக அறுத்துப் போடுங்கள்.’ இங்கே ‘அவை’ என்பது பொகாஸாவின் வளர்ப்பு முதலைகளையும் சிங்கங்களையும் குறிப்பவை.

முடிசூட்டு விழாவுக்கு வராத பிரான்ஸ் அதிபர், வேட்டை ஆசை வந்துவிட்டால் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்குப் பறந்து வந்துவிடுவார். அவராலும் பொகாஸாவாலும் கொல்லப்பட்ட ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கைக்குக் கணக்கே கிடையாது. மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் யானைத் தந்தம் வணிகத்தில் கோலோச்சிய ஒரு தனியார் நிறுவனத்தின், பெரும்பான்மையான பங்குகள் பொகாஸா வசமே இருந்தன. (1976ல் சுமார் எண்பதாயிரமாக இருந்த யானைகளின் எண்ணிக்கை, தந்தம் வணிகத்தால் 1980களின் மத்தியில் வெறும் பதினைந்தாயிரமாகக் குறுகிப்போனது என்கிறது ஒரு புள்ளிவிவரம்.) தந்தம், வைரம், யுரேனியம் போன்ற தேவைகளுக்காக, பொகாஸாவின் கேடுகெட்ட ஆட்டங்களுக்கெல்லாம் பீப்பீ ஊதிக் கொண்டிருந்தார் பிரான்ஸ் அதிபர். என்ன ஆட்டம் ஆடினாலும் எவனுக்கும் ‘end card’ உண்டுதானே.

அது மாணவர்கள் போராட்டமாக ஆரம்பமானது. பொகாஸாவின் மனைவி ஒருவருடைய நிறுவனம் தயாரிக்கும் சீருடைகளைத்தான் மாணவர்கள் அணிய வேண்டுமென்ற விதி கட்டாயமாக்கப்பட்டிருந்தது. பொகாஸாவின் உருவப்படம் பதிக்கப்பட்ட அந்தச் சீருடைகளின் விலை மிக அதிகம். 1979-ல் இதை எதிர்த்து, சில நூறு மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார். பொகாஸாவின் ரோல்ஸ் ராய்ஸ் வீதியில் பவனி வர, உச்சகட்டக் கோபத்தில் அதைக் கற்கள் கொண்டு தாக்கினர். பொகாஸா, மாணவர்கள் மீது ராணுவத்தை ஏவினார். சில மாணவர்கள் கொல்லப்பட்டனர். மீண்டும் மாபெரும் இளைஞர் போராட்டமாக அது எழுச்சி பெற்றது. வெறிகொண்ட பொகாஸா நூற்றுக் கணக்கானவர்களைச் சிறைபிடிக்கச் சொன்னார். கொடுமைப்படுத்தினர். படுகொலைகள் அரங்கேறின. பொகாஸாவும் கூரிய தந்தத்தைக் கொண்டு சில மாணவர்களின் கண்களைத் தோண்டினார். தன் கோலால் சிறுவர்களின் தலையில் அடித்தே கொன்றார். சிறிய சிறை அறையில், நெருக்கடியில் பிதுங்கி பலர் உயிரை விட்டனர்.

அம்னெஸ்ட்டி இண்டர்நேஷனல், இந்தக் கொடூரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. உலகம் பதற, பிரான்ஸ் தலையில் அடித்துக் கொண்டது. பிரான்ஸின் எழுநூறு வீரர்கள் பறந்து வந்து பாராசூட்டில் குதித்தனர் (செப். 20, 1979). பொகாஸா அதற்கெல்லாம் முன்பாகவே லிபியாவில் தஞ்சமடைந்திருந்தார். அவரது குடும்பத்தினரும் வேறு வேறு இடங்களில் பாதுகாப்பாகவே இருந்தனர்.

பழைய அதிபர் டேவிட் டாக்கோ, மீண்டும் அதிபராக்கப்பட்டார். மத்திய ஆப்பிரிக்கப் பேரரசு, பழையபடி குடியரசு ஆக்கப்பட்டது. முன்னாள் அதிபரும் மன்னருமான பொகாஸா மீது அடுத்தடுத்து சர்ச்சைகள் கிளம்பின. பிரான்ஸ் வீரர்கள், பொகாஸாவின் மாளிகைக் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தனர். அதிர்ந்தனர். உறைந்தனர். அதில் எங்கெங்கும் நர மாமிசம். காணாமல்போன பள்ளிச் சிறுவர்களின் உடல் துண்டுகள் அங்கே இருந்தன. முடிசூட்டு விழா விருந்தில்கூட  பிரான்ஸ் அமைச்சர் ஒருவருக்கு, பொகாஸா மாமிசம் பரிமாறினார். ‘நீங்கள் என்னவென்று தெரியாமலே அதை ருசித்து உண்டிருக்கிறீர்கள். அது நர மாமிசம்’ என்று பின்பு அவர் சொன்னதாகச் சர்ச்சை கிளம்பியது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 14

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள். ஏகப்பட்ட வழக்குகள். பிரான்ஸ், பொகாஸாவைத் தன் நாட்டுக்குள் விடவில்லை. ஐவரி கோஸ்ட்டில் தலைமறைவாக இருந்த பொகாஸா, தன் சுயசரிதையை எழுத ஆரம்பித்தார். அதில் பிரான்ஸ் அதிபர் வால்ரி ஜிஸ்கார்டுக்குப் பெண் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், ஏகப்பட்ட வைரங்களைப் பரிசாகக் கொடுத்ததாகவும் மனம் திறந்து எழுதினார். பிரான்ஸ், அந்தப் புத்தகத்தின் 8,000 பிரதிகளை வாங்கி அழித்தது.

ஏழு வருட வனவாசத்துக்குப் பிறகு, 1986-ல் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு வந்து சரணடைந்தார் பொகாஸா. விசாரணை தொடங்கியது. பிரான்ஸின் இரண்டு படா வக்கீல்கள் பொகாஸாவுக்காக வாதாடினர். அரண்மனைச் சமையல்காரர், பொகாஸாவால் சிறையிலடைக்கப்பட்டு உயிர் தப்பிய மாணவர்கள் சிலர், பொகாஸாவால் கொல்லப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் என்று எல்லோருமே தைரியமாக சாட்சி சொன்னார்கள். ‘அந்தக் குளிர்சாதனப்பெட்டி என்னுடையது இல்லை’ என்று சாதித்தார் பொகாஸா. ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேறி கத்தினார். ‘கடந்த 21 ஆண்டுகளில் இந்த நாட்டில் நடந்த கொலைகளை யெல்லாம் நான்தான் செய்தேனா?’

நர மாமிச வழக்கில் உரிய ஆதாரமில்லை என்று அறிவித்த நீதிமன்றம், பெரும்பான்மையான வழக்குகளில் பொகாஸாவைக் குற்றவாளி என்று அறிவித்தது. ‘எனக்கு மரண தண்டனை கொடுத்துவிடுங்கள்’ என்று நீதிபதியின் இறுதித் தீர்ப்புக்கு முன் நீலிக்கண்ணீர் வடித்தார் பொகாஸா. தீர்ப்பும் அப்படித்தான் வாசிக்கப்பட்டது. குற்றவாளி பொகாஸா சிறையில் அடைக்கப்பட்டார் (1987).

அடுத்த ஆண்டிலேயே மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அப்போதைய அதிபர் கோலிங்பா, பொகாஸாவின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றியமைத்தார்.  1993-ல் கோலிங்பா, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பல கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். அதில் பொகாஸாவும் ஒருவர். வெறுங்காலுடன் வெள்ளுடை அணிந்து சிறையிலிருந்து வெளியே வந்த பொகாஸா சிரித்தபடி சொன்னார், ‘நானே பதின்மூன்றாம் திருத்தூதர் (அப்போஸ்தலர்)’.

அந்த மனிதத்தன்மையற்ற புனிதர், 1996-ல் தனது எழுபத்தைந்தாவது வயதில் மாரடைப்பால் காலமானார். அப்போது, பிரெஞ்சு ராணுவத்தின் முன்னாள் படைத் தளபதிக்கான பென்ஷன் மட்டுமே அவருக்கான வருமானமாக இருந்தது.

(வருவார்கள்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism