Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 15 - இப்படியும் ஒரு காதல் கதை!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 15 - இப்படியும் ஒரு காதல் கதை!
பிரீமியம் ஸ்டோரி
News
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 15 - இப்படியும் ஒரு காதல் கதை!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 15 - இப்படியும் ஒரு காதல் கதை!

Amor a primeira vista - இது போர்ச்சுக்கீசிய வாசகம். ஆங்கிலத்தில் சொன்னால் love at first sight. தமிழில், கண்டதும் காதல். பதினான்காம் நூற்றாண்டில், அவளைக் கண்ட நொடியில் போர்ச்சுக்கீசிய இளவரசர் பீட்டருக்குள்ளும் (போர்ச்சுக்கீசிய மொழியில் பெட்ரோ) அதே ரசவாதம்தான் நிகழ்ந்தது.

கள்ளங்கபடமற்ற முகத்தில் கள் வடியும் கண்கள். கூரான நாசிக்குக் கீழ் தீரா அழகு சொட்டும் செவ்விதழ்கள். இதுதான் புருவத்தின் இலக்கணம் என்று சொல்லத்தகுந்த வளைவு. வெற்றிடம் கொண்ட நெற்றியில்கூட அத்தனை வனப்பு.   தங்க ஜரிகை கொண்டு நெய்த கூந்தல். அதன் சுருளில் சிக்கினால் மீள்வது கடினம் என்றது புத்தி. சிக்கி, அப்படியே தொலைந்து போய்விட ஏங்கியது இதயம். யார் இவள்?

போர்ச்சுக்கீசிய அரசரான நான்காம் அஃபோன்ஸோ, தன்னுடைய ஒரே ராஜ வாரிசான இளவரசர் பீட்டருக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்தார். அண்டை ராஜ்ஜியம் காஸ்டைல் (Castile). அவர்களும் இவர்களும் பெண் கொடுப்பதும் எடுப்பதும் வழக்கமே. 20 வயது பீட்டருக்கு, ஜுவான் மேனுவல் என்ற காஸ்டைல் அரச குடும்ப இளவரசரின் மகள் கான்ஸ்டன்ஸா முடிவுசெய்யப்பட்டாள். கி.பி 1340-ல் நடந்த இந்தத் திருமணத்தின் பின், அரசியலும் அலையடித்துக் கொண்டிருந்தது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 15 - இப்படியும் ஒரு காதல் கதை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜுவான் மேனுவலும், காஸ்டைல் அரசர் அல்ஃபோன்ஸோ என்பவரும்  நெருங்கிய உறவினர்கள். ஜுவானின்  மகள் (சிறுமி) கான்ஸ்டன்ஸாவை 1325-ல் அல்ஃபோன்ஸோ திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமண உறவு இரண்டாண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. 1328-ல் காஸ்டைல் அரசர், போர்த்துக்கீசிய அரசரின் மகளான மரியாவை (இளவரசர் பீட்டரின் சகோதரிதான்) இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவி கான்ஸ்டன்ஸாவைச் சிறையில் அடைத்தார். அவளின் அப்பா ஜுவான் கோபம் கொண்டு மோதலில் இறங்கினார். பின்பு சமாதானம் எட்டப்பட்டு, கான்ஸ்டன்ஸா விடுதலை செய்யப்பட்டாள். மரியாவுக்கும் காஸ்டைல் அரசருக்குமிடையே வாரிசுகள் பிறந்தன. சில வருடங்களில் காஸ்டைல் அரசருக்கு இன்னொரு பெண்மீது மோகம் பிறக்கவே, மரியாவைப் போர்ச்சுகலுக்கே துரத்திவிட்டார். போர்ச்சுகல் அரசர் அஃபோன்ஸோ துடித்துப்போனார். காஸ்டைல் அரசரின் முன்னாள் மனைவியான கான்ஸ்டன்ஸாவையே தன் மகனான பீட்டருக்கு மணம்முடித்து வைத்தார். ஏன்? தன் முன்னாள் மாப்பிள்ளை அல்ஃபோன்ஸோவை எரிச்சலூட்டி பழிவாங்கவும், இந்தத் திருமண உறவால் காஸ்டைல் ராஜ குடும்பத்தில் போர்ச்சுக்கீசிய ராஜ குடும்பத்தின் பிடியை மேலும் வலுப்படுத்தவும். தலைசுற்றுகிறதா?

இளவரசர் பீட்டருக்கோ சுற்றும் உலகமே உறைந்து நின்றது போலிருந்தது, இரண்டாவது பத்தி வர்ணனைக்குச் சொந்தக்காரியான ‘அவளை’க் கண்டதும். அந்த அவள், கான்ஸ்டன்ஸா அல்ல. மருமகளாக கான்ஸ்டன்ஸா அரண்மனைக்கு வந்தபோது, உடன் வந்த தோழி. அவள் பெயர் இனெஸ் (Ines de Castro).

ஆரம்பம் முதலே பீட்டருக்கு கான்ஸ்டன்ஸாவைத் திருமணம் செய்வதில் விருப்பமில்லை. தந்தையின் வற்புறுத்தல். தலையாட்டினார். கான்ஸ்டன்ஸாவுடன் நடக்க வேண்டிய காரியங்களெல்லாம் நடந்தாலும், அவரது காதல் மனசு என்னவோ இனெஸ் முன் மண்டியிட்டு நின்றது.

இனெஸ், காஸ்டைல் உயர்குடிப் பெண் என்றாலும், ராஜ வம்சம் இல்லை. நாளடைவில் அரண்மனை வட்டாரத்தில் பீட்டர் – இனெஸ் காதல் விவகாரமே வைரல் கிசுகிசுவாகப் பரவியது. இருவரும் அடிக்கடி ரகசியமாகச் சந்தித்துக் கொண்டனர். ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ – பீட்டர் உருகினார். ‘அய்யோ, அது இளவரசிக்கு நான் செய்யும் துரோகம்’ – இனெஸ் பதறினாள். ‘இளவரசனான என் விருப்பத்தை நிராகரிப்பதும் துரோகம்தானே!’- பீட்டரின் அடர்காதலில் கரைந்தாள் இனெஸ்.

அரசர் கூப்பிட்டு மகனைக் கண்டித்தார். மனைவி கான்ஸ்டன்ஸா செய்வதறியாது தவித்தாள். இளவரசரோ, இனெஸுக்கு இதயம் திறந்து காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தார். அரண்மனை வழியாக ஓடும் கால்வாய் ஒன்று, இனெஸ் தங்கியிருந்த கோட்டைக்கும் சென்றது. சிறு மரக்கலங்களைத் தயாரித்து, அதனுள் கடிதங்களைப் பதுக்கிவைத்து அனுப்பினார் பீட்டர். பத்திரமாகப் பெற்றுக்கொண்டாள் இனெஸ். கால்வாயில் காதல் ஓடிக்கொண்டிருந்தது.
கான்ஸ்டன்ஸாவுக்கு அப்போது இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது. இனெஸைத் தன்னுடைய கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும் நோக்கத்துடன் குழந்தைக்கு வளர்ப்புத் தாயாக நியமித்தாள் கான்ஸ்டன்ஸா. ஆனால், குழந்தை சில நாள்களிலேயே இறந்தது. அடுத்தகட்ட நடவடிக்கையாக அரசர் அஃபோன்ஸா, இனெஸை மீண்டும் காஸ்டைலுக்கே அனுப்பிவைத்தார்.

ஆனால், பீட்டர் நினைத்தபோதெல்லாம் காஸ்டைலுக்குச் சென்று சுதந்திரமாகக் காதல் வளர்த்தார். யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை. மூன்றாவதாக, ஓர் ஆண் பிள்ளையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு, தன் பூலோகக் கடமையை முடித்துக் கொண்டாள் இளவரசி கான்ஸ்டன்ஸா (1345). பீட்டர், பீறிட்டு அழவெல்லாம் இல்லை. வழி பிறந்தது என்று விழிகளில் புன்னகை தேக்கினார்.

பீட்டருக்கு மறுமணம் செய்துவைக்க வேறு ராஜ குடும்ப வரன்களைக் கொண்டுவந்தார் அரசர். ‘என் திருமணம் இனெஸுடன் மட்டும்தான்’ என பீட்டர் பிடிவாதம் பிடித்தார். ‘ஒருபோதும் நடக்காது.’ அரசரும் அசைந்து கொடுக்கவில்லை. பீட்டர், மீண்டும் இனெஸை போர்ச்சுகல் ராஜ்ஜியத்துக்கே அழைத்துவந்தார். கோய்ம்ப்ரா என்ற ஊரில் ஒரு மாளிகையில் இருவரும் குடும்பம் நடத்தினர். முதலில் பிறந்த ஆண் பிள்ளைக்கு அஃபோன்ஸோ என்ற பெயரையே வைத்து, அரசர் அஃபோன்ஸோவைக் கடுப்பேற்றினார். அந்தப் பிள்ளை அதிக நாள் வாழவில்லை. இருந்தாலும் அடுத்தடுத்து இரண்டு ஆணும், ஒரு பெண்ணுமாக மூன்று குழந்தைகள் பிறந்தன. ‘கவலைப்படாதே அன்பே! நான் அரசரான பின் உன்னை அரசியாக்குவேன்.’ பீட்டர், இனெஸிடம் வாக்குக் கொடுத்தார்.

அரசர் அஃபோன்ஸோ காதுக்கு ஒரு கிசுகிசு வந்து சேர்ந்தது. பீட்டருக்கும் கான்ஸ்டான்ஸாவுக்கும் பிறந்த, ராஜ குடும்ப பேரனான பெர்டினாண்டைக் கொல்ல சதி நடக்கிறது. இனெஸுக்கும் இளவரசருக்கும் பிறந்த ஆண் குழந்தைகளை ராஜ குடும்பத்தின் பேரனாக்கும் வேலைகள் நடக்கின்றன.

அதில் கொஞ்சம் உண்மையும் இருந்தது. இனெஸின் சகோதரர்கள் பீட்டரை ஆக்கிரமித்திருந்தனர். இதற்குமேல் அவளை விட்டு வைக்கவே கூடாது என முடிவெடுத்த அரசர், தன் சகாக்கள் மூன்று பேரை அனுப்பிவைத்தார். 1355, ஜனவரி 7. பீட்டர் வேட்டைக்குப் போயிருந்த சமயம் பார்த்து மூவரும் அந்த மாளிகைக்குள் புகுந்தனர், இனெஸை வேட்டையாட. மூவரது கத்திகளும் இனெஸின் உடம்பைப் பதம் பார்த்தன. குழந்தைகளின் கதறல்களுக்கிடையே மரித்துப்போனாள் அவள்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 15 - இப்படியும் ஒரு காதல் கதை!

துடிதுடித்துப் போனார் இளவரசர் பீட்டர். தன் தந்தைதான் இதைச் செய்தார் என்று அறிந்ததும் மூர்க்கத்துடன் கிளம்பினார். அவரைத் தடுக்க வந்தவர்களெல்லாம் பலியாயினர். யாராலும் அவரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. இனெஸின் சகோதரர்கள் பீட்டருக்குத் தோள் கொடுக்க, தந்தைக்கும் மகனுக்குமிடையே சில காலம் உள்நாட்டுப் போர் தொடர்ந்தது. அரசி பீட்ரைஸ் தன் மகனைப் பெரும்பாடுபட்டுச் சமாதானப்படுத்தினாள். பீட்டர், வன்மத்தை விழுங்கிக்கொண்டு அமைதியாகக் காத்திருந்தார். அரசர் அஃபோன்ஸா 1357-ல் இறந்துபோனார். புதிய அரசராக அரியணை ஏறினார் பீட்டர்.

‘அந்த மூன்று கயவர்களையும் பிடித்து வாருங்கள்’ – அவரது முதல் கட்டளையே அதுதான். மூவருமே ராஜ்ஜியத்தை விட்டு தப்பியோடி தலைமறைவாகியிருந்தனர். 1361-ல் இருவர் பிடிபட்டனர். அரசர் பீட்டர் முன்பு அழைத்துவரப்பட்டனர். இரவு நேரம். பீட்டர் உணவருந்திக்கொண்டிருந்தார். காவலர்கள், இருவரையும் கடுமையாகத் தாக்கினர். அவர்களது கதறல் பீட்டருக்கு இனிமையாக இருந்தது. ‘இனெஸும் இப்படித்தானே கதறியிருப்பாள்!’ பீட்டர், கட்டளையிட்டார். ‘என் இதயத்தைக் கொன்ற இந்த இருவரது இதயங்களையும் பிடுங்கி எடுங்கள்!’ ஒருவனது நெஞ்சைக் கிழித்தும், இன்னொருவனது முதுகைக் கிழித்தும் இதயங்களை வெளியே எடுத்துப் போட்டனர். அவை துடித்து அடங்கியபோது, பீட்டர் கைகளைக் கழுவினார்.

‘1357-லேயே நான் இனெஸைத் திருமணம் செய்துவிட்டேன். தேதி நினைவில்லை’ என்றார் பீட்டர். சரியான ஆதாரங்கள் இல்லாததால் திருச்சபை அந்தத் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை. ‘நீங்கள் யார் அங்கீகரிப்பதற்கு? நான் எனது இனெஸை அரசியாக்கப் போகிறேன்’ என்றார்.

கோய்ம்ப்ராவில் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து இனெஸின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது. அது, அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்றில் ஏற்றப்பட்டது. குதிரைப்படைகள் அணிவகுக்க, முக்கிய அமைச்சர்கள், ராஜ குடும்பத்துப் பெண்கள், பணியாளர்கள் சூழ்ந்து வர, வழியெங்கும் ஆயிரக்கணக்கானோர் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்த, இனெஸின் இறுதி ஊர்வலம் மீண்டும் ஆரம்பமானது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 15 - இப்படியும் ஒரு காதல் கதை!

அரண்மனைக்கு இனெஸின் உடல் எடுத்து வரப்பட்டது. சவத்துக்கு அரசியின் உடை மாட்டி அலங்கரித்தனர். சவத்தை அரியணையில் அமர்த்தச் சொன்னார் பீட்டர். கிரீடம் சூட்டி, ‘அனைவரும் அரசி இனெஸுக்கு மரியாதை செலுத்துங்கள்’ – கட்டளையிட்டார். எல்லோரும் வரிசையாக வந்து, இனெஸின் முன் மண்டியிட்டு, சவத்தின் புறங்கைக்கு முத்தமிட்டு நகர்ந்தனர்.

பிறகு இனெஸின் உடல் அல்கோப்கா மடாலயத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஏகப்பட்ட மதச்சடங்குகளுக்குப் பிறகு அவளது உடல் அலங்கரிக்கப்பட்ட கல்லறையில் வைத்து மூடப்பட்டது. அடுத்த ஆறே ஆண்டுகளில் தனது 46-வது வயதில் அரசர் பீட்டரும் இறந்துபோனார். இனெஸின் கல்லறைக்கு எதிரிலேயே அவளைப் பார்க்கும் கோணத்திலேயே பீட்டரின் உடலும் அலங்கரிக்கப்பட்ட கல்லறையில் வைக்கப்பட்டது.

ஏன்?

இறுதித் தீர்ப்பு நாளன்று, உயிர்த்தெழும்போது பீட்டரும் இனெஸும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி எழ வேண்டும் என்பதற்காக.

ஆம், இப்படியும் ஒரு காதல் கதை.

(வருவார்கள்)