Published:Updated:

தாவோ

தாவோ
பிரீமியம் ஸ்டோரி
தாவோ

கவிதை: போகன் - படங்கள்: ஸ்ரீதர் பாலசுப்ரமணியம்

தாவோ

கவிதை: போகன் - படங்கள்: ஸ்ரீதர் பாலசுப்ரமணியம்

Published:Updated:
தாவோ
பிரீமியம் ஸ்டோரி
தாவோ

நான் எவற்றைப் பற்றியெல்லாம் எழுதாமல் இருக்கிறேன் என்றொரு கேள்வி இருக்கிறது
நான் ஒரு ஊருக்கு திடீரென்று சவப்பெட்டிகள் அதிகமாக வருவது பற்றி எழுதாமல் இருக்கிறேன்
எனது வெள்ளெழுத்துக் கண்ணாடியின் சக்தியை சோதிக்கச் சென்ற மருத்துவமனையின் மறுபுறம் குழந்தைகள் இறந்துபோவது பற்றி எழுதாமல் இருக்கிறேன்
அவர்களுக்கு சுவாசிக்கப் போதுமான அளவு காற்று இருந்ததா என்றும்...

நான் தொலைக்காட்சிப்பெட்டிகள் மூலமாக நஞ்சூட்டப்பட்டு இறந்த மனிதர்கள் பற்றியும், அறிந்திருந்தும் எழுதியதில்லை
மிக அச்சுறுத்தும் விதமாகத் திறந்துகொண்டு வீடுகளுக்கு வெளியே நிற்கும் அந்த பிரமாண்ட மிருகங்களின் அலுமினியவாய்களைப் பற்றியும்
நான் பெண்களின் உடல்துண்டங்கள் ஒவ்வொரு இணைய இணைப்பிலும் இலவசமாகக் கிடைப்பது பற்றியும் எழுதவில்லை

தாவோ

நான் சிறிய அநீதிகளைப் பற்றியே எழுதினேன் என்பார்கள்
அவற்றுக்கே எனக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது
அவை பெரிய அநீதிகளை மறைக்க அனுப்பப்பட்டவை என்று
எனக்குத் தெரிந்திருந்தும்...
நான் அந்தச் சிறிய காயங்களை உரத்த நிறங்களால் அலங்கரித்து
உங்களுக்கு அளித்தேன்.

என் கவிதைகளை சிலர் சிறுமிகளை வன்புணர்ந்து கொல்வதற்கு முன்பு உச்சரித்தார்கள் என்று சொல்லப்படுவதுண்டு

ஆனால் நான் ஒரு கட்டுப்பாடிழந்த கடவுள்
எனது சுக்கிலம் எங்கெல்லாமோ சென்று வீழ்கிறது

தாவோ


நான் என் கவிதைகள் எங்கு செல்கின்றன என்று கவனிப்பதில்லை
யார் யார் அவற்றை உபயோகப்படுத்துகிறார்கள் என்பதையும்...

நான் எவற்றையெல்லாம் கவனிக்க முடியும்?
நான் கவிஞன்
நான் தீர்க்கதரிசிக்கும் அவனது கடவுளுக்கும் அவனது சாத்தானுக்கும் பாதி தூரத்தில் இருப்பவன்
எனது அங்கியின் நுனியை யார் யார் தொடுகிறார்கள் என்று என்னால் கட்டுப்படுத்தமுடியாது
என்னை யார் யார் தொழுகிறார்கள் என்பது என் பிடியில் இல்லை
நான் எங்கெல்லாம் இருக்கிறேன் என்று ஒரு தகவலும் இல்லை.

உண்மையில் நீங்களும் நானும் பெரியதொரு மரத்தின் அடியில் இருக்கிறோம்
அதன் ஒரு நுனி இறந்துகொண்டிருக்கிறது
இலை இலையாய் மரம் இறந்து உதிர்ந்து என் தலை மேல் விழுகிறது
அதன் நிழல் வரிவரியாய்க் குறைந்துவருகிறது
நான் மட்டுமே அதனை அறிந்தவனாய் இருக்கிறேன்

உண்மையில் எனது ஒவ்வோர் அடியும் திரும்பிப் போவதாய் இருக்கிறது
நான் அதற்காகவே இந்த நீண்ட சாலையில் வந்தேன்
நான் வேறு எதையும் இங்கு செய்யமுடியாது என்பது எப்போதோ எனக்குச்  சொல்லப்பட்டுவிட்டது

ஆனாலும் நான் எழுதினேன்
எதையும் மாற்றாத சிறிய வரிகளை

இவ்விதமாக
நான் உங்களையும் என்னையும் கொல்கிறவர்களின் பாடகனாக மிக நீண்ட காலம் இருந்துவிட்டேன்.
அவர்கள் என் பாடல்கள் மூலமாக எனக்கான தண்டனையை எழுதினார்கள்,
உங்களுக்கான தண்டனைகளையும்.

ஆனாலும் நான் கவனிக்கிறேன்.
அவர்கள் என் பார்வையை முழுவதுமாய்ப் பிடுங்கிக்கொள்ளவில்லை
அது அவர்களது தண்டனையின் ஒருபகுதியாகும்.
நான் பார்த்தேன்.
பச்சிளங்குழந்தைகள் உயிரோடு பிடுங்கப்பட்டு உண்ணப்படுவதை
வளரிளம் பெண்கள் தங்கள் மார்பகங்களைப் பொசுக்கிக்கொள்வதை
தூக்குக்கயிறுகளின் நிழல்கள் வளர்ந்து ஒரு தேசத்தையே மூடிவிடுவதை
பூமியின் ஆழத்திலிருந்து அதன் உயிர்முட்டைகள் எடுக்கப்பட்டுக் கருக்கப்படுவதை

தாவோ

ஆனால் நான் என்னுடைய எல்லா வார்த்தைகளையும் எப்போதும் மழுங்காத ஒரு வாளின் கூரியநுனிகளுக்கு முன்பு மண்டியிடவைத்துவிட்டேன்
என் உயிரைக் காப்பாற்றிக்கொண்டு அவற்றைக் கொன்றுவிட்டேன்
பிறந்ததிலிருந்து என் மண்டை ஓட்டுக்குள் இருந்த தீ இவ்வாறாக
ஒருமுறை அலறலுடன் சுழன்று எழுந்து உயர்ந்து அணைந்தது

இப்போது நான் எந்த மாதிரியான கவிஞன்
அல்லது பாடகன் அல்லது மனிதன்
என்றொரு கேள்வியும் இருக்கிறதுதான்
முன்பே சொன்னதுதான், நான் எப்போதும் உதறிச் செல்கிறவனாகவே இருந்திருக்கிறேன்
எனது முதுகுத்தண்டு திரவத்துக்குள் எப்போது இந்தப் புழுக்கள் நுழைந்தன என்பது பற்றி எனக்குத் தெரியாது
அவை என்னை உயிரோடு வைத்திருக்கின்றனவா உயிரோடு தின்கின்றனவா என்பது பற்றியும் எனக்குத் தெரியாது   

நான் உங்களை உங்கள் சவக்குழிகளுக்குத் துரத்திவரவில்லை என்பதே என்னால் உங்களுக்குச் செய்யமுடிந்தது
நான் உங்கள்மேல் ஓங்கிய கொடுவாளாய் ஒருபோதும் இருக்கமாட்டேன்
என்பது மட்டுமே என்னால் இனி உங்களுக்குக் கொடுக்க முடிந்தது

இதோ நான் உங்கள் சாலைகளில்
தூர தேசங்களிலிருந்து நோய்தாக்கிய நாய்களைப் போல நீங்கள் துரத்தப்பட்டு ஓடிவரும் இந்தச் சாலைகளில்
துரோகத்தின் அடக்குமுறையின் பேராசையின் பயத்தின் குரோதத்தின் நீண்ட மரங்கள் வளர்ந்த இந்தச் சாலைகளில்
உங்களுக்கு எதிர்த்திசைகளில் நடக்கிறேன்

இங்கே வேட்டையாடப்படுகிறவரும் உங்களை வேட்டையிடுகிறவரும் ஒரே திசையில் குருதித்துளிகள் துள்ளி வீழ ஓடி முடிந்ததும் சூழும் அமைதியைக் கவனிக்கிறேன்
ஒரு கனத்த மழை பூமிக்கு வரும் முன்பு ஏற்படுத்திக்கொள்வது போல  இருண்ட அமைதி.
புவியின் அத்தனை உயிரினங்களும் தங்கள் நகங்களை மடக்கிக்கொண்டு அந்த அமைதியைச் செவிமடுக்கின்றன
எங்கிருந்தோ அதனை அருந்த வருவதுபோல
தாவித்தாவி சில பட்டாம்பூச்சிகள் வருகின்றன
நான் அவற்றை என் தோள்மீது அமர்த்திக்கொண்டு
முடிவேயில்லாது நீண்ட இருண்ட ஒரு பெரிய குமிழியிட்டு நொதிக்கும் கருப்பைக்குழிக்குள்
சென்று அமிழ்கிறேன்

ஒரே ஒரு செய்தியை மட்டும் உங்களுக்கு விட்டுவிட்டு

‘அமைதியடையுங்கள்
நானே உங்கள் உலகத்தின் கடைசிக்கவி’