Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்!
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்!

ஒரு பேரரசின் இளவரசராகப் பிறப்பது எவ்வளவு பெரிய விஷயம்! சில பல கொலை முயற்சிகளில் சிக்காமல் தப்பினால்... சில பல கொலைகளைப் பிசகின்றி நிகழ்த்தினால் போதும். ராஜ வாழ்க்கை, மிதமிஞ்சிய அதிகாரம், பூலோகத்திலேயே சொர்க்கத்தின் சுகம், சொகுசு, உல்லாசம்... என எல்லாம் வாய்க்கலாம். அரியணை ஏறுவது என்பது மியூஸிகல் சேர் விளையாட்டுப்போல. ஆனால், இதில் ஒரே ஒரு நாற்காலிதான் உண்டு. அதில் வீற்றிருக்கும் அரசன் செத்து விழுந்தபின், அல்லது சாகடிக்கப்பட்டபின், மற்றவர்கள் பதவிவெறியுடன் அதை நோக்கி ஓடுவார்கள். உடன் ஓடி வருபவர்களையெல்லாம் கொன்று, வென்று, எவன் சென்று நாற்காலியில் அமருகிறானோ, அவனே அடுத்த அரசன். இந்த மியூஸிகல் சேரில் இசை என்பது வீழ்த்தப்பட்டவர் களின் மரண ஓலமே. ரத்தப் பிசுபிசுப்புடன் கூடிய அந்த அரியணையில் ஏறியவனும் எந்தக் கணத்திலும் வீழ்த்தப்படலாம் என்பதே இந்த அரசியல் விளையாட்டின் தீரா சுவாரஸியம்.

துருக்கியின் ஒட்டோமான் பேரரசின் அரியணை அப்போது காலியானது. துருக்கி சுல்தான் முதலாம் அகமது, கி.பி.1617, நவம்பர் 22-ம் தேதி இறந்தார். அடுத்த சுல்தானாகப் பதவியேற்று மியூஸிகல் சேர் விளையாடியவர்கள்: அகமதுவின் இளைய சகோதரர் முஸ்தபா (சுமார் நான்கு மாதங்கள்), அகமதுவின் மூத்த மகன் இரண்டாம் ஒஸ்மான் (சுமார் நான்கு ஆண்டுகள்), மீண்டும் முஸ்தபா (சுமார் ஒன்றரை ஆண்டுகள்). 1623, செப்டம்பரில் அகமதுவின் மகன்களில் ஒருவனான நான்காம் முராத் என்ற பதினொரு வயது இளவரசன் அரியணை ஏறினான். இத்தனை ஆட்சி மாற்றங்கள். இவற்றுக்கிடையில் சில இளவரசர்களின் கழுத்துகள் நெரிக்கப்பட்டன. (ஆம், கழுத்தை நெரித்துக் கொல்வதே அவர்களது விருப்பத்துக்குரிய கொலை முறை). ராஜ்ஜியத்தை சுல்தான்கள் ஆட்சி செய்தாலும், சுல்தான்களை ஆட்சி செய்தது இஸ்தான்புல் அந்தப்புர கேபினெட்டே. அதில் ஒருத்தி அப்போது அதீத அதிகாரத்துடன் அனைவரையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்தாள்.

அனாஸ்டாஸியா. கிரேக்கத்தைச் சேர்ந்தவள். பேரரசர் அகமதுவின் அந்தப்புரத்துக்கு அடிமையாக வந்தவள். இஸ்லாமிய மதத்துக்கு மாறி, ‘கோஸெம்’ என்ற பெயர் பெற்றாள். நன்றாகப் பாடுவாள். அவளின் இசையிலும், அவள் மீதான இச்சையிலும் தடுமாறிய அகமது, இதயத்தில் அதிகமாகவே இடம் கொடுத்தார். கோஸெம் அடுத்தடுத்து வாரிசுகளைப் பெற்றுப் போட்டாள். அதில் ஐந்து ஆண் வாரிசுகள். மெஹ்முத், முராத், காஸிம், சுலைமான் மற்றும் இப்ராஹிம்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெஹ்முத் இறந்துவிட, 1623-ல் சுல்தானாக சிறுவன் முராத் அறிவிக்கப்பட்டான். அறிவிக்கப்படாத சுல்தானாகப் பின்னணியில் ஆட்சி செய்தது கோஸெம்தான். வளர்ந்தபின் முராத்தின் ஆட்டங்கள் ஆரம்பமாகின. தன் ராஜ்ஜியத்தில் மது, புகையிலை, காபி மூன்றுக்கும் தடை விதித்தார். தானே வீதிகளில் இறங்கி அதிரடி சோதனை நடத்தினார். யாராவது இவற்றை விற்றாலோ, உபயோகித்தாலோ உடனடி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால், முராத்தே மறைமுகமாக மது அருந்தினார் என்பது ஆஃப் தி ரெக்கார்டு தகவல். பாரசீக ராஜ்ஜியத்தின் மீது படையெடுத்துப் பெரும்பகுதிகளை வென்றார். முகலாயர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார் என்பவையெல்லாம் உபரித் தகவல்கள்.

‘அண்ணன் எப்ப சாவான்? அரியணை எப்ப நமக்குக் கிடைக்கும்?’ இதுவே சகோதர இளவரசர்களின் மனநிலை. ‘தான் செத்த பின்பு தன் மகன்களே ஆட்சிக்கு வரவேண்டும்’ என்பது சுல்தான்களின் இயல்பான மனநிலை. இருந்தாலும் சில சகோதர இளவரசர்களை உயிருடன் விட்டு வைத்திருந்தனர். ஒட்டோமான்களின் பிரதான அரண்மனையான டாப்காபி (Topkapi) அரண்மனையின் அந்தப்புரத்தின் ஒரு பகுதியில், அவர்களைச் சிறை வைத்திருந்தனர். எதற்கு? ஒருவேளை ஆளும் சுல்தான் திடீரெனப் போய்ச் சேர்ந்துவிட்டால்? அவருக்கு ஆண் வாரிசும் இல்லாமல் போய்விட்டால்? ஒட்டோமான் வம்சத்தில் யாராவது எஞ்சியிருக்க வேண்டுமல்லவா!

அதற்காகத்தான் தன் இளைய சகோதரர்கள் சிலரையும் சுல்தான் முராத், சிறை வைத்திருந்தார். அவரின் கடைசித் தம்பியும், கோஸெமின் செல்ல மகனுமான இப்ராஹிமும், எட்டு வயதிலேயே அந்தத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டான். ஜன்னல்கூட இல்லாத அறை. சிறிதே வெளிச்சம் உண்டு. வெளிநபர்களைப் பார்க்கவோ, பேசவோ முடியாது. உணவு உண்டு. உயிரைப் பறிக்க எப்போது வேண்டுமானாலும் சுல்தானிடமிருந்து உத்தரவு வரலாம். இப்ராஹிமுக்கு அடிக்கடி தலை வலித்தது. நோய்வாய்ப் பட்டான். அடிமைப்பெண் எம்.ஜி.ஆர் போலவே உலகமறியாது வாழ்ந்தான். கோஸெம், மகன் முராத்திடம் கெஞ்சினாள். ‘‘பாவம் சிறுவன், அவனை விட்டு விடு!’’ சுல்தான் ஆகிவிட்டால் இரக்கமெல்லாம் மரத்துப்போன விஷயம். முராத் செவிசாய்க்கவில்லை.

‘‘இன்றைக்கு உன் மூத்த சகோதரன் சுலைமானைக் கொன்றுவிட்டார்கள்.’’ இப்ராஹிமுக்கு எப்படியோ தகவல் வந்தது. நடுநடுங்கிப் போனார். ‘அய்யோ, அடுத்து நான்தானா?’

‘‘சுல்தானின் உத்தரவுப்படி இன்றைக்கு காஸிமுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.’’ இப்ராஹிமுக்கு 1638-ல் செய்தி வந்தது. கதறி அழக்கூட தைரியமில்லை. மிஞ்சியிருப்பது நான் மட்டுமே! எனக்கான மரண நாள் எது? கழுத்தைத் தடவிப் பார்த்துக்கொண்டார். சாவதற்கு ஒரு நொடி போதும். ஆனால், அதை நினைத்து நினைத்தே நொடிகள் ஒவ்வொன்றையும் விழுங்கி வாழ்வது பெருங்கொடுமையல்லவா!

இந்த இடத்தில் விதியின் நிறம் மாறியது. இருபத்தேழே வயதான சுல்தான் நான்காம் முராத், நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் விழுந்தார். அவருக்குப் பத்து ஆண் வாரிசுகள். பத்தும் நிலைக்கவில்லை. அந்தக் கோபமோ என்னவோ. ‘‘இப்ராஹிமுக்கு மரண தண்டனை நிறைவேற்றுங்கள்’’ என்று உத்தரவிட்டார். இங்கே கோஸெம் குறுக்கே வந்தாள். பிரதம மந்திரி காரா முஸ்தபாவைத் தடுத்தாள். ‘‘ஒட்டோமான் வம்சத்தில் எஞ்சியிருப்பது அவன் மட்டுமே. அவன் நமக்குத் தேவை.’’

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்!

1640 பிப்ரவரி 8. சுல்தானுக்கு அடுத்து அதிக அதிகாரம் கொண்ட பிரதம மந்திரி காரா முஸ்தபா, இப்ராஹிம் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்குச் சென்றார். இருள் அகன்று ஒளி பாய்ந்தது. இப்ராஹிம் பயத்துடன் அவரைப் பார்த்தார். ‘‘சுல்தான் முராத் இறந்துவிட்டார். நீங்களே அடுத்த சுல்தான். வெளியே வாருங்கள்’’ என்று அழைத்தார்.

18 ஆண்டுகள் இருளை மட்டுமே பார்த்து வாழ்ந்த இப்ராஹிமால் இந்த திடீர் வெளிச்சத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘‘பொய் சொல்கிறீர்கள். என்னை ஏமாற்றி அழைத்துச் சென்று கொல்லப் போகிறீர்கள். நான் வரவே மாட்டேன்’’ என நடுங்கினார். தாய் கோஸெம் வந்து வார்த்தைகளால் ஒத்தடம் கொடுத்தாள். ‘‘பயப்படாதே மகனே, நீயே வந்து உன் அண்ணனின் உடலைப் பார்.’’ அப்போதும் நம்பாமல் நடுங்கியபடியே அவர்களுடன் சென்றார் இப்ராஹிம். அங்கே முராத்தின் உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. அச்சத்துடன் அருகில் சென்று, ‘உயிர் இருக்கிறதா’ என்று பார்த்தார். முராத் சட்டென எழுந்து தன் கழுத்தில் கத்தியைச் செருகிவிடுவாரோ என்று பயம். மூச்சு இல்லை. நாடித்துடிப்பில்லை. இதயமும் துடிக்கவில்லை.

‘ஆம்! செத்துவிட்டான். உண்மையாகவே கொலைகாரன் செத்துவிட்டான்.’ இப்ராஹிம் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தார். அங்கிருந்தவர்களையெல்லாம் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அந்தப்புரத்துக்குள் ஆனந்தக் கூச்சலிட்டபடியே ஓடினார். அங்கிருந்த பெண்களுடன் கெட்ட ஆட்டம் ஆடினார். ‘நான் சுல்தான் ஆகப்போகிறேன்!’

மறுநாளே ஒட்டோமான் ராஜ்ஜியத்தின் பதினெட்டாவது சுல்தானாக 24 வயது இப்ராஹிம் பதவியேற்றார். நீதி, நிர்வாகம், ஆட்சி, அதிகாரம், பொருளாதாரம், சட்டம் என்னதான் தெரியும் அவருக்கு? பிரதம மந்திரிதான் சகல பொறுப்பு களையும் ஏற்றுக்கொண்டார். அண்டை ராஜ்ஜியங்களுடன் உறவைக் காத்தல், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் கஜானாவைக் காத்தல், உள்ளூர் எதிரிகள் தலைதூக்காமல் ராஜ்ஜியத்தைக் காத்தல், கீழ்ப்படியாதவர்களைப் பதவிகளிலிருந்து நீக்கி நிர்வாக நலனைக் காத்தல், போட்டியாகத் தலையெடுத்து வருபவர்களின் தலைகளை எடுத்து சுல்தானின் பதவியைக் காத்தல்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்!

இப்படிக் காத்தலில் பிரதம மந்திரி கண்ணும் கருத்துமாக இருக்க, இப்ராஹிமோ ‘கலத்தலில்’ கிறக்கமாகத் திரிந்தார். எல்லாம் தாயின் ஏற்பாடுதான். ‘‘பாவம் எம்புள்ளை. பல வருஷங்களா அடைஞ்சு கிடந்திருக்கான். ஆனந்தமா அனுபவிக்கட்டும்.’’ அந்தப்புரத்தில் சுல்தான் துள்ளி விளையாடினார். விளையாட்டில் வீரியம் குறையாமலிருக்க உரிய மருந்துகளையும் உணவுகளையும் அருமைத்தாயே விநியோகம் செய்தாள். மகனும் தாயிடம் உரிமையுடன் கேட்டார். ‘‘கொடியிடைப் பெண்கள் எனக்குப் பிடிக்கவில்லை. கொழுக் மொழுக்கென குண்டுப் பெண்களை அனுப்பி வை.’’

பல நாள்கள் அந்தப்புரத்தை விட்டு வெளியே வராமல் அங்கேயே கிடந்தார் இப்ராஹிம். தனது திறமையைத் தானே பார்த்து வியந்து பெருமைப்படுவதற்காக அறைகளெங்கும் நிலைக்கண்ணாடிகளை வைத்துக் கொண்டார். சில சமயங்களில் மணிக்கொருத்தி என 24 பெண்களுடன் அந்நாளைக் கட்டிலிலேயே கடந்தார்.

ஒருமுறை துருக்கியின் இஸ்லாமிய தலைமை மதகுருவின் மகள் ஒருத்தியைக் கண்டு, அவள் அழகில் (குண்டுப்பெண்ணாக இருந்திருக்கலாம்) கிறங்கினார் சுல்தான். ‘‘உங்கள் மகளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்’’ என்று மதகுருவிடம் சொன்னார். சுல்தானின் அந்தப்புர லீலைகளை அறிந்த மதகுரு தயங்கினார். தன் மகளிடம், ‘மறுத்துவிடு’ என்று அறிவுறுத்தினார். இப்ராஹிமுக்குக் கடும்கோபம். அந்தப்பெண் கடத்தப்பட்டாள். அவளை அந்தப்புரத்தில் சில நாள்கள் அடிமையாக வைத்து ஆட்டிப்படைத்தார். ஆசைகள் தீர்ந்ததும் அனுப்பிவைத்தார். பழிவாங்கல். ‘நான் கேட்டு மறுக்கும் உரிமை இங்கே எவனுக்கும் இல்லை.’

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்!

‘‘சுல்தான் கட்டில் காரியங்களுக்குத்தான் லாயக்கு. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து நிர்வாகம் செய்வதற்கல்ல’’ என்று சிலர் முணுமுணுத்தனர். அதற்காகவே ‘ஒருநாள் முதல்வர்’ போல இப்ராஹிம் அதிரடியாகத் தெருவில் இறங்கினார். இஸ்தான்புல் சந்தைக்கு வந்தார். கடைகளில் திடீர் சோதனை நடத்தினார். வியாபாரிகளின் குறைகளைக் கேட்டறிந்தார். ‘அதைச் செய்யுங்கள், இதை நிறைவேற்றுங்கள்’ என்று பிரதம மந்திரிக்கு ஒப்புக்குக் கட்டளைகள் இட்டார். அந்தி சாய்வதற்குள் அந்தப்புரம் வந்தடைந்தார். பேரின்ப சேவைகள் தொடர்ந்தன.

‘உரியவருக்கு சோப்பு போட்டால், சாதாரண நபரும் உயர்பதவிகள் பெறலாம்’ என்பது அரசியல் பாடம். இப்ராஹிம், தனக்கு சோப்பு போட்டுக் குளிப்பாட்டி விடும் நபரை உயர்பதவியில் வைத்து அழகு பார்த்தார். காலாட்படையின் தளபதி ஆக்கினார். தான் விரும்பிய இன்னொரு வேலைக்காரரை, அரண்மனையின் தலைமை நிர்வாகி ஆக்கினார். எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான கிளுகிளு கிறுக்குத்தனங்கள் பலவற்றையும் அரங்கேற்றினார்.

(சுல்தான் வருவார்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism