Published:Updated:

சிவாஜி விழா: கமலைச் சீண்டிய ரஜினி!

சிவாஜி விழா: கமலைச் சீண்டிய ரஜினி!
பிரீமியம் ஸ்டோரி
சிவாஜி விழா: கமலைச் சீண்டிய ரஜினி!

சிவாஜி விழா: கமலைச் சீண்டிய ரஜினி!

சிவாஜி விழா: கமலைச் சீண்டிய ரஜினி!

சிவாஜி விழா: கமலைச் சீண்டிய ரஜினி!

Published:Updated:
சிவாஜி விழா: கமலைச் சீண்டிய ரஜினி!
பிரீமியம் ஸ்டோரி
சிவாஜி விழா: கமலைச் சீண்டிய ரஜினி!

1995-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி. 

சிவாஜிக்கு ‘செவாலியே விருது’ வழங்கும் விழாவுக்காக சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. ரஜினி, கமல், தேவ் ஆனந்த், நாகேஸ்வரராவ், சிரஞ்சீவி, மம்முட்டி, சத்யராஜ், ராதிகா, ஸ்ரீதேவி, பாலசந்தர் எனத் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் திரண்டிருந்தார்கள். விழா மேடையில், சிவாஜி ஏறியதும் ஓடிப்போய் அவர் காலைத்தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டார் ரஜினி. விழாவின், சிறப்பு விருந்தினர் அன்றைய முதல்வர் ஜெயலலிதாதான். கமல், சிவாஜி, ஜெயலலிதா என எல்லோரும் பேசி முடித்த பிறகு, இறுதியாக நன்றியுரை ஆற்ற வந்தார் ரஜினி.

வெள்ளைச் சட்டை, கறுப்பு ஜீன்ஸ் காஸ்ட்யூமில் கண்ணாடி அணிந்து வந்திருந்தார் ரஜினி. ‘வெறும் நன்றியுரைதானே... ரஜினி இதில் என்ன பேசிவிடப்போகிறார்’ என்றுதான் எல்லோருமே நினைத்தார்கள். ஆனால், மொத்த விழாவையும் தன் பக்கம் திருப்பினார் ரஜினி. இத்தனைக்கும் விழாவில், சிவாஜியை வாழ்த்திப் பேசுகிறவர்கள் பட்டியலில்தான் ரஜினியின் பெயர் இருந்தது. ஆனால், ‘‘நான் நன்றியுரை சொல்கிறேன்’’ எனக் கேட்டு வரிசையை மாற்றிக்கொண்டார் ரஜினி.

சம்பிரதாயமாக சில வார்த்தைகளைப் பேசிவிட்டு, ஜெயலலிதா பக்கம் திரும்பி விரலைச் சொடுக்கிப் பேச ஆரம்பித்தார் ரஜினி. ‘‘நீங்க திறந்து வெச்ச ஃபிலிம் சிட்டிக்கு சிவாஜி சார் பெயரைச் சூட்டி அப்பவே அவரைக் கௌரவிச்சிருக்கணும். நீங்க அதைச் செய்யலை. அவரை மதிக்கலை. அந்த விழா மேடையில், அவரை உட்கார வெச்சுக் கௌரவம் பண்ணியிருக்கணும். அது தப்பு! தப்பு பண்றது மனித இயல்பு. தப்பைத் திருத்திக்கறது மனிதத்தனம்’’ என ரஜினி பேசியது அக்மார்க் அரசியல். இன்னும் சொல்லப்போனால் ‘பாட்ஷா’ வெற்றி விழாவின் ‘வெடிகுண்டு கலாசார’ பேச்சுக்கு முன்பே ரஜினி பேசிய முதல் அரசியல் வெடி, இந்த சிவாஜி விழாவில் பேசியதுதான்.

சிவாஜி விழா: கமலைச் சீண்டிய ரஜினி!

2017, அக்டோபர் - 1

22 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அந்த சிவாஜி விழாவில், முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சைவிட மொத்தக் கூட்டத்தையும் ஸ்கோர் செய்த ரஜினிதான், இப்போது நடந்த சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவிலும் அரசியல் பேசி, ஸ்டார் பேச்சாளர் ஆனார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பேசிவந்தாலும் அரசியலுக்கு ரஜினி வரவில்லை. அரசியலே பேசாமல் இருந்த கமல், அரசியலுக்கு  வரத் தயாராகிவிட்டார். இந்த இருவரும் ஒரே மேடையில் அரசியல் புள்ளியில் மையம்கொண்டதுதான் சிவாஜி மணிமண்டபத் திறப்பு விழாவைப் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்துவிட்டது.

சிவாஜியின் மணிமண்டபத் திறப்புவிழா, விசித்திரமான நிகழ்வாக இருந்தது. முதல்வர் கலந்துகொள்ளவில்லை; அரசைக் கடுமையாக விமர்சித்துவரும் கமல்ஹாசனை மேடையேற்றியிருந்தார்கள்.  எப்போதும் உடைத்துப்பேசும் ரஜினி, பொடிவைத்துப் பேசினார். சிவாஜி சிலையை நிறுவிய கருணாநிதி ஓய்வில் இருக்கிறார். சிலையை அகற்றுவதில் குறியாக இருந்த ஜெயலலிதா இறந்துவிட்டார். இப்படியான அரசியல் சூழலில், அடுத்த தலைமுறை அரசியலுக்கான பிள்ளையார் சுழியைப் போட்டது விழா.

சிலை சென்டிமென்ட், அ.தி.மு.க ஆட்சிக்கு ஒத்துவராது. கண்ணகி சிலை தொடங்கி சிவாஜி சிலை வரையில் இதுதான் நிலை. சிவாஜி சிலையை அமைத்த கருணாநிதி, அதன்பிறகு ஆட்சிக்கு வரமுடியவில்லை. ‘சிவாஜி நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் பதவி பறிபோய்விடும்’ என ஜோதிடர் யாரோ சொன்னதால்தான், சிவாஜி மணிமண்டபத் திறப்பு விழாவில் பங்கேற்காமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதுங்கினார் எனச் செய்திகள் கிளம்பின. அதனால்தான் ‘அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மணிமண்டபத்தைத் திறப்பார்’ என அறிவிக்கப்பட்டது. பிறகு, சிவாஜி குடும்பம் வருத்தம் தெரிவிக்க... ‘‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைப்பார்’’ என அறிவித்தார்கள். அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்ட நிலையில், புதிய அழைப்பிதழ்களை அச்சடித்தார்கள். அதில்கூட ரஜினி, கமல் பெயர்கள் இல்லை. ஆனாலும், மணிமண்டபத் திறப்பு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ரஜினியும் கமலும் முதலில் மேடையின் கீழேதான் இருந்தார்கள். பன்னீர்செல்வம்தான், அவர்களை மேடைக்கு அழைத்தார். ஜெயக்குமார்தான் அவர்கள் இருவரையும் மேடைக்கு அழைத்து வந்தார்.

‘‘கமல் இப்படியே பேசிக்கொண்டு போனால் மூன்றாம் பிறை க்ளைமாக்ஸ் காட்சிப் போலதான் ஆவார்’’ என கமலைக் கடுமையாக விமர்சித்தவர் ஜெயக்குமார். ஆட்சிக்கு எதிராக கமல் தொடர்ந்து கருத்துகளைச் சொல்லிவந்த நிலையில், அமைச்சர்கள் பலரும் கமலுக்குப் பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தனர். இப்படியான நிலையில்தான் கமலை மேடையில் அமரவைத்தார்கள். அவரைப் பேசவும் சொன்னார்கள். கமல் அரசியல் பேசவில்லை. ரஜினி பேசினார். ரஜினிகாந்துக்கு, பன்னீர்செல்வமும், கமல்ஹாசனுக்கு ஜெயக்குமாரும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். “மாநிலத்தில் எத்தனை அரசுகள் வந்தாலும், சிவாஜியை மதித்தே ஆகவேண்டும். இந்த விழாவை நடத்தும் அரசுக்கும், அரசியலுக்கும் நன்றி” எனச் சொல்லி அமர்ந்துவிட்டார் கமல்.

அதன்பின் பேசிய நடிகர் ரஜினி, “சிவாஜி தனிக்கட்சி ஆரம்பித்து அவருடைய தொகுதியிலேயே நின்று, தோற்றுவிட்டார். இதில் ஒரு செய்தியை சிவாஜி சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அரசியலில் வந்து வெற்றியடைய வேண்டும் என்றால், சினிமா, பெயர், புகழ், செல்வாக்கு மட்டும் இருந்தால் போதாது. அதற்குமேல் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அது என்னவென்று மக்களுக்கு மட்டும்தான் தெரியும். எனக்கு அது சத்தியமாகத் தெரியாது. கமல்ஹாசனுக்கு அது நன்றாகத் தெரியுமென்று நினைக்கிறேன். தெரிந்தாலும் அதை எனக்கு அவர் சொல்லமாட்டார். ஒருவேளை இரண்டு மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் சொல்லியிருப்பாரோ... என்னவோ? இல்லண்ணே... நீங்க திரையுலக மூத்த அண்ணன். நீங்க என்கிட்டே சொல்லணும் என்று சொன்னால், ‘நீ என்கூட வா சொல்கிறேன்’ என்கிறார்’’ என்று கமலை நேரடியாகவே அரசியல் வம்பிழுத்தார் ரஜினி.

ரஜினியின் இந்தப் பேச்சுக்கு, ஆகஸ்ட் 10-ம் தேதி நடந்த முரசொலி பவளவிழாதான் காரணமா? எனப் பேச்சுகள் கிளம்பின. அந்த விழாவில் பேசுவதற்காக ரஜினியும் கமலும் அழைக்கப்பட்டார்கள். கமல் பேச ஒப்புக்கொண்டார். ரஜினியோ, ‘‘பேசவில்லை. பார்வையாளனாக கலந்து கொள்கிறேன்’’ என்றார். அப்படியேதான் முரசொலி விழாவும் நடந்து முடிந்தது. அந்த விழாவில் பேசிய கமல், “ரஜினி இந்த விழாவுக்கு வருகிறாரா என்ற என் கேள்விக்கு, ‘ஆமாம் வருகிறார்’ என்றார் ஸ்டாலின். ‘அவரும் பேசுகிறாரா?’ எனக் கேட்டேன். ‘இல்லை. பார்வையாளராக கீழே அமரப் போவதாகச் சொல்லிவிட்டார்’ என்றார். அப்படியானால் நானும் பார்வையாளனாக இருந்து கொள்ளலாம் என நினைத்தேன். கண்ணாடியில் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் ‘அடேய் முட்டாள். எவ்வளவுப் பெரிய வாய்ப்பை இழக்கப் போகிறாய் என்பதைப் புரிந்துகொள். தற்காப்பைவிட, தன்மானமே முக்கியம். இந்த மேடை அப்படி ஒரு அரிய வாய்ப்பு” என்று சொன்னார் கமல். கிட்டத்தட்ட ரஜினிக்குக்  குட்டு வைத்ததுபோல இருந்தது கமலின் பேச்சு. அந்த தன்மானத்தைக் காக்கத்தான் கமல் சுழற்றிய சாட்டையை அவர் பக்கமே தற்போது சுழற்றிவிட்டிருக்கிறார் ரஜினி.

முரசொலி விழாவில் கமல் பேச்சுக்கு ரஜினி காட்டிய ரியாக்‌ஷன் இது எனச் சொல்லப்பட்டாலும், உண்மையான காரணம் வேறு இருக்கிறது. தன் ரசிகர்களை   நீண்டகாலமாகச் சந்திக்காமல் இருந்த ரஜினி, திடீரெனச் சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்தார். மாவட்ட வாரியாக நடந்த இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியில் அரசியலுக்கு வருவதற்கான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். ‘‘அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்க நினைப்பவர்களைச் சேர்க்கமாட்டேன். பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் ரசிகர்கள் யாரும் அரசியலுக்கு வரவேண்டாம். போர் வந்தால் வருவேன்’’ என ரசிகர்களிடம் பேசினார்.

இந்தச் சந்திப்புகள் முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழருவி மணியன் போன்றவர்களை அழைத்து அரசியல் ஆலோசனைகளை ரஜினி கேட்டு வந்தார். ரஜினி அரசியலில் குதிப்பதற்கு இறுதி முடிவு எடுக்கப்பட்டதுபோல ரஜினியின் நடவடிக்கைகள் அமைந்தன. அவரைச் சந்தித்துவிட்டு வந்தவர்களும் ‘ரஜினி அரசியலுக்கு நிச்சயம் வருவார்’ எனச் சொன்னார்கள். ரஜினி அரசியலுக்கு ரெடியாகிக்கொண்டிருந்த நேரத்தில், திடீர் திருப்பமாக கமல் அரசியலுக்குள் நுழைவதாக அறிவித்து, ரஜினியை அதிர்ச்சியடைய வைத்தது. கிட்டத்தட்ட களத்தை ரெடி செய்துவைத்துக் குதிக்கத் தயாராக இருந்த நேரத்தில், கமல் முந்திக்கொண்டது ரஜினியே எதிர்பார்க்காதது. அதனால்தான், கமலுக்குப் பதிலடி தரும் வகையில் அவருடைய பேச்சு அமைந்தது. ‘‘கமலஹாசனுக்குத் தெரிந்தாலும் அதை எனக்கு அவர் சொல்லமாட்டார். இரண்டு மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் சொல்லி யிருப்பாரோ... என்னவோ?’’ என ரஜினி சொன்னது எல்லாமே இரண்டு மாதங்களில் நடந்த மாற்றங்களின் வெளிப்பாடுதான்.

ஜெயலலிதா இருந்தபோதே அவரை எதிர்த்தவர் ரஜினி. அவருக்கு எதிராக ஓட்டுப் போட வேண்டும் என 1996 சட்டசபைத் தேர்தலில் சொன்னவர் ரஜினி. ஆனால் அப்படி அன்றைக்கு அரசியல் எதுவும் பேசாத கமல் இன்றைக்கு அரசியலுக்கு வருகிறார். இந்த முரண்பாடுகள் சிவாஜி மணிமண்டப விழாவில் முச்சந்திக்கு வந்துவிட்டன.

- எஸ்.ஏ.எம். பரக்கத் அலி, ஜெ.அன்பரசன்
படங்கள்: கே.ஜெரோம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கருணாநிதி பெயர் ஓரத்திலேயா?

சிவாஜி விழா: கமலைச் சீண்டிய ரஜினி!

“இது எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு. இந்த மணிமண்டபம் ஜெயலலிதாவின் கனவு. இங்கே இருக்கும் சிலை கருணாநிதி அமைத்தது. இப்படி மூன்றும் ஒன்றாக அமைந்திருப்பது, அப்பா அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதைக் காட்டுகிறது. சிலையில் கருணாநிதி பெயரும் ஓர் ஓரத்தில் இருந்தால் சந்தோஷப்படுவோம்” என்று அரசுக்குக் கோரிக்கை வைத்தார் பிரபு. கருணாநிதியின் பெயரையும் வைக்க வேண்டும் எனச் சொல்லாமல் அவரின் பெயரையும் ஓர் ஓரத்தில் வைக்க வேண்டும் எனச் சொன்னதை தி.மு.க-வினரும், சிவாஜி ரசிகர்களும் ரசிக்கவில்லை.

‘‘சிவாஜியை அவமதித்துவிட்டார் எடப்பாடி’’

சிவாஜி விழா: கமலைச் சீண்டிய ரஜினி!

சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழா தொடர்பாக பேசிய தி.மு.க-வின் வர்த்தக அணிச் செயலாளர் காசிமுத்துமாணிக்கம், ‘‘ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிவாஜியின் பேத்தியைத் திருமணம் செய்துவைத்தார்கள். சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன்தான் சுதாகரன்.

அப்படிப் பார்த்தால் சசிகலாவின் சம்பந்திதான் சிவாஜி. ‘சிவாஜி ராசி இல்லாதவர். அவரின் மணிமண்டபத்தைத் திறந்துவைத்தால் பதவி பறிபோகும்’ என அஞ்சிதான், எடப்பாடி விழாவில் பங்கேற்கவில்லை. எது எப்படியோ? சிவாஜியை எடப்பாடி பழனிசாமி அவமதித்துவிட்டார்” என்றார்.

பன்னீருக்குக் குட்டு வைத்த ரஜினி!

சிவாஜி விழா: கமலைச் சீண்டிய ரஜினி!

‘‘ஓ.பன்னீர்செல்வம் ரொம்ப அதிர்ஷ்டசாலி. அது நிறைய தடவை நிரூபணம் ஆகியிருக்கிறது. காலகாலத்துக்கும் தலைநிமிர்ந்து நிற்கப் போகிற இந்த மணிமண்டபத்தை திறந்துவைக்கும் பாக்கியமும் அவருக்குக் கிடைத்திருக்கிறது’’ என்றார் ரஜினி. மூன்று முறை அதிர்ஷ்டத்தால் மட்டுமே முதல்வராகவும் இப்போது துணை முதல்வராகவும் பன்னீர் ஆனதை மறைமுகமாகச் சொல்லி பன்னீர்செல்வத்தின் தலையில் ரஜினி குட்டு வைத்தார்.