
ஒரு பூனைக்குட்டியை வளர்ப்பதுபோல்
ரோஜாச்செடியை
அவ்வளவு எளிதாக வளர்க்க இயலாது
முதலில்
ரோஜாச்செடி சிநேகமானதன்று
அதன் எளிய வசீகரம்
கடவுளின் புன்னகையைப்போல்
பூடகமானது
உங்களுக்கானதுபோல் தோன்றினாலும்
அது உங்களுக்கானதல்ல
எங்கிருந்து பார்ப்பவருக்கும்
தனக்கானதுபோல் தோன்றவைக்கும்
அதன் மாயத்தன்மையிடம்
உங்களைப் பைத்தியமாக்குவதற்கான
ஆபத்திருக்கிறது என்பதை நீங்கள்
நினைவில்கொள்ள வேண்டும்
ரோஜாச்செடிகளுக்கு விதையில்லை
என்பதுதான் முக்கியமான பிரச்னை
அதனைச் செடியான பிறகுதான்
நீங்கள் இனங்காண முடியும்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஒரு அடிமையாகக் கருதி
அதனை நட்டு வளர்த்துவிட முடியாது
அந்தச் செடிக்கு உங்களிடம்
ஓர் இணக்கம் தோன்ற வேண்டும்
அந்த இணக்கம் குழந்தைமனம் கொண்டது
இணங்கும்
பிணங்கும்
பின்
அரிதாய் வேர் பிடிக்கும்
அதன் தேவையறியாமல்
உங்கள் ஆசைக்கு நீரூற்றினால்
மிரண்டுபோகும்
மறந்தால் வறண்டுபோகும்
செழித்து வளரும் செடிகள்
பூக்கும் என்பதற்கும்
எந்த உத்தரவாதமும் இல்லை
நீங்கள் நட்டு வளர்க்கும்
ரோஜாச்செடி பூப்பது
தேவதைகளின் ஆசீர்வாதம்
எனினும்
உங்களுக்காகவே பூக்கும் செடி
சில அபூர்வ மொட்டுகளை
ஏன் துளிர்க்காமலே வைத்திருக்கின்றதென்பது
ரோஜாக்களின் ரகசியம்
அதை நீங்கள்
ஒருபோதும்
அறிய முயலக்கூடாதென்பதுதான்
ரோஜா வளர்ப்பின்
முதல் விதி.