Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 16 - அதிரடி ஆசைநாயகி!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 16 - அதிரடி ஆசைநாயகி!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 16 - அதிரடி ஆசைநாயகி!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 16 - அதிரடி ஆசைநாயகி!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 16 - அதிரடி ஆசைநாயகி!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 16 - அதிரடி ஆசைநாயகி!
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 16 - அதிரடி ஆசைநாயகி!

‘அரண்மனையிலிருந்து வந்திருக்கிறோம். உங்கள் மகளை அந்தப்புரத்துக்கு அனுப்பிவையுங்கள். இது பேரரசரின் உத்தரவு!’

வீரர்கள் வீடு தேடி வந்து நின்றார்கள். உயர்குடி இளம்பெண்களைத் தேடிவந்து அந்தப்புரத்துக்கு அழைத்துச் செல்வதென்பது சீன ராஜ்ஜியங்களில் காலம் காலமாக நடந்ததுதான். அப்படித்தான் ஷிஹூவோ என்பவரது வீட்டுக்கும் வந்தார்கள். பெரும் வியாபாரி. அவருக்கு 13 வயதில் வூ ஸெடியான் என்ற மகள் இருந்தாள். (சீனாவில் முழு சூரிய கிரகணம் தெரிந்த ஆண்டான கி.பி.624-ல் வூ பிறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.) வசதியாக வளர்ந்தவள். வீட்டைச் சுத்தம் பண்ணுவது, பாத்திரங்கள் துலக்குவது, துணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்யவெல்லாம் வேலையாள்கள் இருந்ததால், தன் தந்தையின் அறிவுரையின்படி கல்வி கற்றாள். புத்தகங்கள் வாசித்தாள். அவளுக்கு வரலாற்றில் விருப்பமிருந்தது. இலக்கியங்கள் இனித்தன. அரசியல் பயில ஆர்வமிருந்தது. இசை கேட்டாள். அறிவில் மிளிர்ந்தாள்.

‘வூ… நீ போக வேண்டுமா?’ - அவளின் தாய் யாங் கண்ணீர் விட்டாள். ஆனால், வூ கலங்கவில்லை. கதறவில்லை. தாயைச் சமாதானப்படுத்தினாள். ‘இது என் விதியாக இருக்கலாம். அல்லது விதியை மாற்றும் நிகழ்வாகக்கூட இருக்கலாம். சொர்க்கத்தின் மகனைச் சந்திக்கச் செல்லும் வாய்ப்பை ஏன் இழக்க வேண்டும்?’ மகளின் கேள்வியில் தாய் பதிலின்றி நின்றாள். ‘சொர்க்கத்தின் மகன்’ என்றால்,  ‘சீனாவின் பேரரசர்’ என்று பொருள். அந்தப்புரத்தின் ஆசைநாயகிகளுள் ஒருத்தியாகச் சென்றவள், ‘சொர்க்கத்தின் மகள்’ ஆகி சீனாவின் தாங் பேரரசையே ஆட்டிப் படைத்த வரலாறுதான் இது. இன்னும் சொல்வதென்றால், சீன வரலாற்றிலேயே இடம்பெற்ற ஒரே ஒரு பேரரசி வூ ஸெடியான் மட்டுமே. அந்த உச்சத்தை அடைவதற்கான அவளது பாதை குருதி கொப்பளிக்கும் அத்தியாயங்களால் நிரம்பியது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 16 - அதிரடி ஆசைநாயகி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சீனாவில் தாங் அரச மரபு கி.பி.618-ல் தோற்றுவிக்கப்பட்டது. சாங்கான் (இன்றைய சியான்) நகரமே அவர்களது தலைநகரம். தாங் அரச மரபுக் காலமே சீனப் பண்பாட்டின் மிகச் செறிவான காலம் என்கிறது வரலாறு. அதன் இரண்டாவது பேரரசர் தாய்ஸோங் காலத்தில் வூ, அவரது அந்தப்புரத்துக்கு அழைத்து வரப்பட்டாள். ஒரு பெண்ணின் அழகையும் அறிவையும் பரிசோதித்து அதற்கேற்ப ரேங்க் கொடுத்து அவளுக்கான பணியை, அந்தஸ்தை நிர்ணயிப்பது பாரம்பர்ய வழக்கம்.

சுமாரான பெண் என்றால் ரேங்க் 8. அந்தப்புரத்தில் எடுபிடி வேலைகள் செய்யலாம். அதற்கடுத்த நிலையிலுள்ள பெண்ணுக்கு ரேங்க் 7. பேரரசருக்கு எடுபிடி வேலைகள் செய்யலாம். ரேங்க் 6 என்றால் பேரரசரின் உடலுக்குச் சில பணிவிடைகள் செய்யலாம். ரேங்க் 5 கொண்ட பெண்கள் புத்திசாலிகள். பேரரசருக்கு அலுவல் ரீதியாக உதவலாம். ரேங்க் 4 என்றால் அந்தப்புரத்தில் சில அதிகாரங்கள் கொண்ட அழகிகள். ரேங்க் 3 என்றால் பேரரசரின் அந்தரங்கப் படுக்கையறைக்குள் நுழையும் உரிமை கொண்ட பேரழகிகள். ரேங்க் 2 உடன் ஒன்பது ஆசைநாயகிகள் இருந்தனர். ரேங்க் 1 உடைய பெண்ணே தலைமை ஆசைநாயகி. அவளே பேரரசருக்கு மிகவும் நெருக்கமானவள். அதிக அதிகாரம் கொண்டவள். இவர்கள் போக, பேரரசர் திருமணம் செய்துகொண்ட மனைவிகள் தனி. அதில் பேரரசி பட்டம் கொண்டவள் தனி.

ஆளை அசத்தும் அழகில்லாத வூ-க்குக் கிடைத்த ரேங்க் 5. கல்வியறிவு உடையவளாயிற்றே. அரண்மனை நூலகத்தைப் பராமரிக்கும் வேலை வூ-க்கு ஒதுக்கப்பட்டது. அங்கே நிறையவே படித்தாள். நூலகத்துக்கு வந்த பேரரசர் தாய்ஸோங் (Taizong), வூவிடம் பேசினார். அவளும் தங்கு தடையின்றி நிறையவே பேசினாள். அரசியல், வரலாறு, தத்துவம் என்று. பேரரசர் அசந்துபோனார். அழகில் குறைந்த ஒரு பெண், பேரரசரின் படுக்கையறைக்குள் நுழைவது என்பது சீக்கிரம் நடக்காது. ஆனால், வூ-க்குப் பேரரசருடன் ‘ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்’ சீக்கிரமே வாய்த்தது. நேரங்கெட்ட நேரத்தில் விழிப்பு வந்துவிட்டால் அரசாங்கக் கோப்புகளைப் பார்வையிடுவார் தாய்ஸோங். அதற்காகவே அந்தப்புரத்துக்கும் கோப்புகள் அனுப்பி வைக்கப்படும். அவற்றைப் பேரரசர் பார்வையிட உதவும் பணி, வூ-க்குக் கிடைத்தது. கொஞ்சிக் குழைந்து பேரரசரிடம் நிர்வாக நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட வூ, பயமின்றி அவருக்கே ஆலோசனைகள் சொல்லுமளவுக்குத் தன்னைத் தகவமைத்துக்கொண்டாள்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 16 - அதிரடி ஆசைநாயகி!

தாய்ஸோங், கிபி 649-ல் இறந்துபோனார். பேரரசரின் ஆசைநாயகிகளில் யாருக்கெல்லாம் குழந்தைகள் இல்லையோ, அவர்களெல்லாம் மொட்டையடித்துக்கொண்டு புத்த மடாலயத்துக்குச் சென்று மீதி வாழ்வைக் கழிக்க வேண்டும் என்பது மரபு. வூ முடியை இழந்தாள். புத்தரோடு பேசச் சென்றாள். மடாலய வாழ்க்கை.

தாய்ஸோங்கின் மகனான காவ்ஸோங் (Gaozong) அடுத்த பேரரசர் ஆனார். சுமார் இரண்டு வருடங்கள் கழிந்திருக்கும். காவ்ஸோங், தன் தந்தையின் நினைவு நாளில் அந்தப் புத்த மடாலயத்துக்குச் சென்றார். வழிபட்டுவிட்டுத் திரும்பியவரது கண்களில் வூ தென்பட்டாள். அவரது கண்களில் பொலபொலவெனக் கண்ணீர். வூவின் கண்களிலும். நீண்ட நாள்கள் கழித்து, தன் காதலியை மொட்டைத் தலையுடன் சந்நியாசக் கோலத்தில் கண்டால் காதலனுக்குக் கண்களும் இதயமும் கலங்காதா?

என்னது, காதலனா? இது எப்போது? பேரரசர் தாய்ஸோங்கின் ஆசைநாயகியாக இருக்கும்போதே, இளவரசர் காவ்ஸோங்குடனும் உபரியாகக் காதல் வளர்த்திருந்தாள் வூ. ஆகவே, பேரரசர் விம்மியபடி விலகிச்சென்றார். பேரரசி வாங் (காவ்ஸோங்கின் மனைவி), இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டாள். அவளுக்கு ஒரு காரியம் ஆக வேண்டியதிருந்தது. அப்போது பேரரசர் காவ்ஸோங்கின் தலைமை ஆசைநாயகியாக இருந்த ஸியாவோ, அளவுக்குமீறி ஆடிக்கொண்டிருந்தாள். அவளிடம் மயங்கிக் கிடந்த காவ்ஸோங், வாங்கைக் கண்டுகொள்ளவே இல்லை. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்ற கிறித்துவுக்கு முந்தைய கால தியரிப்படி, ஸியாவோவை வீழ்த்த வூவைக் கூர்தீட்டினாள் பேரரசி.
‘நீ இனி தலையை மழிக்காதே. முடியை வளர்த்துக்கொண்டு அரண்மனைக்கு வா!’ பேரரசியின் கட்டளைப்படி வூ மீண்டும் அரண்மனைக்குள் ‘நல்லவளாக’ அடியெடுத்து வைத்தாள். பழைய காதலியை மீண்டும் கண்ட தாவ்ஸோங், வூவைச் சரணடைந்தார். வூ, அவரை பலமாக முடிந்துவைத்துக் கொண்டாள். ஸியாவோ திக்கற்று நின்றாள்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 16 - அதிரடி ஆசைநாயகி!

அதிகாரபூர்வமாகத் தலைமை ஆசைநாயகியாக வேண்டாமா? வூ, பேரரசருடன் சேர்ந்து இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டாள் (லி ஹாங், லி ஸியான்). அவளுக்கு காவ்ஸோங்கின் தலைமை ஆசைநாயகி அந்தஸ்து கிட்டியது. பேரரசிக்கும் பேரரசருக்குமிடையே வாரிசுகள் கிடையாது என்பதால் அந்தப்புரத்தில் வூவின் அதிகாரம் கொடிக்கட்டிப் பறந்தது. அந்தப்புரத்திலிருக்கும் பிற பெண்களுக்கெல்லாம் சலுகைகளை வாரி வழங்கி அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து நின்றாள் வூ. பேரரசியும் திகைத்து நின்றாள். ஸியாவோவே பரவாயில்லைபோல. வூவை எவளைக் கொண்டு அடக்குவது? வூ, தனது அடுத்த இலக்கை நிர்ணயித்திருந்தாள். ‘நான் பேரரசியாக வேண்டும்.’

வூ-க்கு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது (கி.பி.654). அது சில நாள்களில் மூச்சுத்திணறலால் இறந்துபோனது. (குழந்தையைக் கொன்றது வூ-தான் என்றொரு வெர்ஸன் உண்டு.) பேரரசரின் காதில் கதறலாக ஒரு குற்றச்சாட்டு விழுந்தது. ‘பேரரசி, வூவின் பெண் குழந்தையைக் கொன்று விட்டாள். குழந்தை இருக்கும் அறைக்குப் பேரரசி செல்வதை நான் பார்த்தேன்.’, ‘ஆம். நானும் பார்த்தேன்.’ சாட்சிகள் நாக்கில் நரம்பின்றி பொய்யுரைத்தன. வூவும் போலிக் கண்ணீர் பொழிந்தாள். சி.சி.டி.வி சுழலும் இந்தக் காலத்திலேயே எந்த ஆணியையும் பிடுங்க முடியவில்லை. அன்றைக்கு என்ன செய்ய முடியும்? பேரரசர் அதை நம்பினார். வாங்கைக் கண்டித்தார்.

வேறு வழியின்றி வாங், முன்னாள் எதிரி ஸியாவோவுடனேயே கைகோத்தாள், இந்நாள் எதிரி வூவைக் காலி செய்ய. ‘அவர்கள் இருவரும் இணைந்து மந்திரவாதிகள் மூலம் நமக்குச் சூன்யம் வைக்கப்பார்க்கிறார்கள்.’ வூ, தலையணை மந்திரம் ஓதினாள். அவள் சொல்வதையெல்லாம் நம்பியே பழகிவிட்டிருந்த காவ்ஸோங், வாங்கையும் ஸியோவாவையும் ஓர் அறையில் சிறைப்படுத்தினார். வாங், பேரரசி பதவியிலிருந்து நீக்கப்பட்டாள்.

தாங் பேரரசின் மகாராணியாக, பேரரசர் காவ்ஸோங் சிம்மாசனத்துக்கு இணையாக, அதே உயரம் கொண்ட சிம்மாசனத்தில் பேரரசியாக கம்பீரமாக அமர்ந்தாள் வூ ஸெடியான். (அதுவரை எந்தவொரு பேரரசியும் பேரரசருக்கு இணையாக அமர்ந்ததில்லை.) பேரரசியான பின் வூவின் முதல் ரகசியக் கட்டளை... ‘அவர்கள் இருவரது கைகளையும் பாதங்களையும் வெட்டுங்கள். அவர்களை மது ஜாடிகளுக்குள் போட்டு ஊற வையுங்கள். தங்கள் ரத்தத்தையே குடித்து வாழட்டும்!’ அப்படியே செய்தார்கள். வாங், விட்டுவிடும்படி கெஞ்சினாள். ஸியாவோ சாபமிட்டாள். ‘அடுத்த ஜென்மத்தில் நான் பூனையாகவும், வூ எலியாகவும் பிறப்போம். அப்போது நான் அவள் தொண்டையைக் கடித்துக் குதறிக்கொல்வேன்!’

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 16 - அதிரடி ஆசைநாயகி!

சில நாள்கள் கழித்து வூவின் முன்னிலையில் வாங் மற்றும் ஸியாவோவின் உயிரற்ற உடல்கள் ஜாடியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டன. ‘தலைகளை அறுத்துப் போடுங்கள்!’ செய்தார்கள். இருந்தாலும் வூவின் கனவுகளில் அந்த இருவரும் அடிக்கடி ‘முண்டங்களாக’ வந்து பயமுறுத்தினார்கள். அலறி எழுந்தாள். பூனையைப் பார்த்தாலே வூ-க்குக் கோபம் வந்தது. யாரும் அரண்மனையில் பூனை வளர்க்கக்கூடாது என்று உத்தரவிட்டாள். அதே சமயம் பேரரசர், வூவின் ஆட்டங்களுக்கெல்லாம் வாலாட்டியபடி வளர்ப்பு நாய் போலத் திரிந்து கொண்டிருந்தார். காரணம், காவ்ஸோங்குக்கு ஆளுமைத்தன்மையும் நிர்வாகத் திறமையும் குறைவு. தவிர, அடிக்கடி நோய்வாய்ப்பட்டுக் கொண்டிருந்தார். இந்த இடைவெளிகளையெல்லாம் பயன்படுத்தி, தனக்கென்று விசுவாசிகளாகவும் அடிமைகளாகவும் இருக்க ஒரு கூட்டத்தை உருவாக்கினாள் வூ.

அதுவரை பட்டத்து இளவரசராக இருந்தவர் லி ஸோங். லியு என்ற ஆசைநாயகிக்குப் பிறந்தவர். ‘நான் பேரரசியான பிறகு, வேறு எவளுக்கோ பிறந்தவன் எப்படி பட்டத்து இளவரசனாக இருக்கலாம்? நம் மகனை அறிவியுங்கள்!’ – வூ, காவ்ஸோங்குக்குக் கட்டளையிட்டாள். அவர் வழிமொழிந்தார் (கி.பி.656). ‘இனி பட்டத்து இளவரசர் லி ஹாங்!’

அரசவையைச் சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரரசரிடம் ‘இது சரியில்லை’ என்று முணுமுணுத்தனர். யாரெல்லாம் தனக்கு எதிராகப் பேசுகிறார்கள் என்று பட்டியல் தயாரிக்கச் சொன்னாள் வூ. ஒவ்வொருவராகக் குறிவைத்தாள். அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டன. அல்லது வேறு குற்றங்களில் அவர்கள் குற்றவாளியாக்கப் பட்டார்கள். பிறகென்ன? தலைகள் தரையில் உருண்டன. பேரரசர் கேட்டபோது, வூ சொன்ன பதில், ‘பேரரசரை விமர்சிக்கும் உரிமை இங்கே யாருக்கும் கிடையாது.’

இப்படியாகப் பயத்தை ஆழமாக, அகலமாக விதைத்தாள் பேரரசி வூ. இவையெல்லாம் ஆரம்பம் மட்டுமே.

(வூ வருவாள்...) 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism