
கம்மி விலை காவியங்கள் - தமிழ்மகன்
ரஷ்ய நாவல்கள் என யோசித்ததும் முதலில் நினைவுக்கு வருகிற பெயர்கள் என்ற வரிசைப்படியே எழுதத் தொடங்குகிறேன்.

‘வெண்ணிற இரவுகள்’ - இதற்குத்தான் என் பட்டியலில் முதல் இடம். எழுதியவர் ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி. புரட்சிக்கு முந்தைய எழுத்தாளர்... சொல்லப்போனால், எனக்குப் பிடித்த ரஷ்ய எழுத்தாளர்கள் பலரும் புரட்சிக்கு முந்தையவர்கள்தான்.
பல ரஷ்யக் கதைகளின் முதல் வரிகள் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றன. ‘எல்லா மகிழ்ச்சியான குடும்பங்களும் ஒன்றுபோல மகிழ்ச்சியாக இருந்தன. மகிழ்ச்சியற்ற குடும்பங்கள் ஒவ்வொரு விதமாக மகிழ்ச்சியற்று இருந்தன.’’ இப்படித் தொடங்கும் டால்ஸ்டாயின் அன்ன கரீனினா.
‘இத்தனை நிர்மலமான வானத்தின் கீழ்தான் முட்டாள்களும் முசுடர்களும் இருக்கிறார்களா?’ என்ற ஆச்சர்யத்தோடு தொடங்குகிறது ‘வெண்ணிற இரவுகள்’ நாவல். அந்த முதல் வரியேகூட நாவலை உடனடியாக வாசிப்பதற்கான மனநிலையைத் தந்துவிடும். வெண்ணிற இரவுகளை வாசிப்பது என்பது, வெண்ணிற இரவுகளில் வசிப்பது என்று பொருள். வாசிப்பது, வசிப்பது என்பது ஏதோ வார்த்தை ஜோடனை இல்லை.

உண்மையில் ஒரு நாவலைப் படிப்பதற்கு, அதற்கான மனநிலையும் தாகமும்கூடத் தேவையாகத்தான் இருக்கிறது. நான் முதன்முதலில் யாருடைய சிபாரிசும் இல்லாமல் ‘வெண்ணிற இரவுகளை’ப் படித்தேன். எந்த எழுத்தாளரின் பழக்கமும் இல்லாமல்தான் நான் வெகுகாலம் எழுதிவந்தேன். அதைப்பற்றிச் சிலாகித்துச் சொல்ல ஒருத்தரும் இல்லை எனக்கு. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் படிக்க ஆரம்பித்தபோதும் அது ஈர்த்துக்கொண்டது. இருப்பினும், மொத்தமாக இது என்ன மாதிரியான கதை என்ற ஆர்வம் மட்டுமாகத்தான் அது இருந்தது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு புத்தகத்தை வாங்கியதாக ஞாபகம். ஐந்து ரூபாய் விலையுள்ள அந்த அழகிய பவுண்டு புத்தகத்தை, என்.சி.பி.ஹெச் நண்பர் ஒருவரின் அறிமுகம் காரணமாக 20 சதவிகிதம் விலைக் கழிவுடன் வாங்க முடிந்ததில் அத்தனை திருப்தி. அப்போது ரஷ்ய எழுத்தாளர்களில் டால்ஸ்டாயும் கார்க்கியும் மட்டுமே அறிமுகமாகி இருந்தார்கள். ‘புத்துயிர்ப்பு’ ‘தாய்’ படித்திருந்தேன். கதாபாத்திரங்களின் பெயர்களையும் ஊர்ப் பெயர்களையும் மனதில் நிறுத்துவது சிரமமாக இருந்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபட ஆரம்பித்திருந்தது. இவான் துர்கனேவ், சிங்கிஸ் ஐத்மாத்தவ், மாஸ்லவா, நெஹ்லூதவ், குருஷேவ், ப்ரஷ்னெவ், ஆந்த்ரபோவ், அலெக்ஸி வஸிலியேவ், ஆன்டன் செக்காவ், ஷோலகவ், நிகோலய் கோகல் என்று அந்தப் பெயர்கள்மீது ஒருவிதத் தூரத்துச் சொந்தங்கள்போல ஒரு பாசம் வந்திருந்தது.

தூரம் என்றால், பீட்டர்ஸ்பெர்க் தூரம். அதாவது, மாஸ்கோ. ரூபாய்க்கு நிகராக ரூபிள் பழகியிருந்தது. அந்தத் தொகுப்பில் வெண்ணிற இரவுகள் தவிர, வேறு சில கதைகளும் இருந்தாலும், வெண்ணிற இரவுகளைத்தான் முதலில் வாசித்தேன். வாசித்தபோது ஏற்கெனவே படித்திருந்த ரஷ்யக் கதைகளுக்கான அடையாளங் களோடு, ஒரு தீவிரமான காதல் கதையாக மனதில் பதிவானது. மாஸ்கோ நகரில் சுற்றித் திரிகிற மாதிரி பழகியிருந்தது மனசு. வெண்பனியில் கால்கள் புதைய, ரோமக் கோட்டுகள் அணிந்து, வேகவைத்த உருளைக்கிழங்கு உண்டு, வோட்கா குடிக்காத நாளில்லை... கற்பனையில்.
முதன்முறை படித்தபோது, மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறார் என்று மட்டுமே பார்த்தேன். காதலர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா... பிரிந்தார்களா என்பது மட்டுமே கதையென்று முடிவுசெய்து படித்த ஞாபகம். அடுத்த முறை வரிகளில் கவனம் சென்றது. நம் கதாநாயகன் எப்படித் தன்னைப்பற்றி வெளிப்படுத்துகிறான், நாஸ்தென்கா எப்படித் தன் கதையைச் சொல்கிறாள் என்பதைக் கவனமாகப் பார்த்தேன். இப்படியெல்லாம் உணர்வுச் சிக்கல்கள் இருக்குமா என்ற வியப்பு. மனிதர்கள் இப்படியெல்லாம் ஏங்குவார்களா என்று ஆச்சர்யம். ஒரு நள்ளிரவு நேரம் வெண்மையாக இருக்குமா என்ற ஆச்சர்யம். பரிச்சயம் இல்லாத ஆணிடம் ஒரு பெண் நள்ளிரவில் சந்தித்து தன் சொந்தப் பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்வாளா என்ற தர்க்கம்... இப்படியெல்லாம் சின்னச்சின்னத் தயக்கங்களுடன் நானும் தஸ்தா யெவ்ஸ்கி படித்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்வது பழக்கமாகியிருந்தது.

‘புதுவசந்தம்’ என்றொரு சினிமா வந்தது. டைரக்டர் விக்ரமன் இயக்கியது. அதில் ஒரு பெண், தன் காதலனுக் காகக் காத்திருக்கிறாள். அவன் வருவானா, எங்கிருக்கிறான் என்ற குழப்பங்கள். அவன் வரும் வரை அவளுக்கு அடைக்கலம் தந்து பாதுகாக்கிறார்கள், நான்கு நண்பர்கள். காதலன் வருகிறான். காதலனோடு செல்வதா? நண்பர்களோடு இருப்பதா என்று முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. “அட! அப்படியே வெண்ணிற இரவுகள் கதைப்பா இது’’ படம் பார்த்துவிட்டு வந்து நான் பெருமையாக நண்பர்களிடம் சொன்னேன்.
அதன் பிறகு, இரண்டு பையன்கள் ஒரு பெண்ணைக் காதலிக்கிற மாதிரியோ, இரண்டு பெண்கள் ஒரு பையனைக் காதலிக்கிற மாதிரியோ வந்த சினிமாக்களில் இந்தச் சாயல் தெரிவதைக் கவனித்தேன். ‘இயற்கை’ படம் வந்தபோது, வெண்ணிற இரவுகளின் சாராம்சத்தை எடுத்துக்கொண்டு, மிகச் சிறப்பாக சினிமாவாக்கப்பட்ட அந்தப் படத்தை பலமுறை பார்த்தேன். இயக்குநர் ஜனநாதன் ‘வெண்ணிற இரவுகள்’ கதையைத் தழுவி எடுக்கப்பட்டது என்றே திரைப்படத்தின் தொடக்கத்தில் கார்டு போட்டிருந்தார். நட்பையும் காதலையும் போட்டுக் குழப்பிக்கொள்ளும் எத்தனைக் கதைகள். இதன் அடிப்படையில் எத்தனை நாவல்கள்? எல்லாமே வெண்ணிற இரவுகளை நினைவுபடுத்தும் சந்தர்ப்பங்
களாகவே இருந்தன.

170 ஆண்டுகளாக அந்த நாவல், அதைப் படிக்கிறவர்கள் எல்லோருக்குமான சொந்த அனுபவமாகத் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதன் வெற்றி என்ன? எத்தனையோ சினிமாக்களாக, வேறு வேறு கதைகளாக மாறிக்கொண்டே இருந்தாலும் தனித்துவம் கொண்ட மூலநதியாக பிரவாகமெடுத்துக் கொண்டிருக்கிறது ‘வெண்ணிற இரவுகள்.’ காரணம் என்ன?
இத்தனை ஆற்றல் மிகுந்த வார்த்தைகளை நம்மால் பிரயோகிக்க முடியுமா, இப்படியொரு உணர்வை நாம் சினிமா ஆக்கிவிட முடியுமா என்ற முயற்சிகள்தான் இத்தனைக் கதைகளும் சினிமாக்களும் என்று தோன்றுகிறது.
பலமுறை வாசித்திருந்தாலும் இப்போது வாசிக்கும்போது, இரண்டு வரிகளுக்கு நடுவே புதைந்திருக்கும் உணர்வுகளை அசைபோட ஆரம்பித்திருக்கிறது மனம். முதன்முறை வாசித்ததற்கும் இப்போது வாசிப்பதற்கும் நடுவே 30 ஆண்டுகள். இன்னொரு பத்து ஆண்டுகள் கழித்து என்ன மாதிரியான கண்ணாமூச்சி காட்டுமோ என்று எதிர்பார்ப்பும் பயமும் வருகிறது.

உலகத்தின் தலைசிறந்த 100 எழுத்தாளர்களைப் பட்டியலிட்டால், அதில் குறைந்தபட்சம் ஒரு டஜன் எழுத்தாளர்களையாவது ரஷ்ய மொழிக்கு ஒதுக்கித் தர வேண்டியிருக்கும். ஒருவேளை இந்தப் பட்டியலைத் தயாரிக்கும் பணியை ஒரு முரட்டுத்தனமான முதலாளித்துவச் சிந்தனையாளனும் பிற்போக்குவாதியுமான ஒருவனிடம் காலம் ஒப்படைக்குமாயின், அப்பொழுதும்கூட மேலே உள்ள கணக்கில் ஒன்றிரண்டைத்தான் குறைக்க முடியும்.
ரஷ்ய இலக்கிய வாசிப்பில் தவிர்க்கவே முடியாத படைப்பிலக்கியங்களை, எழுத்தாளர்களைப் பார்போம்.
‘குற்றமும் தண்டனையும்’, ‘வெண்ணிற இரவுகள்’, `சூதாடி’ - தஸ்தாயெவ்ஸ்கி.
‘போரும் அமைதியும்’, ‘அன்னா கரீனினா’, ‘புத்துயிர்ப்பு’, ‘இரண்டு ஹூஸார்கள்’ - டால்ஸ்டாய்.
‘செம்மணி வளையல்’ - அலெக்ஸாண்டர் குப்ரின்.
‘மேல்கோட்டு’ - நிகோலய் கோகல்.
‘தந்தையும் தனயரும்,’ ‘வசந்த கால வெள்ளம்’ - இவான் துர்கனேவ்.
‘நாய்க்கார சீமாட்டி’ உள்ளிட்ட சிறுகதைகளும் குறுநாவல்களும் - ஆன்டன் செக்காவ்
புரட்சிக்கு முந்தைய எழுத்தாளர்களில் இந்த ஏழு பேரைத் தவிர்த்துவிட்டு யாருமே பட்டியல் தயாரிக்க முடியாது. இந்த எழுத்தாளர்களின் கதைகளில் ஒரு பொதுத்தன்மையாக உள்மனச் சிக்கல்கள், நினைவோட்டம், ஆறா மனத்துயர், நேர்மைக்கும் குற்றஉணர்வுக்குமான போராட்டம் ஆகியவை மிக ஆழ்ந்த தத்துவப் பார்வையோடும் அதேசமயம் தேவையான கிண்டலோடும் சொல்லப்பட்டிருக்கின்றன.
தஸ்தாயெவ்ஸ்கியின் மனஉலகம் வறுமையும் ஏராளமான மனச்சிக்கலும் நிறைந்ததாக இருக்கிறது. அள்ள அள்ளக் குறையாத காதல்பித்து தலைக்கேறித் தவிக்கும் நாயகர்கள் இவருடைய பாத்திரங்களாக இருக்கிறார்கள். காதலியின் அன்புக்காகக் காதலியையே இழக்கத் துணிபவனும் (வெண்ணிற இரவுகள்), காதலிக்காக மலை உச்சியிலிருந்து கீழே குதிப்பதாக வாக்குறுதி தருபவனும் (சூதாடி), குற்றமே தண்டனையாக மாறி வருத்தும் ஓர் இளைஞனும் (குற்றமும் தண்டனையும்) இவருடைய கதைமாந்தர்களாக இருக்கிறார்கள்.

டால்ஸ்டாய், மேட்டுக்குடியில் நிலவும் போலித்தனமான நாகரிக வேடிக்கைகளையும், பணமிருந்தும் தீராத நிராசைகளையும், குற்றஉணர்வால் நிம்மதி இழக்கும் வாழ்க்கைப் போக்கையும் எழுதிச் சென்றவர்.
வேட்கை காரணமாக வாழ்வில் இடறி, அதைத் தொடர்ந்து ஏற்படும் சிடுக்குகள் நிறைந்த வாழ்வின் படிநிலைகளை ‘அன்னா கரீனினா’விலும் ‘புத்துயிர்ப்பி’லும் மிகச் சிறப்பாகச் சித்திரித்திருக்கிறார் டால்ஸ்டாய். நெஹ்லூதவ் மீசை அரும்பிய இளைஞனாக இருந்தபோது கத்யூஷாவிடம் அவனுக்கு ஏற்பட்ட காதலுக்கும், ராணுவப் பயிற்சிக்குப் போய்வந்த பிறகு அவளை அவன் எதிர் கொள்ளும் உணர்வுக்கும் இடையில்... வாழ்க்கை முறை ஒருவரின் குணத்தில் எவ்வளவு குரூரமான ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை உணர்த்துகிறது. ராணுவம் அவனுக்குள் இருந்த காதலைக் காமமாக உருமாற்றி அனுப்பும் ரசாயனத்தை என்னவென்று சொல்வது? கத்யூஷாவும் வேசையாக மாறி, மாஸ்லவாவாக மாறும்போது ஒரு மலர் கருங்கல்லாக மாறிப்போனதை உணரலாம். எப்படிப் பழகிக்கொள்கிறோமோ, அதுதான் வாழ்க்கையாகவும் எப்படி வாழ்கிறோமோ, அதுதான் பழக்கமாகவும் மாறிப்போகிற விந்தை அது.
‘செம்மணி வளையல்’, ‘வசந்தகால வெள்ளம்’ கதைகளும் காதலின் வலியை, பிரிவின் துயரைச் சொல்லும் வலிமையான கதைகள். இந்தக் கதைகளின் இறுதிப்பக்கங்களை யதேச்சையாகப் புரட்டும்போதும் மனம் கனத்துப்போய்க் கண்ணீர் துளிர்ப்பது அனிச்சை செயல்போலவே ஆகிவிட்டது.
“ ‘தந்தையரும் தனயரும்’ கதையின் நாயகன் பஸாரவ் பாத்திரத்தைப் படைப்பதற்காக என்னிடமிருந்த அனைத்து வண்ணங்களையும் இழந்துவிட்டேன்” என்று அந்தக் கதையின் முன்னுரையில் துர்கனேவ் குறிப்பிட்டிருப்பார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் அவை என்பதை நாவலை வாசித்தே அறிந்துகொள்ள முடியும். பஸாராவ்வின் மிடுக்கு நம்மை வியப்பில் ஆழ்த்தும். என்ன ஒரு கம்பீரம். காதலில்கூடவா கம்பீரம் என ஆச்சர்யமூட்டும் நாவல் அது. நோய் முற்றி இறக்கும் தறுவாயில் கடுமையான ஜுரத்தில் பேசிக்கொண்டிருப்பான் பஸாரவ். அப்போது, “ஜுரத்தில் நான் உளறுவது போல் இருந்தால், தயவுசெய்து எனக்கு நினைவூட்டுங்கள். நிறுத்திக்கொள்கிறேன். எனக்கு உளறுவது பிடிக்காது’’ என்பான். நாவலை வாசிப்பவர்கள் இரண்டு நாளைக்காவது பஸாரவ்போல இருப்பார்கள் அல்லது இருக்க நினைப்பார்கள். தலைமுறை இடைவெளியை மிகச் சிறப்பாகச் சித்தரித்த நாவல்களில் இதுவும் ஒன்று.
புரட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில் கார்க்கியின் ‘பிறந்தான் மனிதன்’, ‘வழித்துணைவன்’, ‘கிழவி இஸெர்க்கில்’ உள்ளிட்ட பல சிறுகதைகளையும் ‘தாய்’ நாவலையும் நிச்சயம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிங்கிஸ் ஐத்மாத்தவ், பாஸு அலியவா, மிகைல் ஷோலகவ் போன்றவர்கள் அன்பையும் காதலையும் போராட்ட வாழ்வையும் சொன்ன மிக முக்கியமான எழுத்தாளர்கள். புரட்சிக்குப் பிறகான விவசாய மாற்றங்கள் கண்முன் நிறுத்தப்பட்ட நாவல்கள். குறிப்பாக ‘கன்னிநிலம்’. பரீஸ் வஸீலியெவ் எழுதிய ‘அதிகாலை அமைதியில்’, நிக்கொலாய் ஓஸ்திரோவ்ஸ்கியின் ‘வீரம் விளைந்தது’ மற்றும் ‘உண்மை மனிதன் கதை’, ‘ஜமீலா’, ‘போர் இல்லாத இருபது நாட்கள்’ போன்ற பல நாவல்கள் புரட்சிக்குப் பிந்தைய அல்லது நாஜிப் படையெடுப்புக் காலத்தை ரத்தமும் சதையுமாகக் கண் முன் காட்டுபவை.
அதிலும் ‘அதிகாலை அமைதியில்’ நாவலில், ஆறு பெண்கள் ஒரு நாஜி ராணுவப் பிரிவை எப்படி எதிர்கொண்டு போராடுகிறார்கள் என்பது உள்ளத்தை உலுக்கும் (இது ஜனநாதன் இயக்கத்தில் ‘பேராண்மை’ என வெளியானது).
பார்வை இழந்த ஓஸ்திரோவ்ஸ்கி எழுதிய கதை, ‘வீரம் விளைந்தது’. அதன் கையெழுத்துப் பிரதி தொலைந்துபோன நிலையில் மீண்டும் எழுதப்பட்டது என்ற செய்தி, போரின் கொடுமையினும் கொடுமை. விமான விபத்தில் காலிழந்து பனியில் தவழ்ந்துவந்து மீண்டும் விமான ஓட்டியாக மாறும் ‘உண்மை மனிதனின் கதை’ மட்டும் என்னவாம்?

என்னுடைய அனுபவத்தில், இன்றைய (சுமார் 50 வயது) தமிழ் எழுத்தாளர்களில் இந்தப் படைப்புகளை வாசிக்கத் தவறவிட்டவர்கள் மிகச் சொற்பமான வர்களாகவே இருக்கக்கூடும். காரணம், இந்த அத்தனை புத்தகங்களுமே சோவியத் ரஷ்யாவால் மிகக் குறைந்த விலையில் மிகத் தரமான புத்தக ஆக்கங்களாக நமக்கு அளிக்கப்பட்டவை. இந்தியாவின் பல மொழிகளில் இந்தப் புத்தகங்களை அவர்கள் மொழியாக்கம் செய்திருப்பதன் காரணமாக, இந்தியா முழுவதிலுமே இந்த வயதைக் கடந்த எழுத்தாளர்களின் ஆதார நூல்களாக இவை இருந்திருக்கும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு.
படைப்பிலக்கியம் மட்டுமின்றி, அரசியல் ரீதியாகவும் ரஷ்ய நூல்களே எனக்குப் பெரிய ஆதரவாக இருந்தன. ‘இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்’, ‘நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள்’, ‘மக்கள்தொகைத் தத்துவத்தின் அடிப்படைகள்’. ‘மஞ்சள் பிசாசு’ போன்ற நூல்கள் பலமான தத்துவ பலத்தையும் விஞ்ஞான அடிப்படையிலான சமூகப் பார்வையையும் எனக்குள் ஏற்படுத்தின.
‘மனித இனங்கள்’, ‘நான் ஏன் என் தந்தையைப்போல இருக்கிறேன்’, ‘தேனிக்கள்’, யா.பெரல்மானின் ‘பொழுது போக்கு பௌதீகம்’, ‘பொழுதுபோக்கு வானவியல்’, ‘சார்பியல் தத்துவம்தான் என்ன?’ போன்ற விஞ்ஞான நூல்கள் எனக்கு அறிவியல்மீது இருந்த அச்சத்தைப் போக்கி வாழ்வின் சுவாரஸ்யங்களாக்கின. ‘ஹிஸ்டரி ஆஃப் த ஏன்ஸியன்ட் வேர்ல்டு’, ‘குடும்பம் தனிச்சொத்து அரசு’ போன்ற நூல்களைக் கண்களுக்கு ஒளி தந்த நூல்கள் என்று எப்போதும் சொல்வேன்.
குழந்தைகளுக்கான நூல்களும் ரஷ்யா வெளியிட்டதுபோல் வெறெந்த நாடும் அத்தனை குறைந்த விலையில் வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை. ‘மிர்’, ‘ராதுகா’, ‘முன்னேற்றப் பதிப்பகம்’ போன்ற பதிப்பகங்கள் இந்த நூல்களை வெளியிட்டன. ர.கிருஷ்ணய்யா, பூ.சோமசுந்தரம், நா.தர்மராஜன் போன்ற மொழிபெயர்ப் பாளர்கள் ரஷ்யாவில் இருந்தபடியே இந்த நூல்களை ஆக்கித் தந்தார்கள். நிறைய புத்தகங்களின் விலை 25 காசிலிருந்து ஒரு ரூபாய்தான். டால்ஸ்டாய் எழுதிய ‘குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்’ என்ற சிறுநூல் என் மனதில் ஓவியமாகப் பதிந்து கிடக்கிறது. இரண்டு நண்பர்கள், அக்ரூட் கொட்டை திருடிய சிறுவன், காளான் பொறுக்கும் சிறுமிகள், சிங்கமும் நாய்க்குட்டியும் போன்றவை வார்த்தைகளு ம் சித்திரங்களுமாக என்னுள் பதிவாகியுள்ளன. ‘இயற்கை விஞ்ஞானிகளின் கதைகள்’ நூலில் காகங்களுக்கு மூன்றுக்கு மேல் எண்ணத் தெரியுமா?’ போன்ற சுவாரஸ்யமான சந்தேகங்கள், ‘எலியை வளர்த்த பூனைகள்’ போன்ற இயற்கை ஆய்வுகள் மறக்கவும் கூடுமோ? ‘அப்பா சிறுவனாக இருந்தபோது’ நூலை சிறுவயதில் படிக்கக் கொடுத்துவைக்காதவர்கள் தங்கள் பால்ய மகிழ்ச்சியின் ஒரு பகுதியை இழந்தவர்கள் என்று சொல்வேன்.
இப்போது இதில் பல புத்தகங்கள் என்னிடம் கைவசம் இல்லை. பல நூல்கள் படித்துப் பல ஆண்டுகள் ஆனவை. ஆனால், இந்தக் கட்டுரையை எழுத உட்கார்ந்ததும் அத்தனையும் அந்த நூல்களை வாங்கிய தருணத்திலிருந்து அவற்றை தாகத்தோடு வாசித்த காலங்கள் வரை கண்முன் வந்துவிட்டுப் போகின்றன. நூலாசிரியரின் பெயரோ, கதாபாத்திரங்களின் பெயரோ, நூலின் பெயரோ சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்றுகூட தோன்றவில்லை. அப்படிச் செய்வது என்னை வளர்த்த அந்த நூல்களுக்குச் செய்யும் அவமானம் என்று தோன்றியது. இது உணர்ச்சிவசப்பட்ட (உணர்ச்சியை வசப்படுத்த முடியாத?) நிலையில் சொல்லப்படுவதாக நினைக்கவும் வேண்டியதில்லை.