Published:Updated:

லிவிங் டுகெதர்! - திருமணத்தை ஒழிக்கப்போகும் உறவுமுறையா?

லிவிங் டுகெதர்! - திருமணத்தை  ஒழிக்கப்போகும் உறவுமுறையா?
பிரீமியம் ஸ்டோரி
லிவிங் டுகெதர்! - திருமணத்தை ஒழிக்கப்போகும் உறவுமுறையா?

வசதிகளும் வில்லங்கங்களும் - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

லிவிங் டுகெதர்! - திருமணத்தை ஒழிக்கப்போகும் உறவுமுறையா?

வசதிகளும் வில்லங்கங்களும் - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

Published:Updated:
லிவிங் டுகெதர்! - திருமணத்தை  ஒழிக்கப்போகும் உறவுமுறையா?
பிரீமியம் ஸ்டோரி
லிவிங் டுகெதர்! - திருமணத்தை ஒழிக்கப்போகும் உறவுமுறையா?
லிவிங் டுகெதர்! - திருமணத்தை  ஒழிக்கப்போகும் உறவுமுறையா?

குவுக்கு 28 வயது. கார்ப்பரேட் சட்ட நிபுணர். ஒன்றரை லட்ச ரூபாய் மாதச் சம்பளம் வாங்கும் இவர், சொந்த வீடு வாங்கிவிட்டார். தன் தோழியுடன் இரண்டு ஆண்டுகளாக லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்துகிறார். திருச்சி அருகே கிராமத்தில் வசிக்கும் ரகுவின் பெற்றோருக்கு இது ரொம்ப லேட்டாகவே தெரியும். ‘‘அம்மாவிடம் தயங்கித் தயங்கிச் சொன்னேன். திடுக்கிட்டாலும், என்னைப் புரிந்துகொண்டார். ஆறு மாதங்கள் கழித்தே அப்பாவிடம் சொன்னேன். கோபத்தில் கத்துவார் என்று நினைத்தால், பயந்துபோய் கவலையோடு என்னைப் பார்த்தார். என் கோணத்தில் பார்த்தால், நான் செய்வது தப்பில்லை. என் வருமானத்தில் வாழ்க்கை நடத்துகிறேன். நான் ஏன் பெற்றோரை நினைத்துக் கவலைப்பட வேண்டும்?’’ என்று கேட்கிறார் ரகு.

 நரேஷ், ஐ.டி நிறுவனத்தில் சீனியர் லெவல் அதிகாரி. வாடகைக்கு வீடு தேடிவரும் அவருக்கு இரண்டு மாதங்களாகியும் வீடு கிடைக்கவில்லை. காரணம், தன்னோடு பணிபுரியும் பூஜா எனும் பெண்ணுடன் ‘லிவிங் டுகெதர்’ உறவில் வாழ்ந்துவருவதே. ‘லிவிங் டுகெதர்’ இணைகளுக்கு வீடு தருவதில், வீட்டு உரிமையாளர்களுக்கு விருப்பமில்லை. ‘‘ஒரு வெப்சைட்டுக்கு ட்ரையல் வெர்ஷன் என அறிமுகம் செய்வார்கள். அதில் எழும் பிரச்னைகளைச் சரிசெய்துவிட்டு, பிறகு பக்காவான வெப்சைட்டைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவார்கள். லிவிங் டுகெதர் என்பது திருமணத்தின் ட்ரையல் வெர்ஷன். இது பலருக்குப் புரியவில்லை” என ஆதங்கப்படுகிறார் நரேஷ்.

 சொந்த பிசினஸ் செய்கிறார் கணேஷ். அவரின் தோழி ஒருவருக்குத் திருமணமாகி, சில மாதங்களில் கணவர் இறந்துவிட்டார். நான்கு வருடங்களாக கணேஷ் அந்தப் பெண்ணுடன் ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் இரு வீட்டார் எதிர்த்தனர்; புறக்கணித்தனர். ஆனால், ‘‘இப்போது எங்களை அவர்கள் இயல்பாக ஏற்றுக்கொண்டுள்ளனர். எங்களின் உறுதிதான் உறவினர்களை எங்களோடு சேர்த்தது’’ என்கிறார் கணேஷ்.

லிவிங் டுகெதர்! - திருமணத்தை  ஒழிக்கப்போகும் உறவுமுறையா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெருநகரங்களில் நம் அருகிலேயே இப்படிப்பட்ட தம்பதிகள் வாழக்கூடும். என்ன... சமூக அழுத்தங்களுக்குப் பயந்து அவர்கள் தங்கள் வாழ்க்கைநிலையை வெளியில் சொல்வதில்லை. சிலர், தங்கள் வீடுகளுக்கே விஷயத்தைச் சொல்வதில்லை. ஊரிலிருந்து யாராவது பார்க்க வரும்போது சட்டென தங்கள் அபார்ட்மென்ட்டை ஆண்கள் அல்லது பெண்கள் மட்டுமே தங்கியிருக்கும் இடமாக மாற்றிக் காட்டிவிடுகிறார்கள்.  

இப்போது பலருக்கும் மிக இளம் வயதிலேயே வேலை கிடைத்துவிடுகிறது. பெண்கள், தங்கள் வீடுகளைவிட்டு தனியாகத் தொலைதூரம் வந்து தங்கி வேலை செய்கிறார்கள். இந்தப் புது சுதந்திரம், பல பரிசோதனை முயற்சிகளில் அவர்களை இறங்கத் தூண்டுகிறது. ‘இது சரியா...தவறா’ என ஆராயும் மனநிலை அவர்களுக்கு இருப்பதில்லை. பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்து, வெளிநாட்டுத் துரித உணவுகளுக்குப் பழகிக்கொண்ட அவர்களுக்கு, அந்நியக் கலாசாரமும் தப்பாகத் தெரியாததில் ஆச்சர்யமில்லை.

குடும்பத்துக்கு எதிரானதா இது?

‘லிவிங் டுகெதரா’க வாழும் ஒரு பெண் எழுத்தாளர் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்... ‘‘என் அப்பா இறந்தபோது என் குடும்பத்தை நான் சுமக்கவும் வழிநடத்தவும் வேண்டியிருந்தது. அந்தப் பயணத்தில், திருமணத்தைப் பற்றிய எண்ணமே எனக்கு வரவில்லை. இப்போது, நெருங்கிய நண்பர் ஒருவரோடு சேர்ந்து வாழ்கிறேன். இந்த வாழ்க்கையில் எனக்குப் பிடித்த விஷயம், பெண் தன் ஆளுமையை எதன் பொருட்டும் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை. சரியான புரிந்துணர்வு இருக்கும்பட்சத்தில் இருவரும் சீராக வளர முடியும். என் வீட்டிலும் இதைப் புரிந்துகொண்டுள்ளனர்.

‘இது குடும்பம் எனும் அமைப்புக்கு எதிரான ஒன்று’ என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படியில்லை, இது குடும்பத்தின் வேறு வடிவம். இது உறவுக்குள் நிலவும் இறுக்கத்தைத் தளர்த்தும். குடும்பத்துக்குள் நடக்கும் வன்முறைகள், கொலைகள் தவிர்க்கப்படும். ஆணும் பெண்ணும் தங்களின் சுய அடையாளங்களை விட்டுக்கொடுக்காமல் சேர்ந்துவாழ இதில் மட்டுமே சாத்தியமுள்ளது. சமூகத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், இது திருமண உறவைவிட சிறப்பானதாக இருக்கும்’’ என்கிறார் அவர்.

சட்ட அங்கீகாரம் கிடையாது!

ஒரு திருமணத்துக்கான சடங்குகளோ, பதிவோ, பாதுகாப்போ இல்லாமல் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழும் ‘லிவிங் டுகெதர்’ உறவில் சட்டரீதியாக என்ன உரிமைகள் இருக்கின்றன? வழக்கறிஞர் அஜிதா விவரிக்கிறார்.

‘‘இந்த வாழ்க்கை முறைக்கு, இங்கு எந்தச் சட்ட அங்கீகாரமும் இல்லை. இதைத் திருமணமாகவும் சட்டம் கருதவில்லை. நமது நாட்டில் திருமணச் சட்டம் என்பது, மதரீதியான சட்டங்களின் கீழ்தான் வரும். வெவ்வேறு மதத்தினர் திருமணம் செய்துகொள்ளும் போது, அது சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் வரும்.

திருமணச் சட்டங்கள் தரும் நான்கு உரிமைகள் முக்கியமானவை. ஒன்று, மனைவியை நியாயமற்ற முறையில் கணவன் பிரிந்துவிட்டால், மீண்டும் சேர்ந்து வாழும் வாய்ப்பைக் கோரலாம். இரண்டு, திருமணத்தைக் குறிப்பிட்ட காலம் விலக்கி வைக்கலாம். அதாவது விவாகரத்து வழக்கு நடைபெறும் காலம், அல்லது சமாதானம் பேசி மீண்டும் இணைவதற்குத் தரப்படும் காலம். இந்தக் காலத்தில் திருமணத்தினால் உருவாகும் உரிமைகளைக் கோர முடியாது. மூன்றாவது, கணவனும் மனைவியும் பிரிந்துசெல்லும் விவாகரத்து உரிமை. இறுதியாக, ஜீவனாம்சம் கோரும் உரிமை. இந்த நான்கு உரிமைகளும் ‘லிவிங் டுகெதர்’ வாழ்வில் கிடைக்காது.

சட்டம் எப்போது உதவும்?

குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் 2005-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தில் ஒரு வரி, ‘திருமணம் போன்றதோர் உறவில் சேர்ந்து வாழும் பெண்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்’ எனக் குறிப்பிடுகிறது. இது மட்டுமே லிவிங் டுகெதராக வாழும் பெண்களுக்குப் பாதுகாப்பை வழங்க உதவுகிறது.

உடல்ரீதியாக, உளவியல்ரீதியாக, வார்த்தை களால், பாலியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக என ஐந்து விதமாக நிகழ்த்தப்படும் வன்முறைகளிலிருந்து இந்தச் சட்டம் பெண்களைப் பாதுகாக்கிறது. இந்த ஐந்து வன்முறைகளுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் உரிமை, லிவிங் டுகெதராக வாழும் பெண்களுக்கும் உண்டு.

குழந்தைகள் என்ன ஆகும்?

‘லிவிங் டுகெதர்’ என்ற வார்த்தையே இந்தியாவுக்கு அறிமுகமாகாத 1975-ம் ஆண்டில் நீதிபதி கிருஷ்ணய்யர் ஒரு வழக்கில் குறிப்பிட்டதை நினைவுகூர்வது அவசியம். ஓர் ஆண் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஒரு பெண் வழக்குத் தொடுத்திருந்தார். ஆனால், ‘இந்தப் பெண்ணை நான் திருமணமே செய்துகொள்ளவில்லை’ என்று சாதித்தார் அந்த ஆண். அவர்கள் இருவரும் இணைந்து அந்த ஊரில் திருமணம் உள்ளிட்ட பல விசேஷங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். இவற்றை ஆதாரமாக வைத்து, ‘பல ஆண்டு காலம் சமூகத்தின் பார்வையில் கணவன்-மனைவியாக வாழ்ந்தால், சட்டமும் அவ்வாறே கருத வேண்டும்’ என்பதாகக் குறிப்பிட்டார் கிருஷ்ணய்யர். இவைதான் லிவிங் டுகெதர் உறவில் இருப்பவர்களுக்கு உதவும் சட்ட நம்பிக்கை.

ஆனால், குழந்தைகள் விஷயத்தில் சட்டம் தெளிவாக உள்ளது. பெற்றோர் திருமணமானவர்களா, லிவிங் டுகெதராக வாழ்பவர்களா என்றெல்லாம் சட்டம் பிரித்துப் பார்ப்பதில்லை. குழந்தையின் பெற்றோரே அக்குழந்தையின் இயற்கைப் பாதுகாவலர். ஆண் குழந்தை என்றால் 18 வயது வரையிலும், பெண் குழந்தை என்றால் திருமணம் ஆகும்வரை அல்லது வேலைக்குச் செல்லும்வரை அப்பாவிடம் ஜீவனாம்சம் பெறும் உரிமை உண்டு. இந்தப் பாதுகாப்பு ‘லிவிங் டுகெதர்’ உறவில் பிறக்கும் குழந்தைகளுக்கும் பொருந்தும்’’ என்கிறார் அஜிதா.

லிவிங் டுகெதர்! - திருமணத்தை  ஒழிக்கப்போகும் உறவுமுறையா?

திருமணத்துக்காகவே லிவிங் டுகெதர்!

காவ்யா சென்னையில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறார். ‘‘மூன்று ஆண்டுகள் பிரசாத்துடன் லிவிங் டுகெதராக வாழ்ந்தேன். ஆனால், ‘விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என்ற நினைப்புடன்தான் சேர்ந்து வாழ்ந்தோம். இணைந்து வீடு வாங்கினோம். மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டது போலவே, கடன்களையும் சுமைகளையும் பகிர்ந்துகொண்டோம். ‘சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை’ என்ற நினைப்பு எங்களுக்குள் ஒருபோதும் வந்ததில்லை. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட பிறகுதானே சேர்ந்து வாழ்ந்தோம். சில நாள்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டோம். இப்போது எங்களுக்குக் குடும்ப அமைப்புமீது மதிப்பு அதிகமாகி இருக்கிறது’’ என்கிறார் காவ்யா.

சரியில்லாத வெளிநாட்டு உணவைக்கூட நம் மண்ணுக்கு ஏற்றவிதமாக மாற்றிப் பக்குவப்படுத்துவது நம் இயல்பு. உறவுமுறைகளிலும் அப்படித்தான் இருக்கிறது.

- வி.எஸ்.சரவணன்

திருமணங்களில் விளைவு என்ன?

லிவிங் டுகெதர்! - திருமணத்தை  ஒழிக்கப்போகும் உறவுமுறையா?

மெரிக்காவில் 7,000 தம்பதிகளிடம் ஓர் ஆய்வு நடைபெற்றது. ‘Marriage and Family’ என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவு, ‘லிவிங் டுகெதர்’ உறவு பற்றிய புதிய கோணத்தைத் தருகிறது. ‘‘இப்படிச் சேர்ந்து வாழும் தம்பதிகள், திருமணத்துக்கு எதிரான கலகமாக தங்கள் உறவை நினைக்கவில்லை. ‘நம் நெருக்கமும் புரிதலும் நீண்ட காலம் நிலைத்திருக்குமா’ எனத் திருமணத்துக்கு முன்பாக சோதித்துப் பார்க்கும் களமாகவே இந்த உறவைக் கருதுகிறார்கள்’’ என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஏரியல் குபெர்பர்க். இந்த ஆய்வு கண்டறிந்த சில உண்மைகள்:

• இப்போது திருமணம் செய்துகொள்ளும் அமெரிக்கத் தம்பதிகளில், மூன்றில் இரண்டு பங்கு பேர் தங்கள் திருமணத்துக்கு முன்பு லிவிங் டுகெதராக வாழ்ந்தவர்கள்.

• லிவிங் டுகெதரால், அமெரிக்காவில் விவாகரத்துகள் குறைந்துள்ளன.

• எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் சட்டென லிவிங் டுகெதராக வாழ்வதில்லை. நீண்ட காலம் உறவில் நீடித்திருக்க விரும்பும் ஜோடிகள் மட்டுமே, லிவிங் டுகெதராக வாழ்கிறார்கள்.