Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 27 - பொய்யில் உதித்த பேரரசர்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 27 - பொய்யில் உதித்த பேரரசர்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 27 - பொய்யில் உதித்த பேரரசர்!

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 27 - பொய்யில் உதித்த பேரரசர்!

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 27 - பொய்யில் உதித்த பேரரசர்!
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 27 - பொய்யில் உதித்த பேரரசர்!

ரோமாபுரி சாம்ராஜ்ஜியத்துக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. பல கொடுங்கோலர்களும் அரைக்கிறுக்கர்களும் கையாலாகாதவர்களும் காமப்பித்தர்களும் அதன் அரியணையில் அமர்ந்து அசிங்கப்படுத்தியதுண்டு. அவர்களில் இந்த ‘மைனர்’, தன்னிகரற்ற, தனித்துவமான தறுதலை. பெயர், மார்கஸ் ஔரேலியஸ் அண்டோனியஸ் அகஸ்டஸ் என்ற எலகாபாலஸ்.

கோயில் ஒன்றுக்குச் செல்லும் வழியில் ‘ஒன்னுக்கடிக்க’ ஓரமாக ஒதுங்கிய ரோமானியப் பேரரசர் காராகல்லா, அவருடைய தலைமைத் தளபதி மெக்ரினெஸ் என்பவராலேயே குத்திக் கொல்லப்பட்டார் (கி.பி.217, ஏப்ரல் 8). அடுத்து அரியணையைக் கைப்பற்றினார் மெக்ரினெஸ். காராகல்லாவுக்கு வாரிசுகள் கிடையாது. அதற்காக கூடவே இருந்து, பணிவிடைகள் செய்து, பாதுகாப்பும் தந்து, பின் கொலையும் பண்ணிய ‘அன்புத்தோழர்’ மெக்ரினெஸை அடுத்த பேரரசராக மக்களும் மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்களா? சமீபத்தில் நாம் பார்த்தது போலவே அசாதாரணமான சூழ்நிலை நிலவியது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 27 - பொய்யில் உதித்த பேரரசர்!

காராகல்லாவின் சொந்த பந்தங்கள், தங்கள் வம்சத்திலிருந்து ஒருவரைப் பேரரசராக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்தப் போட்டியில் முன்னணியில் இருந்தவன் எலகாபாலஸ். 14 வயதுச் சிறுவன். அவன் தந்தை மார்செலஸ், பேரரசின் முக்கியமான தளபதி, அரசியல்வாதி. தாய் ஜூலியா சோயிமியாஸ், பேரரசர் காராகல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரி. பாட்டியான இன்னொரு ஜூலியா, ராஜமாதாவாக இருந்தவள். அதிகாரமுள்ள சொந்த பந்தங்கள் பலரும் எலகாபாலஸின் பின்னணியில் இருந்தனர். ரோமானியப் பேரரசுக்குட்பட்ட சிரியா மாகாணத்தின் மதகுரு பதவிக்கான பரம்பரை உரிமையும், எலகாபாலஸ் குடும்பத்துக்குத்தான் இருந்தது. அப்போதைய மதகுருவும் எலகாபாலஸ்தான்.

‘‘எலகாபாலஸ், முன்னாள் பேரரசர் காராகல்லா வுக்கு முறைதவறிப் பிறந்த மகன். அவனுக்கே அரியணை ஏறும் உரிமை இருக்கிறது’’ எனத் தாய் ஜூலியாவே கூச்சமின்றி பொய் சொன்னாள். மறுத்துப் பேச காராகல்லா உயிர்த்து வரப்போவதில்லை என்ற நம்பிக்கை. காராகல்லாவின் ஆதரவாளர்கள், ஆதரவுப் படை வீரர்கள் அனைவருமே எலகாபாலஸை ராஜ வாரிசாக ஏற்றுக்கொண்டு ஆதரவு நல்கினர். தலைமைத் தளபதியான கோமாஸோன் இந்தக் கூட்டணியில் கைகோத்தார். சொல்லப்பட்ட பொய்க்கு வலுச்சேர்க்கும்விதமாக, எலகாபாலஸ் தன் பெயருக்கு முன்பாக காராகல்லாவின் முன்பெயர்களான மார்கஸ் ஔரேலியஸ் அண்டோனியஸ் என்பதையும் சேர்த்துக் கொண்டான். ‘இதெல்லாமே நாடகம். பச்சைப்பொய்’ என்று பேரரசின் மேலவையான செனட்டில் பிராது கொடுத்தார் மெக்ரினெஸ். அவர்கள் எலகாபாலஸைக் கண்டித்ததுடன், ‘இருவரும் மோதுங்கள். யார் வெல்கிறீர்கள் என்று பார்க்கலாம்’ என்பதாகப் போர் மூட்டி விட்டனர்.

எலகாபாலஸின் உறவுகள், தம் செல்வத்தால் முக்கியப் படைப்பிரிவுகளை வளைத்துப் போட்டனர். கி.பி. 218-ல் இரு தரப்புப் படைகளும் மோதின. தளபதியும் குருவுமான கானீஸ் தலைமையில் எலகாபாலஸ் ஆதரவுப் படைகள், மெக்ரினெஸின் படைகளைத் தோற்கடித்தன. மெக்ரினெஸும், அவரது மகனும் தப்பி ஓடினர். பின்பு கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். செனட் உறுப்பினர்கள் வேறு வழியே இன்றி, காராகல்லாவின் மெய்யான மகனாக பொய்யான எலகாபாலஸை ஒப்புக்கொண்டனர். பதினான்கு வயது எலகாபாலஸ், ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் பேரரசனாக... சாரி, பேரரசராக அரியணை ஏறினார்.

அரசியல் அனுபவம் கிடையாது. மதிநுட்பம் இல்லை. முதிர்ச்சியும் பக்குவமும் ஆளுமைத்திறனும் புரிதலும் பொறுமையும் அற்றவர். பேரின்பமும் சிற்றின்பங்களுமே வாழ்வின் அவசியத்தேவைகள் என்ற குதூகல மனம் கொண்டவர். இப்படி ஒருவர், பரந்து விரிந்த ரோம் சாம்ராஜ்ஜியத்துக்கே பெருந்தலைவர் ஆனால்? கெட்ட ஆட்டம் ஆரம்பமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 27 - பொய்யில் உதித்த பேரரசர்!

பேரரசரான பின் ரோம் நகரத்துக்குச் செல்வதற்கு முன்பாக, அந்தக் குளிர்காலத்தை, கருங்கடலுக்குத் தெற்கில் அமைந்த நகரமான பித்தினியாவில் கழித்தார், களித்தார் எலகாபாலஸ். மதகுரு அந்தஸ்திலிருந்த எலகாபாலஸ், ரோமானியர்களின் முதன்மைக் கடவுளான ஜூபிடரையும் பிற கடவுள்களையும் நிராகரிக்க ஆரம்பித்தார். அது குருவான கானீஸுக்குக் கோபத்தைத் தந்தது. ‘‘மதிப்புள்ளவனாக, விவேகமுள்ளவனாக வாழக் கற்றுக்கொள்’’ என்று அறிவுரை சொன்னார். எனக்கே அறிவுரை சொல்கிறாயா? ‘மடார்’ என மரண அடி ஒன்று கொடுத்தார் எலகாபாலஸ். சுருண்டு விழுந்த குருவை, மற்றவர்கள் கொன்று போட்டனர்.

கி.பி.219-ன் இலையுதிர் காலத்தில், ஒரு பசும் இலைபோல கோலாகலக் கொண்டாட்டங் களுடன் ரோமுக்கு வந்து சேர்ந்தார் எலகாபாலஸ். தனக்கு நெருங்கியவர்களுக்கெல்லாம் உயர் பதவிகள் கொடுத்து அழகு பார்த்தார். ரோமானிய சாம்ராஜ்ஜிய வரலாற்றிலேயே புதிய புரட்சி ஒன்றையும் நிகழ்த்தினார். தனது தாய்க்கும் பாட்டிக்கும் பெரும் பதவிகளும் கௌரவப் பட்டங்களையும் அளித்தார். இருவரையும் செனட் உறுப்பினர்களாக நியமித்தார். ஆணாதிக்கம் மிகுந்த செனட்டில் நுழைந்த முதல் ரோமானியப் பெண்மணிகள் அந்த ஜூலியாக்களே.

‘அடுத்து அதிரடியாக என்ன செய்யலாம்’ என்று யோசித்தார் எலகாபாலஸ். அதிரடி என்றாலே ‘பணமதிப்பிழப்பு’ ஆபரேஷன்தான் என்பது பல நூற்றாண்டுகளாகத் தொடரும் வழக்கம்தான். சாம்ராஜ்ஜியத்தில் புழக்கத்திலிருந்த நாணயங்களின் (டெனாரியஸ்) மதிப்பு, குறைக்கப் பட்டது. நாணயங்களிலுள்ள சுத்தமான வெள்ளியின் அளவை 58 சதவிகிதத்திலிருந்து 46.5 சதவிகிதமாகக் குறைத்தார். நாணயங்களின் எடையும் குறைந்தது. அதேசமயம் தனது தாய் மற்றும் பாட்டியின் உருவங்கள் பொறிக்கப்பட்ட புதிய நாணயங்களை வெளியிட்டார். ரோமானிய சாம்ராஜ்ஜியத்தில் பெண்களின் உருவத்துடன் வெகு சிலருக்கே நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அடுத்தது என்ன? மக்களின் மத நம்பிக்கையில் கைவைப்பது. எலகாபாலஸும் அன்றே அதைத்தான் செய்தார். ‘எலகாபாலஸ்’ என்ற பெயர் சிரியர்களின் சூரியக் கடவுளைக் குறிப்பது. ரோமானியர்களின் சூரியக் கடவுளான ஜூபிடரைவிட, சிரிய எலகாபாலஸே உயர்ந்தவர் என்று நிறுவும் முயற்சிகளை ஆரம்பித்தார் பேரரசர். எலகாபாலஸை வணங்குவது தன்னை வணங்குவது போலாகும் அல்லவா. கரியநிற விண்கல் ஒன்று சிரியாவில் கண்டெடுக்கப்பட்டது. ‘இது, சொர்க்கத்திலிருந்து சூரியக் கடவுள் எலகாபாலஸால் பூமிக்கு அனுப்பப்பட்ட கல்’ – பேரரசர் அறிவித்தார். அக்கல்லே சூரியக் கடவுள்!

ரோம் நகரத்துக்கு அருகே பாலாடின் மலையடிவாரத்தில் ரோமானியக் கடவுள்களுக்கான கோயில்கள் இருந்தன. அதை விரிவாக்கி ‘எலகாபாலியம்’ என்ற புதிய கோயிலைக் கட்டினார். இங்கே நிறுவ அந்த  விண்கல் ரோமுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. மாபெரும் ஊர்வலம் புறப்பட்டது. வெள்ளை வெளேரென ஆறு குதிரைகள், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பளபளவென தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட பிரமாண்ட ரதம் ஒன்று. ஆறு குதிரைகள் அந்த ரதத்தை இழுத்துச் செல்ல, அதன் மேல் அமர்ந்து ஓட்டிச் சென்றது அந்த கரிய நிறக் கல். மன்னிக்கவும், சூரியக் கடவுளான எலகாபாலஸ். கல்லும் கண்ணைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரதத்தின் முன்னால் ஓடிக் கொண்டிருந்தார் பேரரசர். அதுவும் ரதத்தைப் பார்த்துக் கடவுளை வணங்கியபடியே, பின்னோக்கி. முழு தொலைவையும் அவர் பின்நவீனத்துவ ஓட்டத்திலேயே கடக்க, வழியெங்கும் மக்களின் ஆரவாரம்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 27 - பொய்யில் உதித்த பேரரசர்!

ஒவ்வொரு கோடையிலும், எலகாபாலியத்தில் சூரியக் கடவுளுக்கான திருவிழா அமர்க்களப்பட்டது. மேள தாளங்களும் சிங்கிகளும் முழங்க, சூரியக் கடவுளைச் சுற்றிச் சுற்றி வந்து பேரரசர் நளினமாக நடனமாடினார். உச்சியில் இருந்தபடி தங்க, வெள்ளி நாணயங்களை, புதிய உடைகளை, பரிசுப் பொருள்களை மக்கள் மீது வீசியெறிந்தார் பேரரசர். ஆம், இன்னொரு கடவுளின் மீது நம்பிக்கையை உண்டாக்க வேண்டுமென்றால் மக்களைப் பணத்தாலும் பரிசுகளாலும் அடிப்பதுதானே ஒரே வழி. மக்கள் தம்மை மறந்து ஆடிப்பாடிக் களித்திருக்கும்போது, புத்தாடை அணிந்த சிறார்கள் கமுக்கமாக எலகாபாலியத்தின் உள்ளே அழைத்துச் செல்லப்படுவார்கள். கொண்டாட்டங்களில் லயித்து உள்ளே செல்லும் அந்தக் குழந்தைகள், மீண்டும் உயிருடன் வெளியே வந்ததில்லை. எலகாபாலஸுக்குக் குழந்தைகளின் ரத்தமும் தேவைப்பட்டது!

ரோம் நகரத்தில் அவர் அவ்வப்போது சென்ற ஊர்வலங்கள், ஊதாரித்தனத்தின் அப்பட்டமான சாட்சி. எலகாபாலஸ் தகதக பட்டுடை தரிப்பார், (‘ரோமானியப் பேரரசர்களில் முதன்முதலாகப் பட்டுடுத்தியது இவரே’ என்கிறது ஒரு சரித்திரக் குறிப்பு.) தன்னை விதவிதமாக அலங்கரித்துக்கொள்வார். ஏகப்பட்ட வெள்ளைக் குதிரைகள் இழுக்கும் உயரமான ரதத்தில் ஏறி அமர்வார். ஊர்வலம் ஆரம்பமாகும். ரதத்தின் இருபுறமும் நிர்வாண மங்கைகள் நடனமாடியபடியே வரவேண்டும். மக்களின் இடைவிடாத வாழ்த்தொலியும் ஆரவாரமும் கட்டாயம்.

இன்னொரு பக்கம் எலகாபாலஸின் அந்தப்புரமும் ஆரவாரமாகத்தான் இருந்தது. இரவினில் ஆட்டம். நள்ளிரவினில் கொட்டம். விடிய விடியக் கொண்டாட்டம். ஆனால் என்ன, அந்த அந்தப்புரத்தில் காதலிகளின் எண்ணிக்கையைவிட, காதலன்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது. ஆம், அவர்கள் எலகாபாலஸின் காதலன்களே!

(எலகாபாலஸ் வருவார்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism