கனடாவின் 150-வது பிறந்தநாள் ஜூலை மாதம் கொண்டாடப்பட்டது. இது மறக்க முடியாத மாதம். எனக்கு அதிர்ச்சி தந்த மாதம் என்றும் சொல்லலாம். அதற்கு மூன்று காரணங்கள். கனடாவின் ஒன்ராறியோ மாநில அமைச்சகத்திலிருந்து எனக்குக் கடிதம் வந்திருந்தது. முதலாவது அதிர்ச்சி, அந்தக் கடிதத்தின் வாசகம். `பன்மைக் கலாசார சமுதாய மேன்மைக்காக நிதி வழங்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பியுங்கள்.’ இரண்டாவது, கடிதம் சுற்றறிக்கையாக வரவில்லை. என் பெயருக்கு வந்திருந்தது. மூன்றாவது, கடிதம் தமிழில் இருந்தது.
நம்ப முடிகிறதா? இதுதான் கனடா.

‘பன்மைக் கலாசார மேன்மைக்காக நிதி வழங்கப்படுகிறது. தயவுசெய்து விண்ணப்பித்து, பணத்தைப் பெற்று, உங்கள் சமுதாயத்தை முன்னேற்றுங்கள்.’ இப்படியான கடிதத்தை வேறு எந்த ஒரு நாட்டிலும் எதிர்பார்க்க முடியுமா? அதுவும் கடிதம் தமிழில் வந்திருந்தது. இந்தியாவிலோ, இலங்கையிலோகூட இப்படியான அனுபவம் ஒருவருக்குக் கிடைக்க வழியில்லை. ஆகவேதான் நான் அதிர்ச்சியடைந்தேன்.
கனடாவில் நான் 16 வருடங்களாக வாழ்கிறேன். இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் நான் அதிர்ச்சியடைவதை நிறுத்தவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமி ஸ்ருதி, என் வீட்டுக்கு மகிழ்ச்சியாகத் துள்ளிக்கொண்டு வந்தார். “என்ன இவ்வளவு சந்தோசம்?” என்று கேட்டேன். “ஓ, தமிழ் வகுப்புக்குப் போய்விட்டு வாறன்” என்றார். யாருமே தமிழ் வகுப்புக்கு இவ்வளவு மகிழ்ச்சியாகப் போய்வந்தது கிடையாது.
ஸ்ருதி ஸ்ரீகரன், கனடாவில், நியூஃபவுண்ட்லாண்ட் மாநிலத்தில், வசதிகள் இல்லாத ஒரு சிறிய நகரத்தில் பிறந்தவர். இப்போது பெற்றோருடன் ரொறோன்ரோவில் வசிக்கிறார். அழகாகத் தமிழ் பேசுகிறார்; வாசிக்கிறார்; எழுதுகிறார். திருக்குறள், சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் பற்றி அறிந்துவைத்திருக்கிறார். அவருடைய வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை ஒருமுறை பார்த்து வியந்திருக்கிறேன். தமிழ் வகுப்புகளை, அவரைப் படிப்பிக்கும் ஆசிரியர்கள் சுவாரஸ்யமாக நடத்துகிறார்கள். “பள்ளிக்கூடத்தில் நாங்கள் 200 பேர் தமிழ் படிக்கிறோம். எங்கள் வகுப்பில் மட்டும் பத்துப் பேர். எப்போது ஞாயிறு வரும் என்று நாங்கள் காத்திருப்போம்” என்றார்.
“அதெல்லாம் சரி. இது கனடா. உங்கள் பெற்றோர் புலம் பெயர்ந்தவர்கள். நீங்களோ இங்கே பிறந்தவர். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் மொழிகள் படிப்பதால் பயன் உண்டு. தமிழ்ப் படிப்பதால் என்ன பிரயோசனம்?” என்று கேட்டேன். அவர் திடுக்கிட்டுக் கண்களை விரித்து ‘என்ன இது முட்டாள்தனமான கேள்வி’ என்பதுபோல என்னைப் பார்த்தார்.
“எங்கள் வீட்டில் அப்பம்மா, அப்பப்பா படங்களை நாங்கள் வணங்கி வருகிறோம். அதனால் என்ன பிரயோசனம் என்று கேட்பீர்களா? அதுபோலத்தான் இதுவும். நான் பிறந்து, அம்மா என்னை மடியில் கிடத்தியபோது, நான் அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் என்னிடம் பேசியது தமிழ். அதுதான் என் தாய்மொழி. அவருடைய தாய் அந்த மொழியில்தான் அவரிடம் பேசினார். அவருடைய தாயும் அப்படியே பேசினார். அவருடைய தாயும். இப்படி 2,000 வருடங்களுக்கு மேலாகவரும் மொழிச் சங்கிலி என்னுடன் அறுந்துபோக வேண்டுமா?” நானும் விடாப்பிடியாகக் கேட்டேன். “உங்கள் பெற்றோர் நாடு வேறு. உங்கள் நாடு கனடா அல்லவா?” ஒரு கணம்கூட தாமதிக்காமல் அவர் சொன்னார். “நாடுதான் மாறியது. மொழி மாறவில்லை.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகத்திலுள்ள பல நாடுகள், குடி வரவாளர்கள் புகுந்த நாட்டின் மொழியைப் பேசி, அவர்களின் கலாசாரத்துடன் விரைவில் ஒன்றிவிட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கும். கனடா முற்றிலும் மாறானது. இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தவர் முந்தையக் கனடியப் பிரதமர் பியரி ரூடோ. அவர் 1971-ல் பன்முகப் பண்பாட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு இனக் குழுவும் கனடாவில் தங்கள் மொழியையும் கலாசாரத்தையும் பின்பற்றித் தனித்துவமாக, ஆனால் கனடிய வாழ்க்கை முறைக்கு இசைவாக வாழலாம். தாய்மொழிக் கல்விக்கான வாய்ப்பு கனடாவில் வழங்கப்படுவதுடன் தமிழ்மொழிக்கு ரொறொன்ரோ கல்விச் சபை திறமைச் சித்தி வழங்கிப் படிப்பவர்களை ஊக்குவிக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் பலர், இந்தக் காரணத்தினால்தான் கனடா வந்து குடியேறுகிறார்கள். உலகத்தின் சிறந்த பத்து நாடுகளில் கனடாவும் ஒன்றாக இருப்பது இதனால்தான். அகதிகளை வரவேற்கும் நாடு என்று ஐ.நா புகழ்ந்து, 1986-ல் Nansen விருது கனடாவுக்குக் கொடுத்ததும் பொருத்தமானதே.
கனடாவுக்கு ஈழத்திலிருந்து அகதிகளாக வந்தவர்கள், தனித்தனியாக வந்தார்கள்; குடும்பங்களாக வந்தார்கள்; விமானத்தில் வந்தார்கள்; ரயிலில் வந்தார்கள்; படகுகளில் வந்தவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில், 1986-ம் ஆண்டு முக்கியமானது. 155 அகதிகள் ஜெர்மனியிலிருந்து பழைய கப்பல் ஒன்றில் ஆளுக்குப் பெருந்தொகை கொடுத்துக் கனடாவுக்குப் புறப்பட்டார்கள். அந்தக் கப்பல் தலைவன் கொடூர நெஞ்சன். பழுதான இரண்டு படகுகளில் நடுக்கடலில் இவர்களை இறக்கிவிட்டுத் தப்பிப்போய்விட்டான். மூன்று நாள்கள் கடலில் தத்தளித்த பின்னர், மீன்பிடிக் கப்பல் ஒன்று அவர்களைக் காப்பாற்றிக் கனடாவில் கரைசேர்த்தது. ஆனால், பிரச்னை அப்போதுதான் ஆரம்பித்தது. `பயங்கரவாதிகள் வந்துவிட்டார்கள். திருப்பி அனுப்பு’ என்று பத்திரிகைகள் எழுதின. அன்றைய கனடியப் பிரதமர் பிரையன் மல்ரோனி உறுதியாகச் சொன்னார். “கனடா அகதிகளை திருப்பி அனுப்பும் நாடல்ல; வரவேற்கும் நாடு.”

கனடா புதியவர்களை வரவேற்கும் நாடு என்பதை உறுதிசெய்யப் பல சம்பவங்களைச் சொல்லலாம். திரு எஸ்.திருச்செல்வம் ஈழத்திலே பிரபல பத்திரிகை ஒன்றின் ஆசிரியர். இவருடைய 19 வயது மகன் கொலை செய்யப்பட்ட பின்னர் இவருக்கும் கொலை மிரட்டல் தொடர்ந்தது. ஆனால், நாட்டைவிட்டு வெளியேறுவதில்லை என்ற தீர்மானத்துடன் இருந்தார். ஒருநாள் லண்டன் சர்வதேச மன்னிப்புச் சபையிலிருந்து பெண்மணி ஒருவர் தொலைபேசியில் அழைத்து, “உங்களுக்கும் மனைவிக்கும் கனடா விசா தயாராகிவிட்டது. விமான டிக்கட்டுகளும் அனுப்புகிறோம். உடனே புறப்படுங்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து” என்றார். திரு. திருச்செல்வம் புலம்பெயர்வதற்கு விண்ணப்பிக்காமலே அவரின் வீடு தேடி வந்து மனிதாபிமானத்துடன் அழைத்தது கனடா.
“கனடா வந்து சில மாதங்களிலேயே ‘தமிழர் தகவல்’ மாதாந்த சஞ்சிகையை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?”
“புது நாட்டில் தஞ்சம் புகுந்த அகதிகள் ஆங்கிலம் புரியாமலும், சட்டவிதிகள் தெரியாமலும் அல்லலுறுவதைப் பார்த்து அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. சஞ்சிகையில் மருத்துவர்கள், சட்டவாளர்கள் மற்றும் ஏற்கெனவே குடிவந்தவர்கள் எழுதிய ஆலோசனைகளையும், அனுபவங்களையும் வெளியிட்டோம். இதனால், புதிய வரவாளர்கள் பயனடைந்தனர்.”
“உங்களுக்கு மனநிறைவு கொடுத்தது?”
“புகுந்த நாட்டின் உதவியை நாடாமல், எம்மக்கள் அனுசரணையில், எம்மக்கள் நலனுக்காக 26 வருடங்கள் தொடர்ந்து சஞ்சிகை நடத்திக்கொண்டுவருவது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குடிவரவாளர்கள் கனடியச் சமூகத்துடன் ஒன்றி வாழ முடிந்திருக்கிறது. இன்று பல துறைகளில் முன்னேறிக் கனடிய வாழ்க்கையில் ஐக்கியமாகித் தொண்டாற்றுபவர்கள், ஏற்கெனவே ‘தமிழர் தகவல்’ சஞ்சிகையால் அடையாளம் காணப்பட்டு விருதுகள் பெற்றவர்கள். இவர்கள் வளர்ச்சியையும், பங்களிப்பையும் கடமையுடன் தொடர்ந்து பதிவு செய்வதுதான் தமிழர் தகவலின் ஆகப்பெரிய சேவை. இந்தத் தகவல்கள் ஒரு காலத்தில் வரலாறாக மாறும்.”
அதுதான் கனடாவின் ‘ஜூன் கால்விட்’ வாழ்நாள் சாதனை விருது பெற்ற திரு. திருச்செல்வம் அவர்களின் தீர்க்கதரிசனம்.

கனடாவின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டத்தில் என்னைச் சிலிர்க்க வைத்தது, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் ஒருவர் வெளியிட்ட காணொளி. அதில் விசேடம் என்னவென்றால், கனடாவின் எட்டு முக்கிய மொழிகளில் பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை எழுதியவர் நீல் டொனல்; இசை அமைத்தவர் பிரவின் மணி. பாடியவர்கள் அந்தந்த மொழிகளில் பிரபலமான பாடகர்கள். ஆங்கிலம், பிரெஞ்சு, அராபி, ஹீப்ரு, தமிழ், சீனம், பஞ்சாபி, ஸ்பானிஷ் மொழிகளில் பாடப்
பட்ட பாடலின் தமிழ் பகுதியை ‘மின்னல்’ செந்தில் குமரன் பாடியதோடு, இதைத் தயாரித்தும் இருக்கிறார். பல்லாயிரக் கணக்கான மக்கள் பாடலைத் தினமும் கேட்டும் பார்த்தும் ரசிக்கிறார்கள்.
“நான் 19 வயதில் பையில் 48 டொலர்களுடன் இந்த நாட்டுக்கு அகதியாக வந்து சேர்ந்தேன். எனக்கு இங்கே ஒருவரும் இல்லை. சின்னச்சின்ன வேலைகள் செய்தபடியே பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்து வேலை தேடிக்
கொண்டேன். அப்போதுதான் தற்செயலாக என்னிடம் ஒரு திறமை இருப்பதை மற்றவர்கள் கண்டுபிடித்தனர். முறையான சங்கீதப்பயிற்சி இல்லாமலே என்னால் பாட முடிந்தது. ‘மின்னல்’ என்ற இசைக்
குழுவை அமைத்துப் பாட ஆரம்பித்தபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னிடம் இருப்பதெல்லாம் இந்த நாடு தந்ததுதான். ஆகவே, கனடாவின் பிறந்தநாளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். பல இனத்தவரையும் ஒன்றிணைத்துப் பாடல் உருவாக்கினேன். இதற்கான செலவு முழுவதையும் நானே ஏற்றுக்கொண்டேன்” - இப்படிப் பரவசத்துடன் பேசினார் செந்தில் குமரன்.
“புகுந்த நாட்டுக்கு நன்றி செலுத்தியது சரி. நீங்கள் விட்டுவந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய முடிந்ததா?”
“இதுவரை 20 இசை நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி, ஈழத்து மக்களின் விடிவுக்காக அனுப்பியிருப்பதுடன் 18 இருதய அறுவை சிகிச்சைகளுக்கும் உதவியிருக்கிறேன். ஏறக்குறைய பத்துக் கோடி இலங்கை ரூபாய். இதையெல்லாம் நான் வெளியே சொன்ன தில்லை” - இப்படிப் பேசிக்கொண்டிருந்த போதே அவர் செல்போனில் ஒரு மின்னஞ்சல் டிங் என்ற சத்தத்துடன் வந்து இறங்கியது. ஆறு வயதுச் சிறுவன் பற்றி ஒரு தகப்பன் எழுதிய கடிதம். அதைக் காட்டினார். ‘எங்களது மகனின் இருதய சத்திர சிகிச்சைத் தொடர்பாக டாக்டர் ரகுநாதன் ஐயாவுடைய ஆலோசனையுடன் தங்களின் மேலான பெரும் உதவியையும் கேட்டுத் தங்களுக்கு இது தொடர்பான படங்களையும் அனுப்பி உள்ளோம். எனது மகனின் உயிரை மீட்டுத்தரும் தங்களை எப்போதும் எங்கள் இதயத்தில் வைப்போம். நன்றி ஐயா.’ அவர் முகம் உடனே மாறியது. “மன்னியுங்கள், அடுத்த இசை நிகழ்ச்சிக்கு நான் தயாராக வேண்டும்” என்று புறப்பட்டார்.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேசமான கனடாவில், 160 நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். கடந்த 150 வருடங்களில் 17 மில்லியன் மக்கள் இங்கே புலம் பெயர்ந்துள்ளனர். ஈழத்தமிழர்கள் 56 நாடுகளில் குடியேறி வாழ்ந்தாலும் கனடாவில் அவர்களின் தொகை மூன்று லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. 338 உறுப்பினர்களைக்கொண்ட கனடிய நாடாளுமன்றத்தில் ஒரேயொரு தமிழர். அவர் பெயர் கரி ஆனந்தசங்கரி. அவர் செய்த முதல்காரியம்போல, தமிழர் யாரும் எந்த நாட்டிலும் செய்தது கிடையாது. இனிவரும் ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதம் கனடாவில் தமிழ் மரபுத் திங்களாகக் கொண்டாடப்படும். இந்தத் தீர்மானத்தை நாடாளுமன்றம் ஏகமனதாக அங்கீகரித் திருக்கிறது. நான் வசிக்கும் மார்க்கம் நகரசபையின் உறுப்பினர் லோகன் கணபதி, நாங்கள் விட்டுவந்த நாட்டை நினைவுகூரும் விதமாக ‘வன்னி வீதியை’ இங்கே உருவாக்கியிருக்கிறார். ரொறொன்ரோ மாநகரசபை உறுப்பினர் நீதன் சண் சொல்கிறார், “கனடாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்வது என்றால், அதன் பொருள் பழங்குடியினருக்கு நன்றி கூறுவதுதான். நாங்கள் ‘கனடா’ என்ற பெயரை அவர்களிடமிருந்து திருடிக் கொண்டு அவர்களைத் துரத்திவிட்டோம்.’’ தமிழ்க் கல்விக்காக இரண்டு மில்லியன் டொலர்கள் ரொறொன்ரோ பல்கலைக் கழகத்துக்கு நன்கொடை வழங்கிய வள்ளல் ரவி குகதாசன், “தமிழைக் காப்பாற்றினால் மட்டும் போதாது; பழங்குடியினரின் அழிந்துபோகும் மொழிகளையும் மீட்க வேண்டும்” என்கிறார். எத்தனை உயர்வான சிந்தனை.
கனடா பிறந்ததினக் கொண்டாட்டத்தில் என்னைத் திகைக்கவைத்தது, பரதநாட்டியக் கலைஞர் நிரோதினி பரராஜசிங்கம் வழங்கிய நாட்டிய நிகழ்ச்சி. 1,175 கலைஞர்கள் ஒன்றுகூடித் திறந்தவெளியில் பரதநாட்டியக் கலை நிகழ்ச்சி நடத்தினார்கள். வட அமெரிக்காவில் முதன்முறையாக நிகழ்த்தப்பட்ட சாதனை என்று பத்திரிகைகள் இதை வர்ணித்தன. கனடாவில் வாழும் 37 மில்லியன் மக்களில் ஒருவருக்குக்கூட கனடாவின் 150-வது பிறந்தநாளைப் பரத நிகழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. அவரிடமே கேட்டேன். “முன்னெப்போதும் யாருமே செய்திராத ஒரு புதுமையான நாட்டிய நிகழ்ச்சியை, பார்ப்பவர் மனதில் என்றென்றும் நிற்கக்கூடிய விதமாக, நடத்த வேண்டும் என்பதுதான் திட்டம். கனடாவில் 40 நடன ஆசிரியைகள் பரதம் கற்றுக் கொடுக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் இணைத்துச் செயல்பட்டதால், இதைச் சிறப்பாக உருவாக்க முடிந்தது” என்றார்.

நிரோதினி எதிர்கொண்ட பிரச்னைகள் பல. 1,175 நடனமணிகளை ஒன்றிணைப்பது சாதாரண காரியம் அல்ல. அதுவும் கனடியத் தேசியக்கொடியை நடன அசைவுகள் மூலம் திறந்தவெளியில் உருவாக்கியபோது, சபையினர் அடைந்த அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் சொல்லவே முடியாது. ஒருவித ஒத்திகையும் பார்க்காமல் முதல் தடவையாக முன்பின் சந்தித்திருக்காத 1,175 பரதக் கலைஞர்கள் இதை நிகழ்த்திக் காட்டியது ஒரு சாதனைதான். “நீங்கள் தொடர்ந்து பல வருடங்களாகப் புதுமையான நாட்டிய நிகழ்ச்சிகள் மூலம் நிதி சேர்த்து, ஈழப்போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பிவருவது தெரிந்ததுதான். ‘பரத மைல்’ எனப் பெயர் சூட்டப்பட்ட இந்த நிகழ்ச்சி மூலம் ஏதாவது பயனுள்ள காரியம் செய்ய முடிந்ததா?”
“கனடியப் பொது மருத்துவமனைக்கு டயாலிசிஸ் மெஷின் வாங்குவதற்கு 50,000 டொலர்கள் நிதி திரட்டி வழங்கினோம். கனடாவின் பிறந்தநாள் அன்று இதைச் செய்து முடித்தது மிகப்பெரிய மனநிறைவை அளிக்கிறது.”
பெரும்பாலும் அகதிகளாக இங்கு வந்த நாங்கள், இன்று கனடாவின் 150-வது பிறந்தநாள் சமயத்தில் மேசையில் சமமான இடம் பிடித்துவிட்டோம். இது திருப்பிக் கொடுக்கும் காலம். கனடியத் தேசிய கீதம் ரொறொன்ரோ சிம்பனி இசைக்குழுவினரால் 12 மொழிகளில் பாடப்பட்டிருக்கிறது. அதிலே தமிழும் ஒன்று. தமிழ் இலக்கியத் தோட்டம் வருடாவருடம் வழங்கும் விருதுகள், முக்கியமாக மாணவர் புலமைப் பரிசில் பற்றி நாடாளுமன்றத்தில் பாராட்டப்படுகிறது. பியரி ரூடோ, பிரையன் மல்ரோனி, கரி ஆனந்தசங்கரி, நீதன் சண், லோகன் கணபதி இவர்களால் ஆனதுதான் கனடா. இளவயது மருத்துவ ஆய்வாளர் அபிக்குமரன், 65-க்கு மேலாக கின்னஸ் சாதனைகள் படைத்த சுரேஷ் ஜோக்கிம் அருளானந்தம், கனடாவின் முதல் தமிழ்ப் பெண் நீதிபதி தெய்வா மோகன் – இவர்களால் ஆனதுதான் கனடா. ரவி குகதாசன், செந்தில் முருகன், நிரோதினி பரராஜசிங்கம், எஸ்.திருச்செல்வம் – இவர்களாலும் ஆனதுதான் இந்த நாடு. கனடா எங்களின் பலம். நாங்கள் கனடாவின் பலம். இதனால்தான் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, “கனடா போன்ற நாடுகள் இன்னும் பல உலகுக்குத் தேவை” என்றார்.
பன்மைக் கலாசார மேன்மையை முன்னேற்றச் சொல்லி, கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்திலிருந்து கடிதம் வருகிறது. அதே சமயம், சிறுமி ஸ்ருதி சொன்னதையும் நினைவில் இருத்துவோம்; முன்னேற்றுவோம்; ஆனால், நாங்கள் நாங்களாகவே இருப்போம். ஒரு நாட்டைத் துறந்து இன்னொரு நாட்டுக்கு வந்திருக்கிறோம். நாடுதான் மாறியது.