Published:Updated:

ந.முத்துசாமி - புஞ்சை கிராமத்து வாழ்க்கையை விமர்சனமின்றிப் படைத்தவர்! கதை சொல்லிகளின் கதை பாகம் - 34

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ந.முத்துசாமி - புஞ்சை கிராமத்து வாழ்க்கையை விமர்சனமின்றிப் படைத்தவர்! கதை சொல்லிகளின் கதை பாகம் - 34
ந.முத்துசாமி - புஞ்சை கிராமத்து வாழ்க்கையை விமர்சனமின்றிப் படைத்தவர்! கதை சொல்லிகளின் கதை பாகம் - 34

ந.முத்துசாமியின் கதைகளின் அடையாளம் எது? `கதை சொல்வதில்' அவருக்கு ஆர்வமில்லை. தொகுப்பின் முன்னுரையில் அவரே குறிப்பிடுவதுபோல ``நீர்மையின் பாத்திரம் வெளிச்சலனங்கள் அற்றது. உட்சலனங்களாலேயே ஆட்பட்டு வெளி மௌனத்தை மேற்கொண்டது. உட்குரலைக் கேட்பதற்கே செவிகள் தீட்டிவிடப்பட்டிருக்கின்றன.” இதுவே அவரது சிறுகதை பாணியாகத் தனித்த முத்திரையுடன் ஒவ்வொரு கதையிலும் விளங்குகிறது.

பாகம்1- வ.வே.சு.ஐயர் பாகம்-2- ஆ.மாதவய்யா பாகம்-3- பாரதியார்
பாகம்-4-புதுமைப்பித்தன் பாகம்-5- மௌனி பாகம்-6 - கு.பா.ரா
பாகம்-7- ந.பிச்சமூர்த்தி பாகம்- 8 - பி.எஸ்.ராமையா பாகம்- 9 - தொ.மு.சி. ரகுநாதன்
பாகம் -10- அறிஞர்.அண்ணா பாகம்-11- சி.சு.செல்லப்பா    பாகம்-12- ந. சிதம்பர சுப்ரமணியன்
பாகம் - 13 - எஸ்.வி.வி பாகம்-14-  தி.ஜ.ரங்கராஜன் பாகம்- 15.1  கல்கி
பாகம்-15.2 கல்கி பாகம்- 16- ராஜாஜி பாகம்-17 -அநுத்தமா
பாகம்18.1-கு.அழகிரிசாமி பாகம் 18.2- கு.அழகிரிசாமி பாகம் 19- கிருஷ்ணன் நம்பி
பாகம்-20- ல.சா.ரா பாகம்-21 - விந்தன் பாகம்-22-  மா.அரங்கநாதன்
பாகம்-23- ஜி.நாகராஜன் பாகம்- 24-  பெண் படைப்பாளிகள் பாகம்-1 பாகம்-25 - பெண் படைப்பாளிகள் பாகம்-2
பாகம்- 26 - ஆ.மாதவன்  பாகம்-27 - ஜெயகாந்தன் பாகம்-28 - கிருத்திகா
பாகம்-29 தி.ஜானகிராமன் பாகம்-30- அசோகமித்திரன் பாகம்-31-

எம்.வி.வெங்கட்ராம்

பாகம்-32 இந்திரா பார்த்தசாரதி பாகம்-33 - சார்வாகன்

 

சிறந்த நாடக ஆசிரியராக நன்கு அறிமுகமான பத்ம ஸ்ரீ ந.முத்துசாமி, நுட்பமான சிறுகதையாசிரியர் 30-க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். அவருடைய சிறுகதைகளுக்காக, தமிழக அரசின் விருதும் பெற்றுள்ளார். அவருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகளை க்ரியா பதிப்பகம் 1984-ம் ஆண்டில் வெளியிட்டது.

1936-ம் ஆண்டு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் மாயவரம் அருகில் உள்ள புஞ்சை கிராமத்தில் பிறந்தார். இரண்டாம் ஆண்டு இன்டர்மீடியட் படித்துக்கொண்டிருந்தபோது, படிப்பைத் தொடராமல் சென்னைக்கு வந்துவிட்டார். வெங்கடரங்கம்பிள்ளை தெருவுக்கு அருகில் இருந்த மீனவர் குப்பத்தில் வசித்துவந்தார். பக்கத்தில் விக்டோரியா ஹாஸ்டலில் தங்கி பிரசிடென்சி கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்த கவிஞர் சி.மணியுடன் நட்புகொண்டு, இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டார். சி.சு.செல்லப்பாவின் `எழுத்து’ இதழே அவருக்கு இலக்கிய ஆசான் என்று அவரே குறிப்பிடுவார்.

```எழுத்து’ ஒரு லட்சியமாக இருந்தது. `எழுத்து’வின் புதுக்கவிதைகள் லட்சியமாக இருந்தன. புதுக்கவிதைக்கு எதிர்ப்பு தெரிவிப்போருக்கு எதிராக ஆயுதம் பூண்டு யுத்தத்துக்குத் தயாராக இருப்பவனைப்போல, மனம் ஆயத்தநிலை கொண்டிருந்தது; சி.சு.செல்லப்பா என்கிற தளபதிக்குப் பின்னே அணிவகுத்து நிற்பதைப்போல இருந்தது. சி.சு.செல்லப்பாவிடம் கேட்ட கதை விமர்சனங்கள், அவர் எழுதியதைப் படித்ததைவிட நேரில் சொல்லக்கேட்ட விமர்சனங்கள் என்னை மெள்ள மெள்ளத் தயாரித்துக்கொண்டு வந்திருந்தன.”

அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்கு க.நா.சுப்பிரமணியனிடம் முன்னுரை வாங்க ஆசைப்பட்டு, அவரிடம் எழுதி வாங்கியும், பதிப்பாளர் அதைப் போட மறுத்ததால் அந்தத் தொகுப்பையே போட வேண்டாம் என மறுத்தவர் ந.முத்துசாமி. ஆகவே, மேலும் இரண்டு ஆண்டுகள் தாமதமாகி முதல் தொகுப்பான `நீர்மை' வெளியானது. நண்பர்களோடு செய்த விவாதங்கள், இலக்கிய அரட்டைகள் இவையே தனக்குப் பயிற்சியாக அமைந்ததாகக் கூறுகிறார். சி.சு.செல்லப்பாவுடன் இவருக்கும் இவரது நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக, இவருடைய குழுவினர் `நடை' என்கிற புதிய இதழைத் தொடங்கினார்கள். நடை, ஞானரதம், எழுத்து, கசடதபற, கணையாழி போன்ற சிற்றிதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதினார்.

புஞ்சை கிராமத்து வாழ்க்கையே அவருடைய எல்லாக் கதைகளிலும் வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்படுவதைக் காண்கிறோம். சென்னை நகர வாழ்க்கை சார்ந்தும் ஓரிரு கதைகள் எழுதியுள்ளார். புஞ்சை வாழ்க்கை என்பது, பணக்கார விவசாயியாக இருக்கும் பிராமணக் குடும்பத்தின் பையனாகப் பிறந்த சிறுவனின் பார்வையில் சொல்லப்படுகிறது. ``இது புஞ்சைக்கும் எனக்கும் உள்ள உறவுமுறையில் உள்ள ஒரு சிக்கல். எப்போதும் அது வெளியீட்டுக்கு மனதில் காத்துக்கொண்டே இருக்கிறது. அதன் பெயர் சொல்லி அதற்கு அடையாளம் உண்டாக்க வேண்டும் என்ற வற்புறுத்தலோடு இருந்துகொண்டிருக்கிறது. `நை... நை' என்று அலுத்துக்கொண்டு சவலைக்குழந்தையைப்போல இருக்கிறது. அதற்கு உண்டான இடத்தில் அது இருக்க வேண்டும். அதற்கு பெரிய இடமாக வேண்டுமாம். எல்லாக் கதைகளிலும் வந்தாலும் ஆசை தீர்ந்துபோய்விடவில்லை. நாடகங்களிலும் வர வேண்டுமாம்.”

பொதுவாக, பால்யகால வாழ்வும் நினைவுகளும் ஒரு படைப்பாளியின் மனதில் ஆழமான, அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துவது இயல்பு. அந்த வாழ்வை அதே இளம்பிராயத்து மனநிலையோடு மட்டுமே சொல்பவர் உண்டு. வளர்ந்துவிட்ட இன்று அதை மீள்பார்வை செய்து சொல்பவரும் உண்டு. ந.முத்துசாமி சென்னைக்குக் குடிபெயர்ந்த பிறகு புஞ்சை கிராமத்துடனான தொடர்பு அறுந்துவிடுகிறது. ஆனாலும் நாடகத்திலும் கதைகளிலும் அது இன்னும் இடம் கேட்டு அழுகிறது என்கிறார்.

``ஒரு காலகட்டத்தோடு வளர்ச்சி குன்றிப்போனதாக பழைய மனிதர்களால் நிரம்பியதான அது, நிகழ்காலத்தில் வந்து அழுகிறது. எனக்கு அதன் நிலை புரிகிறது. என்றாலும் அதன் அழுகையை நிறுத்த முடியவில்லை. ஒரே ஓலம். அதைவிட்டு நான் விலகி வந்துவிட்டேன். அது வேறு மனிதர்களால் நிரப்பப்பட்டுவிட்டது. அவர்களோடு நான் சேர்ந்து வளரவில்லை என்பதால், எல்லோரும் எனக்கு அந்நியமாகிவிட்டார்கள். பழைய மனிதர்கள் ஒவ்வொருவராக உதிர்ந்துபோய்விட்டார்கள். ஊர் எனக்கு சொந்தமாகத் தோன்றினால், அதன் இன்றைய குடிமக்களுக்கு நான் அந்நியமானவனாகவே தோன்றப்போகிறேன் என்ற அவலத்தை நினைத்து மனம் புழுங்குகிறேன்.”

இது ஒரு காலகட்டத்தின் சிக்கல்தான். பிழைப்புக்காக இடம்பெயரும் மனிதர்களுக்கு ஏற்படும் உளவியல் நெருக்கடி. தன் ஆதி அடையாளங்களைத் தேடும் மனித மனதின் துயரம். ந.முத்துசாமி என்கிற உயர் வகுப்பில் பிறந்த நடுத்தரவர்க்க மனிதர் தன் ஆதிநிலையைத் தேடும் உள்ளுணர்வைக் கதைகளாக எழுதிக் கரைத்துவிட முயல்கிறார். இளமைக்காலத்து மனப்பதிவுகளை எல்லாம் காட்சிகளாக விரித்துக்கொண்டே செல்கிறார் தன் கதைகளில். ஆனால், துயரத்தின் சாயல் ஏதுமின்றி. அப்புறம் எது கதை என்பது குறித்து சி.சு.செல்லப்பாவிடம் கற்ற பாடம் வேறு இருக்கிறது. அது கதையை எப்படிச் சொல்வது என்பதில் தீர்மான பங்குவகிக்கிறது. நிலவுடைமைச் சமூகமாக இருந்த புஞ்சை வாழ்வின் அரசியல், பொருளாதாரப் பின்புலத்தைச் சொல்லக் கூடாது. `உட்குரல்’ என்கிற பூடகத்தினூடாகப் பயணிப்பதே கதை என்கிற நம்பிக்கை அவரை வழிநடத்துகிறது. ஆகவே, 40-களின் தஞ்சை வட்டாரப் பொதுவாழ்வின் போராட்டங்களோ சாட்டையடியோ சாணிப்பாலோ அவர் எழுதிய ஒரு கதையிலும் வந்துபோகக்கூட இல்லை.

ந.முத்துசாமியின் கதைகளின் அடையாளம் எது? `கதை சொல்வதில்' அவருக்கு ஆர்வமில்லை. தொகுப்பின் முன்னுரையில் அவரே குறிப்பிடுவதுபோல ``நீர்மையின் பாத்திரம் வெளிச்சலனங்கள் அற்றது. உட்சலனங்களாலேயே ஆட்பட்டு வெளி மௌனத்தை மேற்கொண்டது. உட்குரலைக் கேட்பதற்கே செவிகள் தீட்டிவிடப்பட்டிருக்கின்றன.” இதுவே அவரது சிறுகதை பாணியாகத் தனித்த முத்திரையுடன் ஒவ்வொரு கதையிலும் விளங்குகிறது.

`40-களில் சிறுவனாகப் புஞ்சை கிராமத்தில் வாழ்ந்தபோது கொண்டிருந்த அதே பால்யகாலப் பார்வையுடனே தன் சிறுகதைகளை எழுதியுள்ளார். பால்யம் அழியாத, பால்யத்தை இழக்காத படைப்பாளி என்று இவரைச் சொல்லலாம்.

இப்போது `நீர்மை’ கதையைப் பார்ப்போம்.

புஞ்சை கிராமத்தில் நடக்கும் கதை இது. 10 வயதில் வீணாகப்போய்விட்ட ஒரு பெண், இப்போது கிழவியாகி 90 வயது தாண்டி செத்துப்போகிறாள். யாரோடும் பேசாமல் ஒதுங்கி வாழும் அவளைப் பற்றிய கதையா, அவளைப் பின்தொடரும் சிறுவனான, கதை சொல்லியின் நினைவலைகளா என மயக்கம்கொள்ளவைக்கும் ஒரு கதை. வெள்ளைக்காரன் காலத்தில் ஆரம்பித்து இன்று வரை நீளும் இந்தக் கதையின் இடையில் 1947 வருகிறது. அக்ரஹாரத்து வாத்தியார் தாழ்த்தப்பட்ட மக்களையெல்லாம் ஊர்வலமாக அழைத்துக்கொண்டு அக்ரஹாரத்துக்குள் வருகிறார். ஆனால், அது அந்த வீணாப்போன பெண்ணின் எதிரே வருகிற ஊர்வலம் என்கிற அளவோடு கடந்துபோய்விடுகிறது. இந்த அரசியல் முக்கியத்துவம்மிக்க ஓர் உள்ளூர் நிகழ்வு, வெகு அலட்சியமாகக் கடந்து செல்லப்படுகிறது. ஆசிரியருக்கு அது முக்கியமில்லையே!

ஆனாலும் கதைக்குள் நடுத்தர உயர்சாதிக் குடும்பத்துத் தாய் ஒருத்தியின் ஒருநாள் பாடு மிக நுட்பமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நாம் கதை எனக் கருதாமல் அந்த வாழ்வுக்குள் வெகு இயல்பாக நுழைந்துவிடுகிறோம். வீணாப்போன பெண், தன் வீட்டுக்குத் தயிர் வாங்க வருவதோடு தொடங்கும் இந்தக் காட்சி, `நீர்மை’ கதையில் தனித்து ஒளிரும் பகுதி என்பேன்.

``தினமும் ஒருமுறையாவது அவளைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு எங்கள் வீட்டிலேயே இருந்தது. பால், தயிர் வாங்குவதற்கு அவள் வருவாள். ஒரு தேவையில் இது அவளுக்குப் பழக்கமாகியிருந்தது. தினமும் அம்மா தயிர் கடைந்துகொண்டிருக்கும்போதே வருவாள். நான் அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து மோரில் மத்து துள்ளுவதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். இடையிடையில் அம்மாவுக்கு அடுப்பில் வேலை இருக்கும். காலையில் கறந்த பால் பொறை ஊற்ற, வறட்டி வைத்து கணப்புபோல் எரியும் அடுப்பில் காய்ந்துகொண்டிருக்கும். தூசு தட்டிய வறட்டியாலேயே பாலை மூடியிருப்பாள். அதிகம் எரியும்போது பாலில் ஆடை கெடாமலிருக்க அடுப்பைத் தணிக்கவும், அணையும்போது வறட்டியைத் திணித்துத் தூண்டவும் மத்தைக் கட்சட்டியில் சாத்திவைத்துவிட்டு எழுந்து போவாள் அம்மா.

கயிறு ஓடித் தேய்ந்த மத்தின் பள்ளங்களில் கயிற்றைப் பொருத்திப் பார்க்க வேண்டும் எனக்கு. அம்மாவைப்போல், மத்து மோரின் மேலே மிதந்து சிலுப்பாமலும் அமிழ்ந்து கச்சட்டியின் அடியில் இடிக்காமலும் கயிற்றின் மேல் கயிறு ஏறிக்கொள்ளாமலும் கடையும் வித்தையைச் செய்து பார்க்க வேண்டும். என்னை அறைந்து விலக்க அம்மா திரும்பி வருவாள். அந்தத் தூண் அடியிலேயே நான் சண்டியாக உட்கார்ந்துகொண்டிருப்பேன். உடம்பை வளைத்து அம்மாவின் அடியை வாங்கிக்கொள்வேன்.

அம்மாவுக்கோ தயிர் கடைந்துவிட்டுக் குளிக்கப் போகவேண்டும். சமையல் ஆரம்பிக்க வேண்டும். நேரமானால் `ஒருவேளைப் பிண்டத்துக்குத் தவம் கிடக்கவேண்டியிருக்கு இந்த வீட்டிலே’ என்பாள் பாட்டி. அவசர அவசரமாகத் தயிர் கடையவேண்டியிருக்கும். அது அவசரத்துக்குக் கட்டுப்படாது. விட்டு விட்டுக் கடைந்தால் வெண்ணெய் சீக்கிரம் விடுபடும் என்று அம்மா இதர வேலைகளுக்கு ஓடுவாள். சுற்றுவட்டக்காரியங்கள் ஆகும்போது தயிர் கடைவது கவனத்திலிருந்து பரக்கடிக்கும்.

``அம்மோவ்...” என்று மாட்டுக்காரப் பையன் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிக்கொண்டு போக வந்து கொல்லைப் படலுக்கு அப்பால் நின்று குரல் கொடுப்பான். படலைத் திறந்துவைத்துத் திரும்பி மாடுகளை அவிழ்த்துவிட வேண்டும் அவனுக்கு. அவனைக் காக்கவைக்க முடியாது. மாடுகள் ஒவ்வொன்றாக வயிற்றை எக்கிக் குனிந்து `அம்மா, அம்மா...’ என்று அழைக்க ஆரம்பித்துவிடும். கொட்டாய்த் தரை அதிரும்படி அவை கூப்பிடும். அந்நேரம் `யாராத்து மாடு... இப்படிக் கூப்பிடறது?’ என்று தெருவில், குரல் கேட்ட ஒவ்வொருவரும் மனதிலாவது நினைத்துக்கொள்வார்கள்.

கொட்டாயிலிருந்து அம்மா திரும்பும்போது என் தம்பி அடுப்படியில் இருப்பான். காய்ந்த அவரைச் சுள்ளிகளைக் கையில் அடுக்கிக்கொண்டு ஒவ்வொன்றாய் தணலில் திணித்து அவை பின்னால் புகைவிடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான். திரும்பிய வேகத்தில் அவன் முதுகில் ஒன்று வைப்பாள். கைச்சுள்ளிகளைப் பிடுங்கி அடுப்பங்கரைத் தொட்டி முற்றத்தில் எறிந்துவிடுவாள். பாலைத் திறந்து பார்த்துவிட்டு மூடுவாள். அவன் அழ மாட்டான். சுள்ளிகளைப் பொறுக்க ஓடுவான். அடுப்பங்கரையில் மூன்றில் ஒரு பங்கு தொட்டி முற்றம் எங்கள் வீட்டில்.

இதற்கும் `அம்பே’ என்று மாடுகளுடன் ஓடிவிடாமல் பிடித்துக் கட்டிய பசுங்கன்றுகள் கொட்டாயிலிருந்து குரல் கொடுக்கும். கொட்டாய் பெருக்குபவள் வர நேரமாயிற்று என்ற எச்சரிக்கை இது. தாய்கள் மேயப் போன தனிமையை வைக்கோல் போரில் அசை போட்டுத் தணிக்க அவற்றுக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருந்தது. கொட்டாய் பெருக்குபவளை திட்டிக்கொண்டு அவற்றை அவிழ்த்து வைக்கோல் போர்க்கொல்லையில் விரட்டிவிட்டு உட்கொல்லை படலைச் சாத்திக்கொண்டு வருவாள் அம்மா. திரும்புகாலில் தம்பி கிணற்றுத் தலையீட்டில் குனிந்து தண்ணீரைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் காணவேண்டியிருக்கும். அவன் தண்ணீரில் பூச்சிகள் கோலமிட்டு ஓடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பான். ஆர்வத்தில் அவன் பூச்சிகளோடு பேச ஆரம்பித்துவிடுவான். எந்த நிமிஷமும் அவன் குப்புறக் கவிழ்ந்து விழுந்துவிடலாம் என இருக்கும். ``சனியனே, என்ன அவப்பேரை வாங்கிவைக்கக் காத்திண்டிருக்கே” என்று அவனை இழுத்துக்கொண்டு வருவாள். அவன் நடக்காமல் அம்மாவின் இழுப்புக்குக் காத்து. கால்களைப் பதித்துக்கொள்வான். குளிப்பாட்ட தண்ணீரைத் துறையில் இழுபடும் கன்றுக்குட்டியைப்போல நிற்பான். அவன் இதை ரசித்து அனுபவிப்பான்.

இன்னும் தயிர் கடைந்தபாடில்லையே என்று அம்மா தினம் அலுத்துக்கொள்வாள். ``சனியன்களே பாட்டிண்டே போய்த் திண்ணையிலே ஒக்காந்திண்டிருங்களேன், சனியன்களே. ஒரு எடத்துல இருப்புக்கொள்ளாத சந்தம்” என்று வைவாள் அம்மா. இது பாட்டியின் காதுக்கு எட்டினால் ``ஏண்டி கொழந்தைகளே கரிக்கறே” என்பாள்.

நான் இழுத்துச் சிலுப்பிய தயிர், கச்சட்டிக்குப் பக்கங்களில் சிந்தியிருக்கும். இப்போது அம்மாவைக் கண்டதும் ஓடத்தோன்றும். அம்மா இப்போது அடித்தால் அழுவேன். சிந்திய தயிரைத் துடைத்துவிட்டுக் கை கழுவப் போகும்போது தொட்டியில் தண்ணீர் இருக்காது. குளிக்கப் போகுமுன் கொல்லைக் கிணற்றிலிருந்து அடுப்பங்கரைத் தொட்டிக்குத் தண்ணீர் கொண்டுவந்து கொட்ட வேண்டும். எச்சில் கை கழுவும் இரண்டாம் கட்டுத் தொட்டிக்கும் நிரப்ப வேண்டும். முன்பே அவற்றைக் கழுவிக் கொட்டிவிட்டதை அம்மா மறந்துபோயிருப்பாள். அநேகமாக, தினம் எங்கள் இருப்பு இடம் மாறியிருப்பதைத் தவிர அவள் காரியங்கள் இந்த விதமாகவே சற்று முன்னும் பின்னுமாய் இருந்துகொண்டிருக்கும். இந்நேரத்தில் தினமும் ஒருமுறையேனும் அலுப்பின் உச்சத்தில் ``புஞ்சையான் குடும்பத்துக்கு ஒழைக்கிறத்துக்கின்னே பொறப்பெடுத்தாச்சு” என்று நொந்துகொள்வாள் அம்மா.

பெண்நிலை அரசியல் என்று மெனக்கெட்டு அவர் எதுவும் பேசாவிட்டாலும், இந்தக் காட்சி ஒரு வாழ்வியலை முன்வைக்கிறது. அதன்வழி பெண்ணின் நிலை குறித்துப் பேசுகிறது. கலையாக அது வாசகர் மனதைத் தைக்கிறது.

`நடப்பு’ என்கிற கதையில் ஒரு பண்ணையார் வீட்டுப்பையன் கொல்லையில் உள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்துவிடுகிறான். நமக்கு அந்தப் பையன்தான் இப்போ பெரியவனாகி கதை சொல்கிறான். கொஞ்ச நேரம் கழித்தே குடும்பத்தார் அதை அறிகிறார்கள். ஊரே கொல்லையில் கூடி நிற்கிறது. பண்ணையார் அப்போது வீட்டில் இல்லை. அவருக்குத் தகவல் சொல்ல ஒருவர் ஓடுகிறார். அவர் கிளம்பி வருவதற்குள் பண்ணையாருக்குப் பல வகையில் ஊழியம் செய்யும் கண்ணுச்சாமி பிறர் உதவியுடன் கயிறு கட்டிக் கிணற்றில் இறங்கித்தான் உடம்பு முழுக்கச் சிராய்ப்பும் ரத்தக்காயங்களும் பெற்றுக் காப்பாற்றிவிடுகிறார்.

``நாங்கள் மேலே வந்துவிட்டோம். செம்பனார்கோயிலிலிருந்து அப்பாவும் வந்துவிட்டார். என்னை வாங்கிக்கொண்டார். என்மேல் வழிந்த ரத்தத்தைக் கண்டு அவர் பயந்துவிட்டாராம்.''

``கண்ணுசாமி அண்ணன் கை ரத்தங்க'' என்று கூட்டத்தில் எவனோ சொன்னானாம்.

ரத்தம் வடியும் வெலவெலத்த கை நடுங்கிக்கொண்டிருந்த கண்ணுசாமியைப் பார்த்து அப்பா, ``கண்ணுசாமி என் பிள்ளையே காப்பாத்தினே. இனிமே நான் இருக்கும் வரைக்கும் ஒனக்கு ஒரு மாசம் ஒரு கலம் நெல்” என்றாராம்.

கூடி நின்று இருந்தவர்கள் எல்லோரும் அப்பாவைப் பாராட்டி இருக்கிறார்கள். கண்ணுசாமி பலவீனமாகச் சிரித்திருக்கிறான். அவன் இறக்கும் வரைக்கும், தான் இறங்கிய அனுபவத்தை எனக்குக் கதை கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தான். அவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று நான் ஓடியிருக்கிறேன்” என்று `நடப்பு' கதை முடிகிறது.

உயிர் காத்த பெரியவர் கண்ணுசாமியை கதை சொல்லி `அவன் இவன்' என்று ஏகவசனத்தில் குறிப்பிடுவது இன்றைய வாசகர்களாகிய நமக்குக் கடுமையாக உறுத்தும் சாதி அரசியலாகிறது. மகனைக் காத்த கண்ணுசாமிக்குப் பண்ணையார் தன் சொத்தில் ஒரு சிறு பகுதியைக்கூட எழுதிவைக்கிறேன் என்று சொல்லவில்லை. மாசம் ஒரு கலம் நெல்தான் தருகிறேன் என்கிறார். ரொம்ப கணக்குப் பார்த்துத்தான் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் பண்ணை என்று நமக்குத் தோன்றுகிறது.

`சூழ்நிலை' என்றொரு கதை. அது சென்னையில் வாழும் மத்திய தர வர்க்கத்து மனிதன் ஒருவன் எளிய குப்பத்துச் சிறுவர்களோடு சூழ்நிலை காரணமாகச் சிறுபகை கொள்ளும் நிகழ்வைச் சொல்கிறது. மெள்ள மெள்ளப் பகைமை உருவாவதை அற்புதமாகச் சித்திரித்திருக்கும் கதை. எந்தச் சார்பும் எடுக்காமல் கதை சொல்லி கதையைச் சொல்லியிருப்பது முக்கியம். தப்பி ஓடும் மத்திய தர வர்க்கத்து மனநிலை அபாரமாகச் சித்திரிக்கப்பட்ட கதை.

`வண்டி' என்கிற கதை, விரிந்துகொண்டே செல்லும் காட்சிப் படிமங்களின் தொடர்போல அமைகிறது. தன்னுடைய குருநாதர் சி.சு.செல்லப்பாவின் கதைகளின் சாயல்கொண்ட கதை இது. அகம், புறம் என இருபக்கமும் மாறி மாறிப் பயணிக்கும் கதை இது.

போட்டோகிராஃபிக் யதார்த்தம் என்பதாக ந.முத்துசாமியின் கதைகள் 40-களின் புஞ்சை கிராமத்து வாழ்க்கையை விமர்சனமின்றிப் படைத்துக்காட்டுகின்றன என்று சொல்லலாம்.

ஆரம்பத்தில் `சிம்ஸன்' டிராக்டர் கம்பெனியில் சிறிதுகாலம் பணியாற்றிய பிறகு, அமெரிக்காவின் `போர்டு ஃபவுண்டேஷன்' உதவியுடன் `கூத்துப்பட்டறை' என்ற நவீன நாடகத்துக்கான அமைப்பை முத்துசாமி உருவாக்கினார். கூத்துப்பட்டறை, இதுவரை தமிழ் நாடகங்களுடன் முக்கியமான மொழிபெயர்ப்பு நாடகங்களையும் அரங்கேற்றியிருக்கிறது. தமிழின் தொன்மைக்கலையான கூத்தை நாடகத்துடன் இணைத்தது மற்றும் பரவலாக அறியச் செய்ததில் முத்துசாமிக்கு பெரும் பங்குண்டு.

1958-ம் ஆண்டில் அவருக்கு அவயாம்பாள் (குஞ்சலி) அவர்களுடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு நடேஷ் (புகழ்பெற்ற ஓவியர், அரங்க வடிவமைப்பாளர்), ரவி என்று இரு புதல்வர்கள். 2000-ம் ஆண்டின் சங்கீத நாடக அகாடமியின் விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களுள் இவரும் ஒருவர். இவரது `கூத்துப்பட்டறை' என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்துவருகிறது. தற்போது சென்னையில் வசிக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு