Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 26 - இந்த நூற்றாண்டின் இம்சை அரசன்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 26 - இந்த நூற்றாண்டின் இம்சை அரசன்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 26 - இந்த நூற்றாண்டின் இம்சை அரசன்!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 26 - இந்த நூற்றாண்டின் இம்சை அரசன்!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 26 - இந்த நூற்றாண்டின் இம்சை அரசன்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 26 - இந்த நூற்றாண்டின் இம்சை அரசன்!
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 26 - இந்த நூற்றாண்டின் இம்சை அரசன்!

துர்க்மெனிஸ்தானின் நிரந்தர அதிபரான சபார்முராத் நியாஸோவ், ஏகாந்தமான பொழுதொன்றில் தன் தேசத்தையே இம்சிக்கும் முடிவொன்றை எடுத்தார். தனது சுயசரிதையை எழுத ஆரம்பித்தார். ‘அது புனித நூல்’ என்று அவரே அறிவித்துக்கொண்டார். ‘ருஹ்நாமா’ (Ruhnama -ஆன்மாவின் புத்தகம்) என்பது தலைப்பு.

நூலின் ஒரு பகுதியாக தனது உன்னத வாழ்க்கைப் போராட்டத்தைப் பொய்களால் கட்டமைத்தார் (இரண்டு அத்தியாயங்களுக்கு முன்பு பார்த்தோம் அல்லவா). தான் துர்க்மெனிஸ்தானின் முதல் அதிபராக, தேசத்தின் தந்தையாக வளர்ந்த புரட்சி வரலாற்றை ‘மானே, தேனே’  சேர்த்துப் பிசைந்தார். வரலாற்றில் இல்லாதவற்றைப்  புனைந்தார்.

இவை தவிர, அரசின் கொள்கைகளையும் மதக்கோட்பாடுகளையும் அடிக்கோடிட்டு அந்த நூல் விளக்கியது. தேசத்தின் கலை, இலக்கியச் செழிப்பைக் கட்டம்போட்டுக் காட்டியது. ‘ஒரு துர்க்மெனியன் எப்படி ஒழுக்கத்துடன் வாழ வேண்டும், எவ்வளவு சமூக அக்கறையுடன் இருக்க வேண்டும்’ என்றெல்லாம் நீட்டி முழக்கியது.

அதில் கதைகள் இருந்தன. தத்துவங்கள் ததும்பின. சூஃபி கவிதைகள் மிளிர்ந்தன. (சூஃபி கவிஞர் பைராகி என்பவர் நியாஸோவுக்காகத் தித்திக்கும், தேன்சொட்டும் கவிதைகள் சிந்தினார்.) கடவுள் தன்முன் தோன்றி, தேவதூதனான தன்னிடம் சொல்லச் சொல்ல நூலின் சில பகுதிகளை எழுதியதாகக் கூச்சமின்றிச் சொன்னார் நியாஸோவ். இதுவே, இனிமேல் துர்க்மெனியர்களின் ஆன்மிக வழிகாட்டி என்று பிரகடனமும் செய்தார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 26 - இந்த நூற்றாண்டின் இம்சை அரசன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதன் முதல் பாகம் 2001-லும், இரண்டாம் பாகம் 2004-லும் வெளிவந்தன. நியாஸோவ், ருஹ்நாமாவை மக்கள்மீது வன்முறையாகத் திணித்தார். ஆதார்போல என வைத்துக்கொள்ளுங்களேன். அனைத்துப் புத்தகக் கடைகள், நூலகங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களிலெல்லாம் இதைக் கண்டிப்பாகக் காட்சிக்கு வைக்க உத்தவிட்டார். பள்ளிகளில் விளையாட்டு, இயற்பியல், இயற்கணிதம் பாடங்களுக்குப் பதில் ருஹ்நாமா புகுத்தப்பட்டது. அதுவும் நியாஸோவைப் புகழும் பாடல்களையும் பத்திகளையும் மனப்பாடப்பகுதியாக்கி, அதில் மாணவர்களுக்குத் தேர்வும் வைத்தனர். அரசுப் பதவிகளுக்கான நுழைவுத் தேர்வுகள், ஓட்டுநர் உரிமத்துக்கான தேர்வு என்று அனைத்திலும் ருஹ்நாமாவிலிருந்து கேள்விகள் மிரட்டின. அரசு விழாக்களில் இதிலிருந்து பாடல்களும் நாடகங்களும் கதறக் கதற அரங்கேற்றப்பட்டன.

நாடெங்கும் மசூதிகளில் குர்-ஆனுடன், ருஹ்நாமாவும் வைக்கப்பட வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எதிர்த்த இமாம்களைச் சிறையிலடைத்தார். வைக்க மறுத்த சில மசூதிகள் இடிக்கப்பட்டன. ருஹ்நாமாவை விமர்சனம் செய்தாலோ, அல்லது அவமதித்தாலோ, அது அதிபரான நியாஸோவையே அவமதித்த குற்றமாகக் கருதப்பட்டது. கைதுகள் அரங்கேறின. குடும்பத்துடன் சித்ரவதைகளுக்கு ஆளாயினர். ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையுடன் பெரும் அபராதமும் கட்ட வேண்டியதிருந்தது.

நியாஸோவ், தலைநகரில் ருஹ்நாமா புத்தகத்துக்கென 30 அடி உயரத்தில் மாபெரும் சிலை ஒன்றையும் எழுப்பினார். தினமும் இரவு எட்டு மணிக்குப் புத்தகத்தின் அட்டை திறக்க, திரையில் ருஹ்நாமாவிலிருந்து ஒரு பகுதி வீடியோவாக ஒளிபரப்பானது. அரசு அலுவலகங்கள் முதல் மசூதிகள் வரை பல்வேறு இடங்களில் ருஹ்நாமாவிலிருந்து புனிதத் தத்துவங்கள் செதுக்கப்பட்டன.

சிறையிலிருந்து வெளியே வரும் குற்றவாளிகள், ‘இனி தவறுகள் எதுவும் செய்யமாட்டேன்’ என்று ருஹ்நாமாமீது சத்தியம் செய்தால் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். நியாஸோவின் பெருமுயற்சியால் அந்நூல் நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ருஹ்நாமாவுக்கு இலக்கியத்துக்கான தேசிய விருதை அறிவித்து, அதைத் தானே பெற்றும் கொண்டு விழாவைச் சிறப்பித்தார் நியாஸோவ்.

அனைத்துக்கும் மேலாக, ரஷ்ய விண்கலம் ஒன்றில் ருஹ்நாமை வைத்து விண்வெளிக்கும் அனுப்பிவைத்தார். ‘இனி இந்தப் புனித நூல் பால்வெளிப் பாதையையும் ஆளும்!’எனப் புளகாங்கிதம் அடைந்தார்.

இப்படி துர்க்மெனியர்களின் கலாசாரக் காவலராக, ஆன்மிக குருவாகத் தன்னைத்தானே நியமித்துக்கொண்ட நியாஸோவ், பாலே, நாடகங்கள், சினிமா, வீடியோ கேம், கார்களில் ரேடியோ போன்றவற்றைத் தடைசெய்து அதிரடி காட்டினார். இணையம் உபயோகிக்க ஏகப்பட்ட கெடுபிடி. அரசு இணையத்துக்கு மட்டுமே அனுமதி. அதற்கும் கொள்ளைக் கட்டணம்.

தொலைக்காட்சிகளும் எல்லா நேரமும் நியாஸோவின் புகழ்பாடுவதற்கென்றே நேர்ந்துவிடப்பட்டன. சரி, டிவி-யில் தோன்றும் பெண்களின்/ஆண்களின் அழகையாவது ரசிக்கலாமென மக்கள் நினைத்தால், ‘செய்தி வாசிக்கும் நபர்கள் மேக்கப் போடக்கூடாது’ என்று திடீர்த்  தடைவிதித்தார் நியாஸோவ். ஏன்? ‘மேக்கப் போட்டால் ஆண், பெண் வித்தியாசம் தெரியவில்லை’ என்றார். இதையெல்லாம் எதிர்த்து எவனாவது ‘மீசைய முறுக்கு!’ என்று கிளம்பிவிடக் கூடாதல்லவா! ‘ஆண்கள் யாரும் மீசை, தாடி, நீண்ட முடி வைப்பது கூடாது’ என்று புதிய விதி சமைத்தார். மொழுமொழு முகமுடையாருக்கு வளரவில்லையோ என்னவோ!

அடுத்ததாக, கல்வியில் கைவைத்தார். பள்ளி, கல்லூரிகளின் சேர்க்கையைக் குறைத்தார். அயல் மொழிகள் படிப்பதைத் தடைசெய்தார். பாடத் திட்டங்களிலும்  குழப்பங்கள். மாணவர்கள் வாழ்க்கையில் ஆட்சியாளர்கள் விளையாடுவது அங்கும் நடந்தது. ‘அதிகம் படிக்காதவர்களை ஆள்வதே எளிது’ என்ற முத்தை உதிர்த்தார் நியாஸோவ்.

பொழுதுபோகவில்லை என்றால், எதுஎதற்கோ ‘துர்க்மென்பாஷி’ எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார். தலைநகரின் விமானநிலையம், சாலைகள், பள்ளிகள் எனப் பல இடங்களுக்கும் அவர் பெயரே. துர்க்மெனிஸ்தானில் தெரியாமல் விழுந்த விண்கல்லுக்கும் அந்நாமம் சூட்டப்பட்டது.

இப்படியெல்லாம் உயிரை வாங்கிய அவர், அடுத்து உயிரெழுத்துகளிலும் கைவைத்தார். சிரில்லிக் எழுத்துமுறையில் அமைந்திருந்த துர்க்மெனிய உயிரெழுத்துகளை, லத்தீன் எழுத்துமுறையில் மாற்றியமைத்தார். கிழமைகளுக்கும் தினுசு தினுசாகப் புதுப்பெயர்கள் வைத்தார். மாதங்களையும் விட்டுவைக்கவில்லை. எழுத்து, கிழமை, மாதம் எதுவும் சட்டென மனதில் பதியாமல் தேசமே குழம்பித் திரிந்தது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 26 - இந்த நூற்றாண்டின் இம்சை அரசன்!

இந்தக் கூத்துகளுக்கெல்லாம் முடிவு கட்டிவிடலாம் என்று முன்னாள் அமைச்சர் போரிஸ் என்பவர் முஷ்டி உயர்த்தி, ரகசியமாகக் களமிறங்கினார். 2002, நவம்பர் 25 அன்று அதிபர் மாளிகையிலிருந்து நியாஸோவின் குண்டு துளைக்காத சொகுசு மெர்சிடிஸ் கிளம்பியது. அதைச் சுற்றி வளைத்த ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது. காவலர்களுக்கும் தாக்குதல் நடத்தியவர்களுக்கும்தான் காயம். ஒருவர் பலியானார். நியாஸோவுக்குச் சிறு சிராய்ப்புகூட இல்லை. போரிஸும், அவரைச் சார்ந்தவர்களும், வேறு பகைவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

‘நான் அதிக போதையில் இந்தத் தவறைச் செய்துவிட்டேன். நியாஸோவ் நல்லவர். உத்தமர். தேசத்துக்கு அவரே தேவை. நானே பாவி!’ என்று போரிஸைத் தொலைக்காட்சியில் சொல்ல வைத்தார்கள். அவருக்கு மரணதண்டனை நிச்சயம் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, 25 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

‘அல்லாவுக்கு மட்டுமே உயிரைப் பறிக்கும் உரிமை உண்டு; எனக்கில்லை’ என்று நல்லவரானார் நியாஸோவ். ஆனால், தன்மீதான கொலை முயற்சியில் ஆடிப்போன அவர், பாதுகாப்பு என்ற பெயரில் இரும்புத்திரையை மேலும் பலமாக்கினார். கிறுக்குத்தனங்களால் மக்களை விதவிதமாக வதைக்கத் தொடங்கினார்.

தலைநகரம் அஸ்காபாத்தைத் தாண்டி வெளியே நூலகங்களே இருக்கக்கூடாது. ‘மூடுங்கள்’ என உத்தரவிட்டார். ஏனாம்? ‘துர்க்மெனியர்கள் பெரும்பாலும் படிப்பறிவற்றவர்கள். தவிர, சாதாரண குடிமகனுக்குப் புத்தக வாசிப்பெல்லாம் தேவையில்லை’ என்றார் நியாஸோவ். அடுத்து, பெருநகரங்கள் தவிர தேசமெங்கும் இருந்த மருத்துவமனைகளையும் மூடச்சொன்னார். ‘அரசுக்குச் செலவு குறையும். உடம்பு சரியில்லையென்றால் நகரத்துக்கு வந்து வைத்தியம் பார்த்துக்கொள்ளட்டுமே’ என்றார். சுமார் 25,000 மருத்துவப் பணியாளர்களின்  வாழ்க்கை கேள்விக்குறியானது பற்றி அவர் அலட்டிக்கொள்ளவில்லை. கொள்ளை நோய்கள் பரவி மக்களின் உயிரைக் குடித்தன. அரசு அதை ஒப்புக்கொள்ளாமல் மறைத்தது.

விழா ஒன்றில் இளம்பெண் பேச்சாளர் ஒருவர் பேசும்போது, அவரது தங்கப்பல் நியாஸோவைத் தொந்தரவு செய்தது. ‘தங்கப்பல் சுகாதாரக் கேடானது. அதனால், கறியைக் கடிக்கவே முடியாது. அதைக் கழற்றி எறியுங்கள் மக்களே’ என்று வெள்ளைப்பல் காட்டினார் நியாஸோவ். தங்கப்பல் என்பது துர்க்மெனியர்களின் கௌரவ அடையாளம். பெண்வீட்டுச் சீதனமாகக்கூட தங்கப்பல் வருவதுண்டு. ஆனால், அதிபரால் மக்களின் (தங்கப்)பல் நிஜமாகவே பிடுங்கப்பட்டது. அதை அகற்றாதவர்களை வேலையை விட்டு அகற்றிய அவலமும் நிகழ்ந்தது.

டிராஃபிக் போலீஸார் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று தெரிந்துகொண்ட நியாஸோவ், அந்தத் துறையையே கலைத்தார். ராணுவ வீரர்களைப் போக்குவரத்தைச் சரிப்படுத்த நியமித்தார். வானிலை ஆய்வாளர்களது அறிக்கைப்படி அன்றைக்கு மழை / வெயில் /காற்று தவறினால், அவர்களும் கைதுசெய்யப்பட்டனர். முக்கியக் கட்டடங்கள், வீதிகள், அரசு அலுவலகங்கள் என எங்கும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன. ரகசியப் போலீஸார் எங்கும் எப்போதும் சுற்றித் திரிந்தனர்.

வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், அரசு சாரா அமைப்புகள், மனித உரிமை அமைப்புகளால் துர்க்மெனிஸ்தானுக்குள் நுழையவே முடியவில்லை. நாய்களும்தான். ‘நாய்கள் நாறுகின்றன’ அவற்றுக்கும் அஸ்காபாத் நகரத்தில் தடை விதித்திருந்தார்.

வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரிப்பதைப்போல, நியாஸோவ் பன்னிரண்டு பன்னிரண்டாகப் பிரித்து புதியதொரு கணக்கை உருவாக்கினார். அதில் சீனியர் சிட்டிசன் வயது என்பது 84-க்கு மேல் என்றாகிப்போனது. அதன்படி, 2006 பிப்ரவரி முதல் பலருக்கும் பென்ஷன் தொகை நிறுத்தப்பட்டது. பலருக்குக் குறைக்கப்பட்டது. தவிர, ‘முந்தைய இரண்டு ஆண்டுகள் வாங்கிய பென்ஷனைத் திருப்பியளிக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டு வயதானவர்களை வதைத்தார் நியாஸோவ். இந்த அதிர்ச்சியில் இறந்தவர்களின் எண்ணிக்கைக்குக் கணக்கில்லை.

அடுத்து, ‘பிரசவத்துக்கு விடுமுறை அளிக்க முடியாது’ என்றார். ‘நோய்க்காக விடுப்பெடுத்தால் சம்பளப் பிடித்தம்’ என்றார். ‘ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் நியாஸோவைப் புகழ்ந்து நான்கு வரிகள் எழுதி, அது பத்திரிகைகளில் வராவிட்டால் வேலை காலி’ என்று தற்பெருமைப் பித்து தலைக்கேற கூவினார்.

ஒரு கட்டத்தில் தேசத்தில் எங்கே திரும்பினாலும், எதைப் பார்த்தாலும் நியாஸோவே தெரிந்தார். சிலை, ஃபிளக்ஸ், போஸ்டர், ஓவியங்கள், பணம், நாணயம், ஸ்டாம்ப், ரயில் பெட்டிகள், விமான கேபின்கள், கட்டட முகப்புகள், பாத்திரங்கள், கலைப்பொருள்கள், வோட்கா பாட்டில்... இன்னும் இன்னும்.

திடீரென, ‘பாலை நிலங்களில் ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டு, சோலைவனமாக்கப் போகிறேன்’ என்றார். மரக்கன்றுகள் அவருக்கு அடிபணியாமல் கருகிச் சாய்ந்தன. அடுத்து, ‘கரா கும் பாலைவனத்தில் பனியாலான மாபெரும் மாளிகையை உருவாக்குவேன். அங்கே பென்குயின்களைக் கொஞ்சி விளையாடச் செய்வேன்’ என்று களமிறங்கினார். பனிபோலவே, செலவு செய்த பணமும் உருகிப் போனது. பென்குயின்கள் தப்பித்தன.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 26 - இந்த நூற்றாண்டின் இம்சை அரசன்!

வருடத்துக்கு இரண்டு பில்லியன் டாலர் எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகத்தால் நாட்டுக்கு வருமானம் வர, அதில் பெரும்பங்கு பணம் நியாஸோவின் பினாமி கணக்குகளில் விழுந்தது. அதேசமயம், சாதாரண துர்க்மெனியர்களின் வருமானம் பரிதாப நிலையில் கிடந்தது. தேசத்தில் சுமார் 60% பேர் வேலையின்றிக் கிடந்தனர். தன் 17 ஆண்டுகால     ஆட்சியை, துர்க்மெனிஸ்தானின் பொற்காலம் என்று கூசாமல் விளம்பரம் செய்துகொண்டார் நியாஸோவ்.

2006, டிசம்பர் 21 அன்று அதற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. நீண்ட கால இதய நோயால், நியாஸோவ் இறந்துபோனார். ‘‘அவர் எப்போதோ செத்து விட்டார். இவர்கள் மறைத்து மிகத் தாமதமாகச் சொல்கிறார்கள்’’ என்று அங்கும் முணு முணுத்தார்கள். தெற்காசியாவிலேயே மிகப்பெரிய மசூதி என்று பல மில்லியன் செலவில் துர்க்மென்பாஷி மசூதியை அஸ்காபாத் அருகில் கட்டியிருந்தார் நியாஸோவ். அங்கே தனக்கான சமாதியையும் உருவாக்கியிருந்தார். அதிலேயே புதைக்கப்பட்டார்.

‘யாரெல்லாம் ருஹ்நாமாவை மூன்று முறை முழுமையாகப் படிக்கிறார்களோ, அவர்களுக்குச் சொர்க்கம் நிச்சயம்’ என்பது நியாஸோவின் அருள்வாக்கு. ஆனால், ருஹ்நாமாவை எழுதியவருக்கே அந்தப் பாக்கியம் கிட்டியிருக்க வாய்ப்பில்லை.

(வருவார்கள்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism