மாற்றங்கள் அவசியம் அய்யனார்
நுனியில்
குத்திவைத்த எலுமிச்சை
சாறுகளற்று
மஞ்சள் மறந்து சூம்பிப்போய்
சிலையின் கீழ்
நிழலுக்கு ஒதுங்கும்
வழிதப்பிய கிடைமாட்டின் கழுத்தில்
மெல்ல இறங்குகிறது
கறுத்த கூர் நிழல்
கீறிய அதன் கைப்பிடியில்
ஏதோ போதிக்கிறது
இளைப்பாறும் பட்டாம்பூச்சி
ரொம்ப நேரமாய்
ஆறுபேர் தூக்கிவந்து
சொருகி வைத்த கருவி
பார்த்துவிட்டது
மழை வெயிலென
நிறையப் பருவங்கள்
எல்லைக்குள் நுழையும்
சாணை பிடிப்பவன்
நேர்த்திக்கடன் முடிந்து
நிமிர்ந்து பார்ப்பான்
ஆச்சரியமாய் அதன் நீளம்
ஓங்கி உயர்ந்த ஆகிருதி
தடித்த முறுக்கு மீசை
ஊர்காக்கும் பணியாளர்
பிடித்திருக்கும் புஜபலமெனப்
பெருமூச்சுவிடுபவரால்
கண்டுகொள்ளப்படாதது
அத்தனையும் சுமக்கும் மண்குதிரையே
என்றாவதொருநாள்
யார் கனவிலோ வந்து
துருவேறிய
அம்மாம்பெரிய அரிவாளை
மாற்றச்சொல்லவிருப்பவர்
கேட்கப்போவது
பலியாடுகளை மட்டுமே.
- கார்த்தி

ஜியோ விடு தூது
பொருள்வயின் பிரிந்த தலைவன்
மானாமதுரை மல்லிகையோடு
எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தினின்று 48Y ல் திரும்பிக்கொண்டிருக்கிறான்
பசலையால் மெலிந்த தலைவியே
பிணக்கை மறந்து ஹமாமில் நீராடி
அவன் விரும்பும் மதுரை சுங்குடி அணிந்து
குரோட்டன்கள் மலர்ந்த முற்றத்தில்
காத்திருப்பாயாக.
- ஸ்ரீதர்பாரதி
காலப்பெருவெளி...
கருக்கொண்ட வானம்
இடைவிடாது பொழிகின்ற
கார்த்திகை அடைமழையில்
சாலையைக் கடக்கின்ற
தாயின் கண்ணீர்க்கோடு
கரைந்து மறைகின்றது
தோண்டி எறியப்பட்ட
கல்லறைகளில் இருந்து
சிதறி விழுந்த
மணல் துளிகள்
மழையில் கரைந்து
அழுகின்றன
அன்றொருநாள் தூவப்பட்ட
பூக்களின் நினைவுகளில்
வேலியோரப் பூவரசு
இலைகளைச் சொரிந்து
கிளைகளை அசைக்கின்றது
மூடிய வாய்களுக்குள்
பேசப்படும் வார்த்தைகளும்
இசைக்கப்படும் கீதங்களும்
உள்ளங்களில் தீபம்
ஏற்றுகின்றன
அடித்தும் உடைத்தும்
வீசப்பட்ட சிதிலங்களில்
தெரிகின்ற முகங்களில்
சிந்தப்படும் புன்னகையில்
உயிர்க்கின்றது காலப்பெருவெளி...
- தி.வினோதினி
