Published:Updated:

ஸ்துதி - சயந்தன்

ஸ்துதி - சயந்தன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்துதி - சயந்தன்

ஓவியம்: ரமணன்

லங்கைப் பிரதமரின் வாசஸ்தலமான அலரி மாளிகைக்குச் சற்றுத் தொலைவிலிருக்கின்ற ‘சிலோன் ஸ்பா’ என்ற நட்சத்திர மசாஜ் விடுதியின் வாசற்படியில் இந்தக் கதை தொடங்குவதால், இடையில் குண்டு வெடிப்பு எதுவும் நிகழும் என்று நீங்கள் கருதத் தேவையில்லை.   

ஸ்துதி - சயந்தன்

 நான் விடுதியின் வாசலோடு தரித்து நின்ற ஓட்டோவிற்குள் ஒரு குற்றவாளிக் கூண்டுக்குள் இருப்பதைப்போலக் காத்திருந் தேன். விடுதியின் கண்ணாடிகளாலான கதவினைத் தள்ளித் திறந்துகொண்டு சற்று முன்னர் உள்ளே சென்றிருந்த ஓட்டோக் காரன், எந்த நேரத்திலும் வந்து என்னை அழைத்துச் செல்வான். இவ்வாறான காரியங்களுக்கு ஓட்டோக்காரர்களை அணுகலாம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குத் தெரியவந்தது.

 அன்றைக்கு நான் பம்பலப்பிட்டியிலிருந்து கொள்ளுப்பிட்டிக்கு ஓட்டோவில் பயணித்தபோது, கறுப்பு நிற டெனிம் ஜீன்ஸும் கறுப்புநிற ரிசேர்ட்டும் அணிந்திருந்ததாக நினைவு. என்னுடைய அக்காலத்துத் தோற்றங்களில் வெறும் இருபது, இருபத்
தொரு வயதுப் பையன் என்பதைக் கண்டு பிடிப்பது சற்றுச் சிரமமாயிருந்ததாகவே பேசிக்கொள்கிறார்கள் அல்லது அந்த ஓட்டோக்காரனுக்கு இருபது, இருபத்தொரு வயதெல்லாம் ஒரு பொருட்டே இல்லா
மலுமிருந்திருக்கலாம். அவன் இரண்டொரு தடவை பின்பக்கப் பார்வைக் கண்ணாடிக்குள்ளாக என்னுடைய முகத்தைப் பார்த்தான். பிறகு, “பொஸ், நல்ல குட்டிகள் இருக்கு. போகப் போறீங்களா..” என்று வெடுக் என்று கேட்டான். பதறிப்போனேன். ‘இப்படி டக்கென்று கேட்டால்..?’ ஆயினும், இன்னதெனத் துலக்கமில்லாத ஏதோவொரு காரணத்தினால், ‘இல்லை போவதில்லை’ என்ற இறுதி முடிவை இரண்டொரு கணங்களிலேயே எடுத்திருந்தேன். அதை சட்டென்று அறிவித்துவிடவில்லை. அதுபற்றி துருவித் துருவி அறிய விரும்பியதில் ஒருவிதக் கிளர்ச்சியிருந்தது.

  “அவங்க எங்கையிருக்கிறாங்க...”

“நீங்க ம் என்று சொல்லுங்க பொஸ், கூட்டிட்டுப் போறேன்...”

 “ரஷ்யன்காரிகளா..?”

“இல்லை பொஸ், சிங்களக் குட்டிகள்.”

“ப்ச்.. பொலிஸ் பிடிக்கும். வேணாம்.”

“அதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை பொஸ். முழுப் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம்.”

 “எத்தனை வயசிருக்கும்..?”

“நீங்க விரும்பிற வயசில... இருபதென்றால் இருபது, பதினெட்டென்றால் பதினெட்டு, இல்லை... முப்பதுதான் வேணுமென்றால் முப்பது. நீங்க சொல்லுங்க.”

நான் விலுக் என்று தலையுயர்த்தினேன். பிறகு எச்சிலை விழுங்கிக்கொண்டு அமைதியாகினேன். ஓட்டோ கொள்ளுப்பிட்டியை நெருங்கிக்கொண்டிருந்தது. “இல்லை, வேண்டாம். இதில நிப்பாட்டுங்க, நான் இறங்கிறன்.”

“ஏன் வேணாம் பொஸ்.”

“ஏனென்றால், எனக்கு சிங்களம் தெரியாது.”

ஓட்டோக்காரன் தலையிலடித்துக் கொண்டான். ஆனால், அந்தச் சம்பவம்  ஓர் அருட்டலாக நினைவுகளில் தேங்கிய படியே கிடந்தது. அன்றைக்கு அவன் கேட்டபோது போயிருந்தால்... என்ற கற்பனை தீண்டும். ஒரு பூனையைப்போல பின்னிரவுகளில் படுக்கைக்கும் கழிவறைக்கும் நடந்திருக்கின்றேன். “இருபதென்றால் இருபது... பதினெட்டென்றால் பதினெட்டு...” குரல் பின்தொடர்ந்து அலைக்கழிக்கும்.

 இன்றைக்கு மூன்று வருடங்களுக்குப் பிறகு, சிலோன் ஸ்பா விடுதிக்கு முன்னால் காத்திருக்கின்ற துணிச்சல் அன்றைக்கு வாய்த்திருக்கவில்லை. ஒருவேளை வயது அதற்கொரு காரணமாயிருக்கலாம். அதற்குச் சாத்தியமுண்டு. பின்வாங்கும் இயல்பும், தனித்திருப்பதுவும், அகவயமாகச் சுருண்டிருந்ததுமான என்னுடைய மனநிலை சற்று முன்னகர்ந்திருந்தது. புதிய பணியிடத்துச் சூழலில் அதைத் தெளிவாக உணர்ந்தேன்.

கொள்ளுப்பிட்டியில் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு அருகாக ஜெர்மன் துாதுவராலயத்திற்கு நேர் முன்னாக உயர்ந்திருந்த கட்டடத்தில் நிறுவனத்தின் பெயரும், கீழே ‘எதிர்காலம் இன்றே’ என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்த அலுவலகத்தில் முதன்முதலாகப் பணி கிடைத்தது. என்னைச் சுற்றிலும் முற்றிலும் சிங்கள நண்பர்களாயிருந்தார்கள். ஆயினும் மேனக என்ற என்னைவிடவும் மூன்று வயதுகளே அகதிகமாயிருந்த மேலதிகாரிப் பெண் என்னை வைத்துக்கொண்டு வேறெ
வருடனும் சிங்களத்தில் பேசியதில்லை. சற்றுக் கடுமையாகத் திட்ட வேண்டியிருந் தால்கூட, தன்னுடைய சிற்றறைக்குள் பவ்வியமாக அழைத்தாள். அவளுடைய திட்டுக்களை ஒரு பிடித்த பாடலைக் கேட்பதைப்போல செவிமடுத்தேன்.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஸ்துதி - சயந்தன்

சந்தன என்கிற என் வயதுக்காரன், வெளியே விருந்துக் கொண்டாட்டங்களுக்குச் சென்று திரும்பும்போதெல்லாம், வீதிச் சோதனைச் சாவடிகளில் எனது அடையாள அட்டையைச் சந்தேகத்தோடு பார்க்கும் இராணுவக்காரனிடம் எதையோ சிரித்துப் பேசி அதை வாங்கித் தருவான்.

 சஜீனி, அவள் பிரியாவிடை பெற்ற சமயத்தில் நம் எல்லோருடையதுமான ஒரு பரிசுப்பொருளை என்னுடைய கையிலிருந்து பெற வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கேட்டு வாங்கிக்கொண்டாள். அவள்தான் முதன்முதலில் தாய்மை, காதல் முதலான எதுவுமின்றி என்னைக் கட்டியணைத்த முதற்பெண் அல்லது இதிலேதேனும் ஒன்று இருந்திருக்கவும் கூடும். ஏனெனில், அது கதகதப்பான அணைப்பாகவிருந்தது.

 சரத்பொன்சேகா மீது குண்டு தாக்குதல் நடைபெற்ற அன்று, தன்னுடைய காரிலேயே அழைத்துச் சென்று வீட்டில் இறக்கிய மேனக, வழியில் பகிர்ந்துகொண்ட பகிடிதான் ஒரு பெண் முதன்முதலில் என்னோடு பகிர்ந்துகொண்ட பாலியல் பகிடி. எப்போதும் என்னுடைய முகத்திலிருக்கும் சூக்குமம் நிறைந்த மர்மப் புன்னகை அன்றைக்குத்தான் உடைந்து பெரும் சிரிப்பானது. பிரேமதாசாவின் நாக்கை பிளேடு துண்டித்த பகிடியொன்றை இரண்டொரு நாள்கள் கழித்து அவளுக்குச் சொன்னேன். அது தனக்கு முன்னரேயே தெரியுமென்றும் ஆனால், அதில் ஜெயவர்த்தனவின் நாக்கே துண்டிக்கப்பட்டதென்றும் சொல்லிச் சிரித்தாள்.

 எனக்கு மேனகமீது ஒருவித ஈர்ப்பிருந்ததாக ஒருநாள் தோன்றிற்று. அப்படியெதுவுமில்லை என்று இன்னொரு நாள் தோன்றிற்று. இவையெல்லாம் சர்வ சாதாரணமான எண்ணங்கள் என்பதை அவளும் உறுதிப்படுத்தினாள். ஒருநாள் மாலை, தேனீர் அருந்தியவாறே “ஹேய்.. எனக்கு உன்மீது காதலென்று எதுவும் இல்லை. உண்மையில் நான் இன்னொரு வனைத் தீவிரமாகக் காதலிக்கவும் செய்கிறேன். ஆனாலும், அன்றைக்குச் சஜீனி உன்னைக் கட்டியணைத்தபோது எனக்குப் பொறாமையாக இருந்தது. ஏன்?” என்று குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். எனக்குத் தேனீர் புரைக்கேறியது. சிரித்தேன். வழமைபோல அதில் கவிந்திருக்கிற வெட்கம் இல்லாத முதல் சிரிப்பு. “நானும் உங்களைக் காதலிக்கவில்லை. ஆனாலும், நீங்கள் யாரையோ காதலிக்கிறீர்கள் என்று சொல்லும்போது எனக்கு ஏன் பொறாமையாகவிருக்கிறது?” மேனக சிரித்துக்கொண்டேயிருந்தாள்.

 இன்றைக்குச் சனிக்கிழமை, அலுவலக நேரத்தின் பிறகு முகாமைத்துவப் பிரிவில் யாரோ ஒருத்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம் கீழ்த்தளத்தில் நடந்தது. இராஜ்ஜின் அஹங்கார நகரே என்ற சிங்களப் பாடல் காதைக் கிழிக்கிற மாதிரி ஒலித்துக்கொண்டிருந்தபோது, மேனக தன்னுடைய காதலனுடன் நடனமாடிக் கொண்டிருந்தாள். கூச்சலாக இருந்தது. ஒதுங்கி நின்றேன். கொண்டாட்டத்தின் பிறகு நானும் சந்தனவும் ஒரு மதுபான விடுதிக்குச் சென்றோம். அவனே தயங்கிய என்னை வற்புறுத்தி அழைத்தும் சென்றான். நான் பியர் அருந்தத் தொடங்கிச் சில காலங்களே ஆகியிருந்ததனால், கசப்பு மருந்தை அருந்துவதைப்போலவே வாயைக் கோணிக்கொண்டிருந்தேன். “மச்சாங் இன்னொரு கிளாஸ்” என்று தொடர்ந்து வருவித்துக்கொண்டேயிருந்தான். ஒரு தொடர்ச்சியில்லாமல் துண்டு துண்டாக நிறைய பேசினோம். எல்லாமும், பெண், பெண் உடல், காமம் என்ற பரப்பிற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தது. “யாராவது பெண்ணைப் புணர்ந்திருக்கிறாயா” என்று கேட்டான். நான் பதிலேதுமின்றி சந்தனவின் கண்களை வெறித்துச் சிரிக்கத் தொடங்கியபோது “போதும்” என்று என்னுடைய கிளாஸிற்குள் பியரை ஊற்றுவதை அவனாகவே நிறுத்தினான். மிதப்பான நடையுடன் வெளியேறினோம்.

 “ஒரு ஓட்டோ பிடித்துவிடு சந்தன. நான் போய்க்கொள்கிறேன்” நான் அர்த்தமற்றுச் சிரித்தவாறே கேட்டேன்.

“நிதானமாக இருக்கிறாயா...”

“நிறைய...”

“சரி...”

எதிர்ப்பட்ட ஓட்டோ ஒன்றை மறித்து ஏறிக்கொண்டேன். கண்கள் நித்திரையில் துஞ்சினவா, போதையா என்று தெரியவில்லை. விழிகள் உட்புறமாகத் திரும்பி மண்டை ஓட்டுக்குள் ஒரு குட்டித்திரையில் காண்பதைப்போல காட்சிகள் மாறி மாறித் தோன்றின. மேனக காதலனுடன் நடனமாடிக்கொண்டிருந்தாள். மேனக, ஒரு சிறிய தவறுக்கு என்னைத் திட்டித் தீர்த்தாள். மேனக, நானிருக்கும்போதே, காதலனுடன் சிங்களத்தில் பேசினாள். மேனக காதலனின் கைகளை இறுகப் பற்றியிருந்தாள். நான், “உங்களுக்குத் தெரிந்த விலை உயர்ந்த மசாஜ் சென்ரர் ஏதாவது இருக்கிறதா” என்று உரத்த தொனியில் ஓட்டோக்காரனிடம் வினவினேன்.    

ஸ்துதி - சயந்தன்சிலோன் ஸ்பாவின் கண்ணாடிக் கதவினைத் திறந்துகொண்டு வெளியேறிய ஓட்டோக்காரன் ஒரு துயரச் செய்தியைப் பகிரும் முகபாவத்தோடு, “இங்கே வருவதென்றால் நேர காலத்தோடு பதிவுசெய்ய வேண்டுமாம். இப்போது இடமில்லை என்கிறார்கள்” என்றான்.

 “ஓ...” குரலின் சரிவைச் சுதாகரித்து நிமிர்த்திக் கொண்டேன். “பரவாயில்லை. நீங்கள் என்னுடைய வீட்டிற்குச் செல்லுங்கள்.”

“சரி”  ஓட்டோ உயிர்த்துச் சில மீற்றர்களே சென்றிருக்கும்.

“உங்களுக்குத் தெரிந்த வேறு மசாஜ் விடுதிகள் இருக்கின்றனவா..?”

“ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். இம்மாதிரியான பெரிய விடுதிகளில் எப்போதும் முன்பதிவு செய்துவிட்டுத்தான் வர வேண்டும். மேலும், இம்மாதிரிப் பெரிய விடுதிகளில் உண்மையிலேயே மசாஜ் மட்டும்தான் செய்வார்கள். வேறு சிறிய விடுதிகளுக்குப் போவோமா...”

 “சரி...” - ஓட்டோ நீண்ட தூரம் ஓடி ஒரு தெரு முகப்பில் நின்றது. “இருங்கள், நான் போய்க் கேட்டு வருகிறேன்.”  ஓட்டோக்காரன் இறங்கினான்.

“உனக்குத் தெரிந்த இடமா”

“இல்லை, ஆனால் உங்களை நான் அறிமுகப்படுத்தினால், எனக்குக் கொஞ்சம் கொமிஷன் கிடைக்கும். உங்களுக்கொன்றும் ஆட்சேபனை இல்லையே.”

“இல்லை.” அவன் திரும்பி நடக்கத் தொடங்கியபோது, “இங்கும் இல்லை யென்றால் பரவாயில்லை. நாம் வீட்டுக்குப் போவோம்” என்று சொன்னேன். சுற்றி நோட்டமிட்டேன். நேரத்தைப் பார்த்தேன். இரவு பதினொரு மணியாகியிருந்தது. தெருவில் நடமாட்டங்கள் குறைந்திருந்தன. தனிமையுணர்வாயிருந்தது. ஓட்டோக்காரனை அழைத்து வீட்டுக்குச் சென்றுவிடலாமென்று தோன்றியது. அப்போது அவன் சிரித்த முகத்துடன் திரும்பினான். “வீட்டுக்குச் செல்வோம்” என்றேன்.
அவன், “வாருங்கள்...” என்றான். 

மெள்ள இறங்கி அவனைப் பின்தொடர்ந் தேன். மிக ஒடுங்கி மேலேறிச் செல்லும் படிகளில் நடந்தோம். இரண்டாவது மாடியில் ஒரு வீட்டின் முன்வாசலைப் போலிருந்த கதவில் தட்டினான். கதவில் மனித உடலின் பாகங்களும், மசாஜ்ஜின் வகைகளும் அவற்றுக்கான பிரத்தியேகப் பெயர்களும் ஒட்டப்பட்டிருந்தன. என்னை சிரத்தையெடுத்து இயல்பாக்கிக்கொண்டு நுழைந்தேன். ஒரு மருத்துவ நிலையத்தின் வரவேற்பறை போலிருந்தது. வரவேற்பு மேசையிலிருந்த பெண் பசையாக அப்பிய சிவப்புச் சாய உதடுகளை விரித்துச் சிரித்தாள். நான் கதிரையொன்றில் அமர்ந்து கொண்டேன். அப்பொழுது இதயத்துடிப்புகள் எண்ணிக் கணக்கிடக் கூடியனவாக இருந்தன. அவள் என்னைக் கண்களால் சுட்டி, எதையோ ஓட்டோக்
காரனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘இவர் பொலிஸ் துறையைச் சேர்ந்தவர் இல்லைதானே’ என்று கேட்கிறாள்போல என்று நினைத்துக்கொண்டேன். பிறகு அவள் என்னை அழைத்தாள். ஓட்டோக்காரன் விடைபெற்றபோது என்னைத் தனியே விட்டுவிட்டுப்போகின்ற அந்தரமாயிருந்தது. அவன் செல்லும் திசையையே பார்த்தபடியிருந்தேன். அவள் ஒரு பதிவுப் புத்தகத்தை விரித்து “பெயர் என்ன?” என்றாள். 

“சசீவன்” என்றேன். பிறகு அவனிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டேன். அடையாள அட்டையைக்        கேட்டுவிடுவாளோ என்று தோன்றியது. 

“2,000 ரூபாய்” என்றாள். எடுத்துக் கொடுத்தேன். ஒருமுறை உள்ளே சென்று வந்தவள், “போய் ஒருவரைத் தெரிவு செய்” என்று வழியைக் காட்டினாள். என் கால்கள் மெள்ளத் தள்ளாடுவதை உணர்ந்தேன். தண்ணீர் விறாய்த்தது. எத்தனை தடவைக்கு எச்சிலை விழுங்குவது..? அவளுக்குத் தலையாட்டிவிட்டு நுழைந்தேன். வேண்டுமென்றே குறைத்துக் கசியவிடப் பட்ட வெளிச்ச அறைக்குள் எத்தனை பெண்கள் இருந்தார்கள் என்பதை இன்றுவரைக்கும் நினைவுப்படுத்த முடிய
வில்லை. ஏழு பேராவது இருந்திருக்கக்கூடும். வாசலில் தொங்கிய திரைச்சீலையை விலக்கி நான் நுழைந்த கணத்தில் என் பார்வை எவளில் முதலில் படிந்ததோ அவள் மூக்குத்தி அணிந்திருந்தாள். அவளை நோக்கிக் கையை நீட்டினேன்.

தனித்தனிக் கூடுகளைப் போன்ற ஒடுங்கிய, திரைச்சீலைகளால் வாசல் அடைக்கப்பட்ட அறைகளைத் தாண்டி மூக்குத்திக்காரிக்குப் பின்னால் நடந்தேன். மஞ்சள் வண்ண ரீ சேர்ட் அணிந்திருந்தாள். அங்கிருந்த பெண்கள் எல்லோருமே ஒரு சீருடையைப்போல அதை அணிந்திருந்தார்கள். கறுப்பு நிற டெனிம் ஜீன்ஸ். இவள் டெனிமின் பின் பொக்கற்றில் தன்னுடைய கைப்பேசியைச் செருகியிருந்தாள். சொனி எரிக்சன் மொடல்.

 ஒடுங்கிய கூடத்திற்குள் நுழைந்து அவளைத் தாண்டி மிகக் கிட்டத்தில் முகத்தைப் பார்த்தேன். ஒரு படலம்போல பவுடர் பூச்சிட்டிருந்தாள். அவளுடையது எவரையும் நினைவுபடுத்தாத தனித்துவ முகம். மை பூச்சு எதுவுமின்றியிருந்த கண்கள் மிகக் கூர்மையானவையாக இருந்தன. ம்... அவளுக்கு முகத்தினின்றும் விழிகளைத் தாழ்த்தவைக்கும் முனைப்புள்ள மார்புகளிருந்தன, எனக்கு மிக அருகில்.

 “தண்ணீர் கிடைக்குமா..?” தாகத்தைச் சைகையினால் கேட்டேன். வெளியேறி, சற்று நிமிடத்தில் பளிச்சிட்ட கண்ணாடிக் குவளையில் நீர் வார்த்து வந்தாள். முழுவதையும் குடித்து முடித்தேன். அவளுக்குத் தாய்மொழி என்பதால் சிங்களம் சரளமாகத் தெரிந்திருந்தது. ஆங்கிலத்தை உடைத்து உடைத்துப் பேசினாள்.

“நீ எங்கிருந்து வருகிறாய்?”
 
“இந்தியாவிலிருந்து” பொய் சொன்னேன்.

பிறகு ஏனோ துணுக்குற்று, “அங்கே பெங்களுர் தெரியுமா... அங்கேயிருந்து” என்றேன்.  நானொரு தமிழன் இல்லையென்று உணர்த்துவதைத் தமிழுக்குச் செய்கின்ற ஒரு கடமையைப்போலச் செய்தேன்.

  அவள் உதட்டைப் பிதுக்கி, “எனக்கு இந்தியாவைத் தெரியும். போன வாரமும் ஒருவன் வந்தான்.”

 “இப்போது  நான் என்ன செய்ய வேண்டும்..?”

 “ஆடைகளைக் களைந்துவிட்டு இதில் குப்புறப் படு.” வெற்றுக்குரல். அவள் நேரத்தைப் பார்த்தாள். “பத்து இருபதுக்கு ஆரம்பிக்கிறேன். பதினொன்று இருபதுக்கு முடியும்.” மூன்று தைலப் போத்தல்களைக் கையில் எடுத்தாள். நான் திரும்பி நின்று ஆடை களைந்தேன். ஆஸ்பத்திரிகளில் பயன்படும் ‘நோயாளி காவி’ போலிருந்த ஒராள் அளவே குறுகியிருந்த கட்டிலில் கைகளை மேற்குவித்துக் கவிழ்ந்தபோது ‘அரோகரா’ என்று புன்னகைத்துக்
கொண்டேன். வெண்ணிறத் துணியொன்றை இடுப்பில் போர்த்தியவள் என்னுடைய வலது கணுக்காலை இரு கைகளாலும் அழுத்தத் தொடங்கினாள். “முதல் இருபது நிமிடம் மசாஜ் செய்வோம். பிறகு எக்ஸ்ரா சேர்விஸ்...”

முதலிரண்டு நிமிடங்களிலேயே அவள் ஒரு பயிற்றுவிக்கப்பட்ட உடல் பிடிப்பாளர் அல்ல என்று தெரிந்துவிட்டது. கறுவா மணத்திலிருந்த தைலத்தைக் கைகளில் கொட்டி அப்படியும் இப்படியுமாகக் காற்தசையை அழுத்தியபடியிருந்தவளுக்கு முதல் 20 நிமிடங்களைப் போக்குவதுதான் இலக்காக இருக்கக்கூடும். ஒருவித சலிப்பினால் ஆளப்பட்டேன். “நான் திரும்பிப் படுக்கலாமா...”

“ஓ நிச்சயமாக...” திரும்பிக்கொண்டேன். முழங்காலுக்கு அருகாக நின்று கால்களை நீவத் தொடங்கினாள். வெண்ணிறத் துணிக்கு கீழாக விரல்களை ஒரு தவறுதலான செயல்போல அவள் நகர்த்துவாள் என்று எதிர்பார்த்தபடி சற்று நேரம் காத்திருந்தேன். அவள் இரண்டொரு தடவை நேரத்தைப் பார்த்தாள். நான் அவளுடைய முகத்தைப் பார்த்தேன். மூக்குத்தி. மங்கலாகப் பளிச்சிடும் கல் பதித்த மூக்குத்தி.

“மூக்குத்தி உனக்கு அழகாயிருக்கிறது. நீயொரு அழகான பெண்” என்றபோது, அவள் ‘க்ளுக்’ என்று சிரித்தாள். அப்போது அவளுடைய முகபாவம் ஒரு விளையாட்டுப் பெண்ணுடையதைப்போல தோன்றி மறைந்தது.

சுட்டுவிரலால் மூக்குத்தியைத் தொட்டு “அது பொட்டு” என்று சிரித்தாள். பொட்டு என்பதைச் சிங்களத்திலும் பொட்டு என்றுதான் சொல்வார்கள் என்று தெரிந்தது. அவள் தொட்டபோது மூக்குத்திப் பொட்டு உதிர்ந்து விழுந்தது.

நான் “அச்சச்சோ” என்றேன். 

“இன்றுதான் முதன்முதலாக மூக்குத்திப் பொட்டை அணிந்தேன். நீ அழகாயிருந்தது என்றாய். சந்தோசமாயிருக்கிறது” அவளுடைய கைகள் தொடர்ந்து கால்களில் இயங்கிக்கொண்டிருந்தன.

 “இன்று வேலை அதிகமா..?”

“இல்லை, நீதான் முதலாவது வாடிக்கையாளன். ஏழு மணியிலிருந்து காத்திருந்தேன். ஸ்துதி” நன்றியை மட்டும் சிங்களத்தில் சொன்னாள்.

“ஏன்..?”

“வாடிக்கையாளன் கிடைக்காமலும் போகலாமல்லவா... அவ்வாறென்றால் அன்றைக்கு எனக்கு வருமானமேதும் இல்லையல்லவா...”

“ஏன்...”

“இங்கே சம்பளம் என்று எங்களுக்கு எதுவுமில்லை.”

“ஐயோ நான் இரண்டாயிரம் கொடுத்தேனே...”

“அது மெடம், பொஸ், பொலிஸ்... அவர்களுக்குப் போய்விடும். எங்களுக்கு வாடிக்கையாளர் தருகிற டிப்ஸ் மட்டுமே. அதிகம் கிடைத்தால் சந்தோசம். உனக்குத் தெரியுமா, நேற்று ஒருவன் எல்லாம் முடித்தபிறகு வெறும் ஐம்பது ரூபா மட்டுமே தந்தான்.”

 எனக்கு உண்மையிலேயே ‘அட சனியனே’ என்று தோன்றியது. “பிறகு..” என்று கேட்டேன். “அதை அந்த நாயிடமே திருப்பிக் கொடுத்து அனுப்பிவிட்டேன். ஆனால், இந்தியர்கள் நல்லவர்கள்” அவள் நேரத்தைப் பார்த்தாள். இதற்கு மேலாவது இந்த உரையாடலின் போக்கைத் துண்டித்துக்கொள்ள வேண்டும். “சரி.. எக்ஸ்ரா சேர்விஸ் என்றால் என்ன” என்று கேட்டேன். அந்தக் கேள்விக்கான பதிலைக் கிளர்ச்சியுடன் எதிர்கொள்வதைப்போல உன்மத்த நிலைக்குத் தேகம் தயாரானது.  அவளுடைய மார்புகளில் வெறித்தேன். தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. வேண்டாம், தாகம் தொடரட்டும். நாக்கு வறளட்டும். அவளுடைய முகத்தை வெறித்தேன். தீவிரமாயிருந்தது. ஆகக் குறைந்தது மூக்குத்தியைச் சுட்டுவிரலால் தொட்டபோதிருந்த துடுக்குத்தனத் தோடாவது இருந்திருக் கலாம். அவள் எனக்கு ஏற்கெனவே தெரிந்த ஒரு பதிலைச் சொல்வதைப் போன்ற பாவனையில் “எக்ஸ்ரா சேர்விஸ் என்றால் ஹான்ட் ஷேக்கிங்... ம்ம்... அந்நேரத்தில் நீ என்னைத் தொடலாம்... ஆனால், என் ஆடையைக் களைய முடியாது... வேண்டு மென்றால் பட்டன்களை நீக்கலாம்.” ஒப்புவிக்கிற குரலில் அவள் மார்பைத் தொட்டுக் காட்டினாள். காலடியில் தீ எரியத் தொடங்கியது.

 “வேறு?”

“வேறு…” அவள் வேறும் சொன்னாள்.

 “அப்போதெல்லாம் உனக்கு எப்படியிருக்கும்?”

அவள் தோள்களைக் குலுக்கிக்கொண்டு “எதுவுமில்லை” என்றாள்.

“பிடித்திருக்காதா?”

ஸ்துதி - சயந்தன்

“பிசுத?” பைத்தியமா என்று அதை மட்டும் சிங்களத்தில் கேட்டாள். முகத்தில் கேலியான புன்னகை ஒட்டிக்கொண்டிருந்தது. நானோ, அவள் மூக்குத்தியைத் தொட்ட போதிருந்த புன்னகையை அவளிடத்தில் தேடிக்கொண்டிருந்தேன். “இதுவொரு கடமை. அவ்வளவுதான்” என்றாள். பிறகு எங்கோ கனவுக்குள் நுழைவதைப்போல “ஒருவேளை இதையெல்லாம் என்னுடைய காதலனுக்குத் தரும்போது நிறையப் பிடித்திருக்குமல்லவா?” என்று ஒரு சந்தேகத்தைத் தெளிகிற தொனியில் கேட்டாள்.

“உனக்குக் காதலன் இருக்கிறானா?” அவள் பதில் சொல்லவில்லை. ஆனால், துடுக்குத்தனமும், கேலியும் படராத வெறுமையான ஒரு மூன்றாம் முகத்தைக் கண்டேன். மௌனம் எங்களிருவருக்கும் இடையில் புகுந்துகொண்டது. அவள் அடுத்தது என்ன என்பதைப்போல சுவரோடு சாய்ந்து நின்றாள். அவளை அருகாக அழைத்தேன். விரல்களைப் பிடித்தபடி “எனக்கு எக்ஸ்ரா சேர்விஸ் எதுவும் வேண்டியதில்லை” என்றேன். “ம்” என்றாள். “அதற்காக டிப்ஸ் எதுவும் தராமல் போய்விட மாட்டேன். இந்தியர்கள் நல்லவர்கள் அல்லவா...” கடவுளே, அவள் துடுக்குத்தனத் தோடு சிரித்தாள். “நீ மிக அழகானவள்...” வெட்கப்பட்டாள்.

நேரத்தைப் பார்த்து “இன்னமும் இருபது நிமிடங்கள் இருக்கின்றன” என்றாள். எழுந்து உட்கார்ந்தேன். வெண்துணியை இடுப்பில் கட்டிக்கொண்டேன்.

“வேண்டுமென்றால் நான் இப்போதே வெளியேறுகிறேன் அல்லது அருகில் வந்து உட்காரேன். பேசுவோம்.”

“வேண்டுமென்றால் நான் தலைகோதி மசாஜ் செய்கின்றேன், இருபது நிமிடங்களுக்கு.”

“சரி.”

நிமிர்ந்தபடி உடலைச் சரித்தேன். மயிர்க் கற்றைகளுக்குள் விரல்களைக் கோத்துக் கோதத் தொடங்கினாள். சற்றுமுன்னர் அவள் கணுக்கால்களை அழுத்திய போதிருந்த விரல்களைத் தொலைத்துவிட்டு புதிய விரல்களைப் பெற்றிருப்பதாகத் தோன்றிற்று. ஏதும் பேசினாள் இல்லை. அவளுடைய கண்களை நீண்ட நேரத்திற்குப் பார்த்தபடியிருந்தேன். கனிவு சுரக்கின்ற புதிய கண்கள். சட்டென்று துள்ளியெழுந்தேன். இங்கிருந்து போய்விட வேண்டும். ஆடைகளை ஓர் அவசரத்துடன் அணிந்தேன். பர்ஸிலிருந்து 2,000 ரூபாய்த் தாள்களை உருவி அவளுடைய கையில் வாஞ்சையோடு வைத்தேன். “உன்னை ஒருமுறை கட்டியணைக்கலாமா..?” என்னையும் மீறி சொற்கள் வந்து விழுந்தன. நிமிர்ந்து பார்த்தாள். நான்காவது முகம். மொத்தமும் எனக்குள் ஒடுங்கி விடுவதைப்போல வந்து நின்றாள். ஒரு நீண்ட பெருமூச்சோடு கைகள் அவளை அணைத்துக்கொண்டன. எனக்குள் சஞ்சலங்கள் ஏதுமில்லையென்று நானே சொல்லிக்கொண்டேன். அவளுடைய நெற்றியில் முத்தமிட்டேன்.

அப்போது அவளுடைய கைகள் என்னில் சுற்றிப் படர்ந்து அழுத்தத் தொடங்கின.

அப்போது என்னுடைய நெஞ்சில் உரசிக்கொண்டிருந்த அவளுடைய முகம் நிமிர்ந்துகொள்ள அவள் தன்னுடைய உதடுகளால் என் உதட்டைக் கவ்விக் கொண்டாள்.

அப்போது நான் அவளுக்குள் ஒடுங்கிவிடுகிற தலைகீழ் அதிசயத்தை அவள் நிகழ்த்தத் தொடங்கினாள்.

அப்போது அவளுடைய மூர்க்கத்தின் முன்னால் நான் என்னைச் சொரியத் தொடங்கியிருந்தேன்.

அப்போது என்னுடைய உதடுகளை அவள் விடுவித்துக்கொண்டபோது நான் தலையைச் சரித்தபடி புன்னகைத்தேன். மஞ்சள் வண்ண ரீசேர்ட்டை அணிந்தவாறே, ``அதுவொரு துடுக்குத்தனமான புன்னகை’’ என்றாள் அவள்.

அப்போது வியர்வை பிசுபிசுத்த தன் விரல்களினால் என்னுடைய கையை விரித்து 2,000 ரூபாய்த் தாள்களையும் அழுத்தி மூடியவள் “ஸ்துதி” என்றாள்.