Published:Updated:

நவீன ஓவியம் புரிதலுக்கான சில பாதைகள் - 12 - சி.மோகன்

நவீன ஓவியம் புரிதலுக்கான சில பாதைகள் - 12 - சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
நவீன ஓவியம் புரிதலுக்கான சில பாதைகள் - 12 - சி.மோகன்

வில்லெம் டி கூனிங் உணர்ச்சிகளின் நிலவெளி

நவீன ஓவியம் புரிதலுக்கான சில பாதைகள் - 12 - சி.மோகன்

வில்லெம் டி கூனிங் உணர்ச்சிகளின் நிலவெளி

Published:Updated:
நவீன ஓவியம் புரிதலுக்கான சில பாதைகள் - 12 - சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
நவீன ஓவியம் புரிதலுக்கான சில பாதைகள் - 12 - சி.மோகன்

வீனக் கலை இயக்க வரலாற்றில், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான மாற்றங்களினால், நவீனக் கலையின் மையக் கேந்திரமாக அமெரிக்கா மாறியதன் தொடர்ச்சியாக உருவான கலை இயக்கம் அரூப வெளிப்பாட்டியம் (abstract expressionism). இன்றுவரை, பேராற்றல்கொண்ட படைப்புச் சக்திகளின் கலை வெளிப்பாட்டு வடிவமாக, மகத்தான கலை இயக்கமாக, இது கலை உலகில் இயங்கி வருகிறது. அரூபக் கலைவெளியானது, ஓவியப் படைப்பில் ஒரு படிமம் பிரதிநிதித்துவமாக அமைய வேண்டிய அவசியத்தைப் புறமொதுக்கியது. அரூபத்தை நோக்கிய பாதையானது, வெளிப்பாட்டில் எண்ணற்ற புதிய சாத்தியங்களைப் படைப்பாளிக்கு அளித்தது. பார்வையாளனின் அனுபவங்களும் புதுப்புதுப் பரிமாணங்களில் பயணம் செய்தது. அரூப ஓவியங்களின் வடிவமைப்பானது மாறுபட்ட முறைகளில் கட்டமைக்கப்படுவது. இத்தகைய ஓவியங்களை அணுகும்போது, அழகியல் பற்றிய மரபான பார்வைகள் நமக்கு எவ்விதத்திலும் உதவாது. இது, நாம் இதுவரை அறிந்திராத புதிய அழகியல் வெளிப்பாடு.    

நவீன ஓவியம் புரிதலுக்கான சில பாதைகள் - 12 - சி.மோகன்

படைப்பாளியின் உணர்ச்சி மற்றும் அறிவு சார்ந்த சக்தியும் படைப்பாக்கச் சக்தியும் ஒருங்கிணையும் மாயத்தில் புனையப்படுவது. படைப்பாக்கத்தின்போதான படைப் பாளியின் மனோநிலையைப் பெரிதும் சார்ந்து உருவாவது. இவ்வகையான எந்தவொரு ஓவியமும் முன் தீர்மானங்களிலிருந்தோ, திட்டமிடல்களிலிருந்தோ உருப்பெறுவதில்லை. எனினும், தனி மனித உளவியல், குழந்தைகளிடம் வெளிப்படும் படைப்பு உந்துதல், மனப் பிசகின் அம்சங்கள் போன்றவை இவ்வகைப் படைப்புகளின் ஆதாரங்களாக அமைந்தன எனலாம்.

அரூப வெளிப்பாட்டியம் என்ற இயக்கத்தைத் தன் தனித்துவமிக்க படைப்புச் சக்தியால் உருவாக்கியவர் ஜாக்சன் பொலாக். எனில், அவரிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவராக, வீர்யமும் அதிர்வும் மேதைமையும் முயங்கிய படைப்புச் சக்தியாக அந்த இயக்கத்தைப் புதிய திசைக்கு இட்டுச் சென்றவர், வில்லெம் டி கூனிங் (1904-1997). புதிய கலை சாத்தியங்களுடன் பொலாக் தன் அரூப வெளிப்பாட்டிய ஓவியங்களைப் படைத்தபோதிலும், அவை ஓர் அலாதியான லயத்தில், ஓர் அபாரமான ஒழுங்கில் அமைபவை. ஆனால், கூனிங்கின் அரூபப் படைப்புகள் கடுமையான குழப்பங்களின் அதிர்வுகளை உட்கொண்டவை. இவர், பொலாக்கின் சமகாலத்தவர். பிறப்பால் டச்சுக்காரர். ரோட்டர்டாமில் பிறந்து, இளம் வயதிலேயே அங்கு நுண்கலையில் பயிற்சி பெற்றவர். 22-வது வயதில் (1926-ல்) கப்பலில் ஒளிந்திருந்து பயணம்செய்து, சட்டவிரோதமாக அமெரிக்காவின் நியூஜெர்ஸியை வந்தடைந்து கலை வாழ்க்கையைத் தொடர்ந்தவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நவீன ஓவியம் புரிதலுக்கான சில பாதைகள் - 12 - சி.மோகன்70 ஆண்டு கால ஓவிய வாழ்க்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற கலை ஆளுமையாகத் திகழ்ந்தார். இறுதிவரை, உருவ வெளிப்பாடு, அரூப வெளிப்பாடு என்ற இரண்டு பாதைகளிலும் தன் தனித்துவக் கலை அடையாளங்களுடன் பயணம் செய்தார். எந்த ஒரு கலை பாணியைச் சார்ந்தும் தான் அடையாளப் படுத்தப்படுவதை அவர் விரும்பவில்லை. “படைப்பை அரூபமாக்குவதிலோ, படைப்பிலிருந்து படைப்புப் பொருளை வெளியேற்றுவதிலோ, ஓவியத்தைக் கட்டமைப்பு, வடிவம், கோடு, வண்ணம் எனக் குறுக்குவதிலோ, எனக்கு ஆர்வமில்லை. நான் இவ்விதமாக வரைவது ஏனென்றால், நாடகார்த்தம், கோபம், வலி, காதல், ஓர் உருவம், ஒரு குதிரை, படைப்புவெளி குறித்த என் எண்ணங்கள் என மேலும் மேலும் படைப்பிற்குள் விசயங்களை இடுவதற்குத்தான். உங்களுடைய கண்கள் வழியாக அது மீண்டும் ஓர் உணர்ச்சியாகவோ கருத்தாகவோ மாற்றம் பெறுகிறது” என்கிறார் கூனிங். எந்தவொரு பாணியின் வரையறைக்குள்ளும் அகப்படாத தனித்துவம் இவருடையது. எனினும், க்யூபிஸம், சர்ரியலிஸம் மற்றும் எக்ஸ்பிரஷனிஸம் ஆகிய பாணிகள் முயங்கிய கலை ஆளுமை என்பதற்கான அடையாளங்களை இவருடைய படைப்புகள்கொண்டிருக்கின்றன.

பெண் என்ற தலைப்பிலான இவருடைய பிரசித்தி பெற்ற ஓவிய வரிசையின் முதல் ஓவியம், ‘பெண் 1’. உக்கிரம், அதிர்வு, எவ்விதத் தளைகளுமற்ற சுதந்திர வெளிப்பாடு ஆகியவையே இவருடைய ஓவியங்களின் அடிப்படை அம்சங்கள்.  இவருடைய உருவ ஓவியங்களாகட்டும், அரூப ஓவியங்களாகட்டும் அவை இந்த அடிப்படை அம்சங்களில்தான் சலனம் கொள்கின்றன.

ஆறடி உயரமும் ஐந்தடி அகலமும் கொண்ட இந்த ஓவியத்தின் மையமாக ஒரு பெண், உக்கிரமாகவும் மூர்க்கமாகவும் கோரமாகவும் ஒரு சிலைபோல வீற்றிருக்கிறாள். நம்முடைய பெண் சிறு தெய்வங்களிடம் வெளிப்படும் துடியோடு இப்பெண் காணப்படுகிறாள். அச்சமூட்டும் வகையிலும், காலங்காலமாகப் பெண்மை குறித்த பயபக்தியை ஏற்படுத்தும் வகையிலும் உருக்கொண்டிருக்கிறாள். விரிந்த தோள்கள், அகன்று பெருத்த மார்புகள், அகலத் திறந்து விரிந்திருக்கும் கண்கள், உதடுகளே இல்லை எனுமளவுக்கு நீண்டு காணப்படும் பற்கள், கோரச் சிரிப்பு எனக் காதல் தெய்வம் வீனஸிற்கு எதிர்நிலையிலான தோற்றம். “அழகு எனக்கு எரிச்சலூட்டுகிறது. வினோதத் தையே நான் விரும்புகிறேன். அதுவே மிகவும் சந்தோஷமளிப்பது” என்கிறார் கூனிங்.      

நவீன ஓவியம் புரிதலுக்கான சில பாதைகள் - 12 - சி.மோகன்

மெருகு, நளினம் போன்ற எவ்வித வசீகரத் தன்மைகளுமற்று இப்பெண் தோற்றம் கொண்டிருப்பதைப்போலவே, அந்தப் பெண்ணைச் சுற்றிலுமுள்ள சாம்பல், மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, நீலம், இளம்சிவப்பு மற்றும் வெண்மையின் சாயைகள் ஆகிய வண்ணங்களின் மூர்க்கமான தூரிகைத் தீட்டல்களும் நளினங்களற்று உக்கிரத்தொனி கொண்டிருக்கின்றன. இவ்வண்ணங்களின் பின்னணியிலிருந்து அப்பெண்ணை முழுமையற்று வெளிப்படுத்தும் கருப்பு வரி வடிவங்களும் இத்தன்மையிலேயே தீட்டப்பட்டிருக்கின்றன. மைய உருவத்தையும் படைப்பின் தளத்தையும் ஓர் இருண்மையில் ஒருங்கிணைத்திருக்கிறது படைப்பு. உக்கிரமான உடல் மொழி ஓவியம், நம் நாட்டார் தெய்வங்களைப் போன்றது. நம்முடைய சிற்பி தட்சிணாமூர்த்தியை இவருடைய படைப்புலகமும் வெளிப்பாட்டு முறைகளும் ஈர்த்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இருவருடைய படைப்புலகமும் இசைமைகொண்டவை.

ஓவியத்தின் வளர்ச்சிப்பாதையில் பெரும் நம்பிக்கை கொண்டவர் கூனிங். ‘பெண் 1’ ஓவியத்தை இறுதி செய்வதற்கு அவர் இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். இருநூறுக்கும் மேற்பட்ட முறை அந்தப் பெண்ணிடம் மாற்றங்கள் செய்தபடி இருந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அழித்து அழித்து உருவமொழி வெளிப்பாட்டிலும், வண்ணங்களைச் சுரண்டிச் சுரண்டி வண்ண வெளிப்பாட்டிலும் மாற்றங்கள் செய்து வந்திருக்கிறார். இவ்வோவியம் முதன்முறை பார்வைக்கு உள்ளானபோது பார்வையாளர்களும் பெரும்பாலான விமர்சகர்களும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். எனினும், இளம் படைப்பாளிகளுக்கு இது ஒரு புதிய திறப்பாக அமைந்தது. ஒரு  புதிய பாதை புலப்பட்டது.  

நவீன ஓவியம் புரிதலுக்கான சில பாதைகள் - 12 - சி.மோகன்


    
கூகினின் அரூப வெளிப் பாட்டிய ஓவியங்கள், அதிர்வுகளோடு சலனிப்பவை. அவை, உணர்ச்சிகளின் நிலவெளி ஓவியங்கள். படைப்பாக்கக் கணத்திய உணர்ச்சிகளுக்கேற்ப குறுக்கும் நெடுக்குமாக அமைந்த உக்கிரமும் மூர்க்கமுமான தூரிகைத் தீட்டல் களும், வண்ணங்களின் அலாதியான வெளிப்பாடு களும் இவற்றைப் பேராற்றல் மிக்க படைப்புகளாக ஆக்குகின்றன. இப்படைப்புகள் மீண்டும் மீண்டும் வண்ண மாற்றங்களுக்கு உட்பட்டவை. ஒவ்வொரு முறையும் முன்னர் இடப்பட்ட வண்ணங்களைச் சுரண்டி எடுத்துவிட்டு, வேறு வண்ணங்களை அவர் மூர்க்கமாகத் தீட்டினார். வண்ணங்களைச் சுரண்டியதால் கேன்வாஸில் உருவான இழைகளைப் படைப்பின் தளத்தில் தக்கவைத்துக்கொண்டதில் படைப்புத்தளம் மாய அதிர்வுகளுக்கு உட்பட்டது. இவை, மனித ஸ்திதியின் சிதைவு குறித்த அவருடைய கலை மன வெளிப்பாடுகள் என்றும் கொள்ளலாம்.

இவருடைய வண்ண வெளிப்பாடுகள் உள்ளார்ந்த தீவிரமும் அடர்த்தியும்கொண்டவை. ஹென்றி மத்தீஸிற்குப் பின்னான மகத்தான வண்ணக்காரர் எனப் போற்றப்படுபவர். கூனின் இரண்டு அரூப வெளிபாட்டிய ஓவியங்கள் இங்கு தரப்பட்டுள்ளன. ஒன்று: ‘இடமாற்றம்’ (1955); மற்றொன்று: ‘தலைப்பிடப்படாதது’ (1970). இருவேறு காலகட்டங்களில் உருவான இவ்விரு ஓவியங்களும் இருவேறு தன்மையில் அமைந்தவை. அவருடைய ஆரம்பகால அரூப வெளியீட்டியப் படைப்புகள் உக்கிரமும் அதிர்வும்கொண்ட வண்ணத் தீட்டல்களால் ஆனவை என்றால், கடைசிக்கால அரூப ஓவியங்கள் இதமும் மிதமுமான வண்ணங்களால் வடிவமைக்கப்பட்டவை. இவ்விரு தன்மைகளுக்குமான எடுத்துக்காட்டுகளே இந்த ஓவியங்கள்.

ஆரம்பகால அரூபப் படைப்புகளில் ஒன்றான ‘இடமாற்றம்’ (1955) மிகவும் பிரசித்திப் பெற்றது. நவீனக் கலை வரலாற்றில் இது பெற்ற வர்த்தக மதிப்பு பிரமிப்பூட்டக்கூடியது. இன்றளவும் நவீன ஓவியங்களில் மிக அதிகமாக விலை கொடுக்கப்பட்ட ஓவியம் இதுதான். 1955-ல் இது உருவாக்கப்பட்டபோது, அந்த ஆண்டிலேயே நியூயார்க் கட்டடக் கலை வல்லுனர் ஒருவரால் வெறும் 4,000 டாலருக்கு வாங்கப்பட்டது. கூனிங்கின் அரூப வெளிப்பாட்டிய ஓவியங்களும், கலை மேதைமையும் கால வளர்ச்சியில் பெரும் செல்வாக்குப் பெற்றதையடுத்து, அந்தக் கட்டடக் கலை வல்லுனரிடமிருந்து 1989-ல் ஜப்பானின் டோக்கியோ நகர ‘மவுண்டன் டார்டாய்ஸ் கேலரி’ என்ற கலைக்கூடம், 21 மில்லியன் டாலருக்கு (சுமார் 150 கோடி ரூபாய்) இந்த ஓவியத்தை வாங்கியது. அப்போது, அதிக விலைக்கு வாங்கப்பட்ட நவீன ஓவியமாக அது வரலாற்றில் அமைந்தது. இதைப் பின்னர், 2015-ல் ஒரு கோடீஸ்வரர் 300 மில்லியன் டாலருக்கு (சுமார் 2,000 கோடி ரூபாய்) வாங்கினார். இன்றளவும் நவீன ஓவியங்களில் அதிகபட்ச விலை கொடுக்கப்பட்ட ஓவியமாக இது இருந்துகொண்டிருக்கிறது.

கூனிங் தன்னுடைய படைப்புகளின் வடிவமைப்புகளைக் கட்டமைப்பதில் தொடர்ந்து மாற்றங்கள் செய்தபடி தன் கலைப் பயணத்தைத் தொடர்ந்தவர். இங்கு தரப்பட்டிருக்கும் இருவேறு காலத்திய ஓவியங்களைப் பார்த்தாலே இந்த அம்சத்தை நாம் தெளிவாக உணர முடியும். ஒவ்வொரு படைப்போடும் அவர் கொண்டிருந்த உறவு, எளிதில் முற்றுப்பெறாத அளவு தீவிரமானது. கடும் உழைப்பைச் செலுத்திய தொடர் பயணமாகவே ஒவ்வொரு படைப்பும் உருப்பெற்றது. கூனிங் கூறுகிறார்: “ஒரு சிறந்த ஓவியத்தை உருவாக்குவது எப்படி என்பதில் எனக்கு ஆர்வமில்லை. அதற்குள் எவ்வளவு நெருக்கமாக, எப்படியெல்லாம் பயணிப்பது என்பதிலேயே என் ஈடுபாடு எப்போதும் இருக்கிறது.”

தொழில்புரட்சியின் விளைவாகத் தோன்றிய நவீன யுகத்தின் கலை வடிவமாக 1860-களில் உருவான நவீன ஓவியம், ஒரு நூற்றாண்டுக்குள்ளாகப் புதுப்புதுச் சிந்தனை வளங்களோடும், கலைப் பாதைகளோடும் காலந்தோறும் மாறுபட்ட சாத்தியங்களைக் கண்டடைந்து கண்டடைந்து 1950-களில் அரூப வெளிப்பாட்டியம் என்ற கலைப் பிராந்தியத்தை எட்டியது. எனினும், ‘தோற்றத்தைப் பிரதிபலிப்பதல்ல; மாறாக, தனதான உலகைத் தோற்றப்படுத்துவது என்பதுதான் நவீன ஓவியக் கலையின் அடிப்படை நியதியாக எப்போதும் இருந்திருக்கிறது.

இனி, இதுவரை நாம் கடந்துவந்த நவீன ஓவியக் கலையின் ஒரு நூறாண்டு காலப் பயணங்களையும் புலப்பட்ட பாதைகளையும் தொகுத்துக் கொள்ளலாம்:

நவீன ஓவிய இயக்கத்தின் முதல் அலையாக 1860-களில் கிளாடு மோனேயின் சிந்தனை வளத்தால் உருவான ‘இம்ப்ரஷனிஸம்’, தம் கால வாழ்வியக்க சலனத்தின் ஒரு குறிப்பிட்ட கணத்தை ஒருமனப் படிமமாக வசப்படுத்தும் முனைப்புடன் எழுச்சி பெற்றது. சமகால வாழ்வியக்கச் சலனத்தின் ஒரு கணத்தை, படைப்பு மனதின் கிரகிப்புக்கு ஏற்ப, ஒரு வரைமாதிரியின் அநாயாசமான தன்மையோடு, ஒளி மற்றும் வண்ணம் சார்ந்து படைத்த இம்ப்ரஷனிஸவாதிகளின் அணுகுமுறையில் பால் செசான் அதிருப்தி அடைந்தார். ஓர் ஓவியத்துக்கான முக்கிய அழகியல் அம்சங்களைப் புறக்கணித்துவிட்டு, ஒளி மற்றும் வண்ணம் சார்ந்து மட்டுமே சலனத்தின் ஒரு கணத்தைக் கைப்பற்ற முனையும் பிரயாசைகளை நிராகரித்தார். பால் செசான், இயற்கையை நேருக்கு நேராக அணுகியபோது, இயற்கையில் காணப்படும் கோடுகள், தளங்கள் மற்றும் வண்ணங்களை மிகவும் நுட்பமாகக் கண்டறிந்து, பகுத்துப் பார்த்து, அவற்றை ஓவிய வெளியில் தீர்க்கமாகவும் அறிவார்த்தமாகவும் வடிவமைப்பதில் மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார். அவருடைய இந்த மாறுபட்ட அணுகுமுறையே `பின்- இம்ப்ரஷனிஸம்’ என அறியப்பட்டது. வடிவவியல் சார்ந்த பகுப்பு முறையில் ஓவியவெளியைக் கட்டமைக்கும் அவருடைய தீட்சண்யமான அணுகுமுறைதான், பின்னர் க்யூபிஸ இயக்கம் உருவாகவும் முகாந்திரமாக அமைந்தது.   

நவீன ஓவியம் புரிதலுக்கான சில பாதைகள் - 12 - சி.மோகன்

ஓவியப் படைப்பை நிரந்தர மதிப்பு மிக்கதாகக் கோடுகள், வண்ணங்கள், வடிவம், கட்டமைப்புச் சார்ந்து பூரண அழகியல் அம்சங்களோடு உருவாக்க செசான் மேற்கொண்ட தீவிர கலைப் பிரயாசைகளின் தொடர்ச்சியாக, அக்கால கட்டத்தில் – 19-ம் நூற்றாண்டு இறுதியில் - வான்கா, காகின் என்ற இரண்டு மகத்தான படைப்புச் சக்திகள் ஓவியக் கலைவெளியில் ஒளிர்ந்தன. உள்ளார்ந்த தகிப்பிலும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலும் கலை நுட்பங்களோடு படைப்புகளை உருவாக்கிய அபூர்வக் கலை ஆளுமையாகவும் சூரியக் குழந்தையாகவும் வான்கா வெளிப்பட்டார். வான்காவைப் போன்றே அக உலக வெளிப்பாடுகளில் தனிக் கவனம் செலுத்திய காகின், வண்ணங்களை அர்த்தபூர்வமாகப் பயன்படுத்துவதிலும் படைப்பைக் குறியீட்டுத் தன்மையோடு உருவாக்குவதிலும் தீர்க்கமான நம்பிக்கைகொண்டு செயல்பட்டார்.

20-ம் நூற்றாண்டின் முதல் கலை இயக்கமாக உருவானது ஃபாவிஸம். பின்-இம்ப்ரஷனிஸப் படைப்பு மேதைகளான பால் செசான், வின்சென்ட் வான்கா, பால் காகின் ஆகியோரின் அழகியல் அம்சங்களையும் படைப்பாற்றல் வளங்களையும் ஏற்றுக்கொண்டு, வண்ணம், வடிவம் பற்றிய புதிய சிந்தனைகளோடு ஃபாவிஸப் படைப்பாளிகள் இயங்கினர். ஹென்றி மத்தீஸ் இந்த இயக்கத்தின் பிரதான படைப்புச் சக்தியாகவும் உந்துசக்தியாகவும் திகழ்ந்தார். மத்தீஸின் வடிவ அணுகுமுறை, அடுத்து உருவான க்யூபிஸ இயக்கத்துக்கும்; வண்ண அணுகுமுறை, அதனையடுத்து உருவான அரூப பாணி இயக்கத்துக்கும் பாதை அமைத்துக் கொடுத்தன.

இரட்டைப் பரிமாணமான ஓவியத் தளத்தில் முப்பரிமாணப் பொருளை, எவ்வித மாயத்தோற்றத்துக்கும் இடமளிக்காமல் எப்படி வெளிப்படுத்துவது என்பதே க்யூபிஸத்தின் கலை ரீதியான சவாலாக அமைந்தது. வடிவவியல் ரீதியாகப் படைப்புப் பொருளைத் துண்டுதுண்டாகப் பகுத்துப் பரிசீலித்து, எவ்வித மாயத் தோற்றத்துக்கும் இடமளிக்காமல், பொருளின் துல்லியமான வடிவத்தை ஓவியத் தளத்தில் உருவாக்குவதன் வழியாக க்யூபிஸ்ட்டுகள் இந்தச் சவாலைக் கடந்தனர். அதனால்தான், பால் க்லீ ‘வடிவத்தின் தத்துவவாதிகள்’ என்று இவர்களைக் குறிப்பிட்டார். இருபதாம் நூற்றாண்டுக் கலைவெளியின் முதல் பாதியை வடிவமைத்த மகத்தான கலை ஆளுமையான பாப்லோ பிகாஸோ, க்யூபிஸக் கலை இயக்கத்தின் அபார மேதையாக வெளிப்பட்டார். 

நவீன ஓவியம் புரிதலுக்கான சில பாதைகள் - 12 - சி.மோகன்ஃபாவிஸ ஹென்றி மத்தீஸ் மனித மன உணர்வுகளை வண்ண வெளிப்பாடுகளில் அரூபமாகவும், க்யூபிஸ பிகாஸோ, பகுப்பு ரீதியான அணுகுமுறையின் மூலம் மனித உருவங்களை அரூப குணத்தோடும் வெளிப்படுத்தினர். எனில், வாஸ்ஸிலி காண்டின்ஸ்கி முதன்முறையாக முற்றிலுமான அரூபவெளி ஆக்கங்களை உருவாக்கினார். வண்ணங்களும் வடிவங்களும் இசையைப் போலவே மனித ஆன்மாவின் ஆழங்களிலிருந்து எழுகின்றன என்று உணர்ந்த காண்டின்ஸ்கி, மனிதனின் அகத் தேவையைப் பூர்த்திசெய்ய ஓவியக் கலை, இசைபோன்றே அரூபகுணம் கொள்ள வேண்டும் என்று கருதினார். இதுவே அரூப ஓவியப் படைப்பாக்கங்களுக்கு அவரை இட்டுச் சென்றது. மனித மன நாண்களில் இசையை மீட்டும் பிரயாசை கொண்டவையாக இவருடைய அரூப ஓவியங்கள் அமைந்தன.

நவீன ஓவியக் கலையில் விந்தைவெளியை உருவாக்கிய கலை மேதை பால் க்லீ. மிகவும் தனித்துவமான ஓவிய மொழி மூலம், புலப்படும் தோற்ற உலகுக்கு அப்பாற்பட்ட புலப்படா உலகின் மெய்மையையும், கனவுலகில் சலனிக்கும் மனித ஆழ்மனக் குணங்களையும் ஓவியப் படைப்புகளாக்கிய விந்தைக் கலைஞன். தொன்மையான வடிவமைப்பு முறைகள், குறியீடுகள் மற்றும் படிமங்கள் மூலமும், குழந்தை ஓவியத்தன்மையோடும் அலாதியான கலைநுட்பங்
களோடு படைப்பாக்கத்தில் ஈடுபட்டவர். பால் க்லீயின் கனவுப்பாங்கான படைப்புகளில் சர்ரியலிஸ சாயல் தென்பட்டாலும், அவற்றில் விந்தைத்தன்மையும் அதன் மெய்மையுமே பிரதானமாக அமைந்தன.

யதார்த்த உலகின் காரண-காரிய நடைமுறைத் தர்க்கத்தை முற்றாக நிராகரித்த கலை இயக்கம் சர்ரியலிஸம். இதற்கு முன்னோடியாக அமைந்தது ‘டாடா’ என்ற கலை இயக்கம். முதல் உலகப்போர் (1914-1918) காலகட்டத்தின்போது, கலைஞர்களிடம் ஆழமாகப் பதிந்த வெறுப்பும் விரக்தியுமே இந்த இயக்கத்துக்கான ஆதாரமாகியது. போரின்போது கூட்டாக நிகழ்த்தப்படும் மனிதக் கொலைகளைப் பித்துப் பிடித்த நிலையில் வெறும் பார்வையாளனாகப் பார்த்துக்கொண்டிருக்க நேர்ந்த கையாலாகாத்தனத்தை உணர்ந்த அவலத்திலிருந்து உருவான இயக்கம். போருக்கான வித்து முளை விடுவதற்கு அறிவும் தர்க்கமுமே காரணம் என்று உணர்ந்தனர். அதனால்தான், நடைமுறைத் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டதாகவும், உள்ளுணர்வு சார்ந்ததாகவும் அமையும் படைப்புச் செயல்பாடே ஒரே தீர்வு என்று கருதினார்கள். இந்த இயக்கம் மிகக் குறைந்த காலமே நவீனக் கலையில் நீடித்தது.

1924-ல் வெளியிடப்பட்ட முதல் சர்ரியலிஸ அறிக்கை டாடாவாதிகளைப் பெரிதும் ஈர்த்ததின் தொடர்ச்சியாக, அவர்களில் பலரும் சர்ரியலிஸ இயக்கத்தில் இணைந்தனர். கனவுப்பிரதேசங்களையும் ஆழ்மன இயல்புகளையும் கலையில் வெளிப்படுத்துவதற்கான படைப்புச் செயல்முறைகளைக் கண்டடைவது என்ற சர்ரியலிஸத்தின் தீர்க்கமான குறிக்கோள், நடைமுறைத் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட உலகைப் படைப்பது என்ற டாடாவின் கலைப் பாதைக்கு நெருக்கமாக இருந்ததே காரணம். மேலும், அக்காலகட்டத்தில் செல்வாக்குப் பெறத் தொடங்கியிருந்த உளவியல் மேதைகளான சிக்மண்ட் ஃப்ராய்டு மற்றும் கார்ல் யூங் ஆகியோரின் உளவியல் கோட்பாடுகள் சர்ரியலிஸவாதிகளுக்குப் பெரும் உந்துதலாக அமைந்தன. ஃப்ராய்டின் ஆழ்மனம் பற்றிய சிந்தனைகளும் கனவுகள் பற்றிய விளக்கங்களும், யூங்கின் தொன்மமாகத் தொடரும் கூட்டு நனவிலி (collective unconscious) பற்றிய சிந்தனைகளும் இந்த இயக்கத்தின் உத்வேகத்துக்கு உறுதுணையாகின. சர்ரியலிஸ இயக்கத்தின் மகத்தான படைப்புச் சக்தியாக சல்வடோர் டாலி உருவெடுத்தார். அவர் தன்னுடைய சர்ரியலிஸ ஓவியங்களை, “கையால் வரையப்பட்ட கனவின் புகைப்படங்கள்” என்றார்.

இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, 1940-களில் நவீனக் கலை உலகின் மையக் கேந்திர அந்தஸ்து, பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், இலட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின. இவற்றின் விளைவாக, அமெரிக்காவின் முதல் கலை இயக்கமாக அரூப வெளிப்பாட்டியம் (abstract expressionism) உருவானது. உருவ வெளிப்பாட்டை அறவே புறமொதுக்கிய கலை இயக்கம். அர்த்தங்களின் உலகிலிருந்து பூரணமாக விடுபட்டது. படைப்பாக்கத்தின்போதான படைப்பாளியின் மனோநிலைகளையும் உணர்ச்சிகளையும் படைப்புவெளியில் அகப்படுத்தும் குணம் கொண்டது.

இந்த இயக்கத்தைக் கண்டடைந்த அபூர்வ படைப்புச் சக்தி, ஜாக்ஸன் பொலாக். அதுவரையான ஐரோப்பியக் கலை வரலாறு அளித்த சகல கலை நுட்பங்களையும், முன்மொழியப்பட்ட அணுகுமுறைகளையும், கருத்தாக்கங்களையும், படைப்புப் பொருளையும் முற்றிலுமாகப் புறக்கணித்து, பேராற்றல்மிக்கத் தனித்துவ சக்தியாகப் பொலாக் வெளிப்பட்டார். ஓவியவெளியில் ஒன்றை மறு உருவாக்கம் செய்வது, மறு வடிவமைப்பு செய்வது, பரிசீலிப்பது, கற்பனையான அல்லது நிஜமான ஒரு பொருளை வெளிப்படுத்துவது போன்ற கலை அணுகுமுறைகளுக்கு மாறாக, ஓவியவெளியில் ஒரு செயலை நிகழ்த்திக் காட்டுவதாகக் கலை பொலாக்கிடம் புது மலர்ச்சி பெற்றது. ஒரு புதிய கலை இயக்கம் எழுச்சி பெற்றது.

அரூப வெளிப்பாட்டிய இயக்கத்தில் பொலாக்கிற்கு முற்றிலும் மாறுபட்டவராகப் புதிய சாத்தியங்களில் வெளிப்பட்ட படைப்புச் சக்தி, வில்லெம் டி கூனிங். பொலாக்கிடம் அலாதியாக வெளிப்பட்ட லயம், ஒழுங்கிற்கு மாறாக, குழப்பங்களும் சிதைவுகளும் அதிர்வுகளும் கூனிங்கிடம் உக்கிரமாக வெளிப்பட்டன.

நவீன ஓவியக் கலையின் இயக்கங்கள், கோட்பாடுகள், வெளியீட்டு அணுகுமுறைகள், படைப்புச் சக்திகள், தனித்துவங்கள் ஆகியவற்றின் பரிசீலனைகளாக அமைந்த இந்தப் பயணத்தில் சில பாதைகள் தென்பட்டிருக்கும். சிறிது வெளிச்சம் கிடைத்திருக்கும். அறிவதற்கான ஆர்வமும் முனைப்பும் நம்மை மேலும் முன்னெடுத்துச் செல்லும்.

நிறைவடைந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism