Published:Updated:

“நெல்லை போலீஸ் அடின்னா எப்படி இருக்கும்னு காட்டணும்!”

“நெல்லை போலீஸ் அடின்னா எப்படி இருக்கும்னு காட்டணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“நெல்லை போலீஸ் அடின்னா எப்படி இருக்கும்னு காட்டணும்!”

கால்களை முறிக்கும் காவல்துறை

“நெல்லை போலீஸ் அடின்னா எப்படி இருக்கும்னு காட்டணும்!”

கால்களை முறிக்கும் காவல்துறை

Published:Updated:
“நெல்லை போலீஸ் அடின்னா எப்படி இருக்கும்னு காட்டணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“நெல்லை போலீஸ் அடின்னா எப்படி இருக்கும்னு காட்டணும்!”

நெல்லை மாவட்டக் காவல்துறையின் செயல்பாடுகள் சமீபகாலமாக அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகிவருகிறது. குறிப்பாக, கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட ஓரு குடும்பமே கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து மாய்ந்துபோன சம்பவமும், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு மாவட்டக் காவல்துறையின் செயல்பாடுகளும் விமர்சிக்கப்படுகின்றன.

கால்களை உடைப்பதே கடமை!

 நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி-யாக அருண்சக்தி குமார் பொறுப்பேற்ற பிறகு, ‘கை, கால் உடைப்பு’ சம்பவங்கள் நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து இருப்பதாகப் புகார் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக, நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரிடம் பேசினோம். ‘‘எஸ்.பி அருண்சக்தி குமார் காவல்துறை அதிகாரி மட்டுமல்ல, அவர் ஒரு டாக்டரும்கூட. அடிப்படையில் ஒரு டாக்டரான அவர், கை கால் உடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்து, அவர்களைக் குணப்படுத்த வேண்டியவர். ஆனால் அவரோ, ‘கை கால்களை உடைப்பதில் நிபுணர்’ என்று பெயரெடுத்து வருகிறார். வழக்குகளில் கைதுசெய்யப்படுவோரில், குறிவைக்கப்பட்ட சிலரை அழைத்துச்சென்று, அவர்களின் காலில் குறிப்பிட்ட இடத்தை இவர் மார்க் செய்துகொடுக்கிறார். அந்த இடத்தில், இரும்புக் கம்பியால் அடித்து எலும்பை உடைப்பதை போலீஸார் வழக்கமாக வைத்துள்ளனர். எங்களிடம் வழக்குக்காக வரக்கூடியவர்களில் பலர் இந்த விவரங்களை வேதனையுடன் சொல்கிறார்கள். ‘நெல்லை போலீஸ்னா என்னன்னு தெரியணும்லே...’ என்று சொல்லியே இதுபோல மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன’’ என்றார் வருத்தத்துடன்.

“நெல்லை போலீஸ் அடின்னா எப்படி இருக்கும்னு காட்டணும்!”

வழக்கறிஞரின் கால் உடைப்பு!

திருநெல்வேலி வள்ளியூரை அடுத்த மாறன்குளம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செம்மணி, போலீஸாரால் தாக்கப்பட்டுக் கால் உடைக்கப்பட்டுள்ளார். “நவம்பர் 3-ம் தேதி நள்ளிரவில் வீட்டுக்கு வந்த போலீஸார், என் கணவரை இழுத்துச்சென்றனர். அதைத் தடுக்க முயற்சி செய்த என்னை, பெண் என்றும் பாராமல் அடித்து, என் கையை முறுக்கிவிட்டனர். கையில் காயம் ஏற்பட்டு, சிகிச்சையில் இருக்கிறேன். கணவரின் காலை உடைத்துவிட்டனர்’’ என்று சொன்னார் செம்மணியின் மனைவி சரோஜா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நெல்லை போலீஸ் அடின்னா எப்படி இருக்கும்னு காட்டணும்!”

‘‘போலீஸை எதிர்த்து வழக்குப் போடுவியா?”

காலில் எலும்பு முறிவுகளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, வழக்கறிஞர் செம்மணியிடம் பேசினோம். ‘‘போலீஸார் வீட்டைச் சுற்றிவளைத்து, கதவைத் தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர். மகளும், மனைவியும் இருந்த அறைக்குள் நுழைந்த போலீஸார், அவங்களை அசிங்கமான வார்த்தைகளால் சாதியைச் சொல்லித் திட்டினர். ‘போலீஸை எதிர்த்து வழக்குப் போடுவியா?’ எனக் கேட்டு என்னைத் தள்ளிவிட்டனர். என் சொந்த வழக்குமீது நடவடிக்கை எடுக்காத எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஆகியோர்மீது வழக்குப் போட்டிருந்தேன். அதனால், என்மீது அவர்களுக்குக் கோபம். என் கையை முறுக்கிக் கீழே தள்ளி இழுத்துச் சென்று வேனில் தூக்கி வீசினர். வேனில் இருந்தபடியே டி.எஸ்.பி குமாரிடம் பேசினார்கள். அவரும், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோன்ஸ் என்பவரும் வழிகாட்டியபடி, ராதாபுரம் ஸ்டேஷனுக்கு என்னைக் கொண்டுபோனார்கள்.

“நெல்லை போலீஸ் அடின்னா எப்படி இருக்கும்னு காட்டணும்!”

ஸ்டேஷன் லாக்கப்பில் ஜட்டியுடன் என்னை உட்காரவைத்தனர். பிறகு, என் கையைக் கட்டிவிட்டு ஜோஸ், சாகர், பழனி, முகமது சம்சுல், விமல்குமார் ஆகிய போலீஸார் சரமாரியாக அடித்தனர். பிறகு, என்னை எழுத்திருக்கச் சொன்னார்கள். எழ முயற்சி செய்தபோது, நெஞ்சில் மிதித்துத் தள்ளினார்கள். கையையும் காலையும் சேர்த்துக்கட்டி காலுக்குள் இரும்புக் கம்பியைச் செருகி, காலில் ஏறி நின்றார்கள். வலிதாங்க முடியாமல் கதறினேன். அப்படியே தலைகீழாகக் கட்டித் தூக்கி, செருப்பை வாயில் திணித்தார்கள். பிறகு, மீண்டும் சரமாரியாக அடித்தார்கள். சற்று நேரம் கழித்து, கட்டுகளை அவிழ்த்துவிட்டு, மீண்டும் மாறி மாறி அடித்தார்கள். நான் வலியால் துடித்து அலறினேன். அப்போது, செல்போனை ஆன் செய்தனர். ‘நல்லா கத்துல நாயே.. நீ கத்துறது டி.எஸ்.பி-க்கும் இன்ஸ்பெக்டருக்கும் கேக்கணும்’னு சொல்லி அடித்தார்கள்.

அவர்கள் அடித்த அடியில், என் கால் எலும்பு முறிந்தது. மற்றொரு காலில், நகங்களைப் பிய்த்தனர். அதனால், ரத்தம் கொட்டியது. பிறகு, ராதாபுரம் ஸ்டேஷனிலிருந்து உவரி ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த கான்ஸ்டபிள் ஒருவர், ‘உங்க ஸ்டேஷனில் வெச்சு அடிச்சுட்டு, இங்கே எதுக்குக் கொண்டுவந்தீங்க. அந்தாளுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா, நாங்க பொறுப்பேற்கணுமா?’ என்று கதவைப் பூட்டிக்கொண்டார்.

அவரிடம், ‘இவன் ஒரு அக்யூஸ்டு. இவனை விசாரிச்சுட்டு வீட்டுக்குப் போகச் சொல்லிட்டோம். காலைல போயிடுவான்’னு சொல்லிப் பார்த்தாங்க. அவர் கதவைத் திறக்க மறுத்தார். யாருக்கோ போன் செஞ்சாங்க. பிறகு, அவர் உள்ளே அனுமதித்தார். அங்கே, என்னை சேரில் உட்கார வைத்தார்கள். அங்கிருந்து என்னை வீட்டுக்கு அனுப்ப முயற்சி செய்தனர். ஆனால், என்னை ஏன் இப்படி சித்ரவதை செய்தீர்கள் என்பதற்கான காரணம் தெரியாமல் நான் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.

இதற்கிடையில், வள்ளியூர் வழக்கறிஞர்களுக்கு விவரம் தெரிந்து, ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். டி.எஸ்.பி குமார், பணகுடி இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோன்ஸ் ஆகியோர் என்னிடம் சமரசம் பேசினர். வக்கீல்கள் போராட்டத்தாலும் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டதாலும் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கேயும்கூட என்னை டிஸ்சார்ஜ் செய்ய வைக்க முயற்சி நடக்கிறது’’ என்று கலங்கினார்.

இந்த விவகாரம் குறித்து, வள்ளியூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரான தவசிராஜனிடம் பேசினோம். ‘‘பணகுடி, ராதாபுரம், உவரி காவல்நிலையங்களில் இதே போல மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடக்கின்றன. ஒரு வழக்கறிஞரையே அடித்துக் காலை உடைத்துவிட்டு சாவகாசமாக ‘வீட்டுக்குப் போ’ என்று சொல்லும் அதிகாரிகள், சாமான்ய மக்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? இந்த விவகாரத்தை நாங்கள் சும்மா விடமாட்டோம்’’ என்றார்.

ஆனைக்குளத்தைச் சேர்ந்த ராக்கெட் ராஜாவை ஜூன் மாதம் தேடிச்சென்ற போலீஸார், அவரது தோட்டத்தில் வேலைசெய்த ஐந்து பேரைப் பிடித்துவந்து, கடுமையாகத் தாக்கியுள்ளனர். மதன், முனிசாமி ஆகிய இருவரின் கால்களையும் உடைத்துவிட்டனர்.

வேறு ஒரு வழக்கில், இரண்டு பேரை போலீஸார் தேடிவந்துள்ளனர். அந்த இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவர்களின் வழக்கறிஞர் முயற்சி செய்துள்ளார். அதனை அறிந்த டி.எஸ்.பி ஒருவர், அந்த நபர்களைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார். அதன்படி, போலீஸிடம் அந்த இருவர் ஒப்படைக்கப்பட்டனர். அந்த இருவரையும் எஸ்.பி-யின் தனிப்படையினர், அடித்துக் கால்களை உடைத்துள்ளனர்.

பணகுடி காவல்நிலையத்தில், செய்தியாளர்கள் மூன்று பேர்மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் செப்டம்பர் 25-ம் தேதி வழக்குத் தொடரப்பட்டது. இஸ்ரோ தொடர்பான செய்தி வெளியிட்டதால், வழக்குப் போட்டது போலீஸ்.

முகிலன் கடத்தல்!

செப்டம்பர் 18-ம் தேதி, சமூக செயற்பாட்டாளரான முகிலன் கைதுசெய்யப்பட்டதிலும் சர்ச்சைகள் எழுந்தன. நிலத்தடி நீர் கொள்ளையைக் கண்டித்து ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிக்கொண்டிருந்த முகிலனை, மப்டியில் வந்த போலீஸார் கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.  பல காவல்நிலையங்களில் அழைத்துச்சென்று அலைக்கழிக்கப்பட்ட முகிலன், நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

“நெல்லை போலீஸ் அடின்னா எப்படி இருக்கும்னு காட்டணும்!”

கார்ட்டூனுக்காக கைது!

கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பமே, கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து மாண்டது. இதனைக் கண்டித்து தன் உணர்வுகளைக் கேலிச்சித்திரமாகத் தீட்டி, தனது இணையதளத்தில் வெளியிட்ட கார்ட்டூனிஸ்ட் பாலாவை நெல்லை போலீஸார் கைது செய்தனர். சென்னையில் கைது செய்யப்பட்ட பாலாவை நெல்லைக்குக் கொண்டுசென்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைதுசெய்யப்பட்ட மறுநாளே, பாலாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.

பாலாவிடம் பேசினோம். ‘‘கலெக்டரிடம் ஆறு முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், கந்து வட்டிக்கு ஒரு குடும்பமே பலியானது. அதில், இரு பச்சிளம் குழந்தைகள் பரிதவித்துத் துடிதுடித்த காட்சியைக் கண்டதும் ஏற்பட்ட துயரத்திலும், கோபத்திலும் அந்தக் கார்ட்டூனை வரைந்தேன். ஒரு கார்டூனிஸ்டாக என் பணியைச் சரியாகச் செய்ததாகவே நினைக்கிறேன். அது தவறு என்றால், அதே தவறை நான் திரும்பவும் செய்வேன்’’ என்றார்.

‘‘சட்டப்படிதான் கைது செய்தோம்!’’

நெல்லை எஸ்.பி அருண்சக்தி குமாரிடம் போலீஸ் அடாவடிகள் குறித்துக் கேட்டபோது, அதுபற்றி பேச மறுத்துவிட்டார்.

நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி, ‘‘கந்துவட்டி தொடர்பாக தற்கொலை செய்து கொண்டவரிடமிருந்து நான்கு மனுக்களை மட்டுமே பெற்றேன். அதனை எஸ்.பி. சார்பாக வந்தவர்களிடம் கொடுத்தேன். அந்த மனுக்களில் உள்ளூர் முகவரி மட்டுமே இருந்தது. ஆனால் அவர்கள் திருப்பூரில் வேலைசெய்து வந்திருக்கிறார்கள். அவர்களை விசாரணைக்கு வருமாறு போலீஸார் அழைத்ததற்கு ஆதாரம் உள்ளது. அவர்களுக்கு ஏற்பட்ட கடனும் அதனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் ஏற்பட்ட மன அழுத்தமும் தீக்குளிப்புக்குக் காரணமாக இருந்திருக்கலாம். இந்தச் சம்பவத்தின் பின்னணி பற்றி எதுவுமே தெரியாமல், கலெக்டரும் எஸ்.பி-யும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனச் சொல்வது தவறு. பாலாவுக்கு கார்ட்டூன் வரைய உரிமையுண்டு. ஆனால், அதற்குச் சில வரம்புகள் இருக்கின்றன. அருவருக்கதக்க கார்ட்டூனை கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.

மனித உரிமை மீறல், கருத்துரிமை பறிப்பு  விமர்சனங்களிலிருந்து  காவல்துறை எப்போது திருந்துமோ?   

- பி.ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்