Published:Updated:

கோட்டை - சிறுகதை

கோட்டை - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
கோட்டை - சிறுகதை

சிறுகதை: நர்சிம், ஓவியங்கள்: செந்தில்

கோட்டை - சிறுகதை

சிறுகதை: நர்சிம், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
கோட்டை - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
கோட்டை - சிறுகதை

 “ரேசன் கடைல என்ன போடுறாங்க, கோட்ட?”

“சண்ட போடுறாகத்தா”

சமயம் என்றால் சரியாக வராது, டைமிங் என்பதே பதம். இப்படியான டைமிங் பதில்களால் தன்னோடு பேசும் எவரையும் தனக்கு நெருக்கமாக ஆக்கிவிடுவான் கோட்டை... எங்கோ தெற்குப் பக்கத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். வார்த்தைக்கு வார்த்தை ``அங்க, ஊர்ல எங்களுக்குக் கோட்டகணக்கா வீடு இருந்துச்சாம், தெரியுமா?” என்பதால் கோட்டை என்பது ஆகுபெயர் ஆகிற்று.  பத்தாவது படிக்கும்போது அவன் தந்தையும் இறந்து போக, ஊருக்குள் ஒண்டியாளாகத் திரிகிறான்.

மற்றபடி, ரேசன் கடைதான் அவனுடைய வசிப்பிடம். அவன்தான் அங்கு ராஜா. எப்போது, எப்படி வேலைக்குச் சேர்ந்தான் என்று அவனுக்கே தெரியாது. பரமகுரு என்ற ரேசன் ஆபீஸர் இருக்கும்போது இத்துனூண்டு நோஞ்சானாக இருந்தவன், தெருவில் யாருக்கேனும் சில்லறை மாற்ற வேண்டும் என்றால், நேராக ரேசன் கடைக்குப் போய் மாற்றிக்கொண்டு வந்து தருவான். அப்படிச் சில்லறை மாற்றப் போகும்போது அங்கு ரேசன் கடையில் எடுபிடியாக இருந்த முருகேசன் இவனிடம், “முக்குக் கடைல டீ வாங்கிட்டு வாடா, அப்பிடியே நீ ஒரு வருக்கி வாங்கிக்க” என்று காசைக் கொடுக்க, இவனும் சில்லறை மாற்றக் கொடுத்த லிங்கம் வீட்டிற்கு ஓட்டமாய் ஓடிக் கொடுத்துவிட்டு, டீ கிளாஸ்களை வட்ட வடிவக் கம்பியில் வைத்துக்கொண்டு நடப்பதே ஏதோ ஆகாயத்தில் நடப்பது போன்ற பாவனையில் போவான்.

கோட்டை - சிறுகதை

“இர்றா, டீகிளாஸ ஒங்கப்பனா கொண்டு போய்க் குடுப்பான்” என்ற ரேசன் ஆபீஸரின் வார்த்தைகள் அவனை அங்கு, சீனி மூட்டையின் மேல் அமரச் செய்தன. அப்படி அமர ஆரம்பித்தவன், அதே சீனி மூட்டையை ஒற்றை ஆளாய்த் தூக்கி மேலே ஏற்றும் கட்டுமஸ்து கோட்டையாக ஆகிவிட்டான். பரமகுருவிற்குப் பிறகு நான்கைந்து அரசு ஊழியர்கள் வந்து போய்விட்டார்கள். ஆனால், ஊரைப் பொறுத்தவரை கோட்டைதான் ரேசன் கடை அதிபதி.

சிட்டையில் எழுதவேண்டியவை, தனித் துணுக்கில் எழுதிக் கிழிக்கவேண்டியவை, ஒதுக்க வேண்டியவை, பதுக்க வேண்டியவை என சகலமும் கோட்டைக்கு அத்துப்படி. மாதச் சம்பளம் என ஏதும் இல்லை அவனுக்கு. ஆனால்,  அன்றாடங்கள் செழிப்பாய்க் கழிந்துவிடுவதால் அப்படியே இருந்துகொண்டான்.

மண்ணெண்ணெய் ஊற்றும் நாள் வந்தால் ஊரில் திருவிழாதான்.

முதல்நாள் இரவில் பேரல்கள் வந்து இறங்கும் போதே அக்கப்போருகள் ஆரம்பமாகிவிடும். லாரி ரிவர்ஸ் எடுக்கும்போதே கூட்டம் கூடிவிடும். கோட்டையின் குரலில் கட்டளைத்தன்மை அப்போதே குடிகொண்டுவிடும்.

“ரைட்டுல ஒடிப்பா. நீ ஒரு இத்த பய, இப்பிடி நிப்பாட்டுனா எங்குட்டு எறக்குவ?” என லாரி டிரைவரை சகட்டுமேனிக்குக் கத்துவான். அது தெருமக்களுக்கு அவன் கொடுக்கும் குறிப்பு. “வாருங்கள், வந்து பாருங்கள், மண்ணெண்ணெய் பேரல்கள் இறங்கியிருக்கின்றன, நான் நாளை ராஜா” என்ற அழைப்பு அது.

லாரி அகன்ற நொடியிலேயே மெள்ள கூட்டம் கூட ஆரம்பிக்கும். சிறுவர்கள்தான் கத்திக்கொண்டே பேரல்மீது ஏறித் தாவுவார்கள். உள்ளே மண்ணெண்ணெய் ததும்பும் சத்தம் கேட்க, இன்னும் உற்சாகமாய் ஆட்டுவார்கள்.

“போறீங்களா, அடி பின்னவாடா” கோட்டை அவர்களை விரட்டிவிட்டு, பேரல்களைச் சுவரை ஒட்டி ஓரமாய் நிறுத்திவிட்டு அதன்மீதே படுத்து விடுவான்.

அப்படிப் படுத்திருந்த கோட்டைக்கு அருகில் போய் நின்றாள் தவுடு. அதிகாலை ஐந்து மணி என்பதால் தெருவில் வாசல் தெளிக்கும் சத்தம் கேட்கத் துவங்க, கோட்டை, சடவு முறித்துக்கொண்டு எழுந்தான். தெருவின் நடுவே, சற்று உள்வாங்கி, வாசலில் நிறைய இடம் இருக்கும் வீடுதான் ரேசன் கடைக்கு வாடகைக்கு விடப் பட்டிருந்தது. வாசலில் அம்பாரமாய் வளர்ந்திருந்த வேப்பமரம், வரிசையில் நிற்பவர்களுக்கு நிழல் வரம் தரும் தரு. வீட்டின் வாசற்பக்க ரூமை அடைத்து, ஜன்னலைக் கவுன்ட்டராக ஆக்கி, அதன் வலமும்  இடமும் ஆண் பெண் என வரிசையில் நிற்க வைக்கலாம். இப்படி வாங்கிக்கொண்டு அப்படிப் போய்விடலாம் என்பதுபோன்ற அமைப்பு.

``என்னா தவுடு, காலங்காத்தாலயே வந்துட்ட?”

தன் ஊத்தவாய் நாற்றம் வெளியேறி விடாமல் மானம் காத்துக்கொள்வதில் கவனம் செலுத்திப் பேசினான் கோட்டை. ஏனெனில், தவுடுவின் அழகு அப்படி.

“சீமெண்ண ஊத்துறியாம்ல இன்னிக்கு, அதான் வரிசைல கல்ல வச்சுப்புட்டுப் போலாம்னு.”

“ஒனக்கெல்லாம் எதுக்கு வரிச, மதியம் வா, ஊத்திவிடுறேன். சத்தமில்லாம போய்ட்டே இரு.”

“ஆமா, நிய்யி வாய்ப்பந்தலப் போடு. கூட்டம் கூடிருச்சுன்னா ஒன்னயக் கைல புடிக்க முடியுமா? என்னா கத்து கத்துவ, அடுத்தாளு முன்னாடி அசிங்கப்படணும், எதுக்கு வெட்டியாவுல” தவுடு சலித்துக்கொண்டாள்.
வீட்டில் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் தங்காமல் இறந்துபோய்விட, இவள் பிறந்த நொடியில் பக்கத்து வீட்டு அம்மாளிடம் இவளைக் கையில் கொடுத்து, அவர்களிடம் மாட்டுத் தவிட்டைக் கொடுத்து, பதிலுக்குக் குழந்தையைப் பெற்றுக்கொண்டார்கள் தவிட்டின் பெற்றோர். அப்படிச் செய்தால் குழந்தை தங்கிவிடும் என்பது ஊர் நம்பிக்கை.  “தவுட்டுக்கு வாங்கிய பிள்ளை தங்காமப் போகுமா” என்பார்கள். போலவே, தங்கிவிட்டாள். அவளைப் போல் ஊரில் யாராலும் களை பறிக்க முடியாது. சல் சல்லென வயலில் அவள் முன்னேறிச் செல்லச் செல்ல அவள் பின்னால் களைகள் அகலும். ஓர் இயந்திரம் போல் முன்னேறுவாள். அவளோடு பறிக்கும் பெண்டிர் “செத்த மெதுவாத்தான் போயேன்” என்பார்கள், ஈடுகொடுக்க முடியாமல். போலவே, நாற்று நடுகையைப் பார்த்தே சொல்லிவிடலாம், அது தவுடு நட்ட வரிசை என. நூல் பிடித்தாற் போலிருக்கும் துல்லியம்.

“அட, என்னா தவுடு, நான் என்னா வேணும்ட்டேவா சவுண்டக் கொடுக்குறேன். அப்பிடிக் கத்தி அமட்டலேண்டா நம்மளயும் சேர்த்து வித்துப்புடுவாய்ங்க. ஆமா இன்னிக்கு வயக்காட்டப் பக்கம் போகலயா?”
“தெங்கா வயலப்பக்கம் வேல கெடக்குன்னு சொல்லுச்சு அங்கம்மா. போனா இன்னிக்குப்  பொங்கித் தின்னலாம்னு கெழவி சொல்லுச்சு. அதுக்குள்ளயும் ஒத்தப்பல்லு ஓடிவந்து, சீமத்தண்ணி பேரலு கெடக்குன்னு கத்திட்டுப் போய்ட்டான். ரவைல தூங்கவே விடல கெழவி, போய் கல்ல வையி கல்ல வையின்னு பிடுங்கி எடுத்துருச்சு.”

கோட்டை இப்போது பேரலிலிருந்து தாவி இறங்கினான். உடலைச் சோம்பல் முறிப்பது போல் தன் புஜபலம் காட்டினான் அவளிடம்.

“நீ தெற்குவாசல்ல இருக்க, ஒங் கைலி காரியாப்பட்டில கெடக்கு” என்றாள் சிரித்துக்கொண்டே.

 “டவுசர்தான் போட்டுருக்கம்ல” எனச் சொல்லிக்கொண்டே கைலி நுனியை வாயில் கவ்வி, மர்மப்பிரதேசங்களை இலகுவாக்கி கைலியை டப்பாக் கட்டு கட்டிக்கொண்டே,

“எத்தன லிட்டரு?”

“காசு இல்ல, ரெண்டு லிட்டரு போதும்.”

“சரி போ, அஞ்சு லிட்டரு நுரை இல்லாம அடிச்சு வெக்கிறேன். நைட்டு வந்து தர்றேன்.”

ஆள்காட்டி விரலைச் சற்று மடக்கியவாக்கில் நீட்டி,

“கோட்ட, அப்புறம் இல்ல, நொல்ல, மறந்து போச்சுன்னு சொன்ன, கெழவி என்னய உசுரோடவே விடாது ஆமா.”

“அடப் போத்தா போ... அதான் சொல்றேன்ல”

 காலை பத்துமணிக்கே ஜேஜேயெனக் கூட்டம் கூடிவிட்டது ரேசன் கடையில். கோட்டை, இரும்பு ஸ்டேண்டை வேப்பமரத்தின் அடியில் போட்டான். அது பேரலைக் கிடத்தினால் சாய்வாக அமரும் விதம் வடிவமைக்கப்பட்ட ஸ்டேண்டு. பின்புற உயரம் கூடுதலாக இருப்பதால், பேரலை அதில் கிடத்தி சிறிய முக்காலியை எதிரே போட்டு அமர்ந்தால் எட்டூருக்கு  மண்ணெண்ணெய் ஊற்றலாம். வேப்ப மர நிழலும் குளுமை. ஆனால், ஆண்டுக்கணக்கில் மரத்தின் வேரில் மண்ணெண்ணெய் ஊற்றி ஊற்றி, மரத்தின் அடிவேர் பட்டுப்போய் இருந்தது. “அதெல்லாம் சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட மரமப்பா... அதுபாட்ல நிக்கும்” என பேரலை அதில் கிடத்தி `ட’ வடிவத் திருப்புளியைக் கொண்டு குழாயைப் பொருத்தி, எதிரே அமர்ந்து, ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் கூம்பு வடிவக் கொள்கலன்களைக் காலுக்கடியில் வைத்துக்கொண்டு, தான் தயார் என்பதுபோல் சத்தம் எழுப்பினான்.

“கார்டுல பதிஞ்சுட்டு லைன்ல வா, ஊடால வந்தா டின்னப் பிடிங்கித் தின்றுவேன் பார்த்துக்க.”

அதற்கு முன்பு வரை முகமன் கூறி வணக்கம் வைத்த பொண்டு பொடுசு பெரியாம்பள என எவரையும் இனி கண்டுகொள்ள மாட்டான். அந்த முக்காலியில் அமர்ந்துவிட்டான் எனில் தர்பார்தான்.

“என்னா கோட்ட, ஆளு கெறங்குனமாதிரி இருக்கு, ரேசன் அரிசிய அள்ளித் திண்ணு எளந்தாரி” வம்பிழுத்த சூரியகாந்தியம்மாளைத் திரும்பியே பார்க்காமல், “கார்டு இருந்தாத்தான் எண்ணெ, இல்லாட்டி ஒரு வெண்ணெயும் இல்ல.”

அவள் தாடையைத் தோளில் இடித்துக்கொண்டு போனாள், “கார்டு இருந்தா உங்கிட்ட நான் ஏண்டா பேசப்போறேன்” என்பது இடித்துரைத்ததன் அர்த்தம்.

இந்தக் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் நான், இன்று என் ஆதர்ச நாயகன் கமலின் குணா படம் ரிலீஸ் ஆகிறது என்பதால், சட்டம் என் கையில் கமல் மன்றம் சார்பில் என் மன்றத்தினருடன்    அபிராமியில் இருக்க வேண்டிய சூழல் என்பதாலும், அதைவிட முக்கியமாய், கோட்டையின் அந்தரங்க உணர்வுகளை அவனே சொல்கிறேன் என்று கூறியதாலும், இங்கிருந்து அவன் சொல்வதைக் கேளுங்கள்...

“பார்த்தும்மா, தவடாக்கட்டை ஒடஞ்சுறப்போவுது”-குழாயைத் திறந்து கேனில் பிடித்துக்கொண்டே கத்தினேன்.  மண்ணெண்ணெய் வாசம் நாசிக்குள் ஏற ஏற எனக்குக் கிறுகிறுத்தது. புதிய அழிரப்பர், சோப்புக் கட்டிக் கீறல், எண்ணெய் என வாசனைகள்மீது எனக்குப் பிடித்தம் உண்டு. குறிப்பாய், சாணியைத் தவிட்டில் புரட்டி எடுத்து வறட்டி தட்டும்போது எழும் வாசம். வெயில் ஏற ஏற வழக்கம்போல் கால் எரியத் துவங்கியது. அந்த இடமெங்கும் மண்ணெண்ணெய் வாசம். லேசாக பக்கவாட்டில் எட்டிப்பார்த்தேன். ரெட்டைமண்டை வீடு வரை வரிசை நின்றிருந்தது. எப்படியும் இருட்டிவிடும்.

மளமளவென ஊற்றிக்கொண்டிருந்தேன். அம்பத்தாறுப் பெரிசு போன்ற கொஞ்சம் விவரமான ஆட்கள் எனில் சற்று நிதானித்து அளவு சரியாக ஊற்றியும், ஏப்பை சாப்பைகளை நுரையடித்தும் அனுப்பிக்கொண்டிருந்தேன்.

“கொஞ்சம் நிப்பாட்டிப் பதிண்ணே, சூடு தாங்கல” என்று ஜன்னல் பக்கம் சத்தம் கொடுத்தேன். படக்கென ஜன்னலைச் சாத்திக்கொண்டார். கண்ணெரிச்சல் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்ததுபோல் இருந்தது. ஆனாலும் வேகம் குறைக்காமல் கேன்களை நகர்த்திக்கொண்டிருந்தேன்.

“என்னா லிங்கம், கேனு ரொம்ப சிறுசா இருக்கே...”

“அட, பெரியப்பன் வீட்டுக் கார்டையும் சேர்த்து எடுத்தாந்தேன் கோட்ட, கண்ணு வைக்காத.”

“இப்பிடியே அங்காளி பங்காளி சொத்த ஆட்டையப் போடுங்கடா.”

லிங்கம் என்னோடு பத்தாவது வரை படித்தவன். அதற்குப் பிறகு அவன் டவுனுக்குள் போய்ப் படித்தான். நான் ரேசன் கடையே கதி என்று இருந்துவிட்டேன்.  லிங்கம் பேச ஆரம்பித்தானென்றால் அறுத்துத் தள்ளிவிடுவான். அவன் நடந்து வருவதை தூரத்தில் பார்த்தவுடனேயே “பசிக்குது, சாப்புட்டு வந்துர்றேன்” என நழுவுவார்கள். அதனால் அவனை “பசிக்குது லிங்கம்” என்றுதான் அழைப்போம். இந்த ஊரிலேயே அவனைத் தேடிப்போய்ப் பேசும் ஒரே ஆள் நானாய்த்தான் இருப்பேன். ஏனெனில், அவன் வீட்டின் அமைப்பு, முகப்பு விஸ்தாரமாய் இருக்கும். எட்டுக் கற்படிகள். சிறியதாய் ஆரம்பித்துப் படிப்படியாய்ப் பெரிதாகி, எட்டாவது படி வீட்டின் அகலத்தில் பாதி இருக்கும். அதைத்தாண்டியதும், தரையில் சங்கு பதிக்கப்பட்டிருக்கும். கால்தடம் பட்டுப் பட்டு அது பளீரென வழுவழுப்பாக, தரையிலிருந்து அரை இன்ச் துருத்திக்கொண்டு இருக்கும். நான் என் உள்ளங்கால் அதில் படும்படி நிற்பேன். அதன்பிறகு ஒரு கோட்டையின் அமைப்பில் அவன் வீடு விரிந்து குறுகி மீண்டும் விரிந்து முடியும்.

மொட்டை மாடியிலிருந்து பார்த்தால், புகைக்கூண்டுகளுக் கெனத் தனியாக எழுப்பப்பட்ட கூண்டுகள் பிரமாண்டமாய் இருக்கும். மேலே நெல் காயப்போட்டு அதை அப்படியே தள்ளிவிட்டால் குதிருக்குள் சென்றுவிடும்படி அமைக்கப்பட்ட ஓட்டைகள். அதை மூடியிருக்கும் கூம்பு வடிவ மர மூடிகளைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் செருகுவேன். அந்த மரமூடிகளின் வேலைப்பாடு அவ்வளவு அற்புதமாய் இருக்கும். கிட்டத்தட்ட ஒரு சிறிய மாட்டுமுகம் போல இருக்கும். கீழே, வீட்டு முகப்பில் கொம்புகள் எல்லாம் உடைந்து உதிர்ந்துபோன மான் தலை இரண்டு, தகுந்த இடைவெளி விட்டு, சுவரில் பதிக்கப்பட்டிருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோட்டை - சிறுகதை

நான் அவனைப் பார்க்கப் போகும்போதெல்லாம் அவன் அப்பா, “கோட்ட, சீனி மூடய மட்டும் கொஞ்சம் இங்கிட்டு அடிச்சு விடப்பா, புண்ணியமாப்போகும்” என்பார். அவ்வளவு பெரிய கோட்டை வீட்டில் நுழையும்போதே எனக்குப் பெருங்காய வாசனை மூக்கைத் துளைக்கும். லிங்கத்தின் அண்ணன், ஏதேதோ புத்தகங்களைப் படித்து, ஆட்களைப் பிடித்து, பெருங்காயத் தூளைச் சிறிய டப்பாவில் அடைத்து விற்கும் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். இதற்கு முன்னர் பாத்திரம் தேய்க்கும் களிம்புத் தயாரிப்பில் இருந்தவர்.

“ஒங்க ஊரப்பக்கம்தாண்டா எங்க பெரிசு அந்தக்காலத்துல சர்வேயரா இருந்தாராம். நீ என்னடான்னா படிக்காம கொள்ளாம இங்க அனாத மாதிரி ரேசன் கடைல கெடக்க.”

“அத விடுங்க... இத்தாமொக்க வீடு கோட்ட கணக்கா கெடக்கு, ஒரு வெள்ளயக் கிள்ளய அடிக்கலாம்ல, வீடு பூராம் நூலாம்பட” என நான் சற்று உரிமையாகப் பேசுவேன்.

“நூலாம்பட சப்போர்ட்டுலதாண்டா கட்டடமே நிக்கிது... நீ வேற... இந்தா, இந்த ஒரு பக்கச் சொவத்துக்குச் சுண்ணாம்பு அடிக்கவே எம்புட்டு ஆகும் தெரியுமா? யார் பண்ண பாவமோ, அல்லாடுறோம். யார் பண்ண புண்ணியமோ, இங்கனக்குள்ளயே மிச்ச சொச்சமா கெடக்கோம்.” 

சிரித்துக்கொண்டே லிங்கத்தோடு பின்புறம் சென்றுவிடுவேன். ஏனெனில், எப்படி அந்த வீட்டின் அமைப்பிற்காகச் செல்கிறேனோ அதைவிடவும் முக்கியமான இன்னொரு காரணம், அவனின் பெரியம்மா மகள், லிங்கத்தின் அக்கா ஆவுடைத்தாய். அவளுடைய திருத்தமான, வட்ட வடிவ முகம். மலர்ந்து சிரித்தாள் எனில் அவள் கண்களும் சிரிக்கும். என்னிடம் பேசவே மாட்டாள். என் கண்களை எப்போதும் முறைப்போடுதான் கடப்பாள். பெரும்பாலும் நான் போகும் சமயங்களில், குளித்து முடித்து, பின்புறமிருந்து உள்ளே செல்லும் நீண்ட நடையில், ஈர உடையில் மார்புவரை கட்டிய பாவாடையோடு வருவாள். அவள் தலைமுடி பிருஷ்டம் வரை நீண்டு சரசரக்கும்.  நான் சட்டெனத் திரும்பிக்கொண்டாலும், அவள் முறைப்பது என் முதுகை ஊடுருவும்.

இரண்டு பேரல்கள் முடித்து மூன்றாவதை ஸ்டேண்டில் ஏற்றும்போது மணி மதியம் மூன்றைத் தொட்டிருந்தது. பசி வயிற்றிலிருந்து கர் புர் எனச் சத்தம் எழுப்ப, பேரலை மாற்றிக் கொண்டிருக்கும்போதே கடைக்குள்ளிருந்து குரல் கொடுத்தார்.

“கோட்ட, பேரல் சீல் ஒடைக்காத. வா, சாப்புட்டுப் போ.”

வரிசையில் நின்றிருந்த கற்பகம் பரிதாபமாய் என்னைப் பார்த்தாள். “காலைல இருந்து நின்னு கால் வலிக்குது கோட்ட. ஊத்திவிட்டுப் போ.”

“சீல ஒடச்சா, அப்புறம் நிப்பாட்ட முடியாதுக்கா. வேற ஆளும் மாத்திவிட இல்ல. சரி விடு, அப்புறமா சாப்புடுறேன்” என ‘ட’ வடிவத் திருப்புளியை எடுத்தேன். பதறிவிட்டாள்.

“சாப்பிட்டுப்புட்டு வா.”

அவள் சொல்லும்போதே கடைக்குள் பிரியாணிப் பொட்டலத்தைப் பிரித்திருந்தார்கள். வாசம் என்னை உள்ளே தூக்கிக்கொண்டு போனது.

சாப்பிட்ட தெம்பில் சரசரவென ஊற்றி, பேரல்களை முடித்துவிட்டு, எழுந்தேன். இருட்டு அப்பிவிட்டிருந்தது. இடுப்பு அப்படியே அடுப்பில் வைத்து வாட்டியதுபோல் வலித்தது, எரிந்தது. கூன் விழுந்த ஆளைப்போல சில அடிகள் நடந்தேன். ஆனால், என்னை நிமிரச் செய்தது, தெருவில் தட தடவென ஓடிவந்த கணேசன் என்னைக் கட்டிக்கொண்டு சொன்ன செய்தி. “கோட்ட, நம்மாளு கிட்டக்கூட வரமுடியாது. ஒரேடியா ஊத்திக்கிச்சு அங்கன... ஊ...ஊஊ... தலைவரு என்னா ஆக்டிங் தெரியுமா?” நானும் கணேசனும் ‘மேரி அதாலத்’ ரஜினி மன்ற உறுப்பினர்கள். “ஸ்டெயில் இருக்கா, இல்ல அந்தாளு இருட்டுக்குள்ளயே விட்டுத் தேக்கி இருக்காப்பளயா?” நான் கேட்டதும் சற்று குழம்பிய கணேசன், “அத விடப்பா, டக்கரு படம். ராக்கம்மா கையத் தட்டு” என்று சொடுக்குப் போட்டுக்கொண்டே வெற்றியறிவிப்பைச் சொல்ல, மேலும் முன்னேறி ஓடினான். நான் சலூன் சேகரிடம் சொல்லி வைத்திருந்தேன். நெற்றிக்கு மேலே இருபுறமும் லேசாய் குடைந்துவிட்டு வழுக்கைபோல் சிரைத்தால் கொஞ்சம் தலைவர் சாயல் வந்துவிடும் என மேரி அதாலத் குழு நம்பினோம்.

என் இருப்பிடம் என்பது, ரேசன் கடை குடோனுக்கு வலதுபுறம் கொஞ்சம் சிறிய இடம். மூடைகளின் முடை நாற்றத்தைவிடவும் ஒட்டி இருக்கும் பாத்ரூமிலிருந்து வரும் மூத்திர நாற்றம் மிஞ்சிவிடும் அளவில் இருக்கும். நான், குளிப்பதற்கும், மூடைகளின் மேல் கயிற்றைக் கட்டி என் உடைகளைத் தொங்கவிடவும் மட்டுமே அதைப் பயன்படுத்தி வந்தேன். மூடைகளுக்கு இடையே என் பெட்டி. மிச்சம் இருக்கும் பணத்தைப் போட்டுப் பூட்டி வைப்பேன். அங்கு நடமாடும் பெருச்சாளிகளின் அளவைப் பார்த்தால், ஒருநாள் என் பெட்டியையே தின்றுவிடும் என்பது போல் இருக்கும். குளித்து முடித்து, மந்தையில் மூக்கன் பரோட்டா ஸ்டாலில் ஒரு கட்டு கட்டினேன் என்றால் அதன்பிறகு மந்தையம்மன் கோவில் மரத்தடியோ, ரேசன் கடை வேப்பமரத்தடியில் கிடக்கும் காலி பேரல்களோதான் என் படுக்கை.

குளித்துவிட்டு, லிங்கத்தைப் பார்க்கக் கிளம்பினேன். நான் போவதற்குள் அவன் வந்துவிடக்கூடாது. பிறகு அவன் வீட்டிற்குப் போக முடியாது. ஓட்டமும் நடையுமாய்ப் போனேன். காற்று உப்பி அடைக்கப்பட்ட புதிய ஷாம்பூ பாக்கெட் என்றாலும் மண்ணெண்ணெய் வாசனை என்னை விட்டுப் போகவில்லை. கையெல்லாம் புண் வந்தது போல் எரிந்தது.

வாசலிலேயே ஆவுடைத்தாய் உட்கார்ந்திருந்தாள். அவள் பார்க்காத போது நான் பார்க்க வேண்டும் என்ற நினைப்பில் கீழே பார்வையைத் தாழ்த்தினேன். தவறாகிப்போனது. கெண்டைக்கால் வரை பாவாடை ஏறி, லேசாய் ரோமம் படர்ந்த கால்களை நான் வேண்டுமென்றே பார்க்கிறேன் என நினைத்தவள் சட்டெனப் பாவாடையைத் தளர்த்தி முற்றாகக் கால்களை மறைத்துக்கொண்டு,

“இந்நேரத்துக்கு என்ன இங்க?” என்றாள், கடுகடுவென.

“லிங்கம்”

“அவன் பஞ்சாய்த்து ஆபீஸ்ல டிவி பார்க்கப் போயிருக்கான்” விருட்டென உள்ளே போய்விட்டாள்.

நான் நகர எத்தனிக்கும்போது தவுடு ஓடி வந்தாள்.

“கோட்ட, டின்னு எங்க?”

சுரீர் என்று மூளைக்குள் நெருப்பு கொட்டியது போலிருந்தது.

நான் தடுமாறியதைக் கவனித்தவள்,

“அதான. ஒனக்கு இந்த வீட்டு ஆவுடைத்தாயிதான் கதி, என் நெனப்பு எங்குட்டு வரும்? எங்காத்தா என்னயக் கொன்னு குழிதோண்டிப் புதைக்கப்போகுது. வயல்ல இம்புட்டு நேரம் வளைஞ்சே நிண்டதுல இடுப்பே ஒடஞ்சு போச்சு. இன்னிக்கு ரவைக்குத் தூங்குனமாதிரிதான்.”

கோட்டை - சிறுகதை

“அட நீ ஒருபக்கம், பேளப்போன எடத்துல பூனைப்பிய்யி நாத்தம் கணக்கா நசநசன்னு... இரு...”என யோசிக்க அவகாசம் வாங்கி, “நடராஜன் கடைல அஞ்சு லிட்டர் கேன கொடுத்து வச்சுருக்கேன். யாரும் பார்த்துட்டா சிக்கல் ஆகிரும்புள்ள, அதான்” என அவளை நம்ப வைத்தேன்.

ஏனெனில், என் பெட்டியில் பணம் இருக்கிறது. அவளுக்குத் தெரியாமல் சற்று கூடுதல் பணம் கொடுத்து பலசரக்குக் கடையில் மண்ணெண்ணெய் வாங்கி, நான் எடுத்துவைத்த ரேசன் கடை எண்ணெய் எனக் கொடுத்துவிடுவதாக முடிவு செய்திருந்தேன். பாவம் அவள், என்னை நம்பித்தான் வேலைக்குப் போனாள்.

“நான் ரெண்டு லிட்டருக்குத்தான் காசு வச்சுருக்கேன்.”

``அட ஒங்காச யாரு கேட்டா?” என நான் அவள் முகம் பார்த்தேன். உதட்டைச் சுழித்து கொன்னை வழித்துத் திரும்பிக்கொண்டாள்.

நான் லிங்கம் வீட்டிற்குள் மீண்டும் எட்டிப்பார்த்தேன். ஆவுடைத்தாய் திண்ணையில் இருட்டில் நிற்பது நிழலாடியது போல் இருந்தது.

“சரி நீ போ. நான் போய் எடுத்துட்டு வர்றேன்.”

நான் என் அறைக்குப் போய் பெட்டியைத் திறந்து பணத்தை எடுத்துக்கொண்டு மந்தைக்குப் போனேன். லிங்கம் அங்கு இல்லை.

“என்ன தூத்துக்குடிக்கே உப்பா? ஒனக்கே மண்ணெண்ணெயா, என்னப்பா விசயம் கோட்ட?” நடராஜன் அண்ணாச்சி உண்மையிலேயே ஆச்சர்யமாகக் கேட்டார்.

“குடுண்ணே குடுண்ணே” என வாங்கிக்கொண்டேன். பணம் வாங்க மறுத்துவிட்டார். “நாள பின்ன அரிசியக் கிரிசிய அடிச்சு விடு.”

“அதெல்லாம் முடியாதுண்ணே...”

“அட காசு குடுத்து கார்டுல பதிஞ்சுதானப்பா... என்னா, உங்காளு மூட வந்தா சொல்ல மாட்டேங்குறாரு... நீ சொன்னா மொதா கையா நான் தூக்கிருவேன்.”

“ம்ம்.”

மந்தைக்கு வலப்புறம் இருந்த சந்தில் இருந்தது தவுட்டு வீடு. வெளியில்தான் நின்றுகொண்டிருந்தாள். வலி போக, குளித்திருப்பாள் போல. பல்பு வெளிச்சத்தில் இளங்கறுப்பு நிறத்தின்மீது மஞ்சள் பூசியது போன்ற அழகில் இருந்தாள்.

“இந்தா” எனக் கொடுக்க, உள்ளே இருந்து கெழவியின் குரல் வந்தது.

“அதார்றா, கோட்டையா?”

“ஆமாத்தா.”

“ஒரு வாய் நீச்சத்தண்ணி குடிச்சுட்டுப் போடா.”

“வேணாம் வேணாம். எண்ணெயக் குடுத்துருக்கேன் பொங்கித் தின்னு.”

“மருமகனா வாடா, தலக்கறி போடுறேன் எடுபட்ட பயலே.”

கிழவி சிரித்துக்கொண்டே சொல்ல, தவிட்டின் முகத்தில் வெட்கம் பரவியது.

``வருவம் வருவம்.”

நான் காலி பேரலில் படுத்திருந்தேன்.வெள்ளிக்கிழமை என்பதால் தெருவே வெறிச்சென இருந்தது. ஒளியும் ஒலியும் முடிந்தால்தான் வெளியே வருவார்கள். திடீரென லிங்கம் என்னை நோக்கி மூச்சிரைக்க ஓடிவந்தான். அவனுக்குப் பின்னால் அவன் அண்ணன். லிங்கத்தை முந்திய அண்ணன் என் அருகில் வந்தவுடன்தான் கவனித்தேன், அவர் கையிலிருந்த கட்டையை. அருகில் வந்தவர், ஒரே போடாய் என் தலையில் போட்டார். நான் சுதாரித்து, விலக, அடி காலி பேரலில் விழுந்து பெருத்த சத்தம் எழுப்பியது. என் உடற்கட்டிற்கு அந்தாளைப் பிளந்துவிட முடியும். ஆனால் ஏனோ, என்னால் அவரை எதிர்த்து அடிக்கக் கை வரவில்லை. சட்டென அங்கிருந்து நகர முற்பட்டேன்.

“ஏண்டா, இருக்க எடம் குடுத்தா படுக்க பாய் கேட்குதோ?” மீண்டும் கட்டையால் அடித்தார். இம்முறை மரத்தில் பட்டதில் மரம் அசைந்து கொடுத்தது.

 “ஆவுடத்தாய எந்நேரமும் நோட்டம் விடுறயாம், குளிக்கப்போகைல போறியாம், கெண்டக்காலக்கூட விடமாட்றியாம். அனாதத் தாயளிக்கு ஆவுடத்தாயி கேட்குதோ?”

கேட்கக் கூடாத வார்த்தையைக் கேட்ட துக்கம் என்னை நிலைகுலையச் செய்துகொண்டிருந்தது. என் அனைத்து ஆத்திரத்தையும் சேர்த்துவைத்து, ஒரே அடிதான் அடித்தேன். லிங்கத்தின் அண்ணன் சுழன்று நின்றார். லிங்கம் அரண்டுபோனான். பொறுமையாகச் சொன்னேன்.

“அண்ணே, நானும் தவுடும் கல்யாணம் கட்டப்போறோம். தேவையில்லாம இந்நேரத்துல கொளத்துல கல் எறியாதீங்க, போயிருங்க.”

இருவரும் என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே போனார்கள்.

லிங்கம், நான், உங்களுக்கு என் கதையைச் சொல்ல ஆரம்பித்தானே அவன் - மூவரும் பத்தாவது வரை ஒன்றாகப் படித்தவர்கள். அவன் கமல் ரசிகன் என்பதால் கொஞ்சம் விலகி இருப்பான். லிங்கத்தின் மீது நான் தீராத ஆத்திரத்தில் இருக்கிறேன். அண்ணனுக்குத் தெரியாது, அவனுக்குமா தெரியாது என்னைப் பற்றி.. இதோ, மதியம் மண்ணெண்ணெய் ஊற்றும்போது போனவன் ஆடி அசைந்து வருகிறான் பாருங்கள். இனி அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.

ஊர் அடங்கிய பிறகுதான் வரவேண்டும் என நினைத்து, ஒன்பது மணி சங்கு ஊதியதும்தான் தெருவிற்குள் நுழைந்தேன். ஏனெனில் அபிராமி தியேட்டரில் பட்ட அவமானம் அப்படி. படம் ஏதோ கிறுக்கர்களுக்கான படம் போல் இருந்தது. ஒருவேளை இன்னும் பத்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடக் கூடும். ஆனால், இன்று அதுவும் தளபதி எனும் அதிரடிப் படத்தின் முன் படுதோல்வி அடைந்த வலி எங்கள் ரசிகர் மன்றத்திற்கு. படம் குறித்த வேதனையை லிங்கம்தான் போக்கினான். “கோட்ட இந்தமானிக்கப் பண்ணிட்டாண்டா” என்ற லிங்கத்தின் வார்த்தையை என்னால் நம்ப முடியவில்லை. நேராக கோட்டை இருக்கும் இடங்களுக்குப் போனேன். மந்தை, தியேட்டர் கேன்ட்டீன் என எங்கும் இல்லை. நிச்சயம் ரேசன் கடை குடோனில் இருக்க மாட்டான் என நினைத்துக்கொண்டேதான் போனேன். ஆனால், இருந்தான். புழுக்கமும், மூத்திர நாற்றமும், அரிசியின் முடை நாற்றமும் வாந்தி வரவைத்தன எனக்கு.

“கோட்ட, டேய் கோட்ட...”

“என்னா பங்கு, ஒங்காளு படம் ஊத்திக்கிச்சாம்ள? தலைவருன்னா தலைவருதாண்டி, அடி ராக்கம்மா டன்னன்ன...”

கோட்டை உள்ளே இருந்து உற்சாகமாகப் பேசுவதுபோல் கத்தினாலும் அவன் குரலில் துக்கம் தோய்ந்திருந்தது. வேறு வழி இல்லாமல் உள்ளே போனேன்.

அறுபது வாட்ஸ் பல்பில் மூட்டைகளின் மேல், ஒரு காலை மடக்கி, அதன் மேல் கை வைத்து தோரணையாய் அமர்ந்திருந்தான்.

கோட்டை - சிறுகதை

“என்னாடா” என்று இருட்டு பழகாமல் நடந்தேன். என் கால் தடுமாறியதில், மூட்டை மேல் இருந்த அவன் பெட்டி தெறித்து விழுந்தது.


எடுத்து வைத்தவன் அதிர்ந்துபோய்க் கேட்டேன்.

“என்னடா, ஆவுடத்தாய் போட்டோவ வச்சுருக்க, அப்ப நெசந்தானா... ‘பசிக்குது லிங்கம்’ சொல்லும்போதுகூட நம்பலடா கோட்ட.”

“நல்லா பாருடா... அது எங்கம்மா.”

பல்புக்கு நேராக இழுத்தேன். ஆம். பழுப்பேறிய கறுப்பு வெள்ளையில், பக்கவாட்டில் சாய்ந்து அமர்ந்து, பெரிய சடையை முன்னால் விட்டு, மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள். 

வெளியே, பெருஞ்சத்தத்தோடு வேப்பமரம் முறிந்து விழுந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism