பிரீமியம் ஸ்டோரி
##~##

ஞாயிற்றுக் கிழமை ஒன்றின் நண்பகல் நேரம்

 னிதர்களைப் போலவே
மலிந்துகிடக்கும்
மாநகரத்துக் காகங்களும்
வேறு எந்தப் பறப்பவையும்
பறந்து திரியாத
ஞாயிற்றுக் கிழமையின்
நண்பகல் நேரம்.

 இறக்கிவிடவும் ஏற்றிக்கொள்ளவும்
பயணிகள் இல்லாத பேருந்தின் ஓட்டுநர்
பின்புறத் தனிமையை உற்றுப்பார்த்தவாறு
நெரிசல் இல்லாத சாலை தந்த மகிழ்வில்
வாகன வேகம் கூட்டுகின்றார்.

 நிழற்குடையின் கீழ்,
விற்காத பொம்மைகளை
அருகில் வைத்தவாறும்
கரடி பொம்மையன்றை
வயிற்றோடு அணைத்தவாறும்
அமர்ந்த நிலையில் உறங்குகிறார்
வயதான பொம்மை வியாபாரி.

சொல்வனம்!

மனித அணைப்பு கிடைத்த சுகத்தில்
கரடி பொம்மை தூங்கிவிட,
மற்ற பொம்மைகள்
இயங்கும் வாகனங்களை
ஓரிரு மனிதர்களை மற்றும்
ஞாயிற்றுக் கிழமையின் நண்பகலை
வேடிக்கை பார்த்தவாறு...

- சுமதிராம்

தேய்பிறை அச்சம்

பிடித்த பாடல்
அலைபேசி அழைப்பில்
பதிய வேண்டாம்.

 அழைப்பின்போதெலாம்
ஒலித்து ஒலித்து
நம்
பிடிப்பு கரையலாம்...

 சமயா சமயமின்றி
ஒலிக்கும் பாடலைக்
கோபமாய் எரிச்சலாய்
நிறுத்த நேரலாம்...

 முழுமையாய்க் கேளாமல்
உடனே எடுக்க
திரையில் ஒளிரும் பெயர்
நிர்ப்பந்திக்கலாம்...

 புதிய எண் பார்த்து
யோசிக்கும் மனதுக்கு
பாடல் எட்டாமலே போகலாம்...

 இடம் பொருள் கருதி
நாமே மென்னி திருகி
அமைதிப்படுத்தலாம்...

 இந்தப் பாடல்
எதற்கென்ற
விளக்கவுரை கேட்டு
யாரும் நிர்ப்பந்திக்கலாம்...

 பிடித்த பாடல்
பிடிப்பு குறையாமலிருக்க...

- உமாமோகன்

ஓவியம்

சொல்வனம்!

 சுவரோடு பேசி எழுதியே
நேரம் கழிக்கிறது குழந்தை

 வெற்று இடமற்று
எழுத்தாகிவிட்டது வீடு

 எழுதிவந்த குழந்தைக்கு
இடம் இல்லாமல்போக

 உயர மேலேறி எழுதத் தந்த
நாற்காலியைத் தள்ளிவிட்டு
தரையில் போட்டது
சின்னதாய் ரெண்டு கோடுகளும்
ரெண்டு முட்டைகளும்

 மோப்பம் பிடித்து வந்த
செல்ல நாய்
காலால் சுரண்டியதில்
அழிந்தன
ரெண்டு சின்னக் கோடுகளும்
ரெண்டு முட்டைகளும்

 முடிவற்றுப்போனது
ஒரு கதையோ
ஒரு கவிதையோ
ஓர் இசைக் குறிப்போ
ஓர் ஓவியமோ
வேறு எதுவோ
தெரியவில்லை.

- குடவாசல் நலங்கிள்ளி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு