Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 25 - நான் அசைந்தால் அசையும்…

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 25 -  நான் அசைந்தால் அசையும்…
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 25 - நான் அசைந்தால் அசையும்…

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 25 - நான் அசைந்தால் அசையும்…

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 25 -  நான் அசைந்தால் அசையும்…
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 25 - நான் அசைந்தால் அசையும்…

ன்குபேட்டரில் வைக்க வேண்டிய குழந்தையாகத்தான் 1991-ல் துர்க்மெனிஸ்தான் பிறந்தது. பொருளாதாரம் சூம்பிக்கிடந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருத்துக்கிடந்தது. புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருந்த சபார்முராத் நியாஸோவ்மீது மக்கள் அதீத நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த துர்க்மென்பாஷியின் நிர்வாக மாயாஜாலங்களால் துர்க்மெனிஸ்தான் விரைவிலேயே சொர்க்கபுரியாக ஜொலிக்கும் என்று மனதார நம்பினர். ஆனால், தாங்கள் அமோகமாகத் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர், பரிசுத்தமான சர்வாதிகாரி என்று அவர்கள் உணர்ந்துகொள்ள கொஞ்ச காலம் பிடித்தது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 25 -  நான் அசைந்தால் அசையும்…

நியாஸோவ், கருத்துச் சுதந்தரத்தின் கழுத்தை நெரித்தார். மீடியாவின் மூச்சை நிறுத்தினார். எதிர்க்கட்சிகளுக்குத் தெவசம் செய்தார். தன்னைக் கடவுளாகச் சித்திரித்துக்கொண்டார். துர்க்மெனிஸ்தானின் இயற்கை வளங்களான எரிவாயு, எண்ணெய், மின்சாரம் போன்றவற்றின் மூலம், தான் எப்படி பணத்தில் கொழிக்க முடியும் என்று அக்கறையுடன் திட்டமிட்டார். தன் அதிபர் பதவியை பத்தாண்டுகள் வரை நீட்டித்துக் கொண்ட அவர், 1999-ல் தன்னை வாழ்நாள் அதிபராகவும் அறிவித்துக்கொண்டார்.

இந்தச் சர்வாதிகாரப் போக்கை மக்கள் எதிர்க்கவில்லையா?

திருடன் ஒரு வீட்டில் திருடப்போகும்போது, நாய் குரைத்தால் அதை அமைதியாக்க பிஸ்கட் போடுவான் இல்லையா. அதுபோல, தன் நாட்டின் வளங்களைத் திருடுவதற்கு ஏதுவாக, மக்கள் எப்போதும் குரைக்காமல் இருக்க ‘இலவசங்களை’ பிஸ்கட்டாகப் போட்டார் நியாஸோவ். அந்த மனம் மயக்கும் அறிவிப்பு, அவர் அதிபரான சில காலத்திலேயே வெளியானது. ‘என் அன்புக்குரிய துர்க்மெனிய மக்களுக்கு அடுத்த பத்தாண்டுகளுக்கு மின்சாரம் இலவசம். எரிபொருள் இலவசம். தண்ணீர் இலவசம். சுத்திகரிக்கப்பட்ட உப்புகூட இலவசம். அரசுப் பணியாளர்களுக்குச் சம்பள உயர்வு. உணவுப் பொருள்களுக்கான மானியம் உயர்வு. வாழ்க மக்கள்! வளர்க என் புகழ்!’ இலவசங்களையும் சலுகைகளையும் விட்டெறிந்தால், மக்கள் எந்த அநியாயத்தையும் கண்டுகொள்ளாமல், ஆயுசுக்கும் நன்றிக்கடனுடன் வாலாட்டுவர் என்பது உலகறிந்த ரகசியம்தானே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 25 -  நான் அசைந்தால் அசையும்…

துர்க்மெனிஸ்தானுக்கான மனாட் என்ற கரன்ஸி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நோட்டுகளில், தன் முகம் பதித்தார் நியாஸோவ். ஆம், ஒவ்வொரு துர்க்மெனியனும் பணத்தைப் புழங்கும்போதெல்லாம் தன் புகழை நினைத்து உருக வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன். தலைநகரம் அஸ்காபாத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்த அர்ஸாபில் என்ற பகுதியில் இருந்த பெரிய அரண்மனையை அதிபர் மாளிகை ஆக்கினார். அதிபர் காரில் செல்வதும் துர்க்மெனியர்களுக்கு கௌரவக் குறைச்சல் அல்லவா! பிரிக்க முடியாதது, தலைவர்களும் ஹெலிபேட்களும். நியாஸோவ் செல்லும் இடங்களிலெல்லாம் ‘ஹெலிபேட்’கள் அமைக்கப்பட்டன. தவிர, அவருக்கென போயிங் 767 நவீன ரக விமானம் வாங்கப்பட்டது. அது ஓர் அதிபர் மாளிகைக்குரிய சொகுசுகளுடன் வடிவமைக்கப்பட்டது. வாஷ் பேஷின் முதற்கொண்டு பல இடங்களில் தங்க முலாம் பூசப்பட்ட அந்த ஆடம்பர விமானம் வாங்குவதற்கு ஆன செலவு, $130 மில்லியன்.

தேசத்தில் பருத்தி செழிப்பாகக் காய்த்தது. அதன் வணிகத்தால் நியாஸோவுக்கும் அவர் சார்ந்த குடும்பத்தினருக்கும் பணம் கொத்துக் கொத்தாகக் காய்த்தது. ‘பருத்தி விவசாயிகளுக்குத்தான் மீதமிருந்த கோவணமும் கிழிந்தது’ என்ற வரி இங்கே தேவையா என்ன? தேசத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகத்தை நிர்வகிக்க, Turkmenneftegaz State Trading Corporation என்ற அரசு நிறுவனம் இயங்கியது. இல்லையில்லை, தன் ஆடம்பரக் கனவுகளை நிறைவேற்றுவதற்காகவே அந்நிறுவனத்தை இயக்கினார் நியாஸோவ். அதன் அதிகாரிகளுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. ஏற்றுமதி ஒப்பந்தங்கள், புதிய முதலீடுகள் என்று ஒவ்வொன்றிலும் நியாஸோவே தனக்கான கமிஷன் எத்தனை சதவிகிதம் என்று துண்டுபோட்டுக் கறாராகப் பேசி முடிவெடுத்தார். ஆம், தனக்குப் போகத்தான் தேசத்துக்கும் மக்களுக்கும்.
மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக, அரசால் கட்டப்பட வேண்டிய கட்டடங்களுக்கான தேவையே நிறைய இருந்தன. அதெல்லாம் எதற்கு அசிங்கமாக? அஸ்காபாத் நகரமெங்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைக் கட்டுங்கள். கவின்மிகு மாளிகைகளை, வானுயர்ந்த வணிக வளாகங்களை உருவாக்கி நகரை அழகுப்படுத்துங்கள் என்று உத்தரவிட்டார் நியாஸோவ். துர்க்மெனிஸ்தானுக்கு வரும் அயல்நாட்டினர் அதன் அழகை, வளத்தை, டாம்பீகத்தைக் கண்டு வியந்து நிற்க இந்த ஏற்பாடு. அதன்படி, நகரமெங்கும் நட்சத்திர ஹோட்டல்களும் (எண்ணிக்கை 22 என்று ஒரு தகவல் உண்டு), பிற ஆடம்பரக் கட்டடங்களும் தண்டத்துக்குக் கட்டப்பட்டன.

இஸ்லாம் மார்க்கத்தில் சிலை வழிபாடு கூடாது. ஆனால், தானே தேசத்தின் மார்க்கம் என்று நம்புபவருக்கு அதெல்லாம் கிடையாதே. நாடெங்கும் தனது சிலைகளை நிறுவச் சொன்னார் நியாஸோவ். அதுவும் தங்க முலாம் பூசப்பட்ட உயரமான, பிரமாண்டமான சிலைகள். நின்றபடி, நடந்தபடி, சிரித்தபடி, சிந்தித்தபடி, ஒரு கையைத் தூக்கியபடி, சல்யூட் அடித்தபடி, விதவிதமான சிலைகளாக நகரமெங்கும் தன்னை நிறைத்தார் நியாஸோவ். சிலைகளைச் சுற்றிப் பூங்காக்களும், நீரூற்றுகளும் நிறுவப்பட்டன. தன் தாய்க்குப் பொது இடங்களில் சிலை வைத்தும், நாணயங்கள் வெளியிட்டும் தன்னை நல்லதொரு மகனாகவும் அவர் நிறுவிக்கொண்டார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 25 -  நான் அசைந்தால் அசையும்…

சர்வதேசப் பிரச்னைகளில் துர்க்மெனிஸ்தான் நடுநிலைமை வகிக்கும் என்று நியாஸோவ் அழுத்தமாக அறிவித்திருந்தார். எந்த அந்நிய சக்தியும் தன் விஷயத்தில் மூக்கை நுழைக்கக்கூடாது. நானும் எதையும் கண்டுகொள்ள மாட்டேன் என்பது வெளியுறவுக் கொள்கைத் தெளிவு. Neutral Turkmenistan என்று அரசின் அதிகாரபூர்வ நாளிதழின் பெயரை மாற்றி வைக்கும் அளவுக்கு நடுநிலைமையில் உறுதியாக இருந்தார். 

Neutrality Arch என்று, ஈஃபிள் டவர் போன்ற கோபுரம் ஒன்றைக் கட்டும் பணிகள் ஆரம்பமாயின. முக்காலி போன்றதொரு அடித்தளம். அதன் மேல் ஒரு கோபுரம். மொத்தம் 246 அடி. அதன் உச்சியில் 39 அடி உயரத்தில், கைகளை வானை நோக்கி உயர்த்தியிருக்கும் நியாஸோவின் சிலை. அதுவும் தங்கத் தகடுகளால் ஆன தகதக சிலை. சூரியன் நகரும் திசைக்கேற்ப அந்தச் சிலை 360 டிகிரி சுழலும்படியான அமைப்பு. ஆம், துர்க்மெனிஸ்தானின் இருளை அகற்ற வந்த சூரியனான நியாஸோவ், இந்தக் கோபுரத்துக்காகக் குப்பையாக்கிய தொகை $12 மில்லியன்.

‘எதுக்கு இந்த விளம்பரம்?’ என்று கேள்விகள் எழுந்தபோது, நியாஸோவ் கொஞ்சம்கூடக் கூச்சமில்லாமல் பிரசவித்த பதில், ‘நான் ஒரு சாதாரணக் குடிமகனாக இருந்தால், எனக்கு இந்தத் தேசத்தில் அனைத்தையும் தரும் எனது அதிபரின் படத்தை வரைந்து வைப்பேன். அதை என் உடையில் ஒட்டிக் கொள்வேன். அதைத்தான் என் மக்களும் செய்கிறார்கள். மற்றபடி, என் படங்களும் சிலைகளும் வைக்கப்படுவதில் எனக்கு விருப்பம் இல்லைதான். ஆனால், மக்கள் விரும்புகிறார்களே!’

நட்சத்திர ஹோட்டல்கள், ஆடம்பர கட்டடங்கள், சிலைகள், பூங்காக்கள் எல்லாம் கட்டுவதற்கென பல்வேறு மக்களிடமிருந்து அவர்களது நிலங்கள் பிடுங்கப்பட்டிருந்தன. அதற்கென நஷ்டஈடோ, மாற்று நிலமோ வழங்கப்படவில்லை. அந்த மக்களில் பலர், அனைத்தையும் இழந்த சோகத்துடன் பிளாட்பாரங்களில் கூடாரம் அடித்துத் தங்கியிருந்தார்கள். திரும்பிய திசையெங்கும் சிலைகளாக நியாஸோவ் சிரித்துக் கொண்டிருந்தார், 24 காரட் புன்னகையுடன்!

இப்பேர்ப்பட்ட மக்கள் நல அதிபரான நியாஸோவ், தன் ஆட்சிக்காலத்தில் மெய்யாகவே சமூக அக்கறையுடன் செய்த காரியம் ஒன்றே ஒன்றுதான்.

1997-ல் அவருக்குக் கடும் நெஞ்சு வலி. பெரிய அறுவைச் சிகிச்சையும், பல நாள்கள் ஓய்வும் தேவைப்பட்டன. புகை பிடிக்கவே கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்... ம்ஹூம், பணிவன்புடன் கோரிக்கை வைத்தனர். தன் நலனுக்காக மட்டுமல்ல, தானே தேசம் என்பதால் தேசநலனுக்காகப் புகைபிடிப்பதைக் கனத்த இதயத்துடன் கைவிட்டார் நியாஸோவ். அப்படியே தன் அமைச்சர்கள், அதிகாரிகள் யாருமே புகைபிடிக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். பொது இடங்களிலும் புகைபிடிக்கத் தடைவிதித்தார். இதைச் சமூக அக்கறை என்றும் சொல்லலாம். ‘சாமிக்கே சுருட்டு கெடையாதாம். பூசாரிங்களுக்கு எதுக்குடா புகை?’ என்ற கோணத்திலும் ஊதித் தள்ளலாம்.

பொருளாதாரத் தள்ளாட்டங்களைச் சமாளிக்க துர்க்மெனிஸ்தானின் சென்ட்ரல் பேங்க், வரைமுறையின்றி மனாட் நோட்டுகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது. அது 3000% பணவீக்கத்தில் கொண்டுபோய்விட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான மனாட்டின் மதிப்பு 5200 என்று சீரழிந்துபோனது. இன்னொரு பக்கம், எரிபொருள் ஏற்றுமதி செய்த கணக்கில், வராத பெரும் பாக்கியால் Turkmenneftegaz நிறுவனம் விழிபிதுங்கி நின்றது. 1998-ல் ஏற்றுமதி நிறுத்தப்பட, எரிவாயு உற்பத்தி சுமார் 80% வரை குறைந்துபோனது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 25 -  நான் அசைந்தால் அசையும்…

எங்கெல்லாம் பொருளாதாரம் தடுமாறுகிறதோ, அங்கே எண்ணெய் வளமும் இருந்துவிட்டால், ‘என்னப்பா பிரச்னை?’ என்று அமெரிக்கப் பெரியண்ணன் போலி அக்கறையுடன் வந்து நிற்பார் இல்லையா. அது நடந்தது. நியாஸோவ் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் பில் கிளிண்டனுடனும், அல் கோருடனும் உணவு உண்டார். $2 பில்லியன் திட்ட மதிப்பீட்டில், துர்க்மெனிஸ்தானின் தௌலதாபாத்திலிருந்து, பாகிஸ்தானின் முல்டானுக்கு எரிவாயு குழாய் பதிக்க, அமெரிக்க நிறுவனமான யுனோகால் முன்வந்தது. அமெரிக்காவுடன் அன்பு பாராட்டினால், சீனா சினம் கொள்ளுமல்லவா. ஆகவே சீனாவுக்கும் சென்று, கைகுலுக்கி, சில பல வணிக ஒப்பந்தங்களில் கையெழுத்தைப் பதித்துவிட்டு வந்தார் நியாஸோவ். ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் முடிந்தால் என்ன, எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன. என் கமிஷன் வந்துவிட்டதல்லவா. சுபம்.

இப்படி எண்ணெய் வளமும், எரிவாயு வளமும் நிரந்தர அதிபர் நியாஸோவை (மட்டும்) சுபிட்சமாக வைத்திருக்க, அவர் மீட்டருக்கு மேலே தாறுமாறாகச் சிந்திக்க ஆரம்பித்தார். சில வருடங்களுக்கு முன்பு இயற்றப்பட்ட துர்க்மெனிஸ்தானின் தேசிய கீதத்தை அழிரப்பர் கொண்டு அளித்தார். தனது சர்வதேச நடுநிலைமையைப் பிரதிபலிக்கும் புதிய தேசிய கீதத்தைச் சிந்தித்து எழுதினார். துர்க்மென்பாஷியாகிய தனது புகழைத் தானே அதில் பாடிக்கொண்டார். (துர்க்மென்பாஷி உருவாக்கிய இந்த அதிசிறந்த தாயக தேசம், புகழுடன் நீடூழி வாழட்டும்!) அதற்கு இசை, தாளம், ராகம், பல்லவி, ஸ்ருதி, ஸ்வரம், அபஸ்வரம் அனைத்தும் அவரே. பாட்டும் நானே! பாவமும் நானே! நான் அசைந்தால் அசையும் துர்க்மெனிஸ்தானே!

2000 பிறந்தது. புதிய, நவீன நூற்றாண்டுக்குள் அடியெடுத்து வைக்கப்போகிறோம். ஆகவே, துர்க்மெனியர்களுக்கான சமூக உரிமைகளை அதிகரிக்கப் போகிறேன் என்று ஆசை ஊட்டினார் நியாஸோவ். மனிதர் திருந்திவிட்டார்போல என்று துர்க்மெனியர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க, அடுத்த ஆறு ஆண்டுகள் துர்க்மென் பாஷி நிகழ்த்திய விஷயங்களெல்லாம் கேவலங்களின் ஆரோகணம். கேனத்தனங்களின் இலக்கணம்.
 
முட்டாள்தனங்களின் நர்த்தனம். மூடத்தனங்களுக்கான சமர்ப்பணம்.

அவை...

- (நியாஸோவ் வருவார்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism