Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 19 - ஒன்பதில் சனி!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 19 - ஒன்பதில் சனி!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 19 - ஒன்பதில் சனி!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 19 - ஒன்பதில் சனி!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 19 - ஒன்பதில் சனி!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 19 - ஒன்பதில் சனி!
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 19 - ஒன்பதில் சனி!

பிரிட்டிஷ் காலனியாதிக்க பர்மாவுக்கு, இந்தியர்கள் வணிகம் செய்வதற்காகவும் விவசாய வேலைகளுக்காகவும் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதிகமாகச் செல்லத் தொடங்கினர். அதில், தமிழர்கள் மிக அதிகம். ரங்கூன், அதைச் சுற்றிய பகுதிகளில் குடியேறி வாழ ஆரம்பித்தார்கள்.

1962-ல் பர்மாவில் அமைந்த நீ வினின் ராணுவ ஆட்சி, பர்மிய வம்சாவளி இந்தியர்களுக்கு, குறிப்பாக பெரும்பான்மையான தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. அவரது பர்மியமயமாக்கல் கொள்கையினால், அங்கு குடியுரிமை பெறாத தமிழர்கள் வேலையை இழந்தார்கள். வணிகத்தை, சொத்துகளை இழந்தார்கள். கூடுதல் வரிச்சுமைகள் சேர்ந்தன. 1964, மே 15 மாலையில் வெளியான அரசின் ஓர் அறிவிப்பு, ஒட்டுமொத்த பர்மியர்களையும் பதற்றத்துக்குள்ளாக்கியது. ‘இனி 50 கியாட், 100 கியாட் நோட்டுகள் செல்லாது.’

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 19 - ஒன்பதில் சனி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் திடீர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கான காரணமாக நீ வின் சொன்னது... வேறென்ன? ‘கறுப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறேன்.’ அதுவரையிலான மக்களின் வங்கிச் சேமிப்பு, சிறுவாட்டுச் சேமிப்பெல்லாம் மதிப்பிழந்து போயின. கோபத்தில் மக்கள் வீதிகளில் திரண்டு 50, 100 கியாட் நோட்டுகளைக் குவித்துத் தீயிட்டார்கள். தலைமுறைகள் தாண்டி வாழ்ந்த மண்ணைவிட்டு இந்தியர்கள் வெளியேற ஆரம்பித்தார்கள். பர்மாவில் சம்பாதித்தவற்றைக் கொண்டு செல்லத் தடை இருந்தது. தமிழ்ப்பெண்களின் தாலிக்குக்கூட அனுமதி கிடைக்கவில்லை. இந்தியத் தூதரகத்தின் முன், ‘கப்பலை விடுங்கள். கண்ணீரைத் துடையுங்கள்’ என்று பர்மியத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கப்பல்கள் பர்மியத் தமிழர்களைக் கனத்த இதயத்துடன் இங்கே சுமந்து வந்தன. தமிழகத்தில் ‘பர்மா காலனிகள்’ உருவானது அதற்குப் பிறகுதான்.

1964-ல் மட்டும் பர்மாவிலிருந்து வெளியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். அதில், சுமார் 70 சதவிகிதம் தமிழர்கள். பர்மாவின் வளர்ச்சிக்குத் தூணாக இருந்த இந்தியர்களின், சீனர்களின் வெளியேற்றம் அங்கே பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை உண்டாக்கியது. ‘வெளிநாட்டிலிருந்து ஒருவர் பர்மாவுக்குள் வந்தால் 24 மணி நேரத்துக்கு மட்டுமே விசா செல்லுபடியாகும்’ என்ற விதியும் அமலுக்கு வந்தது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 19 - ஒன்பதில் சனி!

1962 ஜூலையில் நடந்த ரங்கூன் பல்கலைக்கழக மாணவர் எழுச்சியில் மூடப்பட்ட கல்விக்கூடங்கள், 1964 செப்டம்பரில்தான் மீண்டும் திறக்கப்பட்டன. பல்வேறு மாணவர்களின் கல்வி பாழ். ஒருபுறம் ‘பர்மாவைப் படிப்பறிவற்றவர்கள் இல்லாத தேசமாக்குவேன்’ என்று சூளுரைத்த நீ வின், புதிய கல்விச் சட்டத்தைக் கொண்டு வந்தார். ஆங்கிலவழிக் கல்வியைத் தடைசெய்தார். கல்வி முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால், பர்மாவின் கல்வித்தரம் தாழ்ந்துபோனது. ஆம், மாணவர்களின் கல்வியோடு ஆட்சியாளர்கள் விளையாடுவது என்றென்றும் தொடரத்தான் செய்கிறது.

முப்போகம் விளைவித்த பர்மிய விவசாயிகள், நிலங்களை அரசிடம் பறிகொடுத்துவிட்டு, பட்டினிச்சாவுக்கு ஆளாயினர். கடத்தல் ஏகபோகமாக நடந்தது. கள்ளச்சந்தைகள் பெருகின. ராணுவ அதிகாரிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுசெல்லப்பட்ட துறைகளில், நிறுவனங்களில் ஏகப்பட்ட முறைகேடுகள். 1967-ல் கட்டுப்படுத்த இயலாத பணவீக்கம், அரிசி விலையில் அமோக உயர்வு, பிற அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடு போன்றவற்றால் ‘மக்கள் புரட்சி’ எதுவும் ஏற்பட்டு விடுமோ என்று யோசித்தார் நீ வின். மக்களின் கவனத்தைத் திசை திருப்புதல்தானே எவர்கிரீன் உத்தி. அந்தச் சமயத்தில் பர்மிய சீனர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. சீனர்களின் கடைகளும் வீடுகளும் சூறையாடப்பட்டன. பர்மியர்கள் தம் முதுகில் கத்தி செருகப்பட்டதை மறந்து, சீனர்கள் சிந்தும் ரத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

1974-ல் நீ வின் Union Revolutionary Council-ஐக் கலைத்தார். இனி, அது Socialist Republic of the Union of Burma என்று அறிவித்தார். பிரதமர் பதவியிலிருந்து விலகிய நீ வின், தேசத்தின் அதிபர் ஆனார். பின் 1981-ல், அதிபர் பதவியிலிருந்தும் விலகினார். Burma Socialist Programme Party-ன் சேர்மனாக மட்டும் நீடித்தார். அதிபராக, பிரதமராக வேறு நபர்கள் ‘ஆட்டுக்குத் தாடி’ போல அநாவசியமாக ஒட்டிக் கொண்டிருந்தனர். அல்டிமேட் அதிகாரம் நீ வின் வசமே.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 19 - ஒன்பதில் சனி!

ஊ தாண்ட். இவர், ஒரு பர்மியர்; ரங்கூன் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்; ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக 1961-71 காலத்தில் பணியாற்றியவர். இவர், 1974, நவம்பர் 25-ல் இறந்துபோனார். நியூயார்க்கிலிருந்து ரங்கூனுக்குக் கொண்டுவரப்பட்ட அவரது உடலை, தக்க மரியாதையுடன் வாங்க அரசு சார்பில் யாரும் வரவில்லை. காரணம், ஊ தாண்ட் முன்னாள் பிரதமர் யூ நூவின் உற்ற தோழர். ஆகவே, ‘தாண்டுக்கு அரசு மரியாதை அடக்கமெல்லாம் கிடையாது’ என்று அறிவித்தார் நீ வின். தாண்டின் உடல் ஓரிடத்தில் சில மணி நேரம் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் திரண்டு வந்து உடலைக் கைப்பற்றினர். ராணுவத்தால் தகர்க்கப்பட்ட ரங்கூன் பல்கலைக்கழக மாணவர் சங்கக் கட்டடம் இருந்த இடத்தில், தாண்டின் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்தனர். நீ வினுக்கு எதிரான கோஷங்கள் காற்றைக் கிழித்தன.

மாபெரும் அவமானம். நீ வின் கொதித்தார். புதைக்கப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்டும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டிருந்தபோது, அங்கே ராணுவம் புகுந்தது. தோட்டாக்கள் வெடித்தன. உயிர்கள் துடித்தன. மீண்டும் தாண்டின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு இன்னோர் இடத்தில் புதைக்கப்பட்டது. இந்நிகழ்வு மாபெரும் மக்கள் கிளர்ச்சியைத் தூண்டியது. வீதிகளில் இறங்கிய மக்கள், பொதுச் சொத்துகளைச் சூறையாட ஆரம்பித்தனர். எமர்ஜென்ஸி பிறப்பிக்கப்பட்டது. ராணுவ பீரங்கிகள் முழங்கின. சாலைகளில் உயிரற்ற உடல்கள் சிதறிக் கிடந்தன.

‘நீ வினின் அதிகாரமும் இப்படி ஒருநாள் உயிரற்று வீழாதா’ என்று ஒவ்வொரு பர்மியனும் ஏங்கிக் கொண்டிருந்தான். நீ வினோ தன் வருங்காலம் வளமாக இருக்க, ஜோதிடர்களிடம் ஆரூடம் கேட்டுக் கொண்டிருந்தார். ஆட்சியாளருக்கு ஜோதிடப் பித்துப் பிடித்துவிட்டால் மக்கள் படும்பாடு நமக்குத் தெரியாதா என்ன!

‘நேரம் சரியில்லை. நீங்கள் படுகொலை செய்யப்படலாம். பரிகாரம் என்னவென்றால்...’ - ஜோதிடர்கள் சொன்னபடியே அச்சுப் பிசகாமல் செய்தார் நீ வின். ஆளுயரக் கண்ணாடி முன் நின்று தன் பிம்பத்தைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். நாய் ஒன்றைப் பிடித்து அறுத்து, அதன் ரத்தத்தைத் தன்மேல் ஊற்றிக் கொண்டார். படுகொலையை உருவகப்படுத்தும்விதமாக பன்றிகளைக் கொன்றார். ‘உங்கள் பாதையில், வளைந்த வால் கொண்ட நாய் குறுக்கே வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.’ ஜோதிடர் சொன்னார். நீ வின் செல்லும் சாலைகளிலெல்லாம் முன்பாகவே தெரு நாய்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. நாய்கள் ஜாக்கிரதை.

‘நீங்கள் பிறந்த இடத்தை வான்வழியே குதிரையில் வலம் வந்தால் சுபிட்சம்!’ ஜோதிடர் சொல்ல, ஹெலிகாப்டரில் ஏறினார் நீ வின். அதனுள் மரக்குதிரையில் அமர்ந்தபடி, தான் பிறந்த ஊரை வானில் கடிகாரத் திசையில் வலம் வந்தார். இன்னொரு முறை பேய்கள் நடமாடும் வேளையில், ராஜ உடையுடன் ரங்கூனில் ஒரு பாலத்தில் பின்பக்கமாகவே நடந்தார். ஆம், பிற்போக்குத்தனம்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 19 - ஒன்பதில் சனி!

‘இடது பக்கமிருந்து உங்களுக்கு ஆபத்து வரலாம்’ என்றார் ஜோதிடர். ‘இடது’ என்றாலே நீ வினுக்கு ஆகாதே. ‘இனி யாரும் வாகனங்களை இடதுபக்கம் ஓட்டக்கூடாது. வலதுபக்கம் மட்டுமே ஓட்ட வேண்டும்’ என்று கிறுக்குத்தனமாக உத்தரவிட்டார். திடீர் விதி மாற்றத்தால் சகலரும் தடுமாற... விபத்துகள் பெருகின. சாலைகளில் ரத்தம். நீ வினோ டால்பின்களின் ரத்தத்தில் குளித்துக்கொண்டிருந்தார். இளமையுடன் இருக்க எவன் சொன்ன அழகுக் குறிப்பென்று தெரியவில்லை. ஸாரி, டால்பின்!

‘உங்களுக்கு ராசியான எண் 9. அதன் கூட்டுத்தொகை அனைத்திலும் வரும்படி பார்த்துக்கொண்டால் 90 வயதுவரை நிச்சயம் வாழ்வீர்கள்’ என்று எண் கணித ஜோதிடர் ஒருவர் திருவாய் மலர்ந்தார். அப்போதிருந்தே 9 பைத்தியம் நீ வினுக்குப் பிடித்தது. கார் எண், கிளம்பும் நேரம், உறுப்பினர்களின் எண்ணிக்கை என எல்லாவற்றிலும் கூட்டுத்தொகை 9 இருக்கும்படி பார்த்துக்கொண்டார். அப்படிப் பார்த்துப் பார்த்துச் செய்தவருக்கு 100 மற்றும் 50 கியாட் நோட்டுகள் கண்களை உறுத்தின.

1987-ல் முன்னறிவிப்பு எதுவுமின்றி ஒரே இரவில் 100, 50 கியாட் நோட்டுகளுக்குப் பதிலாக 90 மற்றும் 45 கியாட் மதிப்புள்ள நோட்டுகள் (கூட்டுத்தொகை 9) புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டன. பொருளாதாரம் ‘கோமா’வில் விழுந்தது. தேசம் திவால். வாழ்வாதாரம் தொலைத்து மக்கள் கதறினர். போலீஸ் அராஜகம், ராணுவ வெறியாட்டம், ஊழல்கள் போன்ற அனைத்தையும் எதிர்த்து, 1988 மார்ச் முதலே மாணவர் போராட்டங்கள் வலுப்பெற்றிருந்தன. 8.8.1988 அன்று பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள், புத்த பிட்சுகள், தொழிலாளர்கள், இஸ்லாமியர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றுகூடி எழுச்சி ஊர்வலம் நடத்தினர். பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் ஆங் சான் சூ கி உணர்ச்சி பொங்க உரையாற்றினார். அன்றைய தினம் ‘8888 கிளர்ச்சி’ என வரலாற்றில் பதிவானது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 19 - ஒன்பதில் சனி!

நீ வினைக் கைது செய்வது, அதிகாரத்திலிருந்து நீக்குவது, தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவது போன்றவற்றை வலியுறுத்தி, தேசம் முழுவதும் போராட்டங்கள் வெவ்வேறு வடிவில் அடுத்தடுத்த தினங்களிலும் தொடர்ந்தன. அந்த ஆகஸ்ட் 8 முதல் 12 வரை தேசத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,000 முதல் 10,000 வரை இருக்கலாம். ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் இந்தியா, தாய்லாந்து என அயல்தேசங்களில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். நீ வினின் இறுதி வெறியாட்டம் அது.

அழுத்தம் அதிகரிக்கவே நீ வின் தனது கட்சியின் சேர்மன் பதவியிலிருந்து விலக நேரிட்டது. தனது பிரிவுபசார உரையில் சீறினார். ‘இப்படியே தொல்லைகள் தொடர்ந்தால் ராணுவம் வழக்கம்போல வானை நோக்கிச் சுட்டுக்கொண்டிருக்காது. நெஞ்சில்தான் சுடும்!’

எந்தப் பதவியில் இல்லாவிட்டாலும் நீ வினின் நிழல் அதிகாரம் அடுத்த பத்தாண்டுகளுக்குத் தொடர்ந்தது. அதன் பின் நீர்த்துப்போனது. மாபெரும் குற்றவாளியான நீ வின், அதிகாரம் போன பின்பும் எந்தத் தண்டனைக்கும் உள்ளாகாமல் சொகுசாகத்தான் வாழ்ந்தார். தன் 90-வது பிறந்தநாளில் 99 புத்த பிட்சுகளுக்கு பார்ட்டி வைத்து மகிழ்ந்தார். 2002, டிசம்பர் 5-ல் இறந்துபோனார். பர்மிய செய்தித்தாள்களில் ஓர் ஓரமாக ‘மரண அறிவிப்பு’ இடம்பெற்றிருந்தது. அரசு மரியாதை அடக்கமெல்லாம் நடக்கவில்லை. இறுதி ஊர்வலத்தில் 30 பேர் மட்டும் கலந்து கொண்டனர். 27 அல்லது 36 பேர் கலந்துகொண்டிருந்தால், நீ வினின் பிணம் புன்னகை செய்திருக்கக்கூடும்.

(வருவார்கள்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism