Published:Updated:

சந்துபொந்து எங்கும் கந்துவட்டி... கல்லா கட்டும் காக்கி!

சந்துபொந்து எங்கும் கந்துவட்டி... கல்லா கட்டும் காக்கி!
பிரீமியம் ஸ்டோரி
சந்துபொந்து எங்கும் கந்துவட்டி... கல்லா கட்டும் காக்கி!

சந்துபொந்து எங்கும் கந்துவட்டி... கல்லா கட்டும் காக்கி!

சந்துபொந்து எங்கும் கந்துவட்டி... கல்லா கட்டும் காக்கி!

சந்துபொந்து எங்கும் கந்துவட்டி... கல்லா கட்டும் காக்கி!

Published:Updated:
சந்துபொந்து எங்கும் கந்துவட்டி... கல்லா கட்டும் காக்கி!
பிரீமியம் ஸ்டோரி
சந்துபொந்து எங்கும் கந்துவட்டி... கல்லா கட்டும் காக்கி!

ந்துவட்டி கொடுமைக்கு நான்கு உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்! அங்கே நான்கு டெட்பாடிகள் கிடக்க... எடப்பாடிகள் கட் அவுட்டுகளோடு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள். ‘பட்டினிக்குத் தீனி கெட்டபின்பு ஞானி’ என்பதுபோல நான்கு பேர் பலியான பின்பு, ‘கந்து வட்டிக்காரர்கள்மீது பொதுமக்கள் அளிக்கும் புகாரை ஏற்று, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என போலீஸுக்கு உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. கந்துவட்டியை ஒழிக்க தனிச் சட்டம் இருந்தும் இத்தனைக் காலமும் காவல்துறை எங்கே தூங்கிக் கொண்டிருந்தது?

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் கந்துவட்டி கொடுமைகள் வெளிச்சத்துக்குவர ஆரம்பித்திருக்கின்றன. கந்துவட்டி தடுப்புச் சட்டம் அமலில்தான் இருக்கிறதா? தமிழகத்தின் சந்துபொந்துகளிலெல்லாம் என்ன மாதிரியான கொடுமைகள் அரங்கேறுகின்றன? ஜூ.வி டீம் களத்தில் திரட்டிய தகவல்கள் இங்கே...


நெல்லை: பீடி வட்டி... பைக் வட்டி!

நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, ராக்கெட் வட்டி, பீடி வட்டி, பைக் வட்டி என 20-க்கும் அதிகமான வகைகளில் நெல்லை மாவட்டத்தில் வட்டித் தொழில் நடக்கிறது. இசக்கிமுத்து குடும்பம் பலியானதைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் இதுவரை 246 கந்துவட்டி வழக்குகள் பதிவானதை வைத்தே திருநெல்வேலி மாவட்டத்தின் தலையெழுத்தைத் தெரிந்துகொள்ளலாம். சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுடலையாண்டி,  கோமதிசங்கர் என்பவரிடம் 2,000 ஆயிரம் ரூபாய் வார வட்டிக்குக் கடன் வாங்கியிருக்கிறார். மூன்று மாதத் தொகை நிலுவையாகிவிட அவரைக் கட்டிவைத்து அடித்ததில், குடல் பாதிக்கப்பட்டதால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் 23 நாள்கள் அனுமதிக்கப்பட்டு இரண்டு அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. இதுபற்றி புகார் அளித்தும் சாதாரண வழக்கு மட்டுமே பதிவானது. சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த குற்றவாளிகள், இப்போதும் சுடலையாண்டியை மிரட்டுகிறார்கள். அவரது குழந்தையைப் பள்ளிக்கூடத்துக்கே சென்று மிரட்டியுள்ளனர். இதனால் பாதுகாப்புக் கோரி கலெக்டரிடம் மனு அளித்திருக்கிறார் சுடலையாண்டி.

மேலப்பாளையம் அருகே ஆரைக்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற மரம் வெட்டும் தொழிலாளி, ராமச்சந்திரன் என்பவரிடம் 10,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதற்காக, 18,500 ரூபாய் திருப்பிச் செலுத்திய நிலையில், ‘வரும் ஜனவரி மாதத்துக்குள் 15,000 ரூபாயைத் திருப்பிச் செலுத்த வேண்டும்’ என போலீஸார் எழுதி வாங்கினார்கள். கந்துவட்டி கொடுமைமீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் கட்டப் பஞ்சாயத்து செய்து வருகிறது போலீஸ்.

சந்துபொந்து எங்கும் கந்துவட்டி... கல்லா கட்டும் காக்கி!

ஈரோடு: வட்டி... கிட்னி!

ஈரோட்டைச் சேர்ந்த ரவியிடம் பேசினோம். ‘காசிபாளையத்தில் குடியிருக்கிறோம். கூலிக்குத் தறி ஓட்டுறேன். குடும்ப கஷ்டத்துக்காகக் கந்துவட்டிக்காரங்களிடம் கொஞ்சம் கொஞ்சமா மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கிட்டேன். நானும் மனைவியும் 15,000 சம்பாதிப்போம். ஆனா, வட்டி 18,000 கட்ட வேண்டும். கடனை அடைக்க நகையையோ, நட்டோ இல்லாததால் ஏழைகளுக்குக் கடவுள் கொடுத்திருக்கும் சொத்தான கிட்னியை விற்றுக் கடனை அடைத்துவிடலாம் என முடிவெடுத்தேன். ஐந்து லட்சம் ரூபாய் கொடுப்பதாக உறுதியளித்து, திருச்செங்கோட்டைச் சேர்ந்த மாதேஸ்வரனிடம் கூட்டிட்டுப் போனார்கள். அவருடைய ரெண்டு கிட்னியும் போயிடுச்சு. அவருக்கு கிட்னி கொடுப்பதாக இருந்தேன். கடந்த 22-ம் தேதிதான் இந்த விஷயத்தை வீட்டில் சொன்னேன். குடும்பத்தினர் தடுத்தாங்க. ‘கடனைக் கட்ட முடியவில்லையென்றால் இறந்து போயிடுவேன்’னு சொன்ன பிறகுதான் அமைதியானங்க. ஆஸ்பத்திரியில் சேர்ந்தேன். அதற்குள் மனைவி, கம்யூனிஸ்ட்காரர்களிடம் நிலவரத்தைச் சொல்லி கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் மூலமாக நடவடிக்கை எடுத்து என்னைக் கூட்டிட்டு வந்துட்டாங்க. பாவம் மாதேஸ்வரன்... அவருக்கு மூன்று நாட்களுக்குள் கிட்னி மாற்றம் செய்யவில்லை என்றால் இறந்துடுவார்னு சொன்னாங்க’’ என்றார்.

சேலம்: வீடு புகுந்து குடிப்பார்கள்!


மீட்டர் வட்டி கொடுமையால் கந்து வட்டிக்காரன் முன்பே தூக்கு போட்டு இறந்த சம்பவம் இது.வழக்கைச் சாதாரண தற்கொலையாகப் பதிவு செய்து, கந்து வட்டிக்காரனைக் காப்பாற்றியிருக்கிறது சேலம் போலீஸ். இதுபற்றி நம்மிடம் பேசினார் தனசேகரன் என்பவர். ‘‘என் தங்கை கலைமணியின் கணவர் செல்வம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த கந்துவட்டிக்காரர் ரமேஷ்பாபுவிடம் நான்கு மாதங்களுக்கு முன் 40,000 ரூபாய் மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கினார். மாதம் 16,000 ரூபாய் வட்டி. ஒரு நாள் தள்ளிப் போனல்கூட வீட்டிலிருந்து ஏதாவது தூக்கிட்டுப் போயிடுவார்கள். கடந்த 11-ம் தேதி வட்டி கட்ட முடியவில்லை. அதனால் 14-ம் தேதி இரவு ரமேஷ்பாபு ஆட்களுடன் வீட்டுக்கு வந்திருக்கிறார். அதனால் தங்கையும், அவரது மகளும் வெளியே சென்றுவிட்டார்கள். ரமேஷ்பாபுவும், அவரது நண்பர்களும் வீட்டின் நுழைவாயிலில் உட்கார்ந்து மதுவைக் குடித்துவிட்டு சில்லி சிக்கன், ஊறுகாய், புரோட்டாவைச் சாப்பிட்டுவிட்டு எலும்புகளையும் குப்பைகளையும் அப்படியே போட்டுட்டு சென்றுவிட்டார்கள். அடுத்த நாள் வீட்டுக்கு வந்து கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டியிருக்கிறார். இதனால் மன உளைச்சல் அடைந்த செல்வம், வீட்டின் கதவைத் தாழிட்டு கந்துவட்டிக்காரர் ரமேஷ்பாபு கண்ணெதிரே தூக்குப் போட்டு இறந்துவிட்டார். இந்த மரணத்தைப் பள்ளப்பட்டி போலீஸார் வெறும் தற்கொலையாக வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். ரமேஷ்பாபுமீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றார்.

கரூர்: ‘குடியிருக்க’ வைப்பார்கள்

கரூர் மாவட்டக் கொடுமைகளை விவரித்தார் சமூக ஆர்வலர் ஒருவர். ‘‘குறிப்பிட்ட மொழி பேசுபவர்கள்தான் வட்டிக்குப் பணம் கொடுக்கிறார்கள். பணம் கொடுக்கும்போது, அதற்கு ஈடாக அவரிடம் நிலமோ, பொருளோ இருக்கிறதா... வட்டி கேட்டு வரும்போது அந்த வீட்டில் எதிர்த்துப் பேசும் அளவுக்கு ஆட்கள் இருக்கிறார்களா என்பதையெல்லாம் உறுதி பண்ணிக்கொண்டே வட்டிக்குப் பணம் கொடுப்பார்கள். அதோடு, கடவுளுக்குப் பயந்து வட்டியைச் சரியாகக் கொடுப்பார்கள் என்பதால் ஊருக்கு ஊர் இருக்கும் காளி கோயில்களில் சத்தியம் வாங்கிக்கொள்வார்கள். சிலர் பாலில் சத்தியம் வாங்குவார்கள். ஒரு மாதம் வட்டி தரவில்லை என்றால் எச்சரித்து அனுப்புவார்கள். இரண்டாவது மாதம் வீட்டுக்குப் போய் அந்தத் தெருவே பார்க்கிற அளவுக்குக் கேவலமாகப் பேசுவார்கள். மூன்றாவது மாதம் தனது வீட்டுப் பெண்களை வட்டி வாங்கியவர் வீட்டுக்கு அனுப்பி, ‘குடியிருக்க’ வைப்பார்கள். அப்படியும் பணம் வரவில்லையென்றால் வட்டி வாங்கியவர்களை வெளியேற்றிவிட்டு வீட்டை இழுத்துப் பூட்டிவிடுவார்கள்’’ என்றார்.

திருப்பூர்: கோர்ட் சொல்லியும் கேட்காத அரசு!

திருப்பூரில் கூலித் தொழிலாளர்கள் அதிகம் என்பதால் அவர்கள்தான் டார்கெட். அதனால் கந்துவட்டி கும்பல்களும் இங்கே அதிகம். பின்னலாடை நிறுவனங்களில் வார சம்பளம்தான். அதனால் இங்கே வார வட்டி. 1,000 ரூபாய் கடனுக்கு, வாரம் 100 ரூபாய் வட்டி. வாரந்தோறும் சனிக்கிழமை மாலை சம்பளம் பெற்றுக்கொண்டு தொழிலாளி வீட்டுக்கு வந்தால், அடுத்தநாள் அதிகாலையிலேயே வீட்டு வாசலில் வட்டிக்காரர் நிற்பார். வட்டி கட்டாதவர்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, டி.வி, டூவீலர்களை எடுத்துக்கொண்டு வந்துவிடுவார்கள். கடன் பெற்றவரின் வீட்டுப் பெண்களை ஆபாச வார்த்தைகளில் திட்டுவதில் எல்லைமீறிச் செல்வார்கள்.

அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த பாத்திரத் தொழிலாளி ஆறுமுகம், 2013-ம் ஆண்டு தன் குழந்தையின் மருத்துவச் செலவுக்காக, கடுக்கன் ராஜாவிடம் கந்துவட்டிக்கு 1,500 ரூபாய் கடன் வாங்கினார். அதற்காக வாரந்தோறும் 200 ரூபாய் வட்டித் தொகையாகக் கட்டி வந்தார். இப்படி வட்டி மட்டுமே 8,000 ரூபாய்வரை கட்டிவிட்ட நிலையில், அசல் தொகையான 1,500 ரூபாயை மட்டும் அவரால் ஒட்டுமொத்தமாக செலுத்த முடியவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆறுமுகம், வீட்டின் கழிவறையில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவத்தை நாளிதழில் படித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அப்போதைய தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வாலுக்குக் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தையே பொதுநல மனுவாகப் பதிவுசெய்த தலைமை நீதிபதி, தலைமைச் செயலாளர் உட்பட சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, சில உத்தரவுகளையும் பிறப்பித்தார். அதில், “கந்துவட்டி தொடர்பாக அளிக்கப்படும் புகார்கள்மீது காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க, மாவட்டம் மற்றும் தாலுகாக்களில் கண்காணிப்பு கமிட்டி அமைக்க அரசு பரிசீலிக்க வேண்டும். கந்துவட்டி வழக்குகளை கமிஷனர்கள் எஸ்.பி-கள் நேரடிக் கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும். 2003-ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘தமிழ்நாடு கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை’ கடுமையாக அமல்படுத்தி, அச்சட்டம் தொடர்பாக மக்களிடையே நன்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தனர். உயர் நீதிமன்றத்தின் அந்த உத்தரவைப் பின்பற்றியிருந்தால், கந்துவட்டி கொடுமை தற்கொலைகளை அரசால் தடுத்திருக்க முடியும்.

கன்னியாகுமரி: ‘தின’ வட்டிக் கொடுமை!

தின வட்டிக்குக் கடை வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் பணம் வாங்குகின்றனர். வட்டித் தொழில் செய்பவர்கள் முன்னாள் குற்றவாளிகளாகவும் அரசியல் புள்ளிகளாகவும் இருக்கின்றனர். பணம் வசூல் செய்ய தனியாக ஆட்களை வைத்திருக்கிறார்கள். தொழிலாளர்களிடம் அவர்களின் ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி வைத்துக் கொண்டுதான் பணத்தைக் கொடுக்கின்றனர். தொழிலாளர் களுக்குச் சம்பளம் வந்தவுடன் வட்டி வசூல் கும்பல், ஏ.டி.எம் கார்டுகளைப் பயன்படுத்திப் பணத்தை எடுத்துவிடும்.

கோவை: குளிப்பதை எட்டிப்பார்த்த கந்துவட்டிக்காரன்!

கோவையை அடுத்த காளப்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பக் கஷ்டத்துக்காகக் கடன் வாங்கினார். கடனைக் கேட்க அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்தான் கந்துவட்டிக்காரன். வீட்டுக்குள் யாருமில்லை. அந்தப் பெண் குளிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது.சபலப்பட்ட கந்துவட்டிக்காரன், அந்தப் பெண் குளிப்பதை மறைந்திருந்து பார்த்து ரசித்திருக்கிறான். அது... அந்தப் பெண்ணுக்குத் தெரிந்துவிட, கத்திக் கூச்சலிட்டிருக்கிறார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அந்தக் கந்துவட்டிக்காரனை வெளுத்து அனுப்பியிருக் கிறார்கள். இது ஓர் உதாரணம்தான். கடன் கொடுத்தவர்களின் முதல் டார்கெட் கடனாளிகளின் வீட்டுப் பெண்கள்தான். புகார் கொடுத்தால் மானம் போய்விடுமே என்ற அச்சத்தில் இதுபோன்ற கொடுமைகள் வெளியில் வருவதில்லை. கடன் தொல்லையால் தற்கொலை என வரும் செய்திகளுக்குப் பின்னால் இதுபோன்ற ஏராளமான துயரங்கள் இருக்கும்.

நாகை: கந்துவட்டி ஆசிரியர்கள்!

நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஆசிரியர்கள் சிலர், இன்னொரு பள்ளி ஆசிரியரிடமிருந்து பணம் வாங்கித் தருவதுபோல் இந்த வட்டித் தொழிலைச் செய்து வருகிறார்கள். பத்து சதவிகித வட்டிவரை கறாராகக் கறக்கிறார்கள். மாதச் சம்பளத்தை வங்கி மூலமாக வாங்கும் நபர்களுக்கு மட்டுமே கடன் தருகிறார்கள். கடன் வாங்குபவர்கள் தங்களுடைய வங்கி காசோலை இரண்டு மற்றும் கடன் பத்திரத்தில் கையொப்பம் போட்டுத்தர வேண்டும். வீடு, மனை, நிலப் பத்திரங்களை ஈடாகத் தரவேண்டும். எல்லாவற்றையும்விட முக்கியம் ஏ.டி.எம். கார்டை தந்துவிட வேண்டும். கடன் வாங்குபவர்களின் வங்கிக் கணக்கில் வரும் சம்பளப் பணத்தில் வட்டியை எடுத்துக்கொண்டு மீதியைத் தந்துவிடுவார்கள்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த தலைமை ஆசிரியரிடம் கடன் வாங்கிய மின்வாரிய ஊழியர் ஒருவரிடம் பேசியபோது, ‘‘என் மகளுக்கு வயிற்றில் கட்டி. ஆபரேஷன் செய்யணும்னு சொல்லிட்டாங்க. அதற்காகப் பணத்துக்கு அலைந்தபோது, எங்க ஊர் பள்ளிக்கூட ஆசிரியர் மூலமாக ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். எனக்குச் சம்பளத்தில் பிடித்தம் போக 15,000 ரூபாய் கணக்கில் வரும். அதில், கடந்த 10 மாதங்களாக பத்தாயிரத்தை வட்டிப்பணமாக எடுத்துக்கொண்டு 5,000 ரூபாய்தான் தருவார். அதில்தான் குடும்பத்தை ஓட்டுறேன். இதுவரைக்கும் ஒரு லட்சம் வட்டி கொடுத்தும் அசல் அப்படியே இருக்கு’’ எனப் பெருமூச்சுவிட்டார்.

செம்பனார்கோயிலைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், அசலையும், வட்டியையும் சேர்த்து செக் மோசடி வழக்குப் போட்டு, கோர்ட்டுக்கு இழுத்து வசூலித்துவிடுவாராம். வட்டியை வசூலித்துத் தருவதில் போலீஸாரும் முக்கியப் பங்கு வகிப்பதுதான் வேதனையின் உச்சம்.

தஞ்சை: பணம் காய்க்கும் மரம்!

கடன் வாங்கியவர் பணம் காய்க்கிற மரங்களாகவே பார்க்கப்படுகிறார்கள். பழம், காய்கறி வியாபாரம் செய்பவர்கள் வட்டிக்கு வாங்கிவிட்டு, வட்டியைக் கட்ட முடியாமல் ஊரைவிட்டே ஓடிய சம்பவங்கள் பட்டுக்கோட்டையில் ஏராளம். குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியல் தனி. 11 லட்சம் ரூபாய் வாங்கியதற்கு 22 லட்சம் ரூபாய் வட்டியைக் கட்டிவிட்டு, மீண்டும் வட்டிக் கேட்டுத் தொல்லை செய்ததால் தற்கொலை செய்துகொண்ட தம்பதிகளும் இதில் அடங்குவார்கள். ‘‘தஞ்சை,  பட்டுக்கோட்டை, திருச்சிற்றம்பலம், பேராவூரணிப் பகுதிகளில் மொய் விருந்து நடத்துவார்கள். மொய் விருந்துவைத்துக் கடனைக் கட்டுவதாகச் சொல்லி தொழில் செய்பவர்கள் வட்டிக்குப் பணம் வாங்குவார்கள். அசலுக்கும் வட்டிக்கும் மொய் தொகை வரவில்லையென்றால் மொய்விருந்து வைத்தவர்களின் இடத்தையும், தென்னந்தோப்பு, மாந்தோப்புகளையும் எழுதி வாங்கிக்கொள்ளும் அவலமும் தஞ்சை மாவட்டம் பேராவூரணிப் பகுதியில் அரங்கேறியிருக்கிறது. இந்தக் கொடுமைகளெல்லாம் போலீஸுக்குத் தெரியாமல் இல்லை” என்கிறார்கள்’ பட்டுக்கோட்டைவாசிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சந்துபொந்து எங்கும் கந்துவட்டி... கல்லா கட்டும் காக்கி!

திருச்சி: கல்விச் சான்றிதழ்கள் காணாமல் போகும்!

முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்த சந்திரபிரகாஷ், கந்துவட்டிக் கும்பல் மிரட்டலுக்குப் பயந்து விஷம் குடித்தார். திருச்சி பெல், பொன்மலை ரயில்வே ஊழியர்களையும் திருச்சி ஏர்போர்ட், சுப்பிரமணியபுரம், பொன்மலை, துவாக்குடி, காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் மார்கெட் பகுதிகளில் நடுத்தர மக்கள், கூலித்தொழிலாளர்கள், வியாபாரிகளைக் குறிவைத்து கந்துவட்டிக் கும்பல்கள் உலாவுகின்றன. திருச்சி காட்டூரைச் சேர்ந்த கிரண், வாங்கிய பணத்தைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்திய பிறகும், தன்னை மிரட்டுகிறார்கள் எனத் திருச்சி மாநகர துணை கமிஷனர் சக்திகணேஷிடம் புகார் கொடுத்தார். புகாரை வாங்கிய போலீஸ், ‘‘பணம் கொடுத்தவன், மிரட்டத்தான் செய்வான்” எனச்  சொன்னார்களாம்.

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகரைச் சேர்ந்த முகமது ரபிக், ‘‘வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள், என்னுடைய சான்றிதழ்களைப் பறித்துக் கொண்டார்கள்’’ எனச் சொன்னார்.  “என் அப்பா டீக்கடையில் கிளாஸ் கழுவுறார். அம்மா வீட்டு வேலை செய்கிறார்கள். ரொம்ப கஷ்டப்பட்டு என்னை பி.எஸ்ஸி கம்யூட்டர் சயின்ஸ் படிக்க வெச்சாங்க. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தேன். ஒருவரிடம், 75,000 மற்றும் 60,000 ரூபாய் சீட்டுப் போட்டிருந்தேன். அதோடு குடும்ப கஷ்டத்துக்காக அவர்களிடம், 25,000 பணம் வாங்கியிருந்தேன். அதற்கு மாதம் 1,250 ரூபாய் வட்டிக் கட்டினேன். இந்தநிலையில் சீட்டு ஏலம் விழுந்தது. ஆனால் 12,000 ரூபாயைக் கொடுத்துவிட்டு எல்லாம் சரியாப் போச்சு என்றார்கள். இடையில் என் தங்கைக்குப் பிரசவம் இருந்ததால், மாதத் தவணைப் பணம் கட்ட முடியவில்லை. இதனால் கோபமடைந்த அந்தக் கும்பல், வீட்டில் இருந்த ஃபேனையும் என் கல்விச் சான்றிதழ்களையும் தூக்கிட்டுப் போயிட்டாங்க. ‘வட்டிப்பணம் கொடுக்க துப்பில்லன்னா செத்துப்போக வேண்டியதுதானே’ என அடித்துத் துன்புறுத்தினாங்க. அவமானம் தாங்க முடியாமல், இரண்டு முறை பூச்சி மருந்து குடிச்சிட்டேன். எப்படியோ காப்பாத்திட்டாங்க. இதுகுறித்து திருச்சி பொன்மலை போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை. வேலை செய்த இடத்தில் வந்து பிரச்னை செய்ததால், வேலையும் போச்சு. என் டிசி, மார்க் ஷீட் உள்ளிட்டவை அவர்களிடம் இருக்கிறது. அதை வாங்கித் தரச் சொல்லி திருச்சி கலெக்டரிடம் புகார் கொடுத்து பல வாரங்கள் ஆகுது. எந்தப் பிரயோஜனமும் இல்லை” என்றார்.

- ஜூ.வி. டீம்

கட்டப் பஞ்சாயத்துக் காக்கிகள்!

கா
ண்பவர்களை நிச்சயம் உலுக்கியிருக்கும் அந்தத் தீக்குளிப்புப் படங்கள். தீயில் பற்றி எரிந்த நிலையில் ஒரு குழந்தை நின்று கொண்டும், மற்றொரு சின்னஞ்சிறு குழந்தை கவிழ்ந்து கிடப்பதையும் கண்டு யார்தான் பதறாமல் இருந்திருப்பார்கள். கந்துவட்டி கொடுமையைக் கண்முன் நிறுத்தியுள்ளது நெல்லைச் சம்பவம். எப்படியான நெருக்கடியைச் சந்தித்திருந்தால், அவமானங்களையும் இழிவையும் எதிர்கொண்டிருந்தால் இந்தத் துயர முடிவைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்?

சந்துபொந்து எங்கும் கந்துவட்டி... கல்லா கட்டும் காக்கி!

வாங்கிய கடனைவிட அதிக வட்டியைச் செலுத்தியிருக்கிறார் இசக்கிமுத்து. பணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட... இசக்கிமுத்து குடும்பம் மிரட்டப்படுகிறது. கலெக்டர் அலுவலகக் குறைத் தீர்ப்பு முகாம் சென்று, அடுத்தடுத்து ஐந்து முறை புகார்கள் அளிக்கின்றனர். எந்த நடவடிக்கையுமில்லை. மிகவும் அலைக்கழிக்கப்பட்ட பின்னர் 6-வது முறை கலெக்டர் அலுவலகம் சென்று, தற்கொலை முடிவை எடுத்திருக்கிறது இசக்கிமுத்து குடும்பம்.

அதிக வட்டி வசூலிப்பது, வட்டி செலுத்தாதவர்களை மிரட்டுவது, துன்புறுத்துவதைத் தடுக்க 1957-ம் ஆண்டிலேயே சட்டம் கொண்டுவரப்பட்டது. கடனை அடைக்க முடியாமல் பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் சகோதரரும், படத் தயாரிப்பாளருமான ஜீ.வி தற்கொலை செய்துகொண்டார். கந்துவட்டியின் கொடுமையைத் தடுக்க, முதல்வர் ஜெயலலிதா கந்து வட்டி தடைச்சட்டத்தைக் கொண்டு வந்தார். ஆனால், இந்தச் சட்டம் இன்றுவரை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.

கந்துவட்டி கொடுப்பவர்கள் பெரும்பாலும் ஆதிக்கச் சாதியைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அரசியல் பின்புலம் கொண்ட இவர்கள் காவல்துறையில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். கந்துவட்டிக்காரர்களின் தலைமை அலுவலகமாக காவல் நிலையங்களே இருக்கின்றன. இதனாலேயே இவர்கள்மீது புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் போலீஸார் எடுப்பதில்லை. போலீஸில் புகார் அளித்தால், ‘‘இது போலீஸ் ஸ்டேஷன் சம்பந்தப்பட்டதில்லை. மத்தியக் குற்றப்பிரிவுக்குப் போங்கள் அல்லது பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவுக்குச் செல்லுங்கள்’’ என்றுதான் பதில் வருகிறது. அங்கு சென்றால் ‘‘இது மிரட்டல் வழக்கு. காவல் நிலையத்துக்கே செல்லுங்கள்’’ என்பார்கள். போலீஸ் ஸ்டேஷனில் கந்துவட்டிக்காரர்களோடு டீலீங்கும் கடன் வாங்கியவர்களிடம் கட்டப் பஞ்சாயத்தும் மட்டுமே நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

‘காவல் நிலையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கவில்லை’ என கலெக்டரிடம் புகார் அளித்தால், யார் நடவடிக்கை எடுக்கவில்லையோ அவர்களிடமே அந்தப் புகார் மனு போகும். விசாரணைக்கு அழைப்பார்கள். அதற்கு முன்பு, கந்துவட்டிக்காரர்களிடமே புகார் மனுவை வாங்கி, கந்துவட்டிக் கும்பல் செய்ததை போலீஸ் செய்ய ஆரம்பிக்கும். இந்தத் தேதிக்குள் பணத்தைக் கொடுத்துவிட வேண்டும் எனக் கட்டப் பஞ்சாயத்து செய்து எழுதி வாங்குவார்கள்.  இசக்கிமுத்து வழக்கில் நடந்ததும் இதுதான்.

‘‘கந்துவட்டியால்தான் மிரட்டப்படுகிறேன்’’ என ஒருவர் 5 முறை தொடர்ச்சியாகப் புகார் கொடுக்கிறார். முதல் இருமுறை புகார் கொடுத்தபோது, ‘‘ஏன்.. எதற்கு?’’ எனக் கேட்காவிட்டாலும் மூன்றாவது முறை புகார் கொடுக்கும்போது, காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என  மாவட்ட நிர்வாகம் விசாரித்திருக்க வேண்டாமா? ஆனால் இதை எந்த மாவட்ட நிர்வாகமும் செய்வதில்லை. இது போலீஸாருக்கும், சாதி, அரசியல் பின்புலத்துடன் செயல்படும் கந்துவட்டி கும்பலுக்கும் வசதியாகப் போகிறது.

இசக்கிமுத்துவின் குடும்பம் மட்டுமல்ல. தமிழகம் முழுக்க இப்படி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கந்து வட்டியால் பாதிக்கப் பட்டிருக்கின்றன. மிரட்டலுக்குப் பயந்து சொத்துகளை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.

இது தற்கொலைகள் அல்ல; கந்துவட்டிக் கொலைகள். இதற்குக் கந்துவட்டிக் கும்பல் மட்டுமே காரணமல்ல. கந்துவட்டிக் கும்பலை வளர்த்துவிட்டு, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கும் காவல் துறையும் அரசும்தான் காரணம்.

காவல் துறையும், அரசு நிர்வாகங்களும் சாமானியர்கள் பக்கம் நிற்பதில்லை.