“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், பிரதமர் மற்றும் தற்போதைய துணை ஜனாதிபதி ஆகியோரையும் விசாரிக்குமா?” என்று கேள்வி எழுப்புகிறார், ஜோசப் ஆண்டனி. இவர், ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷனை ரத்துசெய்ய வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள்தான் ஆட்சியையும், அ.தி.மு.க-வையும் அசைத்துப் பார்க்கும் விஷயங்களாக இருக்கின்றன. ‘ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும்’ என்பதைத்தான், அ.தி.மு.க அணிகள் இணைப்புக்கு முக்கிய நிபந்தனையாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வலியுறுத்தி வந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அறிவிப்பைச் செய்தபிறகே அணிகள் இணைந்தன. ‘ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடந்தால் முதலில் சிக்கப் போவது தினகரன்தான்’ என்று அமைச்சர்கள் பலரும் தினகரனை மிரட்டிப் பார்த்தனர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை இந்த விசாரணைக் கமிஷன் தலைவராக தமிழக அரசு நியமித்தது. ‘இந்த ஆணையத்தை ரத்து செய்யவேண்டும்’ என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஜோசப் ஆண்டனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து மருத்துவமனையில் நடந்த எல்லா விவகாரங்களிலும் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்துக்கும் தொடர்பு இருப்பதால், மத்திய அரசுதான் இதுபோன்ற விசாரணை கமிஷனை அமைக்க முடியும். மத்திய அரசுதான் இதை அமைக்க முடியும். கமிஷன் அமைக்கப்படுவதற்கு முன்பு, சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆனால், அப்படியான எந்த நடைமுறையையும் கடைப்பிடிக்காமல், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை ரத்துசெய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர்முன் அக்டோபர் 4-ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஆஜராகி வாதாடினார். அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன் தனது பதில் வாதத்தை வைத்தார். வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘விசாரணை கமிஷன் அமைப்பதற்குச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றத் தேவையில்லை. அது கட்டாயம் என்று சட்ட விதிகளில் குறிப்பிடப்படவில்லை’ என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வழக்கறிஞர் விஜயனிடம் பேசினோம். “ஜெயலலிதா மரணம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிய வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாமல் விசாரணை கமிஷன் அமைக்க முடியாது. அரசாணையை வெளியிட்டால், மீண்டும் அதனைத் திரும்பப் பெறக்கூடிய வழிவகைகள் உள்ளன. இந்த வழக்குக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. வலிமையான பாயின்ட் இருந்ததால்தான் இந்த வழக்கை எடுத்து வாதாடினேன்’’ என்றார்.
ஜோசப் ஆண்டனியிடம் பேசியபோது, ‘‘இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளேன். ‘உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட விசாரணை கமிஷன்தான் ஜெயலலிதா மரணத்தைப்பற்றி விசாரிக்க வேண்டும்’ என்று டிசம்பர் மாதம் மனு தாக்கல் செய்திருந்தோம். அது, நிலுவையில் உள்ளது. அதற்குள் தமிழக அரசு, விசாரணை கமிஷன் அமைத்துவிட்டது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவர் மரணமடையக் காரணமாக இருந்த சூழல் என எல்லாவற்றின் பின்னாலும் இருக்கும் உண்மைகளைக் கொண்டுவர, உயர் மட்டத்தில் இருப்பவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும். குறிப்பாக, பிரதமர் மற்றும் தற்போதைய துணை ஜனாதிபதி உள்ளிட்டோரை இந்த கமிஷன் விசாரிக்குமா?

‘இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்குத் தொடர்பில்லை’ என்று நீதிமன்றத்தில் மாநில அரசு ஏற்கெனவே கூறியுள்ளது. அப்படியானால், எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கை எந்த வகையில் தொடர்புடையது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். ‘பார்த்தோம்’ என்றார் ஓர் அமைச்சர். ‘பேசினோம்’ என்றார் இன்னோர் அமைச்சர். ‘பொய் சொன்னோம்’ என்று மன்னிப்புக் கேட்கிறார் வேறோர் அமைச்சர். இதுபற்றிக் கேட்டால் எதுவும் பேசாமல் கும்பிடு போடுகிறார் சுகாதார அமைச்சர்.
‘ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றுவந்தபோது நலமாக இருந்தார்’ என்றும், ‘அவரது மரணத்தில் சந்தேகப்படும்படி எதுவும் நடக்கவில்லை’ என்றும் அரசு தரப்பில் ஆஜரானவர்கள் தெரிவித்தனர். அப்படியானால், இப்போது ஏன் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது? இப்படியான பல முரண்பாடுகளும் கேள்விகளும் உள்ளன’’ என்றார்.
இந்தச் சர்ச்சைகளுக்கு முடிவே இருக்காது போலிருக்கிறது.
- கே.புவனேஸ்வரி