Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 20 - உயிர்களிடத்தில் அன்பு வேண்டாம்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 20 - உயிர்களிடத்தில் அன்பு வேண்டாம்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 20 - உயிர்களிடத்தில் அன்பு வேண்டாம்!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 20 - உயிர்களிடத்தில் அன்பு வேண்டாம்!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 20 - உயிர்களிடத்தில் அன்பு வேண்டாம்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 20 - உயிர்களிடத்தில் அன்பு வேண்டாம்!

ண்டன் பாண்ட் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார் அந்த இந்தியர். அவரது கண்களில் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனையகம் தென்பட்டது. உள்ளே புகுந்தார். யாரும் அவரை வரவேற்கவில்லை. காரணம், சாதாரண உடை. கறுப்புத்தோல். அதுவும் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் யாரோ ஒருவன். உதாசீனப்படுத்த வெள்ளையர்களுக்கு இந்தக் காரணங்கள் போதாதா?

அந்த மனிதர் கடையின் சிப்பந்தியிடம் காரின் விலையை விசாரிக்க, ‘இவன் எங்கே வாங்கப் போகிறான்’ என்ற தொனியில் அலட்சியமாகவே பதில் வந்தது. காரின் சிறப்பம்சங்களைப் பற்றிக் கேட்டபோது, ‘வெளியே செல்லும் வழி அந்தப் பக்கம்’ என்று வாசலைக் கைகாட்டி அவமானப்படுத்தினார் சிப்பந்தி. அந்த மனிதர் அமைதியாக வெளியேறினார். 

சிறிது நேரம் கடந்திருக்கும். அந்த விற்பனையகத்துக்கு ஹோட்டல் ஒன்றிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘எங்கள் மகாராஜா, ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க அங்கே வருகிறார்’ என்று தகவல் சொன்னார்கள். விற்பனையகம் பரபரப்பானது. பளபளக்கும் ராஜ உடை. மினுமினுக்கும் ஆடம்பர நகைகள். விற்பனையகத்துக்குள் கம்பீரமாக நுழைந்தார் அந்த மகாராஜா. பிரத்யேகமாக சிவப்புக் கம்பளம் விரித்திருந்தார்கள். கடையின் சிப்பந்திகள் ஓடிச்சென்று வரவேற்றார்கள். அப்போதுதான் தெரிந்தது, முதலில் வந்தவரும் இவர்தான் என்று. இந்தியாவின் ராஜஸ்தானைச் சேர்ந்த, அல்வார் சமஸ்தானத்தின் மகாராஜா. ஹிஸ் ஹைனெஸ் ராஜ் ராஜேஸ்வர் பரத் தர்மா பிரபாகர் மகாராஜா ஸ்ரீசவாய் சர் ஜெய் சிங்ஜி வீரேந்திர சிரோன்மணி தேவ் பகதூர். சுருக்கமாக ஜெய் சிங்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 20 - உயிர்களிடத்தில் அன்பு வேண்டாம்!

முன்பு உதாசீனப்படுத்திய சிப்பந்தி, இப்போது குரல் நடுங்க மன்னிப்புக் கேட்டார். அதைக் கண்டுகொள்ளாத மகாராஜா ஜெய் சிங், ‘‘ஷோரூமில் எத்தனை கார்கள் இருக்கின்றன?’’ என்றார். ‘‘ஆறு’’ என்றார்கள். அத்தனையும் சேர்த்து எவ்வளவு என்று கேட்டு, அதை இந்தியாவுக்கு அனுப்பும் செலவுக்கும் சேர்த்துப் பணம் கொடுத்துவிட்டு வெளியேறினார்.

அன்றைக்கு உலகின் நம்பர் ஒன் கார், ரோல்ஸ் ராய்ஸ். ஒரு மகாராஜா ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருப்பது ஆகப்பெரிய கௌரவம். செல்வத்தில் கொழித்த சில மகாராஜாக்கள், தங்கள் விருப்பப்படி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஏழெட்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுடன் வலம் வந்து பவுசு காட்டினர். அல்வார் சமஸ்தானத்தை ஆறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் வந்தடைந்தன. ஜெய் சிங் அதில் ஒன்றைக்கூட உபயோகிக்கவில்லை. கட்டளையிட்டார்.

‘கார்களின் டயர்களுக்கருகில் துடைப்பங்களைக் கட்டுங்கள். இந்தக் கார்கள் அனைத்தையுமே அல்வார் நகரத்தில் குப்பை அள்ளும் பணிக்காகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.’

அப்படியே செய்தார்கள். இந்தச் செய்தி பரவ, ரோல்ஸ் ராய்ஸின் புகழ் நாறியது. அதன் பெயரைக் கேட்டாலே, ‘எது... அந்தக் குப்பை அள்ளும் வண்டியா’ என்று உலகம் சிரித்தது. விற்பனையும் பெருமளவு குறைந்துபோக, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தினர் பதறி, மகாராஜா ஜெய் சிங்குக்கு மன்னிப்பு தந்தி அனுப்பினர். தங்கள் கார்களைக் குப்பை அள்ளப் பயன்படுத்த வேண்டாமெனக் கெஞ்சினர். கர்வத்துடன் அவர்களை மன்னித்தார் ஜெய் சிங். ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் குப்பை அள்ளும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டன.

‘வெள்ளைக்காரன் கண்ணுலயே விரல விட்டு ஆட்டுறாரே. ஜெய் சிங் செம கெத்து!’ என்று யாரும் இதற்காக அவரைக் கொண்டாடவில்லை. காரணம், அவரது டிசைன் அப்படி. அவரது செயல்பாடுகளால் மக்களும் மற்றவர்களும் அடைந்த துன்பங்களின் பட்டியல் மிக நீளமானது.

கி.பி. 1882-ல் பிறந்தவர் ஜெய் சிங். இவருக்கு 10 வயது இருக்கும்போது, தந்தை மங்கல் சிங் அளவுக்கு மீறிய குடியால் இறந்துபோனார். ஜெய் சிங் மேஜராகும்வரை, பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதி ஒருவர் நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டார். மேஜரான பிறகும் ஜெய் சிங், சமஸ்தானத்தின் வளர்ச்சி, பொருளாதாரம், மக்களின் வறுமை குறித்தெல்லாம் கொஞ்சமும் சிந்திக்கவில்லை. ‘அதெல்லாம்கூட ஒரு மகாராஜாவின் கடமைதான்’ என்று அவருக்கு வாழ்நாள் முழுக்கத் தோன்றவே இல்லை. ‘மக்களும் இன்ன பிற பணியாளர்களும் தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகப் பிறந்த, எந்தவித உரிமைகளுமற்ற அடிமைகள்’ என்றுதான் மனதார நினைத்தார். மத்திய அரசுக்கு ஜிங் ஜக் அடித்தால் மாநிலத்தில் பிரச்னையின்றி ஆள முடியும் என்பதுபோல, பிரிட்டிஷ் அரசுக்கு ஆகச்சிறந்த விசுவாசியாக இருந்து தன் பதவி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

அல்வார் மக்கள், ‘பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் கிடைக்குமா’ என்று நினைக்காமல், ‘எப்போது இந்த அரக்கனிடமிருந்து விடுதலை கிடைக்கும்’ என்றே ஏங்கினர். மிருகங்களும் ஏங்கின. ஏன், அஃறிணைப் பொருள்கள்கூட ஏங்கியிருக்கக்கூடும்.

வாரம் ஒருமுறையாவது ஜெய் சிங், குதிரையேறி போலோ விளையாடுவார். மகாராஜா கோல்கள் அடிப்பதற்கேற்ப சக ஆட்டக்காரர்கள் விலகி விளையாட வேண்டுமென்பது எழுதப்படாத விதி. அதெல்லாம் மனிதர்களுக்குப் புரியும். குதிரைகளுக்குப் புரியுமா? அன்றைக்கு ஜெய் சிங், தனது வழக்கமான குதிரையில் ஏறி, போலோ மட்டையைச் சுழற்றினார். குதிரைக்கு மனசோ, வயிறோ, நேரமோ சரியில்லைபோல. மன்னர்பிரானுக்கு ஒத்துழைக்கவில்லை. கோபத்துடன் குதிரையிலிருந்து குதித்த ஜெய் சிங், போலோ மட்டையால் அதைப் பொளந்து கட்டினார். கதறிக் கனைத்து, தடுமாறி ஓடியது குதிரை. மட்டையை ஆத்திரத்துடன் வீசியெறிந்துவிட்டு மைதானத்தை விட்டுக் கிளம்பினார்.

அந்தக் குதிரை அதிர்ஷ்டசாலிதான். ஏனென்றால், அதற்கு முன்பு ஒரு குதிரை சண்டித்தனம் செய்தபோது, ஜெய் சிங் அதன் மீது பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்த சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது. ஆம், ‘சக உயிர்களிடத்தில் அன்பு வேண்டாம்’ என்பதே அவரின் தீவிரக் கொள்கை.

இன்னும் சில கொள்கைகளும் உண்டு. ‘தீண்டாமை ஒரு புண்ணியச்செயல்’ என்பது அதில் முக்கியமானது. ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ஜெய் சிங், தன்னை ராமபிரானின் அவதாரமாக அறிவித்துக்கொண்டார். ‘என்னைத் தவிர மற்ற எல்லோருமே இழிபிறவிகளே. என்னைத் தொடும் அருகதைகூட மற்றவர்களுக்குக் கிடையாது’ என்று கடுமை காட்டினார். எதையாவது தொட்டு / யாராவது தொட்டு தன் புனிதத்துக்குத் தீட்டு நேர்ந்தால், உடனே கங்கை நீரில் தலை முழுகுவார். இதற்காகவே அரண்மனையில் எப்போதும் கங்கை நீர் இருக்கும். சில நேரங்களில் அரண்மனை மொத்தத்தையுமே கங்கை நீரால் குளிப்பாட்டச் சொல்லி புனிதத்தை ரீ-இன்ஸ்டால் செய்வார்.

அடுத்த அலர்ஜி விஷயம், தோல் பொருள்கள். குதிரையின் மீதேறிப் போவார். ஒட்டகத்திலும் ஒய்யாரமாகப் போவார். ஆனால், செத்த விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட பொருள்களென்றால் சுத்தமாக ஆகாது. அரண்மனையிலோ, அவர் புழங்கும் மற்ற இடங்களிலோ தோல் பொருள்களே இருக்கக்கூடாது. தப்பித்தவறி யாராவது ஒரு பணியாளர் அவர்முன் அதைக் கொண்டு வந்துவிட்டால்? வேறென்ன, பணியாளரின் தோல் உரிந்துவிடும். தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார்களில்கூட தோலாலான இருக்கைகளையெல்லாம் அகற்றி, வேறுமாதிரி மாற்றச்சொல்லியிருந்தார். அது குப்பை அள்ளுவதற்குத்தான் என்றாலும்கூட. 

ஒரு மகாராஜா என்றால் நான்கு இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அங்கெல்லாம் தோல் பொருள்கள் இருக்கும்; அல்லது புனிதம் கெட்டுப்போக சகல வாய்ப்புகளும் இருக்கும். அப்போதெல்லாம் என்ன செய்தார் ஜெய் சிங்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 20 - உயிர்களிடத்தில் அன்பு வேண்டாம்!

ஒருமுறை பாலன்பூர் சமஸ்தானத்துக்குச் சென்றபோது, அங்கே அவரிடம் ஆசையாக வந்த நான்கு வயது இளவரசனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டார். அப்போதுதான் இளவரசன் தோல் ஷூ அணிந்திருப்பதைக் கண்டு, கடுப்பாகி, அவனை அப்படியே தரையில் தூக்கிப் போட்டுவிட்டு எழுந்து சென்றார். இன்னொரு முறை பரத்பூர் மகாராஜாவின் படைகள், ஜெய் சிங்குக்கு அணிவகுப்பு மரியாதை செய்தபோது, அவர்கள் தோல் ஷூக்களும், தோல் மேலாடையும் அணிந்திருக்கிறார்கள் என்று அதைப் புறக்கணித்து நகர்ந்தார். இதனால் மற்ற மகாராஜாக்களும் ஜெய் சிங்கை வெறுப்புடனேயே நோக்கினர். மகாராஜாக்களுக்கிடையேயான சந்திப்புகளில், ஜெய் சிங்கின் கூத்துகளைப் பற்றி கடுகடுத்துக் கொள்வதும், ஜோக் அடித்து மகிழ்வதும் வாடிக்கையாக இருந்தது.

1931-ல், லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் ஐந்தாம் ஜார்ஜும் குயின் மேரியும் கொடுத்த விருந்துக்கும் ஜெய் சிங்குக்கு அழைப்பு வந்தது. வேறு வழியில்லை. புனிதம், தீட்டு பார்க்காமல் போய்த்தான் ஆகவேண்டும். இருந்தாலும் ஜெய் சிங் ஒரு விஷயத்துக்காக அதிகம் யோசித்தார். விருந்தில் கிங்கும் குயினும் வந்த விருந்தினர்களுக்கெல்லாம் மரியாதை நிமித்தமாகக் கைகொடுப்பார்கள். ச்சீ... அவர்கள் என் கையைத் தொட்டுக் குலுக்கினால் என் புனிதத்தன்மை என்னாவது? ஜெய் சிங், பக்கிங்ஹாம் அரண்மனைத் தலைமை அதிகாரிக்கு மமதையுடன் கடிதம் ஒன்றை எழுதினார். ‘என்னால் கைகுலுக்க முடியாது. குலுக்கித்தான் ஆக வேண்டுமென்றால் கையுறை அணிந்துகொள்வேன்.’

அதிகாரியும் கொதிநிலை குறையாமல் பதில் அனுப்பினார். ‘கையுறைக்கெல்லாம் அனுமதி கிடையாது. அது கிங், குயினுக்கு அவமரியாதை. மீறினால் உமது ஃப்யூஸ் பிடுங்கப்படும்’ என்று. கிங், குயினிடம் கையுறை இன்றி கைகுலுக்குவதை மற்ற மகாராஜாக்கள் பார்த்துவிட்டால், இவரது புனிதத்தன்மை புஸ் ஆகிவிட்டதென புளகாங்கிதம் அடைவார்களே? இதுதான் ஜெய் சிங்கின் மாபெரும் கவலையாக இருந்தது.

லண்டனுக்குச் சென்று சேர்ந்தார். என்னென்னமோ யோசித்துப் பார்த்துவிட்டு மாலை வேளையில் ஒரு நவநாகரிக தையல் கடையை நோக்கி ஓடினார். பிரச்னையைச் சொன்னார். தீர்வும் கிடைத்தது. கையுறை என்றே தெரியாத, வண்ணமற்ற, மிக மெலிதான கையுறை ஒன்றை வாங்கினார். இன்னொன்று தடித்த கையுறை. அதை அணிந்துவிட்டு பட்டனை அழுத்தினால் கையுறை, தானாகவே உள்நோக்கிச் சுருண்டு கொள்ளும் வசதியிருந்தது. மெல்லிய கையுறையை உள்ளுக்குள்ளும், அதன்மேல் அதிநவீன கையுறையையும் அணிந்துகொண்டு விருந்தில் பங்கேற்றார்.

மற்றவர்களுடன் கையுறையோடு கைகுலுக்கிக் கொண்டார். கிங், குயின் தன் அருகில் வரும்போது பட்டனை அழுத்த, தடித்த கையுறை நொடிப்பொழுதில் சுருண்டு கொண்டது. புனிதத்தன்மை கெடாமல், ரகசிய மெல்லிய கையுறையுடன் அவர்களோடு கைகுலுக்கிவிட்டு மீண்டும் பட்டனை அழுத்தினார். கையுறை தோன்றியது. யாரும் உன்னிப்பாகக் கவனிக்கவில்லை. ‘எப்படி இவர் மட்டும் உறையோடு கைகுலுக்கினார்?’ என்று குழம்பிப் போனார்கள். பெரும் பாவச்செயலிலிருந்து தப்பிய குதூகலப் புன்னகையை ஜெய் சிங்கின் உதடுகள் சூடிக் கொண்டன.

லண்டனில் தம் புனிதத்தைத் தக்கவைத்துக் கொண்ட ஜெய் சிங்குக்கு அடுத்த சோதனை சிம்லாவிலிருந்து வந்தது.

(ஜெய் சிங் வருவார்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism