Published:Updated:

“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்!” - வா.மு.கோமு

“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்!” - வா.மு.கோமு
பிரீமியம் ஸ்டோரி
“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்!” - வா.மு.கோமு

“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்!” - வா.மு.கோமு

“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்!” - வா.மு.கோமு

“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்!” - வா.மு.கோமு

Published:Updated:
“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்!” - வா.மு.கோமு
பிரீமியம் ஸ்டோரி
“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்!” - வா.மு.கோமு

“மொழிபெயர்ப்பு என்பது சுயமாக எழுதுவதைவிடவும் ஒருவகையில் கடினமானது. அதி ஜாக்கிரதையாக, இம்மி பிசகாதத் துல்லியத்துடன் செய்யப்பட வேண்டியது. மொழிபெயர்ப்பாளர், கதைசொல்லியாக உருமாறினாலன்றி மூலத்திற்கு நியாயம் செய்ய முடியாது. குறிப்பிட்ட அரசியல்-கலாசார சூழல், மனநிலை, மொழி இவற்றின் புரிதல் அவருக்கு எந்த அளவுக்குச் சாத்தியமாகிறதோ, அந்த அளவுக்குத்தான் மொழிபெயர்ப்பின் சிறப்பு இருக்கும்” -அமரந்தா.  

“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்!” - வா.மு.கோமு

தமிழ் நாவல்களிலிருக்கும் போதாமைகளை எப்போதும் மொழிபெயர்ப்பு நாவல்களே பூர்த்திசெய்து வருகின்றன. இப்படியிருக்கத் தமிழ் உரைநடையில் பெரும் மாற்றங்கள் சமீபகாலங்களில் நடந்தேறி வருகின்றன. வித்தியாசமான கதைக்களன்களில் எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர். இலக்கியம் பல வடிவ மாற்றங்களுக்குட்பட்டு வருகிறது. இவையெல்லாம் மொழிபெயர்ப்பு நூல்களின் வருகையால் நடந்தேறியவைதான். பல பதிப்பகங்கள் மொழிபெயர்ப்புப் புத்தகங்களைக் கொண்டுவருவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். சிறந்த மொழிபெயர்ப்பாளர்களும் புதிதாக உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். மொழிபெயர்ப்புகளைத் தேடியெடுத்து வாசிக்கும் வாசிப்பாளர்களும் பெருகியிருக்கிறார்கள். தமிழ் மொழிக்கு இது பட்டாடை உடுத்திய அலங்காரம்தான். இந்தக் கட்டுரையில் எனக்குப் பிடித்த நான்கு மொழிபெயர்ப்பு நாவல்கள் குறித்த எனது பார்வையைப் பதிவுசெய்திருக்கிறேன்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்!” - வா.மு.கோமு

‘என் பெயர் பட்டேல் பை’ -யான் மார்ட்டெல் 

(தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்)

 ‘என் பெயர் பட்டேல் பை’ புக்கர் பரிசு பெற்ற நாவல். பிரெஞ்ச் ஆதிக்கத்துக்கு உட்பட்டு, காலனியாதிக்க நாடாக இருந்துவந்த பாண்டிச்சேரியில் வாழ்ந்த தமிழர் ஒருவர், அங்கு மிருகக்காட்சி சாலை ஒன்றைப் பராமரித்து வருகிறார். அவரது மகன் பிசீன் மோலிடர் படேல். 1954 நவம்பரில் பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்பட்டதான வரலாற்றுத் தகவலுடன் நாவல் தொடங்குகிறது. அது ஒரு பூலோகச் சொர்க்கமாகப் படேலுக்குத் தோன்றுகிறது. எந்த மகாராஜாவின் மகனுக்கும் அப்படி ஒரு பரந்து விரிந்த விளையாடுமிடம் கிடைக்கவில்லை என்பதையும், காலையில் கடிகாரத்திற்குப் பதில் சிங்கத்தின் கர்ஜனையில் துயில் எழும்புவதையும், தொடர்ந்து மைனாக்களின் ஒலியையும், குரங்குகளின் கூச்சலையும் கேட்டுத் தயாராகிப் பள்ளிக்குக் கிளம்புகையில் டாட்டா காட்ட காட்டு எருதுகள், மனிதக் குரங்குகள்...  என்று படேல் சொல்லிச்செல்லும் விதமே நம்மைச் சட்டென நாவலுக்குள் இழுத்துப்போகிறது.

இந்த நாவலை மொழிபெயர்த்தவர் பொன்.சின்னத்தம்பி முருகேசன். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். இந்த நாவலை மொழிபெயர்க்க அவரை எந்தச் சக்தி தூண்டியதோ... அருமை என்று சொல்லிவிட்டுத் தாவுகிறேன். 

“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்!” - வா.மு.கோமு

முதலாக எனக்குப்படுவதெல்லாம் காட்டுயிர்களின் அழிவு பற்றிப் பரவலாக எல்லோரும் நகரத்திலிருந்துகொண்டு பக்கம் பக்கமாகப் பேசுகிறார்கள். போராட்டங்களும்கூட நடைபெறுகின்றன. ஆனால், மிச்சமிருக்கும் உயிர்களைக் காக்க என்னவிதமான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது என்பது நமக்குத் தெரிவதில்லை. ‘காரியம் சீக்கிரம் நடைபெறும், போய் வாருங்கள்...’ என்று அதிகாரிகள் அப்போதைக்கு அனுப்பிவிடுகிறார்கள். பிறகு, அதை மறந்தும் போய்விடுகிறார்கள்.

விலங்கியல் பூங்காக்கள் நமக்கும் விலங்குகளுக்குமிடையே நல்லுறவைத் தொடங்கிவைக்கும் இடமாக உள்ளது. ‘நீ நீ பாட்டுக்கு இரு. நான் நாம்பாட்டுக்கு இருக்கேன்’ என்ற கணக்கும் தெரிய வருகிறது. ‘விலங்கியல் பூங்காக்கள் மக்களுக்கு ஆர்வமளிப்பதில்லை. அவற்றை இழுத்து மூடுங்கள். அவை காடுகளில் இயற்கையாக வாழ்ந்தாலே போதும்’ என்கிறான் பட்டேல் நாவலில். ஆனால், இயற்கையிலாகட்டும், விலங்கியல் பூங்காக்களிலாகட்டும் எங்கும் பேரழிவை ஏற்படுத்தும் ஒரே விலங்கு மனிதன்தான்.

பூங்காவில் அனுமதிச்சீட்டு வழங்கும் இடத்திற்கு அருகில் பட்டேலின் தந்தை, சுவற்றில் கொட்டை எழுத்தில் சிவப்பு வண்ணத்தில் எழுதியிருந்த வாசகம், ‘இந்தப் பூங்காவில் மிகப் பெரிய ஆபத்து விளைவிக்கக்கூடிய விலங்கினை நீங்கள் அறிவீர்களா?’ –அம்புகுறி ஒரு திரையைக் காட்டியது. ஆர்வக்கோளாறு ஆசாமிகள் திரையை விலக்கினால், அங்கு இருந்தது முகம் பார்க்கும் ஆடி!

வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள் தேய்மானம் அடையும்போது மக்கள் புலம்பெயர்கிறார்கள். நமக்கான மகிழ்ச்சியும் வளமும் இங்கில்லை, வேறு எங்காவது இருக்கும் என்கிற எண்ணம் உந்தும்போதும் மக்கள் புலம்பெயர்கின்றனர். பட்டேலின் தந்தையின் மனதில் நவ இந்தியா உடைந்து நொறுங்கிவிட, புலம்பெயர அவர் தீர்மானிக்கும் ஊர் கனடா. அதுவும் கப்பலில். பாண்டிச்சேரி விலங்கியல் பூங்கா மூடப்பட்டுவிட்டது.

விரைவில் தொடங்க இருந்த பூங்காக்கள் விலங்குகளை வாங்கிக்கொள்ள முன்வருகின்றன. சில, வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. சில, கனடா விலங்கியல் பூங்காவிற்குக் கப்பலில் ஏற்றப்பட்டன. கப்பல் கிளம்புகையில் பட்டேல் பரவசமாகிறான். இங்கு பாகம் ஒன்று முடிவுக்கு வருகிறது.

கப்பல் மூழ்கியதிலிருந்து பாகம் இரண்டு ஆரம்பமாகிறது. ஒரு லைஃப் படகில் இருக்கும் பட்டேல், கடலில் தத்தளிக்கும் ரிச்சர்ட் பார்க்கர் என்ற புலியைப் படகில் ஏற்றிக்கொள்கிறான். அதனிடம் ரிச்சர்ட் பார்க்கர் புலம்புகிறான். “நடந்ததை உன்னால் நம்ப முடிகிறதா? இதெல்லாம் கெட்ட கனவாகிப்போகாதா? உண்மை இல்லை என்று ஆகக்கூடாதா? ஏதோ தூக்கத்தில் புரண்டு அலறி விழித்துக்கொண்டதாக ஆகக்கூடாதா?’’

பேச்சு ஒன்றுதானே மனிதனுக்கான வரம். ஆனால், தனக்கான துணைகளாகக் காலொடிந்த வரிக்குதிரை, ஓநாய், மனிதக்குரங்கு, புலி, இவற்றுடன் பசிபிக் பெருங்கடலில் அவன் பயணம் தொடங்குகிறது. கழுதைப்புலிக்கு உணவாகிறது காலொடிந்த குதிரை. அது உயிரோடு இருக்கையிலேயே பிய்த்து உண்கிறது. விலங்கினங்களுக்குப் பசி என்கிறபோது கண்ணில் தென்படும் உயிரை வதைத்துக் கொல்வதும் உண்பதும் மனிதனிலிருந்து தாங்கள் வேறு என்பதைக் காட்டிவிடுகின்றன. பட்டேலால் அதைத் தடுக்க முடிவதில்லை. மனிதக்குரங்கை ஓநாய் கொல்ல வருகையில், அது ஓர் அப்பு அப்பிவிடுகிறது. பட்டேல், குரங்கைப் பாராட்டுகிறான். ஆனாலும், குரங்கை ஓநாய் கொல்கிறது. உயிருக்கான போராட்டம் நாவல் நெடுக ஆழமாய் விதைக்கப்பட்டு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. கறுத்த இரவுகள், உப்புக்காற்று, புயல்மழை என்று பட்டேல் படும் துன்பங்கள் ஜீரணிக்க முடியாதவையாக வடிவெடுத்து, படிப்பவர்களைத் துக்கத்தில் ஆழ்த்துகிறது. ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’ படித்த இலக்கிய ஆசான்கள், காலம் கடத்தி மீண்டும் கடல் சார்ந்த ஒரு புதினத்தைப் படிக்க வேண்டிய நிலையில் முக்கியமான நாவல் இது. நாவல், புலிக்கும் பட்டேலுக்குமான உறவைச் சொல்வதிலிருந்துதான் ஆரம்பமாகிறது.  மொத்தமாக 227 நாள்கள் ரிச்சர்ட் பார்க்கரும் பட்டேலும் கடலில் பயணிக்கிறார்கள்.

ரிச்சர்ட் பார்க்கர், ஓநாயைக் கொன்று தன் பசியைத் தீர்த்துக்கொள்கிறது. பட்டேலைக் கொன்றுவிட முயற்சிக்கிறது. கையிலிருக்கும் துடுப்பால் தற்காத்துக்கொள்கிறான் பட்டேல். படகில் கிடைத்த பொருள்களைக்கொண்டு சின்னதாகத் தனித் தெப்பம் அமைத்துக்கொள்கிறான்.  வாழ்வில் மாமிசமே உண்டறியாதவன் பசிக்காகப் பச்சை மீன்களை உணவாக்கிக்கொள்கிறான். ரிச்சர்ட் பார்க்கருக்கான மீன்களையும் தூண்டிலால் பிடிக்கிறான்.

நாள்கள் பலவற்றிற்குப் பின், படகு ஒரு தீவைச் சென்றடைகிறது. தீவில் உயர்ந்த மரங்கள் நிரம்பவுள்ளன. தீவில் கூட்டமாக மீர்காட்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. ரிச்சர்ட் பார்க்கர் அவற்றில் சிலவற்றை உணவாக்கிக்கொள்கிறான். அது ஓர் அழிவுத்தீவு என்பதை உணர்ந்த பட்டேல் சீக்கிரமே அங்கிருந்து கிளம்பிவிடுகிறான். இறுதியில் மெக்சிகோவின் கரையை அடையும் படகிலிருந்து இருவருமே தரைக்கு வருகிறார்கள். ஒரு நாயாக இருந்திருந்தால் நினைவு தப்பப்போகும் பட்டேலுக்கு அருகில் குரைத்தபடி நின்றிருக்கும். ஆனால், ரிச்சர்ட் பார்க்கர் புலி அல்லவா?  தரையில் காலடி வைத்ததும் தனக்கு முன்பாக விரிந்து கிடக்கும் வனத்தை நோக்கி ஓடிவிடுகிறது. இத்துடன் இருவரின் பயணமும் முடிவுக்கு வந்துவிடுகிறது

ஜப்பானிய ரிப்போர்ட்டர்கள் இருவர், பட்டேலைச் சந்தித்து எப்படி நடந்தது இது என்கிறார்கள். பட்டேல் சொன்னவற்றை அவர்கள் நம்பத் தயாரில்லை என்கிறபோது பட்டேல் மொத்தக் கதையையும் மாற்றிச் சொல்கிறான். மனிதக்குரங்கைத் தன் அம்மாவாகவும், புலியை இவனாகவும், கழுதைப் புலியை சமையல்காரனாகவும்... அதை நம்புகிறார்கள். நாமும் அப்படியே நம்புவோம்.

இதைப் படித்து முடித்த பிறகு இன்னும் ஒரு வருடத்திற்கு வேறு நாவலைத் தொட வேண்டியதில்லை என்ற மனநிலையைக் கொண்டிருந்தேன்.   

“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்!” - வா.மு.கோமு

‘அஞ்சல் நிலையம்’ -சார்லஸ் புக்கோவ்ஸ்கி

(தமிழில்: பாலகுமார் விஜயராமன்)

வாசகர்களோடு சற்றேனும் சமரசம் கொண்டிராத எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் சார்லஸ் புக்கோவ்ஸ்கி என்பதை முன்பாக அவரது கவிதைகள் வாயிலாக (சிற்றிதழ்களிலும், இணையத்திலும்) அறிந்திருந்தேன். யார் இந்த புக்கோவ்ஸ்கி என்று ஆங்கிலத்தில் தட்டி கூகுளில் தேடிப்பார்க்கும் வேலையெல்லாம் என்னிடம் கிடையாது. அவர் ஒரு கவிஞர் என்கிற அளவில் மட்டுமே முன்பாக அறிந்திருந்தேன். அவரது கவிதைகளில் கேலிகளும், கிண்டல்களும், நகையாடல்களும் நிரம்ப இருக்கும். புன்னகைத்துச் செல்லவாவது அவ்வப்போது வாசிப்பேன்.

‘அஞ்சல் நிலையம்’ நாவலை மொழிபெயர்த்த பாலகுமார் விஜயராமனும் சமரசம், பூசி மெழுகுதல் ஏதுமின்றித் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சில எழுத்துகளை, காப்பாற்றுவதாக எண்ணித் தமிழில் பூச்சுப் பூசிக் காட்டினால், நாவலின் தன்மையேகூட மாறிவிடும் அபாயம் நேர்ந்துவிடும். (ஆங்கிலத்தில் குறைந்த பக்கத்தில் சின்ன நாவலாக இருந்த ஒரு புத்தகம், தமிழில் 400 ரூபாய்க்குத் தலையணை சைஸில் எப்படி வந்தது என்று ஆச்சரியமாக இன்னமும் விழித்துக்கொண்டு 100 பக்கங்களைத் தாண்ட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்.)

கின்னஸ்கி, தான் வாழும் வாழ்க்கைமுறையை அவரே சொல்வதுபோல நாவல் ஆரம்பமாகிறது. தற்காலிகப் பணியாக அஞ்சலகத் தபால்களைப் பட்டுவாடா செய்யத் தொடங்கும் கின்னஸ்கி, முதல் அத்தியாயத்திலேயே ஒரு பருத்த பெண்ணின் உடலை வர்ணித்து, மூன்று நான்கு நாள்கள் இரவுகளில் படுக்கையில் சந்தித்து, பின்பாக மற்ற பெண்களைப்போலவே அவள் மீதான நாட்டமும் குறைந்து, அவளிடம் செல்லவில்லை என்று தொடங்குகிறார்.

என்னடா இது! ஆரம்பமே அபாரமா இருக்கே... கீழே வைக்க முடியாது போலிருக்கே என்று நினைத்தேன். அப்படியே முடிக்க வேண்டியாகிவிட்டது. நாவல் அவ்வளவு வேகம். இடங்களும் கதைமாந்தர்களின் பெயர்களும்தான் அமெரிக்கக் கதை என்கிற ஞாபகத்தைத் தந்ததே தவிர, விஷயமெல்லாம் அகில உலகத்திற்கும் உண்டான ‘அந்தப் பதினோரு நிமிட’ வேலைப்பாடுகள்தான். தமிழில் எழுதப்பட்ட நேரடியான நாவலைப் படிப்பதுபோன்ற உணர்வே இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

“மேடம், இவைதான் உங்களுக்கு வந்திருப்பவை.”

“சீட்டுகள், சீட்டுகள், சீட்டுகள்! இந்தச் சீட்டுகளைத்தான் உன்னால் கொண்டுவர முடிந்ததா?”

“அவர்கள் தொலைபேசி, கேஸ், ஆடம்பர விளக்குகள் என்று அனைத்தையும் கடனுக்கு வாங்கி அனுபவிப்பது என் குற்றமா என்ன? பிறகு தவணைக்கான சீட்டு வரும்போது, ஏதோ நான்தான் அவர்களைத் தொலைபேசியும், 350 டாலர் தொலைக்காட்சியும் வாங்கி உபயோகிக்கச் சொன்னதுபோல, என்மீது எரிந்து விழுந்தால் என்ன செய்ய?”

தற்காலிகப் பணியிலிருக்கும் அஞ்சல் பட்டுவாடா பணியாளரான கின்னஸ்கி அந்தப் பணியின்போது படும் சிரமங்களாக மழை, நாய்கள், பெண்கள் என்று பல விஷயங்களைச் சொல்கிறார்.

“சனியனே, நான் சம்பாதிக்கும்போது நீ வீட்டில் படுத்துக்கிடக்கவில்லையா?”

“அது வேறு. நீ ஆண்மகன், நான் பெண்.”

“ஓ, அது தெரியாமல் போய்விட்டது வேசிகளே... நீங்கள்தானே எப்போதும் சம உரிமை கேட்டுக் கூப்பாடு போட்டுக்கொண்டிருப்பீர்கள்?” (போகிற போக்கில் அடித்துவிடுவது என்று இந்த நாவலில் பல. குறிப்பாகக் கறுப்பர் இனம், தூதன், சிலுவை, நாய்க்குட்டிக்கு பிக்காஸோ என்று பெயரிடுவது என்று தொடர்ந்து கொண்டேயிருக்கிறது நாவல் நெடுகிலும்.)

“நான் நல்லவனாகத்தான் இருக்கிறேன். இந்தக் கருமம் பிடித்த அஞ்சல் அலுவலகம்தான்...” - எல்லோருக்கும் செய்கின்ற தொழில் மீதான சலிப்பும் வெறுப்பும் ஏனோ கொஞ்சம் காலம் கடந்து தோன்றத்தான் செய்யும். அது வார்த்தைகளில் எங்கேனும் நண்பர்கள் மத்தியிலோ, வேறெங்கோ வெளிப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். கின்னஸ்கியும் அதிலிருந்து தப்பிக்கவில்லை.

நான் சில்லறைத் திருடனெல்லாம் இல்லை. ஒன்று, உலகமே வேண்டும். அல்லது, ஒன்றுமே வேண்டாம். அவ்வளவுதான். இந்த வார்த்தைகளை சார்லஸ் புக்கோவ்ஸ்கியே சொன்னதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். 

“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்!” - வா.மு.கோமு

‘அஸீஸ் பே சம்பவம்’ -அய்ஃபர் டுன்ஷ்

(தமிழில்:சுகுமாரன்)

 அய்ஃப்ர் டுன்ஷ், துருக்கி இலக்கியத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர் என்று புத்தகக் குறிப்பு சொல்கிறது. மிகக் குறைவான படைப்புகளே எழுதியுள்ள அய்ஃபரின் ‘அஸீஸ் பே சம்பவம்’ ஒரு குறுநாவல் வடிவிலிருக்கிறது.
தான்தோன்றியாக நிலையில்லா வேலைகளைச் செய்தும், மது விடுதிகளுக்குச் சென்றுவருவதுமாகப் பெற்றோரின் வெறுப்புக்கு ஆளான அஸீஸ் பே-வின் முழு வாழ்க்கையை, வழுக்கிச்செல்லும் தமிழ் மொழிபெயர்ப்பில் வாசிக்க அவ்வளவு சுவையாக இருந்தது என்பதை முதலாகவே சொல்லிக்கொள்கிறேன்.

வயது முதிர்ந்த, மனைவியை இழந்த, காய்ச்சலில் கிடந்து மீண்டெழுந்த அஸீஸ் பே, தம்புரா வாசித்துப் பாடல்களைப் பாடுவதற்காக, ‘ஸேகியின்’ மது விடுதிக்குச் செல்கிறான். அவனால் அடிபட்டு, துக்ககரமாக அஸீஸ் தன் வீடு திரும்புவதில் ஆரம்பிக்கிறது நாவல். தனது வீட்டிற்குத் திரும்பிய அஸீஸ் பே-யை அன்றைய மழை இரவில் அந்தத் தெருவாசிகள் இழக்கிறார்கள்.

துக்க சம்பவத்துடன் தொடங்கும் கதை, பின்பாக அஸிஸ் பே சிறுவனாக இருந்த காலத்தைச் சொல்வதில் தொடங்குகிறது. தம்புரா கலைஞனாவதற்கு எந்த அம்சத்தையும் கொண்டிராத சிறுவன் அஸிஸ் பே. தாத்தாவின் தம்புராவை எடுத்து அப்பா இல்லாத சமயங்களில் அதன் வில்லைத் தேய்த்துப் பழகுகிறான். அம்மா அவ்வப்போது கடிந்துகொள்கிறார். அப்பாவுக்கு விஷயம் தெரிந்துவிடாமல் மறைக்கிறார். அஸீஸ் பேயின் அப்பா கடுகடுப்பை முகத்தில் எந்த நேரமும் தேக்கி வைத்திருப்பவர். அப்பாவுக்கும் மகனுக்கும் சாதகமான சூழல் என்று நாவலில் எந்த இடத்திலும் வரவில்லை. வேலைக்குச் சென்றுகொண்டிருக்கும் காலங்களில் வழியில் மரியத்தின் கருவிழிகளில் விழுந்து நிலைகுலைகிறான் அஸீஸ்.

அந்த ஆழமான கண்களின் காதலில் அவன் விழாமல் இருந்திருந்தால், வாழ்க்கை வேறுவிதமாகக்கூட அமைந்திருக்கும். ஆனால், அந்தக் காதல் பிழையாகிப் போகிறது. அலுவலகத்திற்குக் கிளம்பிச் செல்லும் ஒரு நாளில், மரியத்தின் குடும்பம் வீட்டைக் காலிசெய்து வண்டியில் ஏற்றிக் கொண்டிருக்கிறது. மறைந்திருந்து கண்களில் நீருடன் அஸீஸ் அந்நிகழ்வைக் கவனிக்கிறான்.  அது அஸீஸ் பேயின் வாழ்க்கையில் நிகழ்ந்த முதலாவது பேரவலம். மரியம் பெய்ரூட்டிலிருந்து இஸ்தான்புல்லிலிருக்கும் அஸீஸுக்குக் கடிதம் எழுதுகிறாள். பணிநீக்கம் செய்யப்பட்ட அஸீஸை, அப்பா வீட்டைவிட்டு வெளியில் அனுப்புகிறார். பெய்ரூட்டுக்குக் கப்பலில் வந்துசேர்கிறான் அஸீஸ்.

ஒரு தங்கும் அறையில் இவனைத் தங்கவைத்துவிட்டு ஒன்றிரண்டு முறை வந்து பார்த்துச் செல்லும் மரியம், பின்பாக இவனை ஒதுக்கிவிடுகிறாள். அஸீஸ் தம்புராவின் உதவியால் மொழிபுரியா தேசத்தில் மது விடுதியில் குறிப்பிட்ட காலம் வரை வாசித்துவிட்டு ஊர் திரும்புகிறான். அது அவன் காதலைத் தேடிச்சென்ற பயணமாகவும், துக்ககரமான வாழ்வியலின் பக்கங்களாகவும் நாவலில் சொல்லப்படுகிறது. பின்பாக அம்மாவின் இறப்பு, அப்பாவின் இறப்பெனவும், மனைவியாக  வுஸ்லாத்தையும் அடைகிறான். அப்போது நகரில் பிரபலமான தம்புராக் கலைஞனாக அவன் இருக்கிறான்.

காலமாற்றத்தில் எல்லாமும் சோக வடிவெடுக்கிறது. கடைசியாக ஸேகியின் மதுவிடுதியில் இணைகிறான். `வாடிக்கையாளர்கள் மதுவிடுதி நோக்கி வருவதற்குக் காரணமே உங்கள் இசைதான்’ என்று மதுபோதையில் இருக்கும் அஸீஸுக்கு ஸேகி சொல்கிறான். பின்பாக மனைவியைக் காய்ச்சலுக்கு சாகக்கொடுத்துத் தனியனாகிறான் அஸீஸ். 

நாவல் முடிவை நெருங்கும் சமயம், மதுவிடுதியில் கூட்டம் குறைவதற்கு எந்த நேரமும் சோக கீதங்களை இசைக்கும் அஸீஸ்தான் காரணம் என்பதை உணர்ந்து அவரை வீட்டிலேயே கிடக்கச் சொல்லிவிட முயற்சிக்கிறான் ஸேகி. இறுதியாக அந்தச் சம்பவம் மது விடுதியில் ஆரம்ப அத்தியாயத்தில் சொல்லப்பட்ட விதமாக நடந்தேறிவிடுகிறது.

பெரும்பாலும் வாழ்வின் முறைமைகளை சற்று ஆழமாகச் சொல்வதில்தான் நாவல்கள் வெற்றி பெறுகின்றன. சொல்லும் முறைமையில் கூடவும்தான். அந்தச் சொல்லும் முறைமையில் இது முக்கியமான நாவலாகப்படுகிறது.  

“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்!” - வா.மு.கோமு

‘ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்’ -யுகியோ மிஷிமா

(தமிழில்: கார்த்திகைப் பாண்டியன்)


இந்த நாவலை, யுகியோ மிஷிமாவின் சுயசரிதையாகவும் கொள்ளலாமெனப் பின் அட்டைக் குறிப்பு சொல்கிறது. (அட்டைக் குறிப்பு, முன்னுரை, போன்றவற்றை நாவல் வாசித்து முடித்த பிறகே, என்ன, ஏது? எனப் பார்க்கும் வழக்கம் சமீபகாலங்களில் என்னைத் தொற்றிக்கொண்டுவிட்டது.)

டோக்கியோவில் ஒரு வாடகை வீட்டில், தன் பிறப்பின்போதே தான் பார்த்த சம்பவங்கள் தனது நினைவிலிருப்பதாக நாவலில் வரும் சிறுவன், பெரியவர்களிடம் உரையாடுகிறான். முதன்முதலாக நீராடிய நீர்த்தொட்டியின் ஞாபகம்கூட இருப்பதாகச் சொல்கிறான்.

ஜனவரி 4, 1925, காலையில் என் அம்மா பிரசவ வலிக்கு ஆளானாள். அன்று மாலை ஒன்பது மணிக்கு, ஐந்து பவுண்டுகள் மற்றும் ஆறு அவுன்ஸ்கள் எடையிருந்த சிறிய குழந்தையை அவள் ஈன்றெடுத்தாள்.

தன்னைப்பற்றிப் பேசிக்கொண்டே, சில தத்துவ விசாரங்களுக்குள்ளும் தன்னை ஆட்படுத்திக்கொள்ளும் சில நாவல்களை முன்பாக வாசித்திருக்கிறேன். இந்த நாவலோ, முழுக்க முழுக்கத் தன்னைப் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கும், யோசித்துக்கொண்டிருக்கும் நபரொருவர், தன் விளக்கங்களைச் சொல்லிக்கொண்டே செல்லும்படியானது.  ஒருவர், தன் குழந்தைப் பருவ ஞாபகங்களை இந்த அளவுக்கு நினைவில் வைத்திருக்க இயலுமா? என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.

‘போர்ச்சூழலிலிருக்கும் தேசத்தில் குழந்தைகளின் விளையாட்டுகள்கூட, மறைந்திருந்து துப்பாக்கிகளை வாய் ஒலிகளோடு இயக்குவதாகவும், சுடப்பட்டவர்களாக வீழ்ந்து மடிவதாகப் பாவனை செய்வதாகவுமே இருக்கிறது’ தொடர்ந்து தனது பள்ளி வாழ்க்கையையும் நண்பர்களைப் பற்றியும் விவரித்துச் செல்கிறார்.   

“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்!” - வா.மு.கோமு

“ ‘உனக்கு 20 வயதாகும் முன்பே நீ செத்துப்போவாய்.’ என்னுடைய பலவீனமான தேகத்தைக் காட்டி நண்பன் ஒருவன் என்னிடம் விளையாட்டாகச் சொன்னான். ‘சொல்வதற்கு எத்தனை பயங்கரமான விஷயம்’ கசப்பான புன்னகைக்குள் எனது முகத்தைத் துளைத்து நிறுத்தி, நான் பதிலளித்தேன். ஆனால், உண்மையில் அவனுடைய ஊகத்தின் மீது வினோதமாக நான் இனிமையான மற்றும் கற்பனையான ஈர்ப்பினைக் கொண்டிருந்தேன்”

நாவலின் பின்பகுதி வாலிபக் காலத்தைப் பேசுகிறது. சொனோகோவுடனான ஈர்ப்பு புது விதமான காதலா? என்று சந்தேகிக்கும் வகையில் சொல்லப்படுகிறது. அந்தப் பகுதிகளில் நான் வேறுவிதமான காதலை நுகர்ந்துகொண்டிருக்கிறேன் என்பதை வாசிக்கும்போது உணர்ந்தேன். விஷயங்களிலிருந்து தப்பித்தலும் சிக்குதலும் பைத்திய நிலைதான். சொனோகோ வேறு நபரின் மனைவியான பிறகும்கூட இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள் நண்பர்களாக. ஆனால், அது எதற்கென இருவருக்குமே புரிபடுவதில்லை.

பின்பகுதிகளில் இந்த நாவல் என்னை ஏன் ஈர்த்தது என்பதற்கான காரணங்களை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். மேசையின் மேற்பகுதியில் சிதறிக்கிடந்த ஏதோவொரு மதுபானம் பிரகாசமான, அச்சம் தரும் பிரதிபலிப்புகளை வீசிக்கொண்டிருக்கிறது.

கார்த்திகைப்பாண்டியனின் மொழிபெயர்ப்பு உழைப்பு, நாவலின் இரண்டாவது அத்தியாயத்திலிருந்து சரளமாக வேகமெடுத்திருக்கிறது. புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு, பிறழ்ந்த காமத்தை இயல்பாகக்கொண்டிருக்கும் இளைஞனின் பார்வையினூடாக வாழ்வின் அபத்தத்தையும், மரணத்தின் அற்புதங்களையும் பேசுவதாகச் சொல்கிறது. வாக்குமூலங்களும் சுயசரிதைகளும் உண்மைகளைச் சொல்கின்றனவா என்கிற சந்தேகங்களை முன்பாகத் தமிழில் ஏற்படுத்தி விட்டார்கள். ஆனால், இவற்றைச் சொல்வதற்கும் ஒரு தனித்த தைரியம் வேண்டும். இதனால் இந்த நாவலின் உண்மைத்தன்மை காப்பாற்றப் பட்டுவிட்டது.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism