Published:Updated:

“நெருக்கடி தருவது அவர்களின் வேலை... உடைத்தெறிவது எங்களின் வேலை”

“நெருக்கடி தருவது அவர்களின் வேலை... உடைத்தெறிவது எங்களின் வேலை”
பிரீமியம் ஸ்டோரி
“நெருக்கடி தருவது அவர்களின் வேலை... உடைத்தெறிவது எங்களின் வேலை”

சிறை மீண்ட டைசன் சொல்லும் பாடம்!

“நெருக்கடி தருவது அவர்களின் வேலை... உடைத்தெறிவது எங்களின் வேலை”

சிறை மீண்ட டைசன் சொல்லும் பாடம்!

Published:Updated:
“நெருக்கடி தருவது அவர்களின் வேலை... உடைத்தெறிவது எங்களின் வேலை”
பிரீமியம் ஸ்டோரி
“நெருக்கடி தருவது அவர்களின் வேலை... உடைத்தெறிவது எங்களின் வேலை”

“அது, எங்களின் ஈழச் சொந்தங்களுக்கான நினைவேந்தல்தான். அது ஒன்றும் போராட்டம் அல்ல. அப்படித்தான் மெரினாவில் ஏழு வருடங்களாக நடத்திவருகிறோம். அப்போது இல்லாத அடக்குமுறை, இப்போது ஏன்?” எனச் சீறுகிறார், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன்.

 மே 17 இயக்கத்துடன் இணைந்து மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடத்தியதற்காகத் திருமுருகன் காந்தியுடன் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட 27 வயது இளைஞரான டைசனிடம் பேசினோம்.

“நெருக்கடி தருவது அவர்களின் வேலை... உடைத்தெறிவது எங்களின் வேலை”

“சிறை அனுபவம் என்ன கற்றுக்கொடுத்துள்ளது?”

“2013-ல், பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்துக் கோவையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டபோது, சிறையில் அடைக்கப்பட்டேன். இது, இரண்டாவது முறை. இப்போது சிறையில் போலீஸ் தரப்பிலிருந்து அச்சுறுத்தல் எதுவுமில்லை. நான்கு பேரும் ஒன்றாகவே இருந்தோம். நாளிதழ்களையும் புத்தகங்களையும் கேட்டு வாங்கிப் படித்தோம். நிறைய அரசியல் பேசினோம். அடுத்தகட்டப் போராட்டங்கள், அரசியல் நகர்வுகள் தொடர்பாக நிறைய ஆலோசித்தோம்.”

“உங்களுடைய போராட்டப் பயணம் எதை நோக்கியது?”

“2009-ல் ஈழத் தமிழர் பிரச்னை உச்சத்தை அடைந்தபோது, என் கல்லூரியில் சக மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தேன். அதை அடக்குவதற்காகக் கல்லூரிக்குத் தொடர் விடுமுறை அளித்தனர். முத்துக்குமார், செங்கொடி போன்ற தோழர்களின் மரணங்கள் எங்களை இந்தக் கட்டத்துக்கு நகர்த்தியுள்ளன. ‘தேவையில்லாத வேலை’ என வீட்டில் திட்டினார்கள். என் அரசியல் நிலைப்பாட்டுக்குக் குடும்பத்தில் பெரிய ஆதரவில்லை. ஆனாலும், ஓய்ந்து உட்கார மனம் ஒப்பவில்லை. நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு யாராலும் தடைபோட முடியாது. சர்வதேச அளவில் இதைத் தடுக்கக் கூடாது என ஐ.நா-வே கூறியிருக்கிறது. பேரணி நடத்தக் கூடாது என இவர்களால் சொல்ல முடியாது. 2011-ல், திருமுருகன் காந்தி தலைமையிலான மே 17 இயக்கத்தினர் நடத்திய நினைவேந்தல் கூட்டத்திலேயே நான் பங்கேற்றுள்ளேன். அப்போது, நாம் தமிழர் கட்சியில் இருந்தேன்.”

“நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏன் விலகினீர்கள்?”

“சாதி அடிப்படையில் தமிழர்களைத் தீர்மானிக்கும் சீமானின் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. அவரது ‘வந்தேறிகள்’ கருத்தியலை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பெரியார் மீது ‘வந்தேறி’ என அவர் வைக்கும் விமர்சனங்கள் என்னை அங்கு செயல்படவிடாமல் தடுத்தன.  அதனால், வெளியேறினேன். நாங்கள், பெரியாருடைய கருத்தியலை உள்ளடக்கிய ஒரு தமிழ் தேசியத்தை முன்னெடுக்க ஆசைப்படுகிறோம். இதுபோன்ற கருத்துடைய தோழர்களை, ‘தமிழர் விடியல் கட்சி’யாக ஒன்றிணைத்துள்ளோம். எங்களுக்குச் சமூகக் களத்திலிருக்கும் தோழர்கள் ஆதரவு தருகிறார்கள். இந்த ஆதரவும் எங்கள் மீதான நம்பிக்கையும் சிறை சென்று திரும்பிய பின்னர் அதிகரித்திருக்கிறது.” 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நெருக்கடி தருவது அவர்களின் வேலை... உடைத்தெறிவது எங்களின் வேலை”

“தேர்தலில் போட்டியிடுவீர்களா?”

“இல்லை. நாங்கள் தேர்தல் களத்துக்கு வரமாட்டோம். வாக்குகளுக்காகச் சில அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதை நாங்கள் செய்வதாக இல்லை. எங்கள் எதிர்காலத்தைத் தேர்தல்களில் அடமானம் வைக்கப்போவதில்லை. வாக்கு அரசியலில் தமிழர் விடியல் கட்சி எப்போதுமே களமிறங்காது. பெரியார் தேர்தலிலா நின்றார்? ஆனால், அவர் செய்த இயக்க அரசியலின் தாக்கம் பெரியதல்லவா? நாங்கள், பெரியாரின் தடத்திலேயே பயணிக்க விரும்புகிறோம். போராட்டங்கள் மூலமாகவும் இயக்க வேலைகள் மூலமாகவும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தவே விரும்புகிறோம்.”

“உங்கள் திட்டம்தான் என்ன?”

“அரசியல் சித்தாந்தத்தை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அதை அவர்களுக்குப் புரிய வைப்பதற்கான கடமை எங்களுக்கு உள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் முன்வைக்கிற விஷயங்களில் மறைமுகமாக ஒளிந்திருக்கும் அரசியலை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். எங்கள் இயக்கங்கள் தரும் அழுத்தங்கள் அதிகார பீடத்தைத் தானாகச் செயல்பட வைக்கும். தமிழகத்தில் அரசியல் தலைமை காலியானதிலிருந்தே இங்கு நெருக்கடி அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இன்றைய தமிழக ஆட்சியாளர்கள், பி.ஜே.பி-யின் அடிமைகளாக இருக்கிறார்கள். மத்திய பி.ஜே.பி அரசின் தூண்டுதலினால்தான் நாங்கள் கைதுசெய்யப்பட்டோம். குண்டர் சட்டம் பாய்ந்தது. அவர்கள் தமிழர்களின் வரலாற்றையும் உணர்வுகளையும் ஒடுக்க நினைக்கிறார்கள். அதை நாங்கள் மீட்க நினைக்கிறோம். இதைவிட நெருக்கடியான காலத்திலேயே பலர் போராடியிருக்கிறார்கள். நெருக்கடி தருவது அவர்களின் வேலை.. அதை உடைத்தெறிவது எங்களின் வேலை.”

- சி.மீனாட்சி சுந்தரம்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ், ப.சரவணகுமார்