Published:Updated:

மாடுகளை வெச்சு சம்பாதிக்கறது பாவம்! - இது தீர்த்தமலையின் தீர்ப்பு

மாடுகளை வெச்சு சம்பாதிக்கறது பாவம்! - இது தீர்த்தமலையின் தீர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
மாடுகளை வெச்சு சம்பாதிக்கறது பாவம்! - இது தீர்த்தமலையின் தீர்ப்பு

இரண்டாம் இதயம்

மாடுகளை வெச்சு சம்பாதிக்கறது பாவம்! - இது தீர்த்தமலையின் தீர்ப்பு

இரண்டாம் இதயம்

Published:Updated:
மாடுகளை வெச்சு சம்பாதிக்கறது பாவம்! - இது தீர்த்தமலையின் தீர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
மாடுகளை வெச்சு சம்பாதிக்கறது பாவம்! - இது தீர்த்தமலையின் தீர்ப்பு

‘நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்பது பலருக்கு வலி தரும் வசவு. தீர்த்தமலைக்கு அது நேசத்துக்குரிய வாழ்வு. ‘‘மழையோ, வெயிலோ... மாடுகளோடதான் இருப்பேன். செல்போன் இருந்தா, யாராவது எங்கயாவது கூப்பிடுவாங்க. மாட்டை விட்டுட்டுப் போக முடியாது. அதனால செல்போன் வெச்சிக்கல. சொந்தக்காரங்க வீடுகளுக்குப் போய் 20 வருஷமாச்சு. நல்லது, கெட்டது எதுவானாலும் ராத்திரியில போயிட்டு விடியறதுக்குள்ள வந்துடுவேன். மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிட்டுப் போகணுமில்ல?’’ என வெள்ளந்தியாகச் சிரிக்கும் தீர்த்தமலையை, மேய்ச்சல் காட்டில்தான் சந்தித்தோம்.

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே இருக்கும் ஆத்தூர் கிராமம்தான் தீர்த்தமலையின் ஊர். தாத்தா, அப்பாவைப் போலவே இவரும் அந்த ஊரின் தலையாரியாகப் பணியாற்றியவர். மாடு மேய்ப்பதுதான் அவரின் விருப்பமான தொழில். பணத்துக்காக இதைச் செய்யவில்லை. அவரின் வாழ்விலும் வார்த்தைகளிலும் மாடுகளே நிறைந்திருக்கின்றன.

மாடுகளை வெச்சு சம்பாதிக்கறது பாவம்! - இது தீர்த்தமலையின் தீர்ப்பு

‘‘அது ஒரு வெள்ளிக்கிழமை. வழக்கம் போல கணக்குப்பிள்ளை வீட்டுக்குக் காவல் இருக்கப் போனார் எங்க அப்பா. அந்த வீட்ல ஒரு கன்னுக்குட்டி, எழுந்து நடக்க முடியாம படுத்துக் கிடந்திருக்கு. ‘இது பொழைக்காது... வீட்டுக்கு எடுத்துட்டுப்போ’ன்னு எங்க அப்பாகிட்ட அதைக் கொடுத்துட்டார் கணக்குப்பிள்ளை. அப்பா அதை வீட்டுக்குத் தூக்கிட்டு வந்தார். பள்ளிக்கூடம் முடிஞ்சு அப்பதான் நான் வீட்டுக்கு வந்தேன். சோப்பு போட்டு அதைக் குளிப்பாட்டி, மஞ்சள், குங்குமம் பூசி பூஜையெல்லாம் செய்தோம். பசிக்குக் கஞ்சி கொடுத்தோம். நம்பிய சாமி, எங்களைக் கைவிடல. அந்தக் கன்னுக்குட்டி எழுந்து ஓட ஆரம்பிச்சுது. சந்தோஷம் தாங்க முடியல. ஸ்கூல்விட்டு வந்ததும், அந்தக் கன்னுக்குட்டியோடதான் விளையாடுவேன். அந்த ஒரு கன்னுக்குட்டிதான், இன்னைக்கு பல நூறு மாடுகளா என் மந்தையில மேய்ஞ்சுக்கிட்டிருக்கு’’ என்று தன் வாழ்வைப் பற்றிப் பேசத் தொடங்கினார் தீர்த்தமலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாடுகளை வெச்சு சம்பாதிக்கறது பாவம்! - இது தீர்த்தமலையின் தீர்ப்பு

பார்வை விரியும் தூரம்வரை புல்தரை, லேசான தூறல், ஈரக்காற்று, மாடுகளின் கழுத்துமணி குலுங்கும் ஓசை தவிர வேறெதுவும் கேட்காத அமைதியான சூழல்... தீர்த்தமலை தொடர்ந்தார். ‘‘எனக்கு ரெண்டு சம்சாரம். ஏழு பொண்ணுங்க, ரெண்டு பையனுங்க. ரெண்டு சம்சாரமும் இறந்துட்டாங்க. 20 வருஷத்துக்கு முன்ன ரெண்டாவது பையன் சக்திவேல், ஏரிக்குள்ள கன்னுக்குட்டிய தூக்கிட்டுப் போனபோது சேத்துல சிக்கி இறந்துட்டான். நாலு பொண்ணுங்களுக்கும், பையனுக்கும் கல்யாணத்தை முடிச்சுட்டேன்.

தாத்தா தலையாரி, அப்பாவும் தலையாரி, நானும் தலையாரியா வேலை செஞ்சேன். மணியக்காரர் ஊருக்கு வரும்போது மட்டும் அவரோட போவேன். மற்றபடி சின்ன வயசுல இருந்தே மாடு வளர்க்கறதுதான் என்னோட வேலை.  புறம்போக்கு நிலத்தையெல்லாம் பிளாட் போட்டு வித்துடறாங்க. அதை யாரும் கண்டுக்கறதில்லை. அதனால மேய்க்கறதுக்கான இடம் நாளுக்குநாள் குறைஞ்சுக்கிட்டே வருது. எவ்வளவுதான் கவனமா மேய்ச்சாலும், பசேல்னு பயிரைப் பார்த்தா சில மாடுங்க வாயை வைக்க ஓடும். அதுக்காக மாட்டை அடிக்க மாட்டேன். அப்படி மேஞ்சுட்டா, ‘வாயில்லா ஜீவன் தெரியாம மேஞ்சுடுது’னு, அவங்ககிட்ட தாழ்ந்து போயிடுவேன். அவங்களும் பெருசா எடுத்துக்க மாட்டாங்க. ஊருக்குள்ள யாரோடவும் பகையில்லை’’ என்கிறவரின் கண்கள் நாலாபக்கமும் அடிக்கடி சுழன்று மாடுகளைக் கண்காணிக்கின்றன. துடுக்கான கன்றுக்குட்டி ஒன்று, கூட்டத்திலிருந்து பிரிந்து பக்கத்து வயலை நோக்கி வேகநடை போட, தீர்த்தமலை அவசரமாக ஓடி அதைச் செல்லமாக அதட்டிக் கூட்டத்தில் சேர்த்துவிட்டு வந்து தொடர்ந்தார்.

‘‘முதல்ல வளர்த்த கன்னுக்குட்டி, பெரிசாகி ஏழு கன்றுகளைப் போட்டது. வயதான நிலையில் ஒருநாள் அந்தப் பசு செத்துப்போச்சு. அதை வெட்டுறதுக்காக எடுத்துட்டுப் போக எங்க ஊர் ஆளுங்க வந்தாங்க. ‘கொடுக்க மாட்டேன்’னு சொல்லிட்டேன். மனுஷங்களுக்குச் சடங்கு செய்யறது மாதிரி எல்லாத்தையும் செஞ்சு புதைச்சுட்டோம். ஏழு மாடு இப்ப நூத்துக்கணக்கா பெருகிப் போச்சு. பசு மாடு பால் மரத்துப் போனாலோ, காளை மாடு உழவு வேலை செய்ய முடியாம வயசாகிப் போனாலோ, ‘இதை வெச்சிருக்கறது வீண் செலவு’ன்னு நினைச்சதில்ல. நான் வளர்த்த மாடு ஒண்ணுகூட இதுவரைக்கும் கறிக்கடைக்குப் போனதில்ல. செத்த மாட்டைக் கறிக்கு வித்தாலும் அது பாவம்தானய்யா. நானே புதைச்சுடுவேன்.

மாடுகளை வெச்சு சம்பாதிக்கறது பாவம்! - இது தீர்த்தமலையின் தீர்ப்பு

இதுவரைக்கும் நாலாயிரம் மாட்டுக்கு மேல வளர்த்திருப்பேன். காட்டுல மேட்டுல மேய்ஞ்சு திரியறதால, பெருசா எந்த நோயும் வந்ததில்லை. சினைக்காக ஊசி போடமாட்டோம். அதனால எல்லாமே நாட்டு மாடாவே இருக்குது. நெறைய மாடு இருந்தாலும், பால் கறந்து விற்க மாட்டோம். எங்க ஊரு பொண்ணுங்க, புள்ளத்தாச்சி ஆனதும் அம்மா வீட்டுக்கு வருவாங்க. நாங்க நாட்டு மாடு வளர்க்கறதால, எங்க வீட்லதான் பால் வாங்குவாங்க. அவங்களுக்கு மட்டும் பால் கறந்து கொடுப்போம். காசு வாங்க மாட்டோம். சாப்பிட ஏதாவது கொடுத்தா வாங்கிக்குவோம். நம்ம வீட்டு மாடு. அதுல காசு சம்பாதிக்க நினைக்கலாமா? பாவம்!’’ என்கிறார்.

இப்படி இருப்பதால் தீர்த்தமலை வறுமையில் தவிப்பார் என நினைக்க வேண்டாம். ‘‘தலையாரி பென்ஷன் வருது. மந்தை பெரிசாகிட்டா, சில மாடுகளை விற்பேன். சந்தைக்குக் கொண்டு போகமாட்டேன். வெளியூர்ல இருந்து சொந்தக்காரங்க வந்து, வளர்ந்த கன்னுக்குட்டிகளை ஏர் ஓட்ட வாங்கிட்டுப் போவாங்க. அதை வெச்சு சில வருஷம் பொழைப்பாங்க. பிறகு திரும்பவும் ஓட்டிவந்து விடுவாங்க. அவங்களுக்குத் துணிமணி எடுத்துக் கொடுத்து அனுப்பி வைப்பேன். வளர்க்கணும்னு ஆசைப்படுறவங்களுக்கு மட்டும் விலைக்குக் கொடுப்பேன். பக்கத்து ஊர்க்காரங்களா இருந்தா நடந்தே மாட்டை ஓட்டிக்கிட்டுப் போவாங்க. அவங்களோட போகாம, அந்த மாடுங்க திரும்ப வந்துடும். அனுப்பறதுக்குக் கஷ்டமாதான் இருக்கும். ஆனா, வேற வழியில்லையே! வருஷத்துக்கு 50 மாடுகள் விற்பேன். ஐந்து லட்சத்துக்கு மேல வரும். போன பொங்கலுக்கு 93 மாடுகள் விற்றேன். கையில இருக்கற காசை வெச்சு, குடிசை வீட்டைப் பிரிச்சுட்டு கல்லு வீடு கட்டலாம்னு இருக்கேன்.

அதுபோல சாணியை விற்பேன். ஒரு டிப்பர் சாணியை 1,500 ரூபாய்க்கு வாங்கிட்டுப் போறாங்க. இதுலயே வருஷத்துக்கு ரெண்டு லட்ச ரூபாய்க்கு மேல கிடைக்கும். என் பையனுக்கு வேன் வாங்கிக் கொடுத்திருக்கேன். அவனும் செலவுக்கு ஏதோ சம்பாதிக்கிறான்.

மாடுகளை வெச்சு சம்பாதிக்கறது பாவம்! - இது தீர்த்தமலையின் தீர்ப்பு

நான் மாடு வளர்க்கறத கேள்விப்பட்டு கவர்ன்மென்ட் அதிகாரிங்க வந்து ‘லோன் கொடுக்கறோம்’னு சொன்னாங்க. ‘வேணாம்’னு சொல்லிட்டேன். அதுபோல ‘மாடு வளர்க்கறதுக்காக உதவி செய்யறோம்’னு சொல்லி, இனாமா பணம் கொடுக்கச் சிலர் வருவாங்க. அதை வாங்க மாட்டேன். அது பாவம்! என்னோட மாட்டை மேய்க்க அவங்க எதுக்கு எனக்குப் பணம் தரணும்? யார் காசுக்கும் ஆசைப்பட்டதில்லை. யாருக்கும் கைகட்டிப் பதில் சொன்னது கிடையாது. தரையில படுத்தாலும் நிம்மதியா தூங்கணும். அதுதான் வாழ்க்கை’’ எனத் தீர்ப்புச் சொல்கிறார் தீர்த்தமலை.

சில வாழ்க்கைமுறைகளை அவமானமாகக் கருதுகிறவர்களுக்கும், அடுத்தவர் கால்களில் நிற்க நினைப்பவர்களுக்கும், தீர்த்தமலையின் வாழ்க்கை ஒரு பாடம்!

- பா.ஜெயவேல்
படங்கள்: அ.குரூஸ்தனம்