Published:Updated:

"மத அடிப்படைவாதிகளுக்கும் சில எழுத்தாளர்களுக்கும் வித்தியாசமில்லை!" - மனுஷ்யபுத்திரன்

"மத அடிப்படைவாதிகளுக்கும் சில எழுத்தாளர்களுக்கும் வித்தியாசமில்லை!" - மனுஷ்யபுத்திரன்
"மத அடிப்படைவாதிகளுக்கும் சில எழுத்தாளர்களுக்கும் வித்தியாசமில்லை!" - மனுஷ்யபுத்திரன்

“என்னுடைய நோக்கம் என்பது மதங்களை எதிர்ப்பதோ மத உணர்வுகளை எதிர்ப்பதோ அல்ல. மத அடிப்படை வாதங்களை எதிர்ப்பதுதான்” மனுஷ்ய புத்திரன்...

கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய “ஊழியின் நடனம்” என்ற கவிதை இந்து தெய்வத்தைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்ற ஹெச்.ராசாவின் பதிவுக்குப் பிறகு பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார். இந்தப் பிரச்னை தொடங்கி மூன்று நாள்களுக்குமேல் ஆகிவிட்டது. இப்போதாவது பிரச்னை ஓய்ந்திருக்கும் என்று சென்னை புத்தகத் திருவிழாவில் பேச்சைத் தொடங்கினேன்.  அதுவரை எழுத்தாளர் பாஸ்கர் சக்தியுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவரின் முகம் மிக இறுக்கமாக மாறியது... இடையே இடையே வந்த வாசகர்களுக்கு கையெழுத்துப்போட்டுக் கொண்டும் அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டும் என்னிடம் உரையாடினார்.

 " ‘ஊழியின் நடனம்’கவிதை எழுதின சூழல் என்ன, இந்தக் கவிதை எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டது.?"
"நான் வெறுமனே வண்ணத்துப்பூச்சிகள் பற்றியோ, பெண்களைப்பற்றியோ, அந்தரங்கப் பிரச்னைகள் பற்றியே எழுதிக்கொண்டிருந்தால் எந்தப் பிரச்னையும் வராது. அப்படியில்லாமல் சமகாலத்தினுடைய அரசியல், சமூக நடப்புகளுக்கு எதிர்வினையாற்றுபவையாக நான் என்னுடைய கவிதைகளை எழுதுகின்றேன். அதனால்தான் என்னுடைய கவிதைகள் தொடர்ந்து பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. ‘ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்பினால்தான் கேரளா இந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது’ என்ற குருமூர்த்தியின் மிக மோசமான பதிவுக்கு எதிர்வினையாகவே இந்த ஊழியின் நடனம் என்ற கவிதை எழுதப்பட்டது.‘பெண்ணினுடைய மாதவிடாய் என்பது பிரளயங்களை ஏற்படுத்தும் சக்தி மிக்கதா?’ என்று ஒரு பெண்ணைப் பார்த்துக் கேள்வி கேட்கும் விதமாக இந்தக் கவிதை எழுதினேன்.  கவிதை வாசிப்புப் பழக்கம் உள்ள அனைவரும் வாசித்தவுடனேயே புரிந்துகொள்ளும் அளவிற்கு இதன்பொருள் மிக எளிமையானது. இந்தக் கவிதையில் தேவி என்ற சொல் வருகிறது. அது பெண்ணைக் குறிப்பதுதானே தவிர கடவுளைக் குறிப்பதல்ல. ஆனால், இவர்கள் ‘தேவி’ என்பதைக் கடவுள் என்பதாகத் திரித்துவிட்டார்கள். கமலஹாசனின் ‘தேவி ஸ்ரீதேவி’ என்றொரு பாடல் இருக்கிறது. அதில் இரட்டை வசனங்களும் இருக்கின்றன. அப்போது அந்தப் பாடல் கடவுளைப் பற்றியது என்று பொருள்கொள்ளலாமா? முதலில் இப்படி என்னுடைய கவிதைக்கு நானே விளக்கம் சொல்வதை அவமானமாக நினைக்கிறேன். வெறுப்பு அரசியல் ஒன்றை மட்டுமே மையமாக வைத்து, அதிலிருக்கும் ஒரு சொல்லையோ ஒரு வாக்கியத்தையோ அந்தப் பிரதியிலிருந்து வெளியே எடுத்து அதற்கு நேரெதிரான பொருளில் பரப்பிவிடுவார்கள். அப்படி தேவி என்ற ஒரு சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு இவர்கள் எப்படி ஒரு கலை இலக்கியப் பிரதியைத் தங்களுக்கு ஏற்ற மாதிரி திரித்துக்கொள்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இது, தீவிர எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல விஜய் போன்ற பிரபல நடிகர்களுக்கும் இப்படி நடக்கிறது. ஜி.எஸ்.டி-க்கு எதிராக ஒரு வசனம் அவர் படத்தில் இடம்பெற்றதால் அவரது கிறிஸ்துவ அடையாளத்தை முன் வைத்து அவர் தாக்கப்பட்டார்”

“அப்படியெனில் அந்தக் கவிதையை  எவரும் படிக்காமல்தான் இவ்வளவு பெரிய பிரச்னையை உருவாக்கிவிட்டார்கள் என்கிறீர்களா. அதற்கான தேவை என்ன இருக்கிறது?”

மத அடிப்படைவாதிகள் எப்பொழுதும் எழுதப்பட்ட எந்த இலக்கியத்தையும் படிக்க மாட்டார்கள், அதிலுள்ள கருத்துகளைக் கவனிக்க மாட்டார்கள். சல்மான் ருஷ்டிக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடி அவரின் நாவலைத் தடைசெய்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது ‘ சாட்டானிக் வெர்ஸஸை’ படித்திருந்தவர்கள் எத்தனைப் பேர்? உலகம் முழுக்க இது இப்படித்தான் நடக்கிறது.  பெருமாள் முருகனுக்கு எதிராகக் கடுமையாக எதிர்ப்பு வந்தபோதும் அவருடைய  நாவலை யாரும் படித்திருக்கவில்லை. அர்ஜுன் சம்பந்தும் நானும் பெருமாள் முருகன் விஷயம் தொடர்பாக ஒரு விவாதத்தில் பங்கேற்றபோது இந்த ‘நாவலைப் படித்தீர்களா?’ என்று கேட்டால் அவர் ‘நான் படிக்கவில்லை. ஆனால் இதில் இந்து மத பெண்களை கொச்சைப்படுத்திவிட்டது  என்று கேள்விப்பட்டேன்’ என்றார். இவர்கள் படிப்பதில்லை என்பதற்கு இதுதான் உதாரணம். இப்படித் திட்டமிட்ட வகையில் ஒரு பயத்தை உருவாக்கி, போலி பிம்பத்தைக் கட்டமைப்பது என்பது எல்லா மதத்திலும் இருக்கும் அடிப்படைவாதப்போக்கு. .  இதேதான் இப்பொழுது இந்தக் கவிதைக்கும் நடக்கிறது. அவர்கள் படிக்கவும் இல்லை. படித்தவர்களுக்குப் புரியவுமில்லை. நம்முடைய மதத்தைக் கொச்சைப் படுத்திவிட்டார்கள்  என்று மக்கள் மத்தியில் பரப்பி இதன்மூலம் மதரீதியாக மக்களை ஒருங்கிணைத்து வாக்கு வங்கி அரசியலை உருவாக்குவது, அதன்மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்று7வதும் அரசியல் ஆதாயம் தேடிக்கொள்வதும்தான் இவர்களின் நோக்கம். அதனால்தான் கடந்த நான்கு ஆண்டுகளில் வேறு எந்தப் பிரச்னையையும்விட வகுப்புவாதப் பிரச்னைகள் பற்றி அதிகமா எல்லாத் தளங்களிலும் விவாதிக்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு.”

“தேவி என்ற சொல் தெய்வம் என்ற பொருளிலும் புரிந்துகொள்ளப்படும் என்பது நிச்சயம் உங்களுக்குத் தெரியும் தானே.?”

“நாம் பயன்படுத்துகிற ஒவ்வொரு சொல்லுமே பண்பாட்டு ரீதியில் பல்வேறு மாறுபட்ட அர்த்தங்களை உடையது. ஒரு சொல் எந்தப் பின்புலத்தில் என்ன நோக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதை வைத்துத்தான் அந்தச் சொல்லின் அர்த்தத்தைக் காண வேண்டுமே தவிர அவரவர் மனம்போன போக்கிலெல்லாம் அர்த்தத்தைக் கற்பித்துக்கொள்ள முடியாது. இன்னொன்று ஒரு சொல்லிற்கு என்னென்ன அர்த்தத்தில் பொருள் கொள்ளப்படும் என்று யோசித்து ஒரு கவிதையையோ கதையையோ எழுத வேண்டும் என்று சொன்னால் எந்தச் சொல்லையும் பயன்படுத்தவும் முடியாது. எந்தப் படைப்பும் வெளிவரவும் முடியாது. இந்தக் கவிதையைக் கவனமாக படிக்கக்கூடிய எவருக்கும் நன்றாகப் புரியும் எந்த நம்பிக்கையும் புண்படுத்தக்கூடிய சொற்கள் இல்லை என்று. எனவே இது முழுக்க முழுக்க மதரீதியாக அர்த்தம் கற்பிக்கப்பட்டு அதன்மூலம் அரசியல் ஆதாயம் பார்க்கும் முயற்சியே. ஒரு சொல்லுக்கு தமிழில் மட்டுமில்லை இந்திய உலக மொழிகள்  அனைத்திலும் பல்வேறு அர்த்தங்கள் இருக்கும். அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் படைப்பை உருவாக்க வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமற்றது.

“ஒருவேளை அப்துல் ஹமீது என்ற பெயரில் இல்லாமல் மனுஷ்யபுத்திரன் என்ற பெயரில் எழுதியிருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காது என்று நினைக்கிறீர்களா?”
“நான் மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் எழுதியிருந்தால் மட்டும் ஹெச்.ராசா என்னைக் கூப்பிட்டு விழாவா எடுத்திருக்கப் போகிறார். ? ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். அடிப்படையில் நான் மதச் சார்பற்றவன். அதேசமயம் நான் ஒரு கலைஞனாக, எழுத்தாளனாக எல்லா மதச்சடங்குகளையும், நம்பிக்கைகளையும்,பண்பாடுகளையும் மதிக்கும் இயல்புடையவன்., கார்த்திகை தீபங்கள் பற்றி, தீபாவளியைப் பற்றி எத்தனைக் கவிதைகள் எழுதியிருக்கின்றேன். அதேபோல ஏசுவைப் பற்றி நெஞ்சை உருக்கும் பல்வேறு பிம்பங்களை என் கவிதைகள் மூலமாக உருவாக்கியுள்ளேன் என்பதை என்னுடைய கவிதைகளை எடுத்துப் பார்த்தால்தான் தெரியும். நான் வறட்டுத்தனமான கோட்பாடுகளின் அடிப்படையில் வெறுப்பு அரசியலைப் பரப்புபவன் அல்ல. என்னுடைய நோக்கம் என்பது மதங்களை எதிர்ப்பதோ மத உணர்வுகளை எதிர்ப்பதோ அல்ல. மத அடிப்படை வாதங்களை எதிர்ப்பதுதான். எனவே இது என்னுடைய பிறப்பின் அடிப்படையில் இந்துத்துவா அமைப்பினரால் எழுப்பப்பட்ட வெறுப்பு அரசியல் .

“எழுத்தாளர்களின் புரிதல் எப்படியிருக்கிறது?”
“இதற்கு ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துகிறேன். சார்லி ஹெப்டோ கார்ட்டூன் விசயத்தில்  நேர்காணலில் ‘பொதுவாக மதம் சார்ந்த விஷயங்களை விமர்சிக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டு ‘இஸ்லாம் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது இல்லை’ என்றும் சொல்லியிருந்தேன். ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு “பொதுவாக நாம் மதம் பற்றி விமர்சிக்கும்போது கவனமோடு இருக்க வேண்டும்’ என்பதை மட்டும் வைத்துக்கொண்டு ‘இவர் இஸ்லாமியர் என்றால் ஒரு நிலைப்பாடு எடுக்கிறார். மற்றவர் என்றால் ஒரு நிலைப்பாடு எடுக்கிறார்’ என்று கவிஞர் தாமரை போன்றவர்கள் அவதூறு செய்கின்றனர். இப்படித்தான் அவர்கள் புரிதல் இருக்கிறது. இதைப் பார்க்கும்போது அவர்களின்  பரிதாபமான அரசியல் விழிப்புஉணர்ச்சியை நினைத்து அவர்கள்மேல் பரிதாபம்தான் வருகிறது. மதவாதிகளுக்கும் இப்படியான எழுத்தாளர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை.”


“ஜெயமோகன் திமுக பேச்சாளரான மனுஷ்ய புத்திரன் இந்த விவகாரத்தில் எழுத்தாளர்கள் ஆதரவைக்கோரக் கூடாது என்று சொல்லியிருக்கிறாரே ?”

’’ அவருடைய இலக்கியப் படைப்புகள் எப்படிப் பிம்பங்களின் வழியாகச் செயல்படுகிறதோ அதேபோலத்தான் அவரது சமூக அரசியல் அபிப்ராயங்களும் செயல்படுகின்றன. அதற்குப் பின்னால் கோட்பாடு சார்ந்த எந்தத் தர்க்கமும் கிடையாது. என் கவிதையில் எந்தப் புண்படுத்தும் அம்சமும் இல்லை என்கிறார். தேவி என்ற படிமத்தில் எந்த அவதூறும் இல்லை என்கிறார். இந்துத்துவா அரசியலை இந்து மதம் குறித்து புரிதலை விமர்சிக்கிறார். கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறார். ஆனால் கடைசியில் திமுக இந்துமத வெறுப்பு கொண்ட கட்சி என்பதால் அந்தக் கட்சியைச் சேர்ந்த மனுஷ்ய புத்திரன் தாக்கப்படுகிறார் என்கிறார். அந்தத் தாக்குதலுக்கு உள்ளூர ஒரு நியாயத்தை உருவாக்குகிறார்.ஆனால், எனக்கோ ஜெயமோகனின் பெரும்பாலான சமூக இலக்கிய அபிப்ராயங்களில் எதிர்நிலைகள் இருந்த போதும்கூடப் பல சந்தர்ப்பங்களில் அவரது கண்ணியத்திற்காகவும் கருத்து சுதந்திரத்திற்காகவும் நின்றிருக்கிறேன்.

“இதெல்லாம் எதிர்காலத்தில் உங்களின் எழுத்தில் எதாவது பாதிப்பை ஏற்படுத்துமா?”
“இஸ்லாமியப் பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுக்கப்படக் கூடாது’ என்ற உத்தரவை எதிர்த்துக் கட்டுரை எழுதியபோதும் சவுதி அரேபியல் லிசானா என்ற சிறுமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஒரு கட்டுரை எழுதியபோதும் இஸ்லாமிய அமைப்புகளால் மிகக் கடுமையாக அச்சுறுத்தப்பட்டேன். அதேபோல இளவசரன் திவ்யா விஷயத்தை ஆதரித்தபோது பாமக-வினரால் மிகக் கொடுமையான தாக்குதலுக்கு உள்ளானேன். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தபோது அதை எதிர்த்து மிகக் கடுமையாக விமர்சித்துக் கட்டுரை எழுதினேன். அவர் வெற்றி பெற்ற பின்னர் நாட்டைவிட்டே வெளியேற வேண்டும் என்றெல்லாம் எனக்கு மிரட்டல் விடப்பட்டது. விஸ்வரூபம் பிரச்னையின்போது கமலஹாசனின் ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தேன். மத அடிப்படைவாதிகள் என்னைக் கடுமையாக எதிர்த்தார்கள். அப்போது என்னை ஆதரித்த கமலின் ரசிகர்கள் அந்தத் திரைப்படம் வெளிவந்தபோது அது ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையும் தவறாகச் சித்திரிக்கிறது என்பதை நான்  பதிவு செய்தபோது மிக மோசமாக என்னை எதிர்த்தார்கள். இவ்வளவுக்குப் பிறகும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். ஏனென்றால் எழுதுவது என்பது நான் அல்ல. என் சமூகம்.” 

அடுத்த கட்டுரைக்கு