Published:Updated:

“உறுப்பு தானம் செய்தோம்... கடன் வாங்கித் தவிக்கிறோம்!”

“உறுப்பு தானம் செய்தோம்... கடன் வாங்கித் தவிக்கிறோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“உறுப்பு தானம் செய்தோம்... கடன் வாங்கித் தவிக்கிறோம்!”

வேதனையில் குடும்பங்கள்

“உறுப்பு தானம் செய்தோம்... கடன் வாங்கித் தவிக்கிறோம்!”

வேதனையில் குடும்பங்கள்

Published:Updated:
“உறுப்பு தானம் செய்தோம்... கடன் வாங்கித் தவிக்கிறோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“உறுப்பு தானம் செய்தோம்... கடன் வாங்கித் தவிக்கிறோம்!”

டராசனுக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால், ‘உறுப்பு தானம்’ என்ற விஷயம் மீண்டும் செய்திகளில் அடிபடுகிறது. உறுப்பு தானம் செய்பவர்கள் பற்றி, அந்த நேரத்தில் வரும் செய்திகளைத் தாண்டி, ‘அதன்பின் அந்தக் குடும்பம் என்ன ஆனது’ என்று யாரும் கவனிப்பதில்லை. அந்த அவலத்தை உணர்த்தியது ஒரு விழா.

“உறுப்பு தானம் செய்தோம்... கடன் வாங்கித் தவிக்கிறோம்!”

‘‘என் புள்ளையை இழந்து, பேரக் குழந்தைகளை வெச்சிக்கிட்டு ரொம்பக் கஷ்டப்படுறோம். அந்தக் குழந்தைங்க வாழ உதவி செய்யுங்க சாமி’’ எனச் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் காலில் விழுந்து கதறினார் ஒரு தாய். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உறுப்பு தான விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில்தான் இது நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, கலெக்டர் ராஜாமணி, எம்.பி-யான டி.ரத்தினவேல் ஆகியோர் பதறிப் போனார்கள்.

இந்த நிகழ்ச்சியில் உறுப்பு தானத்தின் பெருமைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். ‘‘ஒருவரின் உறுப்பு தானத்தால், ஒன்பது பேரைக் காப்பாற்ற முடியும். 50 பேரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’’ என அவர் பேசி முடித்ததும், திருச்சி பகுதியில் உறுப்பு தானம் செய்த 21 குடும்பத்தினரும், பெறப்பட்ட உடல் உறுப்புகளை விரைவாகவும் சிறப்பாகவும் பொருத்தி பலரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களும் கௌரவிக்கப்பட்டனர். வசந்தா என்ற பெண்மணி அந்த மேடையில்தான், அமைச்சர் விஜயபாஸ்கர் காலில் விழுந்து கதறினார். இவரின் மகன் வெங்கடேசனுடைய உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், உறுப்பு தானம் செய்த இன்னொருவரின் மகனான கோபாலகிருஷ்ணன் என்பவர், “எங்கப்பாவை இழந்துட்டு வறுமையில் வாடும் எங்களுக்கு இந்த சர்டிபிகேட் எதுக்கு சார்? எங்களைப் போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யுங்கள்” எனக் கோரிக்கை வைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“உறுப்பு தானம் செய்தோம்... கடன் வாங்கித் தவிக்கிறோம்!”

திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த சடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வசந்தாவிடம் பேசினோம். “என் மகன் வெங்கடேசன், எலெக்ட்ரீஷியன் வேலை செய்துவந்தான். அவனுக்கு ஒன்றரை வயதில் ஸ்ரீகவிதா என்ற பெண் குழந்தை இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி பைக் விபத்தில் சிக்கி, திருச்சி அரசு மருத்துவமனையில் ஜடமாகக் கிடந்தான். அவனை அப்படியே புதைத்துவிட மனமில்லை. ‘ஒருவரின் உடல் உறுப்புகளைத் தானம் செய்தால், பலருக்கு வாழ்வளிக்கலாம்’ என அரசு விளம்பரங்களில் பார்த்ததால், உறுப்பு தானம் செய்ய முடிவெடுத்தோம். தானம் செய்ததற்கு உதவி கேட்கக்கூடாதுதான். ஆனால், குடும்பத்துல சம்பாதிச்சவன் அவன் ஒருத்தன்தான். அவன் இறந்தபிறகு, மருமகளும் பேத்தியும் கஷ்டப்படுறதைப் பார்க்க சகிக்கலை. அதனாலதான் அமைச்சர் கால்ல விழுந்து உதவி கேட்டேன்” என்றார் கண்ணீரோடு.

மணப்பாறையை அடுத்த சின்னப்பாளையம் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ‘‘என் அப்பா கடந்த 2015 அக்டோபர் மாதம் ஒரு விபத்தில் சிக்கினார். திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து, நான்கு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி செலவு செய்தோம். இருந்தும் அவரைக் காப்பாற்ற முடியாத நிலை. அதனால் அவரின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கச் சம்மதித்தோம். அப்பா இறந்து பலருக்கு வாழ்வளித்துள்ளார். ஆனால், அவருக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல், ரொம்பக் கஷ்டப்படுகிறோம். உறுப்பு தானம் செய்வதை ஊக்கப்படுத்தவும், குடும்பத்தின் பெரும் நம்பிக்கையை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு ஆறுதல் தரவும் அரசு நிதியுதவி செய்யவேண்டும்” என்றார்.

“உறுப்பு தானம் செய்தோம்... கடன் வாங்கித் தவிக்கிறோம்!”

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டோம். ‘‘உறுப்பைத் தானம் செய்தவர்களின் குடும்பத்தினரைக் கௌரவப்படுத்தி வருகிறோம். இதில் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டும். உறுப்பு தானம் என்பது நன்கொடை. அதைச் செய்பவர்களுக்குப் பதிலுக்கு உதவிகள் செய்வது முரணானது. ஆனாலும் உறுப்பு தானம் வழங்கும் குடும்பங்களுக்கு அரசுப்பணி உள்ளிட்ட திட்டங்களில் முன்னுரிமை வழங்க விரைவில் முடிவெடுக்கப்படும்” என்றார்.
அரசு நல்ல முடிவு எடுக்கட்டும்!

- சி.ய.ஆனந்தகுமார், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

‘‘நான்கரை லட்ச ரூபாய் தர முடியும்!’’

றுப்பு தானம் செய்பவர்கள் குறித்து நம்மிடம் பேசிய மருத்துவர் ஒருவர், ‘‘மூளைச்சாவு அடைந்தவர்களே, உறுப்பு தானம் செய்கிறார்கள். பல லட்ச ரூபாய் செலவு செய்தும் காப்பாற்ற இயலாத நிலையில்தான், உறுப்பு தானம் செய்யும் முடிவைக் குடும்பத்தினர் எடுக்கிறார்கள். இப்படிப் பணத்தைச் செலவழித்துவிட்டு பரிதவிக்கும் குடும்பங்களுக்கு, அரசு நினைத்தால் உதவிகள் செய்யலாம். குறிப்பாக, முதல்வர் காப்பீட்டுத் திட்டம் மூலம் ஒரு குடும்பத்துக்கு நான்கரை லட்ச ரூபாய் வரை சிகிச்சை தர அரசு வழி செய்துள்ளது. உறுப்பு தானம் செய்யும் குடும்பங்களுக்கு இந்தத் தொகையை அரசு நினைத்தால், இன்ஷுரன்ஸ் தொகை போல வழங்க முடியும். முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு சிறு திருத்தம் செய்தால் போதும். பல குடும்பங்களுக்கு இது மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும்’’ என்றார்.