Published:Updated:

இதோ எனது சரீரம் - நரன்

ஓவியங்கள் : செந்தில்

பிரீமியம் ஸ்டோரி

பாரிஸில் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்திலிருந்து நேர்க்கோட்டில் தொடங்கி இரண்டாகப் பிளவுறும் சர்ப்பத்தின் நாவைப் போன்ற வீதி அது. இடது பக்கமாகப்  பிரியும் 7-ம் அவென்யுவில் சாலையோர உணவகம் ஓன்று இருக்கிறது. சமதளத்தில் இற்றுப்போன மரஉணவு மேசைகளும், இருக்கைகளும், கால் உடைந்த மர பெஞ்சுகளும் பழமையும், அழுக்கும், தூசியும் படிந்த மலிவான உணவகம். அந்த உணவகத்தைப்போன்றே கால்கள் அற்ற, அழுக்குப் படிந்த, மிகுக் கசப்பும், மலிவான விலையும் கொண்ட மதுவை அருந்துவதில் விரு ப்பம் கொண்டவர்களும், கடன் சொல்லி உணவு உண்பவர்களும்தான் பெருமளவு வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். ஏழைக் குடிகாரர்
களிடையும், மூப்பிலும் வேலை தேடும் ஆண்களிடையேயும் இந்த உணவகம் வறட்சியான அந்தஸ்தை அடைந்திருந்தது. உணவகத்தைப் பெருமைப்படுத்தும்படியாகவோ, பிரத்யேகமாகக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகவோ ருசிகொண்ட எந்த உணவும் அங்கில்லை. பெரும்பாலும் பிரான்ஸின் நாட்டுப்புறப் பகுதியில் தயாரிக்கப்படும் மலிவான சில உணவு வகைகள்தான் அங்குண்டு.  

இதோ எனது சரீரம் - நரன்

அந்த உணவகத்தை 31 வயதான எமி நடத்தினாள். தான் ஓர் ஓவியக் காரியாகத்தான் வாழ வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த பெண் எமி. அவளின் தாய் இந்த உணவகத்தை அவள் வாழும் வரை நடத்திவந்தாள். அவளின் தகப்பனைப் பற்றி யாராவது கேட்கும்போது, “முறைகேடாகப் பிறந்த குழந்தைகள், முறையாகப் பிறந்த குழந்தைகள் இரண்டுமே பதினொன்றாம் மாதம் வரை தாயின் வயிற்றில் தங்குவதில்லை. தாயின் உடல் வெளித்துப்பிவிடும்” என்பாள். தன் வாழ்வில் நிறைய வரைந்திருக்கிறாள் என்றாலும் முறையாகப் படித்து முடித்ததும், அவள் வரைந்து பொதுவெளிக்குக் காண்பித்தது மூன்றே மூன்று ஓவியங்கள்தான்.

1. சற்று நேரத்திற்கு முன் நான்கு பிஞ்சு எலிகளை உண்ட பூனை, வாகனத்தில் அடிபட்டு இறந்த பின் அவசர அவசரமாக அதன் வயிற்றைக் கடித்துக் கிழித்து எலிகளை வெளியே மீட்கும் முயற்சியிலிருக்கும் மூன்று எலிகளின் உருவம் வரையப்பட்ட நீர் வண்ண ஓவியம்.

2. கண்கள் விரிய இறந்துகிடக்கும் சிறுவனைப் பார்த்து அழும் தாயின் கண்களிலிருந்து வழியும் கண்ணீர்த் துளி, திறந்துகிடக்கும் சிறுவனின் கண்களில் விழுந்து வழிவது, தன் தாய் அழுகையில் இறந்த சிறுவனும் அழுவதுபோல் பிரமையை ஏற்படுத்தும் ஆயில் வகை ஓவியம். 

 3. மூன்றாவது ஓவியம் மேற்பார்வைக்குப் புரியாத வகையிலும், பல உள்ளடுக்குக ளோடும், சிக்கலான தத்துவக் கோடுகளாலும் இருந்தது. அதிலிருக்கும் நிறங்களைக்கூட சரியாக யாராலும் விவரிக்க முடியாத
படியிருக்கும். அது மனதால் உணர்ந்து கொள்ள மட்டுமே  முடிந்ததாய், வார்த்தைகளால் விவரிக்க முடியாத தன்மையிலிருந்தது. அந்த ஓவியத்தை, அவள் கிட்டத் தட்ட தீவிரமான மனச்சிதைவை நோக்கி அது தன்னை நகர்த்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் வரைந்தாள்.

 முதல் ஓவியத்தை, யாரோ ஒருவர் உடற்கூர் பகுப்பாய்வு செய்யப்படும் அவரின் பரிசோதனைக்கூடத்தின் சுவரில் மாட்டவென வாங்கிக்கொண்டு போனார். எலிகள், ஒரு பூனையின் வயிற்றை கிழிப்பதைப் போலிருந்தது, அவரை அப்படியான முடிவெடுக்கத் தூண்டியிருக்கலாம். இரண்டாம் ஓவியத்தை வயதான செல்வந்தரின் மனைவி ஒருவள் வாங்கிக் கொண்டுபோனாள். கடந்த ஆண்டு செல்வந்தர் இறந்து போனதும், அவ்வளவு பெரிய பழமையான வீட்டில் தனித்து வாழ்கிறாள். கொஞ்ச காலம் முன்புவரை அவளின் பார்வை மழைக்குள்ளிருந்து உருவங்களைப் பார்ப்பது போலிருந்தது. இப்போதெல்லாம் அடர்த்தியான புகை மூட்டத்திற்குள்ளிருந்து உருவங்களைப்     பார்ப்பதுபோலிருக்கிறது. வாரிசுகள் இல்லாத அந்த மூதாட்டி, தன் சிறுவயது மகன் இறந்தபோது இருந்ததைப்போலவே இருப்பதாகச் சொல்லி, அந்த ஓவியத்தை வாங்கிப் போனாள். இப்போது ஓவியம் தன்னைப் பார்க்க ஜோடிக் கண்கள்கூட இல்லாமல் குருடாய்ச் சுவரில்தொங்கிக்கொண்டிருக்கிறது.    

இதோ எனது சரீரம் - நரன்

 உணவு  விடுதியோடு இருப்பிடமும் உள்ள இந்தக் கட்டடத்தை எமியின் அம்மா, தன் வாழ்நாள் முழுக்கச் சேமித்து வைத்திருந்த அத்தனை தொகையையும் கொடுத்து வாங்கினாள். எமிக்கு அப்போது 17 வயதிருக்கும். அவர்கள் ரெட்டைக் குடியுரிமை பெற்ற  இந்தியாவின் பாண்டிச்சேரியிலிருந்து தனது இருப்பிடத்தை இங்கே மாற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த உணவு விடுதியை அதற்கு முன் நடத்திவந்த மூதாட்டி, ‘இதற்கு மேல் நடத்த எனது உடல் ஒத்துழைக்க வில்லை’ என்று விற்பதற்குக் காரணம் சொன்னாள். அவள்தான் இந்த உணவகத்தை நடத்துவது பற்றிய அத்தனை சாதுர்யங்களையும், உணவகம் நடத்துவது சார்ந்த அபாயங்களையும், காசில்லாமல் சாப்பிட்டுவிட்டு பிரச்னை செய்யும் மோசமான வாடிக்கையாளர்களை எப்படி அடையாளம் காணுவது என்பது பற்றியும் எமியின் அம்மாவிற்குச் சொல்லிக் கொடுத்தாள். 

ஆனாலும், எமியின் அம்மா எல்லா      சாதுர்யங்களையும் கைவிட்டுவிட்டு, தமக்கு உணவு சமைப்பதோடு மேலும் ஒரு முப்பது பேருக்கு உணவு தயார் செய்ய வேண்டும் என்று மட்டுமே செயல்பட்டாள். நிரம்பக் குடித்துவிட்டு, காசு கொடுக்காமல் சாப்பிட்டுவிட்டு மறுநாள் காலையில் வந்து பணம் செலுத்துபவர்களும், பல நாள்கள் காசு கொடுக்காமல் உணவு உண்டவர்களும் வாடிக்கையானார்கள். உணவிற்குப் போகச் சொற்பத் தொகையை எமியின் படிப்பிற்காகவும்,தேவாலயத்திற்கு மாதம்தோறும் கொடுக்கும் தசமபாக ஈவுத் தொகைக்காகவும் உழைத்தாள். நாள்தோறும் உணவு தயாரிக்கத் தேவைப்படும் பண்டகப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் வாங்க தட்டுப்பாடு இல்லாமல் பணம் கிடைத்தால் போதுமென்பதே பெரும்பாலும் அவளின் ஜெப மாலை உருட்டலின் போதான முனங்கலாகயிருந்தது. வீட்டை விற்றவள் போக்கிடமில்லாமல் தன் மிச்சவாழ்நாள்களான ஒன்பது மாதங்களை இவர்களோடுதான் கழித்தாள். எமியின் அம்மா, அவளுக்குத் தினமும் ஆகாரம் கொடுத்து, பராமரிப்பும் செய்தாள். அவளின் இறுதிச் சடங்கையும் அவளே செய்தாள். தேவாலயப் பணமும், கல்லறைப் பணமும்கூட எமியின் அம்மாதான் கொடுத்தாள். 

இதோ எனது சரீரம் - நரன்ஒருமுறை எமியின் அம்மாவை அழைத்த மூதாட்டி, “இந்த வீட்டில் இதற்கு முன் இளைஞன் ஒருவனை வாடகைக்கு அமர்த்தி இருந்தேன். வித்தியாசமான பல நடவடிக்கைகள்கொண்ட இளைஞன் அவன். பிரெஞ்சில் எழுதி எந்த ஒரு புகழும், அங்கீகாரமும் கிடைக்காத ஆனால், முக்கியமான கவிஞன். அவனின் சொற்பக் கவிதைகளே பிரசுரம் கண்டிருக்கின்றன. மற்ற கவிதைகளைப் பிரசுரித்து, வாடகைத் தொகைக்குப் பதிலாக எடுத்துக்கொள்ளுமாறு சொல்லி, ஒருநாள் கத்தை கத்தையான காகிதங்களைக் கொடுத்தான். அதில் சிலவற்றைப் பிரசுரிக்க அனுப்பி, அதன் தொகையை நான் எடுத்துக்கொண்டேன். தொகைக்காக நான் அதை அனுப்பவில்லை. இதழ்களில் அது பிரசுரிக்கப்பட வேண்டு மென்பதில் எனக்கு ஆசையிருந்தது. பின் அவனின் நிறைய கவிதைகள் என்னிடமே தங்கிவிட்டன. இந்த உணவகத்தின் கடைசியிலிருக்கும் மர மேசையின் வலது ஓரம்தான் எப்போதும் உட்கார்ந்து சாப்பிடுவான்.  வேறு   யாராவது   அமர்ந்து
சாப்பிட்டுக்கொண்டிருந்தால், அவர்கள் முடிக்கும்வரை காத்திருப்பான். வேறு இருப்பிடம் இருந்தாலும் அங்கு உட்கார மாட்டான். அதுபோலவே, பல வருடங்களாக இந்த உணவகத்தில் இருப்பதிலேயே விலை மலிவான சோயா கஞ்சி மாதிரியான உணவையே எல்லா முறையும் விரும்பி உண்பான். உண்டு முடிந்ததும் எந்தத் திசையிலிருந்து முதலில் பறவையைப் பார்க்கிறானோ, அன்று அந்தத் திசை நோக்கிப் பயணிப்பான்.

இடத்தையோ தூரத்தையோ நோக்கி அமைத்துக்கொள்ளாமல், தன் கையிலிருக்கும் கடிகாரத்தில் ஏதேனும் ஒரு நேரத்தைக் குறித்துக் கொண்டு அந்த நேரத்தில் எந்த இடத்தில் வாகனம்   சென்றுகொண்டிரு க்கிறதோ, அதை நிறுத்தி அங்கே இறங்கிக்கொள்ளும் பழக்கத்திலிருந்தான். எவ்வளவு நீளமான கேள்விகள் கேட்டாலும் மிகச் சிறிய பதிலையே சொல்பவனாய் இருந்தான்.”

மூதாட்டி ஒருமுறை அவனின் புகைப்படத்தைக் காண்பித்தாள். அவன் மிக அழகான இளைஞனாக இருந்தான். அது அவனின் இருபத்தியொரு வயதில் எடுக்கப்பட்டது என மூதாட்டி சொன்னாள். ‘சார்ல்ஸ் டி லீவிஸ்’- அவனின் கண்கள் வறுக்கப்படாத காப்பிக் கொட்டை நிறத்தில் இருந்ததாகச் சொன்னாள். எமியின் அம்மா சுகக் கேடாய்க் கிடந்து மரித்த மூன்றாம் நாளிலிருந்து எமி  உணவகத்தை நடத்தத் தொடங்கினாள்.  

ஒரு விடுமுறை தினத்தில் மூதாட்டி, லீவிஸின் அறையென அடையாளம் காட்டிய அறைக்குப் போய், அவன் உபயோகப்படுத்திய மர மேசையின் இழுப்பறையிலிருந்து கத்தைக் கத்தையாகக் கறுப்பு நிற மையால் கவிதை எழுதப்பட்ட பழுப்பு நிறக் காகிதங்களை எடுத்தாள். மூதாட்டி பலமுறை சொல்லியிருக்கிறாள், “பல நாள்கள், குறை வெளிச்சமே தரும் மஞ்சள் குண்டு பல்பின் ஒளியில் ஒரு கையில் ஒயினும், மறுகையில் அவன் கவிதைகளையும் அருந்தியிருக்கிறேன்.” அதன்பிறகு, பல நாள்களில் எமியின் அம்மாவும் அவ்வாறே செய்தாள். சில நாள்களில் எமியின் அம்மா மிகுந்த போதையில் ஒயின் பரவிய உதடுகளால் லீவிஸின் புகைப்படத்திற்கு முத்தமிட்டிருக்கிறாள். பின்னாள்களில் எமியும் அவ்வாறே செய்தாள்.   அதேபோல,  குறைமஞ்சள் வெளிச்சம், ஒயின், லீவிஸின் கவிதைகள்... கவிதைகளை உரத்து வாசிப்பாள்.  அந்நாள்களில் அக்கவிதைகளைக் கேட்பவளும், வாசிப்பவளும் அவளாக மட்டுமே இருந்திருக்கிறாள். முடிவில் லீவிஸின் புகைப்படத்தை நீண்ட நேரம் முத்தமிடுவதோடு, கிறக்கமான அந்த இரவு முடியும்.

மூதாட்டி, அவன் திரும்பி வராத நாளிலிருந்து பல நாள்கள் அவனைத் தேடித் திரிந்திருக்கிறாள். இப்போது எமி தேடத் துணிந்து அவனைக் கண்டுபிடித்தாள். அப்போது அவனுக்கு 32 வயதாகயிருந்தது. அவன்  13 வருடங்களாக அதே வயதோடு உறைந்துபோய் விட்டதாக மார்ச்சுவரி பாதுகாப்பாளர்  சொன்னார். யாரும் உரிமை கோர வரவில்லை. ஆனால், ஒருநாள் யாரேனும் வரக்கூடும் என்ற நம்பிக்கையில் உடலை வைத்திருந்ததாகச் சொன்னார். நீளமான இழுப்பறை மாதிரி இருந்த ஒன்றை இழுத்து உறைந்த உடலைக் காட்டினார். கொஞ்சமாகத் தாடி வைத்திருந்தான். தலையில் நிறைய முடிகள். திறந்த கண்களுக்குள் வறுக்கப்படாத காப்பிக்கொட்டை நிறத்தைத் தேடினாள். நிச்சயமாக லீவிஸ்தான் அது.

இறந்த உடலிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அதன்பிறகு, வாரம் ஒருமுறை அங்கே வருவதை பெரும் உவப்பாகச் செய்தாள். மார்ச்சுவரிக் காப்பாளனுக்கு அதற்கெனப் பெரும் தொகை கொடுக்க வேண்டியதாயிருந்தது. பிறந்தநாள், கிறிஸ்துமஸ் என்று சொல்லி சில நாள்களில் விடுதிப் பாதுகாவலனின் உதவியோடு லீவிஸின் உடலுக்கு புது ஆடை வாங்கி வந்து உடுத்திவிட்டாள். காப்பாளன் ஆடையை உரிக்கும்போது தன்னிலிருந்து பீறிடும் காம உணர்வை அறிந்தாள். காப்பாளனுக்குப் பணம் வந்துகொண்டிருந்ததால், இந்தக் கிறுக்குத்தனங்களைச் சகித்துக்கொண்டான். ஒருமுறை தனது மூன்றாம் ஓவியத்தைக் கொண்டுவந்து லீவிஸின் காப்பி நிறக் கண்களிடம் காட்டினாள். லீவிஸின் கவிதைகளுக்கும் அந்த ஓவியத்திற்கும் இருக்கும் நேர்க்கோட்டுத் தன்மையை அவன் காதில் சந்தோசமாய் விளக்கிக் கூறினாள். அவள் வீடு திரும்புகையில் ‘மொடூஸ் ஆர்ட் கேலரி’யிலிருந்து எமியின் ஓவியத்தைக் காட்சிப்படுத்த கடிதத்தின்  மூலம் அழைப்பு வந்திருந்தது. எமி பரபரப்பாகக் காட்சிக் கூடத்திற்குச் செல்லும்போது உடுத்தியிருக்க வேண்டிய உடையை வடிவமைக்கத் தொடங்கினாள். மணல் நிற சாட்டின் வகை துணியைத் தேர்ந்தெடுத்து, முழுநீள ஃப்ராக் வகை உடையைத் தைத்தாள். உடையில் மார்பிருக்கும் இடத்தில், முதுகுப்புறம், வயிற்றுப் பகுதியில், புட்டமிருக்கும் பகுதியில், முக்கோணக் கீழ் உள்ளாடையில் எனக் குறிப்பிட்ட இடங்களில் லீவிஸின் கவிதைகளைக் கருப்பு மையினால் எழுதிவைத்தாள். தன் பாதணி, இடையின் மேல் கோக்கும் தோல்வகை இடைவார் மீதும், தன் மிகச் சிறிய கைப்பையின் மீதும்கூட லீவிஸின் கவிதை வரிகளை எழுதியிருந்தாள்.

கேலரிக்குச் செல்லும் நாளில், ஆடையை அணிந்துகொண்டு நேராக மார்ச்சுவரிக்குச் சென்று லீவிஸைப் பார்த்தாள். வழக்கம்போல் லீவிஸின் காப்பி நிறக் கண்கள் அவளை இமைக்காமல் பார்த்தன. அவனின் உதடுகள் கொஞ்சமாய் புன்னகைப்பது போலிருந்தது. அதிகமாகக்  குளிரும் என்பதால் அவன் விரும்பிக் குடித்த ‘பால் மால்’ பிராண்ட் சிகரெட்டை அவன் உதட்டுக்குப் பொருத்தி எடுத்து, பொருத்தி எடுத்துக் கரைத்தாள். அந்த சிகரெட் தன்னைத் தானே குடித்துக்கொண்டு கரைந்தது. அதன் இறுதி உறிஞ்சலை மட்டும் மறுப்பேதும் சொல்லாத அந்த உடலிடம் கேட்டு வாங்கி உறிஞ்சினாள். கேலரியில் வழக்கம்போலவே நல்ல கூட்டம். அவளுடன் உடன் படித்த, ஓவியத்துறையில் பொருளாதாரரீதியில் புகழ்ரீதியில் முன்னேற்றம் அடைந்த நிறைய பேர் வந்திருந்தார்கள். அவர்களெல்லாம் தொழில்முறையாக நிறைய வரைபவர் களாகவும், அதைச் சரியான முறையில் விளம்பரம் செய்து பெருந்தொகைக்கு விற்கக்கூடிய கலை தெரிந்தவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் எமியின் உடையைக் கூர்ந்து பார்த்தார்கள். அது நிறைய பேரைக் கவர்ந்தது. எல்லோருடைய கண்களும் எமியின் ஆடையை, கைப்பையை, பாதணியை, இடை வாரை நோக்கின. அதில் எழுதப்பட்டிருந்த கவிதைகளைச் சில கண்கள் அருகில் வந்து வாசித்தன. வாசித்த எல்லா கண்களும் அகல விரிந்தவாறும், நெற்றியைச் சுருக்கியவாறும் உறை நிலையிலிருந்தன.   

இதோ எனது சரீரம் - நரன்

எமி தனது ஓவியத்தைச் சுவரில் தொங்க விட்டாள். சிலர் அதை உச்சபட்சக் கிறுக்குத்தனம் என்றும், தன் ஓவியத்தில் வலுவில்லாததால் இப்படியாக உடையின் வழியே போலிக்கவர்ச்சி ஏற்படுத்துகிறாள் என்றும் விமர்சனம் செய்தார்கள். வழக்கம்போலவே, ‘ஏழாவது வருடமாக அதே ஓவியத்தைக் காட்சி வைத்து எல்லோரையும் கடுப்பேற்றுகிறாள்’ என்று பேசிக்கொண்டார்கள். ராணுவத் தலைமையகத்தின் சந்திப்புக் கூடத்தில் தொங்கவிட எமியின் ஓவியத்தை பெருந்தொகைக்கு விலைக்குக் கேட்பதாக கேலரியின் மேலாளர் எமியை அணுகினார். எவ்வளவு கேட்டும் எமி மறுத்துவிட்டாள். அந்த உயர் ராணுவ அதிகாரி அதிலிருக்கும் நிறங்களை வைத்து மையமாக அது ராணுவ வீரர்களைப் பற்றிய ஓவியம் என்பதைத் தாம் புரிந்துகொண்டதாய்ச் சொன்னார். பெரிய தொகைக்குக் கேட்டார். அந்தத் தொகை, ஏதோ ஒருவகையில் மக்களின் வரிப்பணமாகப் பெறப்பட்ட தொகையாகத்தான் இருக்கும் என்பது எமிக்குத் தெரியும். அதனால்தான் எந்த விதக் குற்ற உணர்வும் இல்லாமல் அவ்வளவு பெரிய தொகையை அந்த அதிகாரி அளிக்க முன்வருவதாக நினைத்தாள். ஆனாலும், அந்த ராணுவ அதிகாரி ஓவியத்தின் சரிபாதியைப் புரிந்துகொண்டுவிட்டான் என்பது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. எமி மறுத்ததும் இன்னும் அரை பங்கு விலையை உயர்த்தித் தருவதாக அந்த அதிகாரி சொன்னார். கேலரியின் மேலாளரும் மிகவும் வற்புறுத்தினார். கேலரிக்கு இதன் மூலம் 13 சதவிகிதம் கமிஷனாகக் கிடைக்கும். எமி மறுதலித்து ஓவியத்தைக் கழற்றி எடுத்துக்கொண்டு போனாள். மற்ற ஓவியர்கள் பொறாமையோடு மேலாளரை அணுகி, தமது ஓவியத்தை விற்றுத் தரும்படிக் கேட்டார்கள். அதிகாரி எமியின் ஓவியத்திலேயே கருத்தாயிருந்தார்.

 எமி வீட்டிற்கு வந்து கதைவடைத்தாள். லீவிஸைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. இந்த இரவில் அது சாத்தியமில்லை என்பதால், அறையெங்கிலும் பெரிய மெழுகுவத்திகளை ஏற்றினாள். ஆடைகளை உரித்து, தன் எதிரே தொங்கவிட்டாள். ஆடை இல்லாத உடலோடு அதன் எதிரே அமர்ந்தாள். சூடான சிறு மஞ்சள் இலைகள் மெழுகின் தலையில் அசைந்தன. சிவப்பு நிற ஒயினை நிறமற்ற கண்ணாடிக் குவளையில் ஊற்றி மிடறினாள். மஞ்சள் வெளிச்சத்தில் லீவிஸின் கவிதைகள் வாசிக்க வாசிக்கப் பெரும் வசீகரமாயிருந்தன. நள்ளிரவு வரை அதே மயக்கத்தில் இருந்தாள். இறுதியாக, கவிதை வரிகள் எழுதப்பட்டிருந்த தன் கீழ் உள்ளாடையையும் உரித்தாள். முழுநீளக் கண்ணாடியில் தன் உடலைப் பார்த்தாள். உடல் முழுக்க ஓரிடம்கூட விடாமல் லீவிஸின் கவிதைகள் எழுதப் பட்டிருப்பதுபோன்ற தோற்ற மயக்க நிலைக்கு ஆட்பட்டாள். நள்ளிரவாகி விட்டது. எமியின் வீட்டு மரக்கதவு தன் நெஞ்சை ஓங்கித் தட்டிச் சப்தமிட்டது. எமி திடுக்கிட்டு அவசரமாக ஆடையை அணிந்தாள். மிகுந்த ஜாக்கிரதை உணர்வோடு கதவைத் திறந்தாள். மங்கிய நிறத்தில் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். எமியின் வயதிருக்கலாம் அவனுக்கு. பிரெஞ்சு உச்சரிப்பில் வேறு நாட்டிலிருந்து இங்கே குடி அமர்ந்தவன் என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்தது. அவளின் ஓவியத்தைக் காண வந்திருப்பதாகச் சொன்னான். இந்த நள்ளிரவு நேரத்தில் அது நம்ப முடியாதபடி இருந்தது. காலையில் வந்து காணும்படிக் கொஞ்சம் கடுமையாகச் சொல்லிக் கதவைத் தாழிட்டாள். அவன் மூடிய கதவின் வெளியிலிருந்து பேசினான்.  “காலையில் நான் இந்த நாட்டிலேயே இருக்க மாட்டேன். வெளியேற்றப்பட்டு விடுவேன். உண்மையாகவே அப்படியிருக்க வாய்ப்பு உண்டு.” அவன் எங்கேயோ கிளம்பிச் செல்பவன்போலத்தான் இருந்தான். நிறைய பொதிகளோடு, செவ்வக வடிவத் துணிகளை அமர்த்தும் பெட்டியோடு, முதுகில் சுமக்கும் பெரிய பயணப் பையோடு.

 அவன் மீண்டும் மரக்கதவின் நெஞ்சில் மெல்ல அறைந்தான். மிகுந்த பாதுகாப்பு உணர்வோடு கதவை மீண்டும் திறந்தாள். ஓவியம் இருக்கும் திசையை அவன் கண்களுக்குச் சுட்டிக்காட்டினாள். அவன் அதை ஒரு நிமிடம்கூடப் பார்க்கவில்லை. ``இதை எனக்கு விலைக்குக் கொடுக்க முடியுமா?’’ என்று கேட்டான். ஒரு நிமிடம்கூட ஓவியத்தில் நிலைக்காத அவன் கண்களின் மீதும், அவன் மீதும் எமிக்கு நம்பிக்கை வரவில்லை. “தர முடியாது” என்று கூறிவிட்டாள். அவன், தன் சிறிய கைப்பையிலிருந்து பணத்தை எடுத்து அருகிலிருந்த மர மேசையின் மீது கொட்டினான். அது அந்த ராணுவ அதிகாரி தருவதாகச் சொன்னதில் எழுபத்தைந்தில் ஒரு பங்குதான் இருக்க வாய்ப்பு உண்டு. “நான் ஓவியத்திற்குப் பதிலீடாகப் பணம் மட்டும் பெறுவதில்லை. அதைச் சரியாகப் புரிந்துகொண்டு ரசிக்கத் தெரிந்த ஜோடி கண்களையும்தான். இந்த ஓவியத்தைப் புரிந்துகொண்ட அப்படியான ஜோடிக் கண்களை நான் இதுவரைக் கண்டடையவில்லை” என்று எமி சொன்னாள். “நான் இந்த ஓவியத்தை ஏழு ஆண்டுகளாகப் பின்தொடர்கிறேன். ஓவியத்தைப் பார்த்த முதல் நாளே ஓவியத்தின் எதிரே அமர்ந்தபடி, காலையிலிருந்து கேலரி மூடப்படும் வரை அதை உள்வாங்கிக்கொண்டிருந்தேன். மரச் சட்டத்தைவிட்டு என் முன் அசையும் காட்சிகளாக அதன் வண்ணங்கள் எல்லா முறையும் பரிணாமம் கொள்கின்றன. எல்லா கேலரிகளின் கண்காட்சிகளிலும் உங்கள் பெயரைத் தேடுவேன். அரிதாக நீங்கள் அந்த ஓவியத்தைக் காட்சிப்படுத்தும்போது அதன் எதிரே அமர்ந்து இரவு வரை பார்த்துக்கொண்டிருப்பேன். இந்த ஓவியத்தை வாங்க வேண்டுமென்பது என் நீண்ட கால ஆசை” என்று அவன் சொன்னான். தன் ஓவியத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு அதைக் கொடுப்பதில்லை என்றும், அது நியாயமற்ற செயல் என்றும் எமி அவனுக்குச் சொன்னாள். “அந்த ஓவியம் வெளிப்படுத்தும் அத்தனை வலிகளும் எனக்குத் தெரியும். சொந்த மண்ணிலிருந்து அகதியாய் புலம் பெயர்ந்தவன் நான். அந்த ஓவியத்தின் நிறங்களும், கோடுகளும், என் ரத்தமும்,நரம்புகளும் ஓவியத்தில் ஆங்காங்கே சிதறுண்டு கிடக்கும் துளிர், அடர், சருகு இலைகளின் நிறங்கள் ராணுவவீரர்கள், துரு நிறத்திலிருக்கும் சிதறல்கள் அவர்களின் ஆயுதங்கள், தெளித்தது போலிருக்கும் இளஞ்சிவப்பு நிறங்கள் குழந்தைகள், பெண்கள்...” ராணுவ அத்துமீறல்களை இந்த ஓவியம் வலியோடு வெளிப்படுத்துகிறது என்பதை இன்னும் பல உடைந்த சொற்களால் தொடர்பற்று வலி மிகுந்த குரலால் சொல்லிக்கொண்டே யிருந்தான். அகதி வாழ்வின் வலியைப் புரிந்துகொண்ட அல்லது அகதியாய் வாழ நிர்பந்திக்கப்பட்ட ஒரு படைப்பாளியால்தான் இதை வரைந்திருக்க முடியும் என்று அவன் சொன்னபோது, எமியின் கண்களில் நீராய் வழிந்தது.

ஏழு ஆண்டுகளாக, இந்த ஓவியத்தை உண்மையாகக் காணும் கண்களுக்காகத்தான் அவள் ஏங்கிக்கொண்டிருந்தாள். ஓவியத்தை எடுத்துக்கொள்ளும்படிச் சொன்னாள். பணம் வேண்டாமென்று மறுத்துவிட்டாள். பணத்தைப் பெற்றுக்கொண்டால்தான் ஓவியத்தைப் பெற்றுக்கொள்வேன் என்றான். பணத்தைப் பெற்றுக்கொள்ள எமி சம்மதித்தாள். ஓவியத்தை ஆசை தீரப் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பத் தயாரானவனிடம் எமி கேட்டாள்,

 “ஓவியத்தை எடுத்துச் செல்லவில்லையா?” 

“இல்லை இந்த ஓவியத்தைத் தொங்கவிட எனக்குச் சொந்தமாய் ஒரு சுவரும் இல்லை.  இது உன்னிடமே இருக்கட்டும். இன்னொருமுறை வர வாய்த்தால், நான் இங்கே வந்து பார்த்துக்கொள்கிறேன்.”

சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பினான். அவன் அங்கிருந்து நகரும்போதுதான் எமி கவனித்தாள். அவனின் கண்களும் வறுக்கப்படாத காப்பிக்கொட்டை நிறத்திலிருந்தன. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு