Published:Updated:

மே-21, ஸ்ரீபெரும்புதூரில்...

மே-21, ஸ்ரீபெரும்புதூரில்...
மே-21, ஸ்ரீபெரும்புதூரில்...

ராஜீவ் காந்தி

மே-21, ஸ்ரீபெரும்புதூரில்...

இரவு மணி 8.30...

சென்னை விமானநிலையத்துக்கு வந்து இறங்கினார் ராஜீவ் காந்தி. அங்கு நிருபர்களுக்கு அரை மணி நேரம் பேட்டி தந்தார். பின்னர், ஸ்ரீபெரும்புதூரில் நடக்கவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குப் புறப்பட்டார்.

ராஜீவின் கார் கிண்டியில் நேரு சிலை இருக்கும் கத்திப்பாரா அருகே காங்கிரஸ் தொண்டர்களால் வழிமறிக்கப்பட்டது. காரை விட்டு இறங்கி அவர்கள் தந்த மாலைகளை, கைத்தறி ஆடைகளை அன்போடு வாங்கிக்கொண்டார். அதன் பிறகு எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் செல்லும் வழியில் நந்தம்பாக்கத்தில் தொண்டர்கள் மீண்டும் வழிமறிக்க, அங்கு இருந்த மைக்கில் “தமிழக மக்கள் என்னை இப்படி அன்போடு வரவேற்பதற்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எல்லாம் மத்தியிலும் மாநிலத்திலும் நல்ல அரசு அமைய கைச் சின்னத்திலும், இரட்டை இலைச் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

வழிநெடுக காங்கிரஸ் கட்சியே எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் கூட்டம் ராஜீவ் காந்தியை வரவேற்றது. போரூரில் கூட்டம். திரளான மக்கள் நடுவே ராஜீவ் மேடையேறினார். எல்லோருக்கும் நாற்காலி போடப்பட்டது. வாழப்பாடி காலை நீட்டியபடி ‘ரிலாக்ஸ்டாக’ உட்கார்ந்திருந்தார். அப்போது ஒரு பத்திரிகை நிருபரே, ‘‘ராஜீவ் முன்பு இப்படி ரிலாக்ஸ்டாக உட்கார்ந்திருக்கும் வாழப்பாடி, ஜெயலலிதா முன்னாடி உட்காருவாரா?’’ என்று கமென்ட் அடித்தார்.

மே-21, ஸ்ரீபெரும்புதூரில்...

ராஜீவ் வழக்கப்படி மேடையின் எல்லா பக்கமும் ஓடிச் சென்று மக்களுக்கு மகிழ்ச்சியுடன் கையசைத்தார். மக்கள் “ராஜீவ் காந்தி வாழ்க” என்று கூக்குரலிட்டனர். அதன்பிறகு, தனக்கு அணிவித்த மாலை, துண்டுகளை எல்லாம் ராஜீவ் மக்களை நோக்கி வீசினார். ராஜீவ் காந்தியின் காரில் இருந்த கைத்தறிப் பட்டாடைகளை ஜெயந்தி நடராஜன் எடுத்துவந்து ராஜீவ் காந்தியிடம் தந்தார். அவற்றையும் ராஜீவ் காந்தி பொதுமக்களிடம் வீசினார்.

அதன் பிறகு ராஜீவ் பேச, தா. பாண்டியன் உணர்ச்சிபூர்வமாக மொழிபெயர்த்தார். “நிலையான ஆட்சியைத் தரமுடியாத காரணத்தினால், தேசிய முன்னணி ஆட்சி கவிழ்ந்து மீண்டும் தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் தி.மு.க, தான் செய்த தவறுகளை மறைத்துப் பொய்க் காரணங்களைச் சொல்லிப் பிரச்னையைத் திசை திருப்பித் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறது. தி.மு.க-வை மக்கள் எந்த அளவு புறக்கணிக்கிறார்கள் என்பது அந்த ஆட்சி கலைக்கப்பட்டபோது மக்கள் தந்த ஆதரவே சாட்சி. தேச விரோதக் கட்சியான தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது” என்றார் ராஜீவ்.

இந்தக்கூட்டத்தில் ராஜீவுக்கு வில்லிவாக்கம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜி.காளன் நீண்ட மாலை, மலர்க்கிரீடம் சூட்டினார். ராஜீவ் அதை மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, போட்டோகிராபர்களுக்கு போஸ் தந்தார். கூட்டம் முடிந்து காங்கிரஸ் பிரமுகர் போர்த்திய விலையுயர்ந்த பட்டாடையைக் கீழே இருந்த வயதான ஒரு மூதாட்டிக்கு ஆதரவோடு போர்த்தினார். அந்த மூதாட்டி உணர்ச்சிப்பெருக்கோடு ராஜீவ் காந்தியைக் கைகூப்பி வணங்கிவிட்டு, அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு விட்டார். ராஜீவும் அவரை ஆதரவாகக் கட்டிப்பிடித்தார்.

பூந்தமல்லியிலும் கூட்டம். மரகதம் சந்திரசேகர், தா.பாண்டியன், பூந்தமல்லி சட்டமன்ற வேட்பாளர் சுதர்சனம் எல்லோரையும் அறிமுகப்படுத்தி, காங்கிரஸுக்கு வாக்களிக்கக் கேட்டுப் பேசினார். பூந்தமல்லி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் ராஜீவ் காந்திக்கு எம்.ஜி.ஆர். படம் ஒன்றை வழங்கினார். ராஜீவ் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். ஒரு சிறுவன் ராஜீவ் காந்தியிடம் ஏதோ மனுவைத் தர மேடையில் ஏறினான். ராஜீவ் காந்தி அந்தச் சிறுவனை கவனிக்கவில்லை. அவர் தனக்கு அளித்த மாலைகளைப் பெற்றுக்கொள்வதில் மும்முரமாக இருந்தார். சிறிது நேரம் பார்த்த அந்தச் சிறுவன், ராஜீவ் கையைப் பிடித்து இழுத்தான். திரும்பிப் பார்த்த ராஜீவ், சிரித்த முகத்துடன் அந்தச் சிறுவனின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டிக் கொடுத்து, அவனிடம் இருந்த மனுவை வாங்கிப் பிரித்துப் பார்த்தார். பிறகு, அதைத் தனது பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டார்.

மே-21, ஸ்ரீபெரும்புதூரில்...

ஸ்ரீபெரும்புதூரை நோக்கிப் புறப்பட்டது கார்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக மேடை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜீவின் வருகையை மக்களுக்கு அறிவிக்க வாண வேடிக்கை நடத்தினர்.

வெடிச்சத்தம் கேட்டதும், ராஜீவ் வந்துவிட்டார் என்பதை அறிந்த மக்கள் ஊரின் பல இடங்களிலிருந்து ஓடிவந்தனர். ராஜீவ், மெயின் ரோட்டில் இருந்த இந்திரா காந்தி சிலையைப் பார்த்ததும் இறங்கினார். அன்னையின் சிலைக்கு மாலை அணிவித்துக் கைகூப்பி வணங்கினார். மூப்பனார் மெயின் ரோட்டில் வழக்கம்போல் ஒரு ஓரமாக நின்றிருந்தார். வாழப்பாடி மேடையைக் கவனிக்க ஓடினார். காரிலிருந்து இறங்கி சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்ட பாதையில் நடத்தபடி வந்த ராஜீவ், சவுக்குக் கட்டை தடுப்பு ஓரத்தில் மாலையுடன் காத்திருந்த தொண்டர்களிடமிருந்து மாலைகளை வாங்கியபடி முன்னேறினார். கூடவே அவரது பாதுகாப்பு அதிகாரி குப்தா, செங்கை அண்ணா (மேற்கு) எஸ்.பி-யான முகமது இக்பால் இருவரும் வந்தனர். ராஜீவை எதிர்நோக்கியபடி நடுத்தர வயதுடைய ஒரு ஆண், ஒரு பெண் இருவரும் பூக்கூடை டைப்பில் இருந்த ‘பொக்கே’யுடன் நின்றிருந்தனர். ராஜீவ் அந்தப் பூக்கூடை பொக்கேயை வாங்கக் கை நீட்டுகிறார்...

திடீரென பயங்கரமாக ஒரு வெடிச் சத்தம்! மீண்டும் வாணவேடிக்கை என நினைத்து ஒரு விநாடி கழித்து திரும்பிப் பார்த்தபோது, ராஜீவ் நின்ற இடத்தில் தீ ஜுவாலை! மணலும் சுழன்று அடித்தது. அதன் நடுவே பார்த்தபோது - ஏராளமான பேர் ஒருபுறம் சாய்வதும், பலர் இன்னொரு புறம் ஓடுவதும் நிருபர்கள் கண்களுக்குத் தெரிந்தன. சில விநாடிகளில் அந்த ஜுவாலை அடங்கியது. எங்கு பார்த்தாலும் அழுகுரல்...

அப்போது மணி 10:10


“ராஜீவ் எங்கே..?” என்று மூப்பனார், வாழப்பாடி, போலீஸ் அதிகாரிகள் தேடுகிறார்கள். சிதறிய நிலையில் பல உடல்கள்... உயிர் ஊசலாடியபடி ஹீனஸ்வரத்தில் அங்கும் இங்குமாகக் குரல்கள்... எல்லோரும் அழுதபடி ராஜீவைத் தேடுகிறார்கள். நிருபர்களும் தேடினார்கள்.

சிதைந்த உடல்களின் நடுவே ரோஸ் நிறக் கால்கள்... அந்தக் கால்களில் விசேஷமான பவர் ஷூ... அந்த ஷூவின் சொந்தக்காரர் ராஜீவ் காந்தி. பயந்தபடியே அந்தக் கால்களுக்கு அருகே இருந்த சிதைந்த தலையை மெள்ள மூப்பனார் திருப்பிப் பார்க்கிறார்... “ஐயையோ... ராஜீவ்...” என்று கதற ஆரம்பிக்கிறார். ஜெயந்தி நடராஜனும் பதறியவாறு உறுதிப்படுத்தினார்.

மே-21, ஸ்ரீபெரும்புதூரில்...

மூப்பனாரும், வாழப்பாடியும் கட்டிப் பிடித்து அழுகிறார்கள்.

தொண்டர்கள் போலீஸை, “பாவிங்களா... கோட்டை விட்டுட்டீங்களே! தமிழ்நாட்டு மானம் போச்சே... அவமானமாச்சே... எங்க மாலைகளை எல்லாம்கூடப் பரிசோதனை பண்ணிட்டு கோட்டை விட்டுட்டீங்களே...” என்றபடி தாக்க ஆரம்பித்ததும்... வேனையும், ஜீப்பையும் எடுத்துக்கொண்டு போலீஸ் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தது. நின்றவர்கள் ஐ.ஜி.ராகவனும், இன்னொரு போலீஸ் அதிகாரியும் மட்டும்தான். ஐ.ஜி. ராகவனை இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் தியாகராஜன் என்பவர், “என் தலைவனைக் கொன்னுப்புட்டீங்களே” என்று அடிக்க ஆரம்பிக்க, தியாகராஜனை இழுத்துப் பிடித்து மூப்பனார் தடுத்தார்.

‘இன்னும் எங்காவது குண்டு இருக்குமோ’ என்று பலர் பயந்தபடி நடந்தனர். அரை மணி நேரம் எந்த நடவடிக்கையும் இன்றி அந்த இடமே ஸ்தம்பித்து நின்றது. அதன் பிறகு மூப்பனார் வேட்டியை மடித்துக்கொண்டு ராஜீவ் அருகே போனபோது, மூப்பனார் ஆதரவாளர் ஒருவர் “தலைவரே, போகாதீங்க... இன்னும் குண்டு ஏதாவது இருக்கப்போவுது” என்று இழுக்க, அவரை மூப்பனார் தள்ளிவிட்டு “தலைவனே போய்ட்டப்போ நான் இருந்து என்ன பண்ணப்போறேன்” என்று குமுறியவாறு சொல்லிவிட்டு, தனது மேல்துண்டால் ராஜீவ் உடலைப் போர்த்தினார்.

ஐ.ஜி. ராகவனை அழைத்தார்... “என்ன செய்ய இருக்கிறீர்கள்? பாடியை இங்கு ரொம்ப நேரம் வைத்துக்கொள்ள முடியாது” என்று பரபரப்புடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் மூப்பனார்.

தீயணைப்பு வண்டியிலிருந்து ஒரு ஸ்ட்ரெச்சர் எடுத்து வரப்பட்டது. ஐ.ஜி. ராகவன், வாழப்பாடி, மூப்பனார் மூவரும், குடல் வெளியே சரிந்து தலை நசுங்கிச் சிதிலமான ராஜீவின் உடலை வாரி ஸ்ட்ரெச்சரில் போட்டு அதே துண்டால் மூடினார்கள். “போலீஸ்... போலீஸ்” என்று ஐ.ஜி. கத்திய பிறகும் யாரும் வரவில்லை. அதன் பிறகு, ராகவனே ஓடி ஒரு போலீஸ் வேனை அழைத்து வந்தார். ஸ்ட்ரெச்சரை மூப்பனாரும் வாழப்பாடியும் தூக்கிவர, வேனில் ஏற்றினார்கள். வேனில் மூப்பனாரும், வாழப்பாடியும் கூடவே ஏறினார்கள். வேனை சரியாக மூட முடியாமல் வேனின் கதவை ஒரு கையிலும், ராஜீவ் உடலை ஒரு கையிலும் பிடித்தபடி அழுதுகொண்டு மூப்பனார் வந்தார்.

வேன், சென்னைப் பொது மருத்துவமனைக்கு வந்தது. “நர்ஸ்... டாக்டர்...” என்று சத்தம் கேட்டதும், ‘என்ன ஏது’ என்று தெரியாமல் வீல் சேர் எடுத்து வந்தார்கள். “யோவ்... என் தலைவன் பலியாயிட்டாரு. அவரை அழைச்சுவர வீல் சேரா எடுத்து வர்றீங்க” என்று அந்தச் சக்கர நாற்காலியை ஒரு தொண்டர் தூக்கி வீசினார். ஏதோ கேட்ட ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை வாழப்பாடியின் உதவியாளர் நாச்சியப்பன் அடித்துத் துவைத்துவிட்டார். பாவம், அங்கிருந்த அதிகாரிகளுக்கு எதுவும் தெரியவில்லை. நிலைமை தெரிந்ததும் சுதாரித்துக்கொண்டனர் மருத்துவமனை அதிகாரிகள். ராஜீவ் உடலை ஓர் அறையில் வைத்துப் பத்திரப்படுத்தினர்.

வாழப்பாடியை அழைத்த மூப்பனார், கவர்னருக்குத் தகவல் தெரிவிக்கச் சொன்னார். மருத்துவமனை டெலிபோன் எக்ஸ்சேஞ்சுக்குப் போன வாழப்பாடி, கவர்னருடன் தொடர்புகொண்டார். முதலில் லைன் கிடைத்து, அதன் பிறகு கட் ஆனது. இரண்டாவது முறை முயற்சி செய்தபோது, கவர்னர் லைனில் கிடைத்துப் பேச ஆரம்பித்ததும், வாழப்பாடி ஹெட்போனை மூப்பனாரிடம் தந்தார். கவர்னரிடம் விஷயத்தை ஒரு வரியில் சொல்லி ‘‘You come here immediately’’ என்றார் மூப்பனார்.

மே-21, ஸ்ரீபெரும்புதூரில்...

“இதுபோன்று சிதைந்த உடலைத் தைப்பதில் எக்ஸ்பர்ட்டான டாக்டர் முகப்பேரில் இருக்கிறார். அவர் வர வேண்டும்” என்றார்கள். எனவே, உடலைத் தைக்கும் ஐடியா கைவிடப்பட்டது.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. விடியற்காலை 4 மணி. அதற்குள் சோனியா தனது மகள் பிரியங்காவுடன் வருகிறார் என்ற தகவல் வந்தது. சோனியா பொது மருத்துவமனைக்கு வருவதை மூப்பனார் விரும்பவில்லை. ஏற்கெனவே ராஜீவ் தங்குவதாக இருந்த விமான நிலைய லவுஞ்ச் அறைக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
 
சோனியாவால் நம்பவே முடியவில்லை. அழுதபடியே வந்தார். மகள் பிரியங்காதான் அந்த நிலைமையிலும் அவரை ஆறுதலாக அணைத்தபடி வந்தார். ராஜீவ் உடல் இருந்த அறைக்கு ஓடி வந்தார். சோனியாவால் உடலைத் திறந்து பார்க்க முடியவில்லை. கை, கால்கள் நடுங்கியவாறு இருந்தார். ஒருவழியாக பயந்தபடி திறந்து பார்த்தார். துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதபடி, ஒரு மூலையில் சரிந்து உட்கார்ந்துவிட்டார். பிரியங்கா மட்டும் அந்த உடலைச் சிறிது நேரம் கண் இமைக்காமல் பார்த்துவிட்டு அவரே மூடினார்.

உடலை இங்கேயே பதப்படுத்தி அனுப்புவது பற்றிய பேச்சு எழுந்தது. ஆனால், ஆந்திர முதல்வர் ஜனார்த்தன ரெட்டியும், ராஜீவின் ஆலோசகர்களில் ஒருவரான சுமன் துபேயும் ‘‘அதற்கு டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது’’ என்றார்கள். ராஜீவ் உடலை எடுத்துக்கொண்டுபோய் ராணுவ விமானத்தில் ஏற்றினார்கள். இரவு சிரித்த முகத்துடன் ராஜீவ் சென்னைக்கு வந்தார். ஆனால், விடியற்காலை சிதைந்த அவர் உடல்தான் டெல்லிக்குத் திரும்பியது.

இதற்கு இரண்டு நாட்களுக்கு முன், சென்னை விமானநிலையத்தில் வெடிகுண்டு ஒன்று வெடிப்பதற்கு முன் கண்டெடுக்கப்பட்டதாகச் செய்தி பரவியது. பிறகு, ‘அது வெடிகுண்டு அல்ல... ஏதோ ஒரு பொருள்தான்’ என்று விமானநிலைய அதிகாரிகள் விளக்கம் தந்தனர். சம்பவம் நடந்த அன்றுகூட இதேபோல ஒரு வதந்தி பரவியது. ஒரு முக்கிய போலீஸ் அதிகாரி, “இப்படியொரு வதந்தியைக் கொலையாளிகள் பரப்பிவிட்டு போலீஸ் அதிகாரிகளின் கவனம் முழுக்க விமானநிலையத்திலேயே இருப்பதுபோல் செய்துவிட்டனர். ‘ராஜீவ் திரும்ப ஏர்போர்ட்டுக்கு வந்து கெஸ்ட் ஹவுஸில்தானே தங்கப்போகிறார்’ என்கிற நினைப்பில் சில உயர் போலீஸ் அதிகாரிகளும், செக்யூரிட்டி ஆபீஸர்களும் விமானநிலையத்திலேயே இருந்து விட்டனர்” என்றார். 

மே-21, ஸ்ரீபெரும்புதூரில்...

மறுநாள்...

ஸ்ரீராமானுஜர் அவதரித்த வைணவத் தலமான ஸ்ரீபெரும்புதூர் படுமெளனமாய்க் காட்சியளித்தது. சம்பவம் நடந்த மைதானத்துக்கு மேலே வானத்தில் கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. ஆங்காங்கே மண்ணோடு கலந்து சதைத் துண்டுகள். மைதானத்தைச் சுற்றி வளைத்து வியூகம் அமைத்து நின்றனர் துப்பாக்கி ஏந்திய போலீஸார். வியூகத்துக்கு வெளியே வெளிநாட்டுப் பத்திரிகை நிருபர்கள், வெளி மாநிலங்களிலிருந்து வந்திருந்த நிருபர்கள், புகைப்படக்காரர்கள் போலீஸின் அனுமதியை எதிர்பார்த்துக் காத்து நின்றனர்.

மைதானத்தில் மேடையருகே, தடய அறிவியல் துறை இயக்குநர் சந்திரசேகரன் சோதனையிட்டுக் கொண்டிருந்தார். ‘அவரிடம் ஒரு முக்கியமான தகவல் சொல்ல வேண்டும்’ என்று சொல்லியபடி நாமும் நமது புகைப்படக்காரரும் வியூகத்தின் உள்ளே நுழைந்தோம். நம்மைப் பின்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் கும்பல் ஒன்று விரட்டிக்கொண்டு வர... நல்லவேளையாக, தடய அறிவியல் இயக்குநர் நம்மைப் பார்த்துவிட்டார். பின்னால் வந்த போலீஸ்காரர்களை நிற்கச் சொல்லிவிட்டு, நம்மை அருகில் அழைத்தார்.

மேடையருகே தரையில் சதைத் துண்டுகள், எலும்புகள், கொத்துக்கொத்தாக சதையுடன் கூடிய தலைமுடிகள் எல்லாம் இறைந்து கிடந்தன. அதிகாரி ஒருவர் தரையில் குனிந்து பிளாஸ்டிக் பொருள் ஒன்றைக் கண்டெடுத்தார். “இது குண்டு வெடிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருள்” என்றார். தொடர்ந்து அவரே, “காலையில் இரண்டு பேட்டரி சார்ஜர்களை இதே இடத்தில் கண்டெடுத்தோம்!” என்றார். “அப்படியென்றால், இரண்டு வெடிகுண்டுகள் ஒரே சமயத்தில் வெடித்திருக்க வேண்டும்” என்று சொல்லியபடி, அங்கிருந்த பொருட்களை எல்லாம் ஒன்றுவிடாமல் எடுத்துப் பத்திரப்படுத்த உத்தரவிட்டுக் கொண்டிருந்தார் இயக்குநர்.

பிறகு, அவர் மேடைக்குப் போனார். அங்கே ரத்தம் தோய்ந்த சில பொருட்களை வைத்திருந்தனர். அவற்றைப் பார்வையிட்டுவிட்டுக் கீழே இறங்கியவர், சிவப்புக் கம்பள விரிப்பைத் தூக்கிவிட்டுப் பார்த்தார். “இந்த இடத்துல ரிமோட் கன்ட்ரோல் வைத்து வெடி வெடித்திருக்கலாமோ... கண்ணி வெடி வைத்து வெடித்திருக்கலாமோ என்கிற யூகங்கள் தவறு. தரையில் எந்தவிதச் சேதமும் கிடையாது. தரைக்கு மேலே வெடி வெடித்துள்ளது” என்று சொன்னார். அருகிலிருந்த இன்னொரு அதிகாரி, “யெஸ் சார்... யாரோ ஒரு லேடி இடுப்பு பெல்ட்டுல வெடிமருந்துகளை வெச்சுக் கட்டிக்கிட்டு வந்திருக்கா. ராஜீவ் காந்தி நல்ல உயரம்கிறதால அவருக்கு யார் மாலை போட வந்தாலும் குனிஞ்சுதான் மரியாதையை ஏற்றுக்கொள்வார். அதேமாதிரி ராஜீவ் குனிஞ்ச உடனே அந்த லேடியும் வணங்கற மாதிரி குனிஞ்சிருக்கா. அந்த அழுத்தத்துல அவ ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி உடலோட இணைத்திருந்த வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியிருக்கின்றன. இதுதான் நடந்திருக்கு” என்றார்.

மே-21, ஸ்ரீபெரும்புதூரில்...

டைரக்டர் நம்மிடம், “இந்தச் சம்பவத்துக்குக் காரணம் ஒரு லேடிதான். அவள் அணிந்திருந்த பிரேசியர், பாவாடை நாடா, இடுப்பில் அணிந்த பெல்ட் எல்லாத்தையும் நாங்க கைப்பற்றியிருக்கோம். இதுதான் இந்த நிமிஷம் வரை எங்களுக்குக் கிடைச்ச தகவல்” என்று சொல்லிவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் நம் கழுத்தைப் பிடித்துத்தள்ளாத குறையாக மைதானத்துக்கு வெளியே கொண்டு வந்துவிட்டனர். தொடர்ந்து நாம் மேடையருகே நம் பேனா(?) விழுந்துவிட்டதாகச் சொல்லி, மீண்டும் மைதானத்துக்குள் பிரவேசித்தோம். பேனாவைத் தேடுவது போல் கான்ஸ்டபிள்கள் சிலரிடம் பேசினோம்.

அப்போது ஒரு கான்ஸ்டபிள் நம்மிடம், “இருபத்தைந்திலிருந்து முப்பது வயசுக்குள் இருக்கக்கூடிய ஒரு பொம்பளையோட தலை தனியா கெடந்துச்சு. கூடவே, டோப்பா முடியும் கிடந்துச்சு. அந்தப் பொம்பளையோட தலைக்குப் பக்கத்துல ஒரு குழந்தை செத்துக் கிடந்துச்சு. அந்தக் குழந்தையோட தாயார் உள்ளூர் பொம்பளைதான். வெடி வெடிச்சப்ப ஏதோ காரணத்துக்காக அந்தத் தாயார் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துட்டாங்க. திரும்பி வந்து பார்க்கறப்போ அவரோட குழந்தை செத்துக் கிடந்தது. கதறி அழுத அந்தப் பொம்பளைக்கு நான் ஆறுதல் சொன்னேன். அருகில் கிடந்த அந்தப் பெண்ணின் தலையைப் பார்த்து, ‘அட! இந்தப் பொம்பளையா... தஞ்சாவூர்லேருந்து வந்தேன்னு சொல்லிச்சே. போலீஸ்காரங்க அந்த அம்மாவை மேடைகிட்ட விடாம தடுத்தப்போ, ‘இல்ல... போய்த்தான் ஆவேன்’னு திமிறிக்கிட்டுப் போனதைப் பார்த்தேனே’ன்னு அழுதிச்சு. மேற்கொண்டு அந்தப் பெண்ணோட தலையைப்பத்தி விவரம் சொல்லத் தெரியலை. அந்தப் பெண்ணின் தலை, கை கால்கள் பல நூறு அடிகளில் சிதறிப் போயிருந்தது. அவற்றையெல்லாம் திரட்டி ஒன்றுசேர்த்து காஞ்சிபுரம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் வந்து, “போடா... பத்திரிகைக்காரன்கிட்டே என்னடா பேச்சு?” என்று எரிந்து விழ... மெள்ள அங்கிருந்து நகர்ந்து மைதானத்துக்கு வெளியே வந்தோம்.

- ஆர்.பாலகிருஷ்ணன், ஜாசன்
படங்கள்: மேப்ஸ்

மே-21, ஸ்ரீபெரும்புதூரில்...

நமது புகைப்படக்காரர் கூறுவது என்ன?

நடந்த கொடூரத்தை புகைப்படம் எடுத்த எம்.ஏ.பார்த்தசாரதி (‘மேப்ஸ்’) கூறுகிறார்...

“அருகே உள்ளது - வெடிச்சத்தம் கேட்டவுடனே நான் எடுத்த முதல் படம். சத்தத்தைத் தொடர்ந்து தரையிலிருந்த கார்ப்பெட் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து, செக்யூரிட்டி அதிகாரிகள் ஓடிவந்து அதைத்தான் கால்களால் மிதித்து அணைத்தார்கள். தொண்டர்களும் தலைவர்களும்கூட, “எங்கே ராஜீவ்?” என்று கதறியபடி அங்கும் இங்கும் அலைந்தார்களே தவிர, அந்த தீச்சுடருக்கு அருகில் இருப்பதுதான் ராஜீவ் உடல் என்பதையே மிகத் தாமதமாகத்தான் கண்டுபிடித்தார்கள்.

வேனில் இருந்து இறங்கும்போதே வாணவேடிக்கை, பட்டாசு சத்தம் கேட்டது... ‘பரவாயில்லை, நல்ல வரவேற்பு’ என்ற ஆச்சர்யத்துடன் இறங்கிய எனக்கு, அடுத்து மிகப் பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டது. கூட்டமாக இருந்த இடம் திடீரென விநாடியில் காலியானது. அதன்பிறகு பார்த்தால் பலர் தரையில் விழுந்துகிடக்கிறார்கள். ‘அய்யோ... அம்மா’ என்ற கூக்குரல் கேட்டது. பக்கத்தில் இருந்தவர்கள், ‘போச்சு... எல்லாம் போச்சு...’ என்று கத்திக்கொண்டே ஓடினார்கள்.

மே-21, ஸ்ரீபெரும்புதூரில்...

உடனே, அந்த இடத்துக்கு ஓடிப்போய்ப் பார்த்தால் ஒன்றுமே புரியவில்லை. என்ன நடந்தது என்று யோசிக்கக்கூட முடியவில்லை. ஆனால், ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. போலீஸ் அதிகாரி மாத்தூர் ‘Where is Rajiv... Where is Rajiv..?’ என்று பதற்றத்துடன் தேடினார். அங்கு இருந்த அனைவருக்குமே கூட்டத்தில் ‘ராஜீவ் எங்காவது கலந்துவிட்டாரோ’ என்ற எண்ணமே ஏற்பட்டது.

‘ஷூ’வை வைத்துத்தான் நானும் ராஜீவ் என்று ஊகித்தேன். உடல் நடுங்கியது. இந்த முக்கியமான கோரக் காட்சியைப் படம் எடுத்தபோது என் நெஞ்சம் கனத்தது... கூடவே, மீண்டும் குண்டு வெடிக்குமோ என்ற பயம்... இருந்தாலும், துணிச்சலுடன் ‘நடப்பது நடக்கட்டும்... எதையும் விட்டுவிடக்கூடாது’ என்ற எண்ணத்துடன் ஓடி ஓடி எல்லாக் கோணங்களிலும் படம் எடுத்தேன். எல்லாம் முடிந்து திரும்பி வரும்போதுகூட அவர் இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. சற்று நேரத்துக்குமுன் மிக ஜாலியான மூடில் சிரிப்பை உதிர்த்த ராஜீவ் காந்தியின் அழகிய முகம், அடிக்கடி ஃப்ளாஷ் ஆகி என் மனதில் இனம்புரியாத சோகம் சூழ்ந்துகொண்டது.” 

அடுத்த கட்டுரைக்கு