Published:Updated:

மிரட்டும் டெங்கு

மிரட்டும் டெங்கு
பிரீமியம் ஸ்டோரி
மிரட்டும் டெங்கு

கொசுவால் கொழிக்கும் அதிகாரிகள்... தடுப்பூசியை அனுமதிக்காத அரசு!

மிரட்டும் டெங்கு

கொசுவால் கொழிக்கும் அதிகாரிகள்... தடுப்பூசியை அனுமதிக்காத அரசு!

Published:Updated:
மிரட்டும் டெங்கு
பிரீமியம் ஸ்டோரி
மிரட்டும் டெங்கு
மிரட்டும் டெங்கு

டெங்கு...இன்று தமிழகத்தையே மிரட்டிக்கொண்டிருக்கும் சொல் இதுதான். ‘‘இதுவரை 75 பேர் இறந்துள்ளார்கள். 1,200 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்’’ என டெங்கு டேட்டா தந்திருக்கிறார் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன். ஆனால் சேலம், நாமக்கல், தஞ்சாவூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விருதுநகர், திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர் என்று பல மாவட்டங்களில் கோரதாண்டவம் ஆடுகிறது, டெங்கு. தமிழகத்தில் கிட்டத்தட்ட வீட்டுக்கு ஒருவர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஊர்கள் நிம்மதி தொலைத்துள்ளன. அரசு மருத்துவமனைகளில் அமர இடமில்லாத அளவுக்குக் கூட்டம்.  தனியார் மருத்துவமனைகளிலும் மக்கள் வெள்ளம். ஆனால், இதற்கு ‘மர்மக்காய்ச்சல்’ எனப் பெயர் வைத்திருக்கும் அமைச்சர்கள், ஆட்டோவில் பாத்திரத்தை வைத்துக்கொண்டு ‘நிலவேம்பு கஷாயம் கொடுக்கிறோம்’ என்று பச்சைக்கொடி அசைத்து விழா கொண்டாடுவதில்தான் குறியாக இருக்கிறார்கள்.

டெங்குவைவிட கொடூரமான பல தொற்றுநோய்களைத் தமிழகம் இதற்குமுன் எதிர்கொண்டிருக்கிறது. அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அந்த நோய்களைக் கட்டுக்குள் கொண்டுவந்த சரித்திரங்களும் இங்கு உண்டு. டெங்குவேகூட இதற்கு முன்பு தமிழகத்தைத் தாக்கியிருக்கிறது. அப்போதும் தீவிர நடவடிக்கைகள் மூலம் அந்நோய் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த அளவுக்கு உயிரிழப்புகளோ, பாதிப்புகளோ இல்லை. இப்போது மட்டும் ஏன் இவ்வளவு பிரச்னை?

மிரட்டும் டெங்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘அரசின் செயல்படா தன்மைதான்’ என ஒற்றை வரியில் சொல்கிறார்கள், மருத்துவத்துறை சார்ந்த நிபுணர்கள்.

டெங்குவுக்கு மூலகாரணம், கொசுக்கள். கடந்த ஐந்தாண்டுகளில் கொசுக்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவில்லை. கொசுக்களின் தன்மை பற்றிய ஆராய்ச்சிகளும் இல்லை. கொசுக்கள் பற்றி ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கும் கள ஊழியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை. ‘‘பொது சுகாதாரத் துறையின் வேலை, நோய்களைத் தடுப்பதுதான். ‘தமிழ்நாடு  ஹெல்த் சிஸ்டம் புராஜெக்ட்’ என்று ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள். இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது. இந்த நிதி, முழுக்க உள்கட்டமைப்புப் பணிகளுக்குத்தான் செலவிடப்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் களத்துக்குச் செல்லும் ஊழியர் பணியிடங்கள் பல வருடங்களாக காலியாக உள்ளன. அந்தப் பணியிடங்களை நிரப்ப அதிகாரிகள் முனைப்புக் காட்டுவதில்லை. சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் போன்றவர்களே, நோய்த்தடுப்புப் பணிகளைக் களத்தில் செய்பவர்கள். 5,000 மக்கள்தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் இருந்த நிலைமை மாறி, 25 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்றாகிவிட்டது. அந்த அளவுக்குக் காலியிடங்கள். இவற்றை நிரப்பினால் மட்டுமே டெங்குவின் கொடூரப் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க முடியும்’’ என்கிறார் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைமை நிலையச் செயலாளர் டாக்டர் பாலகிருஷ்ணன்.

வழக்கமாக, ஜூலை மாதத்தின் மத்தியில் கொசுக்களின் எண்ணிக்கை பெருகும். இக்காலத்தில்தான் தொற்றுநோய்களின் தாக்கமும் அதிகமாக இருக்கும். சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை உள்பட அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்து, கொசு ஒழிப்பு மற்றும் தொற்றுநோய்த் தடுப்பு தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவார்கள். இந்தப் பணிகள் இயல்பாகவே வருடம்தோறும் நடக்கும். இந்த ஆண்டு அப்படியான ஒருங்கிணைந்த ஆய்வுக்கூட்டங்கள் எதுவுமே நடத்தப்படவில்லை. ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே அமைச்சர்களும், முதல்வரும் கவனம் செலுத்தியதால், இதையெல்லாம் கண்காணிக்கவோ, முடுக்கிவிடவோ யாரும் இல்லை. தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற கதையாக, கொசுக்கள் பெருகி டெங்கு தீவிரமாகப் பரவியபிறகு ‘கொசு ஒழிப்புக்கு நிதி ஒதுக்கியதாக’ அறிவிக்கிறார், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்.  

‘‘கொசு ஒழிப்பு என்பது வளம் கொழிக்கும் விஷயமாக அதிகாரிகளால் பார்க்கப்படுகிறது...’’ என்கிறார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ. ‘‘இதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும் முறைகேடுகள் நடக்கின்றன. ஆகஸ்ட் 15-ம் தேதி மேடவாக்கம் அருகேயுள்ள ஒட்டியம்பாக்கம் கிராமசபைக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். வரவு-செலவுக் கணக்கில், கொசு ஒழிப்புக்கு நான்கு மாதங்களில் 43 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டதாகச் சொன்னார்கள். மக்கள் கொதித்தெழுந்து விட்டார்கள். ‘ஒருமுறைகூட கொசு மருந்து அடித்ததில்லை. என்ன செலவிட்டீர்கள்?’ என்று கேட்டபோது, யாரிடமும் பதில் இல்லை. தமிழகம் முழுவதும் இதுதான் நிலை. ஒரு பக்கம் நிதி ஒதுக்கீடு குறைந்துகொண்டே வருகிறது. வரும் நிதியிலும், உரிய முறையில் செலவிடப்படாமல் முறைகேடு நடக்கிறது.

நீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட இந்த அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்த மறுக்கிறது. தேர்தலை நடத்தாததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கும் 4,000 கோடி ரூபாய் இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. இந்த நிதியிலிருந்தே துப்புரவு, கொசு ஒழிப்பு போன்ற அடிப்படைப் பணிகளுக்குப் பணம் வழங்கப்படும். இது நிறுத்தப்பட்டதால் துப்புரவுப் பணிகள் ஸ்தம்பித்துவிட்டன. கோவை மாநகராட்சிக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படாததால் துப்புரவுத் தொழிலாளர்களுக்குச் சம்பளமே கொடுக்கப்படவில்லை. இதுதான் இன்றைய நிலை. இன்று தமிழகத்தைக் கவ்விக்கொண்டிருக்கும் டெங்குக் காய்ச்சலுக்கும், டெங்கு மரணங்களுக்கும் இந்த அரசும், முதலமைச்சரும்தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும்’’ என்கிறார் சிவ.இளங்கோ.

டெங்குவைக் குணமாக்க மருந்துகள் இல்லை. காய்ச்சலைக் குணப்படுத்தும் மருந்துகளைத்தான் கொடுக்க வேண்டும். உடல் தானாகவே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி வைரஸோடு போரிடும். பெரும்பாலும், ஏழு நாள்களில் டெங்கு குணமாகிவிடும். டெங்கு பரவுவதைத் தடுக்க, கொசுக்களை ஒழிப்பது மட்டுமே தீர்வு. ஆனால், எங்கேனும் டெங்கு இருப்பதை அறிந்தால், எல்லோரும் அந்தப் பகுதியில் குவிந்துவிடுகிறார்கள். ப்ளீச்சிங் பவுடர் தெளிப்பது, நிலவேம்பு கஷாயம் கொடுப்பது என்று ‘ஒருநாள் கூத்து’ நடக்கிறது. அவ்வளவுதான்.

ஆனால், ‘‘நிலவேம்பு கஷாயம் கொடுப்பது சரியான தீர்வல்ல. தங்களின் செயல்படாத் தன்மையை மறைக்க, கஷாயம் கொடுத்து மக்களை அரசு ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. டெங்கு தாக்கி மருத்துவமனையில் குவிந்திருக்கும் பலரும் நிலவேம்பு கஷாயம் குடித்தவர்கள்தான். இந்தக் கஷாயத்தைத் தாங்கிக்கொண்டு வளரும் அளவுக்கு, டெங்கு வைரஸ் தன்னை தகவமைத்துக் கொண்டுவிட்டது. இனி கஷாயத்தால் பெரிய பலன் கிடைக்காது என்கிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்க பொதுச்செயலாளர்   ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

மிரட்டும் டெங்கு

‘‘கொசு ஒழிப்பு, தொற்றுநோய் தடுப்பு சார்ந்து எந்த ஆராய்ச்சியும் இங்கு நடக்க வில்லை. பசு மாட்டின் கோமியத்தை ஆராய்வதில் காட்டும் ஆர்வத்தை, டெங்கு போன்ற தொற்றுநோய்களுக்கான ஆராய்ச்சிகளில் காட்டுவதில்லை. டெல்லியைச் சேர்ந்த டாக்டர் நவீன் கண்ணா, டெங்குவுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்தார். அதை, ‘கிளினிக்கல் ட்ரையல்’ செய்ய மத்திய அரசு நிதியே ஒதுக்கவில்லை. இன்னொரு பக்கம், செனோஃபி பாஸ்டியர் என்ற பிரான்ஸ் நிறுவனம், டெங்குவுக்கு DENGVAXIA என்ற தடுப்பூசி கண்டுபிடித்திருக்கிறது. உலக சுகாதார நிறுவனமும் இதை அங்கீகரித்து விட்டது. 2015 முதலே இதை இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், மெக்சிகோ, கோஸ்டாரிகா, பராகுவே, தாய்லாந்து, பெரு போன்ற நாடுகள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. ஆனால், இந்திய அரசாங்கம் அந்தத் தடுப்பூசியை அனுமதிக்க மறுக்கிறது. இதை உடனடியாக இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டும்.

கொசு ஒழிப்பு, டெங்கு விழிப்பு உணர்வுப் பணியில் ஒட்டுமொத்த அரசு எந்திரமும் திருப்பிவிடப்பட வேண்டும். மருத்துவ அவசர நிலையைத் தமிழக அரசு பிரகடனப்படுத்த வேண்டும். மருத்துவமனைகள் நிரம்பிவழிவதால், திருமண மண்டபங்கள், சமூகநலக்கூடங்களில் தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும். அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளைத் தள்ளி வைத்துவிட்டு ஒட்டுமொத்த மருத்துவர்களையும் டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தவேண்டும்’’ என்கிறார் ரவீந்திரநாத்.

முதல்வரும், அமைச்சர்களும் முதலில் ‘நூற்றாண்டு விழா’ மயக்கங்களிலிருந்தும், நாற்காலி சண்டைகளிலிருந்தும் விடுபடவேண்டும். வீதியில் இறங்கி மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். டெங்கு தொடர்பான உண்மை நிலையைப் பேச தயங்காமல் முன்வர வேண்டும்.

- வெ.நீலகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism