Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 21 - சிறுவர்கள் ஜாக்கிரதை!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 21 - சிறுவர்கள் ஜாக்கிரதை!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 21 - சிறுவர்கள் ஜாக்கிரதை!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 21 - சிறுவர்கள் ஜாக்கிரதை!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 21 - சிறுவர்கள் ஜாக்கிரதை!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 21 - சிறுவர்கள் ஜாக்கிரதை!
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 21 - சிறுவர்கள் ஜாக்கிரதை!

கோடைக்காலத்தில் சூடு தாங்காமல், இந்தியாவின் மலைவாசஸ்தலங்களைத் தேடி ஓட ஆரம்பித்தனர் பிரிட்டிஷார். அப்படித்தான் இந்தியாவெங்கும் மலைவாசஸ்தலங்களில் நகரங்கள் உருவாகின. சிம்லா, காலனியாதிக்க இந்தியாவின் கோடைக்காலத் தலைநகரமாகத் திகழ்ந்தது. நீதி, நிர்வாகம் எல்லாம் அங்கிருந்துதான். விளையாட்டு, விருந்து, கேளிக்கை என்று கோடைகளில் வெள்ளைக்காரர்களாலும், ராஜ குடும்பங்களாலும் சிம்லா நிறைந்துகிடந்தது.

வெலிங்டன், 1931-36 காலத்தில் இந்தியாவின் வைசிராயாகப் பணியாற்றியவர். அவர் ஒரு கோடையில், அல்வார் மகாராஜா ஜெய் சிங்கை சிம்லாவுக்குக் கூப்பிட்டார்.

புனிதப்பித்தரான ஜெய் சிங்குக்கு வெளியில் செல்வதென்றாலே ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் உண்டே. அவருடைய செயலாளர், வைசிராயின் செயலாளருக்குப் புனிதக் கடிதம் ஒன்றைத் தீட்டினார். ‘எங்கள் மேதகு மகாராஜா ஆசார சீலர் என்பதால், அவருக்குத் தோல் பொருள்களோ, நாய் போன்ற செல்லப்பிராணிகளோ ஆகவே ஆகாது. அவை அவரது மதக்கொள்கையைப் பாதிக்கும் விஷயங்கள். எனவே, இவை எவையும் இல்லாதபடிக்கு மாளிகையில் வசதிகளைச் செய்துகொடுத்தால், மகாராஜா வந்துபோக வசதியாக இருக்கும்.’

சுர்ர்ர்ரெனக் கோபமேற்றும் கடிதமென்றாலும் வெலிங்டன், ‘அப்படியே செய்து தொலையுங்கள்’ என்றார். ஜெய் சிங், சிம்லாவுக்குக் குஷியாகக் கிளம்பினார். அவர் கேட்ட வசதிகளுடன் அறை அமைந்திருந்தது. வைசிராயுடன் அரசுரீதியான சந்திப்பு முடிந்தது. இரவில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வைசிராயின் மனைவி லேடி வெலிங்டனுக்கு நகைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அடுத்தவர் நகைகளை உரிமையுடன் கொள்ளையடிக்கவும் பிரியம். பரோடா அரண்மனைக்கு ஒருமுறை அவள் சென்றபோது, நகைகளை மண்ணில் புதைத்துவைத்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படித்தான் அன்றைய விருந்தில் ஜெய் சிங்கின் வைர மோதிரத்தை உரிமையுடன் வாங்கி அணிந்து பார்த்தாள். அவரும் மரியாதைக்குக் கொடுத்துவிட்டு, மறக்காமல் திருப்பிக் கேட்டு வாங்கி, ஒரு குவளை நீரில் கழுவித் துடைத்து, புனிதத்தை மீட்டு, தன் கையுறைமீது அணிந்து கொண்டார். அசிங்கப்பட்டாள் லேடி வெலிங்டன்.

பிறகு, உணவு மேஜைக்கடியில் யாரோ தனது காலை பிராண்டுவதுபோல உணர்ந்த ஜெய் சிங், குனிந்து பார்த்தார். பெர்கிங்கீஸ் வகை புஸுபுஸு நாய். லேடி வெலிங்டனின் டார்லிங் அது. ஜெய் சிங் அருவருப்புடன் பதறி எழுந்தார். முகத்தில் கடுகடுப்பின் தாண்டவம். விறுவிறுவெனக் கிளம்பி, அறைக்கு வந்து, அனைத்தையும் அவிழ்த்துப் போட்டுத் தலைமுழுகினார். புதிய உடைகளுடன் மீண்டும் விருந்து மேஜைக்குச் சென்று உணவைத் தொடர்ந்தார். சபை நாகரிகம் கருதி ஒரு ‘எக்ஸ்க்யூஸ் மீ’ கூட உதிர்க்கவில்லை. லேடி ஆவேசப் பார்வையை வீச, வெலிங்டன் எதையும் கண்டுகொள்ளவில்லை. ‘இந்த ஆள் தனிப்பட்ட முறையில் எப்படி இருந்தால் என்ன? பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமான அடிமையாக இருக்கிறார் அல்லவா? அது போதும்.’

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 21 - சிறுவர்கள் ஜாக்கிரதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதற்கு முன்னுதாரணங்களும் இருந்தன. பிரிட்டிஷ் இளவரசர் ஆர்தர் ஒருமுறை அல்வாருக்குச் சுற்றுப்பயணம் வந்தார். இளவரசர், வனப்பகுதியில் தங்கி புலி வேட்டையாட, ‘சரிஷ்கா’ என்ற பிரமாண்ட வேட்டை அரண்மனை ஒன்றையே கட்டிக் கொடுத்தார் ஜெய் சிங். லட்சக்கணக்கில் செலவு. உபயம், மக்கள் வரிப்பணம். சில வருடங்கள் கழித்து அல்வார் நகர அரண்மனையிலிருந்து, வேட்டை அரண்மனைக்கும், மகாராஜா சென்று வரும் வேறு சில மாளிகைகளுக்கும் இடையே உயர்தரச் சாலைகள் போடப்பட்டன. அதுவரை அல்வாரில் சாலையே கிடையாது என்பதால் மக்கள் சந்தோஷப்பட, ‘இது மகாராஜாவுக்கான சாலை மட்டுமே. மக்கள் உபயோகிக்கக் கூடாது. மீறினால் தண்டனைக்குள்ளாவர்’ என்று கட்டளையிட்டுக் கதிகலங்கவைத்தார் ஜெய் சிங்.

அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகள் இரண்டு. ஒன்று, புலி வேட்டை. விதவைகள், ஆதரவற்றோர் அல்லது சிறுவர்கள் காட்டில் இரையாகக் கட்டப்பட்டிருப்பர். புலி அவர்களை வேட்டையாடும்போது, மறைந்திருந்து ஜெய் சிங் புலியை வேட்டையாடுவார். இரண்டாவது பொழுதுபோக்கு, மாட்டு வண்டியின் பின்னால் சிறுவர்களைக் கயிற்றால் கட்டி, கரடுமுரடான நிலத்தில் இழுத்துச்செல்வார். சிறுவர்கள் வதைபட்டுச் சாவதை அமர்ந்து ரசித்துக்கொண்டிருப்பார்.

அன்றைக்கு அல்வார் சிறுவர்கள் பீதியுடன்தான் வாழ்ந்துகொண்டிருந்தனர். அதில் சில சிறுவர்களுக்கு அரண்மனை வாழ்க்கை வாய்த்தது. அது வேறு மாதிரி வாழ்க்கை. பத்து முதல் இருபது வயது வரையுள்ள சிறுவர்களும் இளைஞர்களும் வானவில் நிறத்தில் பட்டாடை அணிந்து ஜெய் சிங்கைச் சுற்றிச் சுற்றி வலம் வந்தனர். ‘இவர்கள் எல்லாம் அல்வார் படை வீரர்களே’ என்றார் ஜெய் சிங். ஆனால், அரசல்புரசலாகச் சில செய்திகள் உண்டு.

அதென்னவோ ஜெய் சிங்குக்கு இயல்பிலேயே பெண்கள் மீது ஈர்ப்பில்லை. பெயருக்காக நான்கு பேரைத் திருமணம் கொண்டாலும், வாரிசெனப் பிறந்தது ஒரே ஒரு மகள் மட்டுமே. கௌரவத்துக்காக பல பெண்கள் கொண்ட அந்தப்புரத்தையும் போஷாக்குடன் பராமரித்து வந்தார். அவர்களுக்கு வீணாக எதற்கு ரொட்டியும் தாலும் போட வேண்டுமென்று யோசித்தபோது, ‘பலான’ திட்டமொன்றைச் செயல்படுத்தினார். அரண்மனை விருந்துகளில் அந்தப்புர அழகிகளும் கலந்துகொள்வார்கள். மந்திரிகளும் உயரதிகாரிகளும் விருப்பத்துக்குரிய பெண்களுடன் அன்றிரவு காதல் வளர்க்கலாம். பதிலுக்கு அவர்களும் தங்கள் குடும்பப் பெண்களை விருந்துக்கு அழைத்து வரவேண்டும். வேறெதற்கு? ஜோதியில் கலக்கத்தான். ஓரிரு முறை சாக்குப்போக்குச் சொல்லி சமாளிக்கலாம். ராஜ கட்டளையென்பதால் எல்லா நேரமும் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது. தப்பிக்க நினைத்தால் விளைவுதான் தெரியுமே. இந்தக் களியாட்ட விருந்துகளில் மகாராணிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் என்பது கூடுதல் தகவல். ‘யாருக்கும் ஒழுக்கம் கிடையாது. எவனும் எவனைப் பற்றியும் கேவலமாகப் பேசக்கூடாது’ என்பதே இதிலுள்ள ராஜதந்திரம். ஆனாலும், இதிலெல்லாம் கலந்துகொள்ளாமல் ஓரமாக, சுத்தபத்தமாக உட்கார்ந்துகொண்டார் ஜெய் சிங்.

ஒருமுறை ஜெய் சிங்கின் மகாராணி ஒருத்தியின் சகோதரர், குடிபோதையில் ஒரு கோரிக்கை வைத்தார். ‘‘இருப்பதிலேயே அழகி ஒருத்தியை எனக்கு ஏற்பாடு பண்ணுங்க மாமா.’’ கோபச் சூறாவளி மகாராஜாவுக்குள் மையம் கொண்டது. அடுத்த நாளே ஜெய் சிங், ‘‘நீ கேட்டது தயார்’’ என்று மச்சானை ஓர் இருட்டு அறைக்குள் அனுப்பினார். அங்கே ஒரு பெண் இருந்தாள். நிமிடங்கள் கரைந்தன. திடீரென்று அறைக்குள் ஒளி பாய, மச்சான் அந்தப் பெண்ணின் முகம் பார்த்து அலறினான். அவளும் அலறினாள். அவள் வேறு யாருமல்ல, மகாராணிதான். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அந்த மகாராணியும், அவளுடைய சகோதரரும் தற்கொலை செய்துகொண்டார்கள்.

குதிரையைக் கொளுத்துவது, வேட்டைக்கு மனித இரை, சிறுவர்கள்மீதான வன்முறை என்று சகிக்கவே இயலாத பல விஷயங்களை ஜெய் சிங் தொடர்ந்து அரங்கேற்றினார். அவரைப் பதவியிலிருந்து தூக்கச்சொல்லி பலமுறை பிரிட்டிஷ் அரசுக்கு பிராதுகளும் சென்றன. பிரச்னை வந்தால், பிரிட்டிஷ் இந்தியாவின் செயலாளராகப் பணியாற்றிய எட்வின் சாமுவேல் மாண்டேகுவிடம் சரணடைவார் ஜெய் சிங். இனிக்க இனிக்கப் பேசி, குளிர்வித்து, தன்மீது நடவடிக்கைகள் எதுவும் பாயாமல் பார்த்துக்கொள்வார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 21 - சிறுவர்கள் ஜாக்கிரதை!

‘இதையெல்லாம் தட்டிக்கேட்க யாராவது வர மாட்டார்களா’ என்று மக்கள் ஏங்கிக்கொண்டிருந்த நேரத்தில், அவர்கள் மத்தியிலிருந்தே ஒரு பிரிவினர் ஆவேசமாகக் களமிறங்கினர். மியோ பழங்குடியினர். அல்வார் சமஸ்தானத்தில் பெருமளவில் வாழ்ந்த இஸ்லாமியப் பிரிவினர். அசல் வீரர்கள். ஜெய் சிங்கின் அராஜகங்களுக்கு எதிராக ஆயுதங்களுடன் திரண்டார்கள் (1933). சில நூறு அல்வார் படையினருக்கும், சில ஆயிரம் மியோக்களுக்கும் இடையே நடந்த மோதலில், அல்வார் வீரர்கள் நசுக்கப்பட்டனர். சிலர் பொது இடங்களில் தூக்கிலிடப்பட்டனர். ஜெய் சிங் அலறியடித்துக்கொண்டு பிரிட்டிஷ் அரசிடம் உதவி கேட்டார். குதிரைகள், பீரங்கிகளுடன் பிரிட்டிஷ் படைப்பிரிவு வந்து சேர்வதற்குள் மியோக்கள் மாயமாக மறைந்தனர்.

ஆனால், சமஸ்தானத்தின் பரிதாப நிலையை பிரிட்டிஷார் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக அது அமைந்தது. மக்களிடம் விசாரித்தபோது, ரத்தக் கண்ணீர்வடித்தனர். அல்வாரின் நிர்வாக அவலங்கள், ஜெய் சிங்கின் சதிராட்டங்கள் குறித்த ரிப்போர்ட் டெல்லிக்குச் சென்றது. உடனடியாக அல்வார் சமஸ்தானத்தின் சீரமைப்புக்காக 3,75,000 பவுண்டு நிதி ஒதுக்கப்பட்டது. ‘அட!’ என்று ஜெய் சிங் பிளந்த வாயை மூடுவதற்குள், ‘அய்யோ!’ என்று அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தி வந்துசேர்ந்தது. ‘மகாராஜா ஜெய் சிங், அல்வாரிலிருந்து உடனே வெளியேற வேண்டும். இந்தியாவிலேயே இருக்கக்கூடாது. இரண்டு லட்சம் ரூபாய், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மகாராஜாவின் செலவுகளுக்கு அளிக்கப்படும்.’

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 21 - சிறுவர்கள் ஜாக்கிரதை!

பாரிஸ் செல்லத் தீர்மானித்து, அல்வார் நகர அரண்மனையில் கங்கை நீரில் தலைமுழுகினார் ஜெய் சிங். உடைமாற்றிக்கொண்டு வந்த அவரை, கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக உடனே வெளியேற்றினார்கள். அவருடன் 20 பணியாளர்களும், ஓர் இசைக்குழுவினரும் சென்றனர். கூடவே நானூறு பெட்டிகளும். திண்ணை காலி.

ஜெய் சிங்கின் ஆடம்பர, புனிதம்கெடா வாழ்க்கை பாரிஸிலும் தொடர்ந்தது. 1937, மே 13 அன்று மாடிப்படியில் இறங்கும்போது தவறி விழுந்தார். ஏகப்பட்ட எலும்பு முறிவுகள். மரணப் படுக்கை. வண்டியின் பின் இழுத்துச்செல்லப்பட்ட சிறுவர்களின் கதறல் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. மே 19-ம் தேதி இறந்துபோனார். அவரது பூத உடல், அல்வாருக்குக் கொண்டு வரப்பட்டது. மகாராஜாவின் உடலை உட்காரவைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று எரிப்பது அவர்கள் வழக்கம். மகாராஜா உடலை அலங்கரித்து, மறக்காமல் கையுறை மாட்டி, தங்க முலாம் பூசப்பட்ட லான்ஸெஸ்டர் காரில் கஷ்டப்பட்டு உட்காரவைத்துக் கட்டினர். முகம் பயங்கரமாக இருக்க, ஒருவர் கருப்புக் கண்ணாடியை மாட்டிவிட்டார். அது ஜெய் சிங் உயிரோடு இருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. அவருக்கென அவரே போட்ட சாலையிலேயே இறுதி ஊர்வலமும் நடந்தது.

சாவென்றால் வதந்தி உயிர்க்குமே. மக்கள் பேசிக்கொண்டார்கள். ‘‘கண்ணாடி பார்த்தியா? மகாராஜா சாகல. உயிரோடு கொண்டுபோய் எரிச்சுட்டாங்க. அதான் அந்த கெட்ட சக்தியை அழிக்க ஒரே வழி!’’

(வருவார்கள்.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism