Published:Updated:

விண்டோஸை விட்டு வெளியில் வாருங்கள்

விண்டோஸை விட்டு வெளியில் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
விண்டோஸை விட்டு வெளியில் வாருங்கள்

வாழ்க்கை என்பது லைக்... ஷேர்... கமென்ட் மட்டுமல்ல!

விண்டோஸை விட்டு வெளியில் வாருங்கள்

வாழ்க்கை என்பது லைக்... ஷேர்... கமென்ட் மட்டுமல்ல!

Published:Updated:
விண்டோஸை விட்டு வெளியில் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
விண்டோஸை விட்டு வெளியில் வாருங்கள்

ழக்கம்போல  வலைதளப் பக்கங்களில் மட்டும்கொதித்துக் கொண்டிருக்கின்றோம் நாம்.

‘மெர்சல்’ பிரச்னையில் சகட்டுமேனிக்கு அரசியல் கட்சிகளையும் அதன் அங்கத்தினரையும் சோஷியல் மீடியாவில் காட்சிப் பொருளாக்கிக் கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் ஜி.எஸ்.டி அமலாக்கப்பட்டபோது அதற்கான சாதக பாதகங்களை ஆராய்ந்து, அதற்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருப்போம்? உங்களுடைய பிரச்னை ஜி.எஸ்.டி-யா... விஜய்க்கு எதிரான நடவடிக்கையா? ஜி.எஸ்.டி-தான் எனில் அன்றே உங்கள் குரல் ஓங்கி ஒலித்திருக்க வேண்டுமே! இப்போது அணி சேர்ந்து நிற்க வேண்டிய தலையாயப் பிரச்னை எது? விஜய்க்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் அவர் அமைதி காக்கிறார். இன்றைய தமிழகத்தில் புரட்சி என்பது, கணினிப் பெட்டிக்குள் அடங்கிவிடும் விஷயம்.

ஒரு மருத்துவமனை தவறான சிகிச்சை அளித்தாலோ, நம் உறவினருக்கே அது நிகழ்ந்தாலோ அடுத்தது என்ன செய்வது என்பது தெரியுமா? ஃபேஸ்புக்கில் சேரும் கூட்டத்தை ஒரு பிரச்னைக்காகப் பொதுவெளியில் கூட்ட முடியுமா? ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு விதிவிலக்கு.

இரண்டு ‘எஸ்’கள் இணைந்தும் இன்னும் தமிழக அவலங்கள் தீரவில்லை. டெங்குவைவிட டெல்லியின் உத்தரவுகளே அவர்களுக்கு வேதவாக்கு. ஒதுக்கப்பட்ட நிதிகள் ஒன்றுமில்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன. ஒரு மருத்துவராகக் கூடிய திறமைசாலியைத் தீக்குத் தின்னக் கொடுத்தாயிற்று. டி.என்.பி.எஸ்.சி தேர்வுக் கூடம், காற்றாடிக் கிடக்கிறது. வேலைவாய்ப்புகள் இல்லை; வருமானமில்லை; நல்ல கல்வியும் இல்லை. இத்தனை ‘இல்லைகள்’ இருந்தும் இறங்கிப் போராட நம்மிடம் துணிச்சலும் இல்லை என்பதுதான் ஆகப் பெரிய வேதனை.

விண்டோஸை விட்டு வெளியில் வாருங்கள்

மத, இன, மொழிகளுக்கு எதிரான போராட்டக் களங்களே அவற்றை வளர்க்கும் உரமாக, தீனியாக மாறிக்கொண்டிருப்பதில் சமூக வலைதளங்களுக்கு முக்கியப் பங்குண்டு. ‘‘நாங்க நாலு பேர் சேர்ந்து போய் ‘ஹார்ஷா’ திட்டிட்டு வந்துட்டோம்” என்கிற மனோநிலையை மட்டும்தான் வளர்த்துக்கொண்டிருக்கிறோம். அதற்குச் சரியான எடுத்துக்காட்டு தற்போது உலுக்கிக்கொண்டிருக்கும் கந்துவட்டித் தற்கொலை.

ஒருபக்கம் “கந்துவட்டியை வளரவிட்ட அரசு ஒழிக” என்கிற கோஷமும் இன்னொரு பக்கம் “இதைக்கூட படமெடுக்கும் வேசிகள்” எனப் பத்திரிகைத் துறையின் மீதான துவேஷமும் ‘‘பச்சைக் குழந்தையைக் கொளுத்திய இவனெல்லாம் ஒரு அப்பனா?” என இசக்கி மீதான ஆத்திரமும் கொதிப்பாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், கொஞ்சம் நேரம் உங்களுடைய செல்போனுக்கும் கணினிக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு யோசித்துப் பாருங்கள்.

மிக அவசரமான சூழ்நிலை என உங்களிடம் வந்து பண உதவி கேட்கும் நண்பருக்கு உங்களில் எத்தனைபேர் எதிர்கேள்வி கேட்காமல் கொடுத்து உதவியிருக்கிறீர்கள்... பிச்சையெடுப்பவர்களை ஆதி, அந்தமெல்லாம் ஆராயாமல் எத்தனை பேர் ஒரு இரண்டு ரூபாயைத் தட்டில் போட்டிருப்பீர்கள்... ரோட்டோரம் கந்தல் துணியுடன் படுத்திருக்கும் ஒருவருக்கு ஒரு சிறிய துண்டாவது வாங்கிக் கொடுத்திருப்பீர்களா... கந்துவட்டியைத் தொழிலாகச் செய்யும் அவர்கள் மட்டுமா கொலைகாரர்கள்? ஃபேஸ்புக்கில் கருத்துச் சொன்னால் கடமை முடிந்தது என நினைப்பவர்கள் அனைவருக்கும் அதில் பங்கிருப்பதாகவே பார்க்கிறேன்.

இதே இசக்கி, கடன் சுமை கழுத்தை நெரிக்க உறவுகள், நண்பர்கள், ஊர்க்காரர்கள் என எத்தனை பேரிடம் கையேந்தி நின்றிருப்பார் தெரியுமா? கூனிக் குறுகி வாழ்வதைவிட குடும்பத்துடன் போய்ச் சேர்வதே நல்லது என அவரை முடிவெடுக்கத் தூண்டியது யார்? “அந்தக் குழந்தைகள் என்ன பாவம் பண்ணிச்சு?” என்பவர்களுக்கு... அவர்கள் குழந்தைகளை விட்டுவிட்டு இறந்து போயிருந்தால் எத்தனை நாட்களுக்கு அந்தக் குழந்தைகள் உங்களுக்கு ஞாபகம் இருந்திருக்கும்? யாரோ நல்லது செய்வார்கள் என்று 100-க்கு 90 பேர் மீண்டும் நம் வேலைகளைப் பார்க்கப் போயிருப்போம். பெற்றோர்களின்றி அந்தக் குழந்தைகள் அநாதைகளாக நிற்க வைக்கப்பட்டிருப்பார்கள்.

கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு போய்விடுவதில்லை. கணினிக்குள் நுழைக்கப்பட்டிருக்கும் தலைகளை வெளியில் எடுங்கள். ட்ரோல்களும் கிண்டல்களும் கேலிகளும் சோறு போடப்போவதில்லை. போன உயிர்களைத் திருப்பித்தரப் போவதுமில்லை. 100 நாள்கள் களத்தில் போராடிய உழவர்களுக்குப் பதிலாகக் கிடைத்தது ஏமாற்றம்தான். நிழலைவிட்டு வெளியில் வந்து நிஜ உலகில் போராட்டக்  குணத்தைக் காட்டுங்கள். அதன் பின்னான விளைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் தொலைத் தொடர்பாக மட்டும் சோஷியல் மீடியாக்கள் இருந்துவிட்டுப் போகட்டும். வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து லைக்... ஷேர்... கமென்ட் மட்டுமல்ல. அன்பு என்பது ஹார்ட்டின் ஸ்மைலியில் மட்டுமே புதைந்து கிடப்பது கிடையாது. சக மனிதர்களை நேசிக்க, சக தோழமைகளுக்காகப் போராட, விண்டோஸை விட்டு வெளியில் வருதலே கட்டுடைத்தல்!

- பா.விஜயலட்சுமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!