Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

Published:Updated:
##~##
ரகசியம்

கைபேசி வாங்கிய புதிதில்
அம்மாவென்று பெயரிட்டு
அம்மாவின் எண்ணையும்
அப்பாவென்று பெயரிட்டு
அப்பாவின் எண்ணையும்
சேமித்துவைத்தேன்
நாளடைவில்
அம்மாவின் எண்ணை அழைத்தால்
அப்பாவும்
அப்பாவின் எண்ணை அழைத்தால்
அம்மாவும் பேசினார்கள்
காதலித்து மணமுடித்தவர்களை
எப்படியெல்லாம் காதலித்தீர்கள் எனக்
கேட்கும்போதெல்லாம்
வெட்கப்பட்டவர்களின் ரகசியத்தை
அழகாக அம்பலமாக்கியது
கைபேசி!

- ராகவ்

வரி விலக்கு

ஜப்பானியப் படம் ஒன்றிலிருந்து
கதையைச் சுட்டோம்
அமெரிக்காவில் இருந்து அனிமேஷனுக்கு
ஆள் கூட்டி வந்தோம்
நடனமாட மும்பை அழகிகளை
இறக்குமதி செய்தோம்
பாடுவதற்கு பாலிவுட் பாடகர்களைப்
பயன்படுத்த முடிவு செய்தோம்
தெலுங்கு பேசும் ஹீரோவையும்
மலையாள வாசம் வீசும் ஹீரோயினையும்
இடம் பெறச் செய்தோம்.
அதிக ஆங்கில வரிகளைச் சேர்க்குமாறு
ரைட்டரிடம் கேட்டுக்கொண்டோம்
கடைசியில்...
படத்துக்குத் தமிழில் பெயர்வைத்து
வரி விலக்கும் பெற்றுக்கொண்டோம்!

- தி.உதயகுமார்

காமக் கடுங் கானல்

மெல்லிய குறுந்தகடில் இருந்து
வெளி வந்து புரிந்த
தூரதேசத்து
ஆண்கள், பெண்களின்
நீண்ட கலவிகளில்
கலந்திருந்தேன்
கௌரவ விருந்தினராக.

இரு வெள்ளைப் பெண்களும்
ஒரு கறுப்பு இளைஞனும்
உச்சத்தை நெருங்கிய கணத்தில்
சட்டென மறைந்தனர்
மின்சார வெட்டில்.

காற்றில் கரைந்திருந்த
கலவிகளின் ஒலிகளுடனும்
கனவுகளில் மிதந்த
கலவிகளின் நினைவுகளுடனும்
நிகழ்ந்து முடிகிறது
தவறவிட்டுவிட்ட
ஒரு தனிமையின் உச்சம்!

- கோநா

அன்புமயமாதல்...

குழந்தையுடன்
கோயிலுக்குச் சென்றேன்

பூக்காரப் பெண்
கூடுதல் ரோஜா கொடுத்தாள்

பிள்ளையாரை வணங்கிய பெரியவர்
பிள்ளையின் கன்னம் கிள்ளிப்போனார்

கற்பூர ஆரத்தி ஒற்றி
குங்குமம் இட்டுவிட்டார் குருக்கள்

பிறிதொருவர் பிரசாதம் அளித்து
புன்னகைத்தார்

அவ்வேளையில்
அம்மனின் மார்பிலும் சுரந்திருக்கலாம்
பிள்ளைக்கான பால்!

- ஆர்.எஸ்.பாலமுருகன்

சொல்வனம்

தேவதைகளின் காலம்

பூங்கொத்துக்குள்
தனிப்பூவைத் தேடுவது போலிருக்கிறது
நர்சரி பள்ளி ஆண்டு விழாவில்
என் மகளைக் கண்டுகொள்வதென்பது.

வெல்கம் டான்ஸ் ஆடியதில்
'L’ பையன் வர மறுத்ததால்
'WE COME’ என்றானது
அதையும் அழகாகச் சமாளித்தாள்
தொகுத்து வழங்கிய ஆசிரியை.

பாரதி வேஷம் அணிந்த சிறுவனுக்கு
மீசையைச் சரியாக வரையாமல்
பூனைக் குட்டி மாதிரி தெரிந்தான்.

அதியமான் கொடுத்த நெல்லிக் கனியை
ஒளவை அங்கேயே தின்று முடித்தாள்.

காந்தியடிகள்
நாலு வயதிலேயே தள்ளாடி நடந்தார்.

பரிசுகள் கொடுத்து வேஷம் கலைத்து
எல்லாம் முடிய
பன்னிரண்டு மணியாகிவிட்டது.
குழந்தைகள் சோர்வுற்று இருந்தார்கள்
சிலர் தூங்கிப்போய்விட்டார்கள்
சிலர் பசிக்குது என்றார்கள்.

நன்றியுரை நல்கிய தலைமையாசிரியை
ஆண்டு விழாவையட்டி
அடுத்த நாள் விடுமுறை என்று
சிரித்தவாறே அறிவித்தார்
அவ்வளவுதான்
தூக்கம் தொலைந்துபோய்
பசி மறந்துபோய்
மீண்டும் அங்கே தொடங்கிவிட்டிருந்தது
தேவதைகளின் காலம்!

- ப.இராமச்சந்திரன்

சொல்வனம்