Published:Updated:

அலர்ட் ஐ.டி... அசால்ட் தினகரன்!

அலர்ட் ஐ.டி... அசால்ட் தினகரன்!
பிரீமியம் ஸ்டோரி
அலர்ட் ஐ.டி... அசால்ட் தினகரன்!

அலர்ட் ஐ.டி... அசால்ட் தினகரன்!

அலர்ட் ஐ.டி... அசால்ட் தினகரன்!

அலர்ட் ஐ.டி... அசால்ட் தினகரன்!

Published:Updated:
அலர்ட் ஐ.டி... அசால்ட் தினகரன்!
பிரீமியம் ஸ்டோரி
அலர்ட் ஐ.டி... அசால்ட் தினகரன்!

நான்கு மாநிலங்கள்... ஆறு மாவட்டங்கள்... 187 இடங்கள்... 1,850 அதிகாரிகள்... 350 கார்கள்... ஆவேசமாகப் போர் தொடுப்பதுபோல, சசிகலா குடும்பத்தினர்மீது மெகா ரெய்டை நடத்தியுள்ளது வருமான வரித் துறை. இந்த ரெய்டு சுனாமியில், சசிகலா குடும்பத்தினரின் தொழில் கூட்டாளிகள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் சுருட்டி அள்ளப்பட்டுள்ளனர்.

2016 ஏப்ரலில் கரூர் அன்புநாதன் வீட்டில் தொடங்கிய ரெய்டு நத்தம் விசுவநாதன், சேகர் ரெட்டி, ராம மோகன ராவ், அமைச்சர் விஜயபாஸ்கர் வரை வந்து நின்றது.  இப்படி நடந்த ரெய்டுகள் அனைத்தும் அ.தி.மு.க-வைக் குறிவைத்து நடத்தப்பட்டவை. இதையெல்லாம் தூக்கிச்சாப்பிடும் அளவுக்குச் சூறாவளியாக இருந்தன சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு. ‘‘ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் குறி வைத்து 187 இடங்களில் ரெய்டு நடத்தியது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை’’ என்கிறார்கள் வருமானவரித் துறையினர். 

அலர்ட் ஐ.டி... அசால்ட் தினகரன்!

எடப்பாடியின் ரகசியக் கூட்டம்!

பிப்ரவரி 14-ம் தேதி, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற நிமிடத்திலிருந்து, சசிகலாவின் உறவினர்களைக் கட்சியிலிருந்தும், அரசியலிலிருந்தும் ஓரம்கட்ட வேலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்தநேரத்தில், சசிகலா உறவுக் குடும்பங்களின் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. குறிப்பாக, ஜெயா தொலைக்காட்சி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் ஆகியவற்றுடன் பணப் பரிவர்த்தனை வைத்துள்ள நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டன. சசிகலா குடும்பத்துடன் நெருக்கமானவர்கள், கடந்த ஆறு மாதங்களாகக் கண்காணிப்பில் இருந்தனர்.

பிரதமர் மோடி, நவம்பர் 6-ம் தேதி சென்னை வந்துசென்றார். அதற்கு மறுநாள், 7-ம் தேதி இரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், சில சீனியர் அமைச்சர்களும், சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவின் மகளுக்குச் சொந்தமான ரிசார்ட் அருகில் ரகசியச் சந்திப்பு ஒன்றை நடத்தினர். பிறகு இரண்டு நாள்களில் நூல்பிடித்ததுபோல் ரெய்டு நடைபெற்றுள்ளது.

ஓ.பி.எஸ் ஆதரவாளரின் நிறுவன கார்கள்!

தமிழகத்தில் நடத்தப்பட்ட ரெய்டுகளுக்கு, ‘ஃபாஸ்ட் டிராக்’ நிறுவனத்தின் 350 கார்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த நிறுவனம், ரெட்சன் அம்பிகாபதி என்பவருக்குச் சொந்தமானது.  முன்பு ம.தி.மு.க-வில் இருந்தவர் இப்போது ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறார். இவரிடம் சொல்லி, ரெய்டுக்காக 350 கார்கள் மொத்தமாக புக் செய்யப்பட்டன. முதல்நாள் இரவே கார்கள், குறிப்பிட்ட ‘பாயின்ட்’களில் நிறுத்தப்பட்டன. ‘ஸ்ரீனி வெட்ஸ் மகி’ என்று திருமண ஸ்டிக்கர்கள் காரில் ஒட்டப்பட்டன. “ஏதோ பெரிய வீட்டுக் கல்யாணம் போல...” என டிரைவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை அதிகாரிகளுடன், சம்பந்தப்பட்ட ஸ்பாட்களுக்குப் போனபிறகுதான், அவர்களுக்கே விஷயம் தெரிந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அலர்ட் ஐ.டி... அசால்ட் தினகரன்!

ரெய்டு சுனாமியின் சுவாரஸ்யங்கள்!

சென்னையில் ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்துக்கு காலை 5.30 மணிக்கு வருமானவரித் துறை அதிகாரிகள் வந்தனர். 6 மணிக்கு ஜெயா தொலைக்காட்சி எடிட்டர் கணேசன் வந்தார். அதன்பிறகு, காலை ஷிப்ட் ஊழியர்கள் வந்தனர். கேட்டை இழுத்துப் பூட்டச் சொன்ன அதிகாரிகள், ‘ஊழியர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே வரக்கூடாது’ என்றனர். அதுபோல், வெளியில் செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. மொத்தமாக அந்த அலுவலகத்தைப் புரட்டிப்போட்டுச் சோதனை நடத்தினர். ‘செய்திகளில் ரெய்டு பற்றிய பேட்டிகள், விவாதம், நிருபர்களின் நேரடி ரிப்போர்ட் ஒளிபரப்பக்கூடாது’ என்று தடைவிதித்தனர். இதற்குக் கண்டனம் எழுந்ததால், மாலை 5 மணிக்குப் பிறகு, செய்திகளை ஒளிபரப்பிக்கொள்ள அனுமதி கொடுத்தனர். ஊழியர்கள் இரண்டு பேர் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றது.  

‘நமது எம்.ஜி.ஆர்’ அலுவலகத்துக்குச் சென்ற வருமானவரித் துறையினர், இரவுப் பணியில் இருந்த ஊழியர்களைக்கூட வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. தினகரனின் அடையாறு இல்லத்தில் ரெய்டு நடக்கவில்லை. அதனால், கோ பூஜை நடத்துவதும் பேட்டி கொடுப்பதுமாக கூலாக இருந்தார் தினகரன்.

நடராசன் மாயம்! 


இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீடு, மகன் விவேக் ஜெயராமன் வீடு, அண்ணா நகரில் உள்ள விவேக்கின் மாமனார் கட்டை பாஸ்கரன் வீடு, நீலாங்கரை மற்றும் தி.நகரில் உள்ள டாக்டர் சிவக்குமார்-பிரபாவதி வீடு, அடையாறில் உள்ள ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வீடு, மிடாஸ் மோகன் வீடு, நீலாங்கரையில் உள்ள பாஸ்கரன் வீடு, டாக்டர் வெங்கடேஷ் வீடு, சௌகார்பேட்டை மற்றும் தி.நகரில் உள்ள மூன்று நகைக்கடைகள், படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை, வேளச்சேரி ஜாஸ் சினிமாஸ் ஆகிய இடங்களில் ரெய்டுகள் நடைபெற்றன.

பெசன்ட் நகர் கபிலர் தெருவில் சசிகலாவின் கணவர் நடராசன் வீடு உள்ளது. அதற்குப் பின்னால், அவருடைய தம்பி ராமச்சந்திரனின் வீடு உள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் ரெய்டு நடத்தவில்லை. மாறாக, தஞ்சையில் உள்ள நடராசனின் வீட்டில் சோதனை நடத்தினர். இத்தனை பரபரப்புகளுக்கு மத்தியில் நடராசன் எங்கிருக்கிறார் என்பது கடைசிவரை யாருக்கும் தெரியவில்லை.

அலர்ட் ஐ.டி... அசால்ட் தினகரன்!

டிஜிட்டல் லாக்கர்!

புதுச்சேரி ஆரோவில்லை அடுத்த பொம்மையார் பாளையத்தில் சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவில் தினகரனுக்குச் சொந்தமான பண்ணைவீடு இருக்கிறது. ஐந்து சொகுசுப் படுக்கையறைகள் கொண்ட இந்த வீட்டில், துணை ஆணையர் வீரமணி தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர், காலை ஏழு மணிக்கு அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தினர். பண்ணை வீட்டின் காவலாளி கர்ணாவைத் தனியறைக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள், ‘வீட்டுக்கு யார் யார் வருவார்கள்? தினகரன் வரும்போது அவருடன் வருபவர்கள் யார்? அப்போது ஏதேனும் பணப்பரிமாற்றம் செய்யப்படுமா?’ என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். அந்த வீட்டில் இரண்டு பாதாள அறைகள் கட்டப்பட்டு, அதில் டிஜிட்டல் லாக் செட் செய்யப்பட்டிருந்தது. இந்த அறைகளைத் திறக்க அதிகாரிகள் மாலை ஐந்து மணி வரை போராடிவிட்டு, இறுதியில் தினகரனிடமே பேசி ஒத்துழைப்புக் கேட்டனர். 

உஷாரான சிவக்குமார் குடும்பம்


திருச்சி கே.கே.நகரில் டாக்டர் சிவக்குமார் வீடு உள்ளது. வருமானவரித் துறை துணை ஆணையர் கணேஷ் தலைமையிலான குழு, வீட்டுக்குச் சென்றபோது, சிவக்குமாரின் தந்தை சத்தியமூர்த்தி வீட்டைப் பூட்டிவிட்டு சென்னை சென்றிருந்தார். அதிகாரிகள் பூட்டை உடைத்துச் சோதனை நடத்த முடிவு செய்தனர். பல இடங்களில் தேடி, பூட்டை உடைக்கும் நபர் ஒருவரை அழைத்துவந்தனர். ஆனால், ‘‘வீட்டின் உரிமையாளர் இல்லாமல் பூட்டை உடைக்கமாட்டேன்’’ எனக் கறாராகக் கூற, அதிகாரிகளே பூட்டை உடைத்தனர். திருச்சி ராஜா காலனி 3-வது தெருவிலுள்ள இன்ஜினீயர் கலியபெருமாளின் வீட்டிலும் சோதனைகள் போடப்பட்டன.

கொடநாடு கொதித்தது!

ஜெயலலிதா, சசிகலாவின் கோடைவாசஸ்தலம், கொடநாடு எஸ்டேட், கர்சன் எஸ்டேட் மற்றும் இந்த இரண்டு எஸ்டேட்களின் கணக்குகள் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளை ஆகியவற்றில் ரெய்டுகள் நடந்தன. கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கொடநாடு எஸ்டேட்டில் ஃபர்னிச்சர்கள், ரகசிய அறைகள் அமைத்துக் கொடுத்தவர், சஜீவன். இவர் நடத்திவரும் ‘நீல்கிரிஸ் ஃபர்னிச்சர்’ கடையிலும் சோதனை நடைபெற்றன. சுற்றுலாத் துறை அமைச்சராக மில்லர் இருந்தபோது, சசிகலாவின் அறிமுகம் சஜீவனுக்குக் கிடைத்தது. கடந்த சட்டசபைத் தேர்தலில், கூடலூர் தொகுதிக்கு இன்சார்ஜாகவும் இவர் நியமிக்கப்பட்டார். கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கிலும், இவர் விசாரணை வளையத்துக்குள் வந்தார்.

அலர்ட் ஐ.டி... அசால்ட் தினகரன்!

மன்னார்குடி கிடுகிடுங்க!

திவாகரனின் சுந்தரக்கோட்டை பண்ணை வீடு, மன்னார்குடியில் உள்ள வீடு, அங்கிருக்கும் தினகரன் வீடு உள்ளிட்ட 12 இடங்கள் வளைக்கப்பட்டன. செல்போன் வைத்துக்கொள்ளும் வழக்கம் திவாகரனுக்குக் கிடையாது. தன்னுடன் இருப்பவர்களின் செல்போன்களிலிருந்துதான் கட்சி மற்றும் ஆட்சி தொடர்பான விஷயங்களைப் பேசுவாராம். அவர்கள் அத்தனை பேரும் குறி வைக்கப்பட்டார்கள்.

அவர்களில் முக்கியமானவர் செல்வம். இவரின் அப்பாவும் திவாகரனும் நண்பர்கள். திவாகரனின் பண்ணை வீட்டிலேயே இருப்பார் செல்வம். திவாகரன் எங்கு சென்றாலும், காரின் பின்சீட்டில் இவர் இருப்பார். பின்சீட்டில் இல்லையென்றால், திவாகரனுக்கான வேலையாக எங்காவது அவர்  சென்றிருப்பார். செல்வம், ஃபிளக்ஸ் தொழில் நடத்தி வருகிறார்.

ஒருமுறை, அமைச்சர் ஆர்.காமராஜின் வார்டில் அ.தி.மு.க-வை ஜெயிக்கவிடாத தி.மு.க கவுன்சிலரான ராசுப்பிள்ளை, திவாகரனுடனான நட்பு காரணமாக ,அ.தி.மு.க-வுக்குத் தாவினார். திவாகரனுடன் இணைந்தபிறகு, அமைச்சரின் வார்டில் அவர் அ.தி.மு.க கவுன்சிலராக ஆனார். இவர், திவாகரனுக்குச் சொந்தமான ரிஷியூர் நிலங்களைக் கவனித்துவருகிறார். அதனால், ரெய்டில் சிக்கினார்.

தேனிக்காரரான சுஜெய், மன்னார்குடியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருடைய செல்போன் எண்ணுக்கே வி.வி.ஐ.பி-க்கள் திவாகரனைத் தொடர்புகொள்வார்களாம். இவர், திவாகரனுக்குச் சொந்தமான பஸ்களைக் கவனித்து வருகிறார்.

அலர்ட் ஐ.டி... அசால்ட் தினகரன்!

திவாகரனின் கல்லூரி நிர்வாகத்தை முழுமையாகக் கவனித்து வருபவர், விநாயகம். இவர் வீட்டில் சோதனையிட்ட வருமானவரித் துறையினர், கல்லூரிக்கு அழைத்துவந்து ஒவ்வொரு அறையாகச் சோதனையிட்டுள்ளனர்.

திவாகரனின் தீவிர ஆதரவாளர் எஸ்.காமராஜ். இவர்தான் இப்போது தினகரன் அணியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர். திவாகரனுக்கு இப்போது லெஃப்ட், ரைட் இரண்டுமே இவர்தான். சென்னையிலிருந்து காமராஜ் வந்தபிறகுதான், இவர் வீட்டில் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

ரெய்டில் சிக்கிய நடேசன், வேளாண்மைத் துறையில் இணை இயக்குநர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றவர். திவாகரனுக்கு நெருக்கமான இவர், திருத்துறைப்பூண்டி தி.மு.க எம்.எல்.ஏ ஆடலரசனின் சித்தப்பா. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். சினிமா விநியோகஸ்தர். அஜித் நடித்த ‘விவேகம்’ படத்துக்கு மத்திய மண்டல விநியோகஸ்தராக இருந்தவர். திவாகரனின் தொழில் நண்பரான இவரது வீட்டிலும் சோதனை நடந்தது.

எடப்பாடி அணியில் இருக்கும் உணவு அமைச்சர் ஆர்.காமராஜின் நெருங்கிய உறவினரான வழக்கறிஞர் உதயகுமார் வீட்டிலும், அமைச்சரின் தீவிர ஆதரவாளரான பொன் வாசுகிராமன் வீட்டிலும் சோதனை நடந்தது, லோக்கல் அ.தி.மு.க-வினரை மிரளவைத்தது.

கோவையில் குறிவைக்கப்பட்ட ஆறுமுகசாமி!

கோவையில், ஒருகாலத்தில் செல்வாக்காக வலம்வந்த சசிகலாவின் உறவினர் ராவணன் வீட்டுப்பக்கம் வருமானவரித் துறையினர் எட்டிப் பார்க்கவில்லை. இங்கு, மெயின் டார்கெட், தொழிலதிபர் ஆறுமுகசாமிதான். மணல் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த இவரது வீடு, சிறுமுகையில் உள்ள இவருக்குச் சொந்தமான பள்ளி, கோவை ராம்நகர் மற்றும் அவிநாசி சாலையில் உள்ள செந்தில் குரூப்ஸ் அலுவலகங்கள், இவருக்குச் சொந்தமான செந்தில், குமரன் தியேட்டர்கள் என இவர் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டன.

நகைக்கடையில் சீக்ரெட் ரெய்டு!

புதுச்சேரி ஓஷன் ஸ்பிரே ஹோட்டல் உரிமையாளர் நவீன் பாலாஜிக்குச் சொந்தமான சிதம்பரம் லஷ்மி ஜுவல்லரியிலும் தினகரனின் ஜோதிடர் என்று சொல்லப்படும் கடலூர் சந்திரசேகர் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது.

தப்பாத செந்தில்!

சசிகலாவின் ஆஸ்தான வழக்கறிஞர் நாமக்கல் செந்தில். சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரானது முதல் இவர் சசிகலா குடும்பத்துக்கு மிக நெருக்கமானார். சிறையில் சசிகலாவைச் சந்திப்பதும், பரோலில் வந்திருந்தபோது அவருடன் சட்ட ஆலோசனைகள் செய்ததும் இவர்தான். நாமக்கல், சென்னையில் உள்ள இவரது வீடுகள் மற்றும் பெங்களூருவில் செந்தில் குரூப் நிறுவனங்களில் ரெய்டுகள் நடந்தன.

பெங்களூரில் உள்ள கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி வசிக்கிறார். கல்வி நிறுவனங்கள், ஃபர்னிச்சர் கடைகள் நடத்திவருகிறார். தினகரனின் தீவிர ஆதரவாளரான இவருடைய வீடு மற்றும் அலுவலகங்களும் தப்பவில்லை.

அலர்ட் ஐ.டி... அசால்ட் தினகரன்!

ரெய்டில் என்ன கிடைத்தது?

வருமானவரித் துறை அதிகாரிகள் வட்டத்தில் விசாரித்தபோது, ‘‘சில இடங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் ரெய்டுகள் நடந்தன. ரெய்டில் சிக்கிய பொருள்கள், ஆவணங்கள் மற்றும் பணத்துக்குச் சரியாகக் கணக்குக் காண்பித்துவிட்டால், எல்லாவற்றையும் திரும்பக் கொடுத்துவிடுவோம். இல்லையென்றால், உரிய துறைகள் மூலம் வழக்குத் தொடர்வோம்’’ என்றனர்.

திட்டமிட்டு ஸ்கெட்ச் போட்டு அலர்ட்டாக வருமானவரித் துறை ரெய்டு நடத்தியபோதும், எதற்கும் அசராமல் அசால்டாக இருந்தார் தினகரன்.

- ஜூ.வி டீம்
அட்டை ஓவியம் : ஹாசிப்கான்

பிரசாதத்தைத் தடுத்த போலீஸ்!

ஜெ
யா டி.வி-யின் தலைமைப் பதவியில் முன்பு இருந்த தினகரனின் மனைவி அனுராதாவுக்கு ஆன்மீகப்பற்று அதிகம். தினகரன் வீட்டுக்கு அருகில் மாடுகளை வளர்க்கும் குடும்பம் ஒன்று வசிக்கிறது. அவர்களிடம் உள்ள மாடு மற்றும் கன்றுகுட்டியை வியாழன், வெள்ளிக் கிழமைகளில் தங்கள் வீட்டுக்கு வரவழைத்து கோ பூஜையை நடத்துவது அனுராதாவின் வழக்கம். இப்படி 20 வருடங்களாக கோ பூஜை நடக்கிறது. ரெய்டு நடந்த வியாழக்கிழமை காலை பூஜை செய்ய ஆரம்பித்திருக்கிறார் அனுராதா. அப்போது, பத்து போலீஸார் சகிதம் வருமானவரித் துறை அதிகாரி ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தார். அவரை ஹாலில் உட்காரச் சொல்லிய அனுராதா, ‘‘பூஜையை முடித்துவிட்டு வருகிறேன்’’ என்றார். பூஜை முடிந்தவுடன் சர்க்கரைப் பொங்கலை மாட்டுக்குப் பரிமாற உதவியாளர் கொண்டுபோனபோது போலீஸார், ‘‘வீட்டிலிருந்து எந்தப் பொருளும் வெளியே போகக்கூடாது’’ எனச் சொல்லி தடுத்து நிறுத்தினார்கள். வந்த வருமானவரித் துறை அதிகாரியும் சொல்லிக்கொள்ளாமல் எஸ்கேப் ஆனார். ஆனால், போலீஸார் மட்டும் நின்றிருந்தார்கள். அவர்களைப் பார்த்து தினகரன், ‘‘என்னை ஹவுஸ் அரெஸ்ட் செய்கிறீர்களா? யாருக்குப் பாதுகாப்பாக வந்தீர்களோ.. அவர் போய்விட்டார். நீங்கள் ஏன் நிற்கிறீர்கள்?’’ எனக் கேட்க... வேறுவழியில்லாமல் போலீஸாரும் கிளம்பிப்போனார்கள்