
படிநிலை :1
ஒரே நேரத்தில்
தன் மூன்று கைகளையும் சுழற்றியபடி
புதிது புதிதான திசைகளை
அழைத்துக்கொண்டிருக்கிறது
மின்னாலைக் காற்றாடிகள்
படிநிலை: 2
அதிலொரு சோம்பேறி
தன் கைகளை முக்கால்வாசியோடு மட்டும்
நிறுத்திக்கொண்டு
மேலும் இடைஞ்சலாக இருப்பதாய்
தன் மூன்றாம் கையை தனியே கழற்றியெறிந்தது
படிநிலை: 3
அப்போது மற்ற முகமற்ற காற்றாடிகள்
முதன்முதலாய்
கிண்டல்செய்து சிரிப்பதற்கு
வாய் எங்கிருக்கிறதென
தேடிக்கொண்டிருந்தன
படிநிலை: 4
சோம்பேறியோ
நாள்போக்கில்
மனிதன் ஒருவன் கைவீசி நடப்பதைப்போல
தன்னிரு றெக்கைகளை
அரைவட்ட அளவுக்குப் பாதியாக
சுழற்றிப்பார்க்க
தன்னையறியாமல் வேலியை பிய்த்தெறிந்து நடக்கத்தொடங்கியது
இதில் தர்மசங்கடம் என்னவெனில்
இதுவரை புதிது புதிதாக திசைகளில் சு(ழ)ற்றிப் பழகிய காற்றாடி
தனது முதலடியை எந்த திசையில் வைத்தது தெரியுமா?