Published:Updated:

அட்டிகஸ் - இன்ஸ்டாகிராமில் ஏழரை லட்சம் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் முகமூடி கவிஞன்!

7,50,000 இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் இருந்தும் தன் அடையாளத்தை மறைத்தே வைத்திருக்கிறார் அட்டிகஸ்.  அவர் எழுதிய ஒரு புத்தகம் வௌியாகி விற்பனையில்  சக்கைப் போடு போட்டுள்ளது.

அட்டிகஸ் - இன்ஸ்டாகிராமில் ஏழரை லட்சம் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் முகமூடி கவிஞன்!
அட்டிகஸ் - இன்ஸ்டாகிராமில் ஏழரை லட்சம் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் முகமூடி கவிஞன்!

'ஸ்டேட்டஸ், ஸ்டேட்டஸ் சார்ந்த இடமாகிப் போனது சமூக வலைத்தளங்கள். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் என அனைத்தும் ஸ்டேட்டஸ் மற்றும் ஸ்டோரி மயமாகிப்போனது. இவற்றின் வரவால் பல நல்ல விஷயங்களும் நடக்கின்றன. தங்கள் தனித்திறமைகளை உலகுக்கு நிரூபிக்க ஒரு வாய்ப்பாகவும் சமூக வலைத்தளங்கள் அமைகின்றன. ஃபேஸ்புக்கில் தான் எடுக்கப்போகும் கதையைப் பதிவிட்டு அதைப் படித்தவர்களே பணம் அனுப்பி எடுக்கப்பட்ட திரைப்படம் வெற்றிகரமாக ஓடிய கதையும் இந்தியாவில் உண்டு.

சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஒரு முகம் தெரியாத கவிஞர் வைரலாகி வருகிறார். 'அட்டிகஸ்' என்ற பெயரில் கவிதைகளை இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார். இவரது கவிதைகள் இன்ஸ்டா உலகினருக்குப் பிடித்துப் போகவே ஃபாலோயர்ஸ் குவிந்துள்ளனர். ஆனால், அவர் தன் முகத்தையோ, முகவரியையோ வெளிப்படுத்தவில்லை.

7,50,000 இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் இருந்தும் தன் அடையாளத்தை மறைத்தே வைத்திருக்கிறார். அவர் எழுதிய ஒரு புத்தகம் விற்பனையில் சக்கைப் போடு போட்டுள்ளது.  இன்னொரு புத்தகமும் வெளிவர இருக்கிறது. எம்மா ராபேர்ட்ஸ் , கார்லி க்ரோஸ் போன்ற மிகப்பெரிய பிரபலங்கள் இவரை ஃபாலோ செய்ய, செம வைரலாகிப் போனார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ரசிகர்கள் பலரும் இவர் எழுதிய கவிதைகளை பச்சை குத்திக்கொள்கின்றனர். பலரும் அவரது முகத்தைக் காட்டச் சொல்லிக் கேட்டனர். ஆனாலும், அவர் தன் அடையாளத்தை வெளியிட மறுக்கிறார்.  அவரது புனைப்பெயர் `அட்டிகஸ்’ என்பதைத் தவிர வேறேதுவும் தெரியவில்லை. இ.பி முகவரி மூலம் கண்டுபிடிக்கலாம் என்றால் தன் இடத்தை கொலம்பியா, கனடா, லாஸ் ஏஞ்சலீஸ் என மாற்றிக்கொண்டே இருக்கிறார்.  லாஸ் ஏஞ்சலீஸில் நடந்த இவரின் புத்தக (லவ்,ஹேர், தி வைல்ட்) வெளியீட்டு விழாவுக்கும் முகமூடி அணிந்தே சென்றார். அவர் இப்புத்தகத்தை மூன்றாகப் பிரிக்கிறார். அவற்றில் சில...

காதல் (love)

என் இதயத்தை பிளந்து பார் 

அதில் நீ தெரிவாய்.

அவள் (her)

அவளுக்கு உயரங்கள்

எவ்வளவு அச்சமோ

அதே அளவிற்கு

சிறகுகள் விரித்து 

பறக்கவும் அச்சம்.

காடு (wild)

உன் பசியும் தாகமும்

மறந்து போகும் 

அளவிற்கு உன்

தேடல் இருக்கவேண்டும்.

ஏன் முகமூடி அணிந்தே இருக்கிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, ``இதை அணிந்தால்தான் மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதைப் போல உணர்கிறேன். எப்போது எழுத வேண்டும் என்பதற்காகவும், என்ன நினைக்க வேண்டும் என்பதற்காகவும் முகமூடி பயன்படுத்துகிறேன். என் கவிதைகள் என் அடையாளத்தைப் பதிவுசெய்வதற்காக  இருக்க வேண்டாம். எனக்காக என் கவிதைகளை மக்கள் படிக்கக்கூடாது. மேலும், எனக்குப் புகழ் மேல் நம்பிக்கை இல்லை. அத்தகைய வாழ்க்கையை நான் விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் மக்கள் நான் யாரெனத் தெரிந்து கொண்டாலும், முகமூடி அணிந்தே இருப்பேன். அப்படியே என்னைக் காட்டிக்கொள்ளவும் விரும்புகிறேன். நான் பணத்தை எதிர்பார்த்து எழுதுவதில்லை. எழுதுவதால் ஆறுதல் அடைகிறேன். சிலர் என் கவிதையைப் படிப்பதால் மனச்சோர்வு, துக்கங்கள் கண் காணாத இடத்துக்குச் சென்று விட்டது எனச் சொல்லும்போது கோடி ரூபாய் சம்பாதித்ததைப் போல உணர்கிறேன்" என்றார்.

அட்டிகஸ் என்பது கிரேக்க கலைஞர்களைக் குறிக்கிறது. இவரின் தாத்தா இந்தியாவில் வாழ்ந்தவர். இந்தியாவில் இருப்பதே பெருமை என்றும் கூறியுள்ளார். தன் எழுத்துகளில் பெண்களை மட்டுமே சித்திரிக்கிறார்; அதீதமாக வர்ணிக்கிறார் என அவர் எழுத்துக்கு விமர்சனம் வராமல் இல்லை. அவரின் பெரும்பாலான கவிதைகள் பெண்களின் காதல், மன சஞ்சல்ங்கள்,  இளமை பற்றியே இருக்கும். ஓர் ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்ட தலைசிறந்த இன்ஸ்டாகிராம் கவிஞர்களில், `அட்டிகஸ்’ முதல் இடத்தில் இருக்கிறார். கலோர் என்ற பத்திரிகை இவரை `அதிகம் பச்சைக்குத்தப்பட்ட கவிஞர்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

முகமூடி அணிந்தாலும் தான் செய்யும் புதுமைகளால் தனக்கென ஓர் அடையாளத்துடன் தனித்துத் தெரிகிறார். சீக்கிரம் முகத்தைக் காட்டுங்க பாஸ்!