Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 18 - ரங்கூன் ராட்சஷன்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 18 - ரங்கூன் ராட்சஷன்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 18 - ரங்கூன் ராட்சஷன்!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 18 - ரங்கூன் ராட்சஷன்!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 18 - ரங்கூன் ராட்சஷன்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 18 - ரங்கூன் ராட்சஷன்!
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 18 - ரங்கூன் ராட்சஷன்!

ந்த அத்தியாயத்தின் கதாநாயகனான... மன்னிக்கவும், வில்லனான நீ வின் அவர்களுக்கு உகந்த எண் 9 என்று எண்கணித ஜோதிடர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே பதினெட்டாம் (1+8=9) அத்தியாயத்தில் அன்னாரைப் பற்றி அளவளாவ இருக்கிறோம். அன்னாருக்கு மட்டுமே உகந்த எண் 9. ஆனால், அன்றைய பர்மாவுக்கே ஆகாத எண் அது. அந்த எண் மட்டுமல்ல, நீ வினும் பர்மியர்களுக்கே ஆகாதவர்தான்.

1910 அல்லது 1911. நீ வின் (Ne Win) பிறந்த ஆண்டு, இந்த இரண்டில் ஏதோ ஒன்று. ரங்கூனிலிருந்து சுமார் 200 மைல்கள் தொலைவிலிருக்கும் Paungdale என்ற சிறிய கிராமமே சொந்த ஊர். பெற்றோர் வைத்த பெயர் Shu Maung. (‘பெருமைக்குரியவன்’ என்று பொருள்.) பர்மிய சீனக் குடும்பம். தந்தை, சாதாரண அரசு அலுவலர். நடுத்தரமான வாழ்க்கை. கல்வியில் ஆர்வம் கொண்ட நீ வின், பள்ளிப் படிப்புக்குப் பிறகு ரங்கூன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பாடத்தை விருப்பத்துடன் தேர்ந்தெடுத்தான். டாக்டராகும் கனவு கண்டான். பாழாய்ப்போன பயாலஜி வரவில்லை. ஃபெயில். (‘டாக்டர்’ ஆகமுடியாமல், பர்மாவின் ‘டிக்டேட்டர்’ ஆனதெல்லாம் பர்மியர்களின் தலைவிதி!)

1931-ல் படிப்பை நிறுத்திவிட்டு, அஞ்சல் அலுவலராக ரங்கூனின் பணிபுரிய ஆரம்பித்தார் நீ வின். அப்போது பிரிட்டனின் காலனி நாடாக பர்மா இருந்தது. பிரிட்டிஷாரை எதிர்த்து அங்கே ஆங் சான் (ஆங் சான் சூ கியின் தந்தை) சுதந்திரப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார். விடுதலை வேட்கை கொண்ட பர்மிய இளைஞர்கள் பலரும், ஆங் சானையே தங்கள் தலைவராகக் கொண்டு செயல்பட்டனர். நீ வினும் ‘நாம் பர்மியர்’ என்ற தேசிய இயக்கத்தில் இணைந்து போராட்டங்களில் கலந்து கொண்டார்.

இரண்டாம் உலகப் போர் சமயம். பர்மியர்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு ஜப்பானின் ஆதரவு இருந்தது. ‘பர்மா சுதந்திர ராணுவம்’ அமைக்க ஜப்பான் முன்வந்தது. ஆங் சான், ராணுவப் பயிற்சிக்காக முப்பது இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தார் (Thirty Comrades). அதில் நீ வினும் ஒருவர். ஜப்பான் வசம் இருந்த ஹைனான் தீவில் ஜப்பானிய கர்னல் சுஸுகி கெய்ஜி, முப்பது பர்மியர்களுக்கு ரகசியமாக ராணுவப் பயிற்சிகளை வழங்கினார் (1941). அங்கேதான் Shu Maung என்ற இயற்பெயர் நீ வின் ஆனது. ‘சூரியக் கதிர் போன்றவன்’ என்று பொருள்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 18 - ரங்கூன் ராட்சஷன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பர்மா சுதந்திர ராணுவத்தின் உதவியுடன், ஜப்பானியப் படைகள் பர்மாவுக்குள் புகுந்து பிரிட்டனின் படைகளைப் பின்வாங்கச் செய்தன. 1943-ல் பர்மாவைச் சுதந்திர நாடாக ஒப்புக்கு அறிவித்தது ஜப்பான். பா மாவ் என்ற பொம்மைத் தலைவரை ஆட்சியில் உட்கார வைத்தது. ‘ஜப்பானால் ஒருபோதும் பர்மாவுக்குச் சுதந்திரம் கிடைக்காது’ என்று ஆங் சான் தாமதமாகவே உணர்ந்து கொண்டார். பர்மியப் போராளிகளில் ஒரு பிரிவினர், மீண்டும் பிரிட்டனுடன் கைகோத்து ஜப்பானியப் படைகளை விரட்டியடிக்க முடிவு செய்தார்கள்.

இது தொடர்பாக 1945-ல் இலங்கை நாட்டின் கண்டியில் நடந்த மாநாட்டில், பர்மிய ராணுவப் பிரதிநிதியாக நீ வின் கலந்து கொண்டார். பிரிட்டன் படைகள் மீண்டும் பர்மாவைக் கைப்பற்ற பர்மா சுதந்திர ராணுவமே உதவியது. இதை ஜப்பான் ஆதரவு பர்மிய கம்யூனிஸ்டுகள் எதிர்த்தனர். ஆரம்ப கால ‘தோழர்’ நீ வின், பிரிட்டிஷாரின் உற்ற நண்பராகிப் போனார். கம்யூனிஸ்டுகளை ஒடுக்கும் ஆபரேஷனுக்குப் பிரிட்டிஷார் திட்டமிட, அவற்றைத் தலைமை தாங்கி நல்லவிதமாக நடத்திக் கொடுத்தார் நீ வின். தன்னால் வளர்க்கப்பட்ட ஒரு காம்ரேட் கடா, இப்போது கம்யூனிஸ்டுகளின் மார்பிலேயே பாய்கிறதே என்று ஆங் சான் வருத்தப்பட்டார். வெள்ளம் தலைக்கு மேலே போய்விட்டது. 1947-ல் காலனிய பர்மாவின் துணைத்தலைவராக இருந்த ஆங் சானும், அவரது அமைச்சரவை சகாக்கள் ஆறு பேரும் படுகொலை செய்யப்பட்டனர். அதில் தொடர்புடைய ஆங் சானின் அரசியல் எதிரியான யூ ஸா கைது செய்யப்பட்டு மரண தண்டனைக்குள்ளானார். 1948, ஜனவரி 4-ல் பர்மாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது. சோஷலிஸ்ட்டான யூ நூ, சுதந்திர பர்மாவின் முதல் பிரதமரானார்.

பர்மிய சுதந்திரப் போராட்ட நாயகர்களுள் ஒருவராக நீ வினுக்கும் மக்கள் மத்தியில் மதிப்பிருந்தது. அப்போது இரண்டாம் நிலை ராணுவத் தளபதியாக இருந்த நீ வின், பிரதமர் யூ நூவின் ஆதரவுடன் அடுத்தடுத்தப் பதவிகளுக்கு உயர்ந்தார். தனக்கு ஆகாதவர்களையெல்லாம் ராணுவத்திலிருந்து காலி செய்தார். பர்மாவின் ராணுவத்தையே மொத்தமாகத் தனது அதிகாரத்தின்கீழ் கொண்டு வந்தார்.

சுதந்திரத்துக்குப் பிறகான பர்மாவில், வெவ்வேறு இனக்குழுக்களுக்கு இடையேயான பிரச்னைகள் தலை தூக்கின. ஷான் மற்றும் காயா மாகாணங்கள் பர்மாவிலிருந்து விடுதலையாகும் கனவுடன் இருந்தன. சட்டம், ஒழுங்கு நாறிக் கிடக்க, எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்பது போலத்தான் யூ நூவின் அரசும் ஊசலாடிக்கொண்டிருந்தது. சூழலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, பிரதமர் யூ நூ பதவி விலகினார். ஆட்சியை ராணுவத்திடம் ஒப்படைத்தார். 1958 அக்டோபர் முதல் 1960 ஏப்ரல் வரை சுமார் ஒன்றரை ஆண்டுகள் ராணுவத் தளபதி நீ வின் இடைக்காலப் பிரதமராகப் பதவி வகித்தார்.

பிரிட்டிஷ் காலனியாதிக்கம், இரண்டாம் உலகப்போர்க் காலம் என்று ராணுவ ஆட்சிக்குப் பழகியிருந்த பர்மிய மக்கள், ராணுவத் தளபதி நீ வினுடைய ஆட்சியை வெறுக்கவில்லை. சூழல் கட்டுக்குள் வந்தபிறகு, 1960-ல் பர்மாவில் மீண்டும் தேர்தல் நடந்தது. யூ நூவின் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற, அவர் மீண்டும் பிரதமரானார். மறுபடியும் அரசியல் குழப்பங்கள். ஸ்திரமற்ற சூழல். குற்றங்கள் பெருகின.

பதவி ருசி கண்ட பூனையான நீ வின், உரிய தருணத்துக்காகக் காத்திருந்தார். மீண்டும் ஒருமுறை இடைக்காலப் பிரதமராகவெல்லாம் விரும்பவில்லை. ஆங் சான் சமாதி முன் அமர்ந்து ‘தியான ஸீனும்’ போடவில்லை. அதற்கும் மேலே யோசித்தார். 1962, மார்ச் 2 அன்று, நீ வின் தலைமையில் ராணுவப் புரட்சி அரங்கேறியது. ரங்கூனின் முக்கிய இடங்களை, அரசுக் கட்டடங்களை ராணுவம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பிரதமர் யூ நூவும், முக்கிய அமைச்சர்களும், முன்னாள் அதிபர் சாவோவும், தலைமை நீதிபதியும் கைது செய்யப்பட்டனர்.

‘யூ நூவின் தலைமையிலான அரசு கலைக்கப்பட்டுவிட்டது. முக்கியமான ராணுவத் தளபதிகள் அடங்கிய Union Revolutionary Council இனி ஆட்சி செய்யும். அந்த கவுன்சிலின் சேர்மனாக நான் தேசத்தை வழிநடத்துவேன். இது ரத்தம் சிந்தாத அமைதியான புரட்சி.’ - பெருமை பீற்றினார் நீ வின். ஆனால், சில கொலைகள் நடந்திருந்தன. குறிப்பாக, முன்னாள் அதிபர் சாவோவின் மகன் சாவோ மை சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். சில முக்கியஸ்தர்கள் காணாமல் போயிருந்தனர். 

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 18 - ரங்கூன் ராட்சஷன்!

கோடை விடுமுறை முடிந்து, ரங்கூன் பல்கலைக்கழக மாணவர்கள் ஜூலையில் வகுப்புகளுக்குத் திரும்பினர். அவர்களிடையே ராணுவ அரசுக்கு எதிரான கனல் தகித்தது. அரசுக்கு எதிராக மாணவர் போராட்டம் அமைதி வழியில் ஆரம்பித்தது. ஜனநாயக தேசத்தின் தலைவர்களாலேயே மாணவர் எழுச்சியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நீ வின் சும்மா இருப்பாரா? ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அடக்க ராணுவம் ஏவப்பட்டது. மாணவர் சங்கக் கட்டடம் டைனமைட்டால் தகர்க்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இறந்துபோயினர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ரங்கூன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களும் காலவரையின்றி மூடப்பட்டன.

கையில் படிந்திருந்த ரத்தக்கறையைத் துடைத்துவிட்டு, நீ வின் வானொலியில் கர்ஜித்தார். ‘இப்படிப் போராடுவதின் மூலம் அரசுக்குச் சவால் விடுகிறீர்கள். நீங்கள் கத்தியை எடுத்தால் நானும் கத்தியை எடுப்பேன். ஈட்டியை எடுத்தால் நானும் ஈட்டியை எடுப்பேன்.’

இடதுசாரி, வலதுசாரி என்ற பாகுபாடில்லாமல் கைதுகள் தொடர்ந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்சிகள் சார்ந்த போராட்டங்களும் தொடர்ந்தன. ‘எதிர்க்கட்சிகள் அனைத்தும் தடை செய்யப்படுகின்றன’ என்ற ஒற்றை அறிவிப்பில் எதிர்ப்புகளை ஷட்-அப் பண்ணினார். ‘இனி ஒரே ஒரு அதிகாரபூர்வக் கட்சிதான். அது தன் தலைமையிலான Burma Socialist Programme Party (BSPP) மட்டுமே’ என்று அறிவித்தார். தேசியம், மார்க்ஸியம், பௌத்தம் எல்லாம் வேலைக்கே ஆகாது. ‘Burmese way to Socialism - இதுவே எனது லட்சியம்’ என்றார். தனது ஆட்சியில் புதிய பர்மா பிறக்கப்போகிறது என்றெல்லாம் தேனொழுகப் பேசிவிட்டு, முட்டாள்தனத்துடனும், குரூரத்துடனும் ஒவ்வொரு விஷயமாக அரங்கேற்ற ஆரம்பித்தார் நீ வின்.

பர்மாவை இரும்புத்திரை கொண்டு மூடினார். அயல் தேசத்தினர் யாரும் தொழில் தொடங்க, முதலீடு செய்ய முடியாது. ஏற்கெனவே அங்கே தொழில் நடத்திக்கொண்டிருக்கும் அயல் நாட்டினர் மூடிக்கொண்டு கிளம்பலாம். பர்மா இனி பர்மியர்களுக்கே. அனைத்தும் தேசியமயமாக்கப்படுகின்றன. பத்திரிகை, சில்லறை வணிகம், மர வணிகம், இன்னபிற.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 18 - ரங்கூன் ராட்சஷன்!

பர்மாவில் செழிப்புடன் வணிகம் செய்து கொண்டிருந்த சீன, இந்திய வணிகர்கள் இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பர்மாவின் பொருளாதாரத்துக்கு வலு சேர்த்த அரிசி ஏற்றுமதியும், தாதுப்பொருள்கள் ஏற்றுமதியும் பெருமளவு குறைந்து போயின. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதிப்பிருந்தது. ஏழை பர்மியன் ஒருவன் அன்றைய வருமானத்துக்காகத் தவித்துக்கொண்டிருந்த நேரத்தில், நீ வின் பிரிட்டனின் அஸ்காட் ரேஸ் கோர்ஸில் குதிரைகள் மீது பணம் கட்டிக்கொண்டிருந்தார். ஐரோப்பிய ஸ்பாக்களில், தன்னுடைய ஏகப்பட்ட மனைவிகளுடன் தேசநலன் கருதி மசாஜ் எடுத்துக்கொண்டிருந்தார். 

ஆசியாவின் செழிப்பான நாடுகளில் ஒன்றாக இருந்த பர்மாவை, நீ வின் தன் பொற்கால ஆட்சியால் உலகின் முதல் 10 ஏழை நாடுகளுள் ஒன்றாக மாற்றியது துயர வரலாறு. உலகுக்கே அரிசி கொடுத்த பர்மியர்கள், பட்டினியால் செத்த கொடுமைகளும் உண்டு. அதில் பர்மியத் தமிழர்களின் கண்ணீரும் உண்டு. இந்நிகழ்வுகளின் பின்னணியில், முதலில் குறிப்பிட்ட அந்த எண்ணுக்கும் பெரும்பங்கு உண்டு.

(நீ வின் வருவார்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism