Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 23 - பசுவின் அரசியல்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 23 - பசுவின் அரசியல்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 23 - பசுவின் அரசியல்!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 23 - பசுவின் அரசியல்!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 23 - பசுவின் அரசியல்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 23 - பசுவின் அரசியல்!
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 23 - பசுவின் அரசியல்!

தினெட்டு ஆண்டுகள் இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மனிதரிடம், ‘இனி நீயே ராஜ்ஜியத்தை ஆளும் சுல்தான்!’ என்று உச்சபட்ச அதிகாரத்தைத் தூக்கிக் கையில் கொடுத்தால் தலைகால் புரியாதல்லவா! அவ்விதமாக கி.பி. 1640-ல் துருக்கி ஒட்டோமான் ராஜ்ஜியத்தின் பதினெட்டாவது சுல்தானாகப் பதவிக்கு வந்த இப்ராஹிமும், கெட்ட ஆட்டம் ஆடினார். அந்தப்புரத்திலிருந்து அவர் வெளியே வருவதே அரிதாகிப்போனது.

முதல் நான்கு ஆண்டுகள் பிரதம மந்திரியான காரா முஸ்தபா, நிர்வாகத்தைத் திறம்படக் கவனித்துக்கொண்டார். அதுதான் அவருக்குப் பிரச்னையாகவும் அமைந்தது. உண்மைக்கும் நேர்மைக்கும் எந்தக் காலத்தில்தான் மதிப்பிருந்தது? ராஜமாதாவாக இருந்த சுல்தானின் தாய் கோஸெம், அடுத்த பிரதம மந்திரி கனவுடன் இருந்த ஆளுநர் மெஹ்மத் பாஷா, இப்ராஹிமின் மரியாதைக்குரிய மதகுருவாக இருந்த சின்சி ஹோகா மூவருமே முஸ்தபாவுக்கு எதிராகச் சதி செய்தனர். ‘எப்போது வேண்டுமானாலும் முஸ்தபா உங்களையே காலி செய்யலாம். ஆட்டம் ஜாஸ்தியாக இருக்கிறது’ என்று சுல்தானிடம் மந்திரம் ஓதினர்.

‘போங்கடா நீங்களும் உங்க பதவியும்’ என்று முஸ்தபா, ராஜினாமா செய்ய முயன்றார். அதை இப்ராஹிம் ஏற்றுக்கொள்ளவில்லை. நல்ல எண்ணமெல்லாம் கிடையாது. ‘நீயே விலக உரிமை கிடையாது. நான்தான் விலக்குவேன்’ என்ற கர்வம்தான் காரணம். 1644, ஜனவரி 31-ம் தேதி, சுல்தான் முஸ்தபாவைப் பதவி நீக்கம் செய்தார். சில மணி நேரத்திலேயே அவரது உயிரும் நீக்கப்பட்டது.

அடுத்த பிரதம மந்திரியாக மெஹ்மத் பாஷா நியமிக்கப்பட்டார். இந்த கிறுக்கு சுல்தானின் ராஜ்ஜியத்தில் நேர்மையாக உழைத்தால், முஸ்தபாவைப் போல் நம்மையும் போட்டுத்தள்ளி விடுவார்கள். ஆமாம் சாமி போட்டால் மட்டும் போதும் என்று முடிவெடுத்த மெஹ்மத் பாஷா, பணிவுச் செல்வமாக வலம்வந்தார். அதில் உருகி மருகிய இப்ராஹிமே ஒருமுறை கேட்டார், ‘நீங்கள் ஏன் எப்போதும் என் கருத்தை மறுத்தே பேசுவதில்லை’ என்று. மெஹ்மத் பாஷா நெடுஞ்சாண்கிடையாகப் பதிலளித்தார். ‘சுல்தானின் ஆழ்ந்த கருத்துகளை என்னைப் போன்ற சாதாரணர்களால் என்றைக்கும் புரிந்து கொள்ளவே முடியாது.’

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 23 - பசுவின் அரசியல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்படியிருந்தும், மெஹ்மத் பாஷாவின் பதவி பறிபோனது. புதிய பிரதம மந்திரியாக ஷாலி என்பவர் வந்தார். மெஹ்மத் பாஷாவைத் தளபதியாக்கி, போர் ஒன்றுக்கு அனுப்பி வைத்தார் இப்ராஹிம். ஆம், சுல்தான் என்றால் அவரது சரித்திரத்தில் நான்கைந்து போர்களாவது இடம்பெற வேண்டாமா? கிரேக்கத்தின் பெரிய தீவான கீரிட்மீது வெனீஸ் குடியரசும், ஒட்டோமான் பேரரசும் உரிமை கொண்டாடின. அதற்காக, ஏற்கெனவே நான்கு முறை போர்கள் நடந்திருக்க, கி.பி.1645-ல் ஐந்தாவது முறையாகப் போரை அநாவசியமாக ஆரம்பித்து வைத்தார் இப்ராஹிம். மெஹ்மத்தின் தலைமையில் மாபெரும் கப்பல் படையொன்று கீரிட்டை முற்றுகையிட்டது. போர்ச் செலவுகளினால், ஒட்டோமான் ராஜ்ஜியத்தைப் பொருளாதார நெருக்கடி முற்றுகையிட்டது.

ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட துருக்கி வீரர்கள் அங்கே ரத்தம் சிந்திப் போரிட்டுக் கொண்டிருக்க, சுல்தான் அந்தப்புரத்தில் முத்தம் சிந்தி, தனக்கு வசதியான பொசிஷன் எது என்ற புத்தகங்கள் படித்துத் தெளிந்துகொண்டிருந்தார். புதிய கோணங்களில் பரிட்சார்த்த முயற்சிகளை நிகழ்த்தினார். யாருமறியா கோணமொன்றைத் தானே கண்டறிய வேண்டுமென்ற தீரா வேட்கையும் அவருக்குள் நிலைகுத்தி நின்றது.

இன்னொரு வேட்கையும். தான் புழங்கும் இடங்களில் விலங்குகளின் புஸுபுஸு மென் மயிரால் (fur) செய்யப்பட்ட பொருள்களே இடம்பெற வேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார் சுல்தான். கம்பளங்கள், திரைச்சீலைகள், சுல்தான் உடையின் ஓரங்கள், தொப்பி, மேல் அங்கி, ஆசைநாயகிகளின் மேலாடை, மெத்தை, போர்வை, தலையணை என எல்லாம் விலங்கு மயிரால் நெய்யப்பட்டன. அவற்றைத் தருவிக்கவே ஏகப்பட்ட செலவானது. அதை ஈடுகட்ட தனது மந்திரிகளுக்கும், ராஜ்ஜியத்தின் ஆளுநர்களுக்கும் புதிய வரிகளை விதித்தார் இப்ராஹிம். அவர்கள் கடுப்புடன் திரிந்துகொண்டிருக்க, ராஜ்ஜியத்தின் பூனைகள் சவரம் செய்யப்பட்டு மொழுக்கென அலைந்துகொண்டிருந்தன.

விலங்கு மயிருக்கு அடுத்து, வாசனைத் திரவியங்களை வகைதொகையின்றி வாங்கி நிரப்பினார். ஐரோப்பிய நகை வியாபாரிகளிடமிருந்து தன் தாடியில் சொருக வைரக்கல் முதல் ஆசைநாயகிகளுக்கான அட்டிகை வரை வாங்கிக்குவித்தார். உள்ளூர் மக்களின் வயிறு ஒட்டிக்கிடந்தது.

கி.பி.1642-ல் இப்ராஹிமுக்கும் அவரின் ஆசைநாயகி துர்ஹானுக்கும் முதல் மகன் பிறந்தான். இளவரசன் மெஹ்மத். ஒட்டோமான் பரம்பரையில் அடுத்த வாரிசு பிறந்துவிட்டதென மகிழ்ந்தனர். அதே சமயத்தில், அடிமைப்பெண் ஒருத்தியும் இப்ராஹிமால் கர்ப்பமுற்று, ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். இப்ராஹிம், அடிமைப்பெண்ணின் குழந்தை மீதே பாசத்தைக் கொட்டினார். அடிமைப்பெண்ணை இளவரசனின் வளர்ப்புத் தாயாக்கி அழகு பார்த்தார். இதனால், துர்ஹான் கோபத்துடன் வாக்குவாதம் செய்ய, இப்ராஹிம் அவளது கையிலிருந்த மெஹ்மத்தைப் பிடுங்கித் தண்ணீரில் எறிந்தார். வேலைக்காரன் ஒருவனால் வருங்கால சுல்தானின் உயிர் காப்பாற்றப்பட்டது.

அடுத்து ஓர் ஆசைநாயகி, இன்னொரு மகனைப் பெற்றெடுத்தாள் (இளவரசர் சுலைமான்). வேறு வேறு பெண்கள் வழியாக, வருடத்துக்குச் சில பிள்ளைகள் பெற்றுத் தன் வம்சத்தை விருத்தியாக்கிப் பெருஞ்சேவை செய்ததே சுல்தான் இப்ராஹிமின் ஒரே அருஞ்சாதனை! அதில் ஒரு தனிப்பெருஞ் சாதனையும் உண்டு. பசு சமாச்சாரம்.

பசு ஒன்று தன் வாலைத் தூக்கி, கோமியம் பொழிந்த பொழுதொன்றில், சுல்தானின் பார்வை அவ்விடத்தில் மையம் கொண்டது. அட! பசுவின் பிறப்புறுப்புதான் என்னே அழகு! லயித்த சுல்தான், பொற்கொல்லரை வரவழைத்தார். அதைப்போன்ற மாதிரி வடிவங்களைத் தங்கத்தில் செய்யச் சொன்னார். தயாராகின. ‘இதே மாதிரி அமைப்பு கொண்ட பெண்ணை எங்கிருந்தாவது பிடித்து வாருங்கள்!’

தங்க மாதிரிகளைக் கையில் ஏந்தியபடி, பலரும் ராஜ்ஜியமெங்கும், ராஜ்ஜியத்துக்கு வெளியேயும் அலைந்து திரிந்தனர். எப்படித் தேடினார்கள் என்பதெல்லாம் அவரவர் கற்பனைக்கு. அர்மேனியாவில் பெண் ஒருத்தி சிக்கினாள். அவளை இப்ராஹிம் முன் அழைத்து வந்தார்கள். 150 கிலோ பேருடலுடன் நின்ற அவள், சுல்தானுக்குப் பேரழகியாகத் தெரிந்தாள். பரிசோதித்ததிலும் பரம திருப்தி. பெயரைக் கேட்டார். ‘Sechir Para’ என்றாள். சர்க்கரைக் கட்டி என்று பொருள். சுல்தான் கட்டெறும்பு ஆனார். அவளோட ராவுகள் தித்தித்தன.

சர்க்கரைப் பெண் என்ன சொன்னாலும் சுல்தான் நம்பினார். ஒருமுறை விஷத்தைக் கிசுகிசுத்தாள். ‘நம்ம அந்தப்புரத்துல இருக்குற ஒருத்திக்கும் வெளியாள் ஒருத்தனுக்கும் தொடர்பு இருக்குதாம்.’ சுல்தானுக்குச் சினம் சிரசேறியது. பெயர், அடையாளம் எதுவும் தெரியாததால், அந்தப்புரப் பெண்கள் அனைவரையுமே மூன்று நாள்களுக்குச் சித்ரவதைகள் செய்தார். அப்படியும் யாரும் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.

‘அனைவரையும் தனித்தனியாகக் கோணிப்பையில் கட்டுங்கள்.’ சுமார் 280 பெண்கள் கட்டப்பட்டனர். அந்தக் கோணிப்பைகள் ஒரு கப்பலில் ஏற்றப்பட்டன. பொஸ்போரஸ் ஜலசந்தியில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். ஜல சமாதி.
கோஸெம் கோபத்தில் கொதித்தாள். பிற ஆசைநாயகிகளின் ஆக்கிரமிப்பால் அவளுக்கும், மகன் இப்ராஹிமுக்குமான உறவில் ஏற்கெனவே விரிசல் விழுந்திருந்தது. தன் தாயின் அதிகாரத்தைப் பிடுங்கிய இப்ராஹிம், அவளை டாப்காபி அரண்மனையிலிருந்து வெளியேற்றி, பழைய அரண்மனையில் ஒதுக்கிவைத்தார். 280 கொலைகளுக்குப் பிறகு கோஸெம், சர்க்கரைப் பெண்ணை அன்புடன் விருந்துக்கு அழைத்தாள். தொண்டைக்குழியில் உணவு இறங்கும் போதே, கழுத்தை நெரித்துக் கொன்றாள். ‘திடீரென உடல்நிலை சரியில்லாமல் செத்துவிட்டாள்’ என்று இப்ராஹிமிடம் சொல்லப்பட்டது.

ஏழு ஆசை நாயகிகளுக்குப் பிறகு, எட்டாவதாக வந்த ஹுமாஸாவை, ஆடம்பரமாக மணந்துகொண்டார் இப்ராஹிம் (கி.பி.1647). அவளுக்கு வரதட்சணையாக, ஒட்டோமான் பேரரசின் வசமிருந்த எகிப்தின் கஜானாவையே கொடுத்தார். ஒரு மாளிகையைக் கொடுத்தார். தன் சொந்த சகோதரிகளின் நகைகளை, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களைப் பிடுங்கிக் கொடுத்தார்.

‘வாரிசே இல்லையே என்றுதான் இப்ராஹிமை விட்டு வைத்தேன்.ஆண் வாரிசுகளைத்தான் பெற்றுப் போட்டுவிட்டானே. இனி அவன் எதற்கு?’ தாய்ப்பசு, பிரதம மந்திரி ஷாலியுடன் இணைந்து சதி செய்தது. இப்ராஹிம், சதியை மோப்பம்பிடித்தார். மந்திரி சபைக்கூட்டத்துக்கு வந்த ஷாலியை நிற்கவைத்துக் கேள்வி கேட்டார். ‘இஸ்தான்புல்லில் இன்னும் மாட்டுவண்டிகளும், குதிரைவண்டிகளும் ஏன் தடை செய்யப்படவில்லை?’

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 23 - பசுவின் அரசியல்!

ஒருமுறை சுல்தான் சென்ற பாதையில் இடையூறாக சில வண்டிகள் வந்துவிட, ஊரில் எவனுமே வண்டி வைத்துக் கொள்ளக்கூடாது என்று இப்ராஹிம் கிறுக்குத்தனமான உத்தரவு போட்டிருந்தார். அது நடக்கிற காரியமா? ஷாலியிடம் பதில் இல்லை. ஆகவே, கைது செய்யப்பட்டார். பின் கொல்லப்பட்டார்.

கீரிட் மீதான போரும், அதற்கான செலவினங்களும் இழுத்துக்கொண்டிருந்தன. (1669 வரை போர் நீண்டது). சுல்தானின் மடத்தனமான செய்கைகளினாலும் செலவுகளினாலும் ராஜ்ஜியத்தின் பொருளாதாரம் இருளடைந்து கிடந்தது. இந்த அசாதாரணமான சூழலிலும் புதிய பிரதம மந்திரி அகமது பாஷாவிடம், ‘நான் கேட்ட அளவு விலங்கு மயிரை ஏன் தருவிக்கவில்லை?’ என்று கோபப்பட்டுக் கொண்டிருந்தார் இப்ராஹிம். அகமது பாஷாவும் அழுத்தம் தாங்காமல், அந்தச் செலவினங்களுக்காக துருக்கி வீரர்களின் சம்பளத்தில் கைவைத்தார். அவர்கள் கொதித்தனர்.

தலைமை மதகுரு, இப்ராஹிமால் மானபங்கப் படுத்தப்பட்ட தன் மகளுக்காகப் பழிவாங்கும் தருணத்துக்காகக் காத்திருந்தார். கோஸெமும் கைகோக்க, இஸ்லாமியச் சான்றோர்கள் நிரம்பிய சபையினரும் ஆதரவு தெரிவிக்க, மதகுரு, துருக்கிய வீரர்களைப் புரட்சிக்குத் தூண்டினார். 1648, ஆகஸ்டு 8. டாப் காபி அரண்மனைக்குள் புகுந்த வீரர்கள், பிரதம மந்திரி அகமது பாஷாவைத் துண்டுதுண்டாக வெட்டி, அந்த மாமிசத்தைச் சந்தையில் விற்றனர்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 23 - பசுவின் அரசியல்!

சுல்தான் இப்ராஹிம் சுற்றி வளைக்கப்பட்டார். எட்டு ஆண்டுகள் ஆண்டு அனுபவித்த சுல்தான் பதவி, இப்ராஹிடமிருந்து பிடுங்கப்பட்டது. கைது செய்யப்பட்டு மீண்டும் அதே பழைய சிறையில் அடைக்கப் பட்டார். தலைவலித்தது. உடல் பதறியது. நிலைகுலைந்தார் இப்ராஹிம். கதறினார். ஏதேதோ பிதற்றினார். இரவுகளில் அவரது அழுகைச் சத்தம் வெளியே கசிந்து கொண்டிருந்தது.

கோஸெம், இப்ராஹிமின் வெறுப்புக்குரிய மகனான ஆறு வயது மெஹ்மத்தை, சுல்தான் நான்காம் மெஹ்மத்தாகப் பதவியேற்கச் செய்தாள். ‘இரண்டு சுல்தான்கள் இருக்க முடியாது. ஒருவரைக் கொல்வதுதான் நியாயம்’ - காட்மதர் கோஸெம் திருவாய் மலர்ந்தாள். மெஹ்மத்திடம், அவனுடைய தந்தைக்கான மரண தண்டனைக்கு உத்தரவு வாங்கப்பட்டது. இப்ராஹிமின் உத்தரவுப்படி, பலருக்கும் மரண தண்டனை நிறைவேற்றிய வீரன் ஒருவன், இப்ராஹிமுக்கும் மரண தண்டனையை நிறைவேற்றினான். வில்லின் நாண் ஒன்று, அவரது கழுத்தை நெரித்தது. சபை, சலனமின்றி அதைப் பார்த்துக் கொண்டிருந்த நாள், 1648, ஆகஸ்ட் 18.

நான்காம் மெஹ்மத் சார்பில், பிரதிநிதியாக ஆட்சி செய்தவள் கோஸெம்தான். தன் வாழ்நாளில் ஆறு சுல்தான்களைக் கண்டவள் அவள். 1661-ல் சதி ஒன்றில் வேலைக்காரத் திருநங்கையால் அவளும் கொல்லப்பட்டாள். ஆம், கழுத்து நெரிக்கப்பட்டுதான்.

- (வருவார்கள்.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism