Published:Updated:

க்ளிஷே - போகன் சங்கர்

க்ளிஷே - போகன் சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
க்ளிஷே - போகன் சங்கர்

ஓவியங்கள்: செந்தில்

க்ளிஷே - போகன் சங்கர்

ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
க்ளிஷே - போகன் சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
க்ளிஷே - போகன் சங்கர்

குளிமுறிக்குள் நுழைந்த அனில், “மரியம்மே” என்று அலறினான். “இது என்ன?”

மரியம்மை எட்டிப் பார்த்தாள். பிறகு, “அய்யே” என்றாள்.

“நீ கொஞ்சம் வெளியே போ. க்ளீன் பண்ணிடறேன்.”

அவன் “இதெல்லாம் பார்த்துப் பண்ண மாட்டியா?”

அவள் “போடா போடா... எல்லாரும் இதிலிருந்துதான் வந்தீங்க.”

கரகரவென்று தேய்க்கும் சப்தம்.    

க்ளிஷே - போகன் சங்கர்

கிருஷ்ணமாச்சாரி வழக்கம்போல cognitive psychology in literature எடுக்கும்போது, வைஷ்ணவ தந்திர ஆகமங்கள் பற்றி எடுப்பதை விட்டுவிட்டு அதையே எடுத்துக்
கொண்டிருந்தார். உடம்பு சரியில்லைபோல. நன்றாக உறக்கம் வந்தது. உறக்கத்தின் நடுவில் மரியம்மை வந்து `நீ ஒரு ரத்தக் கட்டி’ என்றாள். உடனே சிவப்பு சிவப்பாய் நிறைய பூக்கள் அவனைச் சுற்றிப் பூத்தன. யாரோ கிளுகிளுத்துச் சிரித்தார்கள். ஒரு குரல் கம்பீரமாக `அந்த நாள்களிலும்’ என்றது.

ள்ளியிலிருந்து அவளை வண்டியில் கூப்பிட்டு வரும்போது, “ஏடா வர்ற சண்டேயிலிருந்து ஜிம்முக்குப் போலாம்னு நினைக்கேன்” என்றாள். “நல்ல பைசெக்ஸ் ஜிம்மா பார்த்துச் சொல்லு.’’

“இந்த வயசில உனக்கெதுக்கு. கைகால் முறிஞ்சிடப்போது.”

“தொப்பை விழுந்திடுச்சு. எல்லாரும் சொல்றாங்க.”

“யார் அந்த எல்லோரும்? கிறிஸ்தோபர் நேசமணி சாரா?’’

“இப்போ எதுக்கு அழுவறே?’’
“நான் எங்கே அழுதேன்?’’ என்றாள் அவள்.

“முகம் சரியில்லையே.”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்றவள், “நான் அழணுமா?”

அனில் யோசித்து, “வேணாம். சண்டே வெச்சுக்கலாம். இன்னிக்கு சூப்பர் சிங்கர் பார்க்கலாம்.”

“அனில் டேய்...” என்றாள் மதியம் போனில். குரலில் உற்சாகம். “இங்கே வோட்கா எங்க கிடைக்கும்?’’

“வோட்காவா? எதுக்கு? நீயும் அந்த நேசமணியும் டேட்டிங் போறீங்களா?”

அவள் அதைப் புறக்கணித்து, “நாங்க இரண்டு பேரும் இன்னிக்கு ரஷ்ய இலக்கியம் பத்திப் பேசிட்டிருந்தோம் புஷ்கின், செக்கோவ்...”

“டால்ஸ்டாய்?’’

“அந்தாளு ஒரு பாதிரியார்...”

“தஸ்தயேவ்ஸ்கி?’’

“அந்தாளும்தான். பிரசங்கம் பண்றதோட ஒப்பாரி வெச்சு நெஞ்சில வேற அடிச்சுப்பான்”

“மரியம்மே” என்றான் அனில். “உண்ட பர்த்தாவு இப்போ எங்கே இருக்கார்னு அறியுமோ?’’

“இப்போ எதுக்கு அவர்? நீ என்கிட்டே குற்றஉணர்வை உண்டுபண்ண முயற்சி பண்றியா? யாருக்குத் தெரியும். அநேகமா எதோ ஒரு தேவி ஷேத்திரத்தில ஜபம் பண்ணிட்டு ஆறாதாரங்களை எழுப்ப முயற்சி பண்ணிட்டு இருப்பார். அவருக்கு தான் சிவப்பா இருக்கிறதால ஒரு நம்பூதிரின்னு நினைப்பு.”

“நீ?’’

“நான் கருப்பா இருந்ததாலே மரியம்மை என்கிற மேரி ஆயிட்டேன். இரண்டு பேருமே அநாதைங்க. அவரு நெய்யாற்றின்கரை நாராயண குரு ஆர்ஃபனேஜ். நான் பனச்சமூடு
இம்மாகுலேட் மாதா ஆர்ஃபனேஜ்.  ஆனா, உண்மையில நான் ஒரு அந்தர்ஜனமாகவும் அவர் ஓர் அச்சாயனாகவும்கூட இருக்கலாம்.”

“அதைத் தெரிஞ்சிக்க வேண்டாமா மரியம்மே. ஒவ்வொரு ஜீனுக்கும் ஒவ்வொரு ஸ்வதர்மம் உண்டல்லோ?”

“போடா. இப்போ இந்த வோட்கா எங்கே கிடைக்கும்?”

“ஏன் அந்தாளுக்குப் பரிசாக் கொடுக்கணுமா? அந்தாளு குடிப்பாரா?’’

“ஏன் நானே குடிப்பேன்.”

“எங்கே போய் குடிப்பே? பத்து வருஷம் முன்னால முளகுமூடு பாதர் கொடுத்த
ரெட் வைனை குடிச்சி, நாலு நாலு கவுந்தடிச்சிக் கிடந்தியே... ஓர்மை உண்டா?’’

“போடா அது லோக்கல் சரக்கு. அந்தாளு ஏமாத்திட்டான். அவனும் அவன் கடவுளும் மாதிரியே அவன் சரக்கும் போலி.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க்ளிஷே - போகன் சங்கர்“அ
னில் குட்டா இந்த வீக் எண்டு உன் புரோக்ராம் என்ன?’’

“உன் புரோக்ராம் என்ன?’’

“நான் நெய்யாறு டேம் போறேன்.’’
“ஸ்கூல்லருந்து டூர் போறீங்களா?’’

மேரி மெளனமாகயிருந்தாள்.

“அந்தாளுகூடப் போறியா?”

“ஆளுன்னு சொல்லாதேடா...’’

“போறியா?’’

“நீ வறியா?”

“நான் அங்கே வந்து என்ன பண்ணுவேன்?’’

“டால்ஸ்டாய் பேசு...”

“அவர் கூடேவா?” என்றான். “சீரியஸாக் கேக்குறேன். அந்தாளுக்கு நிஜம்மாவே இதில எல்லாம் ஆர்வமிருக்கா?”   

க்ளிஷே - போகன் சங்கர்

“பிறகு? இது வெறும் உடம்பு பிரச்னைனு நினைக்கிறியா?”

“நான் நினைக்கறது இருக்கட்டும். நீ என்ன நினைக்கிறே?”

“இது செக்ஸ் மட்டும் இல்லை.” என்றாள்.

பிறகு, “ப்ச். அப்படி இருந்தாத்தான் என்ன? எனக்கும் வேண்டாமா செக்ஸ்? என் வாழ்க்கைல ரொம்ப நாளைக்கு அப்புறம் நிறங்களைப் பார்க்கிறேன். நீ வேணும்னா உன்னோட லெக்சரர் ஃப்ரெண்டு அவளைக் கூட்டிட்டு வா.’’

“ஹா’’ என்றான் அனில்.

“மரியம்மே... நீ போயிட்டு வா. போயிட்டு வந்து ஒரு புத்தகம் எழுது.”

“என்ன பேரு வைக்க? ஒரு வேசியின் கதை?’’

“அதை நீ இருபது வருஷம் முன்னால எழுதிருக்கணும் மரியம்மே.”

“இப்போ என்ன? ஒரு வயதான வேசியின் கதை’’ என்றாள் அவள். “அனில் நீ என்னை வேசின்னு நினைக்கிறியா?”

“இல்லை. முட்டாள்னு நினைக்கறேன்.”

“செக்ஸ் ஏன் முட்டாள்தனமாயிடுது? அதுவும் கணவனால் கைவிடப்பட்ட ஒரு நடுவயதுப் பெண்ணின் செக்ஸ்?”

“அவளுக்கு காலேஜ் படிக்கற ஒரு பையன் இருக்கறதால?’’

“இருக்கலாம்.”

மேரி கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தாள். பிறகு, மின்சாரம் போன அந்த அறையில் ஒரு மெழுகுவத்தியை ஏற்றிவைத்தாள்.  “என்னோட மழைக்கால இரவுகள் எப்படிப்
பட்டவைனு உனக்குப் புரியவே போறதில்லை.”

அனில் எழுந்து அவளைப் பின்புறமாக அணைத்தான். “அம்மே... நீ எங்கே வேணாலும் போ. யாரோடு வேணாலும். நான் உன் மழைக்கால இரவுகளைப் பறிக்கப்
போவதில்லை. ஆனா, திரும்ப வந்திடு.”

னால், மேரி போகவில்லை.
“டேய் இன்னிக்கு ஸ்கூலுக்கு ஒரு போன் வந்தது.”

“யாரு?’’

“உன்னோட அப்பாவின் தற்போதைய மனைவி. அப்பாவுக்கு ப்ரோஸ்ட்டேட் கேன்சராம். திருவனந்தபுரம் ரீஜனல் கேன்சர் ஆஸ்பத்திரில சேர்த்திருக்காம்.”
“சரி?’’
“அந்தம்மா ரொம்ப அழுது. அதுக்கு எதுவுமே தெரியலை.”

“சரி?’’

“நாம போய் பார்த்துட்டு வரலாம்.”

“எனக்கு இப்போதான் நீ ஒரு வேசின்னு தோணுது மரியம்மை.”

“இருந்துட்டுப் போறேன். நாளைக்குக் காலைல கிளம்பணும்.”

“நான் வரலை.”

“அனில்... சின்ன வயசில ஒரு தடவை, நீ உத்திரத்தில் தொங்கி கீழே விழுந்து கையை முறிச்சுக்கிட்டே. அப்போ அவர் எப்படி துடிச்சுப்போயிட்டார்னு...’’

“க்ளிஷே மரியம்மே”

“எல்லாமே க்ளிஷேதாண்டா. ஆண், பெண், குழந்தைகள், காதல், காமம், உடல், வாழ்க்கை, மரணம், கேன்சர்...”   

க்ளிஷே - போகன் சங்கர்

ப்பாவின் ப்ரோஸ்ட்டேட்டை எடுக்க வேண்டுமாம். பிறகு மெட்டாஸ்டேஸிஸ் ஆகிவிடாமல் இருக்க ரேடியேஷன். அப்பா, கண்களைப் பார்க்கவே இல்லை. “நாமினியா உன்னைத்தான் போட்டிருக்கேன்” என்றார். அனிலுக்குக் கசப்பு எழுந்து வந்தது. அவரிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை.

அனில், “ப்ரொஸ்டேட்டை எடுத்துட்டா குண்டலினி பயிற்சி வொர்க்கவுட் ஆகுமா?” என்று அவரிடம் கேட்டான்.

ந்த மருத்துவமனைக்குள் பார்வையாளர்கள், பார்வை நேரம் தவிர மற்ற நேரங்களில் தங்க முடியாது. ஏதாவது அவசரம் எனில், போன் செய்து அழைப்பார்கள். ஆகவே, சுற்றிலும் நிறைய விடுதிகள் இருந்தன. அப்பாவின் அவளும் அம்மாவும் ஓர் அறையில் இருந்தார்கள். அவளும் மரியம்மையும் நெடுநாள் தோழிகள் போல ஓட்டிக்கொண்டே திரிந்தார்கள். மறுநாள் மரியம்மைக்கு அவள் கசவுப்புடவை நேரியல் எல்லாம் உடுத்தி ஒரு நாயர் பெண்ணாகவே மாற்றிவிட்டாள். அம்மா அவளோடு ஆற்றுக்கால் பகவதி கோயிலுக்குப் போய்விட்டு வந்தாள். குங்குமம் நெற்றியில், குறி மல்லிகைப்பூ, சந்தனப்புடைவை “பிரசாதம் எடுத்துக்கோ” என்று நெற்றியில் பூசிவிட்டாள்.

“அங்கே ஒரு பொண்ணுதான் நாதஸ்வரம் வாசிக்கிறா.”

நான்காவது நாள் ஆபரேஷன்.
ஏறக்குறைய 12மணி நேரக் காத்திருப்புக்குப் பின் “விழித்துவிட்டார்” என்று உள்ளே விட்டார்கள்.

கதவு திறந்ததும் அப்பாவின் அவள் ஓடிப்போய் அவர் மார்பில் புரண்டு அழுதாள். அவளது தலையிலிருந்து முல்லைப்பூக்கள் அவர் மார்பில் சிந்தின.

செவிலி, “பெகளம் வைக்கறது’’ என்றாள்.

அம்மா தூர நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

“க்ளிஷே மரியம்மே” என்றான் அனில். “எல்லாம் க்ளிஷே.”

இம்முறை அவள் அதற்குச் சமாதானம் சொல்லவில்லை.

வெ
ளியே வரும்போது அவள் முகம் சோர்ந்திருந்தது.

அனில், அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு “மரியம்மே... பாருக்குப் போய் ஒரு வோட்கா சாப்பிடலாமா?’’

அவள் “சரி” என்றாள்.

“ஆனா, இந்த உடுப்பு. இதெல்லாம் களைஞ்சி வேற உடுத்திட்டு வா.’’

“ஏன் இதுக்கென்ன?”

“பார்ல ஒரு மாதிரி நினைப்பான்.”

“என்ன நினைப்பான்? இது மரியாதையான உடுப்புதானே?’’

“அங்கே இல்லை.”

“என்ன நினைப்பான்? நான் ஒரு வேசின்னா... நான் வேசிதானே.”

அனில் பேசாதிருந்தான்.

“ஒரு சின்னப்பையன் கிழட்டு வேசியைத் தள்ளிட்டு வந்திட்டான்னு நினைப்பானோ?’’

“நினைக்கலாம்.’’

அவள் அவன் தோள்களில் சாய்ந்துகொண்டாள். “அப்படின்னா நான் இந்த உடுப்போடுதான் வருவேன்.”

அனில் தோள்களைக் குலுக்கினான். “ஓகே” என்றவன், அவள் கைகளை எடுத்துத் தனது இடுப்பைச் சுற்றிக் கோத்துக்கொண்டு “க்ளிஷே மரியம்மே க்ளிஷே...” என்றான்.

செவிலி வெளியே வந்து, “சத்தம் போடறது” என்றாள்.

அவர்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அந்த நகரத்துக்குள் இறங்கிப் போனார்கள்.

“ஓ கடவுளின் சொந்த நகரமே! புஷ்கினும் செக்காவும் இன்னும் பல ருஷ்ய எழுத்தாளர்களும் புனிதப்படுத்திய வோட்காவே! இதோ வருகிறோம் உன்னிடம்... உன்னைத் தேடி உனக்காக ஒரு வேசியும் வேசி மகனும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism