Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

படம்: விடுதலை மணி தர்மராஜ்

சொல்வனம்

படம்: விடுதலை மணி தர்மராஜ்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்
சொல்வனம்

தூரக்கடல் அகதிமுகம்

இறந்தகால நிலம் ஒரு மீனின் கனவில் கடலாகிறது
ஆகாயம் கீழிறங்கி
பள்ளத்தாக்குகளை கர்ப்பவயிறாக்கி
கால்களும் தலைகளுமாய் அமிழ்ந்த மணலை
கொஞ்சூண்டு மழை கடலாக்கியது.
புதிதாய் நீராடிய மணல்நிலம்
பசிக்கு இறந்தமீனை சிறுகுடலாக்கியது.
வயதான
பறவைமுட்டைகள்
புதுக்கடலில் விழுந்ததும் இறக்கையாய் அடித்தது.
சூரியன்சூடிய வெள்ளொளிகள்
கடலுக்கு நாடோடிச்சுடர்கள்.
முளைத்த கடலில் அணையாச்சுடர் ஆகாயத்தைப் பரப்பியது
ஒரு மீனின் முள்ளில் மோதியதால்
இறந்த சுடரொளிகளை சாயங்காலம்
எனச்சொன்னது
கர்ப்பத்துக் குஞ்சுமீன்கள்.
வலைக்காரன் வானவில் கொண்டுவருகிறான்
சல்லடை தைத்த வலையோட்டைகள்
சாயங்காலக் கடலில் மிதந்துமூழ்கியதும்
முத்தமிடத் துடிக்கும் மீன்கள் அனைத்தையும்
துடிக்கத்துடிக்க வலையாக்கினான்
அனாதையான கடற்கரையை
ஆரவாரம் செய்கிறது மீன்களின் இறுதிமூச்சு.
நீரின் அழுகை கேட்டு எழுந்த குழிநண்டுகள்
கடல்காரனின் கால்களை
கடித்துக்கடித்து அழுதுதீர்த்தன.
இரவுநீரில் இருளாகிய உப்புகள்
வருத்தத்தில் கடலை விட்டு நடந்துபோயின.
கடல் கடல் கடல் என
ஒரு பறவையின் அழுகுரல்
தூரத்துக்கடலில் அலைஅலையாய்த் தெரியும்
இருள்போர்த்திய ஓர் அகதிப்பறவை அது.

-அதிரூபன்

பொன் சாம்பல் நிறத்தும்பி

கோதுமைநிற வயல்பரப்பில் முதல் சூர்யகிரகண ஔி மிளிர்கின்றன
பொன் சாம்பல் நிறத்தும்பி
ஆகாசம் அசைத்து தாழ இறங்கி அதன் வாழ்நிலமீது
அமர்கின்றது
குடிலிலிருந்து குதித்த அணில்
விழுந்த சிவந்த கனியுருளைகளிலொன்றை
குஞ்சுக்  கைகளில் பொதித்துப்போகின்றது
பசிய காலையில்
பிஸ்கட்டின் வாசனை உறிஞ்சி
தூளியிலிருந்து பூமி குதித்த சிறுமியின் கண்களில் ஓராரண்யப்பசி
வயிறுதடவி கோதுமை மணியை ஒவ்வொன்றாய் பொறுக்கியெடுத்து சிறுநாவுரச அண்ணம்தொட்டு
அவள் விழுங்கியபோது
புறஊதாநிறமி இரைப்பைவரை
ஊறி இறங்கியது
பின் தாகக்குடல் நனைக்க நீலம்பூத்த தன்னுடலை இழுத்துக்கொண்டு
கடல்குடிக்க நிலம் குலுங்க தூரம் ஓடியவளின் கால்சிலம்பின் மணி குலுங்க
எறும்புகளின் வரிசை கலைந்து கூடிப்போகின்றன
மிகுதிப்பட்ட வெளியெங்கிலும் பேரொழுங்கின் அமைதி சலம்ப
காற்றூதிய கனத்த சங்குமீன்கள் ஈரமணலில் ஊர்ந்து நகர்கின்றன
சமுத்திர நீலத்தை வெண்மையாக்கிய குமிழ்களுக்குள் நுழைந்த வெளியில்
தாடையிடுக்கில் வழிந்த அவள் வயதேறிய ரத்தச்சொட்டுகள்
தானியவயலெங்கிலும் சிவந்து காணக்கிடத்தின
அந்தி மெல்ல அமிழ்ந்து
ஆழ்ந்த அமைதிக்கு முன்பான இருள்
ஔிச்சத்தில் பண்டைய மனுசிபிண்டம் மேலும் கறுத்து நிசப்தம்கூடிய பார்வையில்
அவள் திரும்பி நோக்கியபோது
காலத்தின் இருப்பை
ஓவியச் சட்டகத்திற்குள்
கடுஞ்சிவப்பு வண்ணத்தைக் கொண்டு அவளாடை மல்லிகைப்பூக்களுக்குள் பூசிக்கொண்டிருந்தேன்

-அனாமிகா