Published:Updated:

குட்கா ஊழல்... கிரேட் எஸ்கேப்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குட்கா ஊழல்... கிரேட் எஸ்கேப்!
குட்கா ஊழல்... கிரேட் எஸ்கேப்!

குட்கா ஊழல்... கிரேட் எஸ்கேப்!

பிரீமியம் ஸ்டோரி

மிழக அரசியலில் புயலைக் கிளப்பியது குட்கா ஊழல். ‘‘சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் குட்கா வியாபாரியிடம் லஞ்சம் வாங்கினார்கள்’’ என்று வெளிப்படையாகச் சொன்னார், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். சட்டமன்றத்தில் குட்கா பாக்கெட்டுகளோடு போய் எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 21 பேர் மீதான உரிமை மீறல் விவகாரம், நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இவ்வளவுக்கும் காரணமான குட்கா ஊழலில் சிக்கிய திமிங்கலங்களைத் தப்ப வைத்துவிட்டு, குட்டி மீன்களை மட்டும் வலைக்குள் மாட்டியிருக்கிறார்கள்.

குட்கா ஊழல்... கிரேட் எஸ்கேப்!

இத்தனைக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் நடைபெறும் வழக்கு இது. ‘குட்கா ஊழல் தொடர்பாக நேர்மையான ஒரு அதிகாரி, பாரபட்சமில்லாத முறையில் விசாரிக்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி, லஞ்சம் கைமாறியது உண்மைதான் என உறுதி செய்து, முதல் தகவல் அறிக்கையைப் இப்போது பதிவு செய்துள்ளது. குட்கா நிறுவனத்தை நடத்திவந்த மாதவ ராவ், அவரின் உதவியாளர், போலீஸ், சென்னை மாநகராட்சி, உணவுப் பாதுகாப்புத் துறை, வணிகவரித் துறை, மத்திய அரசின் கலால் துறை அதிகாரிகள் சிலரின் பெயர்கள் மட்டுமே அதில் உள்ளன. 17 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இல்லை. இதைத் தொடர்ந்தே, ‘இந்த விவகாரத்தை முற்றிலும் நீர்த்துப்போகச் செய்யும் வேலைகளைத் தமிழக அரசு செய்து வருவதாக’ குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குட்கா ஊழல்... கிரேட் எஸ்கேப்!

ஓராண்டு தாண்டிய பயணத்தில், பல திடுக்கிடும் திருப்பங்களைச் சந்தித்தது குட்கா ஊழல் விவகாரம். சென்னையை அடுத்த செங்குன்றத்தில், சட்டவிரோதமாக செயல்பட்ட குட்கா குடோனில் வருமானவரித் துறையினர் 2016 ஜூலையில் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களுடன் கணக்கு வழக்கு நோட்டு ஒன்றும் சிக்கியது. குட்காவைத் தடையின்றி சப்ளை செய்ய, யார் யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியல் அதில் இருந்தது. சுமார் 39 கோடி ரூபாய்க்கு அதில் லஞ்சக்கணக்கு இருந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் இப்போதைய டி.ஜி.பி ராஜேந்திரன் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

குட்கா ஊழல்... கிரேட் எஸ்கேப்!

இதையடுத்து, வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவு முதன்மை இயக்குநர் பாலகிருஷ்ணன் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், குட்கா ஊழல் பற்றி விவரித்திருந்தார். இந்த நிலையில், தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் 2016, டிசம்பர் 21-ம் தேதி வருமானவரித் துறைச் சோதனை நடத்தியது. அடுத்த இரண்டு நாள்களில், ‘குட்கா விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கடிதம் எழுதியது பரபரப்புச் செய்தியானது. “நடவடிக்கை கேட்டு குற்றவாளியே கடிதம் எழுதுகிறார்’’ எனக் கடுமையாக விமர்சனம் செய்தார், ஸ்டாலின். பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ‘‘குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று அறிக்கை வெளியிட்டார். இப்படிப் பல தரப்பிலிருந்தும் அனல் வீசும் கோரிக்கைகள் எழுந்த நிலையிலும், அமைதி காத்தது தமிழக அரசு.

குட்கா ஊழல்... கிரேட் எஸ்கேப்!

இதற்கிடையே குட்கா விவகாரம் தொடர்பான ஃபைல், தலைமைச் செயலகத்திலிருந்தும், டி.ஜி.பி அலுவலகத்திலிருந்தும் காணாமல் போனது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இதுபற்றி தெரிவித்தது சர்ச்சைக்குள்ளானது. காணாமல் போன ஃபைல்களைத் தேடும் பணியும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் கைக்கு வந்தது.

இந்த நிலையில்தான் இப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசியபோது, ‘‘வருமானவரித் துறையினர் கைப்பற்றிய கணக்கு நோட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானபோதே, அவர்கள் மூவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று சி.பி.ஐ-யிடம் புகார் தெரிவித்தோம். ஆனால், அவர்கள்மீது எந்த நடவடிக்கையுமில்லை. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அப்போது, அன்றைக்கு டி.ஜி.பி-யாக இருந்த அசோக் குமார், காவல்துறை உயரதிகாரிகள் பலர்மீது பரபரப்பான புகார் கடிதம் ஒன்றை முதல்வருக்கு அனுப்பியதாகக் கூறப்பட்டது. அதற்காக அவரை, பணிக்காலம் முடிவதற்கு முன்பே வீட்டுக்கு அனுப்பிவைத்ததாகத் தகவல் வெளியானது. குட்கா விவகாரத்தில் தொடர்புடைய இந்த மூவருக்கு எதிராக யார் களத்தில் இறங்கினாலும், அதைத் தடுக்கும் வேலைகள் மறைமுகமாக நடந்துகொண்டிருந்தன.

இப்போது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருப்பதன் மூலம், ‘குட்கா ஊழல் நடந்துள்ளது’ என்பது உறுதியாகியுள்ளது. அப்படியென்றால், எந்த அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது? வருமானவரித்  துறை கடிதத்தின் அடிப்படையிலா அல்லது ஜார்ஜ் எழுதிய கடிதத்தின் அடிப்படையிலா? இதையெல்லாம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் வெளியிட வேண்டும். அரசின்கீழ் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் இந்த விசாரணையை நடத்தினால், நியாயம் கிடைக்காது; உண்மையான குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள்; அப்பாவிகளே சிக்குவார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர், டி.கே.ராஜேந்திரன் ஆகிய இருவரையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும். முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அதுகுறித்தும் அரசு, தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ, ‘‘உண்மையான குற்றவாளிகளைத் தப்ப விட்டுவிட்டனர். ஐயாயிரம், பத்தாயிரம் வாங்கியதாக சிலர்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இது யாரை ஏமாற்ற? விஜயபாஸ்கர், ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்கவில்லை. ‘ஓர் ஊழல் குற்றச்சாட்டு வந்துவிட்டால், எஃப்.ஐ.ஆர் பதியப்பட வேண்டும்’ என உ.பி-யைச் சேர்ந்த லலிதா குமாரி என்பவர் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், இவர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதியப்படவில்லை. இவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது என்பது தெளிவாகிறது” என்றார்.

குட்கா ஊழல்... கிரேட் எஸ்கேப்!

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மஞ்சுநாதாவிடம் கருத்துக் கேட்பதற்காக, அவருடைய அலுவலக தொலைபேசி எண்ணுக்குப் பலமுறை தொடர்பு கொண்டோம். “சார்... மீட்டிங்கில் இருக்கிறார்” என்ற பதிலையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.

‘‘முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் முன்னாள் டி.ஜி.பி அசோக் குமார் ஆகியோருக்குச் சில கேள்விகளை அனுப்பியுள்ளோம். அவர்களின் பதில் வந்ததும், மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும். விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பாக இந்த வழக்கில் மேலும் சிலரைச் சேர்க்க முடியும்’’ என்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரக அதிகாரிகள் விளக்கம் சொல்கிறார்கள்.

- கே.புவனேஸ்வரி
படங்கள்: சு.குமரேசன்,கே.ஜெரோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு