Published:Updated:

அடுத்து என்ன? - எஸ்.செந்தில்குமார்

அடுத்து என்ன? - எஸ்.செந்தில்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
அடுத்து என்ன? - எஸ்.செந்தில்குமார்

“பூச்சிகள் ரகசியமாக சொல்வதைத்தான் எழுதுகிறேன்!”படம்: கே.குணசீலன்

‘அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றிஎடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்பருவத்தால் அன்றிப் பழா’    

அடுத்து என்ன? - எஸ்.செந்தில்குமார்

இந்த மூதுரை பாடல் எனக்காக மட்டுமல்ல, தமிழில் நாவல் எழுதுகிற ஒவ்வொரு நாவலாசிரியனுக்காகவும் எழுதப்பட்டது என்றுதான் நினைக்கிறேன். 

 ‘ஜீ.சௌந்தரராஜனின் கதை’, ‘முறிமருந்து’, ‘நீங்கள் நான் மற்றும் மரணம்’, ‘காலகண்டம்’, ‘மருக்கை’ ஆகிய ஐந்து நாவல்கள் எழுதிய காலத்திற்குப் பின்னால் மறைந்திருக்கிற கதை, நாவலைவிட சுவாரஸ்யமானது. இந்த நாவல்கள் அச்சாகிப் புத்தகமாக வந்தபோது ஏற்பட்ட கசந்த அனுபவங்கள், புதிதாக நாவலை எழுதவிடாமல் செய்கின்றன. ஆனால், எழுத்து என்கிற பிசாசு ஒருமுறை பிடித்துக்கொண்டால், சாவு வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். இடையில் உதறிவிட்டு ஓடிப்போய் ஒளிந்துகொள்ள முடியாது. காதலியைக் கைவிட்டுவிட்டு, வேறொருத்தியைத் திருமணம் செய்து நிம்மதியாக வாழ்கிற நவீன வாழ்க்கையைப்போல, எழுத்தை விட்டுவிட்டு வேறொரு வாழ்க்கையை வாழ முடியாது என்று நினைக்கிறேன்.

100 வாசக நண்பர்களை மட்டும் நம்பி 1,000 பக்கங்கள் நாவலை எழுதும் யோசனையைப் பலமுறை கைவிட்டிருக்கிறேன். ‘காலகண்டம்’ நாவலின் அச்சிடப்படாத பாதி பக்கங்கள் இன்னமும் அலமாரியில் உறங்கிக்கொண்டிருக்கின்றன. சிறுதெய்வங்களின் முன் அமர்ந்து பிரார்த்திப்பதும், எனது நாவலின் கதாபாத்திரங்களின் முன் அமர்ந்து பிரார்த்திப்பதும் ஒன்றுதான். ஏன் நான் கடந்தகாலங்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறேன்; கடந்தகாலத்துக்கும் எனக்கும் என்ன தொடர்பு; ஏன் நான் கடந்தகாலத்தைத் தூக்கிக்கொண்டு அலைய வேண்டும்; கடந்தகாலத்தை எழுதாமல் நான் எழுத்தாளனாக இருக்க முடியாதா?’ என்று எனக்குள் நூற்றுக்கணக்கான நாவல் குறித்த கேள்விகள் உண்டு. கேள்விகளையும் பதில்களையும் எனது கதாபாத்திரங்களிடமே கேட்கிறேன். அவர்களே பதில் சொல்கிறார்கள்; அவர்களே திரும்பவும் ஏதாவது கேள்விகளை என்னிடம் கேட்கிறார்கள்.

 ‘உலகின் கடைசி வீட்டோருக்கான கடிதம்’, ‘பகலில் மறையும் வீடு’ ஆகிய இரண்டு சிறுகதைகள் பிரசுரமான காலத்தில், அக்கதைகளின் நீட்சியாக நாவல் ஒன்றை எழுதினேன். 2014-ம் ஆண்டு இறுதியில் 48 பக்கங்கள் கொண்ட அத்தியாயம் ஒன்றை எழுதி, எழுத்தாளரும் நண்பருமான பா.வெங்கடேசனிடம் வாசிக்கக் கொடுத்தேன். “நன்றாக வந்துள்ளது, தொடர்ந்து எழுதுங்கள்” என்றார். ஆயினும் அப்போதையச் சூழல்களால் அந்த நாவலை எழுத முடியாமல் போய்விட்டது.   

 நாவல் எழுதுவது என்பது என்னளவில் துரதிருஷ்டமும் அதிர்ஷ்டமும் கலந்த ஒரு பயணம் என்று சொல்வேன். ஓரான் பாமூக் அப்பயணத்தைப் பொறுமையாகக் கடந்துவந்துள்ளதாகத் தனது பல பேட்டிகளில் குறிப்பிடுகிறார். மாரத்தான் ஓட்டப் பந்தயமும் நாவல் எழுதுவதும் ஒன்றுதான் என்று ஹாருகி முரகாமி சொல்கிறார். தமிழ்ச்சூழலில், நான்குமணி நேரம் வீட்டில் அமர்ந்து நாவல் எழுத வேண்டுமென்றால், 20 மணி நேரம் குமாஸ்தாவாக ஏதேனும் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும். உப்பு, புளி, மிளகாய், அரிசி, பருப்புக்காக ஏதேனுமொரு தொழில் எழுத்தாளனுக்குத் தேவைப்படுகிறது. அதைச் செய்துகொண்டுதான் நாவல் எழுத வேண்டியிருக்கிறது. நாவல் எழுதும் கலையைவிட, நாவலுக்காகவே வாழும் கலைஞனின் வாழ்க்கை மாபெரும் கலை என்று சொல்வேன். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அடுத்து என்ன? - எஸ்.செந்தில்குமார்  நான் அந்த வாழ்க்கையை வாழ்கிறேனா என்று எனக்குத் தெரியாது. ஆனால், எனது நாவலின் கதாமனிதர்கள் அந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்று உறுதியாகச் சொல்வேன். எனது வீட்டுக்கு அருகில் காய்கறி மார்க்கெட் இருக்கிறது.அதற்கு ‘உப்புக்கிணறு மார்க்கெட்’ என்றும் ‘கழுதை மார்க்கெட்’ என்றும் பெயர். இந்தப் பெயர் எப்படி உருவானது என்று ஒருவரிடம் கேட்டேன், சில சம்பவங்களைச் சொன்னார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது, ‘காலகண்டம்’ எழுதிப் புத்தகமாக வெளிவந்த 2015-ம் ஆண்டு முதல், ‘கழுதை’ என்கிற சொல்லுக்குப் பின்னால் அலையத் தொடங்கிய பயணம் இப்போது வரை தொடர்கிறது. இடையில் ‘மருக்கை’ என்கிற 200 பக்க நாவல் ஒன்றை எழுதி முடித்தேன். ‘மருக்கை’ ஆடுகளையும் ஆடு வளர்க்கும் மனிதர்களையும் பற்றிப் பேசுகிறது.

கழுதை மேய்ப்பவர் களுடனும் கழுதைக்கு வைத்தியம் செய்கிறவர்களுடனுமான உரையாடல்கள் சுவாரஸ்யமானவை. கழுதை  ‘செமை’க்காக அவர்களது பயணமும் அப்பயணத் திற்கான பாதைகளும் மிகவும் கொடூரமானவை. அக்கொடூரத்தைத்தான் நாவலாக எழுதிக்கொண்டிருக்கிறேன். கழுதையின் குதம் சிவப்பாக அழகிய பழுத்த பழத்தைப் போலிருக்கும். அது விரிந்து மூடும் தருணம் பூ மலர்ந்து விரிந்து திரும்பவும் மொட்டாகத் தன்னைச் சுருக்கிக்கொள்வது போலிருக்கும். கழுதைகளை ஒருமுறை நாவலில் பேசவைத்துவிட  வேண்டுமென விரும்புகிறேன். கழுதையும் அதைத்தான் விரும்புகிறது. ஆனால், யதார்த்தத்தில் மனிதனே தனது எஜமானர்களிடம் பேச முடியாமல் ஊமையாக இருக்கும்போது கழுதைகள் எப்படிப் பேசும்? கழுதைகள் பேசினால் முதலாளித்துவத்துக்கு எதிரான குற்றமில்லையா?

 1900-ம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்கும் இந்த நாவல் 1980-களின் பிற்பகுதியில் முடிகிறது. நாவலின் பல பகுதிகளைத் தரவுகளுக்காகவும் மொழிக்காகவும் எழுதாமல் நிறுத்திவைத்திருக்கிறேன். எனது கதாமனிதர்கள் எழுதும்போது எனக்குச் சொந்தமானவர்கள். எனக்கு மட்டும் அவர்கள் உறவினர்கள். அவர்களுடன் நீண்ட நேரம் உறவாட முடியும். அவர்களைப் பகைத்துக் கொள்ள முடியும். அன்பைப் பொழிய முடியும். புறவுலகின் கோபத்தை அவர்களிடம் காட்டினால் அவர்கள் பயந்துபோய் நாவலுக்குள் ஒளிந்துகொள்வார்கள். பிறகு அவர்களைத் தேடிச்செல்ல வேண்டும்.

 இந்த நாவல் எழுதுவதற்காக மலைப்பாதைகளில் சிலமுறைப் பயணம் செய்திருக்கிறேன். கேரள-தமிழக எல்லையோர மலைக்கிராமங்களின் மனிதர்களின் வாழ்க்கையைப் பார்த்ததில், நாவல் எழுதுவதை நிறுத்திவிட்டு அவர்களுடன் அங்கேயே தங்கிவிடலாமா என்றுகூட தடுமாற்ற மடைந்திருக்கிறேன். கருப்பனின் பெட்டியை வெற்றிலைப் போட்டு எடுக்கும் ஜனங்கள்தான் இவர்கள் என்றபோதிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருப்பஞ்சாமியாக நிற்கிறார்கள். ஒரு சிறுதெய்வம் மற்றொரு சிறுதெய்வத்திற்குப் படையலிடுகிறது. பூஜிக்கிறது. வேண்டுதல் செய்கிறது. வேண்டுதலை நிறைவேற்றுகிறது.

 கிளைப்புனைவாக நாவலுக்குள் ஏராளமான சிறுகதைகள் உண்டு. குட்டிக் கதைகளை ஞாபகப்படுத்தித் திருப்பிச்சொல்லும் என் மகள் மஞ்சுளா காதம்பரிக்கு நன்றி. கழுதைகளின் வால் மட்டியையும் நெஞ்சுக்கவுறையும் அவிழ்த்துப்போட்டு ஏகாந்தமான சின்ன ஓடைக்கு அருகில் என் கதாமனிதர்கள் ஓய்ந்து கிடக்கிறார்கள். சின்ன ஓடையில்தான் வனமோகினி ஒருத்தி தனது கூந்தலை விரித்துப்போட்டு கர்ப்பம் தரித்தவளைப்போல மெதுநடையில் நடந்து செல்கிறாள் என்பது அவர்களுக்குத் தெரியும். கழுதைகளைப் பார்த்தால் பேயும் பிசாசும் பூதமும் ஓடிப்போய்விடும் என்று தன் முன்னோர்கள் சொன்ன கதைதான் அவர்களுக்கு நிம்மதியான தூக்கத்தைத் தருகிறது.

  வளைந்த மலைப்பாதைகளில் நடந்து செல்லும் கழுதைகளும், கழுதைகளைத் தொடரும் கழுதைக்காரர்களும், பாதையின் இருபுறமும் வளர்ந்திருக்கும் குத்துச்செடிகளும் துத்திச்செடிகளும் தைவாழைச்செடிகளும் நாவல் முழுக்கப் பரவியிருப்பதையும், அதற்குள் ரகசியமாகப் பூச்சிகள் சத்தமிட்டுத் தன் வாழ்வையும் அவர்களது வாழ்வையும் சொல்வதைத்தான் எழுதுகிறேன். எழுதியிருக்கிறேன். கூடவே, பாதையில் தவறி விழுந்து அகாலத்தில் இறந்தவர்களின் ஓலத்தையும், கனவையும், ஆசை நிராசைகளையும், கோபதாபங்களையும். இலைக்குள்ளிருக்கும் நரம்பாகக் கதைக்குள் மறைந்திருக்கும் பெண்கள் பலரும் கதைவெளிக்குள் ஓடி மறைந்து அல்லாடுகிறார்கள். யாரும் பார்க்காத வேளையில் மரத்திலிருக்கும் இலைகள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்வதைப் போலத்தான் அவர்களது பேச்சும், சிரிப்பும், அழுகையும், கேலியும். இந்தக் கதையில் நடமாடும் ரத்தமும் சதையுமான கதாமனிதர்கள் பேய்களாக, பிசாசுகளாக, சிறுதெய்வங்களாக, வனமோகினிகளாகத் திரிவதோடுப் பேய்களையும் பிசாசுகளையும் சிறுதெய்வங்களையும் வனமோகினிகளையும் கண்டு அஞ்சி ஓடுபவர்களாகவும் இருக்கிறார்கள்.