Published:Updated:

“எம்.ஜி.ஆர் போல வருவார் விஜய்!”

“எம்.ஜி.ஆர் போல வருவார் விஜய்!”
பிரீமியம் ஸ்டோரி
“எம்.ஜி.ஆர் போல வருவார் விஜய்!”

சந்தோஷத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர்

“எம்.ஜி.ஆர் போல வருவார் விஜய்!”

சந்தோஷத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர்

Published:Updated:
“எம்.ஜி.ஆர் போல வருவார் விஜய்!”
பிரீமியம் ஸ்டோரி
“எம்.ஜி.ஆர் போல வருவார் விஜய்!”

புரட்சிகரமான படங்களே இவரின் அடையாளம். விஜயகாந்த்தைக் கிராமங்கள் வரை கொண்டுசென்றதில் இவரின் படங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. குறிப்பாக, விஜயகாந்தின் அரசியலுக்கு, அவரை வைத்து இவர் எடுத்த படங்களில் வெளிப்பட்ட ஆக்ரோஷமான வசனங்களும் அடித்தளம். அதன் தொடர்ச்சியாகத் தன் மகனையும் நாளைய தீர்ப்பில் செதுக்க, இன்று அவர் ‘மெர்சலாக’ வளர்ந்து நிற்கிறார். நடிகர் விஜய்யின் அப்பா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரைச் சந்தித்து, மெர்சலையொட்டி எழுந்த சர்ச்சை, விஜய்யின் எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசினோம்.

“எம்.ஜி.ஆர் போல வருவார் விஜய்!”

‘‘மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி உள்ளிட்ட வசனங்கள், பி.ஜே.பி-யினரால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனவே?”

‘‘வரிச் சுமையால் பாமரர்கள் முதல் பல்வேறு பிரிவினருமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய மிகப் பெரிய இயக்குநர்கள், நடிகர்களெல்லாம், ‘வரியால நம்ம துறைக்கு ஏற்பட்ட பாதிப்பையும் விஜய் பேசியிருக்காரு’ என்று நன்றி கூறினார்கள். மக்களின் பிரச்னைகள், குமுறல்களை மெர்சல் பேசியதால்தான், அந்த வசனங்களுக்குப் பலத்த கைதட்டல்கள். பி.ஜே.பி சீனியர் தலைவர்கள் சிலரே, ‘தவறாகத் திட்டமிட்டுவிட்டோமோ’ என ஜி.எஸ்.டி குறித்து சுய விமர்சனம் செய்துகொண்டுள்ளனர். ஆக, எல்லோரும் விமர்சித்ததை விட்டுவிட்டு விஜய் மேல் மட்டும் ஏன் பாய்கிறார்கள் எனத் தெரியவில்லை? அதேநேரம், ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும், அஜித் ரசிகர்கள் உள்ளிட்ட சினிமா ரசிகர்கள், சமூக இணையதளவாசிகள் எனப் பலரும் விஜய்க்கு ஆதரவாக நிற்பதற்கு மனமார்ந்த நன்றி.”

‘‘மத்திய அரசின் திட்டங்களைக் கடுமையாக மெர்சலில் விமர்சித்ததன் பின்னணியில், அரசியல் காரணங்கள் உண்டா?”

‘‘மெர்சல் மாத்திரமல்ல, அதற்கு முன்பும் விஜய் தனது பல படங்களில் சமூகக் கருத்துகளை முழங்கியுள்ளார். கண்தானம் குறித்து ‘துள்ளாத மனமும் துள்ளும்’, பஸ் ஸ்டாண்டிலேயே சுற்றிக்கொண்டு இருக்கும் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் ‘லவ் டுடே’, பெற்றோர்களுக்கு மரியாதை தருவதும் காதலே என ‘காதலுக்கு மரியாதை’, தீவிரவாதத்துக்கு எதிரான ‘துப்பாக்கி’ என அவர் நடித்த பல படங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.  ‘கத்தி’யின் மூலம் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் பிரச்னையைப் பற்றிப் பேசவில்லையா! ‘பிரியமானவளே’ படம் பார்த்துவிட்டு ஏழு வருஷம் பிரிந்திருந்த ஒரு கணவனும் மனைவியும் எங்கள் வீட்டுக்கு வந்து விஜய் முன்னிலையில் மீண்டும் தாலி கட்டிக்கொண்டார் கள். சினிமா என்பது சிறந்த மேடை. அதன் மூலம் நல்ல சமூகக் கருத்துகளை மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டுசெல்லும் போராளிதான் விஜய்.”

‘‘காவலன் முதல் மெர்சல் வரை, அவருடைய படங்கள் வெளியாவது தடைபட, அந்தப் படங்களில் வெளிப்படும் ‘அரசியலே’ காரணமா?”

‘‘ஒரு மனிதன் வளர வளர பிரச்னைகளும் வளரும். விஜய்க்கு வரும் பிரச்னைகளே அவரின் வளர்ச்சியைக் காட்டும் அளவுகோல்களாக உள்ளன. பிரச்னைகளை ‘டோன்ட் கேர்’ன்னு தூக்கிப்போட்டுட்டு தன் இலக்கில் விஜய் பயணிக்கிறார் என நினைக்கிறேன். மெர்சல் படத்துக்கு எழுந்த எதிர்ப்பில்கூட, ‘வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி’ என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்கிறார் விஜய். அவர் மௌனத்தில் அர்த்தம் உள்ளது.”

‘‘ஜெயலலிதா இருந்தபோது அடங்கி இருந்தவர்கள், இப்போது தைரியம் பெற்றுள்ளார்கள்; காட்சிகளை நீக்க மறுக்கிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றனவே?”

‘‘விஜய் பொதுநலவாதி. தன்னால் பணம் போட்ட தயாரிப்பாளர் முதல் தொழிலாளர்கள் வரை யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்றே முயற்சிகளை எடுத்தவர். இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்ததும், அந்த வகையிலேயேதான். நாளைய தீர்ப்பில் இருந்தே மெசேஜ் இல்லாத விஜய் படங்களைப் பார்க்க முடியாது. ஜெயலலிதா இருந்தபோதும், மறைந்தபின்பும் சமூகக் கருத்துக்களைத் தமது படங்களில் ஒலிக்க, விஜய் என்றுமே தவறியதில்லை.” 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எம்.ஜி.ஆர் போல வருவார் விஜய்!”

‘‘இப்போது ‘ஜோசப்’ விஜய் என்று சிலர் விமர்சிக்கிறார்களே?

‘‘விஜய்க்கு மதச்சாயம் பூசாதீர். அவர் மனிதன். அப்படித்தான் நாங்கள் வளர்த்துள்ளோம். அது மனிதர்களுக்கு மட்டும்தான் தெரியும்!”

‘‘திரையுலகில் 25 ஆண்டுகளை விஜய் கடந்துவிட்டார். அவரின் அடுத்த இலக்கு அரசியல்தானா?”

‘‘எம்.ஜி.ஆர் இன்றும் சரித்திரப் புருஷராக இருக்கிறார். காரணம், சினிமாவைக் கடந்து ரசிகர்களை அவர் சிந்திக்க வைத்தார்.  அண்ணாவையும், காமராஜரையும் தன் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். ரசிகர்களைச் செதுக்கினார். ரசிகர்கள் எல்லோரும் சேர்ந்து தலைவர் எம்.ஜி.ஆரை உருவாக்கி, அவரை முதல்வராக்கினார்கள். அவரும் அதன்மூலம் நாட்டு மக்களுக்கு நன்மை செய்தார். விஜய்யும் அப்படித்தான் தன் ரசிகர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ட்யூன் செய்துவருகிறார். சினிமா ரசிகர்களாக மட்டுமல்லாமல், சமூகப் போராளிகளாக அவர்களைப் பட்டைத் தீட்டிவருகிறார். ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் வேண்டும் என்பதுபோல, இதற்கெல்லாமே கொஞ்சம் டைம் எடுக்கும்.”

‘‘அதுதான் மெர்சலில் வெளிப்பட்ட ‘எம்.ஜி.ஆர் குறியீடா’?”

‘‘சுற்றிச் சுற்றி இங்கேயே வருகிறீர்களே! (சிரிக்கிறார்) தளபதி விஜய், தலைவர் விஜய்யாக உருவெடுத்து, எம்.ஜி.ஆர் போல மக்களுக்கு நல்லது செய்து, மக்களுக்குச் சிறந்த மாற்றங்களைக் கொடுப்பார். ஒரு தந்தையாகவும், விஜய் ரசிகராகவும் எனது விருப்பமும், எதிர்பார்ப்பும் அதுவே!”

- சே.த இளங்கோவன், படம்: க.பாலாஜி